World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: the JHU-Rajapakse deal and the reactionary role of Buddhist supremacism

இலங்கை: ஜாதிக ஹெல உறுமய--இராஜபக்ஷ உடன்படிக்கையும் பெளத்த மேலாதிக்கவாதத்தின் பிற்போக்கு பாத்திரமும்

By Wije Dias, Socialist Equality Party presidential candidate
21 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை பிரதமரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) ஜனாதிபதி அபேட்சகருமான மஹிந்த இராஜபக்ஷ, வலதுசாரி பெளத்த பிக்குகளின் தலைமையின் கீழான சிங்கள மேலாதிக்கவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமய (ஹெல உறுமய) உடன் கடந்த வாரம் ஒரு தேர்தல் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார்.

ஹெல உறுமய வழங்கும் ஆதரவுக்கு பிரதியுபகாரமாக, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மிகவும் காத்திரமான நிலைப்பாட்டை எடுக்கக் கோரும் ஹெல உறுமயவின் கோரிக்கைக்கு பிரதமர் இணங்கியுள்ளார். இந்த ஒப்பந்தத்தில் உள்ள 12 அம்சக் கோரிக்கைகளில், அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்போது அமுலில் உள்ள யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்வது; அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுனாமி நிவாரண பொதுக் கட்டமைப்பை இரத்து செய்தல்; விடுதலைப் புலிகளுடனான சமாதான கொடுக்கல் வாங்கல்களுக்கான அடிப்படையாக கருதப்படும் சமஷ்டி திட்டத்தை நிராகரித்தல் போன்றவையும் அடங்குகின்றன.

மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜே.வி.பி) செய்துகொள்ளப்பட்ட இதேபோன்ற உடன்படிக்கையை போலவே, ஹெல உறுமயவுடனான இராஜபக்ஷவின் உடன்படிக்கையின் பிழையற்ற தர்க்கமானது புதுப்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்திற்கு வழிவகுக்கின்றது. தான் சமாதானத்தை விரும்புபவராக பறைசாற்றிக்கொண்ட போதிலும், தற்போதைய ஜனாதிபதியும் அவரது சொந்த அரசாங்கமும் புதுப்பிக்க கோரும் பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளுக்கான பிரதான கொள்கை திட்டங்களை பிரதமர் விளைபயன்களை ஏற்படுத்தும் விதத்தில் கிழித்தெறிந்துவிட்டார். தெளிவாகவே குறுகியகால தேர்தல் இலாபங்களுக்காக கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு உள்ளேயே கூர்மையான பிளவுகளை தோற்றுவித்துள்ளன.

முன்னைய இராஜபக்ஷ ஜே.வி.பி உடன்படிகையை பற்றி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க) குறிப்பிட்டது போலவே, ஸ்ரீ.ல.சு.க யின் உள் முரண்பாடுகள், ஆளும் வர்க்கத்திற்குள் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை மூலமான தீர்வை விரும்புபவர்களுக்கும் மீண்டும் யுத்தத்தை விரும்புபவர்களுக்கும் இடையிலான பெரும் பிளவுகளை பிரதிபலிக்கின்றது.

சமாதான முன்னெடுப்புகளை முன்மொழிந்தவர்களுக்கு, சந்தை சீர்திருத்தத்தை மேற்கொள்ள, தீவை பூகோள உற்பத்தி முன்னெடுப்புகளுடன் ஒன்றிணைக்க மற்றும் தொழிலாளர்களை பரஸ்பரம் சுரண்டுவதற்கும் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் தட்டுக்களுக்கிடையில் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கு தேவை. அவர்களது எதிரிகள் தொழிலாள வர்க்கத்தை மீண்டும் யுத்தப் பயங்கரத்திற்குள் தள்ள தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த யுத்தம் ஏற்கனவே குறைந்தபட்சம் 60,000 உயிர்களைப் பலிகொண்டுள்ளதோடு மிகப் பரந்த அவலநிலைமைகளுக்கும் வழிவகுத்துள்ளது.

கொழும்பு ஊடகங்களில், ஸ்ரீ.ல.சு.க யின் உள்முரண்பாடுகள், நவம்பர் 17 தேர்தலில் அவர்களின் பங்களிப்பு மற்றும் ஹெல உறுமய உடனான உடன்படிக்கையின் எதிர்பார்க்க முடியாத மற்றும் பெரும் குளறுபடியான பெறுபேறுகள் பற்றிய ஊகங்கள் மற்றும் அபிப்பிராயங்களும் நிறைந்துபோயுள்ளன. ஆனால் இராஜபக்ஷ--ஹெல உறுமய உடன்படிக்கையின் ஒரு பகுதி, அந்த வைபவமே கூட முழுமையான மெளனத்துடன் கடந்துவிட்டது.

காவியுடை போர்த்தியிருந்த ஹெல உறுமய பிக்குகளுடன் தலதா மாளிகையின் முன் இடம்பெற்ற உடன்படிக்கை கைச்சாத்திடும் வைபவத்திற்காக பிரதமர் கண்டிக்கு பயணித்தார். இவை அனைத்தும் சிங்கள பெளத்த மேலாதிக்கத்திற்கான ஒரு கனமான குறியீடாக இருந்தன. கண்டியானது நலிவுற்ற சிங்கள முடியாட்சியின் கடைசி தலைநகராகும். தலதா மாளிகை புத்தரின் பல் வைக்கப்பட்டிருக்கும் கோயிலாகவே கருதப்படுகிறது. இது சிங்கள அதிகாரத்திற்கான ஒரு சின்னம் என்ற வகையில், அரசியல் அதே போல் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மரபாகும்.

இராஜபக்ஷ ஒப்பந்தத்தின் தனக்குரிய பிரதியை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொள்வதற்காக ஹெல உறுமயவின் பிரதான பிக்குவான எல்லாவல மேதானந்தவின் முன்னால் மண்டியிட்டார். பலவிதமான பெளத்த சடங்குகளுக்கு மத்தியில் பல் வைக்கப்பட்டுள்ள பீடத்திற்கு முன் நின்று வணங்குவதற்காக இருவரும் ஆலயத்திற்குள் சென்றனர். இறுதியாக அந்த ஆவணத்திற்கு தீங்கு ஏற்படாமல் செய்வதற்காக அது புனித பீடத்தில் வைக்கப்பட்டது.

இலங்கை பத்திரிகைகளை பொறுத்தளவில், இதில் எதுவும் வழக்கத்திற்கு மாறானதல்ல. கொழும்பில் உள்ள எல்லா பிரதான முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல்வாதிகளும், ஏதாவதொரு மத பீடத்தில் உள்ள பெளத்த பிக்குகளிடம் ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டிக்கு யாத்திரை செல்வது வழமையானதாகும். சற்றே சில நாட்களின் பின்னர், இராஜபக்ஷவின் பிரதான எதிரியான ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க, பெளத்த உயர்பீடத்தின் முன்னால் தலைவணங்குவதற்காக கொழும்புக்கு அருகில் உள்ள பெல்லன்வில தேவாலயத்திற்கு பயணித்தார்.

வேறுவார்த்தைகளில் சொன்னால், ஹெல உறுமய பிக்குகளின் முன்னால் இராஜபக்ஷ நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தமை, முழு அரசியல் ஸ்தாபனமும் அழுகிப்போன இனவாத அரசியலில் தங்கியிருப்பதை காட்டும் ஒரு தெளிவான விரிவிளக்கமான ஒரு உதாரணமாகும்.

ஹெல உறுமயவின் கொள்கைகளும் வேலைத்திட்டமும் அனைத்து அரசியல் கட்சிகள், அரச இயந்திரம், ஆயுதப் படைகள் மற்றும் ஊடகங்களினுள்ளும் ஊடுருவிச் செல்லும் பெளத்த மேலாதிக்கவாதத்தின் தர்க்கத்தை ஒரு தீவிரமான வடிவில் வெளிப்படுத்துகின்றது. இது நாட்டின் 1972 அரசியல் யாப்பில் பெளத்தத்தை அரச மதமாக்கிய விதியிலும் மற்றும் தமிழர் விரோத வேறுபாடுகளை ஆழமாக்கிய அரசாங்க கொள்கைகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருட பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, ஏற்கனவே இருந்த வலதுசாரி சிஹல உறுமய கட்சியை பெளத்த உயர்மட்ட பிக்குகளின் ஒரு பிரிவினருக்கான அரசியல் வாகனமாக மாற்றியதன் மூலமே ஜாதிக ஹெல உறுமய அமைக்கப்பட்டது. அதனது பிற்போக்குத்தனமான வெளித்தோற்றமானது அமெரிக்காவில் வலதுசாரி கிறிஸ்தவ அடிப்படைவாதிகள், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து மேலாதிக்கவாத அமைப்புகள் அல்லது இஸ்லாமிய தீவிரவாத அல் கைடா போன்றவற்றில் இருந்து சற்று வேறுபட்டதாகும். சிங்கள பெளத்த மன்னர்களின் பழைய கற்பனை கதைக்கு மீண்டும் திரும்பியுள்ள ஹெல உறுமய, "சிங்கள மக்களின் தேசிய உரிமையை" வலியுறுத்துவதோடு "பெளத்த கொள்கைகளின்படி" அரசு அமைக்கப்பட வேண்டும் என அழைப்புவிடுக்கின்றது.

அரச இயந்திரம், ஆயுதப் படைகள் மற்றும் வர்த்தகர்களின் தட்டுக்களுக்காக ஹெல உறுமய பரிந்து பேசுகிறது. இவர்களின் நலன்கள், தமக்கு சரிநிகரான தமிழ் மற்றும் முஸ்லிம்கள் மீதான சிங்கள ஆளும் கும்பலின் ஆதிக்கத்தை தொடர்ந்தும் பேணிக் காப்பதுடன் கட்டுண்டுள்ளன. இந்த சமூகத் தட்டுக்கள் விடுதலைப் புலிகளுடனான எந்தவொரு அதிகார பரவலாக்கவையும் கடுமையாக எதிர்ப்பதோடு சமாதான முன்னெடுப்புகளையும் சிங்கள தேசத்தை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாக கருதுகின்றன.

பெளத்த உயர்பீடத்தின் ஒரு பகுதி எந்தவொரு சமாதான கொடுக்கல் வாங்கலையும் கசப்புடன் எதிர்ப்பது தற்செயலானதல்ல. அவர்களது அதிகாரமும் மற்றும் சொத்துக்களும் பெளத்தத்தை அரச மதமாக்கிய அரசியலமைப்பின் மூலம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளன. பெளத்த விவகார திணைக்களம் ஒரு உறுதியான வரவு செலவைக் கொண்டுள்ளது. 2004ல் இது 185 மில்லியன் ரூபாய்களாகும். இதில் கணிசமான தொகை துறவிகளின் கைகளை சென்றடையும். இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் எந்தவொரு கலப்படமும் ஏற்படுவதானது பெளத்த உயர்மட்டத்தினரின் நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இத்தகைய சமூக தட்டுக்கள், தமது நலன்களை பாதுகாக்க முடியாமல் போகுமிடத்து நின்றுவிடப்போவதில்லை. ஹெல உறுமயவும் மற்றும் அதன் முன்னோடியான சிஹல உறுமயவும், தொடர்ச்சியான வன்முறை எதிர்ப்புக்ளிலும் ஆத்திரமூட்டல்களிலும் ஈடுபட்டுள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு சிஹல உறுமய பரந்தளவில் பொறுப்பாளியாகும். கிறிஸ்தவ விவிலியவாதிகள் "நன்னெறிசாராத மதமாற்றம்" --அதாவது, பெளத்த ஏழைகளுக்கு ஏதாவதொரு நிவாரணத்தை வழங்குவதன் மூலம் அவர்களது மதத்தை மாற்றுவதற்கு வழிவகுத்தல்-- செய்வதை தடுக்கும் வகையில் ஒரு மதமாற்ற விரோத சட்டத்திற்காக கோரிக்கை விடுப்பது ஹெல உறுமயவின் பிரதான கொள்கைகளில் ஒன்றாகும்.

சுனாமி நிவாரணங்களை விநியோகிக்க தற்காலிகமாக கூடி வேலைசெய்வதற்காக விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் இணக்கம் கண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக நச்சுத்தனமான இனவாத பிரச்சாரத்தை மேற்கொள்வதில் ஹெல உறுமய முன்நின்றது. பாராளுமன்ற உறுப்பினரும் பிக்குவுமான ஹெல உறுமய செயலாளர் ஒமல்பே சோபித்த, பொதுக் கட்டமைப்பு என்றழைக்கப்பட்ட இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதை நிறுத்துவதற்காக, கண்டி தலதா மாளிகையின் முன்னால் அமர்ந்துகொண்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை பிரகடனம் செய்தார்.

பிற்போக்கு இனவாதம்

இவை அனைத்தும் கொழும்பு ஊடகங்கள் அறிந்தவையே. ஆயினும், இலங்கை அரசியலில் பெளத்தத்தினதும் மற்றும் பெளத்த உயர்பீடங்களதும் பிற்போக்கு பாத்திரம் பற்றி இதுவரை எந்தவொரு விமர்சன சமிக்ஞை கூட கிடையாது. ஹெல உறுமய தலைவர் முன்னால் இராஜபக்ஷ மண்டியிடுகின்ற வெறுப்பூட்டும் காட்சியைப் பற்றி கருத்துக் கூறுவது, எல்லோரது கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகும் ஒரு பகிரங்க அவமதிப்பாக கருதப்படக்கூடும்.

இந்த திட்டமிட்ட மெளனத்தின் பின்னணியில் உள்ள விடயத்திற்கும் பெளத்தத்தை போற்றுவதற்கும் இடையில் எந்த சம்பந்தமும் கிடையாது. அதற்கும் மேலாக, இது முதலாளித்துவ ஆட்சியை பேணுவதற்கு சிங்கள பெளத்த மேலாதிக்கவாத தர்க்கம் எந்தளவுக்கு இன்றியமையாததாக உள்ளது என்பதையே பிரதிபலிக்கின்றது. 1948 தேசிய சுதந்திரத்தில் இருந்தே, இலங்கை முதலாளித்துவமானது இந்த சிறிய தீவின் மீது ஒரு செயற்கை நாட்டை உருவாக்கியதை நியாயப்படுத்தவும், தொழிலாள வர்க்கத்தை இன ரீதியில் பிளவுபடுத்தவும் மற்றும் அதன் கட்சிகளுக்கு, குறிப்பாக ஸ்ரீ.ல.சு.க யிக்கு ஒரு சமூக அடித்தளத்தை ஏற்படுத்திக்கொள்வதற்குமான ஒரு வழிவகையாக சிங்கள பேரினவாதத்தை தூண்டிவிட்டதோடு ஊக்குவிக்கவும் செய்தது.

உள்ளூர் ஆளும் கும்பல் தமது முன்னாள் காலனித்துவ ஆசிரியர்களிடம் கற்றுக்கொண்டுள்ளது. தோற்கடிக்கப்பட்ட கண்டிய முடியாட்சியின் மிச்சசொச்சங்களுடன் 1815 ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் மூலம், "பெளத்த மதம், அதன் சடங்குகள், மதகுரு மற்றும் வணக்க ஸ்தலங்களை பேணுவதற்கும் பாதுகாக்கவும்" பிரித்தானியா உடன்பட்டது. வரலாற்றாசிரியர் கே.எம் டி சில்வா குறிப்பிட்டது போல்: "அவர்கள் (தீவுக்கான பிரித்தானிய ஆளுநர்கள்) பிரித்தானியா பேணிக் காக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் அரசியல் சமநிலையை குழப்புவதற்கான வாய்ப்புகளை தோற்றுவிக்கும் மாற்றங்கள் மற்றும் மறுசீரமைப்பிற்கான இயக்கங்களுக்கு விரோதமாக எதிர்ச் செயலாற்றும் ஆற்றல் கொண்ட ஒரு சக்தியாக பெளத்தத்தை தரம் உயர்த்தினர்."

பின்னர் பெளத்த பிக்குகள் ஒரு காலனித்துவ விரோத நிலைப்பாட்டை எடுக்கும் வரை, ஹெல உறுமயவைப் போல், சிங்கள மன்னர்கள் மற்றும் பெளத்த மத குருக்களின் முன்னைய ஆதிக்கத்தை மீண்டும் திணிப்பதற்கான ஒரு பிற்போக்கு முயற்சியாகவே இருந்தது. அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக வசைமாரி பொழிந்ததோடு, தமது காலனித்துவ பயிற்சியாளர்களை பின்பற்றிய மற்றும் அவர்களது கட்டளைகளை இட்டுநிரப்பிய உள்ளூர் "விஸ்கி குடிகாரர்களையும்" கண்டனம் செய்தனர். அவர்கள் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வளர்ச்சியடைந்த எதிர்ப்பை பெளத்த குறிக்கோள்களின் மறுமலர்ச்சிக்கான மதுவருந்தாதவர்கள் இயக்கத்தின் பக்கம் திருப்பிவிட்டனர்.

