World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஐரோப்பா : பிரான்ஸ்France: widening anti-police riots provoke government crisis பிரான்ஸ்: போலீசிற்கு எதிராக பரவிவரும் கலகங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுக்கின்றன By Antoine Lerougetel பாரிஸ் புறநகர்ப்பகுதிகளில் போலீசாருக்கும் முக்கியமாக வட ஆபிரிக்க, ஆபிரிக்க வம்சாவளி இளைஞர்களுக்கும் இடையே இரவுகளில் நடக்கும் கலகங்களும் மோதல்களும் இரண்டாம் வாரமாக தொடர்கின்றன. புதன் இரவு ஆயிரம் போலீஸ் அதிகாரிகள் பாரிசின் வடமேற்கு பகுதியான Seine-Saint-Denis பகுதியில் குவிக்கப்பட்டனர்; இந்த மாவட்டத்திக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் 40 சிறுநகரங்கள் வன்முறையினால் பாதிக்கப்பட்டன. போலீஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. நிகழ்வுகள் ஓர் உள்நாட்டுப் போர் அளவிற்கு சென்றுவிட்டதாக ஒரு அரசாங்க செய்தித் தொடர்பாளர் விவரித்தார். பிரெஞ்சு அரசாங்கத்திற்குக் கடுமையான நெருக்கடியை பூசல்கள் ஏற்படுத்தியுள்ளன. பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் கனடாவிற்கு புறப்படவிருந்த பயணத்தை நிறுத்திவைத்துள்ளார்; உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசி ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயணத்தை இரத்து செய்துவிட்டார். நிலைமை பரிசீலிப்பதற்காக டு வில்ப்பன் மற்றும் ஜனாதிபதி ஜாக் சிராக்கின் அரசாங்கம் நெருக்கடிக் கூட்டங்களை நடத்தியுள்ளது. அக்டோபர் 27ம் தேதி போலீசாரிடம் இருந்து தப்பியோடுவதற்காக ஒரு மின்னழுத்த மாற்றுங் கருவி (Electrical Transformer) ஒன்றின் மீது ஏற முயன்றபோது இரு இளைஞர்கள் மின்தாக்குதலில் உயிரிழந்ததை அடுத்துக் கலகம் தொடங்கியது. Clichy-sous-Bois என்னும் வடக்குப் புறநகரில் சிறுவர்கள் இறந்தது இளைஞர்களுக்கும் சார்க்கோசியால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த 400--500 கலகப்படை போலீசாருக்கும் இடையே மோதலை தூண்டிவிட்டது. அப்பொழுதில் இருந்து ஒவ்வொரு இரவும் வன்முறை எதிர்ப்புக்களும், கைகலப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருப்பதோடு, ஏனைய தொழிலாளர் வாழ் புறநகர்ப் பகுதிகளுக்கும் பரவிவிட்டது. இந்த வெடிப்புக்கள் திகைப்புத் தரும் வறுமை, மிகப் பெரிய வகையில் உள்ள வேலையின்மை மற்றும் சார்க்கோசியால் வெளிப்படையாக துண்டிவிடப்பட்ட இனவெறி வகையில் சட்ட ஒழுங்கு பிரச்சாரம் ஆகியவற்றின் விளைவு ஆகும்; கோலிச UMP யிலேயே ஷிராக்கிற்கு எதிரான முக்கிய போட்டியாளராக சார்க்கோசி கருதப்படுவதோடு, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு பதிலாக வரக்கூடிய ஜனாதிபதி என்றும் கருதப்படுகிறார். புலம்பெயர்ந்தோர் வசிக்கும் சேரிகளுக்கு சார்க்கோசி ஆயுதமேந்திய போலீசாரை அனுப்பியுள்ளதோடு, அங்கு வசிக்கும் மக்கள் "கழிவுகள்", "அழுகி கிடப்பவர்கள்" என்றும் வர்ணித்துள்ளார். புதன்கிழமையன்று அமைச்சரவை குழுக் கூட்டம் ஒன்றும் தேசிய சட்டமன்றத்தில் கோலிச பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றும் நடைபெற்றன. ஒரு வினா எழுப்பும் கூட்டம் ஒன்றும் தேசிய சட்ட மன்றத்தில் நடத்தப்பட்டது; இதில் சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சார்கோசியை பெரிதும் குறைகூறினார்கள்; அவர் மெளனமாக அமர்ந்திருந்தார். அவருடைய சட்டம், ஒழுங்கு கொள்கைகள், ஆத்திரமூட்டும் வகையில் உள்ள அறிக்கைகள்தான் ஒரு சமூக வெடிப்பிற்குக் காரணம் என உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். ஒரு ஒற்றுமையான அரசாங்கம் இருக்கிறது என்பதைக் காண்பிக்கும் வகையில் சார்க்கோசி சார்பில் டு வில்ப்பன் பதில் கூறினார். ஆனால் இந்த இரகசிய கோலிசக் கட்சி கூட்டத்தில் பிரதிநிதிகள் சார்க்கோசியை கடுமையாக தாக்கிப் பேசியதாக பரந்த தகவல்கள் கூறுகின்றன. அமைச்சர்குழுக் கூட்டத்தில், புறநகர் மேம்பாட்டுத்திட்டம் ஒன்று விரைவாக செயல்படுத்தவேண்டும் என்று ஷிராக் கூறினார். தவறு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தயாரிப்பதில் சார்க்கோசிக்கு பொறுப்பு ஏதும் வேண்டாம் என்று கூறிய அவர் அதை டு வில்ப்பனிடம் ஒப்படைத்தார்; டு வில்ப்பன் இதற்குப் பின், Seine-Saint-Denis பகுதியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களில், தான் "சம வாய்ப்புக்கள்", "செயற்திட்டம்" ஆகியவற்றிற்காக பாடுபடப்போவதாக கூறினார்; இப்பிரிவில் Clichy மற்றும் பல அத்தகைய சமூகங்களும் குவிந்துள்ளன; அக்டோபர் 27ல் இருந்த டஜனுக்கும் மேற்பட்ட வன்முறை வெடிப்புக்கள் இங்கு ஏற்பட்டுள்ளன. 2007 ஜனாதிபதி தேர்தலில் டு வில்ப்பன் சார்க்கோசிக்கு எதிராக போட்டியிடக் கூடியவராக இருக்கக் கூடும். புறநகர் குடியிருப்புக்களில் உள்ள இளைஞர்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் சார்க்கோசி உரை நிகழ்த்துவது, UMP மற்றும் தன்னுடைய தலைமையின்கீழ் வலதுசாரி இனவெறி இயக்கத்தை திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியே ஆகும். தான் ஜனாதிபதி பதவியை பெறுவதற்கு இது உதவும் என்று அவர் நம்புவதோடு சமூக நலன்புரி அரசு, தொழிலாளர்கள் உரிமை தகர்த்தல் இவற்றை எதிர்க்கும் செயல்களை முறியடிப்பதற்கும், தொழிலாள வர்க்கத்தின் மீதான உரிமைகளை தாக்குவதற்கு ஆதரவை திரட்டவும் இது பயன்படும் என்று அவர் நம்புகிறார். தற்போதுள்ள அரசாங்கத்தின் பதவிக்காலம் 2002ல் தொடங்கியதில் இருந்து, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை குறைப்பதற்கும், போலீஸ் அதிகாரங்களை அதிகரிப்பதற்கும் சார்க்கோசி பெரிதும் முயன்று வருகிறார். அமைதியற்ற குடியிருப்புக்களுக்கு அனுப்புவதற்காக அவர் சிறப்பு போலீஸ் பிரிவுகளை அமைத்துள்ளார். புலம்பெயர்ந்துள்ள இளைஞர்களை பேய்கள் என்று வர்ணித்தல் மற்றும் முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வுகளை தூண்டிவிடுவது என்று செய்தி ஊடகம் நடத்தும் பிரச்சாரங்களுடன் சார்க்கோசியின் முயற்சி அக்கம்பக்கமாக இணைந்து செல்கிறது; இதன் மையத்தானமாகத்தான் அரசாங்க பள்ளிகளில் முஸ்லீம்கள் தலையை மறைக்கும் துணி அணிதல் சட்டவிரோதம் என்று ஆக்கப்பட்டது; அச்சட்டம் 2004ல் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் ஸ்தாபனத்தின் ஆதரவுடனும் இயற்றப்பட்டது; சோசலிஸ்ட் கட்சியும் அதில் அடங்கும். இருபது ஆண்டுகளுக்கும் மேலான கடுமையான சிக்கன நடவடிக்கை கொள்கைகள், மற்றும் தொழிலாளர் வாழ்க்கைத்தரம், உரிமைகள் மீதான தாக்குதல்கள், உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் மற்றும் வலதுசாரி கட்சியினர் தலைமையில் செயல்பட்டுவரும் தொடர்ச்சியான அரசாங்கங்களினால் விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அவை சமூக நெருக்கடிகளை கொதிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளன. நீண்ட காலமாக தேசிய அளவில் 10 சதவிகிதம் வேலையின்மை என்பது, பல பாரிஸ் புறநகரக் குடியிருப்புக்களில் 50 சதவிகிதம் என்று உயர்ந்துள்ளது. வேலைப் பாதுகாப்பின்மை, குறுகிய ஒப்பந்தக் கால வேலை என்பவற்றிற்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் கோலிச அரசாங்கம் கொண்டுள்ள கொள்கை இன்னும் கடுமையான முறையில் வேலையற்றோருக்கு கிடைக்கும் நலன்களை காட்டுமிராண்டித்தனமாக, பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்குக் குறைத்துவிட்டன. எரிவாயு, பெட்ரோல் விலைகள் உயர்வு இச்சமூகங்களிடையே இன்னும் கூடுதலான பொருளாதார அழுத்தத்தை அதிகரித்துள்ளன. Chene Pointu குடியிருப்பில் நடந்த பெரும் துயரத்திற்கு அன்றிரவு மக்கள் கொடுத்த விடையிறுப்பு இப்பொழுது பாரிசின் பல புறநகர்ப்பகுதிகளிலும் பரவியுள்ளது; சமீப நாட்களில் சிறு எண்ணிக்கையிலான இளைஞர் குழுக்கள் வாகனங்களையும், குப்பைத் தொட்டிகளையும் எரிப்பது என்று தொடங்கி, தீயை அணைக்க முற்படும் தீயணைப்புப் படையினரை தாக்குதல் மற்றும் போலீசாருடன் தொடர்ந்து கைகலப்பை மேற்கொள்ளுதல் என்று ஆகியுள்ளது.பாரிஸ் கலகங்கள் இன்னும் பரந்த வகையில் பிரான்ஸ் முழுவதும் சமூக எழுச்சிகளை ஏற்படுத்துமோ என்று அரசாங்கம் பயப்படுகிறது. Seine-Saint-Denis வட்டாரத்தில் உள்ள சிறுநகரங்கள் மட்டும் பாதிப்பிற்கு உட்படவில்லை; பாரிஸ் பெருநகரத்தில் உள்ள Val d'Oise, Yvelines வட்டாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கண்ணீர்ப்புகை தாக்குதல் ஒன்று அக்டோபர் 31ம் தேதி ஒரு மசூதிமீது நடத்தப்பட்டதை அடுத்து அழுத்தங்கள் பெருகிவிட்டன. மறுநாள் இரவு, 1250 கார்கள் எரிக்கப்பட்டன; குறைந்து ஒரு ஆரம்ப பள்ளிக் கட்டிடமாவது சேதப்படுத்தப்பட்டது. ஆயிரம் கிலோமீட்டர் தள்ளி ஸ்பானிய எல்லைக்கு அருகில் உள்ள Pau வட்டாரத்தில் உள்ள Ousse des Bois குடியிருப்பு இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பை மூன்று தொடர்ந்த இரவுகளில் கண்டுள்ளது. ஆட்சி வட்டங்களில் கவலை வெளிப்பட்டுள்ள போதிலும்கூட, அமைதியின்மையை சமாளிப்பதற்கு இன்னும் கூடுதலான முறையில் அடக்குமுறை வேண்டும் என்பதில்தான் கருத்தொற்றுமை உள்ளது. சமூக நல்லிணக்க மந்திரியான Jean-Louis Borloo அரசாங்கம் "உறுதியோடு" செயல்படவேண்டும் என்று கூறினார்; UMP பிரதிநிதியான Jacques Myard அரசாங்கம் "படிப்படியாக இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் கார்களை எரிப்பதையும், வணிகத்தை அழிப்பது போன்றவற்றில் ஈடுபடுவதையும்" வெறுமனே பார்த்துக் கொண்டு வலுவற்றதாக உள்ளது என்று குறைகூறியுள்ளார். நிலைமையை, போலிக் காரணமாக பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதையும், அழிப்பதையும்தான் இந்த இளைஞர்கள் கருத்திற் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். சார்க்கோசி எடுத்த நடவடிக்கைகளின் கடுமையை குறை கூறுவதுபோலும், அரசாங்கம் சமூகச் செலவினங்களை சீரமைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தாலும், சோசலிஸ்ட் கட்சியின் அனைத்தும் பிரிவுகள், பசுமைக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்தும் கலகத்தை ஒடுக்குமாறு போலீசாரை வற்புறுத்துகின்றனர். முன்பு லியோனல் ஜோஸ்பனுடைய பன்முக இடது அரசாங்கத்தில் (1997-2002) மந்திரியாக இருந்தவரும், 2007 தேர்தலில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான சோசலிஸ்ட் கட்சியின் டொமினிக் ஸ்ட்ரவுஸ் கான், Europe1 வானொலியில் கூறினார்: "Clichy-sous-Bois நிகழ்வுகளை நான் முற்றிலும் கண்டிக்கிறேன். சட்டம், ஒழுங்கு என்று வரும்போது மிகத் தீவிரமான அணுகுமுறைதான் இருக்கவேண்டும்... கடுமையான ஒடுக்குமுறை மற்றும் தடுப்புமுறைகள் கையாளப்படவேண்டும்." சோசலிஸ்ட் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த மாநகர பகுதிகளின் தலைமையை நீண்ட காலம் கொண்டிருந்து, நிலைமையில் அரிப்புக்கள் ஏற்பட்ட இக்காலக்கட்டத்தில் பிரான்சின் ஆளும் வர்க்கத்திற்காக அமைதியை பாதுகாத்திருக்கின்றனர். இப்பொழுது பிரான்சை அதிர்விற்கு உட்படுத்தியுள்ள அடக்கப்பட்ட, வறிய இளைஞர்களின் சீற்றம் வெடிப்பதற்கு, அடித்தளத்தில் இருந்த கடும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போலீஸ் குவிப்பு ஆகியவற்றிற்கு இவையும் துணை நின்றுள்ளன. |