World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP holds election meeting in Kandy

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி, கண்டியில் தேர்தல் கூட்டத்தை நடாத்தியது

By our correspondent
27 October 2005

Back to screen version

நவம்பர் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) வேட்பாளரான விஜே டயஸ் தன்னுடைய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கண்டியில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். பல்கலைக் கழக மாணவர்கள், தொழிலாளர்கள், வாழ்க்கைத்தொழிலாக கொண்டோர் என்று மக்கட்தொகுப்பின் பலதரப்பட்ட பிரிவுகளும் நகரத்தின் நடுவில் இருக்கும் D.S. சேனநாயக்க பொது நூலக அரங்கில் நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சி கூட்டத்திற்கு பங்குபற்றியிருந்தனர். மத்திய மலை மாவட்டங்களின் நடுப்பகுதியில் இருக்கும் கண்டி, தீவின் பெருநகரங்களில் ஒன்று என்பதோடு வரலாற்று ரீதியாக சிங்கள முடியாட்சிகளின் தலைநகராகவும் இருந்தது.

SEP உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் பரந்த அளவில் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் 12,000 பிரதிகளை சிங்கள, தமிழ் மொழிகளில் அச்சிட்டு வழங்கியதின் மூலம் பரந்த வகையில் பிரச்சாரம் செய்திருந்தனர். இரண்டு பெரிய கட்சிகள் மீதும் வெறுப்புணர்வை மக்கள் பலரும் வெளிப்படுத்திய வகையில் விவாதம் மிகவும் உயிரோட்டமானதாக இருந்தது. பல தேர்தல் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்று வெகுசிலரே நினைத்தனர்.

தேய்யனவெல குடியிருப்பு பகுதியில் இருந்து வந்த ஓர் இளைஞர் பரந்தரீதியான விரோதத்தை வெளிப்படுத்தினார்: "இந்த வேட்பாளர்கள் எவருக்கும் நாங்கள் ஆதரவைக் கொடுப்பதாக இல்லை; இம்முறை எவர் பதவிக்கு வந்தாலும் நாங்கள் பொருட்படுத்தவில்லை; எங்கள் பிரச்சினைகள் எதையும் தேர்தல் தீர்க்கப் போவதில்லை; இந்த தந்திரமான உறுதிமொழிகள் எங்களுக்கு சோர்வைத்தான் தருகின்றன.... இந்த தேர்தலிலும்கூட போலி உறுதிமொழிகள்தான் மீண்டும் கூறப்பட்டுள்ளன. எதுவும் மாறப்போவதில்லை; நாங்கள் அதை நன்கு அறிவோம்." என்று அவர் குறிப்பிட்டார்.

பேராதனை பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்கத் தலைவர்கள், வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்த கலைப்பிரிவு மாணவர்களிடையே SEP தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுக்க முற்பட்டனர். இந்த தலைவர்கள் சில நேரங்களில் தான் இன்னும் "சோசலிச", "மார்க்சிச" சார்புடையது என்று கூறிக் கொண்டு வருகின்ற சிங்கள பேரினவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுன (JVP) உடன் தொடர்பு உடையவர்கள். தேர்தலில் JVP ஆளும் வர்க்கத்தின் நீண்ட கால கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சிக்கு (SLFP) ஆதரவைக் கொடுத்துள்ளது.

சற்று பதற்றத்துடனேயே மாணவர் தலைவர்கள் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்களிடம் தாங்கள் "வெளி அரசியல் சக்திகளை வளாகத்தில் உள்ளே அனுமதிப்பதில்லை" என்றும் உடல் நலனுக்கு ஊறு விளையக்கூடும் என்றும் குறிப்புக் காட்டினார்கள். பண்பற்ற முறையில் SEP ஐ தணிக்கை செய்யும் முயற்சிக்கு மாணவர்களில் சிலர் கோபமாக விடையிறுத்தனர், கட்சிக்கு மின்னஞ்சல் அனுப்பி இன்னும் கூடுதலான கலந்துரையாடல் வேண்டும் என்று கூறி, பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டனர்.

SEP இன் அரசியல் குழுவின் உறுப்பினரான ஆனந்தா தாவுலகல கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். SEP வேட்பாளரை அறிமுகப்படுத்திய அவர், SEP இன் தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் இலங்கை தொழிலாளர்களிடையே, அரசியல் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பது என்றும், இன்னும் பரந்தரீதியாக தெற்காசியாவில் அவர்களை எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் ஜனநாயக பிரச்சினைகள் பற்றி ஒரு அரசியல் கலந்துரையாடலை தொடக்குவது என்றும் விளக்கினார்.

இரண்டு பெரிய கட்சிகளின் வேட்பாளர்களான SLFP இன் பிரதம மந்திரி மகிந்தா ராஜபக்ச, மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இன் வேட்பாளர் ரனில் விக்கிரமசிங்க இருவரும் முன்கண்டிராத வகையில் தேர்தல் உறுதிமொழிகளை பெரும் பட்டியலிட்டுக் காட்டுவதை சுட்டிக் காட்டி விஜே டயஸ் தன்னுடைய உரையை ஆரம்பித்தார்.

"இரண்டு முதலாளித்துவ கட்சிகளும் முன்கண்டிராத வகையில் வெகுஜனங்களிடமிருந்து விரோதப் போக்கை எதிர்கொண்டுள்ளதுதான் இத்தகைய நீண்ட வாக்குறுதிகளின் பட்டியலுக்கான காரணமாகும். வெகுஜனங்கள் மீண்டும் ஒன்று திரட்டப்பட வேண்டும் என்றால், தங்களுடைய முந்தைய பொய்யுரைகளையும் விஞ்சக் கூடிய வகையில் வெள்ளமென பொய்களை இக்கட்சிகள் கட்டவிழ்த்து விடவேண்டும்" என்று அவர் கூறினார்.

இரண்டு வேட்பாளர்களும், குறிப்பாக ராஜபக்ச, தங்களுடைய நீண்ட வாக்குறுதி பட்டியலில் இருந்து சமுதாயத்தின் எந்தப் பிரிவையும் விட்டுவைக்கவில்லை. "இது ஒன்றே இக்கட்சிகள் இரண்டின் மீதும் பெரும் பிழை என்ற கருத்தைத் தராதா? இவர்கள் ஆட்சிக்காலமான 57 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஏராளமாக மக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இன்னும் இவர்கள் இத்தகைய வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றனர்" என்று டயஸ் குறிப்பிட்டார்.

முக்கிய முதலாளித்துவ கட்சிகளையும், மற்றும் லங்கா சம சமாஜக் கட்சி (LSSP), கம்யூனிஸ்ட் கட்சி (CP), ஜாதிக ஹெல உறுமய (JHU) போன்றவை உள்பட கூட்டணிக் கட்சிகளையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது என்று அவர் விளக்கினார்.

இத்தேர்தல் வாக்குறுதிகளின் புகைப்படலத்திற்கு பின்னே இரண்டு தீவிர ஆபத்துக்கள் உள்ளன. ஏற்கனவே 60,000 சிங்கள, தமிழ் மக்களின் உயிர்களைக் குடித்து, 20 ஆண்டுகளில் ஒரு மில்லியன் மக்களுக்கும் மேலானவர்களை தங்குமிடத்தை விட்டு அகற்றிய உள்நாட்டுப் போர் மீண்டும் வந்துவிடுமோ என்பது முதல் ஆபத்து ஆகும். போர் ஆபத்துடன் கைகோத்து நின்று வளரும் ஆபத்து, ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் வெளிப்பட்டுள்ளதாகும். இந்த இரு ஆபத்துக்களையும் தோற்கடிப்பதற்கு, தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுடைய தலைமை என்ற முறையில் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆரம்ப முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய வேலைத்திட்டத்தை இலங்கையில் முன்னின்று நிறுத்தி வாதிடும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சியாகும்."

சோசலிச சமத்துவ கட்சிக் கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள், ராஜபக்ச, "Mahinda Chintanaya" அல்லது "மகிந்த சிந்தனை" என்னும் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார். டயஸ் விளக்கினார்: "இந்த அறிக்கையின் முக்கிய புள்ளிகள் வர்க்க விரோதத்தை அகற்றுவதும், சட்டம், போலீஸ், சமூக நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதாகும், இதன் பொருள் சமய சார்புடைய அமைப்புக்கள் ஒன்று சேரவேண்டும் என்பதாகும்... இவை அனைத்தும் முதலாளித்துவ அரசாங்கத்தின் முதலாளித்துவ ஆட்சியின் மூலமும், போலீ்ஸ் மற்றும் முதலாளித்துவ சட்டம் ஆகியவற்றின் மூலமும் முதலாளித்துவ சொத்துடமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டவை. தங்கள் சமூக நிலைமைகளின் மீது நடத்தப்படும் பலவிதமான தாக்குதல்களை ஏற்கனவே தொழிலாளர்களின் பல பிரிவுகளும் எதிர்க்கும் நிலையில் இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. தேர்தல் நேரத்தில்கூட, முதலாளித்துவ அரசியல் வாதிகள் எதிர்ப்புக்களை நசுக்க வேண்டும் என்ற தங்களுடைய திட்டங்களை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளனர்."

தொடர்ந்து ஆட்சி செய்துவந்த அரசாங்கங்கள் 1978ல் ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி அடிப்படை ஜனநாயக உரிமைகளை கீழறுக்க நகர்ந்துள்ளன என்று டயஸ் விளக்கினார்----- SLFP, JVP, UNP என்று அனைத்து முக்கியக் கட்சிகளும் முந்தியநாள்தான் பாராளுமன்றத்தில் ஒத்துழைத்து இப்பொழுது இருக்கும் அவசரகால நெறிமுறைகள் தேர்தல் நாள் முடியும் வரை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்க வகை செய்துள்ளன. இத்தகைய நடவடிக்கைகள்தாம் சர்வாதிகார வகையிலான ஆட்சிக்கு அஸ்திவாரங்களை போடும் வகையில் இருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

"முன்கண்டிராத வழியில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாற்றீடான அரசியல் முன்னோக்கின் தேவை உயர்த்திக் காட்டப்படும் தேவை ஏற்பட்டுள்ளது. SEP அத்தகைய அவசியத்தில் ஈடுபடுத்திக்கொள்கிறது. இன்றைய மாறியுள்ள உலகச் சூழ்நிலையில், ஏகாதிபத்திய வல்லரசுகள் முக்கியமாக அமெரிக்கா, ஒரு வலியத்தாக்கும் நவீன-காலனித்துவ கொள்கையை பின்தொடர்வதற்கு தொழிலாள வர்க்கமானது இலங்கை, தெற்கு ஆசியா மற்றும் சர்வதேசரீதியாக ஒடுக்கப்பட்டுள்ள வெகுஜனங்களின், மற்றும் தொழிலாள வர்க்கத்தின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய ஒரு சோசலிச மாற்றத்திற்கான அரசியல் முன்னோக்கை ஆயுதமாகக் கொள்ள வேண்டும்."

சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் என்பது புதியதோ, தற்செயல் வேலைத்திட்டமோ இல்லை என்று டயஸ் குறிப்பிட்டார். "இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் பாரம்பரியம் சர்வதேச அஸ்திவாரங்களில் வேரூன்றியுள்ளன. புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) சர்வதேசியத்திற்கான இலங்கை தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் பெருமைக்குரிய வரலாற்றை புத்துயிர்க்கும் நோக்கத்துடன் 1968-ம் ஆண்டு நிறுவப்பட்டது." லங்கா சம சமாஜ கட்சி (LSSP) 1964-ல் முதலாளித்துவ SLFP உடன் கூட்டு சேர்ந்து சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் நுழைந்ததின் மூலம் அந்தக் கொள்கைகளை காட்டிக் கொடுத்துவிட்டது.

ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்க இவர்களுக்கு எதிரிடையான வகையில், SEP வெற்று தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசவில்லை. "தொழிலாள வர்க்கம் தன்னை ஒரு சர்வதேச வர்க்கம் என்று நினைக்க தலைப்பட வேண்டும், முதலாளித்துவ கட்சிகளிலிருந்தும் அவர்களுடைய இடதை பின்தொடர்பவர்களிடமிருந்தும் அரசியல்ரீதியாக சுயாதீனமாக செயல்படவேண்டும் என்ற முன்மொழிதல்களை நாங்கள் முன்வைக்கிறோம். தங்களுடைய சொந்த வரலாற்றையே படிப்பதற்கு தொழிலாள வர்க்கம் திரும்பியாக வேண்டும். அந்த புரிதலுடன், வறியவர்களை ஒன்று திரட்டி, தமிழ் மக்கள், ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் வேலையில்லாதோர் உட்பட, வெகு ஜனங்களின் ஒவ்வொரு பிரிவின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கு முன்முயற்சியை கட்டாயம் எடுக்க வேண்டும்."

கூட்டம் முடிந்த பின்னரும் டயஸ், மற்ற SEP உறுப்பினர்களுடன் பேசுவதற்கு பலரும் ஆர்வமாக இருந்தனர். தான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக முன்னர் இருந்து, பழைய இடதை ஆதரித்ததாக சிவம் கூறினார். "ஆனால் இப்பொழுது இடது என்று அழைக்கப்படுவது அதிதீவிர வலதாக உள்ளது!" என்று JVP, JHU என்ற சிங்களதீவிரவாதிகளுடன் கூட்டணி கொண்டிருந்த போதிலும்கூட, LSSP மற்றும் CP இரண்டும் ராஜபக்சவை ஆதரிக்கும் உண்மையை சுட்டிக்காட்டி அவர் அவ்வாறு கூறினார்.

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான வீரத்திலக கூறினார்: "நம் நாட்டில் உள்ள போர் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு தீவிர மாற்றீடு ஒன்று தேவை என நான் நம்புகிறேன். இந்த உரையை கவனித்துக் கேட்டேன் மற்றும் சில அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களையும் ஏற்கனவே படித்துள்ளேன். இவ்வேலைத்திட்டத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு என நான் நினைக்கிறேன். வெகுஜனங்களுடைய கவனத்தை இது ஈர்க்க வேண்டும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved