World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP meeting commemorates veteran Sri Lankan Trotskyist

நீண்டகால இலங்கை ட்ரொட்ஸ்கிஸ்டை நினைவுகூர்ந்த சோ.ச.க கூட்டம்

By our correspondent
3 June 2005

Use this version to print | Send this link by email | Email the author

சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) நீண்டகால உறுப்பினரான, எல்லோராலும் பாப்பா என்றழைக்கப்பட்ட தோழர் சரவணப்பெருமாளை நினைவு கூரும் முகமாக, இலங்கை சோ.ச.க தீவில் யுத்தத்தால் அழிந்த வடமாகாணத்தின் தலைநகரான யாழ்பாணத்தில் ஒரு வெற்றிகரமான கூட்டத்தை நடாத்தியது. தோழர் சரவணப்பெருமாள் சுவாசப்பை நோய் காரணமாக ஏப்ரல் 14ம் திகதி மரணமடைந்தார்.

மே 29ம் திகதி யாழ் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், நண்பர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் உட்பட 70 பேர் பங்குபற்றியிருந்தனர். சரவணப்பெருமாளின் மனைவி சரஸ்வதி, அவரின் ஒரேயொரு மகனான பரணிதரனும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர். கூட்டத்திற்கு முன்னதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட சரவணப்பெருமாளின் நினைவுக் குறிப்பின் பிரதிகள் ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்டிருந்தன.

தீவு பூராகவும் மற்றும் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் அரசியல் பதட்ட நிலைமைகள் வளர்ச்சியடைந்து வருகின்ற நிலைமைகளுக்கு மத்தியிலேயே இந்தக் கூட்டம் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இடை நிறுத்தப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மேற்கொண்ட முயற்சிகள், அவருடைய கூட்டரசாங்கத்திற்குள்ளேயே பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன. சிங்கள இனவாதக் குழுக்கள் கிழக்கு நகரமான திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க எடுத்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இனவாத பதட்ட நிலைமைகள் அதிகரித்துள்ளன.

கூட்டம் ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. கூட்டத்திற்கு தலைமை வகித்த சோ.ச.க யின் யாழ்ப்பாண அங்கத்தவர் ப சம்பந்தன் விளக்கியதாவது: "இந்தக் கூட்டம் வெறும் சம்பிரதாய பூர்வமானது அல்ல. நாம் தோழர் சரவணப்பெருமாளின் வாழ்க்கையையும் அரசியல் வேலையையும் ஆய்வு செய்வதன் மூலம் மற்றும் உலகத் தொழிலாள வர்க்க இயக்கத்தின் வரலாற்றுப் படிப்பினைகளை கற்பதன் மூலமும் அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.

"தோழர் சரவணப்பெருமாளின் அரசியல் வரலாறு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக் கிளையான சோ.ச.க யின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. 30 வருடங்களாக அனைத்துலகவாத பதாகையின் கீழ் தொழிலாளர் வர்க்கத்திற்காக அவர் சளைக்காது போராடினார். விஞ்ஞான ரீதியான மார்க்சிச தத்துவத்தைக் கற்றதுடன் அனைத்துலக சோசலிசத்திற்காக அவர் போராடினார் " என்று அவர் குறிப்பிட்டார்.

டிசம்பர் 26 தெற்காசியாவை தாக்கிய சுனாமியினால் ஏற்பட்ட பிரமாண்டமான உயிர், சொத்து மற்றும் உட்கட்டமைப்பு சேதத்தைப் பற்றி சம்பந்தன் விளக்கியதோடு, பாதிக்கப்பட்டோருக்கு உதவி வழங்குவதற்காக பொதுக் கட்டமைப்பை அமைப்பதில் இலங்கை ஆளும் தட்டு தோல்வி கண்டது பற்றியும் அவர் விபரித்தார்.

"இந்த அபிவிருத்திகள், தமிழ் மற்றும் சிங்கள தொழிலாளர் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்கின்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தொழிலாளர் வர்க்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றன. சிங்கள- தமிழ் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் ஊடாக ஸ்ரீலங்கா- ஈழம் சோசலிசக் குடியரசை கட்டியெழுப்புவதன் மூலமே உண்மையான சமாதானத்தை அடைய முடியும். இந்தப் போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் கட்சி ஒன்றை வேண்டி நிற்கிறது. சோ.ச.கட்சியே அந்தக் கட்சியாகும்" என்று அவர் மேலும் தனது உரையில் குறிப்பிட்டார்.

சோ.ச.க யின் மத்திய குழு உறுப்பினரான தி.சந்திரசேகரம், தோழர் சரவணப்பெருமாளுடன் யாழ்ப்பாணம் சீநோர் தொழிற்சாலையில் கூட்டாக வேலை செய்தவராவார். கூட்டத்தினர் மத்தியில் அவர் உரையாற்றிய போது: "சரவணப்பெருமாள் தனது தொழிற்சாலையில் அரசியல் பிரச்சினைகள் உட்பட ஏனைய பிரச்சினைகளை அணுகும் போது அமைதியாக அணுகுவார். அவர் பிரச்சினைகளைப் பற்றி நன்கு சிந்திப்பார். இந்த தகுதி அவரது தொழில்நுட்பவியலாளர் தொழிலும் காணப்பட்டது.

"தொழிலாளர்களின் ஆழமடைந்துவரும் பிரச்சினைகளை தொழிற்சங்கங்களால் தீர்த்து வைக்க முடியாது என்பதை அவர் விளங்கியிருந்தார். தொழிலாளர் வர்க்கம் தனது சொந்த அரசியல் முன்னோக்கைக் கொண்டிருப்பதும் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயற்படும் முதலாளித்துவ அரசியல் வேலைத் திட்டத்திலிருந்து விலகுவதும் அவசியமானது என்பதை அவர் வலியுறுத்தினார். தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரமான கட்சியை கட்டியெழுப்ப வேண்டிய தேவையை அவர் புரிந்துகொண்டிருந்ததோடு தனது வாழ்க்கையை அந்த அரசியல் போராட்டத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டார்" என்று அவர் குறிப்பிட்டார்.

பிரதான உரையை நிகழ்த்திய சோ.ச.க மத்திய குழு உறுப்பினர் எம்.தேவராஜா, கூட்டத்தில் பங்குபற்றியிருந்த சரவணப்பெருமாளின் குடும்பத்தினருக்கு விசேடமாக நன்றியைத் தெரிவித்துக் கொண்டு உரையை ஆரம்பித்தார்.

"பாப்பா போராடிய அரசியல் வேலைத் திட்டம் மற்றும் முன்னோக்கு இப்போது பரந்தளவில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு காலப்பகுதிக்குள் நாம் நுழைந்துள்ளோம். அவர் கட்சியில் இணைந்த 1975ம் ஆண்டில் இருந்து அவர் இறந்த 2005ம் ஆண்டு வரையான 30 வருடங்கள், சர்வதேச ரீதயாகவும் இலங்கையிலும் அரசியல் ரீதியில் தீர்க்கமான காலகட்டமாகும்.

"1975ல் சோ.ச.க யின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் சேர்ந்த பொழுது, அவர் தெரிவு செய்துகொண்டது ஒரு இலங்கைக் கட்சியையோ அல்லது வட கிழக்கில் உள்ள கட்சியையோ அன்றி ஒரு உலகக் கட்சியையே ஆகும். உலகத் தொழிலாளர் வர்க்கத்தை இன, மத மற்றும் மொழி பேதமில்லாமல் ஒரு பொது முன்னோக்கைச் சூழ ஐக்கியப்படுத்துவதே எமது கட்சியின் அடிப்படைக் கொள்கையாகும்."

சரவணப்பெருமாள் இணைந்தபோது இருந்த சிரமமான அரசியல் நிலைமைகளை தேவராஜா விளக்கினார். 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க) தனது ட்ரொட்ஸ்கிச அடிப்படைகளைக் கைவிட்டு திருமதி பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்துகொண்டது. "1970ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ல.ச.ச.க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்திருந்த கூட்டரசாங்கம், தமிழ் மக்களுக்கு எதிராக, குறிப்பாக இளைஞர்களுக்கு எதிராக பல இன ரீதியில் பாரபட்சமான மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

"ல.ச.ச.க 1956ம் ஆண்டு சிங்கள மொழியை மாத்திரம் அரச மொழியாக்கும் மசோதாவை எதிர்த்தது. ஆனால் 1972 ம் ஆண்டில் சிங்களம் மட்டும் என்பதை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பை வரைவதற்கும் அமுல்படுத்துவதற்கும் அது உதவியது. இந்த சூழ்நிலைகளின் கீழ், தமிழ் இளைஞர்கள் ல.ச.ச.க யில் நம்பிக்கை இழந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டம் உட்பட தமிழ் தேசியவாதத்தின் பக்கம் திரும்பினர். இதே போல், சிங்கள இளைஞர்கள் இனவாதம் கலந்த தீவிரவாத அரசியலைப் போதிக்கின்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பக்கம் திரும்பினர். ஆயினும், ல.ச.ச.க காட்டிக்கொடுத்த அனைத்துலக சோசலிச வேலைத்திட்டமே தொழிலாளர் வர்க்கத்திற்கு அவசியமென்பதை உணர்ந்து கொண்ட தோழர் சரவணப்பெருமாள், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தில் (பு.க.க) சேர்ந்தார்.''

1977 பொதுத் தேர்தலில் சிங்கள, தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கு எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் தலையிட்டதை தேவராஜா விபரித்தார். சிங்கள, தமிழ் தொழிலாளர் லர்க்கத்தை சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்காக, கட்சி யாழ் குடாநாட்டில் வட்டுக்கோட்டை உட்பட 7 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வெற்றி பெற்றது. தமிழ் மக்களுக்கு எதிரான பாரபட்ச நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்த ஜெயவர்தனா, 1983ல் தமிழர்களுக்கு எதிரான இனவாதப் படுகொலைகளையும் உள்நாட்டு யுத்தத்தையும் தூண்டினார்.

தெற்கில் வளர்ச்சிகண்டுவரும் சமூக அமைதியின்மையை எதிர்கொண்ட ஜெயவர்தன, வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய "அமைதி காக்கும் படைகளை" நுழைப்பதற்காக 1987ல் இந்தியாவுடன் ஒரு உடன்படிக்கையை கைச்சாத்திட்டது பற்றி தேவராஜா விளக்கினார்: "யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள சுதுமலையில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், தான் இந்திய இலங்கை உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளத் தள்ளப்பட்டதாக கூறினார். இந்த உடன்படிக்கையின் கீழேயே இந்திய துருப்புக்களின் ஆக்கிரமிப்பு இடம்பெற்றது. மக்கள் குழம்பிப்போனார்கள். இந்த உடன்படிக்கையின் கீழ், தமிழர்களும் அதே போல் சிங்கள கிராமப்புற இளைஞர்களும் இரக்கமற்ற ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டனர். "நாங்கள் இந்த உடன்படிக்கையை எதிர்த்தோம். யாழ்ப்பாணம் நல்லூரில் தோழர் பாப்பா தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், இந்த உடன்படிக்கைக்கு எதிராக, இந்தியத் துணைக்கண்ட ஐக்கிய சோசலிச குடியரசுகளின் ஒரு பாகமாக ஸ்ரீலங்கா- ஈழம் சோசலிச குடியரசு என்ற முன்நோக்கு முன்வைக்கப்பட்டது" என தேவராஜா தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தம் முறிந்து அழிவுகரமான விளைவுகளுடன் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. "ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு தப்பியோடத் தள்ளப்பட்ட லட்சக்கணக்கானவர்களில் சரவணப்பெருமாளும் ஒருவராக இருந்தார். இந்த யுத்தம் மரணங்களையும் காயங்களையும் மட்டுமன்றி நோய், போஷாக்கின்மை, கல்வியறிவின்மை மற்றும் அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் கொண்டு வந்தது. இது எமது தோழரின் உடல்நிலை பலவீனத்திற்கு நேரடியாக வழிவகுத்தது"

தொழிலாளர் வர்க்கம் எதிர்கொள்கின்ற எந்தவொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கு முதலாளித்துவம் இலாயக்கற்றது என்பதை தேவராஜா விளக்கினார். 1980 களில் கிழக்கு ஐரோப்பாவிலும் மற்றும் சோவியத் ஒன்றியத்திலும் இருந்த ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின் பொறிவை "சோசலிசத்தின் முடிவு" மற்றும் "சந்தையின் மாபெரும் வெற்றி" என உலகம் பூராவும் முதலாளித்துவம் வரவேற்றது. ஆனால் கடந்த ஒன்றரை தசாப்தங்களும் பொருளாதார தேக்க நிலை, வளர்ச்சியடையும் சமூக சமத்துவமின்மை மற்றும் யுத்தத்தையுமே முன்கொணர்ந்துள்ளன.

"இன்று இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்று 60 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் மற்றுமொரு உலக யுத்தத்தற்கான அச்சுறுத்தல் தோன்றியுள்ளது. வளர்ச்சிகண்டுவரும் பொருளாதார நெருக்கடி நிலைமையின் மத்தியில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஊடாக தனது தேவையை நாடுவதன் மூலம் உலக ரீதியான இராணுவ மோதலுக்கான ஆபத்தை தோற்றுவித்துள்ளது.

"அமெரிக்காவிலும் உலக ரீதியிலும் உள்ள தொழிலாளர்களுக்கான ஒரே பதிலீடு உலக ஏகாதிபத்திய அமைப்பு முறையை தூக்கிவீசுவதற்காக ஐக்கியப்படுவதேயாகும். சோ.ச.க மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வேலைத் திட்டமும் முன்னோக்கும் இதுவேயாகும். தோழர் சரவணப்பெருமாள் இந்த முன்னோக்கிற்காகவே தனது வாழ்நாள் பூராக போராடினார். ஆகவே, இந்தப் போராட்டத்தில் எங்களுடன் இணையுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறி தேவராஜா தனது உரையை முடித்தார்.

Top of page