World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்Market reform and Japanese nationalism: the twin policies of Koizumi's governmentசந்தை சீர்திருத்தமும் ஜப்பானிய தேசியவாதமும்: By John Chan செப்டம்பர் 11ல் நடைபெற்ற கீழ்ச்சபை தேர்தல்களில் தனது அரசாங்கத்தின் வெற்றியை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஜூனிசிரோ கொய்ஷூமி தீவிர சுதந்திர சந்தை மறுசீரமைப்பு செயற்திட்டங்களை முடுக்கிவிட்டிருப்பதுடன் ஜப்பானிய தேசியவாதத்தையும், இராணுவத்தையும் புத்துயிர்ப்பிக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரது சொந்த தாராளவாத ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே (LDP) குழுவாத எதிர்ப்புக்கள் தோன்றி அவர்கள் எதிர்கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு ஜப்பான் மேல்சபையில் அரசிற்கு சொந்தமான ஜப்பானிய தபால் துறையை தனியார்மயமாக்கும் சட்டத்தை புறக்கணித்துவிட்டதை தொடர்ந்து கொய்ஷூமி ஆகஸ்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு அழைப்பு விடுத்தார். கொய்ஷூமி தனது தாராளவாத ஜனநாயகக் கட்சி எதிரிகளை பல ஆண்டுகள் ஜப்பான் பொருளாதாரம் தேங்கிக் கிடந்தபின் அது "புத்துயிர் அளிப்பதற்கு" ஒரு தடைக்கல்லாக உள்ளார்கள் என்று தாக்கினார். மிகப்பெரும்பாலான ஊடகங்களின் ஆதரவோடு கொய்ஷூமி ஒரு கூடுதல் பெரும்பான்மையை வென்றெடுத்தார். ''அளவிற்கு அதிகமாக'' பொதுத்துறை தொழிலாளர்கள் மற்றும் அதிகாரத்துவ சலுகை வழங்கலும் தேசிய நெறிப்படுத்தலும்தான் ஜப்பானின் சமூக கேடுகளுக்கான காரணம் என்று கூறப்பட்டது. அக்டோபர் 14ல் மேல்சபை தபால்துறை தனியார்மயமாக்கல் சட்டத்தை நிறைவேற்றியது. தேர்தல் கொய்ஷூமிக்கு பொதுமக்களது கட்டளையை தந்திருப்பதாக அப்போது கூறப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர், கொய்ஷூமி மிக உற்சாகமாக ''அரசியல் உலகில் இது ஒரு அற்புதமாகும். நாம் சீர்திருத்தங்களை முன்பு இல்லாதளவிற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்'' குறிப்பிட்டார். ஜப்பானின் பெருநிறுவன செல்வந்ததட்டினர்தான் உண்மையிலேயே வெற்றி பெற்றவர்களாவர். 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ள ஜப்பானிய தபால்துறையை விற்பதன் மூலம் உலகின் மிகப்பெரிய தனியார்துறை நிதி அமைப்புக்கள் உருவாக்கப்படுவதுடன் டோக்கியோவின் பங்குச் சந்தைக்கு ஒரு ஊக பேர செல்வ மழை பொழியும். அது அரசாங்கத்திற்கு பொதுக் கடன்களை தருகின்ற ஒரு முக்கிய வளத்தையும் மூடிவிடும் மற்றும் அதன் மூலம் ஜப்பான் அரசு பொது சேவைகள், ஓய்வூதியங்கள் மற்றும் நலன்புரி அரசு சலுகைகளை வெட்டுவதற்கு கட்டாயப்படுத்தப்படும். இதன் நோக்கம் என்னவென்றால் வேலையில்லாத நிலையை உருவாக்குவதும் ஊதியங்களையும், வரிவிதிப்பு குறைப்பதாகும். இதன் இரண்டு பிரதான இலக்குகள் முதியோருக்கான ஓய்வூதியத்தையும் குழந்தைகள் பராமரிப்பையும் வெட்டுவதாகும். அக்டோபர் 6ல், கொய்ஷூமி ஒரு தசாப்தத்திற்குள் பொதுத்துறையிலிருந்து 7,00,000 வேலைவாய்ப்புக்களை அல்லது அரசாங்க ஊழியர்கள் மொத்த எண்ணிக்கையில் அது 20 சதவீதத்தை வெட்டுவதற்கான ஒரு திட்டத்தை வெளியிட்டார். அவரது பொருளாதார மற்றும் நிதி கொள்கை குழுவில் தனியார் பெருநிறுவனங்களின் ஆலோசகர்களும், பொருளாதார நிபுணர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். அந்த குழு நடப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இருந்து அரசாங்கம் ஒட்டுமொத்தமாக பொதுத்துறை ஊழியர்களுக்கு கொடுத்து வரும் சம்பளத்தை பாதியாக குறைத்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. 2007 வாக்கில் தபால் சேவை தனியார்மயமாக்கப்படுவதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ள வெட்டுக்களில் மூன்றில் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டுவிடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. பெருநிறுவன நலன்கள் ஜப்பானிய தபால்துறைகளை தங்கள் வசம் எடுத்துக்கொள்ளும்போது இலாபங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் தீவிர மறுசீரமைப்பு திட்டங்களால் ஆயிரக்கணக்கான தபால்துறை ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய தேசியவாதம் 2001ல் அவரது நிர்வாகம் அமைக்கப்பட்டது முதல் கொய்ஷூமி தனது வலதுசாரி ஜனரஞ்சகவாத கொள்கைகளை முன்னெடுத்து வைப்பதில் காலத்தை எந்த நேரத்திலும் வீணாக்கவில்லை. மேல்சபையில் தபால்துறை தனியார்மயமாக்கல் மசோதா நிறைவேற்றப்பட்டு மூன்று நாட்களுக்கு பின்னர் கொய்ஷூமி மீண்டும் ஒரு முறை யாசுக்குனி நினைவாலயத்திற்கு (Yasukuni shrine) விஜயம் செய்தார். அங்கு இரண்டாவது உலகப்போரில் தண்டிக்கப்பட்ட ஜப்பானின் போர் குற்றவாளிகள் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர் பதவிக்கு வந்தது முதல் இது அந்த ஆலயத்திற்கு அவர் மேற்கொண்ட ஐந்தாவது பயணமாகும். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் கையில் மில்லியன் கணக்கான மக்கள் மடிந்த அல்லது துன்புற்ற தென்கொரியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் எதிர்பார்த்த கண்டனங்களுக்கு கொய்ஷூமி வாயடிப்புடன் பதிலளிக்கையில், ஜப்பான் தனது போரில் மடிந்தவர்களுக்கு எப்படி அஞ்சலி செலுத்துகிறது என்பதில் தலையிடுவதற்கு பிற நாடுகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார். கொய்ஷூமி ஆத்திரமூட்டும் வகையில் தேசியவாதத்தை வளர்த்து வருவது, இராணுவவாதத்திற்கு எதிராக பொதுமக்களிடையே ஆழமாக உருவாகியுள்ள எதிர்ப்பை அவரது அரசாங்கம் சமாளிக்கும் முயற்சிகளோடு பின்னிப்பிணைந்து நிற்கிறது. கடந்த 12 மாதங்களில் மட்டுமே அவரது அரசாங்கம் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பான் கடன் எல்லைக்குள் புகுந்துவிட்டதாக குற்றம்சாட்டி ஒரு கடுமையான இராஜதந்திர பிரச்சனைகளை உருவாக்கியது மற்றும் ஜப்பானின் போர்க்கால அட்டூழியங்களை தவறாக சித்தரிக்கும் வரலாற்று பாடநூலுக்கு ஒப்புதலும் அளித்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் வரலாற்று பாடநூல் பிரச்சனையில் ஜப்பானுக்கு எதிராக கண்டனங்கள் நடைபெற்ற நேரத்தில் கொய்ஷூமி தன்னை பெய்ஜிங்கை ''எதிர்த்து நிற்கும்'' துணிச்சலான ஒரு தலைவர் என்று காட்டிக்கொண்டார். ஜப்பானின் ஏகாதிபத்திய போருக்கு முந்தைய பல்வேறு அடையாளச் சின்னங்களை மீண்டும் புதுபித்து ஒரு தேசியவாத அரசியல் சூழ்நிலையை மீண்டும் உருவாக்கினார். மே மாதம், போர்க்கால மன்னர் ஹீரோஹிட்டோவை வெளிப்படையாக கண்ணியப்படுத்துகின்ற வகையில் ஒரு பொது விடுமுறை நாளுக்கு அவரது பெயரை மீண்டும் சூட்டினார். இந்த முடிவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஜப்பானை மீண்டும் இராணுவமயமாக்குவதற்கு ஒரு வலதுசாரி ஆதரவு அடித்தளத்தை வளர்க்க முயற்சிப்பதும், ஜப்பான் இராணுவத்தை வெளிநாடுகளில் பயன்படுத்திக்கொள்வதற்கும்தான். 2001 முதல் கொய்ஷூமி ஜப்பான் இராணுவத்தை ஆப்கானிஸ்தான் படையெடுப்பிற்கு ஆதரவாகவும், ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு உதவுவதற்காகவும் அனுப்பியது ----ஜப்பானின் தரைப்படைகள் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் முதல் தடவையாக ஒரு போர் பிராந்தியத்திற்கு அனுப்பப்பட்ட சம்பவமாகும். போர் முடிந்த 60ம் ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் கொய்ஷூமியின் தாராளவாத ஜனநாயகக் கட்சி ஜப்பானின் அரசியல் சட்டத்திற்கு புதியதொரு நகலை முன்மொழிந்துள்ளது. அது அந்த ஆவணத்தின் ''அமைதிவாத'' பிரிவுகள் என்று அழைக்கப்பட்டவற்றால் திணிக்கப்பட்ட ஜப்பான் இராணுவத்தை பயன்படுத்துவதற்கு மிச்சமிருக்கும் கட்டுப்பாடுகளையும் நீக்கிவிடுகிறது. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் வெளிப்படையாக ஒரு ''இராணுவம்'' இருப்பதை ஏற்றுக்கொள்கிறது. தற்போதுள்ள அரசியல் சட்டத்தின் 9-வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள ஷரத்துக்கள், கண்டிப்பாக விளக்கப்பட்டால் ஜப்பான் ஒரு இராணுவத்தை வைத்திருப்பது அல்லது ''சர்வதேச மோதல்களில்'' அதை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கிறது. ஜப்பானின் உயர்நுட்ப ஆயுதப்படைகள் சம்பிரதாய முறையில் அல்லது ''தற்காப்புப் படைகள்'' என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றன. வெளிப்படையாக தெரியும் வகையில் சொற்களில் செய்யப்படும் மாற்றம் ஜப்பானிய அரசாங்கம் மிக எளிதாக ஜப்பானிய துருப்புக்களை வெளிநாடுகளுக்கு ''அமைதி காப்புப் பணிகள்'' என்று அழைக்கப்படுவதற்கு அனுப்புவதற்காக வகை செய்யும். இந்த நகலில் பல்வேறு தேசியவாத குறிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன. அவை தற்போதுள்ள அரசியலமைப்பில் இடம்பெற்றிராத ''தேசத்தின் மீது அன்பு செலுத்துவது'' என்பது போன்ற குறிப்புக்களை கொண்டதாகும். மன்னர் பற்றியும், தேசபக்தி குறிப்புக்களும் மற்றும் போருக்கு முந்தைய ஜப்பானின் மன்னர் ஆட்சியை பாராட்டும் அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. கொய்ஷூமி தனது நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்திக்கொள்ள அபிலாஷை கொண்டிருக்கிறார் மற்றும் அடுத்த ஆண்டு மாற்றங்களை வலியுறுத்தி நிறைவேற்றுவதற்கு பொதுமக்கள் கட்டளையிட்டிருப்பதாக கூறுகிறார். உகாவிலுள்ள ஹயாக்குறி விமானப்படை தளத்தில் அக்டோபர் 30ல் ஆற்றிய ஒரு உரையில் கொய்ஷூமி அறிவித்தது என்னவென்றால், ''பல ஆண்டுகளாக நடைபெற்ற விவாதங்களை தொடர்ந்து இறுதியாக அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள தற்காப்புப் படைகளின் நிலைப்பாடு குறித்து ஒரு தேசிய பொதுக்கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்காப்புப் படைகளின் தலைமை தளபதி என்ற முறையில் என்னுடைய உள்ளம் உங்களோடு சேர்ந்திருக்கிறது மற்றும் தற்காப்புப் படைகளின் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொள்ளுவேன்.'' புஷ் நிர்வாகத்தினால் கொய்ஷூமியின் செயல்திட்டம் ஆதரிக்கப்படுகிறது. சென்ற மாதம் வாஷிங்டனும் டோக்கியோவும் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன அதன்படி ஜப்பானிலுள்ள அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை 7,000 அளவிற்கு குறைக்க வகை செய்யப்பட்டது. அதன் பாகமாக புதிய பாதுகாப்பு ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டுள்ளது அது ஆசிய பசிபிக்கில் ஜப்பானுக்கு ஒரு பெரிய இராணுவ பங்களிப்பை தருகின்ற ஒப்பந்தமாகும். அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்குமிடையில் நிலவுகின்ற உறவுகளை வலுப்படுத்துகின்ற வகையில் அமைந்திருக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்ற வகையில் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஜப்பானின் யோகசுகா துறைமுகத்தில் அணுசக்தியால் இயங்கும் ஒரு விமானம் தாங்கி அமெரிக்கக் கப்பலை வரவேற்க டோக்கியோ சம்மதித்துள்ளது. 1945ல் ஜப்பான் மீது அமெரிக்கா நடாத்திய அணுகுண்டு தாக்குதல்கள் தொடர்பாக நிலவுகின்ற கசப்பான நினைவுகளின் காரணமாக அந்த முடிவினால் அலைபோன்றதொரு கண்டனங்கள் எழுந்தன. ஒரு வலதுசாரி அமைச்சரவை கொய்ஷூமி தனது பொருளாதார மற்றும் வெளியுறவுக்கொள்கை செயல்திட்டத்தை முன்னெடுத்துச்செல்ல காட்டும் உறுதிப்பாடு அவர் தாராளவாத ஜனநாயகக் கட்சி எதிர்ப்பாளர்களை நடத்தும் முறையை வெளிக்காட்டுகிறது மற்றும் அவரது புதிய அமைச்சரவையில் உள்ளவர்களையும் வெளிப்படுத்துகின்றன. தாராளவாத ஜனநாயகக் கட்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு உள்கட்சி கட்டுப்பாடு மிகக்கொடூரமான முறையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது அவரது தபால்துறையை தனியார்மயமாக்கும் மசோதாவிற்கு எதிராக வாக்களித்த அல்லது அந்த மசோதாவை கண்டித்த 50 முன்னணி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டனர் அல்லது விரட்டப்பட்டனர். அவர்களில் இதற்கு முன்னர் மிக செல்வாக்குள்ள குழுக்களின் அதிகார தரகர்களான Shizuka Kamei போன்ற கட்சி உறுப்பினர்கள் அடங்குவர். அக்டோபர் 31இல், கொய்ஷூமி மந்திரி சபையில் ஒரு பெரிய மாற்றத்தை செய்தார். அதன்படி முன்னாள் அமைச்சர்கள் 17 பேரில் 6 பேர் மட்டுமே அமைச்சரவையில் நீடித்தனர். இந்த மாற்றம் அரசாங்கம் தனது போக்கை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று ஜப்பானின் பெருநிறுவன செல்வந்தத் தட்டினருக்கு தெளிவாக அறிவிக்கும் ஒன்றாகும். முக்கியமாக அவர் முன்னெடுத்துவைக்கின்ற அரசியல் முன்னோக்கிற்கு விசுவாசம் உள்ளவர்கள் என்று கருதப்படுகின்ற சந்தை-சார்பு பிரமுகர்களும் மற்றும் வலதுசாரி தேசியவாதிகளும், கொய்ஷூமியினால் முடிசூட்டப்பட்டிருக்கின்றனர். ஒரு காலத்தில் எல்லா வலிமையும் பெற்ற தாராளவாத ஜனநாயகக் கட்சி குழுக்கள் என்று கருதப்பட்டவை கலந்தாலோசிக்கப்படவில்லை. தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தற்காலிக செயலாளரான சின்ஷோ ஆபே தலைமை அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட்டார். அண்மைய மாதங்களில் ஜப்பான் அரசாங்கம் சீனா மற்றும் தென்கொரியவின் கண்டனங்களை தள்ளுபடி செய்தபோது அவர் கொய்ஷூமியின் முன்னணி தலைவராக செயல்பட்டார். கொய்ஷூமியின் பதவி காலம் அடுத்த செப்டம்பர் மாதம் முடிவடைகின்ற நேரத்தில் அவர்தான் அடுத்த தாராளவாத ஜனநாயகக் கட்சி தலைவராக வரக்கூடிய வாய்ப்புள்ளவர் என்று ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. அவர் ஜப்பானிய இராணுவ வாதத்தை ஆதரிப்பதில் இழிபுகழ் கொண்டவர். அபி புதிய நியமனத்திற்கு பின்னர் வெளியிட்ட அறிவிப்பில் ஒவ்வொரு ஆகஸ்ட் 15லும் யாசுக்குனி ஆலயத்திற்கு சென்று தொடர்ந்து தான் அஞ்சலி செலுத்தப்போவதாக குறிப்பிட்டார். 1945 ஆகஸ்ட் 15ல் ஜப்பான் சரணடைந்தது. புதிய வெளியுறவு அமைச்சர் தாரோ ஆசோ, ஒரு ஜப்பானிய பேரினவாதியான அவர் 2003ல் தென்கொரியாவுடன் பதட்டங்களை தூண்டிவிட்டார். டோக்கியோவின் காலனி ஆட்சியின்போது கொரிய மக்கள் ''தானாகவே'' ஜப்பானிய பெயர்களை சூட்டிக்கொண்டார்கள் என்று கூறினார். அவரது குடும்பம் ஒரு காலத்தில் ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கு சொந்தக்காரர்கள் அவர்கள் 10,000 கொரிய மக்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்திருந்தனர். அவரது தாத்தா இரண்டாம் உலகப்போர் முடிவில் அமெரிக்கா- ஜப்பானுக்கிடையே ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி அதில் கையெழுத்திட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் சிகேரு யோசிகிதா ஆவர். ஆசோ ஜப்பான் தலைவர்கள் யாசுக்னி ஆலயத்தில் வழிபடுவதில் சீனா தலையிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டார் மற்றும் அமெரிக்கா-ஜப்பான் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அழைப்புவிடுத்தார். மறுசீரமைப்பு மிகத்தீவிரமாக பொருளாதார அமைச்சர்களுக்கிடையில் வாதிட்டுவரப்படுகிறது. சடகாசு டனிகாக்கி நிதியமைச்சராக தனது பதவியை தக்கவைத்துக் கொண்டார் மற்றும் அவர் உள்விவகார அமைச்சர் ஹீசோ டேக்கனாகாவுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி சுதந்திர சந்தை சீர்திருத்தங்களை செயல்படுத்துவார். டேக்கனாகா, நிதிச் சந்தைகளின் ஆதரவாளர் மற்றும் தபால் துறையை தனியார்மயமாக்கும் திட்டத்தின் ஒரு பிரதான சிற்பி. மந்திரி சபையை வரவேற்று Yomiuri Shimbun நவம்பர் 1 தேதி தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: ''சமூக பாதுகாப்பு முறை நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் சலுகைகள் சுருங்குகின்ற துன்பத்தையும் பெருகிவரும் நிதிச்சுமைகளையும் எதிர்கொண்டேயாக வேண்டும். கொய்ஷூமி டானிகாக்கியை நிதியமைச்சராக தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் அதே நேரத்தில் டானிகாக்கியின் குழுவைச் சார்ந்த சிரோ காவாசாக்கியை சுகாதாரம் தொழிலாளர் மற்றும் நலன்புரி அமைச்சராக நியமித்திருக்கிறார். அது எதற்காக என்றால் நிதி மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கிடையே சுமுகமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கலாம் எனவே அவரது அமைச்சரவை சமூக பாதுகாப்பு செலவினங்களை குறைப்பதற்கு ஒரு துணிச்சலான நடவடிக்கை எடுக்க முடியும் என்பதற்காக அவர் அவ்வாறு செய்திருக்கிறார்.'' ஜப்பானிய அரசியல் அமைப்பில் இடம்பெற்றுள்ள எந்தக் கட்சியும் கொய்ஷூமி அரசாங்கத்திற்கு எந்த கடுமையான அறைகூவலையும் விடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சி (DPJ) கொய்ஷூமியின் தாராளவாத ஜனநாயகக் கட்சி கட்சியிலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாதது. அதன் புதிய தலைவரான சேஜி மேகரா திரும்பத்திரும்ப அரசியல் சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை ஆதரித்தும் ஜப்பான் அமெரிக்க கூட்டணியை பலப்படுத்தவும் திரும்பத்திரும்ப அறிக்கைகளை வெளியிட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். ஜப்பானின் ஜனநாயகக் கட்சி தனது சொந்த நகலை தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறது. அது அரசியல் சட்டத்தை திருத்துவதாக அமையும், அது வெளிப்படையாக ஜப்பான் இராணுவம் ஐக்கிய நாடுகள் சர்வதைசப்படைகளிலும், அமைதி காப்புப் பணிகளிலும் அவை பலாத்காரத்தை பயன்படுத்துவதாக இருந்தாலும் அதை அனுமதிப்பதாக ஜப்பானின் ஜனநாயகக் கட்சியின் நகல் அமையும். கொய்ஷூமியின் பொருளாதார வேலைத்திட்டத்திற்கு ஜப்பானின் ஜனநாயகக் கட்சியின் பிரதான கண்டனம் அந்த அரசாங்கம் அரசாங்க செலவினங்களையும், தொழிலாளர்களின் ஊதியங்களையும் போதுமான அளவிற்கு வேகத்தோடு வெட்டாது என்பதுதான். பயனற்ற பல் இல்லாத விமர்சனங்களை தெரிவிப்பதை தவிர ஜப்பானிய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் சமூக ஜனநாயகக் கட்சியும் ஏறத்தாழ அர்த்தமற்ற கட்சிகளக உள்ளன. அவர்கள் பரவலாக ஊழல்மிக்க அதிகாரத்துவ வெறுங்கூடுகள் என்று தொழிலாள வர்க்கத்தால் கருதப்பட்டு வருகின்றனர் மற்றும் பல தசாப்தங்களுக்கு மேலாக சாதாரண மக்களது நலன்களுக்காக எந்த உண்மையான போராட்டத்தையும் நடத்துவதற்கு வல்லமை இல்லாதவர்கள் என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். ஜப்பானிய தொழிலாளர்களிடையே பரவலாக தோன்றியுள்ள எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு எந்தவிதமான வழியும் இல்லாத சூழ்நிலையில் அவர்களது வாழ்க்கை தரங்களின் மீது ஒரு தீவிர தாக்குதலுக்கான தயாரிப்புகள் செய்யப்பட்டுவருவதும் இராணுவவாதம் புத்துயிர்ப்பு பெற்றிருப்பதும் மேலும் பெரிய சமூக அதிருப்தியையும் விரோதத்தையும் வளர்க்கவே செய்யும். |