ரஷ்ய புரட்சியின் எழுச்சியுடன், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தது தொழிலாளர் வர்க்கமும், குறிப்பாக லங்கா சமசமாஜக் கட்சியின் (ல.ச.ச.க) தலைவர்களுமேயாகும். 1948ன் பின்னர், போர்க்குணம் மிக்க மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்ட, புதிதாக "சுதந்திரமடைந்த" ஆளும் வர்க்கமானது உழைக்கும் மக்களை ஒருவருக்கொருவர் எதிராளிகளாக நிறுத்தும் ஒரு வழிமுறையாக தமிழர் விரோத பேரினவாதத்தை கிளறிவிட தயங்கவில்லை. இதன் அரசியல் விளைவுகள் அடுத்தடுத்து பேரழிவுகரமானதாகவே இருந்து வருகின்றது. இனவாத வன்முறைகள், படுகொலைகள் மற்றும் இதன் உச்சகட்டமாக யுத்தம்.

1964ல் ல.ச.ச.க ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான அரசாங்கத்திற்குள் நுழைய எடுத்த முடிவானது கடுஞ்சோதனையான திருப்புமுனையாகும். அவ்வாறு செய்ததன் மூலம், தான் முன்னர் போராடி வந்த அனைத்துலக சோசலிச அடிப்படைகளையே கைவிட்ட ல.ச.ச.க, சிங்கள பெளத்த மேலாதிக்கவாத தர்க்கத்தை அணைத்துக்கொண்டது. ஸ்ரீ.ல.சு.க ஸ்தாபிக்கப்பட்டதும் இந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே ஆகும். 1972ல் பெளத்தத்தை அரச மதமாகவும் சிங்களத்தை அரச மொழியாகவும் பிரதிஷ்டை செய்த அரசியல் யாப்பை வரையும் பொறுப்பை ல.ச.ச.க அமைச்சர் கொல்வின் ஆர். டி சில்வாவே வகித்தார்.

ல.ச.ச.க யின் காட்டிக்கொடுப்பானது 1960 களிலும் 1970 களிலும் தீவிரவாத இளைஞர்களுக்கு மத்தியில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கட்சிகள் தோன்றி ஆதிக்கம் செலுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக தமிழர்கள் மத்தியில் விடுதலைப் புலிகளும் சிங்களவர்கள் மத்தியில் ஜே.வி.பி யும் தோன்றின. தமிழர்களுக்கு எதிரான பண்டாரநாயக்க அரசாங்கத்தின் வேற்றுமை நடவடிக்கைகளை, ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐ.தே.க அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்ததோடு அதை விரிவுபடுத்தவும் செய்தது. அந்த வகையில் 1983ல் யுத்தம் வெடித்ததற்கு இவர்களே பொறுப்பாளிகளாவர். இந்த அழிவுகரமான மோதலுக்கு முடிவுகட்ட ஆளும் வர்க்கத்தில் எந்தவொரு பகுதியும் இலாயக்கற்று இருக்கும் நிலைமையானது, அவர்கள் தமது செல்வம் மற்றும் சமூக அந்தஸ்துகளை விட இனவாதத்தை கைவிட முடியாமல் இருக்கின்றனர் என்ற உண்மையில் இருந்தே ஊற்றெடுக்கின்றது.

சோசலிச மூலோபாயம்

இலங்கையிலும் மற்றும் பிராந்தியம் பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு ஒரு சோசலிச பதிலீட்டை வழங்குவதற்காகவே சோ.ச.க இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றது. ஒடுக்குமுறையான இலாப அமைப்பை பாதுகாப்பதன் பேரில் முதலாளித்துவ வர்க்கத்தின் பலவித பிரதிநிதிகளால் வேண்டுமென்றே தூண்டிவிடப்படுகின்ற பேரினவாதம், வகுப்புவாதம் மற்றும் இனவாதத்தையும் நிராகரிக்குமாறு நாம் இந்திய துணைக்கண்டம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். தொழிலாள வர்க்கம் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி இன, மத, மொழி அல்லது ஜாதி வேறுபாடுகள் இன்றி தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்துவதும், மற்றும் சமுதாயத்தை தனியார் இலாபத்திற்காக அன்றி சமூகத் தேவையின் அடிப்படையில் மீளமைப்பதற்காக அனைத்து முதலாளித்துவ கும்பல்களிலும் இருந்து சுயாதீனமாக தனது அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதுமே ஆகும்.

சோ.ச.க யும் மற்றும் அதன் வேட்பாளரும் பெளத்த, இந்து, முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மதத்தை வணங்குவதற்காக கண்டிக்கோ அல்லது ஏனைய இடங்களுக்கோ அரசியல் யாத்திரையில் இணையப் போவதில்லை. தொழிலாளர் வர்க்கம் அதனது போராட்டத்தின்போது மார்க்சிசத்தின் மூலம், அதாவது விஞ்ஞான சோசலிசத்தின் மூலம் வழிநடத்தப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். இறுதி ஆய்வுகளில் இதுவரை உள்ள நிலைமைகளை கட்டுப்பாட்டுடன் ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்ட மத மற்றும் ஆன்மீக அமைப்பு முறையை நாம் நிராகரிக்கின்றோம். சொர்க்கத்தில் அல்லது அடுத்த ஜென்மத்தில் ஒரு சிறந்த வாழ்வு கிடைக்கும் என்ற பொய் உறுதிமொழியை பரிமாற்றிக்கொண்டிருக்கும் கண்டியின் உயர் மதகுருவும் சரி அல்லது கிறிஸ்தவ சபையும் சரி, தற்போதைய துன்பகரமான நிலைமையை ஏற்றுக்கொள்ளவே சொல்கின்றனர்.

தொழிலாள வர்க்கம் இலங்கையை தொற்றிக்கொண்டுள்ள இனவாத வன்முறைகள் மற்றும் யுத்தத்திற்கும் ஒரு முடிவுகட்ட வேண்டும். சோ.ச.க தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து பாதுகாப்புப் படைகளும் நிபந்தனையின்றி உடனடியாக திருப்பியழைக்கப்பட வேண்டும் என கோருகிறது. ஒற்றை ஆட்சியை பலாத்காரமாக பாதுகாப்பதானது தீவு பூராவும் இராணுவவாதத்தின் செல்வாக்கையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் மட்டுமே பெறுபேறாகத் தந்துள்ளது. சோ.ச.க அனைத்து வகையிலான ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும் அதேவேளை, இன, மத அல்லது மொழி பேதமற்று அனைவரதும் உரிமைக்காக போராடுகிறது.

20 வருடகால யுத்தத்திற்கு தீர்வு காண்பதென்பது, ஜனநாயக விரோத இலங்கை அரசியலமைப்பை ஓரங்கட்டுவதை கோருகிறது. முக்கியமான ஜனநாயக உரிமைகள் பற்றிய பிரச்சினைகளில் முடிவெடுக்கும் உரிமையை, முதலாளித்துவ அரசியல்வாதிகளின் கோஷ்டிகளிடம் அன்றி சதாரண உழைக்கும் மக்களிடம் ஒப்படைப்பதற்காக, நம்பத்தகுந்த பிரதிநிதிகளை கொண்ட அரசியலமைப்பு சபை ஒன்றை ஸ்தாபிப்பதை சோ.ச.க பரிந்துரைக்கின்றது.

நாம் அரசில் இருந்து மதத்தை முழுமையாக அகற்ற அழைப்பு விடுக்கின்றோம். இது அனைவரதும் ஜனநாயக உரிமையான மதச் சுதந்திரத்தை ஸ்தாபிப்பதற்கு அத்தியாவசியமான முன்நிபந்தனையாகும். பெளத்தத்தை அரச மதமாக ஆக்கியதன் மூலம், அரசியலமைப்பில் ஏனைய மதங்கள் இரண்டாந்தர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு அந்தந்த மதங்களை பின்பற்றுபவர்களுக்கு எதிரான வேற்றுமைகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்திற்கும் மற்றும் சோசலிச கொள்கைகளை அடையவும், முதலாளித்துவ அமைப்புக்கெதிராக தொழிலாள வர்க்கத்தின் பரந்த எதிர்த்தாக்குதல் அவசியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி, தெற்காசியாவிலும் மற்றும் பூகோளம் முழுவதும் ஐக்கிய சோசலிச குடியரசுகளை அமைப்பதற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா--ஈழம் ஐக்கிய சோசலிச அரசை ஸ்தாபிப்பதற்கு அழைப்புவிடுக்கின்றது.

ஜனாதிபதி தேர்தலில் இந்த முன்நோக்கிற்காக பிரச்சாரம் செய்வதற்காக சோ.ச.க உடன் இணையுமாறு நாம் எமது ஆதரவாளர்களுக்கும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.

See Also :

இலங்கை தேர்தல் பிரச்சாரத்தின் மையமாக யுத்த ஆபத்து உள்ளது

Top of page