ஐரோப்பா
:
பிரான்ஸ்
French referendum on European constitution: the official
debate
ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றி பிரான்சில் வாக்கெடுப்பு: உத்தியோகபூர்வமான விவாதம்
By Peter Schwarz
26 May 2005
Use this version
to print |
Send this link by email |
Email the author
ஐரோப்பிய ஒன்றியம் பற்றிய மே 29 வாக்கெடுப்பிற்காக கடந்த சில வாரங்களாக
பிரான்ஸ் ஆழ்ந்த விவாதங்களை கேட்டு வருகிறது. ஆனால் இந்த விவாதம் அதிகாரபூர்வமான முதலாளித்துவ அரசியல்
செயற்களத்திற்குள் தன்னந்தனியானதாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்களுடைய சொந்த
கோரிக்கைகளை மற்றும் நலன்களை வெளியிடுவதையோ அடையப்படுவதையோ அனுமதிக்கும் ஒரு சுதந்திரமான
முன்னோக்கின் அடையாளம் அங்கே கிடையாது.
ஓர் ஐரோப்பிய சோசலிச அரசுகள் கூட்டமைப்பை அடிப்படையாகக் கொள்ளும்
அத்தகைய முன்னோக்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பத்திரிகையான உலக சோசலிச வலைத்தளம்
ஒன்றினால்தான் முன்வைக்கப்பட்டுள்ளது. (See:
"ஐரோப்பிய
அரசியலமைப்பு பற்றிய பிரெஞ்சு கருத்து வாக்கெடுப்பில் "வேண்டாம்" என்று வாக்களிக்கவும்"
)
"வேண்டும்" என்ற முகாமிற்கு அரசியல் அமைப்பு முறையின் தலைவர்கள் முன்னின்று
தலைமை தாங்குகின்றனர்: ஜனாதிபதி ஜாக் சிராக், மற்றும்
UMP எனப்படும்
மக்கள் இயக்கத்திற்கான சங்கத்தில் உள்ள அவரது ஆதரவாளர்கள், பிரான்சின் ஜனநாயகத்திற்காக (UDF)
"சுதந்திர சந்தை ஆதரவு" லிபரல் யூனியன், இதுவும் அரசாங்க முகாமில்தான் உள்ளது, மற்றும்
Francois Hollande
இன் கீழ் உள்ள சோசலிஸ்ட் கட்சி ஆகியவை இதில் உள்ளன. அதிகாரபூர்வ "வேண்டும்" முகாமில் பசுமைக் கட்சியும்
முக்கியமானதாக உள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர்
Jacques Delors
மற்றும் ஜனாதிபதி
Francois Mitterand இனதும் கீழிருந்த சோசலிஸ்ட் கட்சியானது
மிக முக்கியமான ஐரோப்பிய ஆதரவு பிரெஞ்சு கட்சியாக கருதப்பட்டது, அது இந்த வாக்கெடுப்பு பற்றிய விவகாரத்தில்
ஆழமாகப் பிளவுற்றுள்ளது. கட்சி அமைப்பு முறையில் வலதுசாரியும், முன்னாள் பிரதம மந்திரியுமான
Laurent Fabius
ம், கட்சியில் இடது என்று கருதப்படுபவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள்
Henri Emmanuelli,
மற்றும் Jean Luc Mélenchon
உம் "வேண்டாம்" வாக்கிற்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் இப்பிரச்சினை பற்றி
உட்கட்சி வாக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது, 40 சதவீதத்தினருக்கும்
மேலானவர்கள் அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
அரசாங்க முகாமில் கணிசமான அழுத்தங்களும் உள்ளன. ஒரு சிறிய எதிர்ப்பாளர்கள்
குழுவை தவிர, UMP
ஒரு "வேண்டும்" வாக்கெடுப்பிற்குத்தான் விருப்பத்தை தெரிவித்துள்ளது
என்றாலும், இரண்டு முக்கிய பிரதிநிதிகளான ஜனாதிபதி சிராக்கும் கட்சித் தலைவர் நிக்கோலா சார்கோசியும்
தங்களுடைய தனித்தனி "வேண்டும்" பிரச்சாரத்திற்கு மிகவும் மாறுபட்டுள்ள, எதிரிடையாக கூட இருக்கும்
வாதங்களை முன்வைத்து நியாயப்படுத்தியுள்ளனர்.
"வேண்டாம்" முகாமை பொறுத்த வரையில், ஒரு பிரிவில் மிகத் தீவிர
வலதுசாரியினர் உள்ளனர். அது ஐரோப்பிய ஒன்றியத்தை, பிரான்ஸ் தேசத்திற்கு ஓர் அச்சுறுத்தல் என்று
விவரிக்கிறது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கி அனுமதிக்கப்படுவதற்கு எதிராக இனவாத,
இஸ்லாமிய-எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
மற்றய பிரிவில் பரந்த முறையிலான இடது குழுக்கள், சோசலிஸ்ட் கட்சியின்
சிறுபான்மை பிரிவில் இருந்து, Jean Pierre
Chevenement தலைமையிலான இறைமைவாதத்தினர் முதல்,
அட்டாக்கில் இருக்கும் பூகோளமயமாக்கலை எதிர்ப்பவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், புரட்சிக் கம்யூனிஸ்ட்
கழகத்தினர் (LCR)
ஆகியோர் இருக்கின்றனர்.
ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றி வாக்கெடுப்பு இருக்கும் என்று, பிரெஞ்சு தேசிய
விடுமுறை நாளான கடந்த வருடம் ஜூலை 14ம் தேதி சிராக் அறிவித்தபோது, அது நிராகரிக்கப்பட்டுவிடக் கூடும்
என்று அவர் ஒருபோதும் சிந்திக்கவில்லை. அந்த நேரத்தில் மக்கள் கருத்துக் கணிப்புக்கள் அரசியலமைப்பிற்கு
ஆதரவாக மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை தெரிவித்தன. அரசாங்க முகாமிற்கு, ஐரோப்பிய மற்றும் வட்டாரத்
தேர்தல்களில் கிடைத்த துயரம் நிறைந்த தோல்விகளில் இருந்து, தன்னுடைய புகழை உயர்த்தும் வகையில், சிராக்
இதில் முயற்சி எடுத்துக் கொண்டார்.
அப்பொழுதில் இருந்து, மக்களுடைய மனப்போக்கு மாறத் தொடங்கியது. சில
வாரங்களுக்கு முன்பு கருத்துக் கணிப்புக்கள் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் "வேண்டாம்" வாக்கிற்காக என்றிருந்த
நிலையில், வாக்கெடுப்பின் முடிவு தேர்தல் நாள் நெருங்குகையில் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. மனோபாவத்தில்
ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அரசியலமைப்பில் பொதிந்துள்ள "சுதந்திர சந்தை" பொருளாதாரக் கொள்கையின்
விளைவு பற்றிய மக்களின் பயம், மற்றும் சிராக், அவருடைய பிரதம மந்திரி
Jean-Pierre Raffarin
ஆகியோரின் சமூகக் கொள்கைகளுக்கு பரந்த முறையில் எதிர்ப்பு இவற்றின் வெளிப்பாடு ஆகும்.
"வேண்டும்" முகாம்
அரசியல் அமைப்பிற்கு ஆதரவாளர்கள் வெளிப்படையாக பிரெஞ்சு சோவினிசத்திற்கு
அழைப்பு விடுக்கிறார்களே அன்றி, பரந்த ஐரோப்பிய உயர் நோக்கத்திற்கு அழைப்புவிடவில்லை. அவர்களுடைய
பிரச்சாரத்தில் மற்ற ஐரோப்பிய மக்களுடைய தலைவிதி எந்தப் பங்கையும் கொண்டிருக்கவில்லை. அவர்களுடைய
வாதத்தின் மையத்தானம், ஐரோப்பிய ஒன்றிய உள்ளடக்கத்திற்குள்ளே பிரான்சை வலிமையுடன் வைத்துக் கொண்டு,
அமெரிக்காவிலிருந்து வரும் சவாலை எதிர்கொள்கையில் தன்போக்கை விட்டுக் கொடாதிருக்க முடியும் என்றுள்ளது.
சிராக்கின் நம்பிக்கைக்குரிய நண்பரான பிரான்சின் வெளியுறவு மந்திரியான
Michel Barnier,
வாக்கெடுப்பின் மூலம் பிரெஞ்சு மக்கள் "ஐரோப்பிய ஐரோப்பா" வேண்டுமா அல்லது "அமெரிக்க செல்வாக்கில்
இருக்கும் ஐரோப்பா வேண்டுமா" என்பதை முடிவெடுக்க முடியும் என்று அறிவித்தார். அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால்
தன்னுடைய சர்வதேச செல்வாக்கை பிரான்ஸ் இழக்கும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
UDF இன் தலைவரான
Francois Bayrou
இன்னும் தெளிவான முறையில் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். "வேண்டும்" வாக்கிற்கு காரணங்கள்
கொடுக்குமாறு ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது, அவர் விடையிறுத்தார்: "அமெரிக்கா, சீன மற்றும்
வளர்ச்சியுற்று வரும் நாடுகளுக்கு எதிராக நமக்கு ஒற்றுமையான, வலிமையான ஐரோப்பா தேவை. சீனாவில்
இருந்து வரும் மகத்தான அழுத்தங்களை பாருங்கள். அமெரிக்க மேலாதிக்கத்தை பாருங்கள். ஐரோப்பா
இல்லாவிடின், ஓர் அரசியலமைப்பு இல்லாவிடின், நாம் அடிபணிந்து நிற்க நேரிடும்."
"வேண்டும்" வாக்கு தேவை என்று கூறும் சோசலிஸ்ட் கட்சி இதேபோன்ற
முறையில்தான் வாதிட்டுள்ளது. Politique
Internationale என்ற இதழில் வந்துள்ள கட்டுரை ஒன்றில்,
லியோனல் ஜொஸ்பனுடைய சோசலிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தில் ஐரோப்பிய மந்திரியாக இருந்த
Pierre Moscovici,
விரிவடைந்த ஐரோப்பா "பிரான்சின் செல்வாக்கைப் பெருக்கும்" என்று
எழுதியுள்ளார். "ஒரு ஆழ்ந்த பிற்போக்குத் தன்மையின் அடிப்படையில் அமைந்துள்ள அவருடைய உள்நாட்டு,
வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு, அமெரிக்கா, ஜோர்ஜ் புஷ்ஷிற்கு எதிர்ப்பில்லாத தலைமை என்ற பங்கை
கொடுத்திருக்கும்போது, ஐரோப்பாவை வலுவிழக்கச் செய்யும் எந்த முயற்சியும், அரசிலமைப்பை நிராகரிக்கும்
எந்த முயற்சியும் மடத்தனமானதாகும் ...தற்கொலைக்கு ஒப்பானதாகும். ஐரோப்பா ஒரு நெருக்கடியில்,
முடக்கத்தில், பிரிந்து உள்ளது; ஏற்கனவே தன்னுடைய அதிகாரத்திற்கு எந்த வரம்பும் இல்லை என்று நினைத்துக்
கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு இது ஒரு எதிர்பாராத, சிறந்த, அன்பளிப்பு போல் ஆகிவிடும்" என்றும்
எச்சரித்துள்ளார்.
ஜேர்மனியின் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடரும் பிரான்சின் ஜனாதிபதி சிராக்கும் ஏப்ரல்
மாத இறுதியில் அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டபோது, அடிப்படையில் ஒரே நிலைப்பாட்டைத்தான்
வெளிப்படுத்தியுள்ளனர். ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு ஒப்புதல் தருவது "ஐரோப்பிய செல்வாக்கை சர்வதேச
அரங்கில்" தக்கவைத்துக் கொள்ளுவதற்கு "ஒரு முக்கியமான செயலாகும்" என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் பொருளாதார, சமூக விளைவுகளைப் பற்றிய மக்களுடைய
அச்சங்களை பொறுத்தவரையில், அரசியலமைப்பின் ஆதரவாளர்கள் ஒரு வலிமை மிகுந்த ஐரோப்பிய ஒன்றியம்தான்
பூகோளமயமாக்கலின் பாதிப்பிற்கு எதிராக ஐரோப்பிய சமூக முன்மாதிரியை பாதுகாக்க முடியும் என்று
வாதிட்டுள்ளனர். இதுதான் சமூக சோவினிசத்திற்கு தலைசிறந்த வாதம் ஆகும்.
தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்கள் தாழ்த்தப்பட்டு பிரான்ஸ் மற்றும்
ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தேவைகளுக்கு விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்றும், இதுதான் "ஐரோப்பிய
செல்வாக்கை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தும்" என்றும் கூறப்படுகிறது. இதே தர்க்கப்படி, அதாவது
சோசலிசத்திற்கு முன்தேவை சொந்த நாட்டின் பாதுகாப்பு என்ற கருத்துடன்தான் பல ஐரோப்பிய சக்திகளின்
சமூக ஜனநாயகவாதிகள் மில்லியன் கணக்கான மக்களை அறிவற்ற முறையில் முதல் உலகப் போரின் களங்களுக்கு
மரணமடைய அனுப்பிவைத்திருந்தனர்.
"வேண்டாம் முகாம்"
அரசியலமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் முக்கியமானவர்களின் பெரும்பாலான
வாதங்கள் "வேண்டும்" முகாம் கூறுபவற்றில் இருந்து அதிக வேறுபாடுகளைக் கொள்ளவில்லை. அவர்களும் ஒரு
வலிமையான பிரான்ஸ், வலிமையான ஐரோப்பாவிற்குள் இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். ஆனால் அவர்கள்
அரசியலமைப்பை நிராகரிப்பதற்கு காரணம், அவர்கள் கருத்தில் அது அமெரிக்காவிற்கு ஐரோப்பிய அரசியலில்
மிகக் கூடுதலான செல்வாக்கை கொடுத்துள்ளது என்பதாகும். பிரான்ஸ் ஒரே நேரத்தில் அமெரிக்காவை
எதிர்கொண்டு, தன்னுடைய தொழிலாள வர்க்கத்தின்மீதும் தாக்குதலை நடத்த முடியாது என்று அவர்கள்
வாதிடுகின்றனர்.
இந்த அடிப்படையில் அவர்கள் ஒரு திருத்தப்பட்ட அரசியலமைப்பை கோருகின்றனர்;
அதில் "சதந்திர சந்தை" தாராளவாத பொருளாதார சார்பு மற்றும் சமூக எதிர்ப்பு தன்மை குறைந்தே
வெளிப்பட்டிருக்கவேண்டும் என்றும் விரும்புகின்றனர். அவர்கள் முதலாளித்துவ முறையையோ அல்லது ஐரோப்பிய
ஒன்றியத்தின் ஏகாதிபத்திய தன்மையையோகூட எந்தவகையிலும் சவால் செய்யவில்லை.
தன்னுடைய வலைத் தளத்தில்,
Laurent Fabius,
"வேண்டாம் வாக்குப் போடுவதற்கு ஆறு காரணங்கள்" என்று பட்டியலிட்டுள்ளார். இவற்றில் முதல் மூன்று வெளிப்படையாகவே
சோவினிசத்தை காட்டுபவை: அரசியல் அமைப்பு, "ஒரு திராணியற்ற ஐரோப்பா", ஒரு "வலுவிழந்த பிரான்ஸ்",
மற்றும் "தடுக்கப்பட்டுவிட்ட நிறுவனங்கள்" இவற்றை தோற்றுவித்துவிடும்.
ஒரு திராணியற்ற ஐரோப்பா என்பதற்கு சான்றாக, இதன் பாதுகாப்புக் கொள்கை
எப்படி அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட நேட்டோவிற்கு தாழ்ந்துள்ளது என்றும், வெளியுறவுக் கொள்கை இறுதியாக
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவையான ஒற்றுமையாக இருத்தல் என்பதில் உள்ளது என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் விதிகளின்படி, ஜேர்மனிக்கு இணையான வாக்கை பெறாவிட்டால், பிரான்ஸ் வலுவிழந்துவிடும் என்று
இவர் வாதிட்டுள்ளார்; மேலும் 2014க்கு பின்னர் ஒரு ஐரோப்பிய ஆணையாளரை நேரடியாக நியமிக்கும்
அதிகாரத்தை பிரான்ஸ் இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் விரிவாக்கம்
என்பது பிரான்சின் ஒப்பீட்டளவிலான செல்வாக்கை குறைந்துவிடும் என்பதையும் இவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு ஒருமித்த வாக்கின்மூலம்தான் திருத்தப்படமுடியும் என்பது
"தடைக்குட்பட்ட நிறுவனங்களை" ஏற்படுத்திவிடும் என்றும் "ஐரோப்பிய முன்னணிப்படை" அமைக்கப்படுவது என்பது
முடியாமல் போய்விடும் என்று இவர் கூறுகிறார்.
"வேண்டாம்" வாக்கிற்கு இவர் கொடுக்கும் எஞ்சிய மூன்று காரணங்கள்,
அரசியலமைப்பில் உள்ள "சுதந்திர சந்தைக்கான" தாராளவாத பொருளாதார உந்துதல், மற்றும் சமூக சமரசக்
கொள்கைக்கு இடமின்மை என்பற்றிற்கு எதிரானவையாகும். இது
Fabius ஐ
பொறுத்தவரையில், வெறும் உணர்ச்சியை கிளறிவிடும் பேச்சாகும்; இவர்தான் இப்பொழுது இவர் குறைகூறியுள்ள
கொள்கையை செயல்படுத்துவதில் மிக முக்கியமான பங்கை கொண்டிருந்தார். 1984ல் இருந்து 1986 வரை,
Fabius
கடுமையான சிக்கனக் கொள்கையை, மித்திரோனின் பிரதம மந்திரி என்ற முறையில் செயல்படுத்தினார்.
1990களில் இவர் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்திய
Masstricht, Amsterdam, Nice உடன்படிக்கைகளுக்கு
ஆதரவு கொடுத்தார்: அவைதான் தற்போதைய அரசியலமைப்பிற்கு முன்னோடிகள் ஆகும்.
திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்பை எதிர்க்கும்போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
தன்னுடைய வெளிப்படையான ஆதரவையும் Fabius
அறிவித்துள்ளார்; அத்தகைய ஐரோப்பா "செயலாற்றும் திறனை உடையது" என்றும் பிரான்ஸ்-ஜேர்மனி அச்சை வலியுறுத்த
அது தேவை என்றும் கூறியுள்ளார். "பிரான்ஸ்-ஜேர்மனிய கூட்டு மிகவும் முக்கியமானது. என்னுடைய பங்கிற்கு நான்
ஒரு பொது பிரான்ஸ்-ஜேர்மனிய கூட்டுப் பாதுகாப்பை விரும்புவேன்; நம்முடைய சக்திகள்
IMF, World Bank
இவற்றில் ஒன்றுபடவேண்டும்; கூட்டாக வளர்ச்சியுறும் நாடுகளுக்கு உதவ வேண்டும்" என்று
திக்ஷீணீஸீநீமீ மிஸீtமீக்ஷீக்
க்குக் கொடுத்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
l'Humanite இல் ஒரு
கட்டுரையில் அவர் ஐரோப்பிய நிதிய ஒன்றியத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு நியாயப்படுத்தும் வகையில், யூரோ
"ஒரு உறுதித்தன்மை கொடுக்கும் கருவியாக உலக வடிவமைப்பிற்குள்" செயல்படுகிறது என்று கூறினார். "இந்தப்
பொது நாணயம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அதன் உட்குறிப்பாக பிரான்சிற்கும் அமெரிக்காவுடன் நிதி விஷயத்தில்
சமநிலை அதிகாரத்தை கொள்ளுவதற்கு வகை செய்துள்ளது" என்றும் அவர் தொடர்ந்து கூறினார்.
அரசியலமைப்பு மறுபடி பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்று
Fabius
வாதிடுகிறார்; ஒருவேளை இந்த ஆவணம் பல நாடுகளால் நிராகரிக்கப்படுமேயாயின் அதுதான் வெளிப்படையான
நோக்கம் என்று அவர் வலியுறுத்திக் கூறுகிறார். பிரான்ஸ் அரசியலமைப்பை நிராகரித்தால் அது மீண்டும்
பேச்சுவார்த்தைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான செல்வாக்கை அதிகரிக்கும் என்றும் அவர் வாதிடுகிறார்.
இது இவ்வாறு நடக்குமா என்பது பெரிதும் ஐயத்திற்குரியதுதான்: அதை
Fabius
நன்றாகவே அறிந்துள்ளார். அவருடைய நிலையின் தர்க்கம் பிரான்சின் அதிகாரத்தை குறைத்து, வாஷிங்டனின்
செல்வாக்கிற்குட்பட்டுள்ள பெரும்பான்மையால் முடிவெடுக்கப்படும் தன்மையுடைய ஒரு அரசியலமைப்பு இருப்பதை விட,
அரசிலமைப்பு இல்லாமல் இருப்பதே மேல் என்பதாகும்.
சோசலிஸ்ட் கட்சியின் அரசியலமைப்பு ஆதரவு அணியின் பெரும்பான்மை,
Fabius
நிலையைப் பெரும் ஆபத்திற்குரியது என்று நினைக்கிறது. 2002 ஜனாதிபதித் தேர்தல்களில் தான் தோற்றதிற்குப்
பின்னர் அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கியிருந்த ஜொஸ்பன் தன்னுடைய மெளனத்தை கலைத்து
Fabius ஐ
வெளிப்படையாகவே எதிர்த்துள்ளார். "ஐரோப்பா வேண்டும் என்று ஒருவர் விரும்பினால், பின் ஐரோப்பாவிற்கு
"வேண்டும்" என்று கூறுங்கள்; ஐரோப்பாவிற்கு "வேண்டாம்" என்று எவரும் கூறக்கூடாது என்று, மூன்று ஆண்டுகளுக்கு
பின்னர் தோன்றிய தொலைக்காட்சி பேட்டியொன்றில் அவர் குறிப்பிட்டார்.
சிறிதும் கட்டுப்பாடற்ற பிரெஞ்சு தேசியவாத உணர்வில் திளைப்பதில் எவ்வித மனக்
குறுகுறுப்பும் காட்டாத பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி (PCF),
Fabius
இன் வாதத்தை இன்னும் நியாயப்படுத்தியுள்ளது. PCF
பிரான்சை "மக்களுடைய குரலாகக்" கொள்ளுகிறது, புதிய தாராள பொருளாதார வாதத்திற்கு எதிரான
போராட்டத்தில் முன்னணி வீரநாடாகவும், "சமூக ஐரோப்பாவின்" காவலாகவும் இது விளங்குகிறது. இந்த அடிப்படையில்
ஸ்ராலினிச அமைப்பு கூடுதலான அதிகாரமும் செல்வாக்கும் பிரான்சிற்கு தேவை என்று ஆதரவு கொடுக்கிறது.
"அரசியலமைப்பை பிரான்ஸ் நிராகரிப்பது பிரான்சின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும்;
அது ஐரோப்பிய அமைப்பு வேறு திசையில் இயக்கப்படவேண்டும் என வலியுறுத்துபவர்களை கவனிக்க வைக்கும்"
இப்படித்தான் கட்சியின் வெளியீடான l'Humanite
"வேண்டாம்" வாக்கிற்கு ஆதரவை நாடுகிறது. இச்செய்தித்தாள் "வேண்டும்" வாக்குப் போடலாம் என்ற
கருதுபவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில், அரசியல் அமைப்பு நிராகரிக்கப்பட்டால், ஐரோப்பா
தொடர்ந்து 2002ம் ஆண்டு நீஸ் உடன்படிக்கையின் அடிப்படையில் தொடரும் என்றும் "அதன் இதயத்தானத்தில்
பிரான்ஸ்" இருக்கும் என்றும் "பிரான்சின் குரலும் நிலைப்பாடும்" பெரும் மதிப்பை கொள்ளும் என்றும் அது
குறிப்பிட்டுள்ளது.
"எவ்வாறு பிரான்ஸ் தன்னுடைய மதிப்பையும் செல்வாக்கையும் மக்கள் குரலை
சர்வதேச அமைப்புக்களில் வெளியிடும்போது பெறுகிறது" என்பதை பல முறையும் பார்த்துள்ளோம் என்று
l'Humanite
தொடர்கிறது. இதற்கு உதாரணமாக அவர் ஈராக்கிய போருக்கு சிராக்கின் எதிர்ப்பு ஐ.நா.வில்
கூறப்பட்டதையும், போல்கிஸ்டெய்ன் இயக்க நெறி, ஐரோப்பிய குழுவில் திருத்தப்படவேண்டும் என்று பிரான்ஸ்
வலியுறுத்தியதையும் குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பை குறைகூறும் அளவிற்கு
PCF சென்றுள்ளது
என்றால், அது நேட்டோ மூலம் ஐரோப்பிய இராணுவ மறு ஆயுதம் ஏந்தலை சிதைப்பதற்கு அமெரிக்காவிற்கு
வகைசெய்துள்ளது என்பதனால் ஆகும். "அமெரிக்க அரசாங்கத்திற்கு திருப்தி அளிக்காத எந்த இராணுவ
நடவடிக்கையும் உடனே தற்போது நேட்டோ மூலம் பாதுகாப்புக் கொடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய
நாட்டினால் தடைசெய்யப்பட்டு விடமுடியும். பிரிட்டன் போன்ற சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், முற்றிலும்
அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் Global
Positioning System (GPS) இன் ஏகபோக உரிமைக்கு
அச்சுறுத்தலாக இருக்கும் கலிலியோ எனப்படும் ஐரோப்பிய செயற்கை கோள்களை சுற்றுப்பாதையில் நிறுத்தும்
இராணுவ வளர்ச்சித் திட்டத்தை ஏற்கனவே தடுத்து நிறுத்தி உள்ளது."
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்
(LCR) என்பது முதலாளித்துவ முறையின் "வேண்டாம்" வாக்கின்
ஒருங்கிணைந்த கூறுபாடு ஆகும்; இது அதன் தேசிய அரசியலுக்கு இடது மூடிமறைப்பை கொடுத்துள்ளது. இதன்
பேச்சாளர்கள் சோசலிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, அட்டாக் மற்றும் "இறைமையாளர்கள்" ஆகியோருடன்
கூட்டுக் கூட்டங்களில் அரசியலமைப்பிற்கு எதிராகப் பேசுகின்றனர். ஸ்ராலினிஸ்டுகள், சமூக ஜனநாயகவாதிகள்
ஆகியோரின் பகட்டுச் சொற்களை இவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், ஒரு "தொழிலாளர் ஐரோப்பா"
வேண்டும் என்று கூறினாலும், அடிப்படையில் அவர்களுடைய அரசியல் செயல்பாடு "வேண்டாம்" முகாமில் இருக்கும்
தங்கள் கூட்டாளிகளின் சமூக சோவினிச வாதத்தை மூடிமறைக்க வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு எதிராக
கருத்துப் போராட்டம் எதையும் LCR
விலக்கிவருகிறது; தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு தேவையான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்கும்,
அரசியலமைப்பை எதிர்க்கும் முதலாளித்துவ முகாமின் அரசியலுக்கும் உள்ள முரண்பாடுகளையும் பூசி மெழுகும்
முயற்சியில்தான் அது ஈடுபட்டுள்ளது.
சார்க்கோசி
"வேண்டும்", "வேண்டாம்" என்ற இரு முகாம்களில் பிரதிநிதிகளும் பிரெஞ்சு அரசை,
"தீவிர தாராளவாதத்திற்கு" எதிரான "பிரெஞ்சு சமூக முன்மாதிரி" யின் பாதுகாவலர் மற்றும் பேணுபவர் என்று
சித்தரித்தாலும், UMP
இன் தலைவரும், சிராக்கின் கடுமையான போட்டியாளருமான நிக்கோலா சார்க்கோசி கட்சிக்குள்ளேயே
எதிர்க்கருத்தை வலியுறுத்துகிறார். சிராக்கிற்கும் சார்க்கோசிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை
Le Figaro
சுருக்கிக் கூறுகிறது: "சிராக்கின் "வேண்டும்" வாக்கு, "பிரான்சின் சமூக முன்மாதிரியை புகழ்ந்த" ஆதரவுடனும்,
சார்க்கோசியின் "வேண்டும்" வாக்கு ஐரோப்பாவை பிரான்சை திருத்தும் நெம்புகோல்" என்றும் கருதுகின்றது."
சார்க்கோசி, அரசியலமைப்பிற்கு அவரது ஆதரவை பிரான்சின் பொருளாதார
சீர்திருத்தத்தை புதிய தாராளவாத கொள்கையின் மூலம் முன்னேறச்செய்யும் என்ற அடிப்படையில்
நியாயப்படுத்துகின்றார். "நான் ஒரு ஐரோப்பியன்; ஏனெனில் ஐரோப்பா பிரான்சில் சீர்திருத்தங்களை
சாதிப்பதற்கு ஒரு சிறந்த நெம்பபுகோலாகும்" என்று
le Monde க்குக் கொடுத்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
Montpellier
இல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் புதிய தாராளவாதக் கொள்கைக்கு எதிரான பிரச்சாரத்தை அவர் இடித்துக்
கூறினார்; "நம்முடைய தற்போதைய சமூக முன்மாதிரி மற்றவர்களைவிட இரு மடங்கு வேலையற்றவர்களை
கொண்டுள்ளது. அதிருஷ்டவசமாக, இழிவான மடத்தனம் உயிரை எடுத்துவிடாது. பிரான்ஸ் ஒன்றும் தாராளவாதம்
மிகப் பெரிய அளவு தாக்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடவில்லை என்று நான் நினைக்கிறேன். தீவிரத்
தாரளவாதத்திற்கு முன்னே நடுங்குவதை நான் ஒப்புக் கொள்ளவில்லை."
உலகச் சந்தையின் அழுத்தத்தின் கீழ், தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தேவை
என்று நினைக்கும் பிரான்சின் பெருவணிகம், சிராக்கும் மற்ற அரசியலமைப்பிற்கான ஆதரவாளர்களும் கூறும்
"பிரெஞ்சு சமூக முன்மாதிரி", "சமூக ஐரோப்பா" ஆகியவற்றுடன் பகட்டுரையின் மூலம் இணைக்கப்பட்டு சமரசம்
காணமுடியாது என்ற முடிவிற்கு சார்க்கோசி வந்துள்ளார்
ஒரு விதமான பிரெஞ்சு தாட்சரிசம் தேவை என்று சார்க்கோசி விடுக்கும் அழைப்பு,
வேறுவிதமான வெளியுறவுக் கொள்கையின் நோக்குநிலையை கொண்டதாகும். இரண்டு
UMP
ஆதரவாளர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடு பற்றி, சமீபத்தில் ஜேர்மனிய உயர்கல்விக்கூட ஏடான
Blatter fur deutsche und interntionale
Politik குறிப்பிட்டுள்ளதாவது: "வெளியுறவுக் கொள்கையில்,
சிராக்கை விட, இன்னும் வலிமையான அட்லாண்டிக் சார்புடைய தன்மை வேண்டும் என்பது சார்க்கோசியின்
நிலைப்பாடு ஆகும்.... அமெரிக்காவுடன் மீண்டும் நெருக்கமான நட்பை கொள்ளவேண்டும் என்றும் இஸ்ரேலுடன்
நெருங்கிய தொடர்பு வேண்டும் என்றும் அவர் விரும்புகின்றார்; கட்சியின் தலைவர் என்று புதிதாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரது முதலாவது வெளிநாட்டுப் பயணம் இஸ்ரேலுக்கு சென்றதாகும்."
ஐரோப்பிய மட்டத்தில், அவர் "பிரான்ஸ்-ஜேர்மன் கூட்டிற்கு முன்னுரிமை கொடுக்கும்
மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் குரலைக் கொடுக்கும் கொள்கை வழியை விமர்சிக்கிறார் மற்றும் பிரிட்டனின்
டோனி பிளேயர், இத்தாலியின் சில்வியோ பெர்லுஸ்கோனி, ஸ்பெயினின் ஜோஸ் மரியா அஜ்நர் ஆகியோரை
உற்றவர்களாவும் கருதுகிறார், என்று இந்த ஏடு தொடர்ந்து கூறியுள்ளது.
ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு தன்னுடைய ஆதரவை, ஐரோப்பிய ஒன்றியத்தில்
துருக்கிக்கு இடம் கொடுக்கக் கூடாது என்று தெளிவாக நிராகரிக்கும் வகையில் தொடர்பு படுத்தியுள்ளார்.
சிராக்கை அவமதிக்கும் வகையில் சார்க்கோசி கட்சி அலுவலர்களில் 90 சதவிகிதத்தினர் வாக்குகளை துருக்கி
அனுமதிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்திற்கு எதிராகப் பெற்று வெளிப்படுத்தினார்; இது ஐரோப்பிய ஒன்றியம்
இன்னும் விரிவாக்கம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பை நன்கு எடுத்துரைக்கிறது.
வெளிநாட்டுக் கொள்கையில் அமெரிக்காவுடன் உறவை சீரமைத்துக் கொள்ள வேண்டும்
என்னும் சார்க்கோசியின் கருத்தானது, புஷ் நிர்வாகத்தின் அதே உள்நாட்டுக் கொள்கை சார்பைத்தான்
கொண்டிருக்கிறது. சிராக் தொழிற்சங்கங்களின் ஆதரவு, அதிகாரபூர்வ இடது கட்சிகள் இவற்றை தன்னுடைய
இலக்கை அடைய பயன்படுத்திக் கொண்டிருக்கையில் --2002 தேர்தலில் அவைதான் இரண்டாம் சுற்று வாக்கில்
அவருக்கு ஆதரவு வேண்டும் எனக் கூறியதுடன் தற்போதைய அரசியலமைப்பு பிரச்சாரத்திலும் அவருக்கு ஆதரவு
கொடுத்துக் கொண்டிருக்கின்றன -- சார்க்கோசி சட்டம் ஒழுங்கு என்ற உணர்ச்சியை கிளறும் பேச்சு, சமய
பாரபட்சம் என்று வலதுசாரி அரசியலுக்கு ஒரு சமூக தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். 2002ல்
இருந்து 2004 வரை உள்துறை மந்திரியாக இருந்தபோது அவர் செய்தி ஊடகத்திற்கு வியத்தகு போலீஸ்
நடவடிக்கைகள் மற்றும் குடியேறியவர்கள் மிகப் பெரிய அளவில் நாடுகடத்தப்பட்டது போன்ற செய்திகளை
கொடுத்திருந்தார். பக்தி நிறைந்த கத்தோலிக்கரான இவர் பழமைவாத இஸ்லாமிய சக்திகளை அரசுடன்
இணைப்பதை நோக்கமாகக் கொண்டு பிரெஞ்சு முஸ்லிம்களின் பிரதிநிதிக் குழுவை (Representative
Council of French Muslims -CMCF)
நிறுவியுள்ளார்.
வெளியுறவுக் கொள்கையில் நெருக்கடி
ஐரோப்பிய அரசியலமைப்பு பற்றிக் கடுமையான பூசல், பிரான்சின் வெளிநாட்டுக்
கொள்கையில் உள்ள ஆழ்ந்த நெருக்கடியை வெளிப்படுத்தியுள்ளது.
ஜேர்மனி பிரான்சை செடனில் தோற்கடித்த 1870க்கும், மூன்றாம் ரைக் சரிவடைந்த
1945க்கும் இடையே, பிரான்சின் வெளியுறவுக் கொள்கை அதன் ஜேர்மனிய அண்டை நாட்டுடனான பூசலினால் ஆதிக்கம்
பெற்றிருந்தது. முதலாம் உலகப் போரில், பிரான்ஸ் வெற்றி அடைந்தவர்கள் பக்கம் இருந்தது; ஆனால் போட்டி
ஜேர்மனியை வெர்சாயில்ஸ் உடன்படிக்கை மூலம் கட்டிப்போட்டு விடலாம் என்ற முயற்சி முற்றிலும் தோல்வியில்
முடிவடைந்தது. போர் முடிந்த இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர், மிக வலிமையாய் ஆயுதபாணியாக்கப்பட்ட
German Wehrmacht
பிரான்சின் பாதுகாப்புக் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தகர்த்துவிட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரான்ஸ் மற்றொரு வெளியுறவுக் கொள்கை
மூலோபாயத்தை கையாள முயன்றது. போரினால் நலிந்து நின்ற நிலையில், நாஜிக்களுடன் விச்சி ஆட்சி
ஒத்துழைத்ததால் இழிவையும் கண்ட நிலையில், இந்தோ சீனா, அல்ஜீரியா இவற்றில் காலனித்துவ பகுதிகளை
தக்கவைக்க முடியாத நிலையில் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போருக்கு தள்ளப்பட்ட பிரான்சின் முதலாளித்துவம்
ஐரோப்பிய ஒற்றுமையில் தன்னுடைய நம்பிக்கையை ஒரு கொள்கையாக வகுத்தது. ஐரோப்பிய நிலக்கரி, எஃகு
சமூகம் (1951), ஐரோப்பிய பொருளாதார சமூகம் (1957), ஐரோப்பிய சமூகம் (1967), ஐரோப்பிய
ஒன்றியம் (1992) என்பவற்றில் பிரான்ஸ் நிறுவன நாடுகளில் ஒன்றாக இருந்தது. இரண்டு இலக்குகளை இது
தொடர்ந்தது: ஜேர்மனியை ஐரோப்பாவுடன் இணைக்கும் முறையில் பிரான்ஸ்-ஜேர்மனி பூசலுக்கு இனியேனும்
எரியூட்டாமல் தவிர்ப்பது, பிரான்சின் சொந்த அரசியல் செல்வாக்கை உலகில் பெருக்கிக் கொள்ளுதல் என்பவையே
அவை.
இந்தப் போக்கு வெற்றிகரமாயிற்று; ஏனெனில் இதற்கு அமெரிக்கா நிதியளவிலும்,
அரசியல் அளவிலும் ஆதரவு கொடுத்தது; மேலும் இது ஜேர்மனியின் நலன்களுடன் இயைந்து நின்றது. சோவியத் ஒன்றியத்திற்கு
எதிர்ப்புத் தடையாக இருக்கவும் தன்னுடைய பொருளாதாரத்திற்கு ஒரு சந்தையாக இருக்கவும் அமெரிக்காவிற்கு
ஒரு உறுதியான மேற்கு ஐரோப்பா தேவைப்பட்டது.
1970களில் அமெரிக்காவிற்கும், பொருளாதாரத்தில் வலிமை பெற்றுவிட்ட
ஐரோப்பாவிற்கும் இடையே அழுத்தங்கள் ஏற்பட்டபோது, பிரான்ஸ் இன்னும் கூடுதலான முறையில் ஐரோப்பிய
இணைப்பிற்கு ஊக்கம் காட்டியது. டு கோல் வெளியுறவுக் கொள்கையை "மகத்தான தேசம்" என்ற பெயரில்
நடத்தினாலும், "ஐரோப்பிய வலிமை" வலுவான, செயல்திறனுடைய ஐரோப்பா என்பது முன்னணிக்கு
வரத்தொடங்கியது.
ஜேர்மனிய இதழான
Internationale Politik சமீபத்தில் வர்ணித்ததாவது:
"பெருமளவில், பிரான்சின் வெளிநாட்டுக் கொள்கை தன்னுடைய நிலைப்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவேண்டும்,
தன்னுடைய சுதந்திரத்தையும் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற இலக்கினை ஒட்டி விளக்கப்படுகிறது. 1970களில்
இருந்தேனும், பிரான்ஸ் இந்த இலக்குகள் ஐரோப்பிய ஒற்றுமையின் உதவியினால்தான் அடையப்படமுடியும் என்பதில்
நனவாக உள்ளது.
அமெரிக்காவுடன் சம நிலையில் நின்று அதற்குச் சவால் விடும் வகையில், ஐரோப்பா,
ஒர் அரசியல் மற்றும் பொருளாதார எதிரெடையாக அபிவிருத்தி அடையப்பட இருந்தது. ஜேர்மனியுடன் ஒத்துழைப்பு
தீவிரப்படுத்தப்பட்டது. "சுதந்திர சந்தை" தாராளவாத
Giscard, சமூக
ஜனநாயகவாத Schmidt (1970களில்),
சோசலிஸ்ட் மித்திரோன் மற்றும் கிறிஸ்தவ ஜனநாயகவாதி கோல் (1980களில்), இறுதியில் கோலிச சிராக்,
சமூக ஜனநாயகவாதி ஷ்ரோடர் என்று வெவ்வேறு அரசியல் பின்னணியில் இருந்து வந்தாலும், இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும்
இடையே ஒரு நெருக்கமான நட்பு வளர்ந்துவந்தது.
ஆனால் இந்தக் கொள்கைக்கான புறநிலை அடிப்படைக்கு 1990களில் பெரும்
தாக்குதல் ஏற்பட்டது: வார்சோ ஒப்பந்தச் சரிவு, ஜேர்மனிய மறு ஐக்கியம், சோவியத் ஒன்றியத்தின் முடிவு
ஆகியவை ஐரோப்பாவில் சமபல நிலையை மாற்றின. அமெரிக்காவிற்கு, சோவியத் வல்லரசிற்கு எதிராக
பெரும்தடை ஆக ஐரோப்பா தேவைப்படவில்லை; ஐரோப்பிய நலன்களை பற்றி ஆர்வம் காட்டுதலில் சற்று
குறைந்த தன்மைதான் வெளிவந்தது. ஸ்ராலினிச ஆட்சிகளின் சரிவுடன், பிரான்சுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது,
செல்வாக்குப் பெருகியுள்ள ஜேர்மனி மீண்டும் ஐரோப்பாவின் இதயத்தில் தெளிவாக நிமிர்ந்து நிற்கிறது.
ஜேர்மனி ஒற்றுமை ஏற்படாத வகையில் ஒரு சுருக்கமான வீணான முயற்சியை செய்த
பின்னர், மித்திரோன் நேரடியாகவே நின்று ஐரோப்பிய பொருளாதார, அரசியல் ஒற்றுமையை முன்னுக்கு
கொண்டுவருவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தை கிழக்கு ஐரோப்பாவிற்கு விரிவாக்கம் செய்வதற்கும் முனைந்து
நின்றார். உலகின் மிகப்பெரிய உட்சந்தையாக ஐரோப்பா விளங்குவதற்கும், அமெரிக்காவை பொருளாதார
முறையில் கடப்பதற்கும் பெரிதும் பாடுபட்டார்; வெளியுலகிற்கு தன்னுடைய குரலிலேயே வெளியுறவு, பாதுகாப்புக்
கொள்கைகளை ஐரோப்பா கொள்ளவேண்டும் என்றும் கூறினார். இந்தப்போக்கிற்கு ஜேர்மனியின் ஆதரவு
கிடைத்தது.
1992ம் ஆண்டு
Maastricht ஒப்பந்தப்படி, ஐரோப்பிய ஒன்றியம்
நிறுவப்பட்டது; ஒரு பொது நாணயமும் அறிமுகப்படுத்தப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியம் 15ல் இருந்து 25
உறுப்பினர்கள் கொண்டதாக விரிவாக்கம் பெற்றது; இவை அனைத்துமே அதிபர் கோல் மற்றும் ஜனாதிபதி
மித்திரோன் ஆகியோரின் கூட்டு முயற்சியினாலேயே ஆனது.
ஐரோப்பிய அரசியலமைப்பு இந்த வழிவகையின் உச்ச நிலையாக இருந்து,
பொருளாதார ஒத்துழைப்பை இணைத்து அரசியல் ஒத்துழைப்பு என்ற மகுடத்தையும் அதற்கு சூட்டவிருக்கிறது. ஆனால்
இது அதிகரித்த வகையில் கடினமான தடைகளைச் சந்தித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு முகமாக விரிவாக்கம் அடைந்து, அமெரிக்காவிற்கு
எதிராக ஐரோப்பாவில் வலிமை பெருகுவதற்குப் பதிலாக, இது அமெரிக்க செல்வாக்கை ஐரோப்பாவிற்குள்
வலுப்படுத்திவிட்டது. கிழக்கு முகாமின் சரிவிற்கு பின்னர் வலிமையற்ற உறுதியான ஆட்சிகள் வெளிப்பட்ட நிலைமையில்,
அவை அமெரிக்காவை இராணுவ, அரசியல் பாதுகாப்பிற்காக எதிர்நோக்கி நின்றன. தீவிர ரஷ்ய விரோதப்
போக்கை உடைய அவை, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ்-ஜேர்மனி ஆதிக்கத்தை நம்பிக்கையற்ற தன்மையுடனும்
பயத்துடன் பார்ப்பதோடு, ஒரு பாரிஸ்-பேர்லின்-மாஸ்கோ அச்சுநாட்டுப் பிணைப்பு கூட வந்துவிடுமோ என்று
கருதுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தை பொருளாதார முறையில் நம்பியிருந்தாலும்கூட, நெருக்கடிகள் அல்லது
அழுத்தங்கள் ஏற்பட்டவுடன் அவை அமெரிக்காவுடன் அரசியல் முறையில் நெருக்கம் கொள்ளுகின்றன.
ஐரோப்பாவில் ஒதுக்கப்பட்டுவிட்டோமோ என்ற ஆபத்தை எதிர்நோக்கியிருந்த
பிரிட்டன் அமெரிக்காவுடன் தன்னுடைய உடன்பாட்டினால் ஏற்றம் கொண்டது; அது நாணய ஒன்றியத்தில்
சேருவதிலோ, பிரஸ்ஸல்ஸுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதையோ விரும்பவில்லை. இத்தாலியிலும், ஸ்பெயினிலும்
உள்ள வலதுசாரி அரசாங்கங்களும் இதேபோல் வாஷிங்டன் சார்பைத்தான் கொண்டுள்ளன.
ஈராக்கியப் போர் இறுதியாக, ஐரோப்பாவில் இருந்த பிளவுகளை வெளிக்
கொண்டுவந்து விட்டது. அப்போதிலிருந்து ஜேர்மனியும், பிரான்சும் மீண்டும் மீண்டும் பின்னடைவுகளை கொண்டன.
தற்போதுள்ள ஐரோப்பிய அரசியலமைப்பானது, முதலில் இருந்த வரைவைவிட
குறைந்த தன்மையைத்தான் கொண்டுள்ளது; முதலில் பேர்லினுக்கும் பாரிசிக்கும் கூடுதலான மதிப்பும் பெரும்பான்மை
முடிவிற்கு எதிராக தங்கள் விருப்பங்களை கட்டாயப்படுத்தும் நிலையும் இருந்தன. கடந்த கோடையில் சிராக்கும்
ஷ்ரோடரும் அவர்களுடைய வேட்பாளரான பெல்ஜியத்தை சேர்ந்த
Guy Verhofstad
ஐ, ஐரோப்பிய குழுவின் தலைவர் பதவியில் இருத்த முடியாமல், போர்த்துக்கல் நாட்டை சேர்ந்த ஜோஸ்
மானுவெல் பர்ராசோவை ஏற்க வேண்டியதாயிற்று.
எப்படி மேலே முன்னேறுவது? ஒரு பூகோளமயமாக்கப்பட்ட உலகில், அதிகார
முகாம்கள் எனப் பிளவுற்றிருக்கும் பிரான்ஸ் தன்னுடைய அந்தஸ்தை எப்படி தக்கவைத்துக் கொள்ள முடியும்?
ஐரோப்பிய ஒன்றியம் விரிவாக்கப்படவேண்டும் என்ற முன்னோக்கை, தான் ஒரு சிறுபான்மை நிலைக்குத்
தள்ளப்பட்டுவிடுவோம் என்று அச்சுறுத்தப்பட்டாலும், அது தொடர்ந்து கொள்ள வேண்டுமா? ஏனைய ஐரோப்பிய
ஒன்றிய நாடுகளின் விருப்பத்திற்கு எதிராக சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை முயற்சிகளை எடுக்கும் ஆற்றலுள்ள
"ஒரு மைய ஐரோப்பா" நோக்கி, அது பாடுபடவேண்டுமா?
ஜேர்மனியை பற்றி என்ன கருதுவது? அதை நம்பலாமா? அரசாங்கம் மாறி, ஜேர்மனி
வாஷிங்டனிடம், பிரான்சின் இழப்பில், கூடுதல் நட்புறவை பெற விரும்பினால் என்ன செய்வது? அத்தகைய செயலை
எதிர்பார்த்து, தானே வாஷிங்டனுடன் நெருக்க நட்பை பிரான்ஸ் நாடலாமா? சீனா, இந்தியா இவற்றின்
செல்வாக்கு வளர்ச்சியுறுவதை கண்டு, அமெரிக்காவுடன் மோதல் என்பதை நினைத்துப் பார்ப்பதும் உகந்ததுதானா?
இவையும் இதேபோன்ற கேள்விகளும் பிரான்சின் ஆளும் வர்க்கத்தை எதிர்கொண்டுள்ளன.
இவைதான் பிரான்சில் நடைபெறவுள்ள கருத்தெடுப்பில் நிறைந்திருக்கும் பூசல்களின் பின்னணியாக உள்ளன; இந்தப் பூசல்கள்
ஞாயிறன்று வாக்கெடுப்பில் அரசியலமைப்பு நிராகரிக்கப்பட்டால் இன்னும் உக்கிரமடையும்.
See Also:
பிரான்சில் கருத்து வாக்கெடுப்பு
: ஆளும் கட்சி வலதுக்குத் திரும்புவதற்கு சர்கோசி தலைமைதாங்குகிறார்
பிரான்ஸ்: ஐரோப்பிய அரசியலமைப்பிற்கு
எதிராக பெருகிவரும் உணர்வை மாற்ற சிராக் தொலைக்காட்சி மூலம் "வேண்டும்" என்று வாக்களிக்கக் கோரியது
தோல்வியை தழுவுகிறது
Top of page
|