World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan presidential election:

SLFP candidate issues a manifesto for communal violence and war

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் இனவாத வன்முறைகளுக்கும் யுத்தத்திற்குமான விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்

By Wije Dias, presidential candidate for the Sri Lankan Socialist Equality Party
2 November 2005

Back to screen version

இலங்கையில் நவம்பர் 17 நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரு பிரதான முதலாளித்துவ கட்சிகளின் வேட்பாளர்களான, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க) பிரதமர் மஹிந்த இராஜபக்ஷவும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் வாக்குறுதிகளின் நீண்ட பட்டியலுடன் தமது விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த வெற்று வாக்குறுதிகளை ஏமாளிகள் மட்டுமே நம்பமுடியும். இராஜபக்ஷ தன்னை வெகுஜனங்களின் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்காக ஒரு மந்திரக் கோலுடன் மீண்டும் பிறந்துள்ள ஞானியாக இப்போது காட்டிக்கொள்கின்றார். ஆயினும், 1994ல் இருந்து அவரது ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான கூட்டணி அரசாங்கமே ஆட்சியில் இருந்தது. அது ஐ.தே.க அறிமுகம் செய்த திறந்த சந்தைப் பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்ததன் மூலம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் இலாபத்திற்காக உழைக்கும் மக்கள் மீது சமூக பேரழிவை திணித்ததற்கான பொறுப்பை பங்கிட்டுக்கொண்டது.

1948 சுதந்திரத்தில் இருந்து இந்த தீவை ஐ.தே.க 34 வருடங்களும் மற்றும் ஸ்ரீ.ல.சு.க 22 வருடங்களும் ஆட்சி செய்துள்ளதுடன் அடுத்தடுத்து பேரழிவுகளை உண்டுபண்ணியுள்ளன. எங்கும் பரவலாக உள்ள வறுமை மோசமாகி வருவதோடு தீவின் வரையறுக்கப்பட்ட இலவச கல்வி, இலவச சுகாதார சேவை மற்றும் பொதுநல சேவைகளை, தனியார் இலபாத்தை பெருக்கும் சபைகளாக மாற்றுவதற்கான வழிகள் அமைக்கப்படுகின்றன. அரசியல் எதிர்ப்புக்கான பிரதிபலிப்பாக, இரு கட்சிகளும் ஜனநாயக உரிமைகள் மீது தொடர்ந்தும் தாக்குதல் தொடுப்பதோடு தொழிலாள வர்க்கத்தை பிரிப்பதற்காக தமிழர் விரோத பேரினவாதத்தை எழுச்சியுற செய்கின்றன.

தீவில் சிங்கள பெளத்த அரசியல் மேலாதிக்கத்தை பேணிக் காப்பதன் விளைவு 20 வருடகால அழிவுகரமான உள்நாட்டு யுத்தமாகும். விக்கிரமசிங்க, இராஜபக்ஷ ஆகிய இருவரும் 1983 முதல் 2002 வரை தீவை இரத்த களரிக்குள் தள்ளிவிட்ட அரசாங்கங்களில் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த யுத்தத்தால் 66,000 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்தும் ஊனமுற்றுமுள்ளதுடன், வெளிநாடுகளிலும் உள்நாட்டு அகதி முகாங்களிலும் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

முன்னறிவிக்கக் கூடிய வகையில், மஹிந்தவின் சிந்தனை எனப் போலியாக பெயரிடப்பட்டுள்ள இராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், பிரதான விடயமான யுத்தம், 30வது பக்கத்தில் மட்டும் ஒரு பின் ஆசனத்தை எடுத்துக்கொண்டுள்ளது. இது முன்னறிவிக்கக் கூடியதாக இருந்தது ஏனெனில், சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடன் பிரதமர் செய்து கொண்ட தேர்தல் உடன்படிக்கைகளில், வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பாத ஒரு புதிய யுத்ததிற்கான வழிவகைகளை தயார் செய்யும் கொள்கைகளுக்கு தான் உடன்பட்டுள்ளார் என்ற உண்மையை மறைக்க வேண்டிய தேவை இருந்தது.

ஜூன் மாதம் வரை ஸ்ரீ.ல.சு.க தலைமையிலான ஆளும் கூட்டணியில் ஜே.வி.பி யும் பங்காளியாக இருந்தது. டிசம்பர் 26 சுனாமியில் உயிர் பிழைத்தவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவரது பிரதமர் இராஜபக்ஷவின் உடன்பாட்டுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு எதிராகவே ஜே.வி.பி அரசாங்கத்தில் இருந்து விலகியது. குறிப்பிடத்தக்களவு செயற்திறம்வாய்ந்த அடித்தளத்தை கொண்ட ஜே.வி.பி யின் ஆதரவுக்காக ஏங்கிய இராஜபக்ஷ, சுனாமி நிவராண உடன்படிக்கையை நிராகரிக்கும், யுத்த நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்யக் கோரும் மற்றும் ஆயுதப் படைகளை பலப்படுத்த அழைப்புவிடுக்கும் தேர்தல் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டார்.

இதன் விளைவாக, ஜே.வி.பி, இனவாத உனர்வுகளை எழுச்சியுற செய்தல் மற்றும் இராஜபக்ஷவின் இனிப்பு பூசப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை பிரச்சாரம் செய்தல் மூலம், அவரின் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பிரதான பாத்திரத்தை இட்டு நிரப்புகிறது. ஜே.வி.பி யின் வாய்வீச்சாளரான பிரச்சார செயலாளர் விமல் வீரவன்ச, இராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்தின் உதவி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சில அரசியல் ஆய்வாளர்கள் கூட, ஜே.வி.பி யின் உறுப்பினர்கள் எவரும் போட்டியிடாத போதிலும் அதற்கு ஒரு ஜனாதிபதி வேட்பாளர் இருக்கின்றார் என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர்.

நிச்சயமாக, இராஜபக்ஷவின் விஞ்ஞாபனம், 2002 பெப்ரவரியில் விக்கிரமசிங்க அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையால், உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்த மோதலை மீண்டும் ஆரம்பிக்க பகிரங்கமாக அழைப்பு விடுக்கவில்லை. ஆயினும், சமாதான பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்காக இராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள நிலைமைகள் விடுதலைப் புலிகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு இறுதி நிபந்தனைக்கு சமமானதாக இருப்பதோடு இதன் காரணமாகவே யுத்தம் மீண்டும் வெடிப்பதற்கான அடிப்படைகளை விதைத்துள்ளார்.

"சமாதானம்" பற்றி "மஹிந்தவின் சிந்தனையில்" உள்ள பகுதி, ஜே.வி.பி யின் பிரச்சார ஆவணத்தில் இருந்து ஒரு பக்கத்தை நேரடியாக எடுத்ததாகவே தோன்றுகிறது. அது "மிகத் துரிதமாகவும் ஒரு முன்யோசனையின்றியும்" யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம் "தேசியப் பாதுகாப்பை விட்டுக்கொடுத்துவிட்டதாக" விக்கிரமசிங்கவை குற்றஞ்சாட்டுகிறது. "தமிழீழ விடுதலைப் புலிகள் அத்தகைய உடன்படிக்கைக்கு அடிபணியாத போதிலும், எமது நாட்டின் மக்கள் மீது அத்தகைய உடன்படிக்கையை வஞ்சகமாக திணிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... அத்தகைய தோல்விகளை எதிர்க்காமல், அதே பழைய பாதையை நாம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்ட சில நபர்கள் இன்னமும் பரிந்துரைக்கின்றனர்," என அது குறிப்பிடுகிறது.

குறிப்பாக ஒரு கெடுநோக்குள்ள பந்தியில், விஞ்ஞாபனம் எச்சரிப்பதாவது: "இந்த துரதிஷ்டவசமான முன்னெடுப்பு தொடருமானால், இன்று ஜனநாயக மற்றும் வன்முறையற்ற நடவடிக்கைகளை பின்பற்றுபவர்கள் கூட, எதிர்காலத்தில் வன்முறைகளின் பக்கம் திரும்பக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன." தற்போதைய யுத்த நிறுத்தத்திற்கு எதிரான ஒரு வன்முறைப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற இராஜபக்ஷவின் பங்களிகளால் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே இதை விளக்க முடியும். தற்போது பாராளுமன்றத்தில் உள்ள ஜே.வி.பி, 1987--89 காலகட்டத்தில், யுத்தத்திற்கு முடிவு கட்டுவதற்கான ஒரு தோல்விகண்ட முயற்சியான இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு எதிராக, தனது பாசிச சிலுவைப் போரை முன்னெடுத்த போது, ஒரு தொகை தொழிலாளர்களையும் மற்றும் தனது அரசியல் எதிரிகளையும் படுகொலை செய்தது.

2002 யுத்த நிறுத்தத்துடன் விடுதலைப் புலிகளுடன் ஒரு சமாதான கொடுக்கல் வாங்கல்களை எட்டுவதற்கு விக்கிரமசிங்க மேற்கொண்ட முயற்சிகளும் இதேபோன்ற தடைகளால் அடிபட்டுப் போனது. இந்த பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகள், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சாதாரண உழைக்கும் மக்கள் மீதான யுத்தத்தின் அழிவுகரமான தாக்கத்தை பற்றிய அக்கறையினால் மேற்கொள்ளபடவில்லை. மாறாக, ஐ.தே.க கொழும்பில் உள்ள கூட்டுத்தாபன வட்டாரங்களினதும் மற்றும் பெரும் வல்லரசுகளதும் அழுத்தங்களுக்கே பிரதிபலிக்கின்றது. இவை தீவை உற்பத்தியின் பூகோள முன்னெடுப்புகளோடு இணைக்கும் திட்டங்களுக்கு ஒரு தடையாக உருவெடுத்துள்ள இந்த யுத்தத்திற்கு முடிவுகட்ட நெருக்குகின்றன.

ஆளும் கும்பலின் பேரினவாத அரசியல் சார்பையும், இன மோதலுக்கு ஒரு ஜனநாயக தீர்வைக் காண அதன் உள்ளார்ந்த இயலாமையையும் பிரதிபலித்து ஜனாதிபதி குமாரதுங்க, இராணுவத்தின் சில பிரிவினரதும் ஜே.வி.பி யினதும் பக்கபலத்துடன், யுத்த நிறுத்தம் "தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுப்பதாக" கண்டனம் செய்தார். ஸ்ரீ.ல.சு.க கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஜே.வி.பி யுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு குறுகிய வெற்றியை பெற்றவுடன், குமாரதுங்க தலைகீழாக மாறி "சமாதான முன்னெடுப்புகளை" மீண்டும் தொடங்குவதற்கு அழைப்பு விடுத்தபோதிலும், விக்கிரமசிங்கவை விட அதிகம் வெற்றிபெறவில்லை.

இப்போது, "பிரிக்கப்படாத நாடு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் கெளரவமான சமாதானம்" என்ற அடிப்படையில் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றும் இரண்டு வட்டமேசை மாநாடுகள் உட்பட, ஒரு "புதிய அனுகுமுறையை" முன்மொழிகின்றார். "முரண்பாடுகள் தோன்றும் போது, ஒரு தேசிய ஒருமைப்பாட்டை அபிவிருத்தி செய்வதற்காக நான் பெரும் முயற்சி எடுப்பேன். அத்தகைய ஒருமைப்பாட்டை அபிவிருத்தி செய்கையில், இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு, நாட்டின் ஐக்கியப்பட்ட அமைப்பு, பல்வேறுபட்ட சமூகத்தவர்களின் அடையாளம், அத்தகைய சமூகங்களுக்கு மத்தியில் சமாதானமான ஒற்றுமையின் தேவை ஆகியவையும் பேணப்படும்," என அவரது விஞ்ஞாபனம் பிரகடனம் செய்கின்றது.

இந்த "புதிய அனுகுமுறையில்" ஒன்றுமே கிடையாது. "தேசிய ஒருமைப்பாட்டுக்கான" அதன் அழைப்பானது, தமிழ் சிறுமான்மையினரின் செலவில் தமது மேலாதிக்கத்தை பேணிக்காப்பதற்காக சிங்கள பெளத்த கும்பல்களால் பயன்படுத்தப்பட்டு வந்த கவர்ச்சியிழந்த துரும்புச் சீட்டாகும். நிச்சயமாக, அனைத்துக் கட்சிகளின் பேச்சுவார்த்தையில் இருந்து விடுதலைப் புலிகள் வெளித்தள்ளப்படுவர். யுத்தத்தின் ஊடாக பலாத்காரமாக பேணிக்காக்கப்பட்டு வந்த "ஒற்றை ஆட்சி", தமிழர்களுக்கு எதிராக மொழி, மதம் அதேபோல் கல்வி, வியாபாரம் மற்றும் வேலைவாய்ப்புகளிலும் பாரபட்சங்கள் மேற்கொள்ளப்பட்டு அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக்கியுள்ளது.

இராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக "ஒரு குறிப்பிட்ட கால வரையறை மற்றும் ஒரு தெளிவான நிகழ்ச்சி நிரலுக்கு" அழைப்பு விடுக்கின்றார். "வெளிப்படையானதும் தெளிவானதுமான எமது நிகழ்ச்சி நிரல், பிரிவினைவாதத்தை கைவிடல், இராணுவமயமாக்கத்தை கைவிடல், ஜனநாயக முன்னெடுப்புகளுக்குள் இணைதல், இறுதித் தீர்வை நோக்கிய கலந்துரையாடல் மற்றும் அத்தகைய தீர்வுகளை அமுல்படுத்துதல் போன்ற இன்றியமையாத விடயங்களையும் உள்ளடக்கியிருக்கும்," என அவர் குறிப்பிட்டுள்ளார். இது யுத்தத்திற்கான தேர்வேயன்றி சமாதானத்துக்கானது அல்ல. பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் முன்னரே, "இறுதித் தீர்வுக்கான கலந்துரையாடல்" என்ற தெளிவற்ற வாக்குறுதிக்கு பிரதியுபகாரமாக, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும் எனவும் தனியான தமிழ் அரசுக்கான அதன் கோரிக்கைகளை நிச்சயமாக கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துகின்றார்.

விக்கிரமசிங்க அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போதும், சமஷ்டி நிர்வாக அமைப்புக்குள் வரையறுக்கப்பட்ட சுயாட்சிக்கும் மற்றும் ஐக்கிய இலங்கைக்கும் பிரதியுபகாரமாக விடுதலைப் புலிகள் தனியான தமிழ் அரசு கோரிக்கையை விட்டுக்கொடுக்க உடன்பட்டனர். இத்தகைய உடன்பாட்டின் இலக்கானது, தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது சுரண்டலை உக்கிரப்படுத்துவதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தட்டுக்களுக்கிடையில் ஒரு அதிகார பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்வதேயாகும். ஆயினும் இது, இராணுவ உயர் மட்டத்தினர், பெளத்த பெருந்தலைவர்கள், அரச கருவிகள் மற்றும் வியாபாரிகள் உட்பட கொழும்பில் உள்ள ஆளும் வட்டாரங்களின் சில தட்டுக்களின் எதிர்ப்புக்குள்ளாகியது. இவர்களின் நலன்கள், சிங்கள மேலாதிக்கத்தைக் காப்பதுடன் கட்டுண்டுள்ளன.

"சமஷ்டி அமைப்பை" கசப்புடன் எதிர்த்த ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஏனைய சிங்களத் தீவிரவாதிகளும், சமாதான முன்னெடுப்புகளின் மத்தியஸ்தர்களை "விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள்" என கண்டனம் செய்ததோடு, சுனாமி நிவாரணங்களை கூட்டாக நிர்வகிப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிராக கூட பேரினவாத பிரச்சாரத்தை குவித்தனர். இராஜபக்ஷவின் விஞ்ஞாபனம், "சமாதானப் பேச்சுக்களின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஐரோப்பிய கமிஷன் மற்றும் ஜப்பானுடன் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற கலந்துரையாடல்களை நடத்தும்" வாக்குறுதி உட்பட, அவர்களது அனைத்துக் கோரிக்கைகளுக்கும் சரணடைந்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், பெளத்தத்தை அரச மதமாக மேன்மைப்படுத்தும் அரசியலமைப்பு விதியை காப்பதாக மட்டுமன்றி அதை விரிவுபடுத்துவதாகவும் இராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். "வணக்க ஸ்தலங்கள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்களுடனும்" நெருக்கமான இணைப்பை ஏற்படுத்துவதற்காக" மக்களை ஊக்குவிக்கும் அதேவேளை, இந்த விஞ்ஞாபனமானது "அரசியலமைப்பின் விதிகளில் பெளத்தத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை பலப்படுத்தப்படும்" என பிரகடனம் செய்கின்றது. இது பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகளையும் பலப்படுத்துவதுடனும் கை கோர்த்துக்கொண்டுள்ளது.

விக்கிரமசிங்கவை போல் இராஜபக்ஷவுக்கும் சாதாரண உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகள் மற்றும் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் யுத்தத்திற்கு தீர்வுகாண முடியாது. அவரது "புதிய அணுகுமுறை", தேவை ஏற்படின் மிகவும் ஜனநாயக விரோத வழிமுறைகளையும் பயன்படுத்திக்கொண்டு இனவாத அரசியமைப்பையும் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தையும் பாதுகாப்பதற்காக மீண்டும் இராணுவ மோதலுக்குத் திரும்புவதற்கான தயாரிப்பைத் தவிர வேறொன்றுமல்ல.

நான் யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் எதிராக ஒரு சோசலிசப் பதிலீட்டை அபிவிருத்தி செய்வதற்காக சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டயிடுகின்றேன். நாம் பின்வரும் கொள்கைகளுக்காக போராடுவதற்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்:

தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து அனைத்து பாதுகாப்பு படைகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பிழைக்கக் கோரிக்கை விடுத்தல் வேண்டும். ஒற்றை ஆட்சியை பலாத்காரமாக பேணிக்காப்பதானது தமிழ் சிறுமான்மையினருக்கு எதிரான ஆழமான பாரபட்சங்களையும் இராணுவவாதத்தின் ஆதிக்கத்தையும் மற்றும் தீவு பூராவும் அடிப்படை ஜனாநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையுமே விளைவுகளாகத் தந்துள்ளது.

* சகலவிதமான ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதோடு இன, மொழி அல்லது மத வேறுபாடின்றி அனைவரதும் உரிமைகளுக்காக பிரச்சாரம் செய்தல் வேண்டும். யுத்தத்திற்கான எந்தவொரு தீர்வும், இனவாதத்தையும் எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறையையும் தூக்கி நிறுத்தியுள்ள இலங்கை அரசியலமைப்பை நிராகரிப்பதை வேண்டிநிற்கின்றது. ஜனநாயக உரிமைகள் பற்றிய இன்றியமையாத பிரச்சினைகள் சம்பந்தமாக முடிவெடுக்கும் நடவடிக்கையை முதலாளித்துவ அரசியல்வாத கும்பல்களிடம் ஒப்படைப்பதற்கு மாறாக, அந்த இயலுமையை சாதாரண உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நியாயமாகத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட ஒரு அரசியலமைப்பு சபையை ஸ்தாபிக்க வேண்டும் என சோ.ச.க பரிந்துரைக்கின்றது.

* சோசலிச கொள்கைகளுக்காக போராட வேண்டும். ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு, சமூக சமத்துவத்திற்கான போராட்டத்துடன் கட்டுண்டுள்ளது. சமுதாயம் மேலிருந்து கீழ்வரை மாற்றியமைக்கப்பட வேண்டும். அதற்காக தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட செல்வம், கூட்டுத்தாபனங்களின் இலாபத்திற்காக அன்றி வெகுஜனங்களின் நெருக்கும் சமூகத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். சோ.ச.க, தெற்காசிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் ஒரு பாகமாகவும் மற்றும் உலக முதலாளித்துவத்தை தூக்குவீசுவதற்கான பூகோளப் போராட்டத்தின் ஒரு பாகமாகவும் ஸ்ரீலங்கா--ஈழம் ஐக்கிய சோசலிசக் அரசுகளை ஸ்தாபிப்பதற்காக போராடுகின்றது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக, இத்தகைய வரலாற்றுப் பணிகளை முன்னெடுப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சியை தொழிலாள வர்க்கத்தின் புதிய கட்சியாக கட்டியெழுப்புவதை அவசியமாக்கியுள்ளது. நாம் எமது பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறும், எமது வேலைத் திட்டத்தை கவனமாக வாசிக்குமாறும் சோ.ச.க யில் இணைவதற்கு விண்ணப்பிக்குமாறும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved