World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Gunmen kill prominent Tamil journalist in Sri Lanka

இலங்கையில் பிரபல தமிழ் பத்திரிகையாளர் துப்பாக்கிதாரிகளால் கொல்லப்பட்டார்

By Nanda Wickremasinghe
6 May 2005

Back to screen version

கொழும்பில் கடந்தவாரம் படுகொலைசெய்யப்பட்ட பிரசித்திபெற்ற பத்திரிகையாளரான தர்மரட்னம் சிவராமின் இறுதிக் கிரியைகள் திங்களன்று கிழக்கு நகரமான மட்டக்களப்பில் நடைபெற்றது. சிவராம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான தமிழ்நெட் இணைய தளத்தின் சிரேஷ்ட ஆசிரியர் குழு உறுப்பினரும் மற்றும் இலங்கையில் வெளியாகும் டெயிலி மிரர் நாளிதழின் தமிழ் விவகாரங்கள் தொடர்பான எழுத்தாளருமாவார். தெளிவான அரசியல் நோக்கம் கொண்ட இவரது படுகொலை, நாட்டில் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கியுள்ளது.

46 வயதான சிவராம், இலங்கை தலைநகர் கொழும்பின் பம்பலப்பிட்டியில் வைத்து ஏப்பிரல் 28 அன்று சுமார் இரவு 10.30 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டார். அவரது உடல் இரண்டரை மணித்தியலாங்களின் பின்னர் புறநகர் பகுதியான ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் ஜியான் பெரேரா, சிவராம் தலையின் பின்புறத்திலும் தோள்களிலும் தாக்கப்பட்டு மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டுள்ளார் என அறிவித்தார்.

நேரில் கண்ட சாட்சிகள், சிவராம் ஏனையவர்களுடன் இருந்த உணவு விடுதிக்கருகில் இருவர் சுற்றித் திரிந்துகொண்டிருந்ததாக பொலிசுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளனர். அவர் அங்கிருந்து வெளியேறுகையில், ஒரு வெள்ளி-சாம்பல் நிற இன்டர்கூலர் சொகுசு வாகனம் அவரை நெருங்கியதுடன் இருவர் அவரை வலைத்து உள்ளே போட்டுக்கொண்டனர். இவை அனைத்தும் பம்பலப்பட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளன. அவரது சடலம், அடிக்கடி பொலிஸ் ரோந்து நடைபெறும் ஒரு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே போடப்பட்டிருந்தது.

சிவராமின் மனைவி யோகரஞ்சனி தர்மரட்னம், தனது கணவர் கடத்தப்பட்டுள்ளதாக கிடைத்த அநாமதேய தொலைபேசி அழைப்பை அடுத்து அதிகாலை 1 மணிக்கு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். அவரது சடலமும் சுமார் அதே சமயத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் இரு புலனாய்வுக் குழுக்களை நியமித்துள்ள போதிலும் முன்னேற்றமெதையும் அறிவிக்கவில்லை.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கமிட்டியுடன் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் தேச எல்லை கடந்த நிருபர்கள் அமைப்பு உட்பட இலங்கை ஊடக மற்றும் பத்திரிகையாளர்கள் அமைப்புக்கள் இந்தப் படுகொலையை பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என கண்டனம் செய்திருந்தன. செவ்வாய் கிழமை இந்தப் படுகொலையை எதிர்ப்பதற்காக கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்பாக நடந்த மறியல் போராட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்குபற்றினர்.

இந்த விடயத்தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. பலவித சிங்கள தீவிரவாத அமைப்புக்களும் பாதுகாப்பு படைகளும், வெளிப்படையான விடுதலைப் புலி அனுதாபிகளை ஒரு உண்மையான இலக்காக கருதுகின்றன. நாட்டின் 20 வருடகால உள்நாட்டு யுத்தத்தின் போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் "விடுதலைப் புலி" சந்தேக நபர்களாக கொடுமையான முறையில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் சில சந்தர்ப்பங்களில் சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர். துணைப்படை குழுக்கள் மற்றும் பேரினவாத கும்பல்களுடன் சேர்ந்து பொலிஸ் மற்றும் இராணுவத்தில் உள்ள சக்திகள் கடத்தல் மற்றும் படுகொலைகளிலும் ஈடுபட்டுள்ளன. சிவராம் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ள விதம் திட்டமிடலையும் அனுபவத்தையும் --கைதேர்ந்த தொழிலில்-- சுட்டிக்காட்டுகிறது.

பக்கச் சார்பான நற்பெயர்பெறாத கொழும்பு பத்திரிகையும் கூட இலங்கை பாதுகாப்புப் படைகள் தலையீடு செய்திருக்கலாம் என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ள தள்ளப்பட்டுள்ளது. மே தினத்தன்று வெளியான டெயிலி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்: "நாம் சொல்லவேண்டியது இதுவே. இந்தக் கோழைத்தனமான செயல், அரச உறுப்பு ஒன்றின் ஏதாவது ஒரு வகையிலான மெளன உடன்பாட்டை கொண்டிருக்குமானால், ஒரு செய்தியாளனை படுகொலை செய்வதன் மூலம் அரசின் செலவில் தங்கியிருக்கும் எவரும் விடுதலைப் புலிகள் போன்ற ஒரு பயங்கரவாத அமைப்பின் மட்டத்திற்கு தாழ்ந்துபோவாரேயானால் அவரை எவராலும் மன்னிக்க முடியாது என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்," என குறிப்பிட்டுள்ளது.

சிவராம் பலதடவைகள் பொலிஸ் மற்றும் அடையாளம் தெரியாத கும்பல்களால் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் 1996ல் நாட்டின் கொடூரமான அவசரகால சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும் ஆதாரங்கள் போதாமையினால் பொலிஸ் அவரை விடுதலை செய்யத் தள்ளப்பட்டது. 2001 ஜூனில் ஒரு இனந்தெரியாத கும்பல் அவரது வீட்டுக்குள் உடைத்துக்கொண்டு நுழைய முற்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த சம்பவம் சிங்கள இனவாத திவயின, அரசுக்கு சொந்தமான தினகரன் ஆகிய பத்திரிகைகளில் வெளியான இரண்டு கட்டுரைகளில் முந்திக்கொண்டிருந்தது. இந்தக் கட்டுரைகள் அவரை "புலி" என முத்திரை குத்தியிருந்தன. கடந்த மே மாதம் அவர் வீட்டில் இல்லாத போது அவரது வீட்டை சோதனையிட்ட பொலிசார் அவர் மீது குற்றஞ்சாட்டுவதற்காக வெடிபொருட்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களையும் தேடினர். அவர்கள் ஒன்றையும் கண்டுபிடிக்கவில்லை.

இடைநிறுத்தப்பட்டுள்ள சமாதானப் பேச்சக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக சிங்கள தீவிரவாத குழுக்களால் தீவிரப்படுத்தப்பட்டுள்ள இனவாத பிரச்சாரத்திற்கு மத்தியிலேயே சிவராம் கொல்லப்பட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கிய பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), வலதுசாரி பெளத்த பிக்குகளின் தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளே இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்தக் குழுக்கள் பற்றிய சிவராமின் விமர்சனங்கள் அவரை அவதூறுகளுக்கான விசேடமான இலக்காக்கியுள்ளன.

ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும் சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்காக விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முயற்சிகளை குறிவைத்துள்ளன. இத்தகைய பொதுக் கட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு சட்டப்பூர்வ தன்மையை வழங்குவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு ஒரு தனித் தமிழ் அரசை ஸ்தாபிப்பதற்கு வழியமைப்பதாகவும் இந்த இரு கட்சிகளும் பிரகடனம் செய்துள்ளன. யதார்த்தத்தில், ஜே.வி.பி யும் ஜாதிக ஹெல உறுமயவும், விடுதலைப் புலிகளுக்கான எந்தவொரு சலுகையையும் அரச துரோகமாக கருதுவதுடன் முழு "சமாதான முன்னெடுப்பையும்" கடுமையாக எதிர்க்கின்றன.

ஜே.வி.பி முன்னணி வகிக்கும் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றியவர்கள், பல அரச சார்பற்ற அமைப்புக்களை மேற்கு நாடுகளின் "வாடகை முகவர்கள்" எனவும், விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சிலரை "காட்டிக்கொடுப்பவர்கள்" எனவும் வகைப்படுத்தினர். குறிப்பாக சிவராம் "ஒரு புலி" என்ற கண்டனத்திற்கு ஆளானார்.

ஜாதிக ஹெல உறுமயவின் வெறித்தனமான அறிக்கை கடந்தவார படுகொலை வரவேற்றது. "சிவராமின் மரணம் எல்லா தீவிரவாதிகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகும்.... தமிழ்நெட் ஆசிரியரின் தலைவிதியானது எதிர்காலத்தில் நாட்டை எதிர்ப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை உதாரணமாகும்," என அது பிரகடனம் செய்துள்ளது. அந்த அறிக்கை, ஆயுதபாணிகளை அழைப்பதுடனும் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதன் பேரில் அதிகபட்ச சக்தியை பயன்படுத்துவதற்காக, ஆயுதப் படைகள் மற்றும் ஏனைய சேவைகளுக்கும் எல்லாத் தடைகளையும் அகற்றி பாதையை திறந்து விடுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதுடனும் முற்றுப்பெறுகிறது.

இந்தக் குற்றத்தை எவர் செய்திருந்தாலும், சிவராமின் படுகொலை இனவாத மோதல்களை அதிகப்படுத்துவதையும் விடுதலைப் புலிகளின் பிரதிபலிப்பை தூண்டிவிடுவதையும் தெளிவான இலக்காகக் கொண்டதாகும். ஏப்பிரல் 30 விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையொன்று: "இலங்கை இராணுவப் புலனாய்வு குழுவும் பாதுகாப்புப் படைகளுடன் ஒத்துழைக்கின்ற துணைப் படைகளுமே இந்தப் படுகொலைக்கு பொறுப்பாளிகள்," என பிரகடனப்படுத்தியுள்ளது. அது சிவராமை "மாமனிதர்" என கெளரவித்தது. இந்த இரண்டும் விடுதலைப் புலிகள் அவரது படுகொலையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கான எச்சரிக்கையாகும்.

2002 பெப்பிரவரியில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தீவின் கிழக்கில் ஏற்கனவே வெளிப்படையாக இல்லாவிட்டாலும் நடைமுறையில் ஒரு உயிரிழந்த பத்திரமாகியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்ற வி. முரளீதரன் அல்லது கருணாவின் தலைமையிலான குழுவுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்கின்றன. பெயரளவிலான சமாதான முன்னெடுப்பை எதிர்க்கின்ற ஆயுதப் படைகளின் ஒரு பிரிவு கருணா குழுவை ஆதரிக்கின்றது. இரு சாராரும் கொலைகள் மற்றும் பதுங்கியிருந்து தாக்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றன. இது முழு வீச்சிலான உள்நாட்டு யுத்தத்திற்கு மீண்டும் திரும்புவதற்கான ஆபத்தைக் கொண்டுள்ளது.

பெரும் வல்லரசுகளும் பெரும் வர்த்தகர்களும் சமாதானப் பணிகளை முன்னெடுக்குமாறு சுதந்திர முன்னணி அரசாங்கத்தை நெருக்குகின்றன. அராசாங்கம் கடந்த வாரம் சிவராமின் படுகொலையை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆனால் இந்த முன்னணி ஆழமாகப் பிளவடைந்துள்ளதுடன், ஜே.வி.பி யின் எதிர்ப்பின் காரணமாக சுனாமி நிவாரண அமைப்பை ஸ்தாபிக்கும் முயற்சிகள் மாதக்கணக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளன. குமாரதுங்கவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி யைப் போலவே சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிப்போயுள்ளதுடன், அதன் காரணமாக தனது பங்காளியின் ஆதரவை இழக்கத் தயங்குகிறது.

இந்த அரசியல் சூழ்நிலையில், பொலிஸ் சிவராமின் படுகொலையை திட்டமிட்டு செயற்படுத்தியவர்களை கண்டுபிடித்து வழக்குத் தொடுக்க நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved