WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள் :
அவுஸ்திரேலியா & தென்பசுபிக்
Australian "terror" raids target Tamil groups
ஆஸ்திரேலிய "பயங்கரவாத" திடீர்ச்சோதனைகள் தமிழ் குழுக்களை இலக்கு வைக்கின்றன
By Mike Head
25 November 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
இந்த மாதம் இரண்டாம் தடைவையாக ஆஸ்திரேலிய போலீஸ் மற்றும் பாதுகாப்புப்
பிரிவுகள் பயங்கரவாதத்தை எதிர்த்தல் என்ற போர்வையில் அரசியல் ரீதியாய் காலத்தை பயன்படுத்தி திடீர்
சோதனைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புடையவை என்று கூறப்படும் ஏராளமான,
எண்ணிக்கை குறிப்பிடப்படாத, இல்லங்கள், இடங்களை மெல்போர்ன் நகரில் மத்திய, மற்றும் விக்டோரிய மாநிலப்
போலீஸார் சோதனைக்கு உட்படுத்தினர். ஐந்து பேர்களை எந்தக் குற்றச் சாட்டும் சுமத்தாமல் விடுவிப்பதற்கு
முன்னர் அவர்களை விசாரணைக்காக தடுத்து வைத்திருந்தனர்.
இலக்கு வைக்கப்படிருந்த கட்டிடங்களுள், முக்கிய தமிழ்-ஆஸ்திரேலிய குடிமக்களின் இல்லங்கள்,
செய்தி ஏடுகள் வெளியிடுவோர், ஒரு தமிழ் சமூக மையம், தமிழ் ஒருங்கிணைப்புக் குழுவின் அலுவலகம் ஆகியவை
இருந்தன. சோதனையிடப்பட்டவர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் தனிநாடு அல்லது தன்னாட்சி நாடு
கோரும் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு
(LTTE) ஆதரவு கொடுப்பதற்காக
நிதி திரட்டுவதாக சந்தேகத்திற்குட்பட்டவர்கள் என்று செய்தி
ஊடகத்திடம் போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவது பரந்த அரசியல்
வலையை வீசப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைத்தான் இந்தப் புதிய சோதனைகள் விளக்கிக்காட்டுகின்றன.
18 முஸ்லீம் ஆண்கள் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதச் செயல்களுக்கு சதித்திட்டம் தீட்டுதல் போன்ற தெளிவற்ற
சொற்கள் நிறைந்த குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நவம்பர் 8, 9 தேதிகளில் நிகழ்ந்த மிகப்பெரிய சோதனைகளுடன்
இந்த நடவடிக்கை நேரடியாக தொடர்பு கொள்ளவில்லை என்று போலீசாரின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்; அந்த
நடவடிக்கையில் "இந்தச் சமீபத்திய செயற்பாட்டில் எந்த இலக்கையும் தாக்கும் சதித்திட்டம் ஒன்றும் இல்லை"
என்று ஒரு போலீஸ் வட்டாரம் செய்தி ஊடகத்திடம் தெரிவித்தது.
ஆயினும்கூட, இந்த தனிப்பட்ட தமிழ் நபர்களை முந்தைய கைதுகளுடன் இணைத்து குற்றச்
சாட்டுக்கள் இனிமேல்தான் போடப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர். "சோதனைகள், (அண்மைய) ஜூன்
மாதம் மெல்போர்ன் இடங்களில் நடத்திய சோதனைகள் இம்மாத தொடக்கத்தில் அதேநபர்களுக்கு எதிராக
பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களுக்கு வழிவகுத்தது போலவே, இறுதியில் பலரை கைது செய்வதற்கு வகை செய்யும்
என்று போலீசார் நம்புகின்றனர்" என்று
Australian நாளிதழ் கூறியுள்ளது.
2003 ம் ஆண்டு வழக்கு நடத்தாமல்
விசாரணைக்காக இரகசியமாக மக்களை காவலில் வைக்கலாம் என்று கொடுக்கப்பட்ட அதிகாரத்தை போலீசார்
பயன்படுத்தியுள்ளனரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இத்தகைய அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக தகவல்
கொடுப்பவர்கள் கூட, அதன்படி, கைதுசெய்யப்படலாம். மாறாக, மெல்போர்ன்
Age,
"ஐந்து நபர்களும் ஒத்துழைத்தனர், பின்னர் இல்லங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டனர் என்று தான் நம்புவதாக"
எழுதியுள்ளது.
சமீபத்திய சோதனைகளில் இலக்கு வைக்கப்பட்டவர்கள் ஆஸ்திரேலியாவில் எந்தப்
பயங்கரவாத செயலுக்கும் தயாரித்துக் கொண்டிருந்தனர் என்று எவ்வித ஆலோசனையும் தெரிவிக்கப்படவில்லை.
LTTE
ஐ ஒரு பயங்கரவாத அமைப்பு என்றுகூட பிரதம மந்திரி ஜோன் ஹோவர்டின் அரசாங்கம் பட்டியலிட்டதில்லை.
இந்த சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட "ஆட்சேபனைக்குரிய பொருட்கள்" என்பவை மிக அதிகமாக
விளம்பரப்படுத்தப்பட்டது, LTTE
இன் சர்வதேச பேச்சாளர் அன்டன் பாலசிங்கத்தால் எழுதப்பட்ட தடையின்றி
கிடைக்கும் அரசியல் புத்தகங்களான, போரும் சமாதானமும்: விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமும்
அமைதி முயற்சிகளும் போன்றவை ஆகும்.
ஆனால் போலீசாரும், செய்தி ஊடகமும், குறிப்பாக மர்டோக் செய்தித்தாட்கள்,
சோதனையினால் பாதிப்புற்றவர்களை இரத்தம் தோய்ந்த வன்முறைக்கு ஆதரவாளர்களாக இருக்கக் கூடும் என்பது
போல் சித்திரித்துள்ளனர். மர்டோக்கினுடைய
Australian,
நவம்பர் 8-9 சோதனைகளுக்கு பின்னர் பெரும் பரபரப்புடன் கூடிய "குண்டுவீச்சு சதித்திட்டங்கள்" போன்ற தலைப்புக்களை
கொடுத்தது போல், இன்றும் LTTE
ஐ ஒரு "பயங்கரவாதக் குழு", "இலங்கையில் தனிநாடு தோற்றுவிக்க இரத்தம் தோய்ந்த போரில் ஈடுபட்டுள்ள
அமைப்பு" என்று வர்ணித்துள்ளது. இதன் மெல்போர்ன் இணை ஏடான
Herald Sun, LTTE
ஐ "உலகில் மிகக் கருணையற்ற கொரில்லாப் படைகளில் ஒன்று" என அழைத்துள்ளது.
உலக சோசலிச வலைத் தளம் அடிப்படையில்
LTTE இன்
அரசியல் வேலைத்திட்டம் மற்றும் நோக்கங்களை எதிர்க்கும் அதேவேளை, அது 1970களில் தமிழ்-எதிர்ப்பு
பாரபட்சத்திற்கு விடையிறுக்கும் வகையில் நிறுவப்பட்ட முதலாளித்துவ தேசியவாத அமைப்பாகும். 65,000
உயிர்களை காவுகொண்டதற்கு காரணமான இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப்போருக்கான முக்கிய பொறுப்பு
LTTE
உடன் இல்லை; மாறாக சிங்கள மேலாதிக்க கருத்தியலின் அடிப்படையில் தொடர்ந்து வந்த கொழும்பு
அரசாங்கங்கள் தூண்டிவிட்ட அழிவுகள்தாம் 1983 பூசலுக்கு வழிவகுத்தன; அவை இரண்டு தசாப்தத்திற்கும் மேலாக
இரக்கமற்ற முறையில் தொடர்ந்து 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை போரை தொடர்ந்து
நடத்தின.
ஆஸ்திரேலியாவில் தமிழ் குழுக்களுக்கு எதிராக முதன் முதலாக இயக்கப்படும் இச்
சோதனைகள் உள்நாட்டு, சர்வேதச நோக்கங்களில் பொருத்தமான நேரத்தைக் கணக்கில் கொண்டவை என்று
தோன்றுகிறது. ஹோவர்ட் அரசாங்கம், நாட்டின் தொழிற்கட்சி அரசாங்கங்களுடன் ஒன்றாக சேர்ந்து கூட்டாட்சி,
மாநிலச் சட்ட மன்றங்களில் முன்னோடியில்லாத வகையில் "பயங்கரவாத எதிர்ப்பு" சட்டங்களை
நிறைவேற்றுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நடுவில் இவை உள்நாட்டில் நடத்தப்பட்டுள்ளதாக
அமைந்துள்ளன.
இவை விசாரணையின்றி காவலில் வைத்தல், நாட்டு பாதுகாப்பிற்கு ஊறு விளைவித்தல்,
என்ற இரண்டு புதிய பரந்த வடிவங்களோடு, பயங்கரவாதத்தை ஆதரித்தல்" போன்ற கருத்துக்களையும்
கொண்டுள்ளது; இவை ஆஸ்திரேலிய இராணுவத் தலையீடுகள் மற்ற அரசாங்க நடவடிக்கைகள் பற்றி விமர்சிப்பதை
அடக்கி அமைதிப்படுத்துவதை நேரடி நோக்கமாகக் கொண்டுள்ளன.
இலங்கையில் நான்கு நாட்களுக்கு முன்புதான், நவம்பர் 19 அன்று பதவியேற்ற புதிய
ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கியும் இந்தச்
சோதனைகள் தொடக்கப்பட்டன. முன்பு பிரதம மந்திரியாக இருந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் முன்றில் ஒரு
பங்கிற்கும் குறைவான பிரதிநிதிகளை கொண்டுள்ள அவருடைய பெரும் குறைமதிப்பிற்குட்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியுடன் பெரும் ஆட்டம் கண்டுள்ள ஆட்சிக்கு தலைமை வகிக்கிறார்.
சமூக நிலைமைகளை முன்னேற்றுவிப்போம் என்னும் உடைந்த உறுதிமொழிகளில்
ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசைதிருப்பும் முயற்சியில், தமிழ்-விரோத வகுப்புவாதத்தை ராஜபக்ஷ ஊக்குவித்துள்ளார்;
LTTE
உடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை "மறுபரிசீலனை" செய்வதாக உறுதிமொழி கொடுத்துள்ளதுடன், எந்த
சமாதான உடன்படிக்கைக்கும் "மிக கெளரவமான" நிபந்தனைகள் கோரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முடிந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முழுவதும்
LTTE க்கு
எந்தவித சலுகைகள் கொடுப்பதையும் கடுமையாக எதிர்க்கும் சிங்கள பேரினவாத ஜனதா விமுக்தி பெரமுன மீது
ஆதரவிற்காக பெரிதும் தங்கியிருந்தார்.
மெல்போர்ன் சோதனைகள் தங்களுடைய செயற்பாட்டினால் என்று விரைவில் பெருமை
தேடிக்கொள்ளும் இலங்கை அதிகாரிகள், இவை LTTE
க்கு எதிரான புதிய சர்வதேச பிரச்சாரத்தின் ஒரு பகுதியை அமைக்கின்றன என்பதன் அடையாளம் என்றும்
கூறுகின்றனர். இலங்கையின் மூத்த அதிகாரி ஒருவர் அச் சோதனைகள் பற்றி "களிப்பு அடைவதாக"
தெரிவித்துள்ளார் என்று இலங்கையின் Island
நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வலதுசாரி செய்தித்தாள் "அரசாங்க ஆதாரங்களை" மேற்கோள்காட்டி,
புதிய வெளியுறவுத்துறை மந்திரி மங்கள சமரவீர, LTTE
யின் நடவடிக்கைகளை அடக்குவதில், வெளிநாட்டு உதவியை நாடுவதில், இன்னும் முக்கியமான பங்கினை கொள்வார்"
என்று கூறியுள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
(TRO) என்னும் முக்கிய தமிழ் அமைப்பு இலங்கையின் வடக்கிலும்
கிழக்கிலும் சுனாமிக்கு பிந்தைய உதவி நடவடிக்கைகளுக்காக நிதிசேகரிப்பில் சந்தேகத்தை பற்றி தன்னுடைய
அரசாங்கம், ஆஸ்திரேலியாவிற்கு தகவலை கொடுத்துள்ளது என்று இலங்கையின் துணை உயர் ஆணையாளர்
Asoka Girihagama
கூறியதாக, இன்றைய Australian
ஏடு மேற்கோளிட்டுள்ளது. "இந்த நடவடிக்கைகள் பற்றி ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நாங்கள் உகந்த
தகவல்களை கொடுத்துள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.
தான் எப்பொழுதும் நடந்து கொள்ளுவது போலவே,
Australian
இந்தத் தகவலையும் TRO
டிசம்பர் 26 சுனாமிக்கு பின்னர் ஆஸ்திரேலியர்கள் கொடுத்த நன்கொடை உதவிகளை
LTTEக்குக்
கொடுத்த வகையில் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்று தலைப்புக் கொடுத்து வெளியிட்டுள்ளது.
TRO வின்
ஆஸ்திரேலிய தலைவரான டாக்டர் ராஜன் ராசையா இக்குற்றச் சாட்டுக்களை நிராகரித்ததோடு, அதிகாரபூர்வ
ஆஸ்திரேலிய உதவித் தொகை அமைப்பில் கையெழுத்திட்டுள்ள முறை, நன்னடத்தை விதிகள் ஆகியவற்றை ஒட்டி இதன்
கணக்குகள் Australian Securities and
Investments Commission ஆல் தணிக்கை
செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
"பயங்கரவாதக்" கூற்றுக்கள் விரிவடைதல்
தமிழ் சமூகத்தின் செய்தித்தொடர்பாளருள் ஒருவரான ரத்தினம் கந்தசாமி, 2001ல்
முஸ்லிம்கள் அனுபவித்தது போன்ற இடர்பாடுகள் இப்பொழுது தமிழர்களுக்கு எதிராக வரக்கூடும் என்ற அச்சத்தை தெரிவித்தார்.
"என்னுடைய கவலை தமிழ் சமூகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, முஸ்லிம் சமூகத்தை போல் இலக்கு வைக்கப்படலாம்
என்பதேயாகும்" என்று Australian
Assoicated Press
இடம் அவர் தெரிவித்தார்.
அல் கொய்தா அல்லது எந்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புடனான தொடர்புகளுக்கு
மிகவும் அப்பால், ஹோவர்ட் அரசாங்கத்தின் போலீஸ், மற்றும் உளவுத் துறையின் தாக்குதல்கள் இச்சோதனைகளை
இட்டுச் செல்லுகின்றன. தமிழ் குழுக்களை ஒடுக்குவதுடன் அது முடிவடையலாம். அதே தர்க்கப்படி, எந்த தேசிய
அல்லது அரசாங்க எதிர்ப்பு இயக்கமும் வெளிநாடுகளில் மிகவும் விளம்பரப்படுத்தப்படும் சோதனைகள், விசாரணைகள்,
தடுப்புக் காவல்கள், நீண்டகால சிறைதண்டனை ஆகியவற்றிற்கு உட்படுத்தப்படலாம்.
ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமானது என்று
LTTE
அறிவிக்கப்படாத நிலையில், மற்றும் 404 குழுக்கள் அல்லது தனிநபர்களுடன் அது ஐ.நா. பட்டியலில், "பண
நடவடிக்கைகள் தடுக்கப்பட்ட முறையில் உள்ள பயங்கரவாத அமைப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில்
பாலஸ்தீனிய, ஈராக்கிய, ஆப்கானிஸ்தான, குர்திஷ், ஐரிஷ், பெருவிய, ஸ்பானிய, பால்கன் குழுக்களும் உள்ளன.
இந்த அமைப்புக்களை கறுப்பு பட்டியலில் போடுவதற்கு "பயங்கரவாத" ஆதாரங்கள் ஏதும் தேவையில்லை; இதில்
பெரும்பாலான பெயர்கள் அமெரிக்காவின் முயற்சியினால் சேர்க்கப்பட்டுள்ள, முற்றிலும் அரசியல்வகைப்பட்ட ஒரு
வழிமுறை ஆகும்.
எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புக்களை பின்புற வாயிலாக சட்டவிரோதமாக்கும்
வகையாக இது உள்ளது: இதற்கு மகத்தான சட்ட, அரசியல் உட்குறிப்புக்கள் உள்ளன. ஆஸ்திரேலியாவில்
இப்பொழுதுள்ள 2002ல் அறிமுகப்படுத்தப்பட்ட "எதிர்-பயங்கரவாத" சட்டங்களின்படி, இக்குழுக்களின் நிதியங்கள்
பறிமுதல் செய்யப்படலாம். இவற்றுடன் தொடர்பு உடையவர்கள் அல்லது நிதி நன்கொடை அளிப்பவர்கள்,
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்பவர்கள் என்று கருதப்பட்டு ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கப்படலாம்.
2005ம் ஆண்டின் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டவரைவின் ஒரு பகுதி கிறிஸ்துமஸுக்கு
முன் பாராளுமன்றத்தில் இயற்றப்பட உள்ளது, இன்னும் சுலபமான வகையில் இவ்விதிகளின்கீழ் மக்களை
குற்றவிசாரணைக்கு வகை செய்கிறது; அதன்படி பயங்கரவாத குழுவிற்கோ, திட்டத்திற்கோ "பொறுப்பற்ற"
முறையில் பணம் கொடுத்தாலும் தண்டனைகள் வழங்கப்படலாம் என்று உள்ளது. அதாவது நன்கொடையாளர்கள்
பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் விருப்பம் இல்லாவிடினும் அவர்கள் சிறையில் தள்ளப்படலாம். அதாவது
தங்களுடைய நன்கொடைகள் முற்றிலும் மனிதாபிமான செயல்களுக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை இயன்றளவு
விசாரித்து, உறுதி செய்த பின்னர்தான் தாங்கள் நன்கொடை அளித்தோம் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு
நன்கொடையாளர்களைத்தான் சேரும்.
"பயங்கரவாத-எதிர்ப்பு" சட்டங்களின் அதிகம் அறியப்படாத கூறுபாட்டினையும் இந்த
வார சோதனைகள் உயர்த்திக்காட்டுகின்றன. உலகம் முழுவதிலும் இருக்கும் எந்த அரசாங்கத்திற்கும் அச்சுறுத்தல்கள்
ஏற்பட்டால் அது பயங்கரவாதம் என்று சட்டங்கள் விளக்குகின்றன. பர்மா போன்ற சர்வாதிகார ஆட்சியை உடைய
நாடாயினும், பிரான்சின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்
Caledonia போன்ற நாடாயினும், அல்லது அமெரிக்கா
உட்பட பெரிய முதலாளித்துவ நாடுகளினாயினும் சரி, தங்கள் அரசியல் விரோதிகளுக்கு எதிராக, இலங்கை
அரசாங்கம் செய்துள்ளது போல், கான்பராவைத் தங்கள் உதவிக்காக சட்டத்தை முடுக்கிவிடச் செய்யலாம்.
சமீபத்திய போலீஸ்-ASIO
நடவடிக்கை, அரசியல் அமைப்புக்கள், அதன் உறுப்பினர்கள், ஆதாரவாளர்கள்,
நன்கொடையாளர்கள் தீவிர விளைவுகளை சந்திக்கக் கூடிய வகையில், அவற்றை சட்ட விரோதமாக்குவதற்கு அரசாங்கத்திடம்
உள்ள பலவித வழிவகைகளின் விரிவாக்கத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. "பயங்கரவாதத்திற்கு நிதி உதவி"
என்னும் சட்டங்களை தவிர, அரசாங்கம் நேரடியாகவே நிர்வாக ஆணை மூலம் அமைப்புக்களை தடை செய்யமுடியும்;
அல்லது ஒரு குழு "பயங்கரவாதக் குழு" என்று நீதிமன்றத்தை அறிவிக்குமாறு கோரமுடியும். தேசத்துரோக சட்டங்களின்படி,
ஓர் அமைப்பை "சட்டவிரோதமான அமைப்பு" என்று அறிவிக்க வேண்டும் என்று கோரவும் அரசாங்கத்திற்கு உரிமை
கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரங்கள் ஒவ்வொன்றும் பயங்கரவாத-எதிர்ப்பு சட்டத்தினால் விரிவாக்கம்
அடைந்துள்ளது. குறிப்பிட்ட பயங்கரவாத செயலை திட்டமிட்டது அல்லது நடத்தியது என்பதற்கு எந்த சான்றும்
இல்லாமல் கட்சிகளை "பயங்கரவாதக் கட்சிகள்" என்று வகுத்துக் கூறும் அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது;
அதேபோல் அரசாங்கத்திற்கு எதிராக "அதிருப்தி", மற்ற மக்களிடம் "நல்லெண்ணம் இல்லாமை", ஆஸ்திரேலிய
இராணுவத் தலையீட்டுக்களுக்கு எதிர்ப்பு ஆகியவை "ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடுதல்" என்ற பிரிவில் அடைபட்டுவிடும்.
அரசாங்க தலைமை வக்கீல் பிலிப் ரூட்டாக்கின் செய்தித் தொடர்பாளர்
LTTE தடைசெய்யப்பட
வேண்டும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டுவது போல் இந்தச் சோதனைகளை பயன்படுத்திக் கொள்ள முற்பட்டுள்ளார்.
எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றாலும், "இந்தப் பிரச்சினைகள் பற்றி பல பிரிவுகளிடம் இருந்து
வரும் ஆலோசனைகளை தொடர்ந்து நம்புவோம்" என்று அவர் கூறியுள்ளார்.
இச்சோதனைகள் "பயங்கரவாதத்தின் மீதான போர்" எப்படி அரசியல் காரணங்களுக்காக,
ஆஸ்திரேலியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படலாம் என்பதற்கு மற்றொரு எச்சரிக்கையாக
உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டன் வரை, இலங்கையில் இருந்து அமெரிக்கா வரை அரசாங்கங்கள்,
தங்களுடைய போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும், போலீஸ் அரச நடவடிக்கைகளை நிறுவுவதற்கும், இப்பொழுது
"பயங்கரவாதம்", "பேரழிவு ஆயுதங்கள்" என்ற ஆதாரமற்ற, கிளர்ந்தெழச்செய்யும் குற்றச் சாட்டுகளை கூறுவதில்
நிரூபிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.
See Also :
ஆஸ்திரேலியாவின் ''பயங்கரவாத-
எதிர்ப்பு'' மசோதா: ஒரு போலீஸ் அரசிற்கான கட்டமைப்பு
Top of page
|