World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சீனா

A grand ceremony for Confucius: Beijing turns to the old imperial ideology

கன்பியூசியசிற்கு ஒரு மகத்தான விழா: பெய்ஜிங் பழைய பேரரசின் கருத்தியலுக்கு திரும்புகிறது

By John Chan
12 November 2005

Back to screen version

சீனாவின் பண்டைக்கால தத்துவவியலாளர் கன்பியூசியசின் (கி.மு. 551-479) 2556 வது பிறந்த ஆண்டு விழாவை கெளரவிக்கின்ற வகையில் செப்டம்பர் மாதக் கடைசியில் பெய்ஜிங் அரசாங்கம் நடாத்திய ஒரு மகத்தான விழாவானது சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP) சீரழிந்துகொண்டுவருவதற்கு மற்றொரு அடையாளமாகும். அவர்களது எதேச்சதிகார ஆட்சியை நியாயப்படுத்துவதற்கு ஒரு கருத்தியலை உருவாக்க முயன்று வருவதுடன் முதலாளித்துவ சந்தையை பகிரங்கமாக கட்டித் தழுவுவதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே இறந்துவிட்ட கன்பியூசியசின் தத்துவவியலை உயிர்பெற்று எழச்செய்கின்றனர்.

கன்பியூசியசின் சொந்த நகரான கிழக்கு ஷாங்டோங் மாகாணத்திலுள்ள கூபுவில் 2005 சர்வதேச கன்பியூசியஸ் கலாச்சார விழா நடத்தப்பட்டது. சீன அரசாங்கம் செப்டம்பரை ''கன்பியூசியஸ் கலாச்சார மாதம்'' என்று அறிவித்து. பல தலைமை அரசு அதிகாரிகள் மற்றும் பேராசியர்கள் உட்பட 2,500 பேர் கன்பியூசியஸ் ஆலயத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

கடந்த காலத்தில் சீன பேரரசர்கள் கடைபிடித்து வந்த மதச்சடங்குகள் கவனமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு நீதிமன்ற அதிகாரிகள் போல் வேடமிட்டவர்களும் பூசாரிகளும் தங்களது ''குரு நாதருக்கு'' அஞ்சலி செலுத்தினர்.

பெய்ஜிங்கின் அனுசரனையோடு கன்பியூசியஸ் பிறந்தநாளைக் குறிக்கும் விழாக்கள் அமெரிக்கா, ஜேர்மனி, தென்கொரியா, ஜப்பான் அதேபோல் தைவான் மற்றும் ஹொங்கொங்கிலும் நடத்ப்பட்டன. இது வரை சீன அரசாங்கம் ''பாரம்பரிய கலாச்சாரத்தை'' ஊக்குவிக்கும் ''சீன இணைப்பு'' திட்டத்திற்காக 10 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது பல்கலைக்கழக நடவடிக்கைகள் மூலமும் உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் கன்பியூசியன் குழுக்கள் மூலமும் கன்பியூசியசின்வாதத்தை வளர்ப்பதை மையமாகக் கொண்டது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட இது போன்றதொரு திட்டம் ''நிலபிரபுத்துவ முட்டாள்தனத்தை'' வளர்க்கிறது என்று கண்டிக்கப்பட்டிருக்கும். எவ்வாறிருந்துபோதிலும், 2005இல் அதிகாரபூர்வமான சின்கூவா செய்தி நிறுவனம் ''ஒரு காலத்தில் இறந்துவிட்ட தத்துவம் என்று கருதப்பட்ட கன்பியூசியனிசவாதம் ஒரு வியப்பூட்டும் வகையில் மீண்டும் திரும்பிவந்துள்ளது'' என மிக உற்சாகமாக குறிப்பிட்டிருந்தது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் கன்பியூசியஸ் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தை பாராட்டியுள்ளது. ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ ஒரு ''சமரச சமுதாயத்தை'' உருவாக்கி வருகின்ற பிரச்சாரத்தின் ஒரு முக்கியமான கூறாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக அறிவியல் கழகத்தில் ஒரு முன்னணி கன்பியூசியனிசவாதி காங் சியோகாங் வாதிட்டிருப்பது என்வென்றால் சீன கம்யூனிஸ்ட் கட்சி கன்பியூசியனிசவாதத்தை அதிகாரபூர்வமான அரசு கருத்தியலாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதாகும். வளர்ந்து வரும் குற்றங்களின் அளவு, வேலையில்லாதோர், உத்தியோகபூர்வ ஊழல், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் சமூக துருவப்படுத்தல், சமூக நலன்புரி பற்றாக்குறை ஆகியவற்றை எதிர்நோக்கியுள்ள சீனாவிற்கு அது உயிர் வாழ்வதற்காக ஒரு புதிய நன்னெறிசார்ந்த அடிப்படை தேவை என்று அவர் அக்டோபர் 2ல் Scotland on Sunday க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

''சீன சமுதாயம் இன்றைய தினம் முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு படுமோசமாக உள்ளது... முதலாளித்துவமும் மாக்சிசமும்-லெனினிசமும் சேர்ந்த ஒரு கலவையாக உள்ளது. இதன் விளைவாக மக்கள் ஒருவருக்கொருவர் எப்படி நடத்துவது அவர்களது வர்த்தக பங்குதாரர்களை அவர்களது நண்பர்களை மற்றும் அவர்களது குடும்பங்களை எப்படி நடத்துவது என்பதற்கான நெறிமுறைக்கு மிகவும் திட்ட அளவு எதுவுமில்லை. ஒரு மகிழ்ச்சியான வாழ்வை எது உருவாக்குகிறது என்று முடிவு செய்வதற்கு நமக்கு எந்த வழியும் இல்லை. இதில் கன்பியூசியஸ் பாரம்பரிய மதிப்புகளை தருகிறார். அது நமது ஒழுக்கநெறி மற்றும் சமூகத்தரத்தை உருவாக்குதவற்கு உதவும்'' என்று காங் சொன்னார்.

காங் தந்துள்ள சமூகப்பிரச்சனைகளின் பட்டியல் 25 ஆண்டுகளாக ''சந்தை சீர்திருத்தத்தை'' மேற்கொண்ட பின்னர் பெய்ஜிங் சோசலிசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறுவது எவ்வளவு அபத்தமானது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருப்பதுடன் மற்றும் ஆழமாகிக் கொண்டு வரும் சமூக பதட்டங்கள் மற்றும் வளர்ந்து வரும் கண்டனங்களுக்கு இடையே ஏற்பட்டுவிட்ட கருத்தியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேறு ஏதோ ஒன்று தேவை என்பதை அது காட்டுகிறது.

சமீபத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுவது என்னவென்றால் சென்ற ஆண்டு இருந்ததை விட இந்த ஆண்டு மிகப்பணக்காரர்களான 100 தனிமனிதர்கள் தங்களது செல்வத்தை 40 சதவீதம் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். சீனாவிலுள்ள 400 முன்னணி பணக்காரர்கள் 75 பில்லியன் டாலர் செல்வ வளத்தை சேர்த்துள்ளனர் இது சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 7 சதவீதத்திற்கு சமமாகும். இவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். இந்த புள்ளி விவரங்களோடு ஒப்பிடும்போது சராசரி நகர்புற ஊதிய அளவுகள் ஓராண்டிற்கு 1,000 டாலர்களாகவே உள்ளன மற்றும் பரம ஏழைகளான விவசாயிகள் ஆண்டிற்கு 100 டாலர் அல்லது அதற்கும் குறைவாகவே வருமானம் பெறுகின்றனர்.

பெய்ஜிங்கிடம் கருத்தியல் எதுவுமில்லை. ஆட்சியின் ''சோசலிச'' வெற்று வாய்வீச்சை எவரும் நம்பவில்லை. அப்படியிருந்தும் கண்டனங்களில் ஈடுபடுகின்ற சில தொழிலாளர்கள் இன்னும் பகிரங்கமாக கிடைக்கின்ற மாக்சிச இலக்கிய வெளியீடுகளை கையில் எடுத்துக் கொண்டு தங்களது கோரிக்கைகளை நியாயப்படுத்தி வருகின்றனர் மற்றும் சோசலிசத்தை காட்டிக் கொடுத்து விட்டதாக ஸ்ராலினிச தலைமையை விமர்சிக்கின்றனர். சீனத் தலைவர்கள் ''ஜனநாயகத்திற்கு'' வேண்டுகோள்விடுத்தால் அது ஏற்கனவே தொழிலாளர்களும் விவசாயிகளும் நடத்தி வருகின்ற பெருகிவரும் கண்டனங்களை ஊக்குவிப்பதாக அமையும் அல்லது தீனென்மென் சதுக்கத்தில் 1989 மே-ஜீன் மாதத்தில் நடைபெற்றது போன்ற வெகுஜன பேரணிகளை கட்டவிழ்த்து விட்டுவிடும் என்றும் அஞ்சுகின்றனர்.

சீனாவின் ஒரு கன்பியூசியஸ் கட்சியாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மாறப்போவதில்லை என்றாலும் கன்பியூசியஸ்வாதத்திற்கு புத்துயிர் கொடுப்பது அதிகாரத்திற்கு ஆட்சேபனையற்று கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் அது பெய்ஜிங்கின் கருத்தியல் தேவைகளுக்கு ஏற்றது. இப்படிச் செய்வதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக 1919 மே 4 இயக்கத்தை அடிப்படையாக கொண்ட தனது சொந்த பூர்வீகத்தை நேரடியாக தள்ளுபடி செய்கிறது. அந்த காலத்தில் மாணவர்களும் அறிவுஜீவிகளும் கன்பியூசியஸ்வாதங்களுக்கு எதிராக ஒரு இடைவிடாத கருத்தியல் போராட்டத்தை நடத்தி வந்தார்கள். அது சீன வெகுஜனங்களின் ஜனநாயக விழிப்புணர்வுக்கு ஒரு பெரிய தடைக்கல்லாக இருப்பதாக அவர்கள் கருதினர்.

கன்பூசியனிசவாதத்தின் வரலாற்றுரீதியான பங்கு

கன்பியூசியஸ் தொடர்பாக புராணங்கள் எதுவுமில்லை பல நூற்றாண்டுகளுக்கு மேலாக அவர் கடவுள் அந்தஸ்த்திற்கு உயர்த்தப்பட்டிருக்கிறார். இரும்புக்கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து விவசாயத்தில் உற்பத்தித்திறன் கணிசமாக உயர்ந்த காலகட்டமான கிழக்கு சோவ் ஆட்சி சகாப்தத்தில் (கி.மு. 770 முதல் 2021 வரை) செழித்து வளர்ந்த பல தத்துவவாதிகளில் இவரும் ஒருவராவார். பாரம்பரிய பிரபுக்கள் நடத்தி வந்த கூட்டு பண்ணை முறை விவசாயம் கைவிடப்பட்டு நகரங்கள் விரிவடைந்தன மற்றும் பெரியளவிலான நீர்ப்பாசன முறை ஸ்தாபிக்கப்பட்டது.

இது ஒரு ''நூறு பள்ளிகள்'' மலர்வதற்கான இந்த முற்போக்கு சகாப்தம் என குறிப்பிடப்பட்டது. ஒரு கல்விகற்ற செல்வந்ததட்டு உதித்தெழுந்தது. அவர்கள் சீன இலக்கியங்களை படிப்பதற்கு நேரம் இருந்தது மற்றும் அவர்கள் படிக்கின்ற மற்றும் எழுதுகின்ற ஆற்றலை வளர்த்துக் கொண்டனர். கன்பியூசியசின் கருத்து என்னவென்றால் ''அறிவுஜீவிகளாக பணியாற்றுபவர்கள்தான் ஆட்சிபுரிபவர்களாக இருகக்க வேண்டும். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுபவர்களாக இருக்க வேண்டும்''. அது நிலவுடைமை உயர்குடிப்பிறந்தோரின் ஒரு புதிய வர்க்கத்தின் நலனை வெளிப்படுத்தியதுடன் அவர்கள் பேரரசு அதிகாரத்துவத்தின் அடிப்படையை உருவாக்கினார்கள்.

கன்பியூசியஸ் இறந்து முந்நூறு ஆண்டுகளுக்கு பின்னர், அவர் தத்துவம் பேரரசு அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான கருத்தியலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. சமுதாய வாழ்வின் உறவில் கன்பியூசியனிசம் ஒரு கண்டிப்பான நடைமுறை விதியாக ஆக்கப்பட்டது. ஒவ்வொருவரும் இன்னொருவரை சார்ந்திருக்கும் படிநிலை உருவாயிற்று மற்றும் ஒருவருக்கு மற்றொருவர் கீழ்படிந்து நடக்கும் நடைமுறையும் ஏற்பட்டது. மகன் தந்தைக்கும், மனைவி கணவனுக்கும், பணியாளர் எசமானுக்கும் மற்றும் இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொருவரும் பேரரசனுக்கு கீழ்படிந்து நடக்கின்ற நிலை உருவாயிற்று. தனக்கு மேன்மைநிலையிலுள்ளவருக்கு எதிராக யார் ஒருவர் கிளர்ச்சி செய்தாலும் எந்த கருணையின்றியும் தண்டிக்கக்கூடும். பிந்தைய நூற்றாண்டுகளில் கன்பூசியன் தத்துவம் பெண்களது கால்விரல்களை மடித்து கட்டிப்போடுவது போன்ற காட்டுமிராண்டி நடைமுறைகளை நியாயப்படுத்தியது. அது அவர்கள் ஆண்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற ஒரு கூறுப்பாட்டை கொண்டதாகும்.

கீழைத்தேச எதேச்சாதிகாரத்தின் கீழ் உற்பத்திசக்திகள் தேங்கி விட்டன. 2000 ஆண்டுகளுக்கு மேலான குடும்ப ஆட்சியின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் மத்தியில் சீனாவின் சமூக கட்டமைப்பு பெரும்பாலும் மாறாமலே நீடித்தது. இந்த சூழ்நிலைகளின் கீழ் கன்பூசியஸ் கருத்தியல் ஒரு சலுகைமிக்கதாக நீடித்து அனுபவிக்கப்பட்டது. அதனுடைய கருத்தியல்களிலும் கற்பனை கருத்துகளிலும் இறைவன் வகுத்த சமூக ஒழுங்காக கருதப்பட்டது. கன்பூசியனிசம் அறிவியல் சிந்தனைகள் வளர்வதற்கு எதிராக ஒரு தடையரணாக செயல்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், முதலாளித்துவ உறவுகள் சீனாவிற்குள் ஊடுருவத் தொடங்கியது அதற்கு முன்னர் ஐரோப்பிய வல்லரசுகள் சீனாவை அடிமைப்படுத்திக் கொண்டன. அப்போது உதித்த அறிவுஜீவிகள் கன்பியூசியஸ் தத்துவம் சமுதாய முன்னேற்றம் அறிவியல் மற்றும் பொதுவாக நவீன கலாச்சாரத்திற்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது என்று கருதினர்.

சீன தேசியவாத கட்சியின் (குவோமின்டாங்) தலைவர் சன்யாட்-சன் மற்றும் 1911 புரட்சி கன்பூசியனிசம் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று வாதாடியது மன்சூ பேரரசை கவிழ்த்து விட்டு ஒரு ஜனநாயகக் குடியரசை ஸ்தாபிக்க வேண்டும் என்ற அவரது வேலைதிட்டத்தின் ஓர் அங்கமாகும். ஆனால் சீன முதலாளித்துவம் கன்பூசியனிசவாதங்களை ஒழித்துக்கட்ட இயலாது இருந்ததுடன், அதேபோல் அரை-நிலப்பிரபுத்துவ உறவுகளை ஒழித்துக்கட்டிவிட்டு நிலச்சீர்த்திருத்தங்களை அல்லது உண்மையான ஜனநாயக உரிமைகளை அது முன்னெடுக்க இயலாமல் இருந்தது.

பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவிய சென் டூக்ஸ்யூ போன்ற மிகத்தீவிர சீன அறிவுஜீவிகள் 1911 புரட்சியை விமர்சின கண்ணோட்டத்துடன் நோக்கினர். அவர்கள் ஒரு ''புதிய கலாச்சார'' இயக்கத்தை வழிநடத்தினர். கன்புசியனிசம் மீது போர் பிரகடணம் செய்தனர் அப்போது மேற்கு நாட்டு இலக்கியங்கள் அரசியல் மற்றும் பொருளாதார தத்துவங்கள் மற்றும் இயற்கை அறிவியல்கள் அவற்றிற்குள் மிகப்பெரிய ஆர்வத்தை வெடித்து சிதறச் செய்தன. ஆண்ளுக்கான பழைய சம்பிரதாய உடைகள், பெண்களை கால்விரல்களை மடித்துகட்டி குட்டையாக்குவது, வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளுதல் ஆகிய நடைமுறைகள் எல்லாம் ஒரு ''புதிய வாழ்வுக்காக'' கண்டனம் செய்யப்பட்டு, கைவிடப்பட்டது.

சென்னும் அவரது நண்பர்களும் இலக்கிய சீர்திருத்தத்திற்காக போராடினர். உயர் குடியினர் சிலருக்கான அடிமைத்தனமாக நிறமூட்டப்பட்ட பூச்சுக்கள் கொண்ட இலக்கியங்களை தூக்கிவீசிவிட்டு எளிய தெளிவான மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இலக்கியங்களை உருவாக்கினார்கள். இது நவீன சீன மொழிக்கான அடிப்படையாக அமைந்தது மற்றும் சீன வெகு ஜனங்களுக்கு முன்னேற்றம் மிக்க கருத்துக்கள் கிடைக்க வகை செய்தது.

தீர்க்கமான திருப்பு முனையாக 1917ல் நடந்த ரஷ்ய புரட்சி இருந்தது. அதற்குப் பின்னர் 1919 மேயில் முதலாவது உலகப் போர் முடிவில் வெற்றி பெற்ற ஏகாதிபத்திய வல்லரசுகள் வேர்சையில் கூடி சீனாவிலுள்ள ஜேர்மனியின் காலனித்துவங்களை ஜப்பானிடம் ஒப்படைப்பது என்று முடிவு செய்தன. இந்த முடிவு சீன மாணவர்களும் தொழிலாளர்களும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கண்டனங்களை பரவலாக நடத்துவதற்கு கிளர்ச்சியை கிளறிவிட்டது. அவர்களில் மிகவும் முன்னேறியவர்கள் போல்ஷிவிசத்தின் பக்கம் திரும்பினர் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினர்.

மே 4 இயக்கத்தின் பின்னர் சீனாவில் இருந்த பிரிட்டனின் தத்துவவியலாளர் பெட்ரண்ட் ரஸ்சல் நினைவுபடுத்தி எழுதும் போது: ''மன்னரின் ஒன்றுவிட்ட மகனைத் தவிர [சீனாவில் இருந்த எனது மாணவர்கள்] அனைவருமே போல்ஷிவிக்குகளாக இருந்தனர். அந்த மாணவர்கள் அனைவரும் கவர்ச்சி மிக்க இளைஞர்கள் கூர்மையான மதி படைத்தவர்கள் அதே நேரத்தில் உலகத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தோடும் சீனாவின் பாரம்பரிய கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்..... தங்களது நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்வதற்கு அவர்கள் தயாராக இருந்தனர். ஒரு மகத்தான விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை உருவாக்குகின்ற சூழ்நிலை நிலவியது. பல நூற்றாண்டுகளாக நீண்ட தூக்கத்தில் இருந்த சீனா நவீன உலகத்தை புரிந்து கொண்டு வருகிறது.'' என குறிப்பிட்டார்.

என்றாலும் இரண்டாவது சீன புரட்சியின் போது 1925-27 சோவியத்யூனியனில் உருவான ஸ்ராலினிச அதிகாரத்துவம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கப்பட்ட சர்வதேசிய மற்றும் சோசலிச அபிலாசைகளை பெருந்துயரமிக்க விளைவுகளுடன் குற்றமிக்கவகையில் காட்டிக் கொடுத்தது. 1930-களிலும் 1940-களிலும் சியாங்கே ஷேக்கின் குவோமிங்டாங் சர்வாதிகாரத்தின் கீழ் கம்யூனிசத்திற்கு எதிரான அரசியல் பிற்போக்குத்தனத்தின் ஓர் அங்கமாக கன்பூசியசை வழிபடுகின்ற முறை மீண்டும் கொண்டு வரப்பட்டது. 1949ல் சியாங்கே ஷேக்கின் இராணுவம் தோற்கடிக்கப்பட்டு ஓடிய தைவானில் அது இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பெய்ஜிங்கிலுள்ள புதிய ஆட்சி மார்க்சிச அடிப்படையில் அமைந்தது அல்ல ஆனால் ஸ்ராலினிசத்தின் பிற்போக்கு தேசியவாத தத்துவங்களால் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடையே விமர்சனரீதியான கருத்துக்களை ஒடுக்குவதற்காக மாவோ சேதுங்கை சுற்றி ஒரு தனிநபர்வாத கலாச்சாரம் ஊக்குவிக்கப்பட்டது. விவசாயிகளது பின்தங்கிய நிலைமையும் அறிவியலுக்கும் ''முதலாளித்துவ'' கலாச்சாரத்திற்கும் எதிரான பாரபட்சங்கள் வளர்க்கப்பட்டன. இது 1966-க்கும் 1976-க்கும் இடையில் மிகப்பெரும் பேரழிவை வெளிப்படுத்தும் ''கலாச்சார புரட்சியில்'' வெளிப்பட்டது.

அவர் கன்பூசியனிசத்தை இதர சீன மற்றும் மேற்கு நாட்டு கலாச்சார மரபியங்களோடு சேர்த்து கண்டித்து வந்தாலும் மாவோ அடிப்படையிலேயே கன்பூசியனிச மதிப்புகளான தன்னைதானே தியாகம் செய்து கொள்வது, ஒழுக்க நன்னடத்தை, ஆசைகளை அடக்குவது போன்றவற்றை தனது ஆட்சியை தூக்கி நிறுத்துவதற்காக வலியுறுத்தி வந்தார். மறுபக்கம், ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனது சொந்த தார்மீக நெறிமுறையை கொண்டு செயல்பட்டு வந்தது. அது 1970களின் கடைசியில் முதலாளித்துவ சந்தையின் பக்கம் திரும்புவதாக அமைந்ததுடன் மிக விரைவாக முடிவற்ற தொற்று நோய் போன்ற ஊழலுக்கும், இலாப வேட்டைக்கும் இடம் கொடுத்தது. இதை சுருக்கமாக டெங் சியாவோபிங் ஒரு முழக்கமாக ''பணக்காரர் ஆவது பெருமையுடையது'' என்று கூறினார்.

பூகோள முதலாளித்துவ பொருளாதாரத்தில் சீனா ஒன்றிணைக்கப்பட்து பெய்ஜிங் ஒரு சோசலிச அரசு என்ற கூற்றை இல்லாதொழித்துள்ளது. இதன் விளைவாக, சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் சீன ஸ்ராலினிச அதிகாரத்துவம் நனவுபூர்வமாக புதிய கருத்தியல் அடிப்படையை அமைக்க முயன்ற மத்தியதர வர்க்கத்தின் சில பிரிவுகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அமைந்தது. ''சோவியத் கொந்தளிப்பிற்கு பின்னர் சீனாவிற்கான மூலோபாய தேர்வுகளும் உண்மையான பதிலும்'' என்ற தலைப்பில் 1991ல் பிரசுரிக்கப்பட்ட உள் ஆவணத்தில் பகிரங்கமாக ''பாரம்பரிய சீனாவின் கலாச்சாரங்கள்'' மற்றும் தேசியவாதத்திற்கு அழைப்புவிடும் ஒரு புதிய கட்டமைப்பின் அடிப்படைக்காக அழைப்பு விடுக்கப்பட்டது.

1989 ஜூனில் தியானன்மென் சதுக்க படுகொலைக்கு பின்னர் வெள்ளம் போல் சர்வதேச முதலீடு சீனாவிற்குள் புக ஆரம்பித்தது. தொழிலாள வர்க்கம் எந்த எதிர்ப்பையும் தெரிவித்தாலும் அதை ஒடுக்குவதற்கு பெய்ஜிங் கொண்டுள்ள உறுதியை அங்கீகரிக்கின்ற வகையில் இது அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக, சமூக பதட்டங்கள் மிக பரவலாக உக்கிரமடைந்துள்ளன. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. ''பழைய சீனாவின்'' பழைய சமூக தீங்குகளான கடும் உழைப்பு வேலை, கொத்தடிமை தொழிலாளர்கள், போதைப் பொருட்களுக்கு இலக்காவது, விபச்சாரம் மற்றும் வைப்பாட்டிகள் உட்பட பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை அதேபோல் அதிகாரபூர்வமான ஊழல் மற்றும் கிராமப்புற வறுமை ஆகிய அனைத்தும் பாரியளவில் திரும்பி வந்து விட்டன.

எனவே பெய்ஜிங் தலைமை பழைய கன்பியூசியஸ் கருத்தியலுக்கு புத்துயிர் கொடுப்பதற்கான ஒரு பிரச்சாரத்தை தொடக்கியிருப்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. அப்படி செய்யும் போது சீன கம்யூனிஸ்ட் கட்சி கடந்த காலத்தில் அது பெயரளவிற்கு கடைபிடித்து வந்தவற்றைக்கூட நிராகரிக்கின்றது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved