:
செய்திகள்
ஆய்வுகள் :
ஐரோப்பா
May Day 2005: Sixty years since the end
of World War II
மே தினம் 2005: இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 60 ஆண்டுகள்
By David North
2 May 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
ஏப்ரல் 30 அன்று மே தினம் கூட்டம் ஒன்று பேர்லினில் நிகழ்த்தப்பட்டபோது, உலக
சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய
செயலாளருமான டேவிட் நோர்த் ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முடிவுப்பகுதி நாளை பிரசுரிக்கப்படும்.
இன்றைய மே தின விழா இயல்பாக ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது;
ஏனெனில், சரியாக 60 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி நினைவு கூராமல் நாம் பேர்லினில்
ஒரு கூடலை நடத்த முடியாது. உலக வரலாற்றிலேயே 1933க்கு முன்னர் கலை மற்றும் அறிவியல்துறைகளின் பெரும்
மையங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பேர்லின், இறப்பு மற்றும் பேரழிவு இவற்றின் அதிர்ச்சியூட்டும் நரகமாக மாற்றப்பட்டு
விட்டிருந்தது. ஏப்ரல் 1945ன் கடைசி 10 நாட்களில், ஹிட்லருடைய "ஆயிரமாண்டு ஆட்சிக்காலம்" தன்னுடைய
இறுதி நிலையை சோவியத் இராணுவத்திற்கு எதிராக கொண்டு நின்றது; ஒரு கால் மில்லியன் வீரர்களும் சாதாரண
மக்களும் பேர்லினில் மடிந்து போயினர். இறுதியாக, ஏப்ரல் 30 அன்று, ஹிட்லர் தற்கொலை செய்து
கொண்டார்: இது அதுகாறும் பார்க்கப்பட்டிராத மிருகத்தனமாக ஆட்சியை கிட்டத்தட்ட ஒரு முடிவிற்கு கொண்டு
வந்தது. மே தினம் விடிகையில், சோவியத் படைகள் நகரத்தின் கட்டுப்பாட்டை வைத்திருந்தனர். ஒரு வாரம் கழித்து,
மே 8, 1945 அன்று, எஞ்சியிருந்த ஜேர்மன் படைகள், இராணுவ உயர் தலைமையின் கீழ் சரணைடையும் விதிகளில்
கையெழுத்திட்டன: இதையொட்டி, செப்டம்பர் 1939ல் ஐரோப்பாவில் தொடங்கிய போர் முடிவிற்கு வந்தது.
ஆனால், உலகப் பெருந்துன்பத்தின் இறுதிக் காட்சி இன்னும் நிகழ்வுற்றிருக்கவில்லை.
ஆசியாவில் போர் இன்னும் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்தது. இறுதியில் ஆகஸ்ட் 6, 1945 அன்று, அமெரிக்கா,
எந்த இராணுவ முக்கியத்துவமும் இல்லாத ஹிரோஷிமாவில், அணுகுண்டு ஒன்றைப் போட்டது. மூன்று நாட்களுக்குப்
பின்னர், இரண்டாம் அணுகுண்டு நாகசாகியில் போடப்பட்டது. இவ்விரு அணுவாயுதங்களும் கால் மில்லியன் மக்களைக்
கொன்றன, அல்லது காயப்படுத்தின. ஜப்பானிய ஏகாதிபத்திய அரசாங்கம் ஆசிய மக்களுக்கு அரக்கத் தனமான
கொடூரங்களை இழைத்தது என்பதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. ஆயினும்கூட, இரண்டு ஜப்பானிய நகரங்களில் அணுகுண்டு
போடப்படவேண்டும் என்று ஜனாதிபதி ட்ரூமன் எடுத்த முடிவு தன்னை ஒன்றும் ஒரு மணி நேரம்கூடத் தூக்கம் வராமல்
கவலைக்கு உட்படுத்திவிடவில்லை, என்று அவராலேயே களிப்புடன் கூறப்பட்ட இச்செயல் உண்மையில், ஒரு மிருகத்தனமான
செயலாகும்; அமெரிக்க வரலாற்றுப் பேராசிரியாரான காப்ரியல் ஜாக்சன் பல ஆண்டுகளுக்கு பின்னர் இதைப்
பற்றி எழுதுகையில், "ஆகஸ்ட் 1945ன் குறிப்பான சூழ்நிலையில் அணுவாயுதம் பயன்படுத்தப்பட்டமை, உளவியல் ரீதியாக
நன்றாக இருக்கும் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட தலைமை நிர்வாகி நாஜி சர்வாதிகாரி அதனைப்
பயன்படுத்தியிருக்கக் கூடிய வகைகள் போலத்தான் கையாண்டுள்ளார் என்று கூறமுடியும். இவ்விதத்தில் அமெரிக்க
அரசாங்கம் பலவகை அரசாங்கம் நடந்து கொள்ளும் முறையில், பாசிசத்திற்கும் மக்களாட்சிக்கும் இடையே உள்ள
வேறுபாடுகளை சிதைக்கும் வகையில்தான் நடந்து கொண்டது" என்றார்.
[1]
ஆறு தசாப்தங்கள் கடந்த பின்னரும், போர் விளைவித்த வன்முறை, துன்பங்கள்
இவற்றின் மகத்தான அளவை புரிந்து கொள்ளுவது கிட்டத்தட்ட முடியாத செயலாகத்தான் இருக்கிறது. இரண்டாம்
உலகப் போரில் கொல்லப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை 70 மில்லியன், அல்லது இன்னும் கூடுதலான முறையில்கூட
இருக்கலாம். இதைப் பற்றி எவரும் உறுதியாகக் கூறமுடியாது. நாஜி ஆட்சியும் அதன் கூட்டாளிகளும் 6 மில்லியன்
ஐரோப்பிய யூதர்களை கொன்றனர். இன்னும் ஒரு 3 மில்லியன் யூதரல்லாத போலந்துக்காரர்களும் கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட 25 மில்லியன் சோவியத் படை வீரர்களும் சாதாரண மக்களும் கொல்லப்பட்டனர். 15 மில்லியன் சீனர்கள்
தங்கள் உயிரை இழந்தனர்; 6 மில்லியன் ஜேர்மனியர்களும் அதே அளவு ஜப்பானியர்களும் கொலையுண்டனர். இரண்டு
மில்லியன் யூகோஸ்லாவியர்களும் கொல்லப்பட்டனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவிற்கு வந்தபின்னர், இந்த அளவிற்கு படுகொலைகளை
கண்டிருந்த மக்களுடைய உணர்வுகள் சீற்றத்திற்கும் நம்பிக்கைக்கும் இடையே ஊசலாடின. முதலாளித்துவம், உலகம்
முழுவதும் இருந்த மில்லியன் கணக்கான தொழிலாள வர்க்கத்தின் கண்கள் முன்னே ஆழ்ந்த முறையில்
செல்வாக்கிழந்தது. அந்தச் சொல்லே ஒரு குற்றம் சார்ந்த துர்நாற்றத்தை வீசியது. ஏகாதிபத்தியம்,
காலனித்துவம், பாசிசம், போர் ஆகியவற்றின் கொடுமைகளுக்கு காரணமான சமூக ஒழுங்கின் மீது சீற்றம்
தோன்றியது. உலகம் இனி மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு கட்டப்படும் என்றும், போருக்குப் பின்னர் இன்னும்
கூடுதலான முறையில் மனிதாபிமானம், ஜனநாயகம், சமத்துவம் மிகுந்த, ஓரே சொல்லில், சோசலிச
அடித்தளத்தில் அமைக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
முதலாளித்துவத்திற்கு எதிராக மக்களின் கசப்புணர்வை நன்கு அறிந்திருந்த ஜனாதிபதி
பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் அமெரிக்க மக்களுக்கு போருக்குப் பின் ஒரு சிறந்த, கூடுதலான நியாயம் நிறைந்த உலகம்
வெளிப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தார். அவர் பிரகடனப்படுத்தியதாவது:
"எமது மக்கள் தங்கள் அரசியல், பொருளாதார முறைகளில் இருந்து எதிர்பார்க்கும்
அடிப்படை விஷயங்கள் எளிமையானவை. அவையாவன;
"இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படவேண்டும்.
"வேலை செய்யக் கூடிய அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கள்.
"எவருக்கெல்லாம் பாதுகாப்புத் தேவையோ, அவர்களுக்கு அது கொடுக்கப்பட
வேண்டும்.
"ஒரு சிலருக்கு சிறப்புச் சலுகைகள் என்பது முடிவுகட்டப்பட வேண்டும்.
"அனைவருக்கும் குடிமை உரிமைகள் பாதுகாத்திடல் வேண்டும்.
"அறிவியல் முன்னேற்றத்தின் பலன்கள் பரந்த, தொடர்ந்த முறையில் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவதன் மூலம் அனுபவிக்கப்பட வேண்டும்.
"நமது நவீன உலகின் கொந்தளிப்பு மற்றும் நம்பமுடியாத வகையில் சிக்கல் வாய்ந்த
நிலைமையில், இந்த எளிய, அடிப்படை விஷயங்கள் பற்றிய பார்வை சிறிதும் புறக்கணிக்கப்படக்கூடாது. எமது
பொருளாதார மற்றும் அரசியல் முறைகளின் ஆழ்ந்த மற்றும் உள் வலிமை அவை எந்த அளவிற்கு இந்த
எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யும் என்பதை பொறுத்துத்தான் உள்ளது."
ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் இந்த உறுதிமொழியை முதலாளித்துவ அமைப்பை
தீர்மானிக்கும் அளவுகோலாக கொண்டால், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 60 ஆண்டுகளுக்குப் பின்னர்
வரலாறு எத்தகைய தீர்ப்பைக் கொடுக்கும்? இந்த "எளிமையான", "அடிப்படை விஷயங்களில்" எவை, உலகின்
மிகப் பணக்கார மற்றும் வலிமை வாய்ந்த நாட்டில், அமெரிக்காவில் அடையப்பட்டுள்ளன?
மற்றவர்களுக்கு ஒரு புறம் இருக்க, இளைஞர்களுக்கு சம வாய்ப்புக்கள்
வந்துவிட்டனவா? அமெரிக்கா முழுவதும், மிகச் செல்வக் கொழிப்பு உடைய புறநகர் சிறுபாதுகாப்புப் பகுதிகள்
தவிர, பொதுக் கல்வி முறை ஒரு சரியும் நிலையில் உள்ளது. நாடு முழுவதும் மிகப் பெரிய நகரங்களில்
ஆயிரக்கணக்கான பள்ளிகள் பணம் இல்லை எனக் கூறப்பட்டு மூடப்பட்டு வருகின்றன. அதிகாரபூர்வமான
வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 35 மில்லியன் அமெரிக்கர்களில் 40 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் சிறுவர்,
சிறுமியர் ஆவர்.
வேலை செய்யக் கூடிய அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கள் பற்றி என்ன கூறுகிறது?
அமெரிக்காவில் அதிகாரபூர்வமான வேலையின்மை என்பது 5ல் இருந்து 6 சதவிகிதத்திற்