:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan rail union shuts down
protracted strike
இலங்கை புகையிரத தொழிற்சங்கம் நீண்டகால வேலைநிறுத்தை முடிவுசெய்தது
By W.A. Sunil
17 September 2005
Back to screen version
லொகொமோட்டிவ் இயக்க பொறியியலாளர் சங்கம் (Locomotive
Operating Engineers Union -LOEU), இரயில் சாராதிகளின்
ஏழு நாள் வேலை நிறுத்தத்தை எந்தவொரு கோரிக்கையும் கிடைக்கப்பெறாத நிலையில் செப்டெம்பர் 6 அன்று
முடிவுக்குக் கொண்டுவந்தது. ஆகஸ்ட் 30 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்த 300 தொழிலாளர்களும்
பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பக்கபலத்துடன் இரயில் அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக அவதூறுகள்,
அச்சுறுத்தல்கள் மற்றும் கருங்காலி வேலைகளுக்கும் முகங்கொடுக்கத் தள்ளப்பட்டார்கள்.
ஏனைய தொழிலாள வர்க்கப் பிரிவுகளை போன்று, இரயில் தொழிலாளர்களது ஊதியங்களும்
விலவாசி உயர்வினால் துரிதமாக அரிக்கப்பட்டிருந்தது. 2003ல் 2.6 சதவீதத்திற்கும் 2004ல் 7.9 சதவீதமாகவும்
உயர்ந்த வாழ்க்கைச் செலவு சுட்டெண், இவ்வாண்டு 14 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட்
மாத்ததில் வருடாந்த விகிதம் 16 சதவிகிதமாக உயர்ந்தது. இடையிடையே வழங்கப்பட்ட சொற்ப ஊதிய உயர்வுக்கு
அப்பால், அரச ஊழியர்களான இரயில் தொழிலாளர்கள் இரண்டு தசாப்த காலங்களாக வேறெந்த குறிப்பிடத்தக்க
சம்பள உயர்வையும் பெற்றிருக்கவில்லை.
ஆயினும், ஆரம்பத்தில் இருந்தே, லொகொமோட்டிவ் இயக்க பொறியியலாளர் சங்க தலைவர்கள்
இந்த பிரச்சாரத்தை சாரதிகளுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டதாக அழைப்புவிடுத்தனர். இந்த தொழிற்சங்கம், தனியே
புகையிரத சாரதிகள் சேவைக்காக மட்டும் உரியதான ஒரு புதிய சம்பள அமைப்பை ஸ்தாபிக்க அழைப்பு விடுத்தது. தற்போது
பொதுத்துறை பூராவும் உள்ள சகல தொழில்நுட்ப சேவைகளையும் உள்ளடக்கிக்கொண்டுள்ள இலங்கை தொழில்நுட்ப சேவையின்
ஒரு அங்கமாகவே இந்த சாரதிகள் உள்ளனர். புறம்பான ஒரு சேவையை ஸ்தாபிப்பதன் மூலம் சாரதிகளால் பெரும்
சம்பள உயர்வை பெற முடியும் என இச்சங்கம் தெரிவித்தது.
இப் பிரச்சாரத்தை குறுகிய கண்னோட்டத்தில் நோக்கியதன் மூலம், லொகொமோடிவ் இயக்க
பொறியியலாளர் சங்கமானது வேலை நிறுத்தம் செய்யும் சாரதிகள் அந்நியப்படுத்தப்படுவதை விளைபயன்களுடன் உறுதிசெய்தது.
இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஏனைய இரயில் சேவை ஊழியர்களுக்கோ, உழைக்கும் மக்களுக்கோ
அல்லது சீரழிந்துவரும் இரயில் சேவையையே பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளவர்களுக்கோ எந்தவொரு வேண்டுகோளும்
விடுக்கப்படவில்லை.
இரயில் போக்குவரத்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இந்த வேலை நிறுத்தம்
"நியாயமற்றது" என உடனடியாக கண்டனம் செய்ததோடு வேலை நிறுத்தம் கைவிடப்படும் வரை சங்கத்துடன்
பேச்சுவார்த்தை நடத்த மறுத்தார். அரசாங்கம் வேலைநிறுத்தக்காரர்களை அச்சுறுத்துவதற்காக ஒவ்வொரு பிரதான
இரயில் நிலையங்களிலும் ஆயுதப்படையினரையும் பொலிஸாரையும் குவித்ததுடன் உதவியாளர்களையும் ஓய்வுபெற்ற
சாரதிகளையும் பயன்படுத்தி இரயில்களை சேவையில் ஈடுபடுத்தியது.
வேலைநிறுத்தக்காரர்களுக்கு எதிராக பொதுஜன எதிர்ப்பை கிளறிவிடும் முகமாக,
சாரதிகள் ஏற்கனவே மாதாந்தம் 60,000 ரூபா (600 டாலர்) சம்பளம் பெறுவதாயும் அவர்களது
கோரிக்கைகளுக்கு இணங்கினால் அவர்கள் மாதாந்தம் 80,000 ரூபா சம்பளம் பெறுவர் என்றும் பெரேரா கூறினார்.
தொழிலாளர்கள் மாதாந்தம் 6,000 ரூபாவையோ அல்லது அதற்கும் குறைவான சம்பளத்தையோ பெறும் ஒரு
நாட்டில், இந்த தொகை ஒரு சிறிய அதிஷ்டமே. உண்மையில் இந்தக் கூற்று ஒரு மிகைப்படுத்தலாகும். சாரதிகளுக்கான
அடிப்படை சம்பள மட்டம், மாதாந்தம் 8,820 இலிருந்து 12,550 ரூபாவும் மேலதிக வேலை நேரக்
கொடுப்பனவையும் வேறு சில கொடுப்பனவுகளையும் சார்ந்துள்ளது.
செப்டம்பர் 4ம் திகதி வெளியான டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர்
தலையங்கம், அரசாங்கம் தனது அவசரகால சட்ட அதிகாரத்தை பிரயோகித்து வேலை நிறுத்தங்கள் மீதான தடையை
அமுலாக்குவதோடு அத்தியாவசிய சேவை சட்டத்தை பயன்படுத்தி "வேலைநிறுத்தக்காரர்களை மீண்டும் வேலைக்கு செல்ல
கட்டளையிட்ட வேண்டும்" என கோரியது. அப்பத்திரிகை, "தேசிய அவசரகால நிலைமையின் மத்தியில்" நடைபெறும்
இந்த வேலை நிறுத்தங்களை கண்டிக்குமாறு அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள் மற்றும் சகல "சிவில் உரிமைகளை
மதிக்கும் அமைப்புகளுக்கும் அழைப்புவிடுத்தது.
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், லொகொமோட்டிவ் இயக்க
பொறியியலாளர் சங்க தலைமைத்துவம், அரசாங்கத்திடம் இருந்து சலுகைகளை வென்றெடுக்கவோ அல்லது எதிர்
கட்சிகளிடமிருந்து ஆதரவை பெற்றுக்கொள்ளவோ முடியுமென சிலவேளை எதிர்பார்த்திருக்க கூடும். தொழிற்சங்கங்கள்
முன்னைய தேர்தல்களின் போது இத்தகைய யுத்திகளை சுரண்டிக்கொண்டுள்ளன. ஆயினும், இந்த கணிப்பீடு முற்றிலும்
பிழையானது என்பது சாரதிகளின் வேலை நிறுத்தத்தை அனைத்து கட்சிகளும் கூட்டாக சேர்ந்து கண்டனம் செய்ததில் இருந்து
நிரூபிக்கப்பட்டுள்ளது.
எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் (ஐ.தே.க) அபேட்சகர் ரணில் விக்கிரமசிங்க
வேலைநிறுத்தத்தை அலட்சியம் செய்தார். ஆனால், ஐ.தே.க பாராளுமன்ற அங்கத்தவரும் தொழிற்சங்க தலைவருமான
ராஜித சேனாரத்ன, இரயில் சேவையில் உள்ள கட்சியின் தொழிற் சங்கம் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிக்காதென
பகிரங்கமாகவே பிரகடனம் செய்தார்.
சிற்சில சந்தர்ப்பங்களில் தம்மை "சோசலிஸ்டுகள்" எனவும் தற்போதுள்ள
தொழிற்சங்கங்களில் போராளிக்குணம் கொண்ட பதிலீடு தாமே என்றும் தம்பட்டம் அடிக்கும் மக்கள் விடுதலை முன்னணி
(ஜே.வி.பி), அரசாங்கத்தை மதிப்பிழக்க செய்வதற்காக ஐ.தே.க யின் சதித் திட்டமே இந்த வேலை நிறுத்தம் என
கண்டனம் செய்தது. ஜே.வி.பி கடந்த ஜூன் மாதம் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய போதிலும், ஆளும் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் அபேட்சகர் மஹிந்த இராஜபக்ஷ உடன் ஒரு தேர்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
ஜே.வி.பி யின் தொழிற்சங்கத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பியசிரி
விஜேநாயக்க, இரிதா திவயின பத்திரிகைக்கு கருத்து தெரிவித்தபோது: "ஐ.தே.க யில் (ஐக்கிய தேசியக்
கட்சியில்) உள்ள சில நபர்கள் இரயில் சேவை வேலைநிறுத்தத்தை நடத்துகின்றனர். அவர்கள் இந்த வேலை நிறுத்தத்தின்
ஊடாக அரசியல் இலாபம் அடையப் பார்க்கின்றனர்" என்றார். ஜே.வி.பி யின் "லங்கா" செய்திப் பத்திரிகையின்
செப்டெம்பர் 4 திகதி வெளியீடு, சற்று மேலே சென்று "அரசாங்கத்தை கஷ்டத்தில் தள்ளும் நோக்கில் பிரதான எதிர்க்
கட்சியான ஐ.தே.க ஒரு வேலை நிறுத்த அலைக்கு அழைப்புவிடுக்கப் போகிறது" என பிரகடனம் செய்கிறது.
இரயில் சேவை வேலை நிறுத்தத்திற்கு எதிராக எழுந்த பரந்த எதிர்ப்பானது,
வாழ்க்கைத்தர சீரழிவுக்கெதிராக குவிந்துகொண்டிருக்கும் சமூக அமைதியின்மையை இட்டு ஆளும் வட்டாரங்கள்
பீதியடைந்திருப்பதையே வெளிக்காட்டுகிறது. உதவி வைத்தியர்கள் புதன் கிழமையன்று சம்பள உயர்வுக்கான கோரிக்கையை
முன்வைத்து தீவு பூராவும் முன்னெடுத்திருந்த நான்கு நாள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தனர்.
வியாழக்கிழமை அரச மரக் கூட்டுத்தாபன ஊழியர்களும் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களும் தமது தொழிலோடு
சம்பந்தப்பட்ட ஒரு போராட்டத்தை நடத்தினர். டிசம்பர் 26 சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் நிதியுதவி, தரமான
வீட்டு வசதிகளை கோரி பல்வேறு கரையோர பிரதேசங்களில் போராட்டங்களை தொடர்ந்தும் நடத்துகின்றனர்.
எவ்வாறெனினும், பழமைவாதத்தில் வேரூன்றியுள்ள தொழிற்சங்க தலைமைத்துவங்கள்,
தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு அழைப்புவிடுப்பதில் முற்றிலும் இலாயக்கற்றுள்ளனர். பலமான கண்டனங்களுக்கு
முகங்கொடுத்த லொகொமோட்டிவ் இயக்க பொறியியலாளர் சங்க தலைமையானது துரிதமாக மண்டியிட்டது. உலக
சோசலிச வலைத் தளத்துடன் உரையாடிய அதன் செயலாளரான கே.ஏ.யூ. கொந்தசிங்க, மிகப்
பரிதாபகரமாக மன்னிப்பு கோரினார். "அதிகாரிகள் எமக்கு செவிசாய்க்க மறுத்தமையால் நாம் வேலை நிறுத்தத்தை
கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டோம்," என அவர் தெரிவித்தார். தொழிற் சங்கம் தொழில்களை பேணவும் உயர்ந்த
சம்பளத்தை பெறவும் ஒரு பொது போராட்டத்திற்கு அழைப்பு விடுக்காதது ஏன் என நாம் கேட்டபோது, "அது ஒரு
பெரிய வேலை" என்று அவர் ஒதுக்கித் தள்ளினார்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஏனைய இரயில் சேவை தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தக்காரர்களுக்கு
ஆதரவாக எதுவும் செய்யவில்லை. லொகொமோட்டிவ் இயக்க பொறியியலாளர் சங்கத்தை போன்று, இந்த தொழிற்சங்கங்களும்
குறுகிய பிரிவு, தரம் மற்றும் வர்த்தக பிரிவுகளை அடிப்படையாக கொண்டுள்ளன. ஜே.வி.பி கட்டுப்பாட்டில் உள்ள அகில
இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் டி. வெலிமுலுவ, வேலைநிறுத்தக்காரர்களுக்கு சற்றும் அனுதாபம்
காட்டாது உலக சோசலிச வலைத் தளத்திற்கு பின்வருமாறு தெரிவித்தார்: "சகல தொழிற்சங்கங்களும்
ஒன்றிணைந்து தம்மிடையே கோரிக்கைகளை கலந்துரையாடிய பின் அவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென அமைச்சர் கூறினார்.
அவர்கள் (லொகொமோட்டிவ் இயக்க பொறியியலாளர் சங்கம்) இதற்கு அப்பாற்பட்டு சென்றுள்ளனர். இரயில் சேவை
கூட்டு தொழிற்சங்க முன்னணித் தலைவர் ராஜா கண்ணங்கராவும் இதனையே தெரிவித்தார்.
இந்த தொழிற்சங்கங்களில் எதுவும் அரச இரயில் சேவையை மறுசீரமைப்பதை எதிர்க்கவில்லை.
முன்னைய ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் தனியார் மயமாக்கலை நோக்கிய ஒரு நடவடிக்கையாக ஸ்தாபிக்க முயற்சித்த
புகையிரத அதிகார சபையை, கடந்த ஆண்டு ஆளும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டரசாங்கம் விலக்கிக் கொண்டது.
ஆனால் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவால் நியமிக்கப்பட்ட ஒரு குழு, எந்தவொரு சம்பள மாற்றமும்
"நிர்வாகத்தையும் மற்றும் நிதி முகாமைத்துவ கொள்ளளவையும் பலப்படுத்தும் நோக்கிலான, முழுமையான ஒரு மறுசீரமைப்புத்
திட்டத்தின்" வழியில் அமைந்திருக்க வேண்டும் என கடந்த அக்டோபரில் சிபார்சு செய்துள்ளது.
பல ஆண்டு கால புறக்கணிப்பும் நிதிப் பற்றாக்குறையும் இரயில் சேவையையும் மற்றும்
பாதுகாப்பையும் கீழறுத்துள்ளது. 75 சதவீதமான இரயில் எஞ்சின்கள் 40 வருடத்திற்கும் மேல் பழமை வாய்ந்தவையாகும்.
சமிக்ஞைகள், தீ அபாய எச்சரிக்கை மற்றும் ஏனைய பாதுகாப்பு அமைப்புகள் யாவும் சரியாக இயங்குவதில்லை.
கொழும்பு--புத்தளம் மற்றும் கொழும்பு--பதுளை புகையிரத பாதைகள் பத்தாண்டுகளுக்கும் மேல் பழுது பார்க்கப்படாத
நிலைமையில் இருப்பதால், அங்கு ஏற்படும் எந்தவொரு விபத்துக்கும் தாம் பொறுப்பாளிகள் அல்ல என சாரதிகள் அண்மையில்
அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே, இரயில்
சாரதிகள், இரயில் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருடன், தொழில், நியாயமான
சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளுக்கான போராட்டத்தில் தோளோடு தோள் நிற்கின்றது. இந்தக்
கோரிக்கைகளுக்காகவும், அதேபோல் இரயில் மற்றும் ஏனைய பொது சேவைகளை விரிவுபடுத்தவும் தரம் உயர்த்தவும்
போராட வேண்டுமெனில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் கட்டளையிடுகின்ற சந்தை மறுசீரமைப்புத்
திட்டங்களை ஏற்றுக்கொள்கின்ற பிரதான கட்சிகளில் இருந்து முழுமையாக பிரிந்து செல்வது அவசியமானதாகும்.
இரயில் வேலை நிறுத்தத்தின் பொறிவானது சலுகைகளுக்காக அரசாங்கத்திற்கு அழுத்தம்
கொடுப்பதை இலக்காக் கொண்ட வரையறுக்கப்பட்ட, பிரிவுகள் சார்ந்த நடவடிக்கைகள் மூலம் எதையும் அடைய
முடியாது என்பதையே அம்பலப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தையும் அதன் முதலாளித்துவ வேலைத் திட்டத்தையும் நேரடியாக
சவால் செய்யும் சோசலிச கோரிக்கைகளை சூழ ஒரு பரந்த அரசியல் எதிர்ப்பை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே
தொழிலாள வர்க்கத்தால் அதன் சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக போராட முடியும். அத்தகைய ஒரு
போராட்டமானது பிரதான கட்சிகள், பெரு வர்த்தகர்கள் மற்றும் ஊடகங்களின் எதிர்ப்புக்கு மட்டுமன்றி, அரசியல்
ஸ்தாபனத்துடன் கட்டுண்டுள்ள மற்றும் தற்போதைய சமூக அமைப்பை பாதுகாக்கும் தொழிற்சங்க தலைவர்களின்
எதிர்ப்புக்கும் உள்ளாகும் என நாம் முன்கூட்டியே எச்சரிக்கின்றோம். |