World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிMerkel elected as Germany's chancellor: grand coalition to implement social cuts ஜேர்மனியின் அதிபராக மேர்க்கல் தேர்ந்தெடுக்கப்பட்டார்: சமூக வெட்டை அமுல்படுத்துவதற்கு பெரும் கூட்டணி By Ulrich Rippert பேர்லினில் உள்ள ரைஸ்ராக் சிறப்பு அரங்கில் கிறிஸ்தவ ஜனநாயகத் தலைவர் அங்கேலா மேர்க்கல் நவம்பர் 22ம் தேதியன்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) என்று 448 பிரதிநிதிகள் கொண்ட பெரும் கூட்டணியில் 397 உறுப்பினர்களுடைய வாக்குகளை இவர் பெற்றார். "யூனியன்கள்" மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி பிரிவுகளில் இருந்து 51 பிரதிநிதிகள் இவருக்கு ஆதரவு கொடுக்க மறுத்து விட்டனர். மேர்க்கலுக்கு முதலில் பாராட்டுத் தெரிவித்தவர்களுள் ஒருவராக, பதவியிலிருந்து விலகும் சமூக ஜனநாயகக் கட்சியின் ஹெகார்ட் ஷ்ரோடரும் இருந்தார்; முறையாக அதிபர் பதவிமாற்றம் ஏற்பட்டபோது, மேர்க்கல் ஷ்ரோடருடய ஒத்துழைப்பிற்கும் கடந்த சில வாரங்களாக கூட்டணிக்கான உடன்பாட்டு இரகசிய பேச்சுவார்த்தைகளுக்காகவும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார். செவ்வாய்க்கிழமை வாக்கெடுப்பிற்கு சில நாட்கள் முதலில் இருந்தே சமூக ஜனநாயகக் கட்சி அனைத்து சமூக ஜனநாயக உறுப்பினர்களும் மேர்க்கலுக்கு வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கு தீவிர பிரச்சாரத்தை நடத்தியிருந்தது. அவருடைய கூற்றின்படி, புதிய சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற தலைவரான பீற்றர் ஸ்ட்ருக், முன்னாள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், ஊசலாடிக் கொண்டிருந்த அனைத்து சமூக ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளுடனும் "மனம் திறந்த விவாதத்தை" நடத்தியிருந்தார். தேர்தலுக்கு முந்தைய நாள் மாலை ஸ்ட்ருக், சமூக ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற பிரிவிற்கு தன்னுடைய கருத்தை எடுத்துரைப்பதற்காக தனிப்பட்ட முறையில் மேர்க்கலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். தன்னுடைய கட்சியிலோ அல்லது CSU விலோ தனக்கு நிபந்தனையற்ற ஆதரவு இல்லை என்பதை மேர்க்கல் நன்கு அறிவார். முன்னாள் CDU கட்சித் தலைவரான பிரெடெரிக் மெர்ஸ், சமூக ஜனநாயகக் கட்சியுடன் கொண்டுள்ள கூட்டணி ஒப்பந்தத்தை, யூனியனின் முத்திரையை அது சிறிதும் கொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்திருந்தார் மேலும் தனிப்பட்ட முறையில் பல கிறிஸ்தவ ஜனநாயக கட்சியினரும் மேர்க்கலின் தேர்தல் பிரச்சாரத்தை விமர்சித்திருந்தனர்; சமூக ஜனநாயகக் கட்சியை விட ஆரம்பத்தில் 20 சதவிகிதம் முன்னணியில் இருந்த நிலையை அவருடைய பிரச்சாரம் மாற்றிவிட்டது என்று அவர்கள் விமர்சித்திருந்தனர். தேர்தல் படுதோல்விக்கு பின்னர் உட்கட்சிப் பூசல்கள் அனைத்தையும் அவர் அடக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், சமூக ஜனநாயகக் கட்சி வாக்குகளைத்தான் மேர்க்கல் மிக அதிகமாக நம்பியிருந்தார், அதுவும் தடையின்றி அவருக்குக் கிடைத்தது. வாக்கு இரகசியமாக நடத்தப்பட்டதிலிருந்து அரசாங்கத்தின் எந்த முகாமில் இருந்து 51 "இல்லை", வாக்குகளும், வாக்குகள் பதிவு செய்யப்படாமையும் போயின என்று கூறுவது இயலாததாகும். இன்னும் கூடுதலான வகையில் யூனியன் பிரதிநிதிகள் சமூக ஜனநாயக கட்சியினரை விட மேர்க்கலுக்கு எதிராக வாக்களித்திருக்கக் கூடும். வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்தவுடனேயே, மேர்க்கலும் அவருடைய மந்திரிகளும் கூட்டாட்சி தலைவர் ஹோர்ஸ்ட் கோலரிடமிருந்து நியமனக் கடிதங்களை பெற்ற அளவில், மேர்க்கல் தன்னுடைய முதல் மந்திரிசபை கூட்டத்தை நடத்தினார். மந்திரிப் பதவிகள் அடிப்படையில், சமூக ஜனநாயகக் கட்சியினர் மந்திரிசபை மேசையை சுற்றிலும் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். துணை அதிபரும், நிதிமந்திரியுமான பிரான்ஸ் முன்ட்டபெரிங் உள்ளிட, சமூக ஜனநாயகக் கட்சிக்கு வெளியுறவுத்துறை, நீதி, போக்குவரத்து, வேலைகள், சுகாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் அபிவிருத்தி உதவி அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. யூனியனில் இருந்து ஆறு மந்திரிகளுடன், சமூக ஜனநாயக மந்திரிகள் எட்டு பேர் இணைந்து செயல்படுவர்; யூனியனை சேர்ந்தவர்கள் பொருளாதாரம், பாதுகாப்பு, உள் விவகார அமைச்சகங்களுடன் வேளாண்மை, குடும்ப விவகாரம், கல்வி ஆகிய பொறுப்புக்களை கொண்டுள்ளனர். அதிபரும், காபினெட் அந்தஸ்து உடைய அவருடைய அதிகாரிகள் தலைவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டால்தான் அரசாங்கம் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் CDU/CSU ஆகியவற்றின் சமமான பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கின்றது எனக் கூறமுடியும். மேர்க்கல் அரசாங்கத்தை மிகச் சிறந்த வகையில் காட்டும் முயற்சியில் ஜேர்மன் ஊடகம் பெரும் முயற்சிகளை கொண்டுள்ளது. மிகப் பரந்த மக்கள் ஆதரவை இது பெற்றுள்ளது என்று அத்தகைய கூற்றிற்கு எந்த ஆதாரமும் கொடுக்காமல் சில வர்ணனையாளர்கள் கூறுகின்றனர். "பெரும் மக்கள் கட்சிகள்" இரண்டிற்குமிடையில் ஒத்திசைவைப் பற்றி "ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பம்" என வேறு சிலர் புகழ்ந்துள்ளனர். ஜேர்மனிய வரலாற்றில் முதல்தடவையாக ஒரு பெண்மணி அதிபராக பதவியை வகிப்பது அரசாங்கம் குறைந்த ஆக்கிரோஷத்தன்மை, கூடுதலான மனிதாபிமானத்துடன் செயல்படும் என்பதற்கு நிரூபணம் எனக் கூறப்படுகிறது; லண்டனில் மார்கரெட் தாட்சர், உலகின் மற்ற பகுதிகளில் பெண் பிரதம மந்திரிகளும், அதிபர்களும் அத்தகைய வாதத்தை, நீண்ட நாட்களுக்கு முன்னரே தவறென நிருபித்த போதிலும்கூட இவ்வாறு பேசப்படுகிறது. உண்மையில் போருக்குப் பிந்தைய கால ஜேர்மன் வரலாற்றில் மிகுந்த வலதுசாரி தன்மையை கொண்ட அரசாங்கம்தான் மேர்க்கலுடைய அரசாங்கம் ஆகும். ஷ்ரோடர் அரசாங்கத்தால் உருவாக்கிய தாக்குதல்களை இவர் வியத்தகு முறையில் அதிகமாக்குவார். பெருநிறுவனங்களால் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் கோரப்படும் நலன்புரி வெட்டுக்கள் மற்றும் உழைப்புச் சந்தையில் வளைந்து கொடுக்கும் தன்மை ஆகிய "சீர்திருத்தங்களை" திணிப்பதை அவரது பணி கொண்டிருக்கிறது. 200 பக்கங்கள் கொண்ட கூட்டணி ஒப்பந்தத்தை மேம்போக்காகப் பார்த்தால் கூட இந்த உண்மை புலனாகும். தேர்தல் பிரச்சாரத்தின்போது மதிப்புக் கூட்டு வரி (VAT) இரண்டு சதவிகிதம் அதிகரிக்கப்படும் என்று மேர்க்கல் அறிவித்தபோது, வாக்கு மதிப்பீடுகளில் திடீர்சரிவு ஏற்பட்டது. இப்பொழுது கூட்டணி ஒப்பந்தம் VAT ல் மூன்று சதவிகித அதிகரிப்பை திட்டமிட்டுள்ளது. இதைத் தவிர, புதிய அரசாங்கம் ஓய்வூதிய வயதை 65-ல் இருந்து 67-ஆக உயர்த்தவும், போக்குவரத்து வரிச்சலுகைகளை குறைக்கவும், வேலைப்பாதுகாப்பு நெறிப்படுத்தல்களை பெருமளவு அகற்றவும், தொழிலாளர்கள், வேலையற்றோருக்கு எதிராக நேரடியாக பல நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் உள்ளது. வட்டம் முழுமையடைகிறது அதிபர் பதவியில் மேர்க்கல் இப்பொழுது வந்துவிட்ட வகையில் வட்டம் முழு உருப் பெறுகிறது. வசந்த காலத்தில் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக்கட்சிக் கூட்டணியின் சிக்கனத்திட்டங்களை வலியுறுத்திய "செயற்பட்டியல் 2010" பெருகிய முறையில் எதிர்ப்பை சந்தித்தபோது, வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சிக்கு தோல்வியை விளைவித்தது; அது மாநில தேர்தல்களில் தொடர்ச்சியாக 11-வது தோல்வியாகும்; அதையொட்டி ஷ்ரோடரும் முதலாளிகள் சங்கமும் ஒரு பொது அரசியல் செயலிழக்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சினர். இதைச் சமாளிக்கும் வகையில் புதிய தேர்தல்களை கொண்டுவருவதற்காக, ஜேர்மனிய அரசியற்சட்டத்தை மீறுகின்ற செயலாக இருந்தபோதிலும் கூட ஷ்ரோடர் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை வற்புறுத்திக் கொண்டுவந்ததன் மூலம் பதில் அளித்தார். பேர்லினின் சர்லோட்டன்பேர்க் கோட்டையில் புதிய அரசாங்கத்தை நியமிக்கும் விழாவின்போது, கூட்டாட்சி தலைவர் கோஹ்லர், "தன்னுடைய சீர்திருத்தங்களை தொடர்கையில்" வரவிருக்கும் நிர்வாகம் "அரசியலமைப்பு பற்றி மிகுந்த மரியாதையுடன்'' நடந்து கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடைகாலத்தில் ஷ்ரோடருக்கு குறுகிய ஆனால் ஸ்திரமான பெரும்பான்மை உள்ளது என்ற நிலையில், கூட்டாட்சி தலைவரே அரசியலமைப்பிற்கு மரியாதையை அகற்றும் வகையில், நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புக் கொண்ட வகையில், இத்தகைய ஓசை கேலிக்கூத்தாகத்தான் உள்ளது. யூனியனுடனும் மற்றும் Guido Westerwelle இன் தாராளவாத ஜனநாயகக் கட்சியுடனும் ஒரு கூட்டணி அமைக்கும் என்ற நம்பிக்கையை, முதலில் மேர்க்கல் கொண்டிருந்தார். ஆனால் அவர்களுடைய புதிய தாராளவாத கருத்துருக்களை வாக்காளர்கள் தெளிவாக புறக்கணித்துவிட்டனர். சமூக ஜனநாயகக் கட்சி மேர்க்கலுடைய உதவிக்கு விரைந்து வந்து, அவர் அதிபராவதற்கு உத்தரவாதம் அளித்தது. ஒன்றாக இவை இப்பொழுது இதுகாறும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்ட சமூக வெட்டுக்களை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளன. வன்முறையான சமூக மற்றும் அரசியல் மோதல்கள் செயல்பட்டியலில் உறுதியாக இடம்பெற்றுள்ளன. மேர்க்கல் பதவி ஏற்பதற்கு முன், விலகிப்போகும் அதிபரான ஷ்ரோடர் பெரும் ஆடம்பரத்துடனும் கேளிக்கையுடனும் பிரிவுபசாரம் பெற்றார். "ஜேர்மனிக்கு அவர் செய்திருந்த அசாதாரணமான முக்கிய பணியை", அதாவது அவர் தொடக்கிய தொழிலாளர்கள் மீதான செயற்பட்டியல் 2010-ஐ Köhler ம் மேர்க்கலும் கையெழுத்திட்டு சான்றளித்தனர்; அவற்றை புதிய அரசாங்கம் இப்பொழுது கட்டியெழுப்பும். முதல் மந்திரிசபை கூட்டம் முடிந்தவுடனேயே, தன்னுடைய அரசாங்கத்தின் முக்கிய இலக்கு பெருமளவு வேலையின்மைக்கு எதிராக இருக்கும் என்று மேர்க்கல் கூறினார். சமீபத்திய புள்ளிவிவரங்கள் இக் கூற்று எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன. செப்டம்பர் தேர்தலுக்கு பின்னர், பெருநிறுவன இயக்குனர்களின் அறைகளில் இருந்து வெளிவரும் கெட்ட செய்திகளுக்கு முடிவே இல்லாமல் உள்ளது. சீமென்ஸ், வோல்க்ஸ்வாகன், டைம்லர்கிறிஸ்லர் இன்னும் பல பெருநிறுவனங்களும் கணிசமான வேலைவெட்டுக்கள் இருக்கும் என்பதை முன்னிழலிட்டுக் காட்டியுள்ளன. 32,000 வேலைகள் குறைக்கப்பட்டுவிடும் என்று ரெலிகொம் மட்டும் அறிவித்துள்ளது. பெருநிறுவன நிர்வாகிகளால் மேற்கோள் காட்டப்பட்ட முக்கிய காரணம் கிழக்கு ஐரோப்பா, ஆசியாவிலிருந்து குறைவூதிய போட்டிகள் இருப்பதாகும். இதனை அடுத்து புதிய பொருளாதார மற்றும் நிதி மந்திரிகள் தங்கள் புரிதலையும் ஆதரவையும் சமிக்கை காட்டியுள்ளனர். இந்தச் சூழ்நிலைகளின் கீழே, "பரந்த வேலையின்மைக்கு எதிரான போராட்டம்" என்பது முதலாளி-பணியாளர் உறவை தீவிரமாக தளர்த்தல் மற்றும் குறைவூதிய வேலைபார்த்தலை விரிவுபடுத்தல் என்பதாகும், இது ஏற்கனவே சுமார் ஆறு மில்லியன் மக்களை சூழ்ந்துள்ளது. ஹார்ட்ஸ் IV தொழிலாளர் "சீர்திருத்தம்" என்பது தீவிரப்படுத்தப்படும். முன் எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும், வேலையின்மை மற்றும் வேலைநீக்கம் என்ற அச்சுறுத்தல் தொழிலாளர்களை கணிசமான ஊதியக் குறைப்புக்கள், குறைவான பணிவசதிகள் ஆகியவற்றை பலவந்தமாய் ஏற்கவைக்க பயன்படுத்தப்படும். இதுவே சர்வதேசரீதியாக நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பெருநிறுவனங்கள் திவாலான சட்டங்களை பயன்படுத்தி ஊதியங்களில் கடுமையான குறைப்புக்களை கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சிபோக்கை விமானப் போக்குவரத்து தொடக்கியது; முன்பிருந்த சம்பள மட்டத்தைவிட 25 சதவிகித ஊதியக் குறைப்பு சம்பளம் வழங்கும் கட்டமைப்பில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. இப்பொழுது பாரிய மோட்டார் பாக தயாரிப்பு நிறுவனமான டெல்பி 60 சதவிகித ஊதிய வெட்டை கட்டளையிட்டுள்ளது. அதேநேரத்தில், மிகப் பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறையாதுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் ஒன்பது ஆலைகள் மூடுதல், மற்றும் குறைந்தது 30,000 வேலைகளை அழித்தல் ஆகியவற்றை சில நாட்களுக்கு முன்தான் அறிவித்துள்ளது. பலவிதங்களிலும் மேர்க்கல் அரசாங்கம் இடைமருவு தன்மையை கொண்டுள்ளது. சமூகப் பிளவுகள் பெருகும் நிலை பாரம்பரிய ஜனநாயக அமைப்புக்களை தக்கவைக்கும் முயற்சிகளை கீழறுக்கும் சூழ்நிலையின் கீழ் ஒரு சர்வாதிகார போக்கை அது விரைவில் எடுத்துக் கொள்ளக்கூடும். நலன்புரி அரசை தகர்ப்பதற்கு அதிகரித்தளவில் சர்வாதிகார வடிவம் தேவைப்படும். இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே புறநகர்ப்பகுதிகளில் கைகலப்புக்களை எதிர்கொண்ட உடனேயே சடுதியில் பிரெஞ்சு அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியமை, மூன்று மாத காலத்திற்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது உள்ள தடையை அதிகரித்தமை ஆகியவை ஜேர்மனி, மற்றும் ஐரோப்பா முழுவதும் எச்சரிக்கையாக கட்டாயம் பயன்படும். எப்படிப்பார்த்தாலும், ஜேர்மன் பாராளுமன்றம் புதிய அரசாங்கத்தின்கீழ் ஒரு சுதந்திரமான பங்கை ஆற்ற இயலாது. முதலில், பெரும் கூட்டணிக்கு மிகப் பெரிய பெரும்பான்மை இருப்பதால் பாராளுமன்றத்திற்குள் எவரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று வற்புறுத்தும் தேவை அதற்கு இல்லை. முடிவுகள் கூட்டணி குழுக்கள் அல்லது கட்சி தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடல்களால் மேற்கொள்ளப்பட்டுவிடும். பாராளுமன்றத்திடம் கேட்கப்போவதெல்லாம் எடுத்த முடிவுகளுக்கு முத்திரை கொடுங்கள் என்பதுதான். இரண்டாவதாக, அதிபர் மேர்க்கல், ஷ்ரோடர் முன்னோடியாக ஏற்படுத்தியதை, மற்றும் அதற்கு அரசியலமைப்பு நீதிமன்றம் ஆதரவு கொடுத்ததை மேற்கோளிட்டு, நாடாளுமன்றத்தை எப்பொழுது வேண்டுமானாலும் கலைக்கலாம். ஆயினும், சட்ட விரோதமான தேர்தல்கள் மற்றும் ஓர் அரசியல் சதி இவற்றின் விளைவான இவ்வரசாங்கம், முரண்பாடுகள், பூசல்கள் ஆகியவற்றினால் இன்னும் கிழித்தெறியப்பட்டுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி கொடுக்கும் ஆதரவைத்தான் அது நம்பியுள்ளது. சமூக ஜனநாயகவாதிகள், மேர்க்கலை பதவிக்கு கொண்டுவருவதற்கு அனைத்தையும் செய்தபின்னர், அங்கு அவரை தக்கவைப்பதில் உறுதியாக உள்ளனர். வாக்காளர்கள் அவருக்கு மறுத்திருந்த சூழ்ச்சித் திட்டங்களை கையாளுவதற்கு அவ்வம்மையாருக்கு இடம் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டு, கீழிருந்து வரும் அழுத்தத்தில் இருந்து அவரை காப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வர். இது தோல்வியடைந்தால், அல்லது அது தேவை என்று அவ்வம்மையார் நினைத்தால், FDP மற்றும் பசுமைக் கட்சியினருடன் இன்னொரு கூட்டணியில் மட்டும் சேர்ந்து கொண்டு, பெரும் கூட்டணி சிதறும் வண்ணம் அடிகொடுக்க ஒரு அரசியல் நெருக்கடியை அவர் தூண்டிவிடலாம் அல்லது புதிய தேர்தல்களை கொண்டுவர முடியும். சமீபத்தில் தோற்றுவிக்கப்பட்ட, முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் ஓஸ்கார் லாபொன்டைன் மற்றும் முன்னாள் ஜனநாயகக் கட்சி தலைவர் கிரிகோர் கைசி இணைந்து ஏற்படுத்திய இடது கட்சி இத்தகைய சூழ்நிலையில் தீயவிளைவுகளை கொடுக்கும் பங்கைப் பெறும். ஆரம்பத்தில் இருந்தே அது பெரும் கூட்டணியை "குறைந்த தீமை" என்றுதான் விவரித்து வந்துள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி மேர்க்கலுக்கு பின்னால் உறுதியாக நின்றாலும், இடது கட்சியானது அரசாங்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் பங்கு "தொழிலாளர்களின் உரிமை மீதான மோசமான தாக்குதல்களை" தடுப்பதாகும் என்று பிரமையை இன்னும் பரப்பி வருகிறது. |