World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : இலங்கைSri Lankan presidential election: false promises and the real record on education இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: கல்வியை பற்றிய உண்மைச் சான்றுகளும் பொய்யான உறுதிமொழிகளும் By Panini Wijesiriwardena ஐக்கிய தேசியக் கட்சி (UNP), மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவற்றின் வரலாற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் ஒருவர் இருந்தால், அக்கட்சி வேட்பாளர்கள் வரவிருக்கும் நவம்பர் 17 ஜனாதிபதித் தேர்தலில் பொதுக் கல்வி பற்றி கொண்டுள்ள ஆக்கிரோஷமான போட்டியை பற்றி அவர் வியந்தே போவார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் UNP, SLFP அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இலவசக் கல்வி முறையின் மீது நிகழ்த்தியுள்ள பெரும் தாக்குதலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள சூழ்நிலையில் தற்போதைய தேர்தல்கள் நடைபெறுகின்றன. மக்களுடைய வெறுப்புணர்வு எந்த அளவிற்கு பரந்து காணப்படுகிறதோ, அதற்கேற்ப பெரிதான, கூடுதலான, நம்பகத்தன்மையற்ற முறையில் தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன எனத் தோன்றுகிறது. தான் தேர்ந்தெடுக்ப்பட்டால், "ஒவ்வொரு பள்ளிக் குழந்தைக்கும்" பகலுணவின்போது ஒரு கோப்பை பால் வழங்குவேன் என்று அறிவித்த வகையில் UNP வேட்பாளர் ரனில் விக்ரமசிங்க போட்டியை ஆரம்பித்தார். தான் ஒன்றும் பின்தங்கிவிடமாட்டேன் என்ற முறையில் SLFP வேட்பாளரான மகிந்த ராஜபக்ச, ஒரு கோப்பை பாலோடு மட்டும் இல்லாமல் ஒரு தட்டு அரிசி சோறும் வழங்குவதாக அறிவித்தார். நாட்டின் குழுந்தைகளுக்கு பெரும் தயாளத் தன்மை காட்டுபவர் என்னும் வகையில் "ஒவ்வொரு குழந்தைக்கும் இவர்தான் மாமா" என்று சித்தரித்துக் காட்டும் வகையில், தலைநகரமான கொழும்பை சுற்றிலும் இருக்கும் முக்கிய சாலை சந்திப்புக்களில் ராஜபக்சவின் பெரும் உருவப் படங்கள் (cut-outs) வைக்கப்பட்டுள்ளன. பிரதம மந்திரியின் மீது மட்டரகக் கருத்துக்களைக் கூறி புள்ளிகள் பெறவேண்டும் வேண்டும் என்ற முறையில், எதிர்க்கட்சித் தலைவர் விக்கிரமசிங்க, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் பொதுக் கல்விமுறை பற்றி இடித்துரைத்து கூறியுள்ளதாவது: "இன்று தரமான கல்வியை பெறுவது என்பது ஒரு சண்டை போல் ஆகிவிட்டது. தன்னுடைய குழந்தையை ஒரு 'நல்ல' பள்ளியில் சேர்ப்பது என்பது பெரும்பாலான பெற்றோர்களுக்கு போரில் வெல்ல முடியாத சூழ்நிலைபோல் ஆகிவிட்டது. வசதி மிகுந்த நகர்ப்புற குடியிருப்போர் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் உயரடுக்கு தட்டுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளுக்கு இடம் வாங்கித்தர முடிகிறது." இத்தகைய கருத்துக்கள் ராஜபக்சவின் மீது எத்தன்மையான குற்றங்களை கூறுகின்றனவோ, அத்தன்மையான குற்றங்களையே விக்ரமசிங்கவின் மீதும் சுமத்துகின்றன. 1948ல் சுதந்திரம் கிடைத்ததில் இருந்து UNP அல்லது SLFP அரசாங்கங்கள் இலங்கையை ஆண்டுவருகின்றன. விக்கிரமசிங்க மற்றும் UNP 2001ல் இருந்து 2004 வரை அரசாங்கத்தை அமைத்திருந்த நிலை இருந்தது. 