:
ஆசியா
:
இலங்கை
After killing of Sri Lankan minister,
clamour for war grows in Colombo
இலங்கை அமைச்சர் கொல்லப்பட்ட பின்னர் கொழும்பில் யுத்த ஆரவாரங்கள் வளர்ச்சியடைகின்றன
By K. Ratnayake
20 August 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டதை
அடுத்து, கொழும்பு ஆளும் வட்டாரத்துள் யுத்தப் பேரிகைகள் தெளிவாகவே கேட்கின்றன.
இந்த கொலையின் பின்னர், ஒவ்வொரு அரசியல் கட்சியும் உடனடியாக தமிழீழ விடுதலைப்
புலிகள் மீது வெளிப்படையாக குற்றஞ் சாட்டியதுடன் கடந்த வியாழனன்று ஜனாதிபதி குமாரதுங்கவால் அமுல்படுத்தப்பட்ட
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதில் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டனர். பாராளுமன்ற
விவாதத்தின்போது, போட்டி போட்டுக் கொண்டு கதிர்காமரை பாராட்டிய பேச்சாளர்கள், விடுதலைப் புலிகளை
கண்டனம் செய்ததோடு 2002 பெப்ரவரியில் அமுலுக்கு வந்த யுத்த நிறுத்தத்தை மீளாய்வு செய்யவும் ஆத்திரமூட்டும்
வகையில் கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் படுகொலையுடன் சம்பந்தப்படவில்லை என்ற விடுதலைப் புலிகளின் மறுப்பை
ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனங்களும் நிராகரித்ததோடு விடுதலைப் புலிகளே இந்தப் படுகொலையை செய்தார்கள்
என்ற பொலிஸ் மற்றும் இராணுவத்தின் வலியறுத்தலின் வழியிலேயே விழுந்தன. இந்தப் படுகொலையை செய்ய விடுதலைப்
புலிகளின் தலைமைத்துவம் கட்டளையிட்டிருப்பதற்கான நிச்சயமான சாத்தியங்கள் இருந்த போதிலும், பொலிசாரால்
வழங்கப்பட்டுள்ள "சான்று" வரையறைக்குட்பட்ட மற்றும் நிலைநாட்டப்படாத சூழ்நிலை ஆதாரங்களையே
கொண்டுள்ளது.
யார் இலாபமடைந்தது? என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புவதற்கு கொழும்பில்
எவரும் துணியவில்லை. விடுதலைப் புலிகளைப் பற்றி மிகச் சத்தமாக கூச்சலிட்டிக்கொண்டிருக்கும் பாதுகாப்புப் படையில்
உள்ள சில பிரிவினரும் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), ஜாதிக ஹெல உறுமய உட்பட சிங்களப் பேரினவாதக்
கட்சிகளுமே அரசியல் இலாபம் அடைந்துள்ளன என்பது மிகத் தெளிவு. ஜூன் மாதம் சுனாமிக்குப் பின்னரான நடவடிக்கை
முகாமைத்துவக் கட்டமைப்பு (பொதுக் கட்டமைப்பு) கைச்சாத்திடப்பட்ட உடன், அதை நாட்டைக்
காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என கண்டனம் செய்த ஜே.வி.பி, உடனடியாக அரசாங்கத்தை விட்டு விலகியது.
விடுதலைப் புலிகள் இந்தக் கொலைக்கு சதி செய்தது போலவே, இத்தகைய பாசிச தட்டுக்களில் உள்ள சக்திகளால்
கதிர்காமர் கொலைக்கான சதி செய்யப்பட்டிருக்கலாம்.
படுகொலை நடந்த உடனேயே, ஊடகங்களின் சில பகுதிகளின் பக்கபலத்துடன்
ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் அரசியல் எதிர்ப்புக்கு தயாராகின. "புலிகளை" பகிரங்கமாக குற்றஞ்
சாட்டத் தவறிய எவரும் விடுதலைப் புலிகளுக்கு உடந்தையானவராக அல்லது மிக மோசமானவராக கண்டனம்
செய்யப்பட்டார். கதிர்காமர் இறப்பதற்கு முன்னதாக அவரை விமர்சித்த பல செய்திப் பத்திரிகைகள், விடுதலைப்
புலிகளுக்கு தகவல்களை கசியவிட்டன என்ற கண்டனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. கொழும்பில் நிலவும் அழுகிப்போன
இனவாத அரசியல் காலநிலையில், இந்தக் கருத்துக்கள் வன்முறையான விளைவுகளை கொண்ட அச்சுறுத்தல்களாகும்.
சிங்களப் பேரினவாதத்தில் ஊறிப்போயுள்ள இரு பிரதான முதலாளித்துவக் கட்சிகளான குமாரதுங்கவின் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க), மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க) இந்தப்
பிரச்சாரத்திற்கு இணங்கிப் போயுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், பொதுக் கட்டமைப்பு உடன்படிக்கை சம்பந்தமாக
அரசியல் கட்சிகள் சதிவேலைகளிலும் உள்மோதல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற அதே வேளை, அவர்கள்
வியாழனன்று அவசரகால நிலையை அமுல்செய்வதற்கு ஒன்றுசேர்ந்து ஆதரவளித்தனர். அது 80 பாராளுமன்ற
உறுப்பினர்கள் வருகைதராத அல்லது புறக்கணித்த நிலையிலும் 21 க்கு 124 மேலதிக வாக்குகளால்
நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கிடையிலான கசப்பான முரண்பாடுகள் இருந்த போதிலும், தாம் ஒரு ஆழமான
அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுத்துக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டுள்ள ஆளும் கும்பல், எல்லாவற்றுக்கும்
மேலாக சாதாரண மக்கள் தலையீடு செய்வதை தவிர்க்கும் பொருட்டு, ஒரு தொடர்ச்சியான ஜனநாயக விரோத
நடவடிக்கைகளை அமுல்படுத்த ஒன்றுசேர்ந்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைத் தளபதி என்ற வகையில் அவசரகாலச் சட்டங்கள்
ஜனாதிபதிக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது. ஆயுதப் படைகளுக்கும் பொலிசுக்கும் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
"சந்தேக நபர்களை" விசாரணையின்றி தடுத்துவைக்கவும், வீடுகளில் தேடுதல் நடத்தவும் மற்றும் பொதுக் கூட்டங்களையும்
ஆர்ப்பாட்டங்களையும் தடை செய்யவும் முடியும். எந்தவொரு தொழில்துறையையும் "அத்தியாவசிய சேவையாக்கவும்"
வேலைநிறுத்தங்களையும் போராட்டங்களையும் சட்டவிரோதமாக்க குமாரதுங்கவால் முடியும். அவரால் கடுமையான
தணிக்கைகளை விதிக்கவும் முடியும்.
கொழும்பில் உள்ள ஆளும் வட்டாரத்தின் அரசியல் கலந்துரையாடல்களின் தனியியல்புகள்
பாராளுமன்றத்தில் காட்சிக்கு வந்துள்ளன. அவசரகால மசோதாவை அறிமுகப்படுத்திய தேசிய பாதுகாப்பு
அமைச்சரும் பிரதி பாதுகாப்பு அமைச்சருமான ரட்னசிரி விக்கிரமநாயக்க, அவசரகால நிலைமையை நீடிக்கச்
செய்வதற்கு கதிர்காமர் கொலை மட்டும் காரணம் அல்ல, எனப் பிரகடனம் செய்தார். யுத்த அச்சுறுத்தலுக்கு
சமனான வகையில் அவர் கூறியதாவது: "திறந்த மனதுடன் பேச்சுக்களுக்கு வருமாறு நாம் அதற்கு (விடுதலைப்
புலிகளுக்கு) அழுத்தம் கொடுக்கிறோம். அவ்வாறில்லையெனில், அல்லது அது விரும்பவில்லையெனில் நாங்கள்
வேறுவிதத்திலான அனுகுமுறையை எடுக்க வேண்டும், அல்லது ஒரு முடிவை எடுக்க வேண்டும்."
ஜே.வி.பி வாய்வீச்சாளரான விமல் வீரவன்ச, நாடு "ஒரு பகுதி யுத்தத்தை"
எதிர்கொண்டுள்ளது என பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன், யுத்த நிறுத்த உடன்படிக்கையை "ஒரு சிதைந்து போன
போலி ஆவணம்" என வகைப்படுத்தினார். "யுத்த நிறுத்தத்திற்கு முன்னர் இராணுவமும் விடுதலைப் புலிகளும்
ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். அரசாங்கம் சமாதானத்தைப் பேசிக்கொண்டிருக்கும் அதேவேளை,
விடுதலைப் புலிகள் யுத்தத்தில் ஈடுபடுகின்றனர்," என அவர் குறிப்பிட்டார். இதன் தெளிவான முடிவு, விடுதலைப்
புலிகள் புதிய நிபந்தனைகளுக்கு உடன்படாவிட்டால் மீண்டும் யுத்தத்திற்கு திரும்ப வேண்டும் என்பதாகும்.
பெளத்த பிக்குகளின் தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய, வெளிப்படையான யுத்த
ஆரவாரத்தை நாடியுள்ளது. ஜாதிக ஹெல உறுமய தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் ஐந்து கோரிக்கைகளை
முன்வைத்துள்ளார்: அவை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தல், விடுதலைப் புலிகளை
தடைசெய்தல், நோர்வே சமாதானத் மத்தியஸ்த்தர்களை வெளியேற்றல், "பயங்கரவாதத்தை நசுக்குவதற்காக"
அவசரகால அதிகாரங்களை அமுல்படுத்தல் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதான பேச்சுவார்த்தையாளர் அன்டன்
பாலசிங்கத்தையும் அவரது மனைவியையும் பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்துவதுமாகும். இவை ஏற்றுக்கொள்ளப்பட்டால்,
இத்தகைய கோரிக்கைகள் யுத்தத்தைப் பிரகடனம் செய்வதற்கு சமமானவையாகும்.
எதிர்க்கட்சி மெளனம்
இந்த வாரம், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன்
சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்காக ஒரு புதிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். ஆயினும்,
ஐ.தே.க பாரளுமன்றத்தில் அவசரகால நீடிப்புக்கு வாக்களித்ததுடன், அதன் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்யவேண்டாம்
என அரசாங்கத்திடம் மேலோட்டமாக கேட்டுக்கொண்டது. ஐ.தே.க உபதலைவர் கரு ஜயசூரிய, "வழமைநிலைமையை
குழப்புவதற்கு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படாது என நாம் முழுமையாக எதிர்பார்க்கிறோம்," என
பிரகடனம் செய்தார். ஆட்சியில் இருந்தபோது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் சர்வாதிகார அதிகாரங்களை
துஷ்பிரயோகம் செய்ததில் வலதுசாரி ஐ.தே.க பேர்போனதாகும்.
லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க), ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய பழைய
தொழிலாளர் வர்க்கக் கட்சிகள், ஆளும் கூட்டணியில் பங்காளிகளாக இருப்பதோடு குமாரதுங்கவின் ஸ்ரீ.ல.சு.க உடன்
பிரிக்கமுடியாது ஒன்றிப்போயுள்ளன. அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக விரோத அவசர கால
நிலைக்கு கொஞ்சமும் எதிர்ப்பின்றி வாக்களித்தன.
விடுதலைப் புலிகளின் பரிந்துரையாளர்களாக தற்போது செயற்படும் தமிழ்
முதலாளித்துவக் கட்சிகளின் குழுவான தமிழ் தேசிய கூட்டமைப்பு (தமிழ் கூட்டமைப்பு) அவசரகாலச் சட்டத்திற்கு
எதிராக வாக்களித்தது. தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜி. பொன்னம்பலம், அரசாங்கம்
"பிண்ணனியில் வேறு ஒரு உள்நோக்கைக் கொண்டுள்ளது" என துணிவின்றி குறிப்பிட்டதுடன், அரசாங்கம் விடுதலைப்
புலிகள் சம்பந்தமாக திடீர் முடிவுகளுக்கு பாய்கின்றது எனவும் தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களை
அடிப்படையாகக் கொண்ட மலையக மக்கள் முன்னணி, சட்டத்திற்கு எதிராக வாக்களித்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் (ஸ்ரீ.ல.மு.கா), வாக்கெடுப்பை பகிஷ்கரித்ததன் மூலம் அதனது ஜனநாயக விரோத பண்பை
வெளிக்காட்டியது.
வாக்களிப்பு முடிந்து சில மணிநேரங்களின் பின்னர், "யுத்த நிறுத்தத்தை மீளாய்வு
செய்வதற்காக" விடுதலைப் புலிகளுடன் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டும் எதிர்பார்ப்பில் நோர்வே பிரதமர்
கெஜெல் பொன்டெவிக்குக்கு குமாரதுங்க கடிதம் எழுதினார். விடுதலைப் புலிகள் நேரடிப் பேச்சுக்களுக்கு
உடன்பட்டுள்ளதாக நேற்று நோர்வே மத்தியஸ்தர்கள் அறிவித்தனர். இது சில ஆய்வாளர்களுக்கு, ஒரு
புதுப்பிக்கப்பட்ட சமாதான முன்னெடுப்புக்கான சமிக்ஞைகள் இருக்கக் கூடும் என பிரகடனம் செய்ய தூண்டுதல்
அளித்தது.
இந்த பேச்சுக்கள் யுத்த நிறுத்தத்தை தூக்கி நிறுத்துவதற்குப் பதிலாக, அதன் முழு
பொறிவுக்கும் வழிவகுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இலங்கை கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஹக்ருப் ஹக்லண்ட்
ராய்ட்டருக்கு கருத்துத் தெரிவிக்கையில்: "அது மீளாய்வு செய்வது பற்றிய பிரச்சினையல்ல. அது அதை (யுத்த
நிறுத்தத்தை) அமுல்படுத்துவது சம்பந்தமான பிரச்சினையாகும்," எனத் தெரிவித்தார். வேறு வார்த்தைகளில்
சொன்னால், விடுதலைப் புலிகளைப் போலவே நோர்வே மத்தியஸ்த்தர்களும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை
சீரமைக்க வேண்டிய பிரச்சினை இல்லை என்பதில் கவனமாக உள்ளனர். ஆயினும், கொழும்பில் ஆவணத்தை மீண்டும்
எழுதுவதற்கான ஆரவாரங்கள் அதிகரித்து வருகின்றன.
வியாழக் கிழமை ஆசிரியர் தலையங்கத்தில், வலதுசாரி ஐலண்ட் பத்திரிகை,
யுத்த நிறுத்த உடன்படிக்கை மீண்டும் கலந்துரையாடப்பட வேண்டும் என மூடிமறைக்காமல் அழைப்பு விடுத்தது. "அரசாங்கம்
அடியெடுத்து வைக்கவேண்டிய நேரம் இதுவே. யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ் விடுதலைப் புலிகள் அனுபவித்து
வருகின்ற சலுகைகள் பறிக்கப்பட வேண்டும். தன்னை தகவமைவுபடுத்திக் கொள்ளும் பொருட்டு ஜனநாயக அரசியலில்
ஈடுபடவே விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் நுழையும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், அது ஒருதலைப்பட்சமாக பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக் கொண்டதோடு அந்த சலுகைகளை எதிரிகளைக்
கொல்ல பயன்படுத்திக் கொண்டதுடன் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளையும் விரிவுபடுத்தியுள்ளது. அதன் 'அரசியல்
நடவடிக்கைகள்' தடைசெய்யப்படுவதோடு விடுதலைப் புலி அலுவலர்கள் உடனடியாக பிரதேசங்களில் இருந்து வெளியேற்றப்பட
வேண்டும். விடுதலைப் புலிகளின் கொலையாளிகள் ஊடுருவுவதைத் தடுக்க வேண்டும் என கருதப்படும் எந்தவொரு பிரதேசமும்
தேடுதல்களுக்கும் பரிசோதனைகளுக்கும் உள்ளாக்கப்பட வேண்டும்," என அது குறிப்பிட்டுள்ளது.
ஒற்றைக்கண் பார்வையில் கருத்துத் தெரிவித்துள்ள ஐலண்ட் குறிப்பிடத்
தவறியது என்னவெனில், குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் இனவாதப் பதட்டநிலைமைகள் வேண்டுமென்றே கிளறிவிடப்படுவது,
தான் அனுகூலமாகக் கருதும் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் பாதுகாப்பு படைகளாலேயே என்பதாகும்.
"படுகொலைகள்" விடுதலைப் புலிகளால் மட்டுமன்றி, புலிகளில் இருந்து பிரிந்து சென்ற, இராணுவத்தின் ஒரு பகுதியினரின்
மறைமுக ஆதரவைக் கொண்டுள்ள கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான குழுவாலும் மேற்கொள்ளப்படுகின்றன.
கிழக்கில் விடுதலைப் புலி அலுவலர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகிறார்கள். கொழும்பு
ஊடகங்கள் இது பற்றி ஒரு சொல்லில் கூட விமர்சிப்பதில்லை.
வெள்ளியன்று இன்னுமொரு ஆசிரியர் தலையங்கத்தில், யுத்த நிறுத்தத்தை தொடர்ந்தும்
பேண அழுத்தம் கொடுத்துவருவதற்காக பெரும் வல்லரசுகளையும் ஐலண்ட் கசப்புடன் தாக்கியுள்ளது.
"பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்ற போலிநடிப்பை சுட்டிக்காட்டியுள்ள அது: எந்தவொரு கேள்வியும்
இன்றி, பொது இடங்களில் வைத்து தற்கொலைக் குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் நபர்களின் மூளை சிதறுண்டு
போகுமளவுக்கு துப்பாகிச் சூடு நடத்துவது சம்பந்தமாக பிரித்தானியாவுக்கு எந்தவொரு சந்தேகமும்
இல்லையெனில்.... முன்கூட்டியே பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக வலியத் தாக்கும்
நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்காவால் முடியுமெனில், நிகழ்கால நிலைமைகளின் அடிப்படையில் யுத்த
நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்யவோ அல்லது அதை இரத்து செய்யவோ இலங்கையாலும் முடியும்," என
அது பிரகடனம் செய்துள்ளது.
பிரித்தானியாவும் அமெரிக்காவும் கொழும்பின் சொந்த "பயங்கரவாதத்தின் மீதான
யுத்தத்திற்கு" ஆதரவளிக்க மறுத்துவருவதையிட்டு இலங்கையின் ஆளும் தட்டின் சில பகுதியினரின் அதிருப்தியை ஐலண்ட்
தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. வாஷிங்டனும் லண்டனும் யுத்த நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது இலங்கையில் சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கான உள்ளார்ந்த அக்கறையினால் அல்ல. அதை விட நாட்டின் நீண்டகால உள்நாட்டு யுத்தமானது தெற்காசியாவிலும்,
குறிப்பாக பிரதான மலிவு உழைப்பு களமாக தோன்றியிருக்கும் இந்தியாவிலும் அமெரிக்காவின் பொருளாதார மற்றும்
மூலோபாய நலன்களை அச்சுறுத்தும் ஒரு ஆபத்தான ஸ்திரமற்றநிலையை ஏற்படுத்தும் காரணியாகக் கருதப்படுகிறது.
தற்போது யுத்தத்திற்கு பேச்சுவார்ததை மூலமான முடிவுகாண வாஷிங்டன் அழுத்தம் கொடுத்தாலும், அந்த தந்திரம்
மாற்றமடையக் கூடும்.
அரசியல் முட்டுக்கட்டை
இலங்கையில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி, மீண்டும் யுத்தம் வெடிப்பதற்கான
ஆபத்து பற்றியும் உழைக்கும் மக்களை அடக்குவதற்கு சர்வாதிகார வழிமுறைகள் பயன்படுத்தப்படவிருப்பது பற்றியும்
மீண்டும் மீண்டும் எச்சரித்து வந்துள்ளது. பாராளுமன்ற ஆட்சி துரிதமாக சோர்வடைந்து வருகிறது. அடுத்தடுத்து
ஆட்சி மாறுவதானது சமாதானத்திற்கும் தரமான வாழ்க்கை நிலைமைக்குமான மக்களின் அபிலாஷைகளை திருப்திப்படுத்த
இந்த அரசாங்கங்கள் இலாயக்கற்றவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் ஆழமான அந்நியப்படுத்தலுக்கும் முழு ஸ்தாபனத்துக்கும்
எதிரான பகைமை வளர்ச்சியடைவதற்கும் வழிவகுத்துள்ளது. இந்த அரசியல் நிகழ்ச்சிப் போக்கு டிசம்பர் 26 சுனாமியால்
மிகவும் தீவிரமாகியுள்ளது. இந்தப் பேரழிவில் தீவின் பெரும்பகுதி அழிந்துபோயுள்ளதுடன் 30,000 பேர் உயிரிழந்தும்
இரண்டரை இலட்சம் பேர் வீடுவாசல்களை இழந்துமுள்ளனர்.
ஆகஸ்ட் 1 சோ.ச.க வெளியிட்ட ஒரு அறிக்கையில்: "கடந்த ஐந்து வருடங்களுக்கு
மூன்று பொதுத் தேர்தல்கள் --2000, 2001 மற்றும் 2004-- நடைபெற்றுள்ள போதிலும், ஒவ்வொன்றும் புதிய
நெருக்கடிக்கான அடித்தளத்தை இட்டனவேயன்றி எதையும் தீர்க்கவில்லை. பிரதான அரசியல் கட்சிகள் ஒரு கூட்டு
மூலோபாயத்திற்கு உடன்பட முடியாமல் இருப்பதோடு அவை சாதாரண உழைக்கும் மக்களின் தேவைகள் மற்றும்
அபிலாஷைகளின் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் இலாயக்கற்றுள்ளன. இதன் பெறுபேறாக, அவர்கள்
பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகள் மூலம் தற்போதைய முட்டுக்கட்டைக்கு முடிவுகட்ட முனைகின்றனர்,"
என பிரகடனம் செய்திருந்தது.
இந்த முடிவு, அவசரகால நிலையை நீடிப்பதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பின்
மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. யுத்த அச்சுறுத்தல் தலைநீட்டுகின்ற சமயத்தில், ஆளும் கும்பல்கள் உழைக்கும் மக்களின்
ஜனநாயக உரிமைகளை நசுக்குவதன் பேரில் தமது வேறுபாடுகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துள்ளதுடன் எந்தவொரு
அரசியல் எதிர்ப்பையும் அடக்குவதற்காக இந்த அதிகாரத்துடன் அவர்கள் ஆயுதபாணிகளாகியுள்ளனர். 2002
பெப்பிரவரியில் யுத்த நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டதில் இருந்து அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது இது
இரண்டாவது தடவையாகும். இந்த வருட ஆரம்பத்தில், குமாரதுங்க இதைச் செய்வதற்காக சுனாமியை
சாக்குபோக்காக்கிக் கொண்டார்.
ஏற்கனவே இந்த அவசரகாலச் சட்டம் கதிர்காமர் கொலைச் "சந்தேகநபர்களை"
சுற்றிவளைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆயினும், இந்த நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளின் அடுத்த
தாக்குதல்களை முறியடிப்பதற்காக என்ற பெயரில் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழர்
வாழும் பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளும் இரவுநேர தேடுதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர்கள்
அதிகளவில் வாழும் பிரதேசத்தில் இருந்து வரும் பஸ்கள் உட்பட வாகனங்களும் கடுமையான பரிசோதனைக்கு
உட்படுத்தப்படுகின்றன. தமிழர்களை நோக்கி பயன்படுத்தப்படும் இனவாத வார்த்தை துஷ்பிரயோகங்கள் பற்றி
அடிக்கடி வெளிவரும் அறிக்கைகளில் இருந்து பாதுகாப்பு படையினரின் மனப்பான்மை தெளிவாகிறது. கொழும்புக்கு
வெளியில் கண்டி மற்றும் தம்புள்ளையிலும் கூட கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவசரகால சட்டத்தை பயன்படுத்துவது தமிழர்களுக்கு மட்டும்
வரையறுக்கப்பட்டதல்ல. சீரழிந்து வரும் வாழ்க்கை நிலைமை, சுனாமிக்குப் பிந்திய மீள் கட்டுமான வேலைகள்
மேற்கொள்ளப்படாமை, போக்குவரத்து, பெற்றோல் மற்றும் ஏனைய பொருட்களின் அதிகரிப்பு மற்றும் தொழில்
மற்றும் வேலைநிலைமைகள் மீதான தனியார்மயமாக்கல் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பின் தாக்கங்களுக்கு
எதிராகவும் உழைக்கும் மக்களின் ஆர்ப்பாட்டங்களுடன் சமூக அமைதியின்மையும் வளர்ச்சியடைந்து வருகின்றது. கடந்த
இரு வாரங்களுக்குள் மட்டும், சம்பள உயர்வுக்காக சுகாதார ஊழியர்களும், தமது தொழில்களை நிரந்தரமாக்கக்
கோரி பொதுத்துறை பயிலுனர்களும் மற்றும் வேலை இடைநிறுத்தத்திற்கு எதிராக ஆடை உற்பத்தி தொழிலாளர்களும்
குறிப்பிடத்தக்க போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
பெரும் வர்த்தகர்கள் இந்த எதிர்ப்புகளுக்கு எதிராக பாய்ந்து விழுவதற்கான ஒரு
வழிவகையாக அவசரகால நிலைமையை நோக்குகின்றனர். கதிர்காமர் கொலைசெய்யப்பட்ட பின்னர், இலங்கையின்
வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் ஒரு குடை அமைப்பான கூட்டு வர்த்தக சம்மேளனம் வெளியிட்ட ஒரு
அறிக்கையில், "ஒழுங்குமுறை வீழ்ச்சியடைந்திருப்பது சம்பந்தமாகவும்" பொருளாதாரம் மற்றும் முதலீட்டின் மீதான
தாக்கத்தைப் பற்றியும் அக்கறை செலுத்தியிருந்தது. அது சட்டம், சமாதானம் மற்றும் ஸ்திரநிலைமையை
உருவாக்கவும் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக ஒரு பொது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தவும்
அழைப்புவிடுத்தது.
சோ.ச.க ஆகஸ்ட் 1ம் திகதி வெளியிட்ட அறிக்கையில்: "இந்த நெருக்கடியின்
மையம் ஒரு அடிப்படையான இக்கட்டு நிலையாகும். பெரும் வல்லரசுகளின் பக்கபலத்துடன், வர்த்தகத்தில்
செல்வாக்கு செலுத்தும் பகுதியினர், பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் தீவை ஒரு மலிவு உழைப்பு களமாக மாற்றுவதற்குமான
திட்டங்களின் ஒரு பாகமாக நாட்டின் அழிவுகரமான உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு நெருக்கி
வருகின்றன. எவ்வாறெனினும், இந்த மூலோபாயமானது யுத்தத்திற்கு பொறுப்பாளியாக முதலிடத்தில் இருக்கும் இனவாத
அரசியலால் இடைவிடாமல் தடைக்குட்படுத்தப்பட்டது," என விளக்கியிருந்தது.
பெயரளவிலான சமாதான முன்னெடுப்பானது, நீண்ட தூரம் செல்லும் பொருளாதார
மறுசீரமைப்பு திட்டத்தை அமுல்படுத்தவும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது கூட்டுச் சுரண்டலை உக்கிரப்படுத்தவும்
தீவின் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆளும் கும்பல்களுக்கிடையில் ஒரு இனரீதியிலான அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கையை
எட்டுவதேயாகும். கதிர்காமரை விடுதலைப் புலிகள் படுகொலை செய்திருந்தால், அது தமிழ் முதலாளித்துவ தட்டுக்கள்
மத்தியிலான ஆழமான அதிருப்தியையும் மனக்கசப்பையும் பிரதிபலிப்பதாகும். ஒரு தனியான தமிழ் அரசு
கோரிக்கையை கைவிட்டு மூன்று வருடங்களாகியுள்ள போதிலும், விடுதலைப் புலிகள் கொழும்பில் உள்ள இலங்கையின்
முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு கனிஷ்ட பங்காளியாகும் அபிலாஷையில் இருந்து மிகவும் தொலைவிலேயே உள்ளனர்.
தொழிலாளர்கள் மீண்டும் நாட்டை யுத்தத்திற்குள் தள்ள தயார் செய்துகொண்டிருக்கும்
எந்தவொரு முதலாளித்துவ அரசியல் சேவகர்கள் மீதும் நம்பிக்கை வைக்க முடியாது. தொழிலாள வர்க்கம் தவிர்க்க
முடியாமல் கட்டணம் செலுத்தத் தள்ளப்பட்டுள்ளது. இனவாத அரசியல் நஞ்சை நிராகரித்து, தரமான வாழ்க்கை
நிலைமைகள், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமாதானம் போன்ற தமது சொந்த வர்க்க நலன்களுக்காக ஐக்கியப்படுமாறு
தொழிலாளர்களுக்கு சோ.ச.க அழைப்பு விடுக்கின்றது. இது சோசலிச முன்நோக்கிற்கு போராடுவதற்காக சிங்களத்,
தமிழ் மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் ஒரு சக்திவாய்ந்த சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலமே
சாத்தியமாகும். அது அனைத்துலகிலும் மற்றும் தெற்காசியாவிலும் ஐக்கிய சோசலிச குடியரசுகளை ஸ்தாபிப்பதற்கான
போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா--ஈழம் ஐக்கிய சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதற்கான போராட்டமாகும்.
Top of page |