:
ஆசியா
:
சீனா
Behind China-Japan tensions
Washington fuels Japanese militarism
சீன-ஜப்பானிய பதட்டங்களின் பின்னணியில்
ஜப்பானிய இராணுவவாதத்திற்கு வாஷிங்டன் ஊக்கமளிக்கின்றது
பகுதி 1 |
பகுதி 2
By Peter Symonds
25 April 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஒரு கட்டுரை தொடரின் முதல்பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செய்தி ஊடகத்தில் மிகப் பரந்த முறையில் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே உள்ள
தற்போதைய பதட்டங்களை பற்றி தகவல்கள் வந்துள்ள போதிலும், இதில் புஷ் நிர்வாகம் கொண்டுள்ள மறைமுகமான
மற்றும் ஆழ்ந்த ஸ்திரமற்றதாக்கும் பங்கை பற்றிக் கிட்டத்தட்ட புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் வாஷிங்டன்தான்
ஜப்பானை மீண்டும் ஆயுதமயமாக்கி, வடகிழக்கு ஆசியாவில் கூடுதலாக "செயற்படுமாறு" தொடர்ந்து வலியுறுத்தி
வருகிறது----அந்த அடிப்படைப் பிரச்சினைகள் பலமுறையும் சீனாவில் மட்டும் இல்லாமல் அந்தப் பிராந்தியம்
முழுவதும் பலமுறையும் அச்சங்கள், கண்டனங்கள், மோதல்களையும் தூண்டுகின்றது.
புஷ் நிர்வாகம் கொடுத்துள்ள ஆதரவு, சீனாவில் அண்மையில் தோன்றியுள்ள ஜப்பானிய
எதிர்ப்புக்களை பொறுத்தவரையில், சமரசத்திற்கு இடமில்லாத வகையில் விரோத நிலைப்பாட்டை எடுக்குமாறு
டோக்கியோவை ஊக்குவித்துள்ளது. வெள்ளை மாளிகை உடனடியாக ஜப்பான் அரசாங்கத்துடன் அணிவகுத்து நின்று,
"வன்முறையை தடுப்பதில்" பெய்ஜிங் தோல்வியுற்றதற்காகவும், ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்பாட்டிற்குள்
கொண்டு வராததற்காகவும் விமர்சிக்கப்பட்டது. ஜப்பானிய பிரதம மந்திரி ஜூனிஷிரோ கோய்ஜூமி (Junichiro
Koizumi) இன் வேண்டுமென்றே எரியும் தீயில் எண்ணைய்
வார்த்ததுபோன்ற ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர்கள் மெளனமாகத்தான்
இருந்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே, கோய்ஜூமி அரசாங்கம் ஒரு புதிய பாடசாலை
வரலாற்று புத்தகத்திற்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது; 1930 களிலும், 1940 களிலும் ஜப்பானிய ஏகாதிபத்தியம்
செய்திருந்த குற்றங்களையெல்லாம் இந்நூல் மூடிமறைத்துள்ளது. இதன் பின்னர் அது ஜப்பானிய நிறுவனங்களுக்கு பெய்ஜிங்கினால்
எதிர்க்கப்படும் கிழக்குச் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் குழாய்கள் துளைபோட்டு எடுப்பதற்கான வாய்ப்பை ஆராய்வதற்கு
அனுமதியும் வழங்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், ஜப்பானிய வெளியுறவு மந்திரியான
நோபுடாகா மச்சிமுரா (Nobutaka Machimura),
ஆர்ப்பாட்டங்களின் போது ஜப்பானிய சொத்துடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்புத் தொகையும், மன்னிப்பும்
கோருவதற்கு பெய்ஜிங்கிற்கு சென்றார்.
இந்த நடவடிக்கைகள் சீற்றம் மிகுந்த பிரதிபலிப்பை தூண்டிவிடும் என்பதை கோய்ஜூமி
நன்கு அறிவார். ஆனால் சீனாவிற்கு எதிராக அச்சங்களையும், காழ்ப்பு உணர்வையும் கிளறிவிடும் செயல்களில்,
ஜப்பானிலுள்ள வாழ்க்கைத் தரம் அதிகளவில் சீரழிந்து வரும் நிலைக்குத் எதிரான பரந்த வெளிப்பாட்டையும்,
எதிர்ப்பையும் வலதுசாரி தேசியவாத திசையில் திருப்பி அதன் மூலம் ஒரு தனது பிற்போக்குவாத அரசியலுக்கு சமூக
ஒரு அடித்தளத்தை உருவாக்கும் திட்டமிட்ட அரசியல் மூலோபாயத்தை கொண்டுள்ளார். இரண்டு நாடுகளுக்கும்
இடையே உள்ள வெளிப்படையான வேறுபாடுகளை கருத்திற்கொண்டு காணும்போது, கோய்ஜுமி மற்றும் புஷ்
இவர்களுடைய செயற்பட்டியலும், முறைகளும் வியத்தகு முறையில் ஒற்றுமையை கொண்டுள்ளன. இரண்டுமே தேசிய
நலன்களுக்காக வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆதரவை திரட்டும் முயற்சியில்
ஈடுபடுவதோடு, உள்நாட்டில் உழைக்கும் மக்களின் சமூக நிலை மற்றும் ஜனநாயக உரிமைகள்மீது மிருகத்தனமாக
தாக்குதலையும் கொள்ள விரும்பிகின்றன.
சீன ஆர்ப்பாட்டங்களுக்கு கோய்ஜூமியின் பிரதிபலிப்பு ஒன்றும் ஒரு தனியான சம்பவம்
அல்ல. கடந்த செப்டம்பர் மாதம், பெரும் ஆத்திரமூட்டலில் ஜப்பானியப் பிரதம மந்திரி ஒரு கடற்கரைக்காவல்
கப்பலில் ஏறி, ஹோக்கைடோவின் வடக்கு முனையில் உள்ள, ரஷ்யர்கள் பிடியில் இருக்கும்
Kurile தீவுகளுக்கு
வெகு அருகில் சென்றார். இந்தப் பயணத்தை பயன்படுத்திக் கொண்டு, இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத்
படைகளால் கைப்பற்றிய தீவுகள் திருப்பிக் கொடுக்கப்படவேண்டும் என்ற டோக்கியோவின் கோரிக்கையையும்
மீண்டும் வலியுறுத்தினார். இவருடைய வித்தை மாஸ்கோவில் விமர்சனத்தை தூண்டிவிட்டதுடன், பிரச்சினை பற்றிய
பேச்சுவார்த்தைகளை சிக்கலுக்கு உட்படுத்தியதோடு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் டோக்கியோவிற்கான
பெப்ரவரி விஜயத்தையும் காலதாமதப்படுத்த காரணமாகியது.
நவம்பர் மாதம், தாராளவாத ஜனநாயகக் கட்சி (LDP)
அரசாங்கம் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல் ஓகினோவோ தீவுகளுக்கு அருகே ஜப்பானிய கடல் எல்லையை ஒட்டிய நீர்ப்பகுதியில்
நுழைந்துவிட்டதற்கு சீற்றமான முறையில் விளைவைக் காட்டியது. ஜப்பானிய இராணுவம் அந்தக் கப்பலை தடுத்து கடல்
மட்டத்திற்கு வருமாறு கட்டாயப்படுத்த உத்தரவு இடப்பட்டது. அந்த இடத்தில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் விரைந்து
அப்பால் சென்றுவிட்டாலும்கூட, ஜப்பானிய கடலோர ரோந்து விமானங்கள் பல மணிநேரம், நீர்மூழ்கிக் கப்பலை
தேடிக் கொண்டிருந்தன. முன்பு வடகொரிய கப்பல்கள் தொடர்பாக ஜப்பானிய கடற்படை மோதல்களிற்கு
உட்பட்டிருந்தாலும், இந்த நிகழ்ச்சிதான் முதன் முதலாக ஒரு சீனக் கப்பலை துரத்தும் பணியை மேற்கொண்டுள்ளது.
செய்தி ஊடகத்தின் ஆதரவைக் கொண்டுள்ள அரசாங்கம் பெய்ஜிங்கில் இருந்து ஊடுருவி வந்ததற்காக ஒரு மன்னிப்புக்
கோர வேண்டும் என வலியுறுத்தும் வாய்ப்பை பற்றி எடுத்துக் கொண்டு ஒரு சீன இராணுவத் தாக்குதலால் ஏற்படக்கூடிய
அபாயங்களையும், அச்சுறுத்தும் பயங்களையும் ஜப்பானிய மக்களிடையே தூண்டும் வகையில் பயன்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில், இரண்டு நாடுகளுக்கும் இடையே உள்ள சில சிறு
தீவுகளை ஒட்டி தென்கொரியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே இராஜதந்திர பூசல் வெடித்து எழுந்தது. ஜப்பானில்
உள்ள ஷிமானே பிரிபெக்டரின் சட்ட மன்றம் பெப்ருவரி 22ம் தேதி "டேகேஷிமா தினம் (Takeshima
Day)" என்பதை ஏற்படுத்த ஓர் ஆணையை பிறப்பித்தபோது
சர்ச்சை வெடித்து எழுந்தது, இது தென் கொரியாவில் பெரும் கோபமான எதிர்விளைவை கொள்ள வைத்தது.
டேகேஷிமா என்பது தெற்கு கொரியர்களால் டோக்டோ என்று அழைக்கப்படும் தீவுகளின் மீதான உரிமைய சுட்டிக்
காட்டியது. மறுநாள், தென் கொரியாவில் இருக்கும் ஜப்பானிய தூதர் ஜப்பானுக்கு இத்தீவுகளின்மீது இருக்கும்
உரிமையை வலியுறுத்தி, பிரபெக்டருக்கு டோக்கியோவின் ஆதரவு உண்டு என்று தெரிவித்தார். இந்த
பிரயோசனமற்ற குன்றுப் பகுதிகள் கொரியர்களுக்கு அடையாள முறையில் முக்கியத்துவத்தை கொடுத்துள்ளன;
ஏனெனில் 1905ம் ஆண்டு, கொரியர்கள் ஜப்பானுடன் இணைக்கப்பட்டதற்கு இது முதற்படியாக இருந்து கொரியாவில்
ஜப்பானியர்களின் காலனித்துவம் 1910இற்குள் முழுமையாக முடிவுற்றிருந்தது.
செய்தி ஊடகம் சமீபத்தில் சீனாவில் நிகழ்ந்த கண்டனங்கள் பற்றி
மத்தியப்படுத்தியிருந்தது, ஆனால் தென் கொரியாவிலும் ஜப்பானிய-எதிர்ப்பு கோப ஆர்ப்பாட்டங்கள்
நிகழ்ந்துள்ளன. தூதருடைய கருத்துக்கள் தென் கொரியர்கள், ஒரு ஜப்பானிய மன்னிப்பு வேண்டும் என்ற
கோரிக்கையை முன்வைக்க வகைசெய்தது, தலையங்கங்கள் ஜப்பான் ஒரு புதிய படையெடுப்பு மேற்கொள்ள
இருப்பதாக குற்றம் சாட்டின, சியோலில் நடந்த கண்டனங்களில் ஜப்பானிய கொடிகள் எரிக்கப்பட்டன. இந்த
மாதமும் ஜப்பானிய பள்ளிப் புத்தகங்களில் தென் கொரியாவிற்கு எதிராக பல கருத்துக்கள் இருந்ததோடு,
பூசலுக்கு உட்பட்ட தீவுகள் "தென் கொரியரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டவை" என்ற தலைப்பில்
பதிப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து புதிய ஆர்ப்பாட்டங்கள் வெடித்து எழுந்தன.
ஒரு தசாப்தத்திற்கு முன்பு கூட, கோய்ஜூமி அரசாங்கத்தின் நடவடிக்கைகள்
உத்தியோகபூர்வ எல்லைகளுக்கு அப்பால்தான் இருந்திருக்கும். 1930களிலும் 1940களிலும் தனது அரசபடைகளின்
நடவடிக்கைகளுகாக டோக்கியோ மிகக்குறைவான விருப்பமற்ற வருத்த வெளிப்பாடுகளை தெரிவித்துள்ளதோடு,
ஜப்பான் போர் குற்றங்களை செய்துள்ளது என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் அளவிற்கு செல்லவில்லை. அதே
நேரத்தில், போருக்குப் பிந்தைய அரசாங்கங்கள் மிகவும் கவனத்துடன் தற்போதைய ஜப்பான் ஒரு புதிய
அத்தியாயத்தை தொடக்கியிருக்கிறது என்ற கருத்தைத்தான் அளித்து வருகின்றன. ஜப்பானிய இராணுவவாதம் பற்றிய
குறிப்புக்கள், குறைந்தபட்சம் பொதுப் பார்வையில் இருந்தேனும் ஒதுக்கி வைக்கப்பட்டன என்பது மட்டுமின்றி,
சீனா, தென் கொரியா உட்பட அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டன.
ஏப்ரல் 2001ல் கோய்ஜுமியைப் பிரதம மந்திரியாகப் பதவியில் அமர்த்தியமை,
ஒரு தீவிரமான மாற்றத்தை கொண்டு வந்தது. அவருடைய தனிச்சிறப்புச் செயல் முறை பற்றி ஊடகத்தின் பரபரப்பு
பெரிதும் இருந்தாலும், இவர் நீண்ட காலமாக, இராணுவச் செலவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து
பாடுபடும், LDP
இன் ஆத்திரமூட்டும் பிரிவான புகடா பிரிவுடன் (Fukada
faction) நீண்டகால தொடர்பு கொண்டவர் ஆவார். மேலும்
இப்பிரிவு 1972ல் சீனாவிற்கு அங்கீகாரம் கொடுத்ததை அது எதிர்த்திருந்ததோடு ஜப்பானிய அரசியலமைப்பில் சமாதானவிதி
என்று அழைக்கப்பட்டிருந்த பிரிவையும் அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. ஆரம்பத்தில் இருந்தே, கோய்ஜுமி
திமிர்த்தனமான முறையில் வலதுசாரி தேசியவாதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார், யாசுகினி (Yasukuni
Shrine) நினைவாலயத்தின் ஜப்பானிய மறைந்த போர்வீரர்களுக்கும்,
போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்த படைவீரர்-குற்றவாளிகளுக்கும் இருந்த நினைவாலயத்திற்கு விஜயம் செய்தது, வெளிப்படையாக
பழைய அரசியல் கருத்துக்களையெல்லாம் முறித்தமை மிகவும் முக்கியமாக குறிப்பிட வேண்டியது ஆகும்.
உள்நாட்டிலும், அப்பிராந்தியத்திலும், கோய்ஜுமியின் நிலைப்பாடு, மிகப் பெரிய
முறையில் அவர் புஷ் நிர்வாகத்தின் ஆதரவை பெற்றிருந்ததாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில், வெள்ளை மாளிகை
தீவிர முறையில் ஜப்பானுடன் நெருக்கமான இராணுவ பிணைப்பு மூலோபாயத்தை கையாள முயன்று வருகிறது;
இதற்காக அரசியலமைப்பில் அதன் இராணுவப் படைகளை பற்றிக் குறிப்பிட்டுள்ள சில வரம்புகளையும் முடித்துவிட
வேண்டும் என்று வற்புறுத்துவதோடு, சர்வதேச அரங்கில், குறிப்பாக சீனாவுடன் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டையும்
கொள்ளவேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இந்த புறநிலை ஒன்றாக இணைந்து, கோய்ஜுமியின் பேரவாக்களும்,
ஜப்பானிய ஏகாதிபத்திய நலன்கள் வலியுறுத்தப்பட வேண்டியதற்கு சட்ட, மற்றும் அரசியல்பூர்வமாக இருக்கும்
தடைகள் அகற்றப்படவேண்டும் எனக் கோரி வரும் ஜப்பானிய ஆளும் செல்வந்த தட்டுக்களின் மிகத்தீவிர
வலதுசாரிகளும் பிணைந்து உள்ளநிலைக்கு சாதகமாக இருக்கிறது.
அமெரிக்க ஜப்பானியக் கூட்டு கனிதல்
புஷ் நிர்வாகக் கொள்கையின் அத்தியாவசிய அடிப்படை, அக்டோபர் 2000ல்
இருகட்சியிலும் செல்வாக்கு நிறைந்தவர்களுடைய உதவியில் "அமெரிக்காவும், ஜப்பானும்: என்ற தலைப்பில் வளரும்
பங்குதாரர் முறையை நோக்கி முன்னேறுதல்" (The
United States and Japan: Advancing Towards a Mature Partnership)
என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் அடங்கியுள்ளது-----இது
Armitage-Nye
அறிக்கை என்று கூடுதலான முறையில் அனைவராலும் அறியப்பட்டுள்ளது. புஷ்ஷின்
வெளியுறவுத்துறை துணை செயலராக வந்த ரிச்சர்ட் ஆர்மிடேஜும், அமெரிக்கத் துணை பாதுகாப்பு செயலராக
பின்னர் நியமிக்கப்பட்ட போல் வொல்போவிட்சும் இதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் பெரும் பங்கினை
கொண்டவர்கள் ஆவர்.
ஜனநாயகக் கட்சியனர், மற்றும் குடியரசுக் கட்சியனர் என்று அந்த ஆவணத்தை
தயாரித்த குழுவில் இருந்த அனைவருமே "ஆசியாவில் மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் என்பது
தொலைதூரத்தில் இல்லை" என்ற உடன்பாட்டிற்கு வந்ததுடன், அமெரிக்கா அத்தகைய நிலைமையில் ஜப்பானுடன்
நட்புக் கூட்டைக் கொள்ளவேண்டும் என்ற முடிவிற்கும் வந்தனர். "ஆசியாவில் அமெரிக்காவின் தலையிட்டிற்கு
ஜப்பான்தான் முக்கிய மூலக்கல்லாகும்" ''அமெரிக்க பூகோள பாதுகாப்பு மூலோபாயத்தில்'' அமெரிக்க
ஜப்பான் கூட்டணி மையமாக உள்ளது. அறிக்கை மேலும் கூறியதாவது: "அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும்
இடையே இருக்கும் சிறப்பு உறவுகள் ஒரு முன்மாதிரியாகக் கொள்ளப்படலாம்." வேறுவிதமாகக் கூறினால்,
வாஷிங்டனுக்கு விசுவாசமான நட்பு நாடாக ஐரோப்பாவில் லண்டன் இருப்பது போல், ஆசியாவில் டோக்கியோ
அத்தகைய பங்கைக் கொள்ளலாம் என்பதே ஆகும். பெயரிடப்படாத, ஆனால் பிழையின்றி அனவரும் அறிந்திருந்த
இலக்கு சீனாதான்.
இந்த அறிக்கையின் பல கூறுபாடுகள்----இரண்டு இராணுவங்களுக்கு இடையே
கூடுதாலன ஒத்துழைப்பு, வட கிழக்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவத் தளங்களை மறு ஒழுங்கமைத்தல், அமெரிக்க
ஜப்பானிய பாதுகாப்பு ஏவுகணைத்திட்டத்தில் ஒத்துழைப்பு பரந்தளவில் நீட்டிப்பு, சர்வதேச அரங்கில் ஜப்பான்
கூடுதலான பங்கைக் கொள்ள ஊக்குவித்தல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழு அமர்வில் ஜப்பானுக்கு நிரந்தர
இடத்திற்கு வலியுறுத்தல் ஆகியவை -----புஷ் நிர்வாகம் இனி ஜப்பானுடன் கொள்ள இருக்கும் உறவு, விருந்தின்
பட்டியல் போல் காணப்படுகின்றன. ஜப்பானில் அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றத்திற்கான அதன் வெளிப்படையான
வாதம் மிகவும் பிரச்சனைக்குரிய விடயமாகும். வெறுமே பெயரளவிற்கு ஜப்பானிய மக்கள்தான் முடிவு எடுக்க
வேண்டும் என்று கூறினாலும், அறிக்கை அப்பட்டமாக கூறுகிறது: "கூட்டாக மற்ற நாடுகளுடன் பாதுகாப்பிற்காக
உடன்பாடு கொள்ளுதல் கூடாது என்ற விதி, கூட்டுக்களை ஏற்படுத்த ஜப்பானுக்கு பெருந்தடையாக உள்ளது. இந்தத்
தடையை அகற்றுதல் கூடுதலான, இன்னும் திறமையான பாதுகாப்பிற்கான ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள
வழிகோலும்."
புஷ் பதவியில் இருத்தப்பட்ட உடனேயே, அமெரிக்கா, ஜப்பானுடன் சேர்ந்து
கொண்டு சீனாவுடன் ஒரு நேரடி மோதலுக்கும் தயாராயிற்று எனத் தோன்றியது. 2000 தேர்தல் காலம்
முழுவதும், கிளின்டன் பெய்ஜிங்குடன் நெருக்கமான தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கருத்திற்கு
எதிராக புஷ் பிரச்சாரம் செய்திருந்தார்; "மூலோபாயரீதியாக சீனா ஒரு போட்டியாளரே தவிர" மூலோபாயரீதியாக
பங்காளியாக இருக்க முடியாது எனக் கூறப்பட்டது. "தேசிய பாதுகாப்பு ஏவுகணை முறை" (National
Missile Defense) என்பதைக் கட்டமைக்க வேண்டும் என்பதற்கான
திட்டத்தை உறுதிபடுத்தியதுடன், வட கொரியாவுடன் உறவுகள் சீரடைந்ததை தொடர்ந்து, தைவானுக்கு பெரிய
ஆயுதம் வழங்கும் திட்டத்தையும் அறிவித்தது. இவை அனைத்துமே பெய்ஜிங்கின் மீது அழுத்தத்தை கொடுப்பதற்காக
கொண்டுவரப்பட்டவை ஆகும்.
ஒரு சீன ஜெட் விமானமும் அமெரிக்க உளவு விமானமும் சீனக் கடற்கரையில் ஏப்ரல்
2001ல் நேரடியாக மோதிக் கொண்டதை அடுத்து, வெள்ளை மாளிகை பெய்ஜிங் பால் தொடுந்து வந்திருந்த
எதிர் உரைகளை சற்று குறைத்துக் கொண்டது. இந்நிகழ்விற்கு பின்னர் உடனடியாக அமெரிக்கா தைவானை
காப்பாற்ற இவ்வகையை பயன்படுத்துமா என்று கேட்கப்பட்டதற்கு, புஷ் அறிவித்ததாவது: "தைவான் தன்னை
பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய முடியுமோ, அது நடைபெறும்". இந்த அசாதாரண அறிக்கையின் உட்குறிப்பு,
பெய்ஜிங்கிற்கும் தைபேய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டால், அமெரிக்க தன்னுடைய முழு இராணுவ வலிமையையும்,
அணுவாயுதப் பயன்பாடு உட்பட, சீனாவிற்கு எதிராகப் பயன்படுத்தும் என்பதுதான்.
செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், வாஷிங்டனுடைய
மையப்படுத்துதல் சீனாவில் இருந்து நகர்ந்திருந்தது. புஷ்ஷின் "பயங்கரவாதத்தின்மீதான பூகோளப் போர்"
என்பதிற்கும் பெய்ஜிங் உபயோகமான கூட்டாக இருந்தது. அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் தலையிட்டதற்கு
முழு ஆதரவு கொடுத்தது. அமெரிக்க ஆளும் வட்டங்களுள், அமெரிக்க பெரு நிறுவனங்கள் பெருமளவில்
பொருளாதார அக்கறை கொண்டுள்ள ஒரு நாட்டின் மீது மோதலை ஆத்திரமூட்டுவது பொருந்துமா என்ற கேள்வி
கேட்கப்பட்டது. சீனாவுடனான பதட்டங்கள் தீர்ந்த பின், புஷ் நிர்வாகத்தின் கொள்கை கூடுதலான மூலோபாய
கூட்டணியை ஜப்பானிடம் கொள்ள வேண்டும் என்பதில் சற்று வேகமாகவே சென்று கொண்டிருக்கிறது.
உண்மையில், செப்டம்பர் 2001 என்பது அமெரிக்க-ஜப்பானிய உறவுகளில் ஒரு
திருப்பு முனையாக அமைந்துவிட்டது. புஷ்ஷைப் போலவே, கோய்ஜுமியும் "பயங்கரவாதத்தின் மீதான பூகோள
போர்" என்ற கருத்தில் தன்னுடைய செயற்பட்டியலை நடைமுறைக்குக் கொண்டுவர ஒரு வழிவகையை கண்டார்.
பயங்கரவாத தாக்குதல்களை பற்றி அக்கறைகள் காட்டுதல் என்பதை பயன்படுத்திக்கொண்டு, அதுவும் வட கொரியா
"தீய அச்சில்'' ஒரு பகுதி என்று புஷ் குறிப்பிட்ட பின்னர் கோய்ஜுமி, பொதுமக்கள் கருத்தை எப்படியும் மாற்றி
அரசியல் அமைப்பு மாற்றம், இராணுவம் வலுப்படுத்தப்படுதல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம் என்று கணக்குப்
போட்டார். மேலும் அமெரிக்காவுடன் நெருக்கமான நட்பை கொள்ளுவது என்பது ஜப்பானுக்கு இவ்வகையில் அதன்
ஆதரவுகளை பெருக்கித் தரும் என்று கருதப்பட்டது.
கோய்ஜுமி அரசாங்கம், உடனடியாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட
இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தது. புதிய சட்டத்தை
Diet
(ஜப்பானியப் பாராளமன்றம்) மூலம் இயற்றி, ஜப்பானிய அரசியலமைப்பை கடக்கும் வகையிலும், அமெரிக்க
நடவடிக்கைகளுக்கு மத்திய ஆசிய நடவடிக்கைகளில் கடற்படை ஆதரவு கொடுத்தது. அரசியல் அமைப்பின் 9 வது
விதியை மீறிய வகையில் --அதுதான் சமாதான விதி எனப்படுவது-- முந்தைய அரசாங்கத்தில் ஜப்பானின் கணிசமான
படைகள் "தற்காப்பிற்கு" மட்டுமே உள்ளவை என்று கூறப்பட்டிருந்தது; ஆனால் புதிய சட்டம் நவீனமான அழிப்பு
படைக் கப்பல்கள், துணை உபகரணங்கள் அனைத்தும் உலகில் பாதிப் பகுதியை கடந்து இந்தியப் பெருங்கடல்,
அரேபியக் கடலென்று அனுப்பப்பட்டமை "பாதுகாப்பிற்காக" என்பதை ஏளனத்திற்கு உரியதாயிற்று.
கோய்ஜிமியின் முடிவான புஷ்ஷின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" ஆதரவு
தருதல் என்பது ஜப்பானிய ஆட்சி வட்டங்களின் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது; அரசாங்கத்திலும் வெளிப்படையான
பிளவை காண முடிகின்றது. ஜனவரி 2002ல், கடுமையான நெருக்கடி நிலவிய நேரத்தில், பிரதம மந்திரி, பாராளுமன்றத்தில்
பொய்கூறியது என்ற காரணம் தயாரிக்கப்பட்ட தன்னுடைய வெளியுறவு மந்திரியான மக்கிகோ டனாகாவை பதவியில்
இருந்து அகற்றினார். இந்தப் பிரச்சினையில் மத்திய கருத்து வெளியுறவுக் கொள்கையின் இயக்கப்பாடு ஆகும். கோய்ஜுமியின்
வாஷிங்டன் மீதான ஆர்வம் மற்றும் வலதுசாரி தேசியவாத்தை அவர் வளர்க்க முற்பட்ட விதம் டனாகாவின் முயற்சிகளான
சுதந்திரமான போக்கை கொண்டு ஆசியாவில் குறிப்பாக சீனாவுடன் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்கு
எதிரிடையாக இருந்தது. வெளிப்படையாக பேசும், மக்களை கவரும் பேச்சாளராக இருந்த மக்கிகோ டனாகா
புஷ் நிர்வாகத்தின்பால் தான் கொண்டிருந்த இகழ்வை மறைக்க முயற்சி எடுக்கவில்லை.
தன்னுடைய முத்திரையை வெளியுறவுக் கொள்கையில் குழப்பத்திற்கு இடமின்றிக் காட்ட
வேண்டும் என்ற முறையில் கோய்ஜுமி வாஷிங்டனுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ளுவதற்கு இருந்த தடையை
அகற்றிவிட்டார். இந்த அரசியல் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் கொண்டிருந்த உறுதிப்பாடு அவர்
அரசாங்கம் ஜப்பானிய படைகள், ஈராக்கிற்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெரும் மக்கள் எதிர்ப்பிற்கு இடையே
அனுப்பபட்ட விதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஈராக்கில் மனிதாபிமான செயல்களை செய்கிறோம்
என்று போலியாகக் கூறிக் கொள்ளும் காரணத்தை கொண்டு, 800 இராணுவ பொறியாளர்களும் மற்ற படையினரும்
இரண்டாம் உலகப்போருக்கு பின் முதல்தடவையாக ஒரு தீவிரப் போர்ப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டம் இயற்றுதல், அரசியலமைப்பிற்கு உட்பட்டிருத்தல் இவற்றிற்கு இடையே உள்ள தெளிவாகத்தெரியும் வேறுபாடுகள்
அதிகரித்துவிட்டதால், அரசாங்கம் அப்பட்டமான முறையில் 9வது விதியை அகற்ற வேண்டும் என்று முயன்று வருகிறது.
தொடரும்...
Top of
page |