2004 பொதுத் தேர்தல்களில், அதன் பொருளாதார மறுசீரமைப்புக்கு விரோதத்தின் காரணமாக, UNP தோல்வியை தழுவியது. இரண்டு கட்சிகளுமே கடந்த மூன்று தசாப்தங்களாக பொதுக் கல்வியின் சீரழிவிற்கு பொறுப்பாகும். அப்போதைய ட்ரொட்ஸ்கிச கட்சியாக இருந்த லங்க சமசமாஜக் கட்சி (LSSP) தலைமையில் நடத்தப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு பதில்கொடுக்கும் வகையில் 1940 களிலும், 1950களிலும் பொதுக் கல்வி முறை பெருமளவில் நிறுவப்பட்டது. சுதந்திரமான அனைவருக்கும் கிடைக்கக் கூடிய கல்வியை கொடுக்கும் பொதுப் பள்ளிகள் நிறுவப்பட வேண்டும் என்பது அதன் பல கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. அதன் போராட்டங்களின் விளைவாக நிறைய சலுகைகள் அடையப்பெற்றன; 1950களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2.5 என்பதில் இருந்து 1960 களில் 4 சதவிகிதமாக கல்விக்கான அரசின் செலவை அதிகரித்ததும் இதில் அடங்கும். ஆனால், 1970களின் கடைசிப் பகுதியில் இருந்து "தடையற்ற சந்தைக்" கொள்கைகளின் பால் திருப்பம் ஏற்பட்டதின் விளைவாக பொதுக் கல்விமுறை இணைந்த முறையில் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது. 1977ம் ஆண்டு UNP அரசாங்கத்தில் கல்வி மந்திரியாக இருந்த வகையில் விக்கிரமசிங்க இதற்கு நேரடிப் பொறுப்பு ஆவார். மொத்தப் புள்ளிவிவரங்கள் இந்த வழிவகையை நன்கு சித்தரித்துக் காட்டுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1984ல் இருந்த அரசாங்கத்தின் கல்விச் செலவினங்கள் 3 சதவிகிதத்தில் இருந்து 2004ல் மிகக் குறைவான 2.09 சதவிகிதம் ஆயிற்று. பொதுநல அரசுக்கு ஒரு மாதிரியாக கருதப்பட்டு வந்த இலங்கை இப்பொழுது தெற்கு ஆசியா முழுவதற்குமான சராசரி 3.2 சதவிகிதத்தையும் விட மிகக் குறைவாகவே கல்விக்கு செலவழிக்கிறது. 1981ம் ஆண்டு ஆட்சிடியில் இருந்த UNP அரசாங்கம் உலக வங்கி, IMF இவற்றின் அழுத்தத்தின்பேரில் தயாரித்திருந்த அதன் கல்வி பற்றிய வெள்ளை அறிக்கையில் அரசாங்க உதவியுடன் நடத்தப்படும் கல்விக்கான செலவினங்களை பெரும் குறைப்பிற்குட்படுத்தும் திட்டங்களை வெளியிட்டது. பள்ளிகள் "சீரமைக்கப்படுதல்" என்ற பெயரில் "பொருளாதார வசதியற்ற" பள்ளிகளை மூடுவதற்கான வழிவகைகள் இந்தத் திட்டங்களில் அடங்கியிருந்தன. "நிர்வாக தன்னாட்சி" அளிக்கிறோம் என்ற பெயரில், "பள்ளி அபிவிருத்தி திணைக்களங்களை" தோற்றுவிக்கும் திட்டங்களை மேற்கொண்டு, பள்ளி நடத்தும் சுமையை பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கொடுத்தது. தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து வெளிப்பட்ட பரந்த எதிர்ப்பை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டு, பின்னர் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 1980களின் கடைசியில், அரசாங்கமானது "இது நம்முடைய பள்ளி" என்ற கோஷத்தின்கீழ் கட்டிடங்கள், பள்ளித் தேவை பொருட்கள், விளையாட்டுத் தேவைகள் அனைத்திற்கான செலவினங்களையும் பெற்றோர்களுடைய "பொறுப்பு" எனச் சிறிது சிறிதாக கொடுத்துவிட்டது. வசதியிருந்த பகுதிகளில் சில பள்ளிகள்தாம் நலன்களை பெற்றன; பெரும்பாலான பள்ளிகளில் நிலைமை சீர்குலைந்தது. செல்வந்தர் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள், வறியவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு இடையே கல்வியில் சமத்துவமற்ற நிலையை வெளிப்படுத்தி மற்றும் அதை உயர்த்தி உதவும் வகையில் பள்ளிகளை தரம் பிரித்த முறையில் கிட்டத்தட்ட 52 சலுகை பெற்ற பள்ளிகள் "மிகவும் செல்வாக்குடையவை" ஆயின. ஆசிரியர்கள் தங்கிப் பயிலும் பயிற்சிக் கல்லூரிகளை UNP அரசாங்கம் மூடியதோடு, செலவினங்களை குறைக்கும் வகையில், "தொலைதூரப் பயிற்சி மையங்களை", தொடக்கியது. இதையொட்டி ராகமவில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்று, முதன் முதலாகக் கட்டணம் வசூலிக்கும் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கு வழி வகுக்கப்பட்டது. பொதுஜன முன்னணி அரசாங்கம் 17 ஆண்டுகால UNP ஆட்சிக்கு பின்னர், நாட்டின் உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டுவருதல், ஜனநாயக உரிமைகளை மீட்டல் மற்றும் பொதுக் கல்வி முறை உட்பட வாழ்க்கைத்தரத்தின் கூறுபாடுகளை உயர்த்துதல் போன்ற உறுதிமொழிகளை கொடுத்திருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அவருடைய SLFP தலைமையிலான மக்கள் கூட்டணி அரசாங்கத்திடம், அது 1994ல் அதிகாரத்திற்கு வந்தபோது வாக்களாளர்கள் மிக உயர்ந்த நம்பிக்கையை வைத்திருந்தனர். இந்த நம்பிக்கைகள் விரைவில் நொருங்கிப் போயின. ராஜபக்ச அமைச்சராக இருந்த இந்த PA அரசாங்கம், உலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கோரியிருந்த "சந்தைச் சீர்திருத்தத்தை" செயல்படுத்த தொடங்கியது; விரைவில் அக்கொள்கை இரு கட்சிகளின் தீவிர திட்டமாயிற்று. அரசாங்க பள்ளிகளை மூடும் திட்டத்தை PA தொடக்கி, தனியார் பள்ளிகள் திறப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டது; இந்தக் கொள்கைகள் 2001க்கு பின்னர் UNP யினால் தொடரப்பட்டன. சீரமைத்தல் என்ற பெயரில் 1997க்கும் 2004க்கும் இடையே 592 பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன; தனியார் பள்ளிகள் 125 அளவில் அதிகரித்தன. கடந்த மூன்று தசாப்தங்களாக, கல்விக்கான செலவீன சுமை பெருகிய வகையில் பெற்றோர்கள், மாணவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட, சமீபத்திய மைய வங்கியின் கணக்கீட்டின்படி, 1996/97ல் தனியார் வகுப்புக்களுக்கு சென்றுவந்த மாணவர் சதவிகிதம் 35 என்பதில் இருந்து 2003/04ல் 49.6 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது தெரியவந்துள்ளது. நாட்டின் மொத்த கல்விச் செலவினங்களுக்கு, இல்லங்கள் அதிக பங்காக கிட்டத்தட்ட 21 சதவிகிதம் செலவழிப்பதாக ஓர் உலக வங்கி அறிக்கை குறிப்பிட்டுள்ளது. செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே இருக்கும் பிளவு மிகப் பெரிதாகிவிட்டது என்றும் அது புலனாக்கியுள்ளது. இல்லங்களின் மொத்தச் செலவினங்களில், மிக உயர்மட்டத்தில் இருப்பவை 52 சதவிகிதம் செலவழிக்கின்றன; மிகவும் வறுமை பீடித்த ஐந்தில் ஒருபங்கினரில் 6 சதவிகிதம் மட்டுமே செலவழிக்க முடிகிறது என்பதும் தெரியவந்துள்ளது. தற்போதுள்ள SLFP தலைமையிலான அரசாங்கம், பள்ளி சார் நிர்வாகம் School Based Management-SBM) என்ற திட்டத்தை ஒரு முன்னோடி முறையில் 200 பள்ளிகளில் செயல்படுத்தியுள்ளது. "நிர்வாக தன்னாட்சி" அளித்தல் என்ற பெயரில், பள்ளிகள் வளங்களை ஒதுக்கீடுசெய்தல், கல்வி உபகரணங்களை தேர்ந்தெடுத்தல், வரவுசெலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தல், ஆலோசனை பணிகளை விலைகொடுத்து பெறுதல் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்றிருக்கின்றன. மையக் கட்டுப்பாட்டில் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் என்ற முறை பள்ளி சார்பிலேயே நியமித்தல் என்ற முறைக்காக கைவிடப்பட உள்ளது; இது தவிர்க்க முடியாமல் பாரபட்ச முறைக்கு வகை செய்து ஆசிரியர்கள் உரிமைகள், பணிநேர நிலைமைகள் ஆகியவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும். ராஜபக்சவும் அவருடைய அரசாங்கமும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளன; விக்கிரமசிங்கவும் தன்னுடைய அறிக்கையில் இத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார். பல்கலைக்கழக கல்வியும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. புதிய மாணவர்களுக்கு 16,500 இடங்கள் மட்டுமே இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தகுதி உடைய, பள்ளிப்படிப்பு முடித்தவர்கள் கிட்டத்தட்ட 90,000 பேர், பல்கலைக் கழகங்களில் நுழைவதற்கு மறுக்கப்படுகிறார்கள். வசதி உடையவர்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் ஐக்கியம் கொண்ட தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்துப் படிக்கின்றனர். பல்கலைக் கழக மானியக் குழு ஆய்வு ஒன்றின்படி கிட்டத்தட்ட 50 நிறுவனங்கள் "இந்தக் கொழுத்த வணிகத்தில்" ஈடுபட்டுள்ளன. மொத்த மக்கட்தொகையில் 44 சதவிகித்திற்கும் குறைவானவர்கள், நாள் ஒன்றிற்கு 200 ரூபாய்க்கும் குறைவாக அல்லது 2 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கும், மற்றும் 26 சதவிகிதத்தினர் நாள் ஒன்றிற்கு 1 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் நாட்டில், தனியார் பல்கலைக் கழகம் என்பது பெரும்பாலான இளைஞர்களால் அடையப்பட முடியாத ஒன்றாகும். உதாரணமாக, தனியார் உடைமையான Sri Lanka Institute of Information Technology (SLIIT) தகவல் தொழில்நுட்ப துறையில் மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு மிக உயர்ந்த கட்டணமான 450,000 ரூபாய்களை வசூலிக்கிறது. கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் இக்கட்டணத்தை தவிர, தங்கும் இடம், உணவு ஆகியவற்றிற்கும் தாங்களே செலவு செய்து கொள்ள வேண்டும். UNP மற்றும் SLFP தலைமையிலான அரசாங்கங்கள் இரண்டுமே, கல்வித் துறையிலும், மற்ற துறைகளில் இருப்பது போல், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்ச கொள்கைகளை கொண்டுள்ளன. தீவின் 20 ஆண்டு உள்நாட்டுப் போரின் பெரும் தாக்கத்தை கொண்டுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கல்விக்காக பணம் இல்லை என்ற உண்மையில் இது நன்கு வெளிப்பட்டு நிற்கிறது. மொத்தம் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ள 164 மில்லியன் டாலர்களுக்கு பதிலாக, இப்பகுதிகளில் "கல்வியை மீட்டு மறுசீரமைப்பதற்காக" என்று 5 மில்லியன் டாலர்கள்தாம் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்கள் நிறைந்துள்ள மத்திய மலைப் பகுதி மாவட்டங்களில், 20 சதவிகித குழந்தைகளுக்கு எவ்விதக் கல்வியும் இல்லை; 44 சதவிகிதத்தினருக்குத்தான் தொடக்கப்பள்ளி கல்வி கொடுக்கப்படுகிறது.பொதுக் கல்விக்கு என்ன நேரும் என்பது ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ராஜபக்ச மற்றும் விக்கிரமசிங்கவின் வெற்று உறுதி மொழிகளினால் நிர்ணயிக்கப்பட மாட்டாது. இந்த ஆண்டு முன்னதாக வெளியிடப்பட்ட உலக வங்கி வளர்ச்சிக் கொள்கை பரிசீலனை ஏற்கனவே வழிகாட்டு நெறிகளை கொடுத்துள்ளது. அரசாங்கம் சிறிய பள்ளிகளை மூட வேண்டும், ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும், மற்ற நிர்வாக அலுவர்கள் பள்ளி அலுவலகங்கள், பயிற்சி மையங்கள், மற்றும் ஆதார மையங்கள் குறைக்கப்பட வேண்டும் போன்றவை அவற்றில் அடங்கியுள்ளன. உலக வங்கி மதிப்பீட்டுகளின்படி, மொத்தத்தில் 60 சதவிகிதம் அல்லது கிட்டத்தட்ட 6,000 பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் 15:1 என இருப்பது நடைமுறையில் ஏற்பதற்கில்லை எனக் கூறப்பட்டுள்ளது. Treasures of the Education System in Sri Lanka (TESSL) ஸ்ரீலங்கா கல்விமுறையில் இருக்கும் பொக்கிஷங்கள் என்ற வங்கியின் அறிக்கை ஆசிரியர் மாணவர் விகிதம் 25:1 என இருக்கும் பள்ளிகளைவிட அதிக விகிதம் இருக்கும் பெரிய பள்ளிகளில் அடிப்படை செலவினங்கள் 100 சதவிகிதம் கூடுதலாக இருப்பதாகக் கூறுகிறது. இதன் முடிவுரை என்னவென்றால், நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான சிறிய பொதுப் பள்ளிகள் ஒன்றாக இணைக்கப்படும் அல்லது முற்றிலுமாக மூடப்பட்டுவிடும் என்பதேயாகும். TESSL அறிக்கை இப்பொழுதுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித் தொகை முறை "மாணவர் செலவீன ஏடு, மாணவர் கடன்கள்" என்ற முறைக்கு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. இப்பொழுது அரசாங்கம் நடத்தும் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் மாதம் ஒன்றிற்கு 2000 ரூபாய் உதவித் தொகை பெறுகின்றனர். TESSL திட்டம் செயல்படுத்தப்பட்டால், மாணவர்கள்மீது இன்னும் கூடுதலான கடன்கள் சுமத்தப்படும்.தனியார் பல்கலைக்கழகங்கள் இன்னும் விரிவாக்கப்படுவதற்கான முயற்சிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளன. தென் கிழக்கு பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி குமாரதுங்க பல்கலைக் கழக கல்வி "கடுமையான மாறுதல்களுக்கு" உட்படுத்தப்படும் என்றார் மற்றும் "வெளிநாட்டு பல்கலை கழகங்கள் தங்கள் பயிலகங்களை இங்கு தொடக்குவதற்கு ஊக்கம் தரும் அரசாங்க முயற்சிகளை" தடை செய்பவர்களை கடுமையாக தாக்கவும் செய்தார். பெரும்பாலான குழந்தைகள் நம்பியிருக்கும் பொதுக் கல்விமுறைக்கு ஆழ்ந்த தாக்குதல் என்பதை தவிர வேறு எதையும் ராஜபக்சவிடம் இருந்தோ விக்ரமசிங்கவிடம் இருந்தோ எதிர்பார்ப்பதற்கில்லை. இதை மாற்றுவது ஒரு புறம் இருக்க, இப்போக்கை தடுத்து நிறுத்துவதற்கே ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் தொழிலாள வர்க்கத்தின் சமூக அந்தஸ்தை காக்கும் பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக திரட்டப்படவேண்டும். UNP மற்றும் SLFP உயர்ந்த தரமுடைய கல்வியை அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்க முடியாவிட்டால், அந்த அரசாங்கம் மாற்றப்பட்டு, அதை கொடுக்கக் கூடிய சோசலிசக் கொள்கையின் அடிப்படையில் நிறுவப்படும் ஒரு தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி பதவி வேட்பாளர் விஜே டயஸ், தொழிலாள வர்க்கத்திற்கான அத்தகைய சோசலிச வேலைத் திட்டம், முன்னோக்கு ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு தேர்தலில் நிற்கிறார். பல்கலைக்கழக கல்வி உட்பட இலவசமான, உயர்தரக் கல்வி என்பது அனைத்து குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் அடிப்படை உரிமை ஆகும். இளைஞர்கள் தங்கள் திறமையையும், திறனையும் வளர்த்துக் கொள்ள உதவும் வகையில் அவர்களுக்கு விஞ்ஞான சோதனைக் கூட வாய்ப்பு வசதிகள், கணினி வசதிகள் மற்றும் சமீபத்தில் வந்துள்ள கல்விமுறை கேட்டல் - கண்ணுறுதல் நுட்பங்கள், மற்றும் விளையாட்டு, கலைத்துறை வசதிகள் ஆகியவற்றை கட்டாயம் பெறவேண்டும். தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அதிலும் குறிப்பாக இளைஞர்களை, எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தருமாறும், எங்களுடைய வேலைத்திட்டத்தை நன்கு ஆராயுமாறும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது. இத்திட்டங்கள் மேலிருந்து கீழ் வரை சமூகம் முழுவதும் ஒரு சோசலிச உருமாற்றம் செய்வதற்கு குறையாத ஒன்றை நோக்கமாகக் கொண்டுள்ளன. |