World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US auto workers union launches sham "war" against Delphi

டெல்பிக்கு எதிராக அமெரிக்க மோட்டார் தொழிலாளர்கள் சங்கம் போலிப் "போரை" தொடக்குகிறது

By Jerry Isaacs
10 November 2005

Back to screen version

டெல்பி கார்ப்பரேஷன் மற்றும் United Auto Workers என்னும் தங்களுடைய தொழிற்சங்கத்திற்கே எதிராக அனைத்து தொழிலாளர்களினதும் அதிகரித்துவரும் சீற்றத்தையடுத்து, UAW அதிகாரத்துவம், பெரும் மோட்டார் விநியோக தொழிற்சாலையில் சட்டப்படி வேலை செய்யவும் என்று குறைவான கதியில் வேலைசெய்யுமாறு அழைப்புவிடுத்துள்ளது. கடந்த மாதம் திவால் என்று அறிவித்த டெல்பி, 33,000 தொழிற்சங்க உறுப்பினர்களுடைய ஊதியத்தில் 60 சதவிகித குறைப்பை சுமத்தவும் மற்ற நலன்கள், பணி வசதிகள் இவற்றைக் குறைக்கவும் முயற்சி செய்து வருகிறது.

UAW சர்வேதேச தலைவர் Ronald Gettelfinger சட்டப்படி வேலைசெய்யவும் என்ற தந்திரோபாயத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக நவம்பர் 7, திங்கள் அன்று தொழிற்சங்கத் தலைவர் உறுதிப்படுத்தினார்; அதில் தொழிற்சங்க ஒப்பந்த விதியில் விவரித்துக் கூறப்பட்டுள்ள கடமைகளை தவிர வேறு ஏதும் செய்ய வேண்டாம் என்று தொழிலாளர்களுக்கான அழைப்புவிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் வறுமை ஊதியமான மணிக்கு $9.00ஐ ஏற்றுக்கொள்ளுமாறும் மற்றும் சலுகைகளை விட்டுக்கொடுக்குமாறும் நிறுவனம் கோரியுள்ளதாக உள்ளூர் தொழிற்சங்கம் ஒன்று இரகசியமாக வேளியிட்டபின்னர், UAW அதிகாரத்துவம் மேலெழுந்தவாரியான எதிர்ப்பு தெரிவித்ததை தவிர, கிட்டத்தட்ட மெளனமாகவே இருந்துவிட்டது. இதனால் தொழிலாளர்கள் பரந்த முறையில் UAW ஐ கண்டனத்திற்கு உட்படுத்த தூண்டி இருப்பதோடு, வேலைநிறுத்தம், மெதுவாக பணி செய்தல் போன்ற உணர்வுகளையும் நியூயோர்க் லோக்போர்ட்டில் இருக்கும் ஆலையின் தொழிலாளர்களிடத்தே தோற்றுவித்துள்ளது; இந்த ஆலை டெல்பியின் பெரிய ஆலைகளுள் ஒன்றாகும்.

குறைந்த வேலை நடவடிக்கைக்கான அழைப்பை தொடர்ந்து, டெல்பி தொழிலாளர்களின் பிரதிநிதிகளாக உள்ள UAW மற்றும் ஐந்து தொழிற்சங்கங்கள் அனைத்தும் டெல்பி தொழிலாளர்களின் நலன்களை காக்க Mobilizing@Delphi என்ற கூட்டணி அமைத்துள்ளதாகவும் அறிக்கை விடுத்தனர். AFL-CIO பல முறையும் ''பெருநிறுவன பிரச்சார'' மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்தி தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுப்பது போன்ற வகையில், இந்தக் கூட்டணியும் பிரச்சாரத்தை நடத்தவிருக்கிறது. திவால் நீதிமனறத்தின் மூலம் உடன்பாடு ஒன்றை சுமத்துவதற்கு மாறாக டெல்பியின் பெருநிறுவன வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளுக்கு முறையிட்டு நிறுவனத்தை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு இது அழுத்தம் கொடுக்கும்.

இந்தப் புதிய கூட்டணி, மற்றும் விதிமுறைகளுக்கேற்ப வேலை செய்வது உழைப்பிற்கு Gettelfinger கொடுத்துள்ள ஒப்புதல் இரண்டுமே முக்கிய எதிர்தாக்குதல் நடவடிக்கைகளாக செய்தி ஊடகத்தில் வெளிவந்துள்ளன; Detriot Free Press "தொழிற்சங்கங்கள் டெல்பியின் மீது போர் தொடுக்கின்றன" என்ற தலைப்பில் அதன் கட்டுரையை எழுதியது.

இதைவிட உண்மையில் இருந்து பிறழ்ந்தது ஏதும் இல்லை எனக்கூறலாம்.

Wall Street, அமெரிக்க திவால் நீதிமன்றம், புஷ் நிர்வாகம் ஆகியவற்றின் ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனங்களில் ஒன்றை, மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்சங்க உள்ளிருப்புப் போராட்டத்தினாலும் விளம்பர உத்தியினாலும் எதிர்க்கலாம் என்பது அபத்தமானது மட்டும் அல்லாமல், டெல்பி தொழிலாளர்களின் புத்திஜீவித்தனத்திற்கு ஒரு அவமதிப்புமாகும்.

மேலும் இத்தகைய சட்டத்தின்படி பணிபுரிதல் என்னும் பயனற்ற தந்திரோபாயங்கள் நிர்வாகத்தின் பிடியில் அகப்படும் வகையில்தான் பலமுறையும் முடிந்துள்ளன; ஏனெனில் நிர்வாகம் போர்க்குணமிக்க தொழிலாளர்களை தண்டனைக்குட்படுத்தும் வகையில் இவற்றை பயன்படுத்தியுள்ளனர். 1992ம் ஆண்டு Caterpillar தொழிற்சாலை நிர்வாகத்திற்கு கோழைத்தனமான முறையில் சரணடைந்தபின்னர், UAW அதன் 12,000 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை ஆலைகளுக்கு மீண்டும் சென்று "உள்ளிருப்பு" மெதுவாக வேலைசெய்யும் உத்தியில் ஈடுபடச்செய்தது. இதன் விளைவு நூற்றுக்கணக்கான போர்க்குணமிக்க தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதுதான். டெல்பியின் தலைமை நிர்வாகி Robert "Steve" Miller ஏற்கனவே எங்கு தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கிறார்களோ, அங்கு ஆலை மூடப்படும் என்று உத்தரவாதமளித்துள்ள நிலைமையில் டெல்பி தொழிலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் இன்னும் அதிகமாகத்தான் உள்ளது.

டெல்பியின் 33,000 தொழிலாளர்களும் வேலைநிறுத்தம் செய்து, நிறுவனத்தின் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டு, டெல்பி மோட்டார் தொழிலாளர்களின் வாழ்க்கத்தரம், பணி நிலைமைகள் ஆகியவற்றை தாக்குவதற்கு ஆதரவு தரும் மூன்று பெரிய மோட்டார் நிறுவனங்களிலும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் விரிவாக்கம் செய்யப்படுவதுதான் ஒரு தீவிரமான போராட்டத்திற்கு ஆக்குறைந்த தேவையாகும். அத்தகைய நடவடிக்கைக்கு திவால் நீதிமன்றம், மற்றும் இரு பெரு வணிகக் கட்சிகள் இவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டத்தின் தேவையை முன்வைப்பதுடன், அத்துடன் மோட்டார் தொழிற்துறை தேசியமயமாக்கப்படும் கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.

அத்தகைய போராட்டத்தை UAW அதிகாரத்துவம் எதிர்க்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்க அதிகாரத்துவம் அமெரிக்க கார் நிறுவனங்கள் போட்டியிலும், இலாபத்திலும் உயர்வதற்காக கார் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத்தரத்தைத் தகர்ப்பதற்கும் வேலைகளை அழிப்பதற்கும் மூன்று பெரிய கார் உற்பத்தி தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு கொடுத்து வந்துள்ளது. கார் பாகங்கள் தொழிலில் இது மிகத் தெளிவான வெளிப்பாட்டை கண்டுள்ளது; இங்கு UAW 1980களில் பல தொடர் வேலைநிறுத்தங்களை காட்டிக் கொடுத்து, ஊதியங்களில் மிக அதிக குறைப்புக்களை அனுமதிக்க விட்டது; அங்கு உள்ள தொழிலாளர்கள் ஏனைய மூன்று பெரிய பாக இணைப்பு ஆலைகளில் இருக்கும் தொழிலாளர்களைவிட 30 சதவிகிதம் குறைந்த ஊதியமே வாங்கினர். இதன்பின்னர் தொழிற்சங்கம் GM மற்றும் Ford பாகங்கள் பிரிவுகளில் 1999, 2000 ஆண்டுகளில் முன்மாதிரியாக விளங்கி, இப்பொழுது டெல்பியினால் கோரப்படும் தொழிலாளர் செலவினங்களில் தீவிரக் குறைப்பிற்கு அப்பொழுதே வழிவகுத்தது.

டெல்பித் தொழிலாளர்களின் ஊதியங்களையும், வாழ்க்கைத் தரத்தையும் குறைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தல் என்பதற்கு முற்றலும் மாறாக UAW அதிகாரத்துவம் இதை ஆதரிக்கிறது. இதற்குக் காரணம் GM செலவினங்களை குறைக்க வகைசெய்து அதன் ஐரோப்பிய, ஆசிய வாகன உற்பத்தியாளர்களுடன் போட்டி இடக்கூடியதாக செய்வதாகும்.

ஆனால், UAW வைப் பொறுத்தவரையில், இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. முதலில், டெல்பயின் தலைமை நிர்வாக அதிகாரி UAW உறுப்பினர்களின் வாழ்க்கைத் தரம், பணிநிலைமை இவற்றை ஆக்கிரோஷமாக அழிக்க முற்பட்டுள்ளது மட்டும் இல்லாமல், UAW அதிகாரத்துவத்திற்கு பதவிகளும் சலுகைகளும் கொடுக்கும் கூட்டுறவுவாத தொழிலாளர்-நிர்வாக (corporatist labor-management) கட்டமைப்பையும் தகர்க்க விரும்புகிறார். ஒவ்வொரு ஆலையிலும் தொழிற்சங்க அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்பது டெல்பியின் கோரிக்கைகளில் ஒன்றாகும்; அது நிர்வாக-தொழிலாளர் திட்டங்களான தரம் பாதுகாப்புக் குழுக்கள், தொழிலாளர் மறுபயிற்சி, தொழிலாளர் உதவித் திட்டங்கள் ஆகியவற்றை கூட்டாக மேற்பார்வையிடும் UAW அதிகாரத்துவம் அகற்றப்பட்டாலும், இது கட்டாயம் தேவை என்று அவர் விரும்புகிறார்.

டெல்பி நிர்வாகமும், திவால் நீதிமன்றமும் தொழிற்சங்கத்தைப் பொருட்படுத்தாமல் இந்த அமைப்புக்களை அழித்துவிடக் கூடும் என்பதுதான் தொழிற்சங்க அதிகாரத்துவத்துற்கு வந்துள்ள ஆபத்தாகும். Mobilizing@Delphi வெளியிட்டுள்ள கூட்டறிக்கை தன்னுடைய உறுப்பினர்கள் மேல் சுமைகளை சுமத்துவதற்கு தாங்கள் உடன்படுவதாகக் கூறியுள்ளது; ஆனால், தான் நிர்வாகத்துடன் இதற்காக ஒத்துழைக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று அது கூறியுள்ளது. "புதிய, திறமையான, நியாயமான அணுகுமுறைகள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வளர்க்கப்பட வேண்டும் என்பதற்கு நாங்கள் பலமுறையும் ஆர்வத்தையும், திறமையையும் எங்கள் சங்கம் நிரூபித்துள்ளது." என்று அது கூறியுள்ளது.

நீதிமன்றம் டெல்பி தொழிலாளர்கள் மீது சுமையை அதிகரிப்பதையும் விட, UAW அதிகாரத்துவம் எதிர்கொள்ளும் இரண்டாம் பிரச்சினை நிர்வாகத்தின் கோரிக்கைகள் உறுப்பினர்களிடையே கொண்டுவருதல் என்பது முடியாத செயலாகும்; சங்கத் தலைமை அவ்வாறு செய்தால் "நையப்புடைக்கப்படும்" என்று ஒரு கார் தொழிற்துறை ஆய்வாளர் அண்மையில் தெரிவித்துள்ளார்.

டெல்பி நிர்வாகத்துடன் தொழிலாளர்-நிர்வாக அமைப்புக்களை காத்து, நிர்வாகத்தின் பல பிழையான கோரிக்கைகளை மாற்றுவதற்கு உடன்பாடு பெறும் வகையில் தனக்கு வழிவகை ஏற்படலாம் என்ற ஏமாற்றுமிக்க கருத்தில்தான் UAW இத்தகைய விதிக்கேற்ப வேலைசெய்தல் என்ற அவநம்பிக்கை மிகுந்த தந்திரோபாயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி அதிகாரத்துவம் உடன்பாட்டை பற்றி இணக்கமாக தொழிலாளர்களுடன் முடிவு செய்துவிடலாம் என்று கருதுகிறது. அதேநேரத்தில், UAWவும் மற்ற சங்கங்களும் தங்களுடைய உறுப்பினர்களிடையே நம்பகத்தன்மையையும் பெறலாம் என்று நினைக்கின்றன.

தொழில்ரீதியான தொழிற்சங்க விட்டோடிகளாலும், Labour Notes மற்றும் மத்தியதர தீவிரவாத குழுக்களில் உள்ள அவர்களின் "இடது ஆதரவாளர்களாலும் "அனைத்து மட்ட டெல்பி தொழிலாளர்கள்" தொடர் கூட்டங்களுக்கு அழைப்புவிடுத்தள்ளது தொடர்பாகவும் இந்த UAW அறிவிப்பு கவனம் செலுத்துகிறது. அவ்வாறான கூட்டம் ஒன்றிற்கு UAW கிளை 2151 டெல்பி நிர்வாக குழு உறுப்பினரும் UAW அதிகாரத்துவத்தின் புதிய வழிகாட்டு நெறிகள் பிரிவிற்கு ஆதரவாளருமான Gregg Shotwell அத்தகைய முதல் கூட்டத்திற்கு, மிச்சிகனில் உள்ள காம்ஸ்டக் பார்க்கில், கடந்த ஞாயிறு நவம்பர் 6 ஏற்பாடு செய்திருந்தார்.

இக்கூட்டத்திற்கு கிட்டத்தட்ட 200 தொழிலாளர்கள், டெல்பி, GM, Ford நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மிச்சிகன், ஒகாயோ, இல்லிநோய்ஸ், இந்தியானா மற்றும் நியூயோர்க்கில் இருந்து வந்திருந்தனர். Shotwellலும் அவருடைய ஆதரவாளர்களும் உலக சோசலிச வலைத் தளத்தை கூட்டத்தில் கலந்துகொள்ளுவதை அகற்றும் முறையில் சுயாதீனமான, சோசலிச அரசியல் மூலோபாயம் பற்றிய விவாதத்தையும் எதிர்த்தனர். இந்த முயற்சி தோல்வியுற்றது; ஏனெனில் பெரும்பாலான தொழிலாளர்கள் WSWS நிருபர்கள் கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்க வேண்டும் என்று வாக்களித்தனர்.

ஆனால் கூட்டம் முழுவதிலும் Shotwell லும் அவருடைய ஆதரவாளர்களும் டெல்பி தொழிலாளர்களின் சீற்றத்தை UAW அதிகாரத்துவம் ஏற்கும் வடிவமைப்பிற்குள் செலுத்திவிட முயன்றனர். சட்டத்திற்கேற்ப வேலைபுரிதல்தான் அனைத்தையும் தீர்க்கும் என்று அவர்கள் பலமுறையும் கூறினர்; இந்த தந்திரோபாயம் எப்படி Caterpillear வேலைநிறுத்தத்தின்போது "வெற்றிகரமாக இருந்தது" என்பதை விளக்குவதற்கு முன்னாள் UAW அதிகாரத்துவ அலுவலர்களையும் பேச அழைத்தனர்.

தொழிலாளர்கள் வேலை குறைவாகச் செய்தால் "உறுப்பினர்கள் சேர்த்தல்" மற்றும் தீவிரப் போராட்டம் நடத்த தொழிற்சங்க அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்ற தவறான முன்னோக்கை UAW விட்டோடிகள் பிரிவினர் முன்வைத்தனர். UAW தங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்ற நம்பிக்கையை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்ட அனைத்து தொழிலாளர்களுடைய நலன்களை பிரதிபலிப்பதற்கு முற்றிலும் மாறாக, Shotwellலும் மற்றவர்களும் UAW அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவின் சார்பில் தொழிற்சங்கம் உயிர்வாழும் என்ற அவநம்பிக்கையை வளர்க்கத்தான் முற்பட்டனர். இப்பொழுது UAW International, அதன் விட்டோடிகளின் "சட்டத்தின்படி பணி புரியவும்" என்ற அழைப்பை ஒரு திசை திருப்பும் தந்திரோபாயமாக கொண்டு டெல்பி தொழிலாளர்களை காட்டிக் கொடுப்பதற்கான தனது முயற்சியை மறைப்பதற்கு ஏற்றுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved