World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush denounces the Yalta Treaty of 1945

1945ம் ஆண்டு யால்டா உடன்படிக்கையை புஷ் கண்டனம் செய்கிறார்

By David North
12 May 2005

Back to screen version

இருபதாம் நூற்றாண்டு அமைதியாக இறக்க மறுக்கிறது. இதன் தீர்க்கப்படாத சிக்கல்களின் நிழல்கள் தற்காலத்திய அரசியலில் முழுச்சுமையுடன் இறங்கியுள்ளன. கடந்த காலம் பற்றி "எளிமையான" நினைவு கூரல் என்று ஒன்றும் கிடையாது. விதிவிலக்கில்லாமல் வரலாற்றை துணைக்கு அழைப்பது, தற்காலத்திய அரசியல் நலன்களுக்கு உதவும்.

ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த 60 ஆண்டுகள் நிறைவு கொண்டாடப்படுவது இக்குறிப்பை ஒட்டியது ஆகும். தன்னுடைய லாட்வியா உரையில் 1945ம் ஆண்டு ஏற்பட்டிருந்த யால்டா ஒப்பந்தத்தை கண்டித்த வகையில் ஜோர்ஜ் புஷ் இன்றைய அமெரிக்க இராணுவ வாதத்திற்கும், வாஷிங்டன் தானே பிரகடனப்படுத்திக் கொண்ட, தன்னுடைய நலன்களுக்கு அச்சுறுத்தலாக உலகில் இருக்கும் எந்த நாட்டையும் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற உரிமைக்கான ஒரு கருத்தியல் நியாயப்படுத்தலை வழங்கியது.

"அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் அடைந்த வெற்றியை கொண்டாடும்போது, ஒரு புதிரைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். ஜேர்மனியில் பெரும்பாலான பகுதிக்கு தோல்வி என்பது சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதிகளுக்கு வெற்றி என்பது மற்றொரு பேரரசின் இரும்புப்பிடி போன்ற ஆட்சியைத்தான் கொண்டுவந்தது. ஐரோப்பிய வெற்றி நாள் (VE Day) பாசிசத்தின் முடிவைக் குறித்தது, ஆனால் ஒடுக்குமுறைக்கு முடிவுகட்டவில்லை. முயூனிச் மற்றும் மோலடோவ்-ரிப்பன்ட்ரோப் ஒப்பந்தத்தின் நியாயமற்ற மரபைத்தான் யால்டா உடன்படிக்கையும் பின்பற்றியது. மீண்டும் சக்தி வாய்ந்த அரசாங்கங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியபோது, சிறு நாடுகளின் சுதந்திரங்கள் எப்படியும் கைவிடப்பட்டுவிடலாம் என்ற நிலைதான் இருந்தது. ஆயினும் கூட உறுதிக்காக சுதந்திரத்தை தியாகம் செய்தமை ஒரு கண்டத்தை பிளவிற்குட்படுத்தி, உறுதியற்ற தன்மையயும் கொடுத்தது. மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்கள் சிறையுண்டது போல் இருந்தது வரலாற்றின் மிகப் பெரிய தவறுகளில் ஒன்றாக நினைவிற் கொள்ளப்படும். (வலியுறுத்தல் கட்டுரை ஆசிரியருடையது.)

அமெரிக்க ஜனாதிபதி இந்த அறிக்கையை கொடுத்துள்ளார் என்பதால், முன்னோடியில்லாத வகையில் முன்னாள் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கையை பற்றி அமெரிக்க அரசாங்கம் நிரகாரித்தும், கண்டனத்திற்குட்படுத்தியதுமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி புஷ்ஷினால், ஜனாதிபதி பிராங்க்ளின் டிலனோ ரூஸ்வெல்ட் பகிரங்கமாக ஒரு குற்றவாளியென கண்டிக்கப்பட்டுள்ளார்; இல்லாவிடில் வரலாற்றின் "பெரிய தவறுகளில்" ஒன்றுக்கு காரணமான ஒரு நபரை வேறு எவ்விதத்தில் குறிக்கமுடியும்? யால்டா ஒப்பந்தங்களுடன் ஒப்பிட்டுக் கூறும் வகையில் வேறு எந்த "வரலாற்றுத் தவறுகளை" ஜனாதிபதி கருத்திற் கொண்டுள்ளார் என்று கேட்கத் தோன்றுகிறது. ஒருவேளை பாரிய படுகொலை [Holocaust] பற்றியா?

யால்டா ஒப்பந்தங்களை பற்றிய கண்டனங்கள் நீண்ட நாளாக அமெரிக்காவின் வலதுசாரி வனப்புக் கருத்துரைகளின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளன. மிகத் தீவிர வலதுகள் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் செல்வாக்கை "திரும்ப சுருட்டிக்கொண்டு போகவைத்தல்" என்பதை ஆதரித்த, இன்னும் சொல்லப்போனால் சோவியத் ஒன்றியத்தின் முழுத் தகர்ப்பையுமே ஆதரித்த அமெரிக்க அரசிற்குள்ளே உள்ள கூறுபாடுகள் சிலவற்றிற்கும் யால்டாதான் கம்யூனிஸ்டுகளுக்கு நிபந்தனையற்ற சரணடைந்ததில் அடையாளம் ஆக இருந்தது. யால்டா ஒப்பந்தங்கள் அமெரிக்க அரசுத்துறைக்குள்ளேயே இருந்த கம்யூனிச நாசவேலையின் விளைவு என்பது, இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த காலத்தில் செனட்டர் ஜோசப் மக்கார்த்தியின் தலைமையிலான சூனிய வேட்டைக்கு எரிபொருள் கொடுத்தது போல் ஆயிற்று.

ஆனால், யால்டாவை பற்றிய இத்தகைய கண்டனங்கள் இருந்தபோதிலும்கூட, அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டுக்களின் மிகச் செல்வாக்கான பிரிவுகளுக்குள்ளேயே இருந்த சூழ்நிலையில், தான் எதிர்கொண்ட நிலைப்பாட்டில் இயன்றதைத்தான் மிகச் சிறந்த முறையில் ரூஸ்வெல்ட் செய்திருந்தார் என்ற ஒருமித்த கருத்துத்தான் இருந்தது. போலந்திலும், பெரும்பாலான கிழக்கு ஐரோப்பாவிலும் சோவியத்திற்கு ஆதிக்கம் மிகுந்த பங்கு என்பதை அவர் ஒப்புக்கொண்டது அன்று இருந்த இராணுவ மற்றும் அரசியல் யதார்த்தங்களை ஒப்புக் கொண்டிருந்த தன்மையைத்தான் காட்டின. ஐரோப்பிய கண்டத்திலேயே சோவியத் இராணுவம்தான் மிக வலிமையுடைய சக்தியாக இருந்தது. நாஜிப்போர் இயந்திரத்தை அழித்தல் என்பது சோவியத் இராணுவத்தால் முக்கியமாக சாதிக்கப்பட்டிருந்தது. ஜேர்மனிய படைகளில் பெரும்பாலனவை கிழக்கு முன்னணியில் நிறுத்தப்பட்டிருந்தன. 1943, 1944ல் சோவியத் படைகளால் வெல்லப்பட்ட வெற்றிகள் இல்லாது, இங்கிலாந்து - அமெரிக்கப் படைகள் கூட்டாக பிரான்சின்மீது படையெடுத்தல் என்பது நினைத்தும் பார்க்கமுடியாததாக இருந்திருக்கும்.

கிழக்கு ஐரோப்பாவை ஜேர்மனிய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கும் தருணத்தில், சோவியத் ஒன்றியம் மிகக் கடுமையான மனித, பொருள் இழப்புக்களை கொண்டிருந்தது. நாஜிப் படைகளால் கிட்டத்தட்ட அழிவுக்குள்ளாயிருந்த சோவியத் ஒன்றியம், தன்னுடைய படைகளை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து பின்வாங்கிக் கொண்டு மீண்டும் விரோதப் போக்கு உடைய அரசாங்கங்களை அங்கு இருத்துவதையும், அவை ஒரு புதிய கூட்டணியில் படையெடுப்பை மேற்கொள்ளவும் பார்த்துக் கொண்டிராது என்பதை ரூஸ்வெல்ட் நன்கு அறிந்திருந்தார். வரலாற்றாளர் எரிக் ஆல்டெர்மான் சமீபத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சோவியத் ஒன்றியம் அமெரிக்க சார்புடைய அரசாங்கம் ஒன்றை போலந்தில் இருத்தப்படுவதை ஏற்காது; எவ்வாறு அமெரிக்கா சோவியத் சார்புடைய அரசாங்கத்தை மெக்சிகோவில் இருத்த ஏற்காதோ, அதேபோல்தான் இதுவும். (When Presidents Lie, New YorkL 3004, pp.37.38)

புஷ்ஷின் லாட்விய அறிக்கையில் இருந்து எடுத்துக் கொள்ளத்தக்க ஒரே அரசியல் முடிவு, அவர் அமெரிக்கா, இராணுவ நடவடிக்கை எடுத்து சோவியத் படைகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து திரும்பிச் செல்லுமாறு செய்திருக்கவேண்டும் என்பதுதான். 1945ம் ஆண்டு இதைச் செய்வதற்கு நாஜி ஜேர்மனியுடன் ஒரு தனியான சமாதான ஒப்பந்தத்தை செய்வதும், பிந்தைய இராணுவத்தில் எஞ்சியிருந்ததை கொண்டு சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஜேர்மனிய-அமெரிக்க கூட்டுத்தாக்குதலை நடத்துவது தேவைப்பட்டிருக்கும்.

இத்தகைய அரசியல் காட்சிதான் தேவை என்ற கருத்தை முக்கிய நாஜித் தலைவர்கள், SS தலைவரான ஹென்ரிக் ஹிம்லெர் மற்றும் அமெரிக்க இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்த தளபதி ஜோர்ஜ் பாட்டோன் போன்றோர் கருதியிருந்தனர். ஆனால் இந்தப் போக்கு செயல்முறைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அமெரிக்க அரசியல் நடைமுறையில் மிகுந்த செல்வாக்கான பிரிவுகள் ஒருபொழுதும் கருதியது இல்லை. இராணுவ முறையில் இயலாதது என்பது ஒருபுறம் இருக்க, நாஜிக்களுடன் தனியான அமைதி உடன்படிக்கை மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மீதான தாக்குதல் என்பது அமெரிக்கப் படைகளுள்ளே பெரும் கலகத்தை ஏற்படுத்தி இருக்கும்; இதனுடைய பொது நிலைப்பாடே சோவியத் படைகள் தோளுடன் இணைந்து நிற்கும் தோழர்கள் என்ற கருத்துத்தான் இருந்தது; இதைத்தவிர உள்நாட்டில் இருக்கும் அமெரிக்க மக்களிடையே மிகப் பெரிய அரசியல் எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கும்.

1945ம் ஆண்டு அமெரிக்காவிற்குள் இருந்த அரசியல் மனோபாவம் 1948ல் இருந்ந நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. அமெரிக்க மக்களில் கணிசமான பிரிவினர் சோவியத் ஒன்றியத்துடன் போர் என்ற கருத்தை ஏற்க முன்வருவதற்கு முன்னர் இடைவிடாமல் மூன்று ஆண்டுகள் சோவியத் எதிர்ப்பு தீவிரமாக நடந்தப்பட்டு, கடுமையான சிவப்பு தாக்குதல் அமெரிக்காவிற்குள்ளேயே நடத்தப்படவேண்டி இருந்தது. இத்தகைய பிரச்சாரத்தின் முக்கியகூறுபாடு ரூஸ்வெல்ட் யால்டா மாநாட்டில் கிழக்கு ஐரோப்பாவை சோவியத்திற்கு "விற்றுவிட்டார்" என்று கூறப்பட்டிருந்தது ஆகும்.

எப்போதும் போலவே, செய்தி ஊடகம் ஜனாதிபதியின் அறிக்கைகளுக்கு அதிக அரசியல் முக்கியத்துவத்தையோ, வரலாற்றுப் பகுப்பாய்வையோ கொடுத்து ஆய்வுசெய்யாது என்பதை, புஷ் நிர்வாகம், நன்கு அறியும். இம்முறையும் புஷ்ஷிற்கு ஏமாற்றம் ஏற்படவில்லை. "மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான மக்கள் சிறைவைக்கப்பட்டனர்" என்ற ஜனாதிபதியின் குறிப்பு கிட்டத்தட்ட எந்தச் சவாலுக்கும் உட்படாமல் போயிற்று. அமெரிக்க ஜனங்கள், சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆக்கிரமிப்புச் செய்திருந்ததானது கொடூரமான முறையில் ஜனநாயகங்கள் மலர்வதை மிதித்தது என்ற எண்ணத்தில் விடப்பட்டுள்ளனர்.

உண்மை முற்றிலும் வேறுவிதமானதாகும். கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ஆட்சிகள் அரசியல் பிற்போக்குத் தன்மையின் தேங்கிய குட்டைகளாக இருந்தவை ஆகும். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னர் போலந்து, மறைந்த மார்ஷல் பில்சுட்ஸ்கிக்குப் பிறகு வந்திருந்த ஆட்சியாளர்களின் கீழ் பகுதி இராணுவ சர்வாதிகாரத்தை கொண்டிருந்தது. சோவியத் எதிர்ப்பைக் கொண்டிருந்த பில்சுட்ஸ்கியின் ஆட்சிதான் ஹிட்லர் அரசாங்கத்துடன் உடன்படிக்கையை கொண்டிருந்த முதல் கிழக்கு ஐரோப்பிய அரசாங்கம் ஆகும். இது நாஜி அரசாங்கத்துடன் ஒன்றின் மீது ஒன்று படையெடுக்காது என்ற ஒப்பந்தத்தை 1934ல் கொண்டுவந்தது; இது சோவியத்திற்கு எதிராக இயக்கப்பட்டது. ஹங்கேரி, பல்கேரியா மற்றும் ருமேனிய ஆட்சிகள் ஆகியவை அனைத்தும் நாஜி இயக்கத்தின் கீழ் இயங்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் அச்சாக இருந்தன. ஹங்கேரியில் அட்மைரல் மிக்லோஸ் ஹோர்த்தியின் சர்வாதிகாரம் போருக்கு முன்னரே தன்னை மூன்றாம் ரைக்குடன் பிணைத்துக் கொண்டிருந்தது; 1941ம் ஆண்டு மே மாதம் நாஜிக்கள் யூகோஸ்லாவியா மீது படையெடுப்புக்களை மேற்கொண்டபோது பல்கேரியாவுடன் சேர்ந்து அதில் பங்கும் கொண்டிருந்தனர். ஒரு மாதம் கழித்து, சோவியத் ஒன்றியத்தின் மீது ஹிட்லர் படையெடுத்த போது, ஹங்கேரி அவருடன் இணைந்து கொண்டது.

மார்ஷல் ஐயோன் ஆன்டொநெஸ்க்யூ என்ற சர்வாதிகாரியின் கீழ் ருமேனியா ஆளப்பட்டிருந்தது. அவருடைய அரசாங்கம் அச்சு நாடுகளுடன் நவம்பர் 1940ல் சேர்ந்து கொண்டு, ஜேர்மனிய, ருமேனிய பொருளாதாரங்கள் இடையே நெருக்கமான தொடர்புகளை நிறுவியிருந்தது. ருமேனிய யூதர்களை அழித்துவிடும் கொலைகார திட்டங்களுக்கு ஆன்டொநெஸ்க்யூ ஊக்கமளித்திருந்தார்; மேலும் ஹிட்லர் தன்னுடைய படையெடுப்பை சோவியத்தின் மீது தொடர்ந்தபோது, தன்னுடைய படைகளையும் அவருக்குத் துணையாக அனுப்பி வைத்திருந்தார். ருமேனியப் படைகள் ஆக்கிரமித்திருந்த சோவியத் பகுதிகளான, பெச்சரபியா மற்றும் புகோவினாவில் யூத மக்கள் அழிக்கப்பட்டனர். ருமேனியப் படைகள் கொடூரமான ஓடிசாப் படுகொலைகளிலும் முக்கிய பங்கை ஆற்றின, அதன் விளைவாக 280,000 மக்கள் மடிந்து போயினர், அதில் பெரும்பாலானோர் யூதர்களாவர்.

புஷ் உரையாற்றியிருந்த லாட்வியாவில் 75,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்; இதைத்தவிர "அரசியலளவில் விரும்பத்தகாத கூறுபாடுகள்" என்று இன்னும் ஒரு 25,000 பேரும் கொல்லப்பட்டனர். இப்படி ஏராளமான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணம் வலதுசாரி லாட்விய தேசியவாதிகள் ஆவர்; அவர்கள் Arajs Kommando படைப்பிரிவுகள் மூலம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்; அப்பிரிவு இந்தக் கொலைகளை நிகழ்த்தி, நாஜிக்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்து ரம்பூலாக் காட்டில் பள்ளம் தோண்டிப் புதைப்பதற்குத் துணையாக இருந்தனர்.

நாஜிக்கள் தோல்வியடைந்த பின்னர், சோவியத் யூனியன், இந்த நாடுகளில் சோவியத் எதிர்ப்பு அரசாங்கங்களை மறுபடியும் அதிகாரத்தில் அமர்த்த அனுமதிக்கும் என்பது நினைத்தும் பார்க்கமுடியாதது ஆகும்.

புஷ் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள இக்கொடூரமான வரலாற்றுச் சிதைவுகளை எதிர்ப்புக் கொடுப்பதற்காக, போருக்குப் பின்னர் அமைக்கப்பட்டிருந்த ஸ்ராலினிச ஆட்சிகளை புகழ்வது ஒரு புறம் இருக்க, கிழக்கு ஐரோப்பாவை சோவியத் ஆக்கிரமிப்பு செய்ததை அழகுபடுத்த வேண்டும் என்பது நம்முடைய நோக்கம் இல்லை. ஆனால் சோவியத் கொள்கையை மார்க்சிச, சோசலிச வகையில் திறனாய்வது என்பது குளிர்யுத்த ஏகாதிபத்திய சிந்தனையாளர்களால் வளர்க்கப்பட்ட கட்டுக்கதையான சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகம் என்ற கருத்தோடு பொதுத் தொடர்பு எதையும் கொண்டிருக்கவில்லை.

சோவியத்தின் போருக்குப் பிந்தைய கொள்கையை பற்றிய மார்க்சிச விமர்சனம், கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் சோவியத் கொள்கை எவ்வாறு அடிப்படையில் பிற்போக்குத்தனமான மற்றும், எதிர்ப்புரட்சிகர தன்மையை கொண்டிருந்தது என்பதை விளக்குகிறது. சோவியத் கொள்கை தேசிய பாதுகாப்பு என்ற மரபுமுறை அக்கறைகளை கருத்தில் கொண்டிருந்ததே அன்றி, ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தை அல்ல.

சோவியத் யூனியன் பகுதியை சுற்றி பாதுகாப்பு மிக்க இடைத்தடை ஆதரவு நாடுகளை அமைக்க முற்படுகையில், சோவியத் அதிகாரத்துவம் முலாளித்துவத்தை மேற்கு ஐரோப்பா முழுவதும் பாதுகாக்க உத்தரவாதங்களை கொடுத்தது. போரையடுத்து தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர இயக்கங்களை ஸ்ராலினிஸ்டுகள் ஒடுக்கியமையானது, நீண்டகாலப் போக்கில், சோவியத் யூனியனின் இறுதி அழிவில்தான் முக்கியத்துவத்தை கொள்ளவிருந்தது என்பதை நிரூபித்தது.

லாட்வியாவில் புஷ்ஷின் கிளர்ச்சிப் பேச்சு, அமெரிக்கா எங்கும் எப்பொழுதும் "ஜனநாயகம்" அச்சுறுத்தப்பட்டால், அதாவது இன்னும் துல்லியமாகச் சொன்னால், அமெரிக்க நலன்கள் எங்கு, எப்பொழுது ஆபத்திற்கு உட்பட்டாலும், போரை கையாளத் தயங்காது என்ற, முன்கூட்டிய தடுப்புப் போர் கொள்கை வழியை அடிக்கோடிட்டுக் காட்டவே உதவியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved