:
இலங்கை
Rajapakse narrowly wins Sri Lankan
presidential election
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷ குறுகிய வெற்றி பெற்றார்
By K. Ratnayake
19 November 2005
Back to screen
version
கடந்த வியாழனன்று நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
(ஸ்ரீ.ல.சு.க) வேட்பாளர் பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ நேற்று ஒரு குறுகிய வெற்றியாளனாக நேற்று தோன்றினார்.
இராஜபக்ஷ தனது பிரதான எதிர் வேட்பாளரான ஐக்கிய தேசிய கட்சியின் (ஐ.தே.க) ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக
மொத்தம் 4,880,950 வாக்குகளை அல்லது வெறும் 50.29 சதவீத வாக்குகளை பெற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்க
4,694,623 வாக்குகளை அல்லது 48.4 வீதத்தை பெற்றார். புதிய ஜனாதிபதி எதிர்வரும் 14 நாட்களுக்குள் பதவியேற்கவுள்ளார்.
அரசியலமைப்பு கோரும் 50 வீதத்தை சற்றே சமாளித்துக்கொண்ட இராஜபக்ஷ, இரண்டாவது
விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதை தவிர்த்துக்கொண்டார். அவர் பெற்ற வாக்குகளின் தொகை 1982ல் இருந்து நடைபெற்ற
நான்கு ஜனாதிபதி தேர்தல்களிலும் பார்க்க மிகவும் குறுகியதாகும். இது ஒரு கூர்மையாக பிளவுபட்ட வாக்காகும். சிங்கள
பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனும் தேர்தல் உடன்படிக்கைகளை செய்துகொண்ட
இராஜபக்ஷ, தீவில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் தென் பகுதியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளார். விக்கிரமசிங்க
சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமுதாயங்கள் அடங்கிய கொழும்பு, மத்திய மலையக மாவட்டங்கள் மற்றும் கிழக்கலும்
சிறந்த ஆதரவை பெற்றார்.
ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில் இந்த தேர்தல் எதையும் தீர்க்கவில்லை. இராஜபக்ஷவின்
குறுகிய வெற்றியனது எந்தவொரு வெகுஜன ஆதரவுமற்ற கடந்த அரசாங்கத்தை போல், அடுத்த அரசாங்கமும் ஒரு
ஸ்திரமற்றதாகவே இருக்கும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. புதிய ஜனாதிபதி தனது முன்னோடியான சந்திரிகா குமாரதுங்கவிடமிருந்து
இந்த அரசியல் நெருக்கடியை மரபுரிமையாக பெற்றுள்ளார். இந்த நெருக்கடி, 1999ல் இருந்து பொதுத் தேர்தல்
மற்றும் ஜனாதிபதி தேர்தலுமாக ஐந்து தேர்தல்களை முன்கொணர்ந்துள்ளது. அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
அதிகாரங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அதேவேளை, அவரது ஆளும் ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டணி
இன்னமும் பாராளுமன்றத்தில் சிறுபான்மையாகவே உள்ளது. அரசாங்கத்தின் இரு கருவிகளுக்கும் இடையில் புதிய முரண்பாடுகள்
வெடிக்கவுள்ளதோடு அரசியல் முட்டுக்கட்டையில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு பாதையை தேடுவதன் பேரில் புதிய ஜனாதிபதி
இன்னுமொரு பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கக் கூடும்.
நாட்டின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு முடிவுகட்ட இரு பிரதான கட்சிகளும்
தவறியமை இந்த நெருக்கடியின் மையப் பிரச்சினையாக உள்ளது. இராஜபக்ஷ தன்னை ஒரு சமாதான விரும்பியாக
போலியாக கூறிக்கொண்ட போதிலும், ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான அவரது தேர்தல் உடன்படிக்கை
புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு வழிவகுத்துள்ளன. இந்த இரு சிங்களத் தீவிரவாத கட்சிகளும், சுனாமி நிவாரணத்தை
விநியோகிப்பதற்காக அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பொதுக்
கட்டமைப்புக்கு முடிவுகட்டுமாறும் தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையின் பிரிவுகளை தீவிரமாக மீளமைக்க
வேண்டுமெனவும் கோருகின்றன. விளைபயனுள்ள இறுதி நிபந்தனைகளுக்கு உடன்பட்டுள்ள இராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுடன்
நேரடிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாக்குறுதியளிப்பதானது நடைமுறைப்படுத்தப்படாத ஒன்றாகும்.
இராஜபக்ஷ இப்போது ஜே.வி.பி க்கு கடுமையான அரசியல் கடனாளியாகியுள்ளார்.
ஜே.வி.பி தலைவர்களில் ஒருவரான விமல் வீரவன்ச பிரதான அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டதிலிருந்து இந்த
அமைப்பு இராஜபக்ஷவின் பிரச்சாரத்தில் முன்னணியில் தோன்றியது. அவரது கூட்டங்களில் ஜே.வி.பி தலைவர்கள்
பிரசன்னமாகியிருந்ததுடன் கட்சி உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஜே.வி.பி தனது
ஆதரவுக்காக இப்போது சிரேஷ்ட அமைச்சுப் பொறுப்புக்கள் உட்பட அதிக சலுகை கொடுக்க வேண்டுமென கோரும்
என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த நகர்வு ஜே.வி.பி உடனான கொடுக்கல் வாங்கல்களில் தனது விவேகம்
சம்பந்தமாக ஸ்ரீ.ல.சு.க க்குள் கூர்மையான பிளவுகளை உக்கிரமாக்குவதை மட்டுமே செய்யும்.
மிகவும் அடிப்படையில், பிரதான அரசாங்க பதவிகளில் ஜே.வி.பி உறுப்பினர்களை
உள்ளடக்கிக்கொள்வதானது, முழு உத்தியோகபூர்வ ஸ்தாபனத்தையும் சூழ்ந்துகொண்டுள்ள அரசியல் நெருக்கடியை
மோசமாக்கும். அரசாங்கத்தின் பங்காளி என்றவகையில், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின்
பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்த ஜே.வி.பி நிர்ப்பந்திக்கப்படுவதோடு, அது கிராமப்புற வறியவர்கள்
மத்தியிலிருந்து ஜே.வி.பி யை தனிமைப்படுத்தும். அதனது நடவடிக்கைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காக,
இந்தக் கட்சி விடுதலைப் புலிகள் மீதான வாய்ச்சவாடல் தாக்குதல்களில் இறங்குவதோடு, இனவாத பதட்ட
நிலைமைகளையும் யுத்த ஆபத்தையும் உக்கிரமாக்கும்.
கொழும்புடனான சமாதான கொடுக்கல் வாங்கல் சாத்தியமற்றது என்ற முடிவுக்கு
விடுதலைப் புலிகள் வந்துள்ளதற்கான அச்சுறுத்தும் அறிகுறிகள் ஏற்கனவே உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம்
தீவின் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும் என பிரகடனப்படுதிய அதே வேளை,
நவம்பர் 17 ஐ "ஒரு துக்கதினமாக" பிரகடனம் செய்தது. அது சொந்தமாக ஒரு வேட்பாளரை நிறுத்தத்
தவறியதோடு குண்டர்தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களின் கலவையினூடாக இந்தப் பிரதேசங்களில் ஒரு
உத்தியோகபூர்வமற்ற பகிஷ்கரிப்பை ஊர்ஜிதம் செய்தது.
வடக்கில் இந்தப் பகிஷ்கரிப்பு அநேகமாக முழுமையாக நடைபெற்றிருந்தது. யாழ்ப்பாண
மாவட்டத்தில், 75 வீத மொத்த வாக்களிப்புக்கு வேறுபட்ட விதத்தில், 1.2 விதமான வாக்காளர்களே தங்களது
வாக்குகளை பதிவு செய்ய சென்றிருந்தனர். ஏனைய வட மாவட்டங்களிலும் வாக்களிப்பு வீதம் மிகக் குறைவாகவே
இருந்தது. உதாரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான வன்னி மாவட்டத்தில் 34.3 வீத வாக்குகளே
பதிவாகியிருந்தன. கிழக்கு மாவட்டங்களில் கட்டுப்பாட்டை பெறுவதற்காக இப்போது விடுதலைப் புலிகள் தங்களில் இருந்து
பிரிந்து சென்ற கும்பலுடன் கசப்புடன் மோதிக்கொண்டுள்ளனர். இந்த மாவட்டங்களிலும் வாக்களிப்பு பொதுவில் 50
வீதமாகவே இருந்தது.
விடுதலைப் புலிகள் கடந்த காலத்தில், "சமாதான முன்னெடுப்புகளின்" அடிப்படை
பரிந்துரையாளராக தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க பரிந்துரைக்கும் சாத்தியங்களை
கொண்டிருந்தனர். விடுதலைப் புலி தலைவர்கள் தங்களை வடக்கில் ஒரு புதிய முதலாளித்துவ அரசாங்கமாக
ஸ்தாபித்துக்கொள்ளும் சொந்த முயற்சியை எட்டுவதற்கான ஒரு வாகனமாக இந்த முன்னெடுப்புகளை கருதினர். ஆனால்
சமாதானப் பேச்சுக்கள் இரண்டு வருடங்களுக்கும் முன்னரே இடைநிறுத்தப்பட்டதில் இருந்து ஓரங்கட்டப்பட்டிருந்த
நிலையிலும், மற்றும் அது வடக்கு கிழக்கில் வாழ்க்கை நிலைமைகளை முன்னேற்றத் தவறியதாலும், அதன் ஜனநாயக
விரோத நடவடிக்கைகளாலும் சாதாரண தமிழர்கள் மத்தியில் வளர்ச்சிகண்டுவரும் பகைமையை எதிர்கொண்ட நிலையிலும்,
விடுதலைப் புலிகள் அனைத்து "சிங்கள அரசியல்வாதிகளுக்கும்" எதிராக இனவாத வாய்வீச்சுக்களில் இறங்கியது. தேர்தலில்
அதன் நிலைப்பாடு, அது இராணுவ மோதலை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதற்கான இன்னுமொரு அறிகுறியாகும்.
வடக்கு கிழக்கில் புதிய தேர்தல்களை நடத்த அழைப்பு விடுப்பதாக விக்கிரமசிங்க
அச்சுறுத்திய போதிலும், அவர் இராஜபக்ஷவை வெற்றிகொள்வதில் அவருக்கு கிட்டிய தோல்வியானது, ஐ.தே.க வின்
பெரும் வர்த்தகர்களுக்கான வேலைத்திட்டத்தின் நேரடி உற்பத்தியேயாகும். "சமாதான முன்னெடுப்புகளுக்கான" அவரது
ஆதரவு, யுத்ததிற்கு முடிவுகட்டி நாட்டை வெளிநாட்டு முதலீட்டுக்கு திறந்துவிடக் கோரும் கூட்டுத்தாபனத் தலைவர்கள்
மற்றும் பெரும் வல்லரசுகளின் கோரிக்கைகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. 2001-2004 வரை அவர் பிரதமராக இருந்த
காலத்தில், விக்கிரமசிங்க நீண்டகால விளைவுகள் கொண்ட பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் தனியார்மயமாக்கல்
திட்டங்களை அமுல்படுத்த தொடங்கினார். இது நாடு பூராவும் தொழிலாளர்கள் மத்தியில் பரந்த கசப்புனர்வையும்
எதிர்ப்பையும் தூண்டிவிட்டது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கோரிக்கைகளை ஸ்ரீ.ல.சு.க யும்
அமுல்படுத்திய போதிலும், இராஜபக்ஷ தன்னை மக்களின் அவல நிலை அறிந்த அனுதாபியாகவும், கிராமத்தில் இருந்து
வந்த ஒரு "பொது மனிதனாகவும்" காட்டிக்கொள்வதன் மூலம், ஐ.தே.க யின் சாதனைகளை சுரண்டிக்கொள்ள
முயற்சித்தார். விக்கிரமசிங்க தொழில், உர மானியம் மற்றும் சமூக சேவைகளை வெட்டித்தள்ளும் மற்றும்
தனியார்மயமாக்கலை துரிதப்படுத்தும் வியாபார மறுசீரமைப்பு திட்டங்களை திணிப்பவராகவே இன்னமும் தோன்றுகிறார்.
இந்த இரு வேட்பாளர்களும் அமுல்படுத்தப்பட முடியாதவை என அவர்களே நன்கு அறிந்த மற்றும் ஒரு சிலரால் மட்டுமே
நம்பக்கூடிய ஒரு நீண்ட தேர்தல் வாக்குறுதி பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
நிதி வட்டாரங்கள் விக்கிரமசிங்கவின் தோல்விக்கு எதிராக கூர்மையாக பிரதிபலித்தன.
திங்களன்று அனைத்து பங்குவிலை சுட்டென்களும் 39.95 வீதத்தால் வீழ்ச்சியடைந்தன. டெயிலி மிரர் பத்திரிகை
இதை இராஜபக்ஷவிற்கும் மற்றும் "சந்தை சார்பு" விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான "நெருக்கமான போராட்டம்" என
அடைமொழியில் குறிப்பிட்டிருந்தது. விக்கிரமசிங்கவிற்கு வாய்ப்பளிப்பதற்காக விடுதலைப் புலிகள் பகிஷ்கரிப்பை விலக்கிக்கொள்வார்கள்
என்ற வதந்திகளுக்கு மத்தியில் அனைத்து பங்குவிலைச் சுட்டென் கடந்த புதன் கிழமையன்று ஒரு மிக உச்சியில் இருந்தது.
தேர்தல் தினத்தன்று, இந்த சுட்டென் 51.4 வீதத்தால் 2,500 ஆக வீழ்ச்சியடைந்தது. வடக்கு கிழக்கில் குறைந்த
வாக்களிப்பு வீதமானது "வர்த்தகர்கள் சார்பு விக்கிரமசிங்கவின்" எதிர்பார்ப்புகள் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதை இது
தெளிவாக்கியது.
பல வாக்காளர்கள், இரு பிரதான கட்சிகள் மற்றும் அவர்களின் கூட்டுக் கட்சிகளான ஜே.வி.பி,
ஜாதிக ஹெல உறுமய உட்பட ஏனைய சிறு முதலாளித்துவ கட்சிகளையிட்டும் வெறுப்படைந்திருந்தனர். தேர்தல் பிரச்சாரங்கள்
இனவாத வழியில் துருவப்படுத்தப்பட்டிருந்த போதிலும், குறிப்பிடத்தக்க தொகையிலான மக்கள், ஐக்கிய சோசலிசக்
கட்சி (ஐ.சோ.க) மற்றும் புதிய இடதுசாரி முன்னணி (பு.இ.மு) ஆகிய இரு "இடது" கட்சிகளுக்கு தமது வாக்குகளை
அளித்ததன் மூலம் எதிர்ப்பு வாக்குகளை பதிவுசெய்திருந்தனர். இரு கட்சிகளும் தங்களை சோசலிஸ்டுகள் எனவும் ஸ்ரீ.ல.சு.க
மற்றும் ஐ.தே.க ஆகிய கட்சிகளை எதிர்ப்பதாக கூறிக்கொண்ட போதிலும், அவை முற்றிலும் தேசியவாதக் கொள்கைகளை
அடிப்படையாகக் கொண்டுள்ளதோடு தங்களை இலங்கை அரசு மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் ஸ்தாபனத்திற்கும் அடிமைப்படுத்திக்கொண்டுள்ளன.
ஐ.சோ.க வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய 35,319 வாக்குகளை பெற்றதோடு நவசமசமாஜக் கட்சியின் முன்னணி அமைப்பான
(ந.ச.ச.க) புதிய இடதுசாரி முன்னணி 9,286 வாக்குகளையும் பெற்றது.
சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் விஜே டயஸ், 3,500 வாக்குகளை
பெற்றார். இவை அனைத்தும், இரு பிரதான கட்சிகளுக்கும் மட்டுமன்றி, "இடது" வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க
அல்லது ஸ்ரீ.ல.சு.க யின் முன்னணி அமைப்புக்களாக நின்ற வேட்பாளர்களுக்கும் எதிராக, நேர்மையான சோசலிச மற்றும்
அனைத்துலகவாத பதிலீட்டுக்கான நனவுபூர்வமான தேர்வை பிரதிநிதித்துவம் செய்கின்றன. சோ.ச.க நேரடியாக சென்று
பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் இருந்து பல பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் முழு நாடு பூராகவும் இருந்து
வாக்குகள் கிடைத்திருந்தன.
சோ.ச.க தனது பிரச்சாரத்தின் ஊடாக, இலங்கையிலான அரசியல் நெருக்கடியும்
தொழிலாள வர்க்கம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளும் தனிமைப்படுத்தப்பட்ட நடைமுறைகள் அல்ல, மாறாக, அவை
பூகோள முதலாளித்துவத்தின் நெருக்கடியில் வேரூன்றியுள்ளதோடு மிகவும் கூர்மையான வகையில் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் வெடிப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என தெளிவுபடுத்தியது. ஐ.சோ.க மற்றும் பு.இ.மு
ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறான விதத்தில், யுத்தத்திற்கும் மற்றும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மைக்கும்
தேசியரீதியான தீர்வுகள் கிடையாது என சோ.ச.க வலியுறுத்தியது. அமெரிக்க இராணுவவாதத்திற்கும் மற்றும் பூகோள
முதலாளித்துவத்தின் கொள்ளையடிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு
எதிர்த்தாக்குதலை நடத்த வேண்டியதன் அவசியத்தை பற்றி, இலங்கையிலும் மற்றும் பிராந்தியத்திலும் உள்ள உழைக்கும்
மக்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடலை ஆரம்பித்து வைப்பதற்காகவே டயஸ் தனது பிரச்சாரத்தைப் பயன்படுத்தினார்.
இந்த தேர்தல் முடிவுகளின் பின்னர், யுத்தத்தின் உடனடி ஆபத்தும் மற்றும் வாழ்க்கை
நிலைமைகள் மீதான தாக்குதல்களும் மட்டுமே உக்கிரமடையும். சோ.ச.க, விஜே டயஸிற்கு வாக்களித்த அனைவரும்
உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்ந்தும் வாசிக்குமாறும், சோ.ச.க மற்றும் நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவின் வேலைத்திட்டத்தையும் முன்நோக்கையும் கவனமாக கற்குமாறும் மற்றும் அதனுடன் இணைவதற்கு
விண்ணப்பிக்குமாறும் அழைப்பு விடுக்கின்றது. |