World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US: Senate Republicans demand probe into leak on CIA's gulag

அமெரிக்கா: CIA இன் இரகசிய சிறைகள் தொடர்பான செய்தி கசிவிற்கு செனட் குடியரசுக் கட்சிக்காரர்கள் விசாரணை கோருகின்றனர்

By David Walsh
11 November 2005

Back to screen version

இந்த வாரம் வாஷிங்டன் போஸ்டில் CIA சிறைகள் உலகம் முழுவதும் ஒரு வலைபின்னல் போல் இருப்பது வெளிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து காங்கிரசில் இடம்பெற்றுள்ள குடியரசுக் கட்சி தலைவர்கள் இந்த இரகசியம் வெளிவந்ததற்கு பொறுப்பானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று விடையளித்துள்ளனர்.

செனட் மற்றும் கீழ்ச்சபை புலனாய்வு குழு தலைவர்களுக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில் செனட் பெரும்பான்மை தலைவர் டென்னிசியைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் பில் பிரிஸ்ட் மற்றும் கீழ்ச்சபையின் சபாநாயகர் இல்லிநோய் நகரிற்கான குடியரசுக் கட்சியை சேர்ந்த J. டென்னிஸ் ஹேஸ்டர்டும் ''இது சரியாக இருக்குமானால், இப்படி விசித்திரமாக வெளிப்பட்டிருப்பது நீண்டகால அடிப்படையிலும் மிகத் தீவிரமாகவும் பாதகமான மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் அமெரிக்க மக்களையும் நமது தாய்நாட்டையும் பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து காப்பாற்றுவதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.'' என கூறியிருக்கின்றார்கள்.

CIA அதியுயர் சட்ட ஆலோசகரும் நீதித்துறைக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார், அதில் அவர் போஸ்ட் கட்டுரை வெளியிடப்பட்டிருப்பது தொடர்பாக ஒரு இரகசியத் தகவல் வெளிவந்திருக்கிறது என்று புகார் கூறியுள்ளார்.

உலகம் முழுக்க இரகசிய சிறைகள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பான போஸ்டின் நவம்பர் 2 செய்தி உலகம் முழுவதும் ஆத்திரத்தை தூண்டிவிட்டிருக்கிறது. இந்த ''மறைவான தளங்களில்'' உள்ள நிலைமைகள் அமெரிக்க மற்றும் சர்வதேச சட்டத்திற்கு மாறாக ஸ்தாபிக்கப்பட்டுடன், அது தெளிவாக நரகம் போல் உள்ளன. சில பகுதிகளில், சிறைகளில் எந்த குற்றமும் சாட்டப்படாத கைதிகள் பூமிக்குக் கீழே இரகசிய அறைகளில் இருட்டறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். ''நீரில் மூழ்கி'' மூச்சு திணறுவது போன்ற எள்ளிநகையாடும் காட்டுமிராண்டி நடைமுறைகளை மேற்கொள்ள CIA புலனாய்வாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கிழக்கு ஐரோப்பாவிலுள்ள ஸ்ராலினிச-கால பிரதேசங்களில் மிக முக்கியமான கைதிகள் என்று கூறப்படுகின்ற சிலரை அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் காவலில் வைத்திருப்பதுடன், குறைந்தபட்சம் இரண்டு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இந்த சட்ட விரோதமான சிறைகளுக்கு இடமளித்துள்ளன என்ற தகவலை போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த சமீபத்திய அம்பலப்படுத்தப்பட்டுள்ள தகவலின் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐரோப்பிய மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றனவா என்பது பற்றி ஒரு புலனாய்வு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நவம்பர் 7இல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து இயங்கும் 46 அங்கத்தவரை கொண்டதும், பிரான்சிலுள்ள ஸ்டிராஸ்போர்கில் தலைமை அலுவலகங்களை வைத்திருக்கும் ஐரோப்பிய அமைப்பு தனது சொந்த புலன் விசாரணையை தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற சபையின் சட்ட விவகாரங்கள் குழு அதன் தலைவரை CIA சிறைகள் இருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த கட்டளையிட்டிருக்கிறது.

பிரிஸ்ட்-ஹேஸ்டர்ட் தலையீடு சேறு கிளம்பி எழுவது போன்றதாகும். முதலில் அது போஸ்ட் அம்பலப்படுத்தியிருக்கின்ற பொருளடக்கத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதை நோக்கமாகக் கொண்டது. வியாழனன்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் பேட்டியில் பிரிஸ்ட் தனது எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்தினார். இரகசிய சிறைகள் இருப்பதைவிட இந்த குற்றச்சாட்டு கசியவிட்டிருப்பது ''தேசிய பாதுகாப்பிற்கு'' மிக பெரியதொரு அச்சுறுத்தலாகும் என்று அவர் நிருபர்களிடம் குறிப்பிட்டார். ''எனது கவலை அந்த தகவல் கசியவிட்டிருப்பதை பற்றித்தான், அது நமது பாதுகாப்பிற்கு உறுதிக்கும் ஆபத்தை விளைவிக்கும் - காலம்'' என்று கூறினார்.

இப்படிச் சொல்வதன் மூலம் அந்த சிறைகள் பற்றி விசாரணை நடத்தப்படுவது குறித்து அவர் கவலைப்படவில்லையா என்ற கேள்விக்கு பிரிஸ்ட் ''என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை மற்றும் அதன் தன்மை குறித்தும் நான் கருத்து கூறப்போவதில்லை'' என்று பதிலளித்தார்.

''தாங்களே சொந்தமாக'' ஒரு செய்தியை கசியவிட்டு மோசடியை உருவாக்குவதற்கு குடியரசுக் கட்சி தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சியை அது தெளிவாக காட்டுகிறது. துணை ஜனாதிபதி டிக் செனியின் தலைமை அலுவலகர் லூயிஸ் லிப்பி மீது குற்றம் சாட்டப்பட்டது குறித்து வருந்திய நிலையில் அந்த குற்றச்சாட்டு CIA இன் ஒரு இரகசிய அதிகாரியின் பெயரை அம்பலப்படுத்தியது சம்மந்தமானது காங்கிரஸ் குடியரசுக் கட்சிக்காரர்கள் மீண்டும் தங்களது நிலைக்கு திரும்ப வருவதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். போஸ்ட் வெளியிட்டிருக்கின்ற தகவல் CIA இன் பணிகளையும் அதிகாரிகளையும் ஆபத்தில் சிக்க வைத்திருப்பதாக வற்புறுத்திக் கூறுகின்றனர். செனட் மற்றும் கீழ்ச்சபை குழுவிற்கு அவர்கள் அனுப்பிய கடிதத்தில், பிரிஸ்ட்டும் ஹாஸ்டர்டும் கேட்டிருப்பது என்னவென்றால்: ''அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கும், பயங்கரவாதத்தின் மீதான பூகோள போரில் நமது பங்குதாரர்களுக்கும் உண்மையில் மற்றும் எதிர்காலத்தில் இது ஏற்படுத்தியுள்ள சேதம் என்ன?'' என்பதாகும்.

ஊடகங்கள் உட்பட சம்மந்தப்பட்ட அனைவரும் புறக்கணித்திற்கும் உண்மை என்னவென்றால், இந்த இரண்டு கதைகளிலுமே அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் புரிந்த உண்மையான குற்றங்களாகும். முதலாவதாக லிப்பி வழக்கில் புஷ்சின் போர் முயற்சியை கண்டித்த ஒருவரை வாயடைக்கச் செய்ய அல்லது களங்கப்படுத்த மேற்கொண்ட முயற்சியாகும். இப்போது போஸ்டின் கதையில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தினை போன்ற ஒரு சட்ட விரோத சிறை வலைபின்னல்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள குடியரசுக் கட்சிக்காரர்கள் எடுத்து வைக்கும் வாதம் எந்த அளவிற்கு பொதுமக்களது ஆதரவை வென்றெடுக்கும் -----CIA புலனாய்வு அதிகாரிகள் உரிமையை பாதுகாத்து நிற்பது, அதாவது சித்திரவதைகள் உட்பட அவர்கள் தங்களது பணிகள் எதற்கும் குந்தகம் ஏற்படாத முறையில் செயல்பட அனுமதிப்பது------ இது சந்தேகத்திற்குரியது. வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வலதுசாரி கோமாளி, ரஷ் லிம்பக் ''இந்த தளங்களில் தங்களது வாழ்வையே அர்பணித்துவிட்ட இளைஞர்களையும், இளம் பெண்களையும்'' பாராட்டினார். CIA அதிகாரிகள் இராணுவத்தினால் சிறப்பாக பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றனர். பூமிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இருண்ட சிறைச்சாலைகளில் விலங்கு பூட்டப்பட்டு குழப்பத்தில் இருக்கின்ற முறைகேடாக நடத்தப்படும் தனி மனிதர்கள் எப்படி அந்த CIA அதிகாரிகளது வாழ்விற்கு ஆபத்தை உண்டாக்க முடியும் என்பதையும் அவர் உடனடியாக விளக்கவில்லை.

பிரிஸ்ட்-ஹேஸ்டேர்ட் கடிதத்தின் மிக பொதுவானதொரு நோக்கம் என்னவென்றால், அரசாங்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை மிரட்டுவதற்காகவும் மற்றும் குறிப்பாக, அவற்றின் செயல்களை அம்பலப்படுத்துகின்ற வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதை தடுப்பதற்காகத்தான். அவர்கள் அனுப்பிய கடிதத்தில் செனட் சபையின் பெரும்பான்மை தலைவரும் கீழ்சபையின் சபாநாயகரும் ''அமெரிக்க அரசாங்கத்தின் ஊழியர்கள் இரகசிய தகவல்களை கசியவிடுவது அண்மை ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது அதன் மூலம் ஒரு ஆபத்தான போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அந்த போக்கு மோசமடையும்.'' என எழுதியிருந்தனர்.

உண்மையிலேயே இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு இரகசியத்தை காக்க வேண்டும் என்ற வெறி உணர்வோடு செயல்படுகின்ற ஒரு அரசாங்கத்தை எதிர்கொள்ளும் பத்திரிகைகளுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை. ஒன்று அரசாங்கம் கூறுவதை அப்படியே வெளியிட வேண்டும் அல்லது இரகசிய தகவல்கள் உட்பட கசியவிடப்படும் தகவல்களையும் பிரசுரிக்க வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளில் அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடக்கூடாது என்று விரும்புகின்ற தகவலை பொதுமக்களுக்கு பகிரங்கமாக தெரிவிப்பது ஒரு அடிப்படை ஜனநாயக கடமையாகும்.

முன்மொழியப்பட்டுள்ள விசாரணையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருக்கிறாரா என்று கூறுவதற்கு வெள்ளை மாளிகை பேச்சாளர் ஸ்கொட் மெக்கிலேலன் மறுத்துவிட்டார். ஆனால் அவர் மேலும் '' இரகசிய தகவலை கசியவிடுவது மிகக்கடுமையானதொரு விவகாரம் மற்றும் அதை கடுமையானதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் தகவல் இரகசியமாக கசியவிட்டிருப்பது குறித்து இரு சபைகளும் அடங்கிய ஒரு விசாரணை குழு விசாரிக்க வேண்டும் என்ற கருத்து மேலெழுந்த வாரியாக பார்க்கும்போதே அபத்தமானதாகும். அத்தகைய விசாரணைகள் அமெரிக்க வரலாற்றில் அரை டசினுக்கும் குறைவாகவே நடைபெற்றிருக்கின்றன. அவற்றில் அமெரிக்க உள்நாட்டு போர் நடத்தப்பட்டது தொடர்பான விசாரணையும் ஈரான்-கொன்ட்ரா மோசடியும் அடங்கும்.

பிரிஸ்ட்-ஹேஸ்டேர்ட் கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து ஒரு பெருமளவில் குழப்பம் ஏற்பட்டது. உண்மையில் சில குழப்பம் அதற்கு முன்னரே நடைபெற்றது. The Hill என்கிற செய்தி பத்திரிகை நாடாளுமன்ற தகவல்களையும் அதில் வெளியிடப்படுகின்ற விவகாரங்களையும் பிரசுரிக்கின்ற ஒன்று. ஹேஸ்டேர்ட் அந்த கூட்டுக் கடிதத்தை படித்து அதன் உள்ளடக்கத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னர் கசியவிடப்பட்டதை பற்றி கூட்டு கடிதத்தை பிரிஸ்டின் அலுவலகத்தை சேர்ந்த யாரோ ஒருவர் கசியவிட்டிருக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிகிறது.

கீழ்ச்சபை சபாநாயகர் அவசரமாக அவ்வாறு செய்தார். ஆனால் இதற்கிடையில் CNN வெளியிட்ட ஒரு செய்தியில் மிசிசிப்பியை சேர்ந்த குடியரசுக் கட்சிக்காரரான டிரன்ட் லொட் "மறைவான தளங்கள்" பற்றிய தகவலை ஒரு குடியரசுக் கட்சி செனட்டர் வெளியிட்டிருக்கக்கூடும் என்று கூறினார்! லொட் தனது செனட் பெரும்பான்மை தலைவர் என்ற பதவியை இழந்ததிலிருந்து கசப்படைந்திருக்கிறார் மற்றும் ஒரு தளர்ந்த பீரங்கியை போன்று செயல்பட்டு வருகிறார். அவர் நிருபர்களுக்கு தந்துள்ள தகவலின்படி போஸ்டில் வெளிவந்திருந்த செய்தி துணை ஜனாதிபதி டிக் செனி சென்ற வாரம் இரகசியமாக குடியரசுக் கட்சி செனட்டர்களுக்கு தெரிவித்த அதே வாசகமாக அமைந்திருக்கிறது, ''அங்கு கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் அந்த செய்தி பத்திரிகைக்கு நேரடியாக சென்றிருக்கிறது. நாங்கள் எங்களது வாய்களை முடிக்கொண்டிருக்க முடியாது'' என்று அவர் கூறினார்.

கசியவிடப்பட்டது தொடர்பான ஒரு புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் கையெழுத்திடுவதற்கு பிரிஸ்ட் தயக்கம் காட்டுகின்ற வகையில் இந்த செய்தி பற்றிய தகவல் வெளிவந்திருக்கிறது, ''புலன் விசாரணை வேண்டும் என்று கோருவதன் மூலம் ஒரு குடியரசுக் கட்சி செனட்டருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு'' பற்றி அவர் கவலைப்பட்டார். The Hil தந்துள்ள தகவலின்படி ''பிரிஸ்ட் ஒரு நிருபர்கள் குழுவிற்கு மாலை 5 மணிக்கு அளித்த பேட்டியில் அந்த கடிதத்தில் தான் கையெழுத்திடவில்லை என்று குறிப்பிட்டார். மாலை 5.45 மணி வரை அவர் அதில் கையெழுத்திடவில்லை; ஆனால் அதற்கு பின்னரும்கூட பிரிஸ்ட் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டாரா என்பது நிச்சயமில்லை. இந்த குழப்பத்தை மேலும் அதிகரிக்கின்ற வகையில் பிரிஸ்டின் அலுவலகம் சில நிருபர்களுக்கு அவர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுவிட்டதாக கூறியது ஆனால் அதை வெளியிட வேண்டாம் என்றும் அவர் முடிவு செய்துவிட்டார்.''

CIA இன் இரகசிய சிறைகள் பற்றிய ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுப்பதில் செனட் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கிடையே முழு ஐக்கியமில்லை. அவர்களிடம் ஒற்றுமை குறைந்தே காணப்படுகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி தெற்கு கரோலினாவை சேர்ந்த லின்சே கிரஹாமிடம் கசியவிடப்பட்ட தகவல் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமா? அல்லது சிறைகள் பற்றி விசாரிக்க வேண்டுமா என்று கேட்கப்பட்ட போது அவர் கண்ணை உருட்டி ''அவை இரண்டும் பற்றி என்ன? நாம் ஏன் இரகசிய சிறைகளை வைத்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ள நான் விரும்புகிறேன், மற்றும் மேற்பார்வையிடுவதற்கு என்ன முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது?'' என்று பதிலளித்த கிரஹாம் '' நாம் நமது தார்மீக உயர்ந்த நிலைப்பாட்டை மீண்டும் பெறவது அவசியமாகும் மற்றும் அவற்றை பெறுவதற்கே வாஷிங்டன் போஸ்டில் இரகசிய சிறைகள் பற்றி செய்தி வந்திருப்பது அந்த பெயரை நிலைநாட்டுவதற்கு ஒரு நல்ல வழியல்ல'' என்று அவர் விளக்கினார்.

வியாழனன்று கன்சாஸ் குடியரசுக் கட்சிக்காரர் பாட் ராபர்ட்ஸ் செனட் புலனாய்வுக் குழுவின் தலைவர் கூறினார் தான் மிக ''மரியாதையாக'' பிரிஸ்கை கேட்டுக்கொள்வது என்னவென்றால் போஸ்ட் கசியவிடப்பட்டது குறித்து உடனடி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையிலிருந்து நீதித்துறை தனது சொந்த விசாரணையை முடிக்கும் வரை பின்வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சமீபத்திய நிகழ்ச்சிபோக்கு முடிவதற்கு எவ்வளவு நாட்களாகும் என்று கேட்டதற்கு ராபர்ட்ஸ் கேலியாக '' தசாப்தங்களாகும்'' என்று கூறிப்பிட்டார்.

CIA புலன் விசாரணை செய்கின்ற முறைகள் பற்றி இந்த வாரம் மேலும் தகவல்கள் வந்திருக்கின்றன. 2004 இல் அந்த அமைப்பின் உயர் அதிகாரி ஜான் ஹெல்கர்சன் வெளியிட்டுள்ள ஒரு இரகசிய அறிக்கையில், செப்டம்பர் 11 தாக்குதல்களை தொடர்ந்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள சில புலன் விசாரணை முறைகள் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய சித்திரவதைக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதாக அமையக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டிருக்கிறது அது கடுமையான உளவியல் அல்லது உடல்ரீதியிலான துன்பத்தை உருவாக்குகின்ற விசாரணை முறைக்கு தடைவிதிக்கிறது மற்றும் கொடூரமான மனிதநேயத்திற்கு புறம்பான அல்லது இழிவுபடுத்துகின்ற எந்த நடவடிக்கையையும் தடுக்கிறது. புஷ் சில நாட்களுக்கு முன்னர் முட்டாள் தனமாக '' நாங்கள் சித்திரவதை செய்வதில்லை'' என்று கூறிய சில நாட்களுக்குள் இந்த தகவல் வந்திருக்கிறது.

ஹெல்கர்சன் தனது அறிக்கையில் ''நீரில் மூழ்கடித்து'' மூச்சுத்திணறச் செய்வது போன்ற விசாரணை நடைமுறைகள் போர்க்கைதிகளுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்துவதற்கு அனுமதித்துள்ள நடைமுறைகளுக்கு அப்பால் அந்த முறைகள் அமைந்திருக்கின்றன என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றும் அத்தகைய நடவடிக்கைகள் சித்திரவதை என்று கருதப்படாவிட்டால்கூட அவை அவரது கருத்துப்படி கொடூரமானது, மனித நேயமற்றது மற்றும் இழிவுபடுத்தும் நடவடிக்கையுமாகும்.

நியூயோர்க் டைம்ஸ் இது பற்றி குறிப்பிட்டிருப்பதாவது: ''அந்த அறிக்கை பற்றிய விளக்கம் தந்த அதிகாரிகள் அது CIA பயன்படுத்துகின்ற குறிப்பிட்ட நடைமுறைகள் பற்றி விவாதிப்பதாக கூறினர். அந்த நடைமுறைகள் குறிப்பிட்ட கைதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. அவர்களில் சுமார் மூன்று டசின் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் உலகம் முழுவதிலும் இரகசிய இடங்களில் CIA இனால் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அந்த அறிக்கை குறிப்பாக, செப்டம்பர் 11 தாக்குதல்களை ஏற்பாடு செய்ததாக கூறப்படும் காலித் ஷேக் முஹமதுவிற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறிப்பிடுவதாக அமைந்திருக்கிறது. 2003 மார்ச்சில் அவர் CIA இனால் கைது செய்யப்பட்டது முதல் ஒரு இரகசிய இடத்தில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். ''நீரில் மூழ்கடித்தல்'' என்கிற கொடூரமான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் என்று முஹமது கருதப்படுகிறார். இந்த கொடூரமான விசாரணை முறை, ஒருவரை படகுடன் சேர்த்துக்கட்டிவிட்டு அவர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறார் என்று நம்பச் செய்வதாகும்.''

ஈராக்கில் ஏற்பட்ட பேரழிவினால் கிளப்பிவிடப்பட்ட கவலை மற்றும் நீண்டகால அடிப்படையில், சட்ட விரோதமான மற்றும் கவனமற்ற கொள்கைகளால் ஏற்படுகின்ற பூகோள விளைவுகள் மற்றும் சட்டபூர்வமான பொறுப்புகள் தொடர்பான கவலைகள் ஆகியவை CIA சிறைகள் பற்றிய போஸ்டின் இரகசிய தகவல் உட்பட வெள்ளம் போல் இரகசிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதற்கான அடிப்படையாகும். பல்வேறு தலைவர்களும் அதிகாரிகளும் தங்களது பதவிகளில் நிலைப்பதற்கு அல்லது மீண்டும் பதவிகளை பெறுவதற்கு அரசியல் மற்றும் புலனாய்வு அமைப்புக்களில் சில பிளவுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

ஆளும் தட்டிற்குள் விமர்சகர்களின் கருத்துக்களுக்கு ஒரு இலக்காக விளங்குபவர் துணை ஜனாதிபதி செனி என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. அக்டோபரில் வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பெளவலின் முன்னாள் தலைமை ஆலோசகர் கர்னல் லோரன்ஸ் வில்கர்சன் செனியையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்டையும் ஒரு ''சூழ்ச்சியை'' நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார் அது அமெரிக்க வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கையை கடத்தி சென்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். சென்ற வாரம் வில்கர்சன் அதே குற்றச்சாட்டுக்களை திரும்ப ஒரு திட்டவட்டமான புகாருடன் குறிப்பிட்டார். தேசிய பொது வானொலி பேட்டியொன்றில் செனியும் அவரது புதிய உதவியாளரும் ----(லூயிஸ் லிப்பிக்கு பதிலாக நியமிக்கப்பட்ட) டேவிட் ஆடிங்டனும்------ ஈராக்கிலும், ஆப்கனிஸ்தானிலும் அமெரிக்க துருப்புக்கள் கைதிகளை முறைகேடாக நடத்துவதற்கு பொறுப்பான கட்டளைகளை பிறப்பித்தனர் என்று குற்றம் சாட்டினார். அது, துணை ஜனாதிபதியை பொறுத்தவரை ஒரு கிரிமினல் நடவடிக்கையாகும்.

வில்கர்சன் NPR இடம் ''துணை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் வழியாக போர்க்களத்திலுள்ள தளபதிகள் வரை கண்ணுக்கு தெரிகின்ற ஒரு தணிக்கை முறை கொண்டுவரப்பட்டது, கைதிகளை முறைகேடாக நடத்தும் நடைமுறைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது'' எனக் கூறினார். அவர் மேலும் ''கைதிகள் அமெரிக்க துருப்புக்களால் முறைகேடாக நடத்தப்படுவதாக செய்திகள் வெளிவந்த பின்னர் அந்த விவகாரத்தை ஆராயுமாறு பெளவல் தனக்கு கட்டளையிட்டார் என்றும் கூறினார். வில்கர்சன் கூறியது என்னவென்றால், தான் இரகசிய மற்றும் இரகசியமல்லாத ஆவணங்களை தயாரிக்கும் பொறுப்பில் இருந்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் இவை அத்தனையும் தொடங்கியது எப்படி என்று தகவல் திரட்டுமாறு தன்னை கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

செனியின் புதிய தலைமை ஆலோசகர் ஆடிங்டன் ''ஜெனீவா ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் செல்வதற்கு ஜனாதிபதிக்கு அவர் தலைமை தளபதி என்ற முறையில் அவருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உறுதியாக எடுத்துரைத்து வருபவர்.'' என அவர் மேலும் தெரிவித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved