World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Paris hit by anti-police riots

போலீசிற்கு எதிரான கலகங்களால் பாரிஸ் கடும் பாதிப்பு

By Antoine Lerougetel
2 November 2005

Back to screen version

ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலார்கள் வாழும் புறநகர் உள்ளாட்சிக் குடியிருப்பு ஒன்றில் இருந்து, அக்டோபர் 27 அன்று, போலீசாரின் தாக்குதலில் இருந்து தப்பியோடத் தலைப்பட்ட இரண்டு இளைஞர்கள் மரணமடைந்தனர். பாரிசின் வடக்கு புறநகர்ப்பகுதியான Clichy-sous-Bois இல் இருந்த இரு இளைஞர்களின் மரணம் குடியேறிய இளைஞர்களுக்கும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்க்கோசியினால் அனுப்பப்பட்ட 400ல் இருந்து 500 பேர் கொண்ட கலகம் அடக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வன்முறை மோதல்களைத் தூண்டிவிட்டுள்ளது.

இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தெரு மோதல்கள் வார முடிவுவரை தொடர்ந்தது. குறைந்தது 70 கார்களும் பல குப்பைத் தொட்டிகளும் தீக்கிரையாயின. கிட்டத்தட்ட 150 ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் தோட்டாக்களையும், எண்ணிக்கை கணக்கிடமுடியாத கண்ணீர்ப்புகை வீச்சுக்களையும் போலீசார் பயன்படுத்தியதோடு, அப்பகுதியில் ஏராளமாகவும் குவிந்துள்ளனர்.

ஆளும் கோலிசக் கட்சியின் தலைவரும், 2007 ஜனாதிபதித் தேர்தல்களின் அவருடைய கட்சியின் முக்கிய வேட்பாளராகவும் இருக்கும் சார்க்கோசி கடுமையான சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையை தன்னுடைய அரங்காக கொண்டு புகழை வளர்த்து வருகிறார். "இறப்பு ஏற்படுத்தாத" ஆயுதங்கள் அதிகாரிகளுக்கு அதிகமாக கிடைக்க ஏற்பாடுகள் செய்வதாக அவர் உறுதிமொழி அளித்துள்ளார். கலகம் அடக்கும் போலீஸ் படைகள் 17 பிரிவுகளும், இடம் பெயர்ந்து செல்லும் போலீஸ் பிரிகேடுகள் 7 என்ற எண்ணிக்கையிலும் "தொல்லைகள்" நிறைந்த குடியிருப்புக்களில் நிரந்தரமாக நிறுத்திவைக்கப்படும் என்றும், சீருடையணியாத அதிகாரிகளும் அங்கு உள்ள "கும்பல் தலைவர்கள், போதை மருந்து விற்பனையாளர்கள், வன்முறைக் குழுத்தலைவர்கள்" ஆகியோரை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக அனுப்பி வைக்கப்படுவர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Chene-Pointu குடியிருப்பில் வியாழன் மாலை நடந்த நிகழ்வுகள், பிரான்சின் புறநகர் அரசாங்க குடியிருப்புக்களில் வசிக்கும் மக்கள் போலீசார் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் கொண்டுள்ள ஆழ்ந்த பயத்தையும் விரோதப் போக்கையும் நிரூபிக்கின்றன. பொதுவாக இப்பிரிவு மக்கள் நகரங்கள், சிற்றூர்களில் புறநகர் பகுதிகளில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

மிக நேர்த்தியாகவும் உயர்தரத்திலும் பராமரிக்கப்படும் நகர மையங்களில் இருந்து இப்பகுதிகள் முற்றிலும் எதிரிடையாக இருப்பதுடன், வசதிகள் குறைவாகவும், அதிலும் இளைஞர்களுக்கான விஷேடமான உயரமான அடுக்கு மாளிகைகளை கொண்டு இருக்கின்றன. இத்தகைய குடியிருப்புக்களில் வேலையின்மை விகிதம் பொதுவாக தேசிய சராசரியாக இருக்கும் 10 சதவிகிதத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாகக் காணப்படும். பாரிசை சுற்றி இத்தகைய குடியிருப்புக்கள் உள்ளன; இவற்றில் பெரும்பாலனவை சோசலிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள நகரமன்றங்களும் உள்ளூராட்சி மன்றங்களும் ஆகும்.

கடந்த வியாழன் மாலை கிட்டத்தட்ட 5.30 மணியளவில், 15 வயது Bouna, 17 வயதான Zzyed மற்றும் 21 வயதான Metin மூவரும் ஒரு மின்சார நிலையத்தின் முட்கம்பிகளைக் கொண்ட மூன்று மீட்டர் உயர வேலையைத் தாண்டிக் குதித்திருந்தனர். Bouna, Zayed இருவரும் உடல் கருகி இறந்தனர்; கடுமையான தீப்புண்களுக்காக Metin மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்தியாளர்களிடம் ஓர் இளைஞர் கூறியதாவது: "அவர்கள் ஒரு கால்பந்து விளையாட்டை பார்த்துவிட்டு வந்திருந்தனர். தாங்களும் கொஞ்ச நேரம் பந்தை தட்டிக் கொண்டிருக்க முடிவெடுத்தனர்..." சற்று வேறுவிதமான தகவல்கள் வந்தபோதிலும்கூட, போலீஸ் அங்கு வந்தவுடன் சிறுவர்கள் அவர்களிடம் இருந்து தப்புவதற்கு ஓடினர் என்பது தெளிவு.

பொபினி பகுதியின் அரசாங்க வழக்கு தொடுனர் செய்தியாளர்களிடம் "அவர்கள் தவறு செய்த இளைஞர்கள் அல்ல, அவர்கள் எவ்விதபிழையும் செய்யவில்லை என்பதை காணும்போது இது இன்னும் கூடுதலான சோகத்தைக் கொடுக்கிறது." என கூறினார். இது இச்சிறுவர்கள் திருட்டு, சொத்து நாசம் செய்பவர் என்று சார்க்கோசியும் பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனும் ஆரம்பத்தில் கொடுத்த அறிக்கையில் கூறப்பட்ட கருத்தை இது முற்றிலும் நிராகரிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுடைய பெற்றோர்களின் சார்பாக உள்ள வக்கீல் Jean-Pierre Mignard ஒரு மிக முக்கியமான வினாவை எழுப்பினார்: "எந்தத் தவறும் செய்யாத இளைஞர்கள் பெரும் அச்சுறுத்தல் அபாயத்தால் உந்தப்பெற்று, இத்தகைய ஆபத்தான இடத்திற்கு ஏன் தப்பிச் செல்ல முற்பட்டனர்?"

அக்டோபர் 29 பதிப்பில் Le Figaro கொடுத்த தகவல்: "அவர்களில் பலர் (குடியிருப்புக்களில் வசிப்பவர்கள் பலர்) நிகழ்ச்சிகளினால் அதிர்ச்சியடைந்தவர்கள், நேற்று போலீசாரின் நடவடிக்கை பற்றிப் பெரும் கோபத்துடன் கருத்தை தெரிவித்தனர். போலீசார் எங்களை துன்புறுத்துகின்றனர்; Cowboys போல் விளையாடுகின்றனர்; ஆனால் எங்களுக்கு உதவி தேவைப்படும்போது அவர்கள் வருவதே இல்லை." என கூறினர்.

இளைஞர்களுக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் போல் தோற்றமளிக்கும் எவருக்கும் எதிரான போலிசாரால் இழைக்கப்படும் அவமானங்கள், ஒருதலைப்பட்ச கைதுசெய்தல் என்பன பிரான்சின் மிகவும் வழமையான ஒரு செயலாகும். செய்தி ஊடகம் இதைக் கவனத்திற்கூட எடுத்துக் கொள்ளுவதில்லை. அக்டோபர் 31 தலையங்கத்தில் Le Monde எழுதியது: "2004ம் ஆண்டு சட்டவிரோத போலீஸ் வன்முறை பற்றிய குற்றச்சாட்டுகள் 18.5% ஆல் அதிகமாகியுள்ளது என்பதைத்தான் கண்டுள்ளது." அனைத்து போலீஸ் அதிகாரிகளும் துப்பாக்கி ஏந்துவதோடு, போலீஸ் துப்பாக்கிச் சூடுகளும் பிரெஞ்சு வாழ்க்கையின் தொடர்ந்த தன்மையாகிக் கொண்டு வருகின்றன.

மாநகரக் குடியிருப்பில் இருக்கும் இளைஞர்களுக்கு எதிராக சார்க்கோசி தொடர்ந்து, தூண்டிவிடும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். "கழிவுகளையும்", "அழுகி கிடப்பவற்றையும்" குடியிருப்புக்களில் இருந்து மணற் புழுதியால் அடித்துத் துரத்திவிடுவதாகவும் அவர் உறுதிமொழி கொடுத்துள்ளார். ஒவ்வொரு "தொல்லை தரும்" பகுதிக்கும் வாராவாரம் செல்லவிருப்பதாகவும் அவர் கூறினார்.

பிரதம மந்திரி வில்ப்பனும் ஜனாதிபதி ஜாக் சிராக்கும், சார்க்கோசியின் இத்தகைய தூண்டுதல் பேச்சுக்களை பற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அரசாங்கத்தில் சம உரிமைகளுக்கான இளநிலை மந்திரியாக இருக்கும் Azouz Begag, சார்க்கோசிக்கு எதிராக, "புறநகர் இளைஞர்களை "கழிவுகள்" என்று நீங்கள் கூறக்கூடாது; அவர்களை துரத்துவேன் என்று கூறுதலோ அவர்களை அடிக்க போலீசை அனுப்புதலும் கூடாது." என பேசியுள்ளார்.

அக்டோபர் 31, Le Figaro வின் தலையங்கம் வலதுசாரி வட்டங்களில் காணப்படும் அச்சங்களை வெளியிட்டது: "புறநகர்ப்பகுதிகளில் "அழுகிக்கிடப்பவற்றை அகற்றுதல் தேவை", "நகர் குடியிருப்புக்களை மணல் புழுதியால் தூய்மைப்படுத்துவேன்" போன்ற நிக்கோலா சார்க்கோசியின் அறிவிப்புக்கள் வடிவத்தில் பொருத்தமற்றவை. ஆனால் திருப்தியானவை?''.

பிரான்சின் உயர் காவல் அதிகாரிகளிடம் இருந்து அறிவுப்புக்களை எடுத்துக் கொள்ளும் Clichy-sous-bois குடியிருப்புக்களில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸ்காரர்கள் ரப்பர் பிளாஸ்டிக் தோட்டாக்களை வெகு அருகில் இருந்து சுட்டுக் கொண்டு, "இழிமகன்களே கிட்டே வாருங்கள்" என்று கூவுவதும் கையில் தொலைபேசியால் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில் காணக்கூடியதாகவுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved