World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Lecture two: Marxism versus revisionism on the eve of the twentieth century

இரண்டாம் விரிவுரை: இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்

பகுதி 2

By David North
3 September 2005

Back to screen version

இது "இருபதாம் நூற்றாண்டின் முந்தைய பொழுதில் மார்க்சிசத்தை எதிர்த்து திருத்தல்வாதம்" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த், மிச்சிகன் அன் ஆர்பரில், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தள கோடை பள்ளியில், ஆகஸ்ட் 14 முதல் ஆகஸ்ட் 20, 2005 வரை நிகழ்த்திய இரண்டாம் விரிவுரையின் மூன்றாம், மற்றும் இறுதிப் பகுதியாகும். முதல் இரு பகுதிகளும் தமிழில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 7ம் தேதிகளில் வெளிவந்தன.

இது கோடைப் பள்ளியில் அளிக்கப்பட்ட இரண்டாவது விரிவுரையாகும்."ரஷ்ய புரட்சியும், இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கப்படாத வரலாற்று பிரச்சினைகளும்", என்ற தலைப்பில் டேவிட் நோர்த்தினாலேயே வழங்கப்பட்ட முதல் விரிவுரை நான்கு பகுதிகளாக ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையில் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டது.

அடுத்ததாக, டேவிட் நோர்த்தினால் வழங்கப்பட்ட "போல்ஷிவிசத்தின் தோற்றுவாய்கள் மற்றும் என்ன செய்ய வேண்டும்?" என்ற மூன்றாவது விரிவுரை, ஏழு பகுதிகளாக தமிழில் வெளியிடப்படும்.

சோசலிசத்தின் செல்வாக்கின் வளர்ச்சியும், முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலும்

ஆரம்பத்தில் மெதுவாக என்றிருந்தாலும்கூட, நாளடைவில் மார்க்ஸ், ஏங்கல்சின் தத்துவார்த்த பணியின் செல்வாக்கு வளரத் தொடங்கியது. 1864ம் ஆண்டு நிறுவப்பட்ட முதலாம் அகிலம், பக்குனினிஸ்டுகளிடம் கடுமையான பூசலை கொண்டிருந்தபோதிலும், மார்க்சிச கருத்துக்கள் பரவுவதற்கு முக்கியமான அரங்காக அமைத்தது. 1869 ஆகஸ்ட் மாதம், ஐசெனாக் (Eisenach) மாநாட்டில் சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி (Sozial Demokratische Arbetira Partei) ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் கட்சி தத்துவார்த்த ரீதியாக நிலையான மார்க்சிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. அதில் லாசேல்லிய கருத்துருக்கள் செல்வாக்கை கொண்டிருந்தன-- நீண்ட காலம் அச்செல்வாக்கு தொடர்ந்தும் இருந்தது, ஜேர்மன் தொழிலாள வர்க்கத்திடையே இது கணிசமான அரசியல் செல்வாக்கை பெற்றிருந்தது.

ஆனால் இதைத் தொடர்ந்த தசாப்தத்தில், ஜேர்மனியின் சோசலிச எண்ணங்கொண்ட தொழிலாளர்களிடையே மார்க்சிசம் மேலோங்கிய செல்வாக்கை அடைந்தது. சமூக ஜனநாயகக் கட்சியை அடக்குவதற்கு பிஸ்மார்க்கிய ஆட்சி கொண்ட முயற்சிகள் எதிர் விளைவைத்தான் கொடுத்தன. 1890ம் ஆண்டு, "சோசலிசத்திற்கு எதிரான" சட்டங்கள் என்று கூறப்படுவனவற்றை அது இயற்றி 11 ஆண்டு காலத்திற்கு பின்னர் நடந்த தேர்தல்களில், சமூக ஜனநாயகக் கட்சி மொத்த வாக்குகளில் 19.7 சதவிகிதத்தைப் பெற்றது. முதலாளித்துவ ஒழுங்கின் சாவுமணி தனது வேலைத்திட்டம் என்று முழங்கிய வேலைத்திட்டத்தை கொண்டிருந்த ஒரு கட்சியின் தலைமையின் கீழ் தொழிலாள வர்க்கம் ஒரு பரந்த அரசியல் சக்தியாக வெளிப்பட்டதானது, ஆளும் வர்க்கத்தின் பொதுவான அறிவுஜீவித மற்றும் அரசியல் பார்வையில் தொலை நோக்குடைய பாதிப்பைக் கொண்டிருப்பதைத் தவிர வேறொன்றையும் கொண்டிருக்க முடியாது.

1880கள் அளவில், ஐரோப்பிய அரசியல் மற்றும் அறிவுஜீவித வாழ்வில் பெருகிய மற்றும் அதிகரித்த முறையில் மார்க்சிசத்தின் சக்தி வாய்ந்த செல்வாக்கு ஏற்பட்டிருந்ததை முதலாளித்துவ வர்க்கம் புறக்கணிக்க முடியவில்லை. நிலவும் சமூக ஒழுங்கிற்கு அத்தகைய பலமான சவாலை சமாளிக்கும் வேலையை பிஸ்மார்க் மற்றும் அவருடைய அரசியல் போலீசுக்கு மட்டும் விட்டுவிடமுடியாது என்பதை அது உணர்ந்தது. சோசலிசத்தைப் பற்றி வெறுமனே கண்டனம் கூறுவதும் போதுமானதாக இருக்காது. சோசலிசத்திற்கு எதிரான போராட்டம் மிகநுட்பமான கருத்தியல் வடிவத்தைத் தவிர்க்கமுடியாமல் மேற்கொண்டது. பொருளாதாரம், சமூகவியல், மெய்யியல் என்று பல்வேறு பன்முகத் தளங்களில் முதலாளித்துவ வர்க்கத்தின் அறிவுஜீவி பிரதிநிதிகள் மார்க்சிசத்துடன் போரிட முனைந்தனர்; அதன் தத்துவார்த்த அஸ்திவாரங்களில் பலவீனங்களைக் காண முற்பட்டனர். கான்டிய வகை மெய்யியலை புதுப்பித்தலுடன் தொடர்புடைய புதிய விமர்சனத்தின் ஒரு தொடர்ச்சியான அம்சம், மார்க்சிசம் தன்னை ஒரு விஞ்ஞானம் என்று தவறாக முன்வைத்தது என்பதாகும்..

இப்புதிய எதிர்ப்பாளர்கள், மார்க்சிசம் ஓர் அரசியல் இயக்கத்துடன் மறுக்கமுடியாமல் தொடர்புடையது என்பதனாலும், விஞ்ஞானத்திற்கு இருக்க வேண்டிய புறநிநிலைத் தன்மையையும், நடுநிலைத் தன்மையையும் கொண்டிருக்கவில்லை என்பதனாலும், மார்க்சிசம் விஞ்ஞானம் ஆகாது என்று வாதிட்டனர். சமூகவியல் வல்லுனரான Emil Durkheim, "ஆராய்ச்சியினால் ஒரு கொள்கைவழி (வகுத்தமைந்த கொள்கை முடிவு) விளைந்தது என்பதைவிட மார்க்சின் ஆய்வு ஒரு கொள்கைவழியை (வகுத்தமைந்த கொள்கை முடிவை) நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்டது... இந்த முறைகள் அனைத்திற்கும் தீவிர ஆர்வம்தான் உந்துதல் கொடுத்தது; இன்னும் சரியான நீதி வேண்டும் என்ற தாகம்தான் அவற்றிற்கு வலிமை கொடுத்தது... சோசலிசம் ஒன்றும் ஓர் விஞ்ஞானம் அல்ல, அது சமூகவியலின் சிறு வடிவம் ஆகும்; வலியின் அழுகைதான் அது." [5] இத்தாலிய தாராளவாத வரலாற்றாளரான Benedetto Croce இதன் முடிவுகள் ஒரு புரட்சிகர அரசியல் பெருவிருப்பின் விளைபொருளாய் இருப்பதால் மார்க்சிசம் ஓர் விஞ்ஞானமாக இருக்க முடியாது என்று இதேபோன்ற வகையில் வாதிடுகிறார். [6]

ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக, மார்க்சிசத்தின் செல்தகைமை மீதான முதலாளித்துவ-தாராளவாத தாக்குதல் அதன் விஞ்ஞான தன்மையை மறுப்பதைத்தான் மையமாகக் கொண்டிருந்தது. இத்தகைய விமர்சனம், தவிர்க்கமுடியாமல் மார்க்சும் ஏங்கல்சும், அதை விஞ்ஞான அடிப்படையில் நிலைநிறுத்துவதாக அவர்கள் கூறியபொழுது எதை அர்த்தப்படுத்தினார்கள் என்பதை பல்வேறு வகையில் பொய்மைப்படுத்தலாக இருந்தது. இயற்பியலாளர்கள் (பெளதீகவியலாளர்கள்) வான்கோள்களுக்குரிய வளைவரை பாதையின் போக்கு பற்றி நிர்ணையிக்கும் விதிகளை கண்டுபிடித்துள்ளதுபோல், அதே துல்லியத்துடன் சமூக- பொரூளாதார வழிவகைகளை நிர்ணயிக்கும் விதிகளின் போக்கையும் துல்லியமாகக் கண்டுபிடித்துவிட்டதாக ஒரு பொழுதும் அவர்கள் கூறியதில்லை. அத்தகைய விதிகள் ஒன்றும் இருக்கவில்லை.

ஆனால், இது எவ்வகையிலும் மார்க்சிசத்தின் விஞ்ஞானபூர்வ தன்மையின் மதிப்பு ஒன்றையும் குறைத்துவிடவில்லை என்பது கீழ்க்கண்ட பொருளில் கட்டாயம் உணரப்படவேண்டும். சமூகத்தின் நிலவும் நிலைமைகளுக்கும் அதன் சீர்திருத்தத்திற்கும் மறுஉற்பத்திக்குமான அவர்களின் சொந்த திட்டங்களுக்கும் இடையிலான அத்தியாவசியமான மற்றும் புறநிலை ரீதியான காரண காரியத் தொடர்பின் உறவுகளை நிறுவ முடியாதிருந்த, கற்பனாவாதச் சிந்தனையாளர்களின் முந்தைய தலைமுறையின் திட்டங்கள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றில் இருந்து மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் சோசலிசம் வேறுபட்டு இருந்தது. முதலாவதாக, வரலாற்றின் சடவாதக் கருத்துருவின் விளக்கத்துடன், மற்றும், இரண்டாவதாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் இயக்கவிதிகளை கண்டுபிடித்ததுடன் இந்த வரம்பு மார்க்சினாலும் ஏங்கல்சினாலும் கடக்கப்பட்டது- இந்த விதிகள் தம்மைத்தாமே முழுமையாக கணித்துக்கூறக்கூடிய, அடுத்தடுத்து வரக்கூடிய தொடர் நிகழ்ச்சிகள் என்றில்லாமல் போக்குகளாக வெளிப்படுத்திக்கொள்கின்றன என்று கூறியது மார்க்சிசத்தின் குறை அல்ல, ஆனால் இன்னும் சொல்லப்போனால் அவை புறநிலை சமூக யதார்த்தத்தின் அடிப்படையில் பல்வேறு கூறுகளைக் கொண்ட மற்றும் உள்ளார்ந்து முரண்படும் தன்மையைத்தான் காட்டுகின்றன.

பரந்த அளவில் கூறும்போது, பொருளாதார நிகழ்ச்சிப்போக்குகளில் தீர்க்கமான பங்கு பற்றிய கண்டுபிடிப்பும் விளக்கமும், மற்றும் மனித சமூகத்தில் உறவுகளும் புதிரைக் களைவதையும், வரலாற்றை நனவாகப் புரிந்துகொள்ளுவதையும் சாத்தியமாக்கியது. முதலாளித்துவம் பற்றிய அவருடைய ஆய்வின்போக்கில், உழைப்புச் சக்தி, மதிப்பு, இலாபம் போன்ற மார்க்சால் பயன்படுத்தப்பட்ட, வளர்த்தெடுக்கப்பட்ட மற்றும் செழுமையாக்கப்பட்ட வகையினங்கள் உண்மையாய் புறநிலைரீதியாக நிலவும் சமூகப் பொருளாதார உறவுகளின் அருவமான தத்துவார்த்த சொற்களாகும்.

அரசியல் பக்கச்சார்பு, விஞ்ஞானபூர்வ புறநிலைத் தன்மையுடன் பொருந்தாது என்ற கூற்று சொற்புரட்டு ஆகும். ஆய்வின் செல்தகைமை பக்கச்சார்பினால் விலக்கப்படுவதும் இல்லை; அக்கறையின்மையால் உறுதியளிக்கப்படுவதும் இல்லை. பக்கம் சார்தல் என்பது மார்க்சிசத்தின் புறநிலையான மற்றும் விஞ்ஞானத்தன்மைக்கு எதிரான வாதமும் அல்ல; இந்த பக்கம்சார்தல் ஆராய்ச்சியின் நேர்மையை சமரசம் செய்தது மற்றும் தவறான முடிவுகளைக் கொடுத்தது என்று காட்டப்பட்டிருக்க வேண்டும்.

1890களின் மத்தியில், மார்க்சிசத்தின் இடைவிடா முதலாளித்து விமர்சனத்தின் தாக்கம் சோசலிச இயக்கத்தில் நன்கு உணரப்பெறல் ஆயிற்று. ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முக்கியமான தலைவர்களுள் ஒருவரான எடுவார்ட் பேர்ன்ஸ்டைன், ஆரம்பத்தில் எச்சரிக்கை உணர்வுடனும் பின்னர் அரசியலில் காட்டிக் கொடுப்பவர்கள் பொதுவாக வெளிப்படுத்தும் தடையற்ற உற்சாகத்தின் மூலமும், மார்க்சிசத்தின் புரட்சிகர வேலைத்திட்டங்களுக்கு தன்னுடைய எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினார். ஜேர்மனியிலும் சர்வதேச சோசலிச இயக்கத்திலும் பேர்ன்ஸ்டைன் வகித்த பெருமதிப்பு வாய்ந்த நிலையை எடுத்துக் கொண்டால் --அவர்தான் பிரடெரிக் எங்கல்சின் படைப்புக்களை வெளியிடும் உரிமை பெற்றிருந்தவர் -- மார்க்கிசத்தைப் பற்றிய அவருடைய விமர்சனம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தவிர்க்கமுடியாததானது, ஐரோப்பா முழுவதும் சோசலிசஸ்ட் கட்சிகளிடையே உட்கட்சிப் போராட்டங்களை தூண்டிவிட்டன. மார்க்சிசத்தை பற்றிய பேர்ன்ஸ்டைனின் "திரித்தல்களின்" மீதான பூசலின் அளவு அவரே எதிர்பார்க்காத வகையில், விரும்பாத வகையில், இப்பூசல், முற்றிலும் தனிப்பட்டகாரணங்களை கொண்டிருப்பதைக் காட்டிலும், சமூகக் காரணங்களையே கொண்டிருந்தது.

நான் ஏற்னவே குறிப்பிட்டுள்ளபடி, முதலாளித்துவ தத்துவார்த்தவாதிகள், தங்கள் சிந்தனைப்போக்கில், ஒரு தற்காப்பு இயங்குமுறை என்ற வகையில், 1890களை ஒட்டி, சோசலிச இயக்கத்தின் வளர்ச்சிக்கு காட்டமாகவே விடையிறுக்கும் வகையை தொடங்கியிருந்தனர். ஆனால் இந்த எதிர்த்தாக்குதலின் பாதிப்பு உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டிருந்த கணிசமான மாறுதல்களால் வரையறுக்கப்பட்டிருந்தது. 1870களின் இடைப்பகுதியில் தொடங்கிய நீடித்த கால பொருளாதார மந்த நிலை இறுதியில் இலாப அளவுகள் மீட்சியடையவும் தொழிற்துறையும் நிதி நிலையும் பெருத்த விரிவாக்கத்தை அடையவும் வகைசெய்தன. சிற்சில பின்னடைவுகள் இருந்தபோதிலும், 1890 களின் நடுப்பகுதியில் தொடங்கிய பொருளாதார விரிவாக்கம் முதலாம் உலகப் போருக்கு சற்று முந்தைய ஆண்டுகள் வரை தொடர்ந்திருந்தன. கொச்சை மட்டத்தில் அனுபவவாத மற்றும் ஆக்க நிலைப்பாட்டில் இருந்து, குட்டி முதலாளித்துவப் பகுதிகள் மற்றும் சில தொழிலாள வர்க்கத் தட்டின் வாழ்க்கைத் தரம் பற்றிய அவர்களது சாதகமான மற்றும் பரந்த அளவில் உணரப்படும் பாதிப்புடன் சேர்ந்து, முதலாளித்துவ உற்பத்தி முறை மற்றும் வணிகம் இவற்றின் அடிப்படைக் குறியீடுகள் வலிமையுடன் வெளியே காணக்கூடியநிலையானது, முதலாளித்துவ அமைப்பை பற்றிய மார்க்சிச பகுப்பாய்வை வினாவிற்கு உட்படுத்தியது; அதிலும் குறிப்பாக, அதன் புரட்சிகர நிலைமுறிவு உடனடியாக நிகழக்கூடிய நிலையை கேள்விக்குட்படுத்தியது.

1870ம் ஆண்டு பிராங்கோ-பிரஷ்ய போருக்கு பின்னர் மிகப் பெரிய அளவில் ஜேர்மனி தொழில்துறைமயமாக்கப்பட்டதும், முறையான வகையில் 1871ம் ஆண்டு பேரரசு தோற்றுவிக்கப்பட்டதும் (இது பிஸ்மார்க்கின் தலைமையில் ஜேர்மன் ஐக்கியம் ஏற்பட்டதைக் குறிக்கும்), ஜேர்மன் தொழிலாளர் இயக்கத்தின் முரண்பாடுகளுக்கு அடிப்படையாய் இருந்தது. அது அசாதாரண முறையிலான அதன் விரைவான வளர்ச்சியை, அதன் வேலைத் திட்டத்திற்கு தத்துவார்த்த புரட்சிகர அடிப்படையாக மார்க்சிசத்தை அது மேலோட்டமாக ஏற்றதை, மற்றும் திரித்தல்வாதத்தின் வளர்ச்சியை சாத்தியமாக்கியது. முதலில், ஜேர்மனியின் புதிய தொழில்கள் மிக நவீனமான தொழில்நுட்பங்களின் அடிப்படையில் வளர்ந்தன; இதையொட்டி, நன்கு படித்திருந்த, மிகவும் பயிற்சி பெற்றிருந்த தொழிலாள வர்க்கம் தோன்றியது. இந்த முக்கியமான தட்டின் மத்தியில்தான் மார்க்சிச கருத்துருக்கள் புதுக் கருத்துருக்களை ஏற்கவல்ல ஆதரவாளர்களை கொண்டிருந்தது. மேலும், பிரஷ்ய இராணுவவாதத்தின் மரபுகளில் ஆழ்ந்திருந்த மற்றும் அனைத்துவிதமான ஜனநாயக வடிவமைப்புக்களுக்கும் நோய்க்குறியாய் எதிர்ப்புக் காட்டிய நிலம் படைத்த செல்வந்தத்தட்டின் கையில் குவிந்திருந்த, ஹோகன்ஜோலெர்ன்-பிஸ்மார்க்கிய அரசு கட்டமைப்பின் முழுப் பிற்போக்குத் தன்மையுடைய அரசியல் அதிகாரம், துணிவற்ற தாராளவாத முதலாளித்துவ வர்க்கத்திடம் இருந்து எந்தக் குறிப்பிடத்தக்க எதிர்ப்பையும் சந்திக்கவில்லை.

அரசிற்கான, பரந்த மக்கள் எதிர்ப்பின் உண்மையான குவிமையமாக சோசலிச இயக்கம் இருந்தது. உண்மையில் தொழிலாள வர்க்க வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தழுவிய பெரும் அமைப்பு ரீதியான வலைப்பின்னலை சமூக ஜனநாயகம் தோற்றுவித்திருந்தது. August Bebel தலைமையில் இருந்த SPD "அரசுக்குள் அரசு" என்ற கருத்தைப் பிரதிபலித்தது. உண்மையில் இரண்டாம் வில்லியம் ஜேர்மனிய பேரரசின் கைசராக இருந்தபோது, 1860ல் இருந்து தன்னுடைய வாழ்வு முழுவதையும் சோசலிச இயக்கத்தை கட்டமைப்பதற்கு அர்ப்பணித்திருந்த, இதற்காக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் கூட சென்றிருந்த பெபல், தொழிலாளர்களால் தங்களுடைய "கைசர்" என்று போற்றப்பட்டிருந்தார்.

1880களின் சோசலிச விரோத சட்டங்களுக்கு எதிரான கடுமையான போராட்ட காலத்திற்கு திரும்பிச்சென்றால், சோசலிச இயக்கத்தின் நடைமுறை அதன் அமைப்பை படிப்படியான முறையில் வளர்த்தெடுப்பதிலும் வலிமைப்படுத்துவதிலும் பெரும் கவனத்தைச் செலுத்தியிருந்தது. ஜேர்மன் மக்களுடைய மரபாரந்த திறமை இந்தக் குறிப்பிட்ட துறையில் மார்க்சிசத்தால் வழங்கப்பட்ட உட்பார்வைகளினால் விரிவடைந்தது. மேலும், ஜேர்மன் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி அமைப்பியல் ரீதியாகவே ஜேர்மன் தொழிற் துறையின் வளர்ச்சியுடன் பிணைந்திருந்தது. ஜேர்மன் தொழிற்துறை-பொருளாதார வளர்ச்சிக்கும் ஜேர்மன் தேசிய தொழிலாளர் இயக்கத்திற்கும் இடையே இருந்த ஆழ்ந்த உட்தொடர்பின் துன்பகரமான அரசியல் உட்குறிப்புக்கள் 1914ம் ஆண்டு நெருக்கடியின்போது இன்னும் தெளிவானதாக மாற இருந்தது.

ஆகஸ்ட் 1914 நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சி தருபவையாக இருந்தன என்றாலும், அவை நீண்ட காலமாக தயாரிக்கப்பட்டவை ஆகும். இதைப் பற்றி சற்று விரிவாக பின்னர் நான் பேசுவேன். ஆனால் அமைப்பு மற்றும் அரசியல் நடைமுறை என்ற இருவகைகளிலும் சமூக ஜனநாயக இயக்கத்தின் சில பண்பியல்புகள், பின்னர் 1914 பெருந்துன்பத்திற்கு வழிகோல இருந்தவை, ஏற்கனவே 1890களின் மத்தியில் தெளிவாக இருந்தன.

1893ம் ஆண்டு Erfurt திட்டம் ஏற்கப்பட்டது, சமூக ஜனநாயகக் கட்சியை முறையாக சமூகத்தின் புரட்சிகரமான மாற்றத்திற்கு சம்பிரதாயமாக ஒப்புக்கொள்ள வைத்திருந்த போதிலும்கூட, ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் நடைமுறை, விரைவான பொருளாதார விரிவாக்க காலத்தில் நிலவிய புறநிலைக் காரணிகளால் ஒரு பெரும் அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வகையில், சீர்திருத்த தன்மையைத்தான் முக்கியகூறாகக் கொண்டிருந்தது. ஹோஹென்ஜோலெர்ன் ஜேர்மனியின் மார்க்சிசம், தனித்தன்மை வாய்ந்த முறையில், ஒரு புரட்சிகர முன்னோக்கை சீர்திருந்த வழக்கத்துடன் சமரசப்படுத்திக் கொள்ளும் நிலையில்தான் எப்பொழுதும் இருந்தது என்று ட்ரொட்ஸ்கி பின்னர் குறிப்பிடுகிறார். இந்த வடிவமைப்பிற்குள் இரண்டுவித துறைகள் விதிவிலக்கான முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடுகளை கொண்டிருந்தன: ஒன்று, ஜேர்மனியின் பாராளுமன்றத்திலும் பல மாநிலப் பாராளுமன்றங்களிலும் சமூகஜனநாயக பிரதிநிதித்துவத்தை பெருக்கிக் கொள்ளும் இலக்குடைய தேர்தல் சார்புடைய செயற்பாடு; இரண்டாவது தொழிற்சங்க நடவடிக்கை; அதாவது, முதலாளித்துவ தொழிற்கூடங்களுள் தொழிலாளர்கள் அமைப்பை நிறுவி அவர்களின் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துதல் என்பதாகும்.

இரண்டு துறைகளிலும் சமூக ஜனநாயகக் கட்சி குறிப்பிடத்தக்க வகையில் நடைமுறை விளைவுகளை சாதித்தது. ஆயினும், ஒரு புரட்சிகர மூலோபாய நிலைப்பாட்டில் இருந்து இதற்கு குறிப்பிடத்தக்க இழப்புக்களும் இருந்தன. பாராளுமன்ற பிரிவுகளின் (கன்னைகளின்) செயற்பாடுகள் கணக்கிலடங்கா வகையில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை முதலாளித்துவ அரசில் இருந்து பராமரிப்பதற்கும், நடைமுறை விளைவுகளை உருவாக்குவதற்கான அழுத்தத்திற்கும் இடையிலான பிரச்சினையின் கணக்கற்ற வடிவங்களில் தோன்றின. சமூக ஜனநாயகக் கட்சி ஜேர்மனியில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்தாலும், பாராளுமன்றத்தில் பிரபுக்கள் மற்றும் முதலாளித்துவ எதிராளிகள் ஆகியோரின் இணைப்பு அதைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. இதன் விளைவாக தன்னுடைய முயற்சியில் இக்கட்சி பாராளுமன்றத்தில் அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராக பாராளுமன்ற சிறுபான்மைக் கட்சி என்ற முறையில்தான் வாக்களிக்க முடிந்ததை தவிர அதிகமாக ஒன்றும் செய்ய முடியாதிருந்தது.

இந்தப் பெரும் சோர்வுதரும் நிலைமைக்கு கொள்கைரீதியான தீர்வு ஒருபுறம் இருக்க, எளிமையான தீர்வுகூட இல்லை. ஆனால் சமூக ஜனநாயகக் கட்சியிலேயே சில கூறுபாடுகள், குறிப்பாக தெற்கு ஜேர்மனியில் இருந்தவர்கள், ஒரு தீர்வை கண்டனர்; அதாவது முதலாளித்துவ தாராளவாதிகளுடன் ஒருவித பாராளுமன்றக் கூட்டு என்பதே அது. இது தேசிய தலைமையினால் எதிர்க்கப்பட்டது மற்றும் தேசியப் பாராளுமன்றத்தில் இந்த வடிவிலான வர்க்க ரீதியான ஒத்துழைப்பிற்கு, அங்கு கட்சிப் பகுதியின் தலைமைப் பொறுப்பை வகித்திருந்த பெபல் அனுமதி மறுத்துவிட்டார். ஆனால் ஜேர்மன் முதலாளித்து வர்க்கத்தின் சில பகுதிகளுடனான நடைமுறை ஒத்துழைப்பிற்கான அழுத்தம் தொடர்ந்து இருந்தது.

மற்றொரு பணித்துறையான தொழிற்சங்கங்கள் இன்னும் பெரிய பிரச்சினைகளை வைத்தன. 1870களிலும், 1880களிலும் சமூக ஜனநாயகக் கட்சி ஜேர்மன் தொழிற்சங்க வாதத்தின் செவிலித்தாய் போல செயலாற்றி வந்தது. தொழிற்சங்கங்களின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தேவையான தலைமை, நிதியம் ஆகியவற்றை அது அளித்து வந்தது. ஆனால் 1890 களின் தொடக்கத்தில் இருந்து தொழிற்சங்கங்களுக்கும் கட்சிக்கும் இடையே இருந்த உறவு மாறத் தொடங்கியது. தொழிற்சங்கங்கள் கட்சியைவிட விரைவாக வளர்ந்தன; கட்சி நாளடைவில் தொழிற்சங்கங்களிடம் நிறுவன மற்றும் நிதி ஆதரவிற்கு சார்ந்துநிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜேர்மனியின் பெரிய தொழிற்சங்கங்கள் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையில் இருந்த பெபல் பிரிவு (கன்னை) கொடுத்திருந்த அரசியல் நிலைப்பாட்டை முறையாகப் பின்பற்றுவதைத் தக்கவைத்திருந்த சமூகஜனநாயகவாதிகளின் தலைமையின் கீழ் இயங்கின. ஆனால் தவிர்க்க முடியாமல் தொழிற்சங்கத் தலைவர்களின் அன்றாடப்பணி பொதுவாக சீர்திருத்த தன்மையைத்தான் கொண்டிருந்தது.

பேர்ன்ஸ்டைனால் பயன்படுத்தப்பட்ட தத்துவார்த்த சூத்திரங்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் மார்க்சிச எதிர்ப்பு மெய்யிலில் நடைமுறையில் இருந்த போக்குகளினால் நேரடியாக செல்வாக்கிற்குட்பட்டிருந்தாலும், பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதத்திற்கான நடைமுறை உந்ததுல் ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் இருந்த புறநிலை சமூகப் பொருளாதார நிலைமைகளினால் நிர்ணயிக்கப்பட்டன. இந்தப் புறநிலை உள்ளடக்கத்தில், பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதப் போக்கு ஜேர்மன் சோசலிச இயக்கத்தின் பொதுவான சீர்திருத்தவாத நடைமுறையின் தத்துவார்த்த வெளிப்பாடாக எழுந்தது. இந்த புறநிலைச் சூழ்நிலைகள் மற்றும் நடைமுறை செயற்பாட்டு வடிவங்கள் ஏற்கனவே ஓரளவு இருந்திருந்த மட்டத்திற்கு, ஏனைய நாடுகளில், குறைந்த அல்லது கூடுதலான மட்டத்திற்கு, பேர்ன்ஸ்டைனின் திருத்தல்வாதப் போக்கிற்கு ஒரு சர்வதேச ஆதரவு கிடைத்தது.

தொடரும்

Notes:

[5] Quoted in H. Stuart Hughes, Consciousness and Society (New York: Vintage, 1977), p. 77.

[6] Ibid, p. 88.

See Also:

Socialist Equality Party and WSWS hold summer school in US

[29 August 2005]

Lecture one: The Russian Revolution and the unresolved historical problems of the 20th century

Part 1

Part 2

Part 3

Part 4


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved