World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

SEP presidential candidate from Sri Lanka addresses Madras meeting

இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் சென்னை கூட்டத்தில் உரையாற்றினார்

By a correspondent
9 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

கூட்டம் நடத்தப்படுவதை தடுப்பதற்கு கணிசமான முயற்சிகள் இருந்தபோதிலும்கூட, நவம்பர் 17ம் தேதி நடக்க இருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) வேட்பாளரான விஜே டயஸ், கடந்த ஞாயிறன்று, தென்னிந்திய மாநிலமான தமிழ் நாடு, சென்னையில், தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், இல்லத்துணைவியர் நிறைந்திருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், டயஸ் மற்றும் WSWS சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினரும், ஆஸ்திரேலிய SEP உறுப்பினருமான பீட்டர் சைமன்ட் இருவராலும் முன்வைக்கப்பட்ட சர்வதேச முன்னோக்கு பற்றிப் பெரும் ஆர்வத்தைக் காட்டினர்.

தலைவர் பேச்சாளர்களை அறிமுகப்படுத்துகையில், கூட்டம், நாடெங்கிலும் அரசியல் நடவடிக்கைகளை கண்காணிக்கும் போலீசாரின் விசாரணைத் துறையால் நெருங்கிய கவனத்திற்கு உட்பட்டிருந்தது என்று விளக்கினார். சனிக்கிழமை பிற்பகல், விளம்பரப்படுத்தப்பட்டிருந்த அரங்கின் நிர்வாகிகள், தீயானது அரங்கின் மின்வசதி முறையை பாதிப்பிற்கு ஆளாக்கிவிட்டதால், கூட்டம் நடத்துவதற்கில்லை என திடீரென கூறிவிட்டனர். இந்தக் கூற்று தவறானது என்று விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இடத்தின் சொந்தக்காரர் முன்னரே செய்யப்பட்ட பதிவை மதிக்கவோ, பதிவை இரத்துசெய்ததற்கு விளக்கம் கொடுக்கவோ மறுத்துவிட்டார். கடைசி நிமிடத்தில் வேறு அரங்கம் ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அரங்கின் உரிமையாளர் மீது, இத்தகைய அழுத்தம் SEP யை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் அல்லது போலீசாரால் கொண்டுவரப்பட்டது என்பதை சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் (LTTE) தமிழ்நாட்டில் வாழும் இலங்கையின் வடபுலத்தில் இருந்து வந்த அகதிகளுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது; இம்மாநிலத்தில் உள்ள சில கட்சிகளால் ஆதரிக்கவும்படுகிறது. கூட்டத்திற்கான பிரச்சாரம், மாணவர்கள், தமிழ் புலம் பெயர்ந்தோர் மற்றும் தொழிலாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி என்று மூன்று செய்தித்தாட்களில், LTTE இன் வகுப்புவாத, பிரிவினைவாத கொள்கைகளுக்கு SEP ஒரு சோசலிச மாற்றீட்டை முன்வைத்துள்ளது பற்றி விளக்கிக் காட்டும் செய்திகள் வந்திருந்தன.

கூட்டத்திற்கு முன், தமிழில், 15,000 துண்டுப் பிரசுரங்கள், SEP இன் தேர்தல் அறிக்கை மற்றும் டயசின் பல அறிக்கைகளின் தொகுப்பாக வினியோகிக்கப்பட்டிருந்தன. பிரச்சாரக் குழுக்கள் மாணவர்களுடன் பல விடுதிகளின் விவாதங்களை நடத்தியிருந்தனர்; சோசலிசம் பற்றியும் பல ஸ்ராலினிச கட்சிகளின் பங்கு பற்றியும் விவாதிக்கப்பட்டிருந்தன. சென்னை நகரத்திற்கு வெளியே புழல், கும்மிடிப்பூண்டி என்னும் இடங்களில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமிலும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டிருந்தன; இந்த இடங்களில் குறிப்பாக 1983 வகுப்புவாத இனப்படுகொலைகளுக்கு பின்னர் பல தமிழர்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் போர் ஏற்பட்ட பின்னர் தப்பி ஓடி வந்து தங்கியுள்ளனர். தொழிலாளர்கள், மாணவர்கள் இடையே இருக்கும் அரசியல் கட்சிகள் பற்றி பரந்த முறையில் வெறுப்புணர்வு இருப்பதுடன் அனைத்து பின்னணியிலும் இருக்கும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் SEP முன்னோக்கு பற்றித் தீவிர ஆர்வமும் உள்ளது.

கூட்டத்தில் உரையாற்றிய பீட்டர் சைமண்ட் ஆரம்பத்தில் கூறியதாவது: "பாராளுமன்றம், தேர்தல்கள் என்ற முப்பட்டைக் கண்ணாடி வழியாக அரசியலை பார்ப்பவர்களுக்கு இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருப்பவர் சென்னையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுவது வினோதமாகவும், ஏன் அபத்தமாகவும் கூட தோன்றலாம். இங்கு இருப்பவர்களில் ஒரு சிலர்கூட அவருக்கு வாக்களிக்க முடியாது. இன்னும் விந்தையான விஷயம் அவர் ஓர் ஆஸ்திரேலிய குடிமகனுடன் சேர்ந்து உரையாற்றுகின்றார் என்பதாகும்."

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவை (ICFI) பொறுத்தவரையில் இது ஒன்றும் வினோதமானது அல்ல. நாங்கள் ஒரு உலக கட்சியாக செயல்படுகிறோம்; ஏனெனில் எங்களுடைய அடிப்படை சர்வதேச முன்னோக்கு, வேலைதிட்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது. சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டுள்ள மகத்தான சமூக, அரசியல் பிரச்சினைகள் எதுவும் தேசிய அரச எல்லைக்குள் தீர்க்கப்பட முடியாதவை என்று நாங்கள் வற்புறுத்தி வலியுறுத்தி வருகிறோம் --- அந்த அரசு மிகச் சிறியதாக இருந்தாலும் சரி, மிகப் பெரிய அரசாக இருந்தாலும் சரி."

இன்றைய உலக அரசியலில் மிகவும் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தும் காரணி அமெரிக்க இராணுவ வாதத்தின் வெடிப்பு ஆகும்; எல்லாவற்றிற்கும் மேலாக சட்ட விரோதமாக ஈராக்கின் மீது படையெடுப்பதும் அடிமைப்படுத்துவதுமாகும் என்று சைமன்ட் விளக்கினார். ஈராக்கிற்கு ஜனநாயகத்தையும் அமைதியையும் அமெரிக்காவும் அதன் கூட்டணிகளும் கொண்டுவரும் என்ற கூற்றுக்கள் உள்பட போர் தொடக்கப்படுவதற்காக கூறப்பட்ட அனைத்து பொய்களும் மிகத் தெளிவாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. அந்நாடு ஒரு புதைசேற்றில் ஆழ்ந்துள்ளது; குறைந்தது 100,000 ஈராக்கியர்கள் மடிந்துள்ளனர்; நாட்டின் உள் கட்டுமானம் சிதைந்து விட்டது; வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடுகின்றன.

"அமெரிக்கப் படையெடுப்பின் இலக்கு பாக்தாத்தில் இருக்கும் ஹுசைன் ஆட்சி என்றில்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள போட்டியாளர்கள்தாம்; படையெடுப்பிற்கு முன் அவை ஐக்கிய நாடு பொருளாதாரத் தடைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் தங்கள் நலன்களை ஈராக்கில் முன்னேற்றிக் கொள்ளவும் விரும்பின. கடந்த பதினைந்து ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, பனிப்போர் முடிவு ஆகியவற்றிற்குப் பின், தன்னுடைய எஞ்சியிருக்கும் இராணுவ வலிமையைக் கொண்டு உலகம் முழுவதிலும், தன்னுடைய போட்டியாளர்களின் இழப்பில், தன்னுடைய தடையற்ற மேலாதிக்கத்தை நிறுவும் வகையில், சுரண்ட வேண்டும் என்றுதான் வாஷிங்டன் முயன்றுள்ளது."

அமெரிக்க ஆளும்வர்க்கத்தின் பெரும் கொள்ளையடிக்கும் பிரிவுகளை புஷ் நிர்வாகம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும், முக்கியமான தந்திரோபாய வேறுபாடுகள் இருந்தபோதிலும், இந்த மூலோபாயம் முழு அரசியல் ஸ்தாபனங்களாலும் ஏற்கப்பட்ட ஒன்று என்று பேச்சாளர் விளக்கினார். அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பு சோவியத் ஒன்றியம் 1991ல் வீழ்ச்சியடைந்த பின் அனைத்துலகக் குழு செய்திருந்த பகுப்பாய்வை உறுதிப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். இது ஒன்றும் சோசலிசத்தின் முடிவை பிரதிநிதித்துவப்படுத்துவது அல்ல என்றும் இது ஸ்ராலினிசம், அதன் வேலைத்திட்டமான தேசியப் பொருளாதார நெறிப்படுத்துதலின் வீழ்ச்சியாகும். இது ஒன்றும் முதலாளித்துவத்தின் பொற்காலத்தை கொண்டுவந்துவிடவில்லை என்றும் போர், சமூக சமத்துவமின்மை, அடிப்படை ஜனநாயக உரிமைகள் அழிப்பு என்ற சரிவுகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானத்திலும், ஈராக்கிலும் பொறுப்பற்ற முறையில் வாஷிங்டன் மேற்கொண்டுள்ள இராணுவச் செயற்பாடுகள் வலிமையின் அடையாளம் இல்லை என்றும் அவை வலுவற்ற தன்மையைத்தான் காட்டுகின்றன என்றும் சைமன்ட் குறிப்பிட்டார். இன்று உலகிலேயே மிகப் பெரிய கடனாளி நாடாக அமெரிக்கா உள்ளது என்றும் அதன் சமூக பதட்டங்களால் அழிவுக்குள்ளாகியுள்ளது என்றும் அவர் கூறினார். புஷ் நிர்வாகம் ஒரு நெருக்கடியில் இருந்து மற்றொன்றிற்கு ஆழ்ந்து செல்கிறது; கடைசியாக வந்துள்ள நெருக்கடி துணை ஜனாதிபதியின் தலைமை அலுவலர் லூயிஸ் லிப்பியின் மீது வந்துள்ள குற்ற விசாரணையாகும்; இந்தக் குற்றச் சாட்டுக்கள் ஈராக் போரை நியாயப்படுத்த கூறப்பட்ட பொய்களுடன் நேரடியாக தொடர்பு உடையவை. அமெரிக்காவில் பணக்காரர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே உள்ள ஆழ்ந்த பிளவு பற்றிய விளக்கங்களும், குறிப்புக்களும் பேச்சாளரால் கொடுக்கப்பட்டன.

"சுதந்திர சந்தை நடவடிக்கைகள் ஒவ்வொருவரும் பணக்காரராகவும், பெரும் வசதிகளையும் கொண்டுள்ளதான சமூகத்தை உருவாக்கியுள்ளது என்று கவனமாக புனையப்பட்ட கட்டுக்கதையை கத்தரினா சூறாவளி கிழித்தெறிந்துவிட்டது. கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கையும் அவசரகால சேவைகள் உள்பட சமூகப் பணிகளை அழித்தலாக இருந்தன என்பதும் தெரியவரும். அமெரிக்க அதிகாரிகளுக்கு தெற்கு ஆசிய அரசாங்கங்களில் உள்ள அவர்களின் இணை அதிகாரிகளைவிட டிசம்பர் 26 சுனாமி பற்றி அதிகமான எச்சரிக்கைகளை பெற்றிருந்தபோதிலும், அவர்கள் அதற்குக் கொடுத்த விடையிறுப்பு அதேபோல் போதுமானதாக இல்லாமலும், ஏழைகள் பற்றி அதேபோல் இகழ்வுடனும் இருந்தது.

புஷ் நிர்வாகம் ஆழ்ந்த அரசியல் நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில் புதிய இராணுவ தீரச் செயல்களை மேற்கொள்ளும் என்று முடிவுரையாக சைமன்ட் எச்சரிக்கை விடுத்தார். "தொழிலாளர்கள் முதலாளித்துவ கட்சிகள் எதிலும் நம்பிக்கை வைக்க முடியது; அவர்களுக்கு வால்பிடிக்கும் ஸ்ராலினிச கட்சிகள், இதர மத்தியதர தீவிரப்போக்கினரையும் நம்புவதற்கு இல்லை. போரை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கும் போக்கை தடுத்து நிறுத்தக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒன்றுதான். ஏகாதிபத்தியம் மற்றும் பூகோள மூலதனத்தின் சூறையாடும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த ஒரு பூகோள எதிர்த்தாக்குதலை அபிவிருத்தி செய்யும் முயற்சியில் ICFI ஈடுபட்டுள்ளது."

உழைக்கும் மக்களின் சமூகத் தேவைகள், ஜனநாயக அபிலாசைகள் ஆகியவற்றிற்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக இலங்கை முதலாளித்துவம் தீர்க்க முடியாமல் தோல்வியுற்றது பற்றி மீளாய்வு செய்யும் வகையில் விஜே டயஸ் தன்னுடைய உரையைத் ஆரம்பித்தார்; செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே பெருகி வரும் இடைவெளி பற்றிச் சுட்டிக்காட்டும் வகையில் ஏராளமான புள்ளி விவரங்களையும் மேற்கோளிட்டார். இரண்டு முக்கிய கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இரண்டும் போரை நிறுத்துவதில் தோல்வியுற்றதுதான் மையப் பிரச்சினை என்று அவர் விளக்கினார்.

"கொழும்பு அரசாங்கத்திற்கும் LTTE க்கும் இடையே பெப்ரவரி 2002 லேயே போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போதிலும்கூட, போர் அச்சுறுத்தல் இன்னும் குறைந்தபாடில்லை. தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை கொடுப்பதற்கு சமாதான முன்னெடுப்பு என்றழைக்கப்படுவது முன்னெடுக்கப்படவில்லை; மாறாக LTTE உடன் அதிகார பகிர்வு பேரத்தை உருவாக்கிக்கொண்டு தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை உள்ளூர், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு திறப்பதற்காகும் என்று அவர் கூறினார். சிங்கள பேரினவாதத்தில் SLFP, UNP இரண்டுமே சிக்குண்டுள்ளதால், சமாதான முன்னெடுப்புகள் தடைப்பட்டுள்ளன என்றும் அவர் விளக்கினார். UNP வேட்பாளரான ரனில் விக்கிரமசிங்க சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு திரும்பவேண்டும் என்று வாதிட்டாலும், அவரும் அவருடைய பூர்ஷ்சுவா எதிர்ப்பாளர் SLFP வேட்பாளர் மகிந்த ராஜபக்சவை போலவே, தமிழ் பெரும்பான்மையினரின் ஜனநாயக உரிமைகளுக்கு எந்தச் சலுகைகளும் கொடுப்பதற்கு திறனற்று உள்ளார்.

இலங்கைத் தீவின் அரசிற்கு மட்டும் அரசியல், சமூக நெருக்கடி தனிச்சிறப்பானதாக இல்லை என்றும்; தெற்கு ஆசியா முழுவதும் உழைக்கும் மக்கள் எதிர்கொள்வது போல் இவை உள்ளது என்று டயஸ் கூறினார். "முதலீட்டுக் குறைப்பு வேலைதிட்டத்தின் கீழ் வேலைகள் தகர்க்கப்படுதல், நலன்புரி செலவின வெட்டுக்கள், இளைஞர்களிடையே வேலையின்மை அதிகரிப்பு, வாழ்வுத் தேவைகளுக்காக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஏழை விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் மானியத் தொகைகள் குறைப்பு இவையனைத்தும் துணைக் கண்டம் முழுவதும் பொதுவாக உள்ளன என்றும் இப்பிராந்தியத்தில் இதர முந்தைய காலனித்துவத்திலும் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

"முதலாளித்துவத்தின் வரலாற்றுரீதியான பலவீனத்தால், ஏகாதிபத்திய எஜமானர்களால் இவர்களுடைய நலன்களை காத்துக் கொள்ளும் வகையில், இப்பிராந்தியத்தில் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் எதிரியான தொழிலாள வர்க்கத்தை பிரித்து வகுப்புவாத பதட்டங்களை தூண்டிவிட்டு பதவியை தக்க வைத்துக்கொள்ளுவதைத்தான் நம்பியுள்ளனர். இந்தியா மூன்று பகுதிகளாக துண்டாடப்பட்டுவிட்டது; இலங்கைவில் தமிழ் பேசும் மக்களில் மில்லியனுக்கும் மேலானவர்களுக்கு குடியுரிமை அகற்றப்பட்டுவிட்டது. மலேசியாவில் இனவாத பூமிபுத்ரா இயக்கம் இதே காரணத்திற்காக தூண்டிவிடப்பட்டுள்ளது. இத்தகைய வகுப்புவாத அரசியல் இனப்படுகொலைகள், படுகொலை, போர் போன்றவற்றிற்கு வழிவகுத்துள்ளன.

"டிசம்பர் 26 அன்று தெற்கு ஆசியாவை தாக்கிய சுனாமி இப்பிராந்தியம் முழுவதும் நிலவும் வறிய நிலைமையை உடனடியாக அம்பலப்படுத்தியது. உயிர், உறைவிடம், அனைத்தையும் இழந்தவர்களில் 90 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் வறியவர்களிலும் வறியவர்கள் ஆவர். இந்தப் பெருந்துயரத்திற்கு ஒவ்வொரு அரசாங்கமும் காட்டிய இகழ்வுணர்விற்கு காரணம் சுனாமி தாக்குவதற்கு முன்பே பாதிப்பாளர்களின் உயிர்கள் முக்கியமில்லை என்று அரசியல் வாதிகள் முடிவெடுத்துவிட்டதுதான். பேரழிவிற்கு பத்து மாதங்களுக்கு பின்னரும், பெரும்பாலான பாதிப்பாளர்கள் இன்னும் பெரும் அவலத்தில்தான் வாழ்கின்றனர்.

தெற்கு ஆசியாவில் சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்பதற்கான போராட்டத்திற்கு புறநிலை அடிப்படை உள்ளது. அது உலக சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாகும். அத்தகைய ஒன்றியத்திற்கான நம்முடைய முன்னோக்கு ஒன்றும் ஏதோ கற்பனாவாதம் அல்ல; தொழிலாள வர்க்கம் தன்னுடைய நலன்களை காப்பதற்கான நடைமுறைத் தேவைதான் அது. இப்பகுதியிலும் சர்வதேச அளவிலும் அனைவருக்கும் கெளரவமான வாழ்க்கை நிலைமை வேண்டும் என்பதற்காக பொருளாதார மறுசீரமைப்பு அறிவார்ந்த முறையில் மேற்கொள்ளப்படவேண்டும்."

ஒரு தேசிய அரசு முறையின் வரம்பிற்குள் ஒரு சோசலிச வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட முடியாது என்பதை டயஸ் வலியுறுத்தினார். அது மனிதகுலம் அனைத்தின் நலன்களையும் வளர்ப்பதற்கு உற்பத்தி சக்திகளை முன்னேற்ற வகையில் பயன்படுத்துவதற்கு தடையாகிவிட்டது. ஒரு சோசலிச தீர்விற்கான போராட்டத்திற்கு முன் நிபந்தனை தொழிலாள வர்க்கத்தின் சர்வேதேச ஐக்கியமாகும்.

"1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது ஸ்ராலினிச அதிகாரத்துவம் தனி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டியெழுப்பலாம் என்று கொண்டிருந்த தத்துவம் தவறு என்பதை இறுதியாக நிரூபணம் செய்துள்ளது; அது நடைமுறைப்படுத்தப்பட முடியாததும் பிற்போக்குத்தனமானதுமாகும். தேசிய சோசலிச வேலைதிட்டங்கள் தவிர்க்கமுடியாத வகையில் தேசிய அரசு, முதலாளித்துவ அமைப்பு இவற்றை சந்தர்ப்பவாத வகையில் தழுவிக்கொள்வதாகும். இலங்கை, இந்தியா உட்பட்ட ஒவ்வொரு நாட்டிலும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை இதுதான்.

"மாபெரும் அக்டோபர் புரட்சியில் லெனினுடன் இணைத்தலைவராக இருந்த லியோன் ட்ரொட்ஸ்கி, சோவியத் அதிகாரத்துவத்தின் தேசியவாத சீரழிவிற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை 1923ல் தொடக்கி, 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மார்க்சும் ஏங்கல்சும் சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டம் ஆரம்பித்ததை தொடர்வதற்காக, நான்காம் அகிலத்தை 1938-ம் ஆண்டு நிறுவினார்.

"1940களின் ஆரம்பத்தில், இரண்டாம் உலகப் போரின் நடுவே, நான்காம் அகிலம் இலங்கை உட்பட இந்திய துணைக் கண்டத்தின் தொழிலாள வர்க்கத்திற்குள் ஆழ்ந்த வேர்களை அடித்தளமாக கொண்டிருந்தது; வியட்நாம் போன்ற தெற்கு ஆசியாவின் இதர பகுதிகளிலும் இந்த நிலைமை இருந்தது. இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி ( BLPI) அதன் இலங்கைக் கிளையுடன் கூட, நான்காம் அகிலத்தின் பதாகையில், துணைக் கண்டத்தில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து தேசிய விடுதலைக்கும் சோசலிசத்திற்காகவும் ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை வழங்கியது.

"ஆனால், போருக்குப் பிந்தைய உடன்பாட்டின் பகுதியாக, முறையாக சுதந்திரம் கொடுக்கப்பட் பின்னர் இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது; இந்தியா மற்றும் இலங்கை என்று பிளவுபட்டதில் செயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட அரசுகளை BLPI ஏற்றுக் கொண்டது. தேசியச் சீர்திருத்தக் கட்சிகளான இந்தியாவில் ஜெயப் பிரகாஷ் நாராயணனின் காங்கிரஸ் சோசலிஸ்ட் மற்றும் இலங்கைவில் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) போன்றவற்றில், இந்திய அளவில் இருந்த BLPI கட்சி கலைக்கப்பட்டது. சென்னை B&C ஆலையின் வேலைதளத்தில் தொழிலாளர்கள் பத்தாயிரக்கணக்கானவர்கள் உண்மையாக BLPI தலைமையை பின்பற்றியிருந்த போதிலும், விடுதலைக்கான உண்மையான போராட்டத்திற்கு எதிரான ஒரு சதியாக போலியான சுதந்திரத்தை கண்டிப்பதற்கு இலங்கையில் BLPI-யுடைய அழைப்பிற்கு 50,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செவிமெடுத்தனர்..

"LSSP இன் ஒரு பகுதி என்னும் முறையில் BLPI தலைவர்களின் சீரழிவு, அவர்கள் சிமா பண்டாரநாயக்கேயின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்த வகையில் உச்சக் கட்டத்தை அடைந்தது. தொழிலாளர் வர்க்கத்திற்கு சுயாதீனமான அரசியல் பாதையைத் தடுத்த வகையில், LSSP தீவின் தெற்கிலும் வடக்கிலும் வகுப்புவாதக் கட்சிகள் வளர்ச்சிக்கு உதவிய வகையில் காட்டிக் கொடுத்தது; இது பின்னர் 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாயிற்று."

தீவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து அனைத்து இலங்கை படைகளும் உடனடியாக, நிபந்தனையற்ற முறையில் திருப்பப் பெறவேண்டும் என்ற அதன் கோரிக்கை மற்றும் தெற்கு ஆசியாவிலும் சர்வதேசரீதியாகவும் சோசலிச அரகளின் ஒரு ஒன்றியத்திற்கான பாகமாக இலங்கை ஈழ சோசலிச குடியரசுக்கான அதன் முன்னோக்கு என்பது உள்பட SEP வேலைதிட்டத்தின் முக்கிய கொள்கைத் திட்டத்தை எடுத்துரைத்தவகையில் டயஸ் உரையை முடித்துக்கொண்டார். கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் ICFI இன் வேலைதிட்டத்தை படிக்குமாறும், உலக சோசலிச வலைத்தளத்தை தொடர்ந்து முறையாகப் படிக்குமாறும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்வதற்கு விண்ணப்பிக்குமாறும் கோரினார்.

இரண்டு உரைகளும் பல தொடர்ச்சியான வினாக்களுக்கு உந்துதல் கொடுத்தன: சோசலிசத்தை SEP எவ்வாறு அமுல்படுத்தும்; சீனா ஒரு சோசலிச நாடா? சோவியத் யூனியனின் வீழ்ச்சி அமெரிக்க இராணுவவாதத்தின் வெடிப்பிற்குக் காரணமா? வியட்நாமிலும், கியூபாவிலும் நடந்ததுபோல் தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்க முடியுமா போன்ற வினாக்கள் எழுந்தன. கூட்டம் முடிந்தபின்னரும் பலரும் பேச்சாளர்களுடன் உரையாற்றுவதற்காக நின்றிருந்தனர். அவர்களில் பலர் WSWS நிருபர்களுடனும் பேசினர்.

ஒரு இளவயது ஓட்டுனர் கூறினார்: "இக்கூட்டத்தில் இருந்து நான் நிறைய அறிந்து கொண்டேன். அமெரிக்காவில் இருக்கும் உண்மையான நிலைபற்றி முதல்தடவையாக இப்பொழுது தெரிந்து கொண்டேன். இக்கூட்டத்திற்கு வருமுன் அங்கு ஏழைகளே இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறு என்பதை அறிந்திருக்கிறேன். வறிய மக்களும், ஏழைத் தொழிலாளர்களும் அங்கும் உள்ளனர். அனைத்து செய்தித்தாட்களும் பொய்களைத்தான் கூறுகின்றன. அமெரிக்காவில் எல்லாமே சிறப்பாக இருப்பதாக அவை கூறுகின்றன. அமெரிக்காவின் உண்மை நிலை பற்றியும், சர்வதேசரீதியாக நிகழ்வது பற்றியும் நான் கூடுதலாக அறிய விரும்புகிறேன்.

"நான் அறிந்துகொண்ட மற்றொரு விஷயம் என்ன என்றால், நம்முடைய பிரச்சினைகளை எதற்கும் தேசிய அளவில் எந்தத் தீர்வும் இல்லை என்பதுதான். சர்வதேசியம் என்பது அடிப்படையானது. இது நான் அறிந்ததில் முற்றிலும் புதிய விஷயமாகும். நாம் எதிர்கொள்ளும் சமூக, அரசியல் பிரச்சினைகள் எதுவாயினும் அவற்றிற்கு சர்வதேச அளவில் தீர்வுகள் தேவைப்படுகிறது. இந்திய உபகண்டத்தில் சோசலிச ஐக்கிய அரசு என்ற கருத்து சிறந்ததாகும். அனைத்துக் கட்சிகளும் உழைக்கும் மக்களை பிரித்துக் கொண்டிருக்கின்றன. நாம் அவர்களை ஐக்கியப்படுத்த வேண்டும்."

சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டில் படிக்கும் மாணவர் ஒருவர் கூறினார்: "கட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள நான் இங்கு வந்தேன். இது ஆர்வத்தைக் கொடுத்துள்ளது. சமூக சமத்துவம் என்ற கருத்து எனக்குப் பிடித்துள்ளது. சோசலிசம் என்பது சமத்துவம். அனைவரும், இப்பொழுது இருப்பது போல் இல்லாமல், சமமாக நடத்தப்படவேண்டும். இப்பொழுது மக்கள் சுதந்திரத்திற்கு முன் இருந்ததுபோலவே அடக்குமுறைக்கு உட்பட்டுள்ளனர். சிலநேரம் சுதந்திரம் பெறாமலேயே இருந்திருக்கலாம் என்றுகூட நான் சிந்திப்பதுண்டு."

"நான் ஒரு கிராமத்தில் இருந்து வருகிறேன். என்னுடைய குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் நிலம் உண்டு. அதைக் கொண்டு நாங்கள் வாழ முடியாது. பெரும்பாலான மக்கள் அப்படித்தான் உள்ளனர். ஒரு சிலரோ பெருஞ்செல்வத்தை கைகளில் வைத்திருப்பவர்களாக இருக்கின்றனர். எனவே சமத்துவம் என்பது முக்கியமானது. அதை அடைவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

"என்னுடைய தகப்பனார் ஒரு சிறு விவசாயி. என்னுடைய படிப்பிற்கு அவர் மாதம் 1,000 ரூபாய்கள் கொடுக்க வேண்டியுள்ளது. அவருக்கு அது மிகவும் கடினமாகும். விடுதிகளிலும் நாங்கள் பல கஷ்டங்களை எதிர்கொள்ளுகிறோம். 20 மாணவர்கள் ஓர் அறையில் இருக்க வேண்டியுள்ளது. படுப்பதற்குத்தான் இடம் இருக்கிறது. இங்கு பகற் பொழுதிலும் தங்க முடியாது. உணவின் தரம் மோசமானது. அநேக நாட்கள் அரிசியும் ஒரு கறியும் மட்டும்தான் கிடைக்கும். நாங்கள் கோரைப் பாய்களில்தான் உறங்குகிறோம். இடம் மிகவும் அசுத்தமாக இருக்கும்; நிர்வாகம் அதைப்பற்றிக் கவலைப்படுவது இல்லை.

"இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் விஜே டயஸ் கொடுத்த அறிக்கை மிக நன்றாக இருந்தது என்று நினைக்கிறேன். மார்க்சிச இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இருந்திருக்கிறார்; நிறைய அனுபவத்தைக் கொண்டுள்ளார்; இது அவருடைய அறிக்கையில் தெரிய வருகிறது."

ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்தது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது: "ஈராக்கின்மீதான அமெரிக்கப் படையெடுப்பை நாங்கள் எதிர்க்கிறோம். அந்நாட்டில் ஒன்றும் பேரழிவு ஆயுதங்கள் இல்லை. ஈராக்கின்மீது படையெடுப்பதற்காக வாஷிங்டனால் அது கண்டுபிடிக்கப்பட்டது. இது எண்ணெயைக் கைப்பற்றிக் கொள்வதற்குக் கூறப்பட்டது. அமெரிக்காவிலும் வெகுஜனங்களுக்கு எதிராக பல தாக்குதல்கள் இருக்கின்றன என்றும், ஜனநாயக உரிமைகள் வெட்டப்பட்டுள்ளன என்பதையும் இப்பொழுது அறிகிறேன்."

மற்றொரு மாணவர் எங்களிடம் கூறினார்: "நான் நாளை தேர்வு எழுத உள்ளேன். அது ஒரு கடினமான தேர்வு ஆகும். என்னுடைய நண்பர்கள் அனைவரும் படித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வகையில் நான் பல பிரச்சினைகளைப் புரிந்து கொண்டுள்ளேன். சர்வதேசியம் என்பது முக்கியமான விஷயம் ஆகும். அனைத்து நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களும் ஒரே மாதிரியான பிரச்சினைகளைத்தான் எதிர்கொள்ளுகின்றனர்; அமெரிக்கா போன்ற பெரு முதலாளித்துவ நாடாயினும், இந்தியா போன்ற நாடாயினும் சரி, இதே நிலைமைதான்.

"நான் ஒரு சோசலிச சமுதாயத்தை காண விரும்புகிறேன். சமூக சமத்துவம் மிக முக்கியமானது. எனவேதான் நான் இந்தக் கூட்டத்திற்கு வந்தேன். நாளை தேர்வு இருந்தபோதிலும்கூட, இன்றைய கூட்டத்திற்கு வந்தது எனக்கு மகிழ்ச்சிதான். நீங்கள் ஏற்பாடு செய்யும் எந்தக் கூட்டத்திற்கும் நான் வருவேன். மற்றவர்களைவிட நீங்கள் வேறுவிதமாகப் பேசுகிறீர்கள்."

"அரசியல், சோசலிசம் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். இங்கு வருவதற்கு முன் அனைத்து கட்சிகளும் ஊழல் நிறைந்தவை, இப்பொழுதைய நெருக்கடியில் இருந்து தப்புவதற்கு வழிவகை இல்லை என்று நினைத்திருந்தேன். இப்பொழுதோ, சாதாரண வெகுஜனங்களுக்கு பெரும் துன்பத்தை தோற்றுவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்திற்கு மாற்றீடு உள்ளது என்பதை அறிகிறேன்."

See Also:

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்திற்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் இனவாத வன்முறைகளுக்கும் யுத்தத்திற்குமான விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page