World Socialist Web Site www.wsws.org |
WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா
:
இலங்கை
இலங்கைத் தேர்தல்: விஜே டயஸிற்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் வாக்களிக்கவும் By the Socialist Equality Party (Sri Lanka) இன்று நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் விஜே டயஸிற்கு வாக்களித்து, போருக்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக ஒரு சோசலிச மாற்றீடுக்கு அவர்களுடைய ஆதரவை அளிக்கும் வகையில் நிருபிக்குமாறு, சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து உழைக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுகிறது. உழைக்கும் மக்களை -சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர், இளைஞர்கள், முதியோர், ஆண், பெண் என்ற அனைவரையும்- தங்களுடைய சமூகத் தேவைகளுக்கும் ஜனநாயக அபிலாசைகளுக்கும் போராடுவதற்கு ஐக்கியப்படுத்தும் ஒரு வேலைத் திட்டத்தை வழங்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியே ஆகும். இந்த தேர்தலில் இரண்டு முகாம்கள்தான் உள்ளன. ஒருபுறம், ஆளும் வர்க்கத்தின் வேட்பாளர்களான SLFP இன் மகிந்த ராஜபக்சவும், UNP ரனில் விக்கிரமசிங்கவும் உள்ளனர். இவர்களுக்குப் பின் அரசியல் அமைப்புமுறையின் அனைத்துக் கன்னைகளும் (பிரிவுகளும்) அணிவகுத்து நிற்கின்றன. ஜனதா விமுக்தி பெரமுன (JVP), ஜாதிக ஹெல உறுமய (JHU) என்னும் சிங்கள பேரினவாதிகள் ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், பல தமிழ், முஸ்லிம் உயர்தட்டு கட்சிகள் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன. மறுபுறத்திலே, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளியிடும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேடபாளர் உள்ளார். ஆரம்பத்தில் இருந்தே சோசலிச சமத்துவக் கட்சி இரண்டு முதலாளித்துவ கட்சிகள், அவற்றின் ஆதரவாளர்கள் ஆகியோருக்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டைத் தான் கொண்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது. எங்களுடைய தேர்தல் அறிக்கை அறிவிக்கிறது: "சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தின் அடித்தளமே சர்வதேசியம்தான்." இலங்கையில் வாக்குகளை பெறுவதற்கு மட்டும் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் நிற்கவில்லை; மாறாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் தொழிலாளர்கள் ஒரு சோசலிச வேலைத்திட்டம், முன்னோக்கு ஆகியவற்றை ஏற்க வேண்டிய அவசியம் பற்றிய ஒரு விவாதத்தை ஆரம்பிப்பதற்காக இது தேர்தலில் நிற்கிறது. உலகளாவிய மூலதனத்தின் சூறையாடும் நடவடிக்கைகளை எதிர்த்து போரிடுவதற்கு, தொழிலாள வர்க்கத்திற்கு அதனுடைய சர்வதேச மூலோபாயம் தேவைப்படுகிறது: அதாவது, ஒரு சிலரின் இலாபத்திற்கு என்றில்லாமல் பெரும்பான்மையோரின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சோசலிச வழியில் உலகப் பொருளாதாரம் மறு ஒழுங்குசெய்யப்படவேண்டும். சாதாரண மக்களின் அழுத்தம் தரும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் தங்கள் இயலாமையை UNP மற்றும் SLFP இரண்டும் இப்பிரச்சாரத்தின்போது நன்கு நிரூபித்துள்ளன. ராஜபக்சவும், விக்கிரமசிங்கவும் ஒவ்வொருவருக்கும் உறுதிமொழி கொடுக்கும் அபத்தமான தரத்திற்குச் சென்றுள்ளார்கள்; தங்களுடைய திட்டங்கள் சர்வதேச நிதிய அமைப்பினாலும், உலக வங்கியினாலும் ஏற்கப்படமாட்டாதவை என்பதை அவர்கள் நன்கு அறிவர். கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை தன் கட்சி ஏன் நிறைவேற்ற முடியவில்லை என்பது பற்றி இரு வேட்பாளர்களுமே எந்த விளக்கத்தையும் கொடுக்கவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டில் நீண்ட காலமாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போருக்கு இரண்டில் எதுவும் ஒரு தீர்வையும் கொடுக்கவில்லை. அமைதிப் புறாவை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற விளம்பரங்களை வெளியிடுவதின் மூலம் ராஜபக்ச எவரையும் ஏமாற்ற முடியாது. JVP, JHU இரண்டுடனும் அவர் கொண்டுள்ள உடன்பாட்டிற்கு விலையாக, LTTE உடன் இப்பொழுது நிலவும் போர் நிறுத்த உடன்பாட்டை பரிசீலிக்க கோருவதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்; அதேபோல் இப்பொழுதுள்ள உடன்பாட்டின்படி கூட்டாக டிசம்பர் 26 சுனாமி பாதிப்பாளர்களுக்கு உதவலாம் என்பதையும் கிழித்துப்போட தயாராக இருக்கிறார். LTTE க்கு கொடுக்கப்படும் இத்தகைய இறுதி எச்சரிக்கைகள் சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, போருக்கான வழியைத்தான் வகுக்கும். "சமாதான வழிவகைகளை" தான் புதுப்பிப்பேன் என்று அறிவித்த வகையில் விக்கிரமசிங்க பிரச்சாரத்தை தொடக்கினார். ஆனால் கொழும்பு மற்ற முக்கிய சக்திகளின் பெருநிறுவன தலைவர்களுடைய ஆதரவு பெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகள் போருக்கு வகைசெய்த நீண்டகால ஜனாநாயகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முற்படாது. மாறாக அவர்களின் நோக்கம் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆளும் உயர் தட்டுக்களிடையே அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் ஏற்பாடாகத்தான் இருக்கும்; அது பூகோள பொருளாதார வழிவகைகளுடன் தீவின் இணைப்பு ஏற்படும் வகையிலும், தொழிலாள வர்க்கத்தை சுரண்டுதல் இன்னும் தீவிரப்படுத்தும் வகையிலும்தான் இருக்கும். பிரச்சாரம் முடிவிற்கு வரும் தறுவாயில், விக்கிரமசிங்க கூடுதலான வகையில் ராஜபக்ச மற்றும் அவருடைய JVP ஆர்ப்பரிப்போருடைய பேரினவாத பிரச்சார வழிவகைகளைத்தான் எடுத்துக் கொண்டார். மூத்த UNP தலைவர்கள் 2001ல் இருந்து 2004 வரை அரசாங்கத்தை அமைத்திருந்தபோது, LTTE ஐ சமாதானப் பேச்சு வார்த்தைகள் என்ற "பொறிக்குள்" சிக்க வைத்துள்ளதாகவும் அதுதான் அதன் இயக்கத்தில் 2004 தொடக்கத்தில் சேதத்தன்மை நிறைந்த பிளவிற்கு காரணம் என்றும் பகட்டாக பேசுகின்றனர். இத்தகைய தற்புகழ்ச்சிப் பேச்சு, SLFP ஐ போலவே UNP யும் LTTE ஐ தகர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. போர் மூள்வதற்கு காரணமான இரண்டு கட்சிகளும் இந்த வகுப்புவாத அரசியலில் இருந்து தங்களை மீட்டுக்கொள்ள இயலமுடியவில்லை என்பதைத்தான் இது எடுத்துக்காட்டுகிறது. நீண்ட, பொய்யான உறுதிமொழிகள் கொண்ட பட்டியலை சோசலிச சமத்துவ கட்சி வாக்காளர்களுக்கு அளிக்கவிலை. எங்களுடைய வேட்பாளர் விஜே டயஸ் தேர்தல்கள் எதற்கும் தீர்வு காணாது என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்; மேலும் இதைத் தொடர்ந்து அடுத்த ஜனாதிபதி, ராஜபக்சவாயினும், விக்கிரமசிங்கவாயாயினும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றின்மீது நடத்தப்படும் தாக்குதல்களை தீவிரமாக்கத்தான் கட்டாயப்படுத்தப்படுவர் என்றும் கூறினார். தொழிலாள வர்க்கம் தன்னுடைய பிரச்சினைகள தீர்க்க தொடங்குவதற்கு ஒரே வழி அது இந்த முதலாளித்துவக் கட்சிகளில் இருந்து உறுதியாக முறித்துக் கொண்டு தன்னுடைய சொந்த வர்க்க நலன்களுக்கு போராடுவதற்கு சுயாதீனமான அரசியல் போராட்டத்தை தொடுப்பதுதான் என்று சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியுள்ளது. அத்தகைய போராட்டம் இப்பகுதி மற்றும் சர்வதேச அளவில் தொழிலாளர்களிடையே பரிவு உணர்வை தவிர்க்க முடியாமல் ஏற்படுத்துவதுடன், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மற்றும் தீவு முழுவுதும் உள்ள இளைஞர்கள் ஆகியோரிடையேயும் இணக்கமான உணர்வை ஏற்படுத்தும். சோசலிச சமத்துவக் கட்சி, யுத்தத்திற்கு ஒரு வர்க்கத் தீர்வை முன்வைக்கிறது; இதற்கு அடித்தளத்தில் தமிழ், சிங்களத் தொழிலாளர்களின் ஐக்கியம் இருப்பதுடன் அனைத்துவிதமான இனவெறி, வகுப்புவாதம் ஆகியவை நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் உள்ளது. கட்டாயப்படுத்தப்பட்டு தக்கவைக்கப்பட்டுள்ள ஓர் இறைமை நாட்டுக் கருத்தை சோசலிச சமத்துவ கட்சி எதிர்ப்பதுடன் ஸ்ரீலங்கா இராணுவம் வடக்கில் இருந்தும் கிழக்கில் இருந்தும் நிபந்தனையற்ற முறையில் உடனடியாகத் திருப்பப்பெற வேண்டும் என்றும் கோருகிறது. அதே நேரத்தில் LTTE இன் முன்னோக்கான பிரிந்த முதலாளித்துவ சிறுநாடு என்பதையும் சோசலிச சமத்துவ கட்சி நிராகரிக்கிறது; ஏனெனில் அத்தகைய சிறுநாடு தமிழ் மக்கள் சுரண்டப்படுதலை தீவிரப்படுத்தத்தான் செய்யும். உலகம், மற்றும் தெற்கு ஆசிய ஐக்கிய சோசலிச அரசுகளின் பகுதியாக ஸ்ரீலங்கா, ஈழ ஐக்கிய சோசலிச குடியரசை ஏற்றுபடுத்துவதற்கு நாங்கள் போராடுகிறோம். தொழிலாள வர்க்கத்தால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் நிர்ணய சபை ஒன்று புதிய உண்மையான ஜனநாயக அரசியல் அமைப்பை இயற்றுவதற்கு கூட்டப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவ கட்சி வாதிடுகிறது. அது இனம், சாதி, மதம், பால் பிரிவுகளின் அடிப்படையில் இருக்கும் அனைத்து பிரிவினை சட்டங்களையும் அகற்றும்; அடக்குமுறை சட்டங்களான பயங்கரவாத தடுப்புச் சட்டம், நெருக்கடிநிலை அதிகாரங்கள் போன்றவற்றையும் அகற்றும். இலங்கையிலும், இப்பகுதி முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தினருக்கு இத்தகைய சோசலிச, சர்வதேச முன்னோக்கிற்காகப் போராடுவது என்பது மிக அவசரத் தேவையாகிவிட்டது. முதலாளித்துவ அரசாங்கங்கள் என்ன தயாரித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது, இப்பிராந்திய தலைவர்கள் டாக்காவில் கடந்த வாரம் நடத்திய பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டில் நன்கு வெளிப்படுத்தப்பட்டது. இந்தச் செயற்பட்டியலின் முதலிடத்தில், பகுதியின் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு வேண்டும் என்றும் உலக மூலதனத்திற்கு இன்னும் கூடுதலான வகையில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இருந்தது; அத்தகைய வழிவகை தவிர்க்கமுடியாமல், தொழிலாளர்களுடைய சமூக நிலைமையை இன்னும் கீழறுக்கும். இப்பகுதியில் இருக்கும் வறியவர்களுடைய நிலைமை பற்றி சார்க் தலவர்கள் முற்றிலும் பொருட்படுத்தாத தன்மையைத்தான் நிரூபித்தனர்; அதிலும் குறிப்பாக காஷ்மீர் நிலநடுக்கத்தினாலும், சுனாமியினாலும் பாதிக்கப்பட்டவர்களை பற்றி பொருட்படுத்தாத தன்மை உள்ளது. சுனாமிப் பேரழிவு நடந்து 11 மாதங்கள் ஆகியும் பல்லாயிரக்கணக்காக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சிதைவுற்ற வாழ்வை செப்பனிட்டுக்கொள்ள தக்க உதவியை இன்னும் பெறவில்லை. மாநாட்டில் பயங்கரவாதத்தின்மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்பதில் ஒற்றுமை ஏற்பட்டது முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இதன் பொருள் மறைமுகமான வகையில் ஈராக்கில் அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் என்று மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நாட்டிலும் அரச கருவியை வலுப்படுத்துவதற்கும் உதவும் -- "பயங்கரவாதிகளுக்கு" எதிராக என்று மட்டும் இல்லாமல், பொருளாதாரச் சீரமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சாதாரண மக்கள் மீது கூட தாக்குதல்களை அதிகரிக்க அது பயன்படும். சாதாரண மக்களுடைய உணர்வுகளுக்கு ஆளும் வர்கம் காட்டும் இழிவுணர்வு இலங்கை தேர்தலிலும் நன்கு புலனாகிறது. LTTE கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நூறாயிரக்கணக்கான தமிழர்கள், அனைத்து கட்சிகளுடைய ஆதரவும் பெற்ற, தலைமை நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றால் சுமத்தப்பட்ட பெரும் தடைகள், தங்கள் வாக்குகளை பதிவுசெய்வதற்கு கூட எதிர்கொள்ள நேரிடும். மத்திய கிழக்கில் இருக்கும் 1.5 மில்லியன் இலங்கை குடிமக்கள், பெரும்பாலும் கிராமப்புற வறிய மகளிர் முற்றிலும் வாக்கிழந்து நிற்கின்றனர்; இதற்குக் காரணம் அவர்கள் வாக்களிப்பதற்கு எவ்வித அமைப்பு முறையும் ஏற்படுத்தப்படவில்லை. இதைத்தவிர, அரசியல் காரணங்களுக்காக ஏராளமான வாக்காளர்களுடைய பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக பரந்த வகையில் அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிறவு மந்திரி லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளின் உடன்பாட்டுடன் அறிவிக்கப்பட்ட, ஒரு அவசரகால நிலை சுமத்தப்பட்டுள்ள நேரத்தில் கிட்டத்தட்ட முழு தேர்தல் பிரச்சாரங்களும் நிகழ்ந்துள்ளன. இன்று 95.000 போலீசார் தெருக்களிலும், 100,000 இராணுவத்தினர் தயார்நிலையிலும் இருக்கும் நேரத்திலும் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முக்கிய அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் குழுக்களை தோற்றுவித்து வேண்டுமேன்றே போட்டியாளர்களிடையே ஆத்திரமூட்டல்களை ஏற்படுத்துவதன் மூலம் பூசல்களை ஏற்படுத்தும் வலிமை பெற்றவை; அதையொட்டி வாக்குப்பதிவு தடைக்குள்ளாகலாம். ஊரடங்கு உத்தரவை சுமத்தும் அதிகாரம் போலீசாருக்கு உண்டு; இது சாதாரண மக்களை காப்பாற்றுவதை விட தீய சக்திகளின் செயற்பாடுகளுக்கு திரையிட நன்கு உதவும் என்பதை அனைத்து மக்களும் கசப்பான அனுபவங்களின் மூலம் நன்கு அறிந்துள்ளனர். இச் சூழ்நிலையில் "ஜனநாயக" முறையில் தேர்தல்கள் என்று கூறுவது ஒரு மோசடியாகும். முதலாளித்துவ அமைப்பின் அரசியல் பிரதிநிதிகள், அவர்கள் தோற்றுவித்துள்ள பேரழிவுகள் இவற்றிற்கெதிராக கொள்கையுடன் கூடிய நிலைப்பாட்டை எடுக்குமாறு வாக்காளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்; இதற்காக சோசலிசத் தீர்வை முன்வைத்துள்ள விஜே டயசிற்கும் சோசலிச சமத்துவக் கட்சிக்கும் வாக்களிக்குமாறு கோருகின்றோம். டயஸ், கொள்கை கோட்பாட்டுடன் கூடிய சர்வதேச சோசலிசத்திற்காக போராடிய சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான, 1968ல் தோற்றுவிக்கப்பட்ட புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தினுடைய ஸ்தாபக உறுப்பினர் ஆவார். இவர் உலக சோசலிச வலைத் தளததின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினரும், சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஆவார்; கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என ஆளும் வர்க்கம் தயாரித்துக் கொண்டிருக்கும்போது, தொழிலாளள வர்க்கமும் தன்னுடைய முன்னோக்கை அமைத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள், தொழிலாளர்கள், இல்லத்துணைவியர், வேலையின்மையில் வாடுபவர், சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர், அறிவுஜீவிகள் என விஜே டயசின் உரையை கூட்டங்களின் மூலமோ ஊடகங்களின் மூலமோ கேட்டவர்கள் அனைவரையும் உலக சோசலிச வலைத் தளத்தின் தொடர்ந்த வாசகர்களாக ஆகுமாறு சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக் கொள்ளுவதுடன், எங்கள் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் கவனமான முறையில் படித்து, கட்சியில் சேரவும் அதனை தொழிலாள வர்க்கத்தின் புதிய பரந்த கட்சியாக கட்டி எழுப்பவும் முடிவெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம். |