World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

SEP campaign in Sri Lankan election: interest in a socialist alternative

இலங்கை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம்: ஒரு சோசலிச மாற்றீட்டில் ஆர்வம்

By our correspondents
31 October 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் நவம்பர் 17 நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய கொள்கைகளை பரந்த முறையில் பரப்பும் வகையில் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) பரந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவருமான விஜே டயஸ் இக்கட்சியின் வேட்பாளர் ஆவார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் சோசலிசக் கொள்கைகள் அடங்கிய அறிக்கையின் தமிழ், சிங்கள மொழிப் பிரதிகளை பிரச்சாரக் குழுக்கள் தலைநகரான கொழும்பிலும் வடக்கில் கடலோர நகரமான சிலாபம், கண்டி, ஹட்டன், பதுளை மற்றும் பண்டரவளை உட்பட தேயிலைத் தோட்ட மாவட்டங்களிலும் விநியோகித்து வருகின்றன. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் போரினால் அழிவிற்குள்ளான வடக்கு மாநிலமான யாழ்ப்பாணத்திலும், தெற்கே டிசம்பர் 26 சுனாமித் தாக்குதலுக்குட்டபட்ட பகுதிகளான அம்பலாங்கொாட மற்றும் காலியிலும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசிய கட்சி (UNP) என்னும் இரு முதலாளித்துவ கட்சிகள் தொடர்பாகவும் மற்றும் கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் கணிசமான நலன்களை பெற்ற மக்கள் விடுதலை முன்னணியுடனுமான (JVP) ஏராளமான மக்கள் தமது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணியில் அதிகாரத்தை கொள்ளுவதில் முதல் தடவையாக பங்கு பெற்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி அதன் உறுதிமொழிகளை தூக்கி எறிந்துவிட்டு வேலைகள், மக்களுடைய வாழ்க்கைத் தரம் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்களில் போரை நிறுத்துவதற்கும், சமூக சமத்துவின்மையை அகற்றுவதற்கும் ஒரு சோசலிச மாற்றீட்டினை அளிக்கும் ஒரே கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சி திகழ்கிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைக் கொடுத்துள்ளன.

கொழும்பு

கொழும்பின் புறநகரம் ஒன்றான ஜயவதனகாமவில் எமது பிரச்சாரக் குழு ஒன்றிடம் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொழிலாள வர்ககம், மத்தியதர வர்க்கம் ஆகியவற்றின் பரந்த தட்டுக்கள் எந்த அளவிற்கு வெறுப்பு உணர்வையும், விரோத உணர்வையும் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

சபுகஸ்கந்த என்ற இடத்தில் இருக்கும் Nylon Six ஆலையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள குணசேனா என்னும் தொழிலாளளி தொடர்ச்சியான அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற சந்தைக் கொள்கைகள் அவருடைய வேலையை எப்படி அழித்துவிட்டன என்பதைச் சீற்றத்துடன் விளக்கினார்.

"Nylon Six ஆலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனியார்மயமாக்கப்பட்டபோது கிட்டத்தட்ட 500 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். எங்கள் பிரச்சினைகள் கவனிக்கப்படும் என்று அனைத்து முக்கிய கட்சிகளும் உறுதி அளித்துள்ளதாக எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் கூறினர். ஆனால் அவை அதிகாரத்திற்கு வந்தபின், எங்களுடைய பிரச்சினைகளை புறக்கணித்துவிட்டனர். இப்பொழுது எனக்கு 50 வயதிற்கு மேல் ஆகியவிட்டது; எனக்கு ஒருவரும் வேலை கொடுக்க மாட்டார்" என்று அவர் கூறினார்.

"இந்த அமைப்பு முறை பற்றி நான் பெரிதும் வெறுத்துப் போய் உள்ளேன். இழப்பீட்டுத் தொகைக்காக நாங்கள் ஒரு நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளபோதிலும்கூட, நீதிமன்ற முடிவை செயல்படுத்துவதற்கு பணம் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த தொழிற்சங்கத்தில் நான் உறுப்பினராக இருந்தேன்; ஆனால் கடந்த அரசாங்கத்தில் மக்கள் விடுதலை முன்னணி இருந்தபோதிலும் எங்களைப் பற்றி அது கவனம் செலுத்தவில்லை. நான் அவர்களுக்கு எதிராக உள்ளேன்."

Kabool Lanka என்று அரசாங்க உடைமையாக இருந்து தனியார்மயமாக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது என்று குணசேனா கூறினார். மிகப் பெரிய வங்கிக் கடன்கள் வாங்கிய பின்னர் இந்த ஆலையை வாங்கிய கொரிய நிறுவனம், இதைக் கைவிட்டுவிட்டதின் மூலம் 3,000 தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.

இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றில் இருக்கும் தொழிலாளர்களும் தேர்தலுக்கு பின் பாதிப்பிற்கு உள்ளாவர் என்று அவர் எச்சரித்தார். கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பு தனியார் மயமாக்குதல் நிறுத்திவைக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதிமொழி கொடுத்ததையும் அதன் பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்றுவிட்டதையும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரிய அளவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தயாரிக்க வழிவகுத்ததையும் சுட்டிக் காட்டினார்.

"இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது பற்றி எனக்கு துல்லியமாக தெரியாது. ஆனால் இந்த அமைப்புமுறை பற்றி பெரிதும் வெறுப்பு கொண்டுள்ளேன். எனவே என்னுடைய வாக்கை அளித்துவிடுவது என்ற முடிவை கொண்டுள்ளேன். ஆனால் உங்களுடைய திட்டத்தை தீவிரமாக பார்த்து ஒரு முடிவுற்கு வருவேன்" என்று குணசேனா கூறி முடித்தார்.

சுதந்திர செய்தியாளர் ஒருவர் அவருக்கு தெரிந்த பெரும்பாலான மக்கள், எந்த அரசாங்கத்தின் கீழும் எந்த நன்மையும் கிடைக்கப் பெறாமையால், தேர்தல் பற்றி இகழ்வுணர்வைத்தான் கொண்டுள்ளனர் எனக் கூறினார். "இந்தத் தேர்தல்கள் கட்சிகளுக்கு இடையே இரகசிய ஒப்பந்தங்கள் என்று போய்விட்டன. சமீபத்தின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC), ஐக்கிய தேசிய கட்சிக்கு தன் ஆதரவைத் தெரிவித்த கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். உண்மையான கொள்கைகள் ஏதும் அங்கு காணப்படவில்லை. நீங்கள் அதிகாரத்திற்கு வந்தால் எப்படி முற்போக்காக இருப்பீர்கள் என்பதுதான் என்னுடைய வினா." என்று இப்பெண்மணி கூறினார்.

கொழும்பு மாநகராட்சிக் குழுவில் வேலைபார்க்கும் குசும் ரத்னவீரா, தொழிலாளர்களுக்கு இருக்கும் வேலைச்சுமை மிகக் கடுமையாக இருப்பதால் அவர்களுக்கு அரசியல் பற்றிச் சிந்திக்க நேரமில்லை என்றார். அரசியல் தலைவர்களுடைய உறுதிமொழிகள் பொய்கள் என்பதை மக்கள் அறிவார்கள் என்று இவ்வம்மையார் கூறினார். அப்பகுதியில் இருந்த மற்ற பெண்களும் போரும் வகுப்புவாத வன்முறைகளும் மீண்டும் வந்துவிடுமோ என்ற கவலையைக் கொண்டிருந்தனர். ஜாதிக ஹெல உறுமயா (JHU) என்னும் சிங்களத் தீவிர அமைப்பு பெளத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே பூசல்களைத் தூண்டிவிடுவது என்று ஒரு பெண்மணி குற்றம் சாட்டினார். ஒரு வகுப்புவாத மக்கள் கூட்டம் ஹோமகமாவில் தேவாலயம் ஒன்றை அழித்ததை தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.

மற்றொரு பெண்மணி அறிவித்தார்: "நான் முற்றிலும் போருக்கு எதிரானவள்; முன்பு மக்கள் விடுதலை முன்னணி வறியவர்களையும், இராணுவவீரர்களையும் கொன்றது. இளைஞர்களை அரசாங்கம் தேர்ந்தெடுத்து இராணுவத்தில் பயிற்சி கொடுத்து தமிழ் மக்களுக்கு எதிராகப் போரிட அனுப்பிவைக்கிறது. இராணுவத்தில் சேர்ந்த பல இளைஞர்கள் இறந்து விட்டனர்; பலருக்கு ஒரு கை அல்லது ஒரு கால் போய்விட்டது."

"நாடோ திவாலாகி உள்ளது. வருங்கால தலைமுறைகளுக்கு என்ன நேரிடும்? சிலருக்கு மாதம் ஒன்றுக்கு 100,000 சம்பளம் என்றுள்ளது. ஆனால கடுமையாக உழைக்கும் பலருக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3,000க்கும் குறைவாகவே கிடைக்கிறது" என்று அவர் கூறினார். ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அவர் தொடர்ந்தார்: "சதாம் ஹுசைன் தவறு செய்திருக்கலாம். ஆனால் அமெரிக்கா ஈராக்கிய மக்களை அழித்து வருகிறது. நம்முடைய அரசியல்வாதிகளோ அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுக்கின்றனர். மேலும் அவர்கள் தடையற்ற பொருளாதாரக் கொள்கையையும் தழுவி உள்ளனர்."

கொழும்பு பல்கலைக் கழகத்தில் நவோதினி சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் பற்றிப் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். ஒரு சோசலிசத் திட்டத்தை முன்வைக்கும் ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி தான் என்று அவர் கூறினார். பல்கலைக்கழகத்தில் "சோசலிசத்தின் திவால் தன்மை" பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றனர் என்று நவோதினி கூறுனார். ஆனால் முதலாளித்துவ முறையைக் பாதுகாத்து விரிவுரையாளர்களால் பேச முடியவில்லை; ஏனெனில் அது மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு விடை ஏதும் கொடுக்கவில்லை.

மற்றொரு மாணவர் கூறினார்: "லங்கா சமசமாஜக் கட்சி ஒரு ட்ரொட்ஸ்கிச கட்சியாக முன்பு இருந்தது என்று எனக்குத் தெரியாது. 1964ல் லங்கா சமசமாஜ கட்சி இன் காட்டிக் கொடுப்பிற்கு பின் அதற்கு எதிரான போராட்டத்தில் உங்கள் கட்சியை நீங்கள் 1968ல் கட்டமைத்தீர்கள் என்பது கேட்பதற்கு ஆர்வம் தருகிறது. பல இடர்பாடுகள் இருந்தபோதிலும் நீங்கள் உங்கள் போராட்டத்தை தொடர்ந்தது சிறந்ததாகும்."

மூன்றாவது மாணவர் மனுஷா சோசலிச சமத்துவக் கட்சி இன் சர்வதேச முன்னோக்கினால் ஈர்க்கப்பட்டு, இலங்கை தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் எதுவும் தீவின் வரம்பிற்குள் தீர்க்கப்பட முடியாதவை என்பதை ஒப்புக் கொண்டார். "இலங்கை மக்களிடையே உங்கள் கருத்தைப் பரப்பினால், பெரும் மாற்றத்தைக் காணலாம்" என்று அவர் கூறினார்.

கண்டி

மத்திய மலை மாவட்டப் பகுதிகளில் இருக்கும் கண்டியில் பிரச்சாரக் குழுக்கள் ஓர் உண்மையான சோசலிச மாற்றீட்டில் பல இளைஞர்களும் மாணவர்களும் ஆர்வம் கொண்டிருப்பதை அறிந்தனர்.

கணினி அறிவியல் மாணவர் ஒருவரான R.M. கூறினார்: "மனிதகுலத்தின் தற்பொழுதைய பிரச்சினைகளுக்கு ஒரு சர்வதேசத் தீர்வு வேண்டும் என்று நீங்கள் வாதிடுவதற்காக நான் WSWS உடன் முற்றிலும் கருத்து உடன்பாட்டைக் கொண்டுள்ளேன். இப் பிரச்சினைகள், மனித உரிமைகள், இருப்பு ஆதாரங்கள் என்று இப்பிரச்சினைகள் எதுவுமே நம்முடைய நாடு அல்லது எந்த நாட்டின் வரம்பிற்குள்ளும் தீர்க்கப்பட முடியாதவையாகும். தொழிலாள வர்க்கம் அல்லது உழைக்கும் வர்க்கம் இந்தப் போராட்டத்தில் எப்படி முக்கியமான பகுதி என்பதைப் பற்றி நான் அதிகமாக அறிய விரும்புகிறேன்.

"படைகள் வடக்கில் இருந்தும் கிழக்கில் இருந்தும் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இலங்கையில் போரை முடிப்பதற்கு முதல் படியாகும் என்ற கருத்தையும் நான் முற்றிலும் ஆதரிக்கிறேன்."

களனியா வளாகத்தில் உள்ள சந்தனா என்னும் பட்டதாரி கண்டியை சுற்றியுள்ள வெந்தருவா என்னும் குறைந்த வசதிகள் உடைய விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கிராமம் ஒன்றில் சங்கீத ஆசிரியராக வேலை பார்க்கிறார். முக்கிய கட்சிகள் சமூகத்தின் பெரும்பாலானோரின் நலன்களை காப்பதைவிட செல்வந்தரின் நலன்களை பாதுகாப்பதில்தான் கூடுதலான அக்கறைகளை கொண்டுள்ளன என்ற சோசலிச சமத்துவக் கட்சியின் கருத்துகளுக்கு அவர் முழு ஆதரவை கொடுத்தார்.

"ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தங்களுடைய உறுதிமொழிகளை நிறைவேற்றுவார்கள் என்று இடது கட்சிகள் எங்கள் நம்பச் சொல்லுவது அவர்கள் மீதும் எங்களுக்குப் பெரும் ஏமாற்றம்தான். முன்பு மக்கள் விடுதலை முன்னணி மாணவர்கள், வேலையற்ற இளைஞர்கள், ஏழைகள் இவர்களுக்காக போராட்டங்களையாவது நடத்தியது. இப்பொழுது அவர்களும் இருக்கும் அமைப்புமுறையுடன் சேர்ந்துவிட்டார்கள் என்பது தெளிவாகியுள்ளது. அவர்களுடைய நாட்டு வெறியும், போர் வெறியும் சோசலிசத்துடன் பொதுவாக எதையும் கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் நான் புரிந்து கொண்டுள்ளேன்" என்று அவர் கூறினார்.

அம்பலாங்கொட மற்றும் காலி

தெற்கு இலங்கை பகுதியில் பொதுக்கூட்டங்களுக்காக அம்பலங்கொட மற்றும் காலியில் பிரச்சாரம் செய்வதற்காக சென்றிருந்த சோசலிச சமத்துவக் கட்சியின் குழுக்கள், டிசம்பர் 26 சுனாமியினால் பெரும் அழிவிற்கு உட்பட்டிருந்த படபென்டிமுல, கண்டா, பககாவத்தை, போரம்ப போன்ற அருகில் இருந்த பல கிராமங்களுக்கும் சென்றிருந்தனர்.

19 வறிய கிராமச் சேரிகளின் பிரிவான படபென்டிமுலவில் மக்களின் பொருட்கள் அனைத்தும் பெரும் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தன. சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள் அவர்களை சந்தித்தபோது, அவர்கள் இன்னும் தற்காலிக குடியிருப்புக்களில்தான் தங்கியிருந்தனர்.

45 வயதான M.H.Sirisoma விளக்கினார்: "நாங்கள் அம்பலங்கொடவிற்கு அருகில் படபென்டிமுல்லாவில் கல்லறைக்கு வெகு அருகில் வசித்து வந்தோம். சுனாமி எல்லா வீடுகளையும் அழித்துவிட்டது. இரண்டு மாதங்களுக்கு 19 குடும்பங்களும் சுடலைக்கு அருகே இருந்த முகாம் ஒன்றில் வசித்துவந்தோம். அதற்குப் பின் ஒரு மழலையர் பள்ளிக்காக முன்னர் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த, இந்தப் புதிய இடமான ஹலவதுராவைப் பற்றி அறியவந்தோம்.

"இந்த தற்காலிக வீடுகள் அரசு-சாரா அமைப்புக்களினால் கட்டப்பட்டவை. ஒவ்வொரு வீட்டிலும் சுமார் 6 பேர் வசிக்கின்றனர். இதன் பரப்பளவு 17 x 12 அடி ஆகும். மின் வசதிகூடிய இந்த வீடுகளை அந்த அமைப்புக்கள் கட்டின; ஆனால் கடந்த 10 மாதங்களாக எங்களுக்கு இன்னும் மின்வசதி தரப்படவில்லை.

"எங்களுடைய இரண்டு படகுகள், மற்ற கருவிகள் அனைத்தையும் சுனாமி அழித்துவிட்டது. இன்னும் மீன் பிடிக்க தொடங்குவதற்கு எனக்கு எவ்வித உதவியும் கொடுக்கப்படவில்லை. [அரசாங்கத்தால்] வீடுகள் கட்டப்படும் என்ற உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டாலும், அத்தகைய திட்டங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மீன் பிடிப்பதற்கு நாங்கள் மற்றவர்களுடைய படகுகளில்தான் போகவேண்டும். அரசாங்கம் எந்த உதவியையும் கொடுக்கவில்லை. 19 தற்காலிக வீடுகளுக்கும் மொத்தத்தில் 4 கழிப்பறைகள்தான் உள்ளன. இங்குள்ள சுகாதார நிலைமை பற்றி சோதிப்பதற்கு எவரும் வரவில்லை. ஓர் அரசியல்வாதிகூட எங்களைப் பார்க்க வரவில்லை."

தன்னுடைய இரு மகன்களும் உயர்நிலைப் பள்ளி, க.பொ.த (சாதாரண) தேர்வு, முடித்துவிட்டதாக சிறிசோமா கூறினார்; ஆயினும்கூட அவர்கள் இன்னும் வேலை கிடைக்காமல்தான் உள்ளனர். அவருக்கும் மற்றவர்களுக்கும் "அரசியல் கட்சிகளில் எந்த நம்பிக்கையும் கிடையாது என்று கூறிய அவர் எவருக்கும் வாக்குப் போடப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

தன்னுடைய குடும்பத்துடன் அரசாங்கம் கொடுக்கும் சம்ருதி பொதுநலத் திட்டத்தின் கீழ் கிடைக்கும் மாதத் தொகை 600 ரூபாயில் (US $6) தாங்கள் வாழவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக ஒரு விதவை கூறினார். அதில் 250 ரூபாய்கள் மளிகைப் பொருட்களுக்காவும் 40 ரூபாய் காப்புறுதித்தொகை, வீட்டு நிதி ஆகியவற்றிற்கு கழிக்கப்பட்டுவிடுவதாகவும் அவர் கூறினார். அவருடைய கணவர் இறந்தபோது காப்புறுதித்திட்டத்தில் இருந்து அவருக்கு 4,000 ரூபாய் கிடைத்தது. "கடந்த 11 ஆண்டுகளில் அந்த உதவி ஒன்றுதான் எங்களுக்கு வந்தது; அதைத் தவிர பொருளாகவும் அற்பத்தொகையாவும் சில நேரங்களில் பெற்றதுண்டு." என்று அவர் கோபத்துடன் அறிவித்தார்.

"எனக்கு ஒரு பையனும் பெண்ணும் உள்ளனர். அவர்களுக்குக் கல்வி கற்பிக்க நான் விரும்புகிறேன். ஆனால் என்னுடைய சிறிய வருமானத்தைக் கொண்டு என்னால் அது எப்படி முடியும்? சம்ருதி திட்டத்தின் வெற்றி பற்றி அரசியல்வாதிகள் எவ்வளவு பெருமையாகக் கூறிக் கொண்டாலும், அது எங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றுவிக்கவில்லை. தேர்தல் கூட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர்கள் சம்ருதி உதவித் தொகையை அதிகரிப்பதாகக் கூறும் உறுதிமொழிகளில் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அது வாக்குகள் சேகரிப்பதற்காகக் கூறப்படும் வெற்றுப் பேச்சு ஆகும்; எங்களுக்கு அவர்கள் பரிவுணர்வு காட்டுகின்றனர் என்று பொருளாகிவிடாது." என்று அவர் கூறினார்.

See Also:

இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: கல்வியை பற்றிய உண்மைச் சான்றுகளும் பொய்யான உறுதிமொழிகளும்

2005 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியை ஆதரிப்பீர்
யுத்தத்திற்கும் சமூக சமத்துவமின்மைக்கும் ஒரு சோசலிச மாற்றீடு

Top of page