:
ஆசியா
:
இலங்கை
Sri Lanka: JVP grovels to the Bush
administration
இலங்கை: ஜே.வி.பி புஷ் நிர்வாகத்தின் முன் மண்டியிடுகிறது
By Nanda Wickremasinghe
9 May 2005
Use this version to
print |
Send this link by email |
Email the author
கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அலுவலர்களுக்கும்
இடையில் அண்மையில் நடந்த சந்திப்பு, இலங்கை கட்சிகளின் ஏகாதிபத்திய விரோத வாய்வீச்சுக்களதும் சோசலிச
தோரணைகளதும் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
ஜே.வி.பி அல்லது தேசிய விடுதலை முன்னணி, 1960களில் மா ஓ வாதம், குவேராவாதம்
மற்றும் சிங்கள இனவாதத்திலிருந்து வடித்தெடுக்கப்பட்ட தீவிர கருத்துப்போக்கு கலவையுடன், தீவின் தென் பகுதியில்
வறிய கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. இன்று இலங்கை முதலாளித்துவத்தின்
தூணான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனிஷ்ட பங்காளியாக முதற் தடவையாக ஜே.வி.பி முதலாளித்துவ அரசாங்கத்தில்
அங்கம் வகிப்பதோடு, ஜே.வி.பி உறுப்பினர்கள் பலர் அமைச்சர் பதவியிலும் உள்ளனர்.
ஜே.வி.பி யின் பிற்போக்கு சிங்கள பேரினவாதமும் மற்றும் நாட்டின் உள்நாட்டு
யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்படும் எந்தவொரு
பேச்சுவார்த்தையையும் அது எதிர்ப்பதும் அதன் அரசியல் நிலைப்பாட்டை வேறுபடுத்திக்காட்டுகின்றன. ஜே.வி.பி
யின் அவ்வப்போதைய சோசலிச மேற்கோள் காட்டல்கள், பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் கூட்டங்களுக்கும்
இந்தியா அல்லது சீனாவுக்கான கடல்கடந்த பயணங்களுக்குமே சேவை செய்கின்றன. ஜே.வி.பி இந்தியா, சீனா
போன்ற நாடுகளில் ஸ்ராலினிச கட்சிகளில் உள்ள தோழமைக் "கம்யூனிஸ்ட்டுகளுடன்" தோளோடு தோள் உரசிக்கொள்கிறது.
ஏப்பிரல் 20 அன்று அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற சந்திப்பில்,
தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் கிரிஸ்டினா ரொக்கா மற்றும் அமெரிக்க தூதர்
ஜெஃப்ரி லன்ஸ்டட் உடன், ஜே.வி.பி யின் தலைவரும் சிந்தனையாளருமான சோமவன்ச அமரசிங்க, ஜே.வி.பி
பாராளுமன்ற உறுப்பினரும் கலாச்சார அலுவல்கள் அமைச்சருமான விஜித ஹேரத்தும் பங்குபற்றியிருந்தனர்.
ஜே.வி.பி, தூதரகத்திற்கு கலந்துரையாடல்களுக்காக சென்றது இதுதான் முதற் தடவையல்ல. அண்மைய வருடங்களில்
இது வழக்கமான பாதையாகிவிட்டது. ஆயினும் இதுவரை நடந்தவற்றில் இவை மிகவும் உயர்மட்டத்திலான
கலந்துரையாடலாகும்.
தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு
சுனாமி நிவாரணத்தை விநியோகிப்பதற்காக அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஒரு பொதுக்
கட்டமைப்பை ஸ்தாபிக்குமாறு நெருக்குவதற்காகவே ரொக்கா கொழும்பில் இருந்தார். இந்த திட்டத்தை
ஜே.வி.பி எதிர்த்ததோடு, இந்த விவகாரம் சம்பந்தமாக அரசாங்கத்திலிருந்து பிளவுபடுவதாக அச்சுறுத்தியதன்
காரணமாக இந்த முயற்சி பெருமளவில் கிடப்பில் தள்ளப்பட்டுள்ளது. ஜே.வி.பி, விடுதலைப் புலிகளுக்கு
வழங்கப்படும் எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட சலுகையையும் கூட, இலங்கையருக்கு அதாவது சிங்கள தேசத்திற்கு
இழைக்கப்படும் துரோகமாக கருதுகிறது.
புஷ் நிர்வாகம், 20 வருடகால உள்நாட்டு யுத்தத்திற்கு பேச்சுவார்த்தை மூலமான
முடிவை எதிர்பார்த்திருப்பதானது, இந்த மோதல் தெற்காசியாவின் ஸ்திரமற்ற நிலைமைக்கு வழிவகுப்பதாலும்,
அதன் மூலம் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் மூலோபாய குறிக்கோள்களுக்கு அச்சுறுத்தல்
ஏற்படுவதாலுமேயன்றி, இலங்கை மக்கள் மீதான அக்கறையினால் அல்ல. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி சிரேஷ்ட
தலைவர்களை சந்தித்த பின்னர், பொதுக் கட்டமைப்புக்கும் மற்றும் பெயரளவிலான சமாதான முன்னெடுப்பை
மீண்டும் தொடங்குவதற்கும் ஆதரவளிக்குமாறு நெருக்குவதற்காக ரொக்க ஜே.வி.பி பிரதிநிதிகளை
பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
தான் கொடுக்கல் வாங்கல் செய்வது சோசலிஸ்டுகளுடன் அல்ல என்பதை ரொக்கா
நன்கு அறிந்துகொண்டிருந்தார். 1980களில் ஆப்கானிஸ்தானில் இருந்த சோவியத் ஆதரவு அரசாங்கத்திற்கு எதிராக,
இஸ்லாமிய அடிப்படைவாத போராளிகளை பயிற்றுவிக்கவும் நிதி மற்றும் ஆயுதம் வழங்கவும் அமெரிக்கா முன்னெடுத்த
இரகசியமான பிரச்சாரத்தில் அனுபவம் பெற்றிருந்த ரொக்கா, ஒரு நிதானமான மற்றும் இரக்கமற்ற முன்னாள்
சீ.ஐ.ஏ இயக்குனராவார்.
கலந்துரையாடலை பற்றிய ஊடக அறிக்கைகள் வரையறுக்கப்பட்டவையாகவும்
தெளிவற்றவையாகவும் உள்ளன. இந்த பொது உதவி கட்டமைப்பு, விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சை
நோக்கிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என ரொக்கா விவாதித்துள்ளார். இந்த நோக்கை ஜே.வி.பி
ஆதரிக்கவில்லை. அமரசிங்க, விடுதலைப் புலிகள் கொழும்பில் "ஜனநாயக நீரோட்டத்துடன்" இணைவதற்கு
அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என்பதை உறுதிப்படுத்துமாறு ரொக்காவை கேட்டுக்கொண்டார். "சமாதான
முன்னெடுப்புகளையும்" மற்றும் வடக்கு கிழக்கில் ஒரு பிராந்திய சுயாட்சிக்கான விடுதலைப் புலிகளின்
கோரிக்கையையும் குறுக்கே வெட்டும் ஜே.வி.பி யின் பிரேரணையை ஆதரிக்க ரொக்கா மறுத்துவிட்டார்.
எவ்வாறெனினும், அமரசிங்கவால் கையொப்பமிடப்பட்டு ரொக்காவிடம்
கையளிக்கப்பட்டுள்ள இரண்டு பக்க கடிதம் மேலும் விவகாரங்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கடிதம்
பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் ஒரு இலங்கை இணைய தளத்திலும் பிரசுரமாகியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க
வெளிப்படையான ஆவணத்தில், இலங்கையின் சொந்த "கொடுங்கோன்மைக்கு எதிரான யுத்தத்திற்கு" --அதாவது,
தமிழ் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் கொழும்பின் யுத்தத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு--
அமெரிக்க ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக ஜே.வி.பி வெட்கமின்றி புஷ் நிர்வாகத்தின் முன் மண்டியிடுகின்றது.
ரொக்காவுக்கு தவறான எண்ணம் ஏதாவது இருக்குமானால் அதை இல்லாமல் செய்யும்
வகையில், ஜே.வி.பி க்கும் புரட்சிக்கும் அல்லது சோசலிசத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என்பதை
தெளிவுபடுத்துவதுடன் கடிதம் ஆரம்பிக்கின்றது. "பாராளுமன்ற கட்சியை நோக்கியும் மற்றும் கலப்புப்
பொருளாதாரத்தை நோக்கியும் நிலைமாறத் தயார்நிலையில் இருக்கும் ஒரு புரட்சிகர கட்சியாக மாற்றம் பெற
நாம் விரும்புகிறோம்," என அது பிரகடனம் செய்கின்றது. "கலப்புப் பொருளாதாரம்" என்பது முதலாளித்துவ
பொருளாதாரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு சங்கேத சொல்லாகும்.
இந்த ஆவணத்தில், டிசம்பர் மாதம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
வழங்கும் "மனிதாபிமான முயற்சிகளில்" பங்கெடுப்பதற்காக, இலங்கைக்கு அமெரிக்க கடற்படையை
அனுப்பிவைத்தமைக்காக புஷ் நிர்வாகத்திற்கு ஜே.வி.பி மீண்டும் நன்றியை தெரிவித்திருந்தது. அமெரிக்காவின் இந்த
நடவடிக்கையின் பின்னால் உள்ள உண்மையான உள்நோக்கத்தைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்கவில்லை.
தெற்காசியாவில் ஒரு இராணுவ இருப்பை மீள் ஸ்தாபிதம் செய்வதற்கான வாஷிங்டனின் நீண்டகால குறிக்கோளை
அபிவிருத்தி செய்வதற்கு சுனாமி ஒரு வசதியான சாக்குப் போக்கை வழங்கியுள்ளது. அமெரிக்கா சுனாமிக்குப்
பின்னர் இலங்கைக்கு கடற்படையினரை அனுப்பியமை, 1975ல் வாஷிங்டன் வியட்னாமில் தோல்வியை தழுவியதன்
பின்னர் இந்தப் பிராந்தியத்திற்குள் மேற்கொள்ளும் பிரமாண்டமான அமெரிக்க இராணுவ நிலைநிறுத்தலின் ஒரு
பாகமாகும்.
ஜே.வி.பி புஷ்ஷின் பெரும் பொய்யை ஆதரிக்கிறது
எவ்வாறெனினும், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், "கொடுங்கோன்மைக்கு"
எதிராக "ஜனநாயகத்திற்காகவும்" "சுதந்திரத்திற்காகவும்" அமெரிக்கா போராடிக்கொண்டிருக்கின்றது என்ற புஷ்
நிர்வாகத்தின் பெரும் பொய்யை ஜே.வி.பி அணைத்துக்கொண்டுள்ளது. அமரசிங்கவின் கடிதம், புஷ்ஷின் இரண்டாவது
பதவியேற்புவிழா உரையின் பகுதியொன்றை ஒப்புதலுடன் மேற்கோள்காட்டியுள்ளது: "எமது நாட்டில் சுதந்திரத்தின்
இருப்பு அதிகரித்தளவில் ஏனைய நாடுகளின் விடுதலையின் வெற்றியிலேயே தங்கியுள்ளது" என அது குறிப்பிடுகிறது.
"அனைத்து இனங்களுக்குள்ளும் கலாச்சாரத்திற்குள்ளும் ஜனநாயக இயக்கங்கள் மற்றும் அமைப்புகளின் வளர்ச்சிக்கு
ஆதரவளிப்பதன் மூலம்... எமது உலகில் கொடுங்கோன்மைக்கு முடிவுகட்டுவதை" அமெரிக்கா இலக்காகக்
கொண்டுள்ளது என்ற புஷ்ஷின் பிரகடனத்தையும் அது பாராட்டியுள்ளது.
இந்த மேற்கோள்களுக்கு இரண்டு அர்த்தங்கள் கிடையாது. ஜே.வி.பி இந்த
பிரகடனங்களை சட்டப்பூர்வமானதாக வரவேற்பதன் மூலம், ஆப்கானிஸ்தானையும் ஈராக்கையும் அடிமைப்படுத்தியமை
உட்பட புஷ் நிர்வாகத்தின் கடந்த கால குற்றங்களை மட்டுமன்றி புதிய இராணுவ நடவடிக்கைகளுக்கான
தயாரிப்புகளையும் ஆதரிக்கின்றது. "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை" "கொடுங்கோன்மைக்கு எதிரான
யுத்தமாக" விரிவாக்கம் செய்யும் புஷ்ஷின் குறிக்கோள், உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு ஒரு
பூரணமான நியாயப்படுத்தலை வழங்குகிறது.
ஜே.வி.பி க்கும் கூட இது ஒரு மாற்றத்தைக் குறிக்கின்றது. ஜே.வி.பி,
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ தலையீட்டை ஆதரித்த அதேவேளை, ஈராக் மீதான அமெரிக்க
தலைமையிலான ஆக்கிரமிப்பையிட்டு காத்திரமற்ற விமர்சனத்தை முன்வைத்ததோடு, அமெரிக்காவின் பெரும் வல்லரசு
எதிரிகளான பிரான்சும் ஜேர்மனியும் யுத்தத்தை நிறுத்தும் என்ற மாயையையும் பரப்பிவிட்டது. 2003 மார்ச்சில்
கொழும்பில் நடந்த ஒரு யுத்த விரோத கூட்டத்தில், வாஷிங்டனை அதன் "ஏகாதிபத்திய யுத்தத்திற்காக" கண்டனம்
செய்ததோடு "சதாம் ஹுஸைனின் வீரத்திற்கு வெற்றி, சதாம் ஹுசேனின் உறுதிப்பாட்டின் சக்திக்கு வெற்றி" என
பக்தாத் சர்வாதிகாரத்தை வர்ணித்த ஜே.வி.பி யின் பேச்சாளர் விமல் வீரவன்ச, ஜே.வி.பி யின் பழைய
வாய்வீச்சின் சுவையை வெளிப்படுத்தினார்.
ஜே.வி.பி ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு காட்டிய அனைத்து
எதிர்ப்புக்களையும் கைவிட்டுள்ளது என்பதை அமரசிங்கவின் கடிதம் தெளிவுபடுத்துகின்றது. புஷ்ஷின்
"கொடுங்கோன்மையின் மீதான யுத்தத்தை" வரவேற்பதன் மூலம், பூகோள மேலாதிக்கத்திற்கான வாஷிங்டனின்
இலட்சித்திற்கு ஜே.வி.பி ஆதரவளிப்பது மட்டுமன்றி, இலங்கையில் அமெரிக்க தலையீட்டிற்கும் அழைப்பு விடுப்பதோடு
அதற்கு உதவுவதாகவும் காட்டிக்கொள்கிறது. விடுதலைப் புலிகள், சிறுவர் போராளிகளை சேர்ப்பதாகவும்
ஜனநாயக உரிமைகளை மீறுவதாகவும் கண்டனம் செய்வதன் மூலம், இந்தக் கடிதம் தெளிவாகவே இந்தக்
"கொடுமைக்கு" எதிராக அமெரிக்கா போராட வேண்டும் என புரியவைக்க முயற்சிக்கின்றது.
ஒரு பந்தியில், அமெரிக்காவில் இருந்துகொண்டு விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கும்
ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகைக்கு அமரசிங்க அழைப்பு
விடுக்கின்றார். "அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், அது புஷ்ஷின் பதவியேற்பு விழா உரையின் சிறப்புக்கும்
மற்றும் உள்நோக்கத்திற்கும், அதேபோல் பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்களை கைதுசெய்வதை இலக்காகக்
கொண்ட உங்களது நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ள, செப்டெம்பர் 11 க்கு பின்னரான
சட்டங்களுக்கும் எதிராகச் செல்லும்" என இக்கடிதம் பிரகடனம் செய்கின்றது.
புஷ் நிர்வாகத்தின் முற்றிலும் ஜனநாயக விரோதமான உள்நாட்டு பாதுகாப்பு
சட்டங்களை ஜே.வி.பி ஆதரிப்பதானது அது இலங்கைக்காக வகுக்கவுள்ள "ஜனநாயக" அமைப்பை
அம்பலப்படுத்துகிறது. இந்தக் கட்சி "விடுதலைப் புலி சந்தேக நபர்களை" விசாரணையின்றி அடக்குமுறையாக
தடுத்துவைக்க அனுமதிக்கும் நாட்டின் கொடூரமான அவசரகால சட்டத்தை நீண்டகாலமாக ஆதரித்து வருகின்றது.
இந்த நடவடிக்கை கடந்த காலங்களில் சுற்றிவளைத்து தேடவும் மற்றும் சில சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கான
தமிழர்களை சித்திரவதை செய்யவும் வழிவகுத்துள்ளது.
மிகவும் தற்பாதுகாப்பான பாணியில் இருந்த போதிலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக
கொழும்பின் சார்பில் இலங்கையில் தலையீடு செய்வதற்கு அமெரிக்காவிற்கும் ஏனைய வல்லரசுகளுக்குமான ஜே.வி.பி
யின் அழைப்பு பகிரங்கமாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளது. ஏப்பிரல் 26 அன்று, விடுதலைப் புலிகளுடன் சுனாமி
நிவராணங்களுக்கான பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிக்காமல், தீவில் "சமாதானத்திற்கான ஒரு பாதையை"
வகுக்குமாறு "சர்வதேச சமூகத்திற்கு" அமரசிங்க அழைப்பு விடுத்தார். "மோதல்களால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு
வரை படங்களை" "சர்வதேச சமூகம் வழங்கியுள்ளதாகவும் அதையே இலங்கையிலும் மேற்கொள்ள வேண்டும் எனவும்
அவர் வருகை தந்திருந்த ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வலதுசாரி ஷரோன் அரசாங்கத்தின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுமாறும்
மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு இராணுவ எதிர்ப்பையும் நசுக்குமாறும் பாலஸ்தீனிய பிரதிநிதிகளை இடைவிடாமல்
அமெரிக்கா நெருக்கி வருகின்ற மத்திய கிழக்கில் உள்ள "சாலை வரைபடம்" நன்கு பிரசித்திபெற்றதாகும்.
அமரசிங்கவின் பிரகடனங்களின் அர்த்தங்கள் சகல கல்வியறிவுள்ள அரசியல் பார்வையாளருக்கும்
சாட்சியாகும். டெயிலி மிரர் பத்திரிகையில் எழுதும் கீத் நொயர், ஏப்பிரல் 23 அன்று, ஜே.வி.பி
யின் ரொக்காவுக்கான நீண்ட கடிதத்தில் மேற்கோள்காட்டியிருந்ததோடு அதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட
அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக தலையிடுமாறு புஷ் நிர்வாகத்திற்கு ஒரு அழைப்பு, என குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குறிப்பு வாய்வீச்சுடனான ஆரவாரங்களுடன் பின்வருமாறு முடிவடைகிறது: "விடுதலைப் புலிகளோ, அல்லது
இலங்கை முதலாளித்துவத்தின் மரபுரீதியான இரு கட்சிகளான ஐ.தே.க வோ அல்லது ஸ்ரீ.ல.சு.க வோ இந்த
விடயத்தை பறைசாற்ற முடியுமா?"
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னால் மண்டியிடுவதில் (இந்தக் கட்சிகளால் கூட) ஜே.வி.பி
யைத் தோற்கடிக்க முடியாது. ஆனால் ஜே.வி.பி எதிர்பார்த்திருந்தது உடனடியாக கிடைக்கவில்லை.
தற்போது ரொக்கா, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பொதுக் கட்டமைப்பை ஸ்தாபித்தல் மற்றும் சமாதானப்
பேச்சுக்களை மீண்டும் தொடங்குதல் ஆகிய ஆர்வமற்ற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்றார். ஆனால், புஷ்
நிர்வாகத்துடன் வேலை செய்வதற்கான ஜே.வி.பி யின் விருப்பத்தையும் மற்றும் எதிர்காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு
ஒரு பயனுள்ள கருவியாக ஜே.வி.பி மேலும் பயன்படக் கூடும் என்பதையும் ரொக்கா குறித்துக்கொண்டிருப்பார் என்பதில்
சந்தேகம் கிடையாது.
Top of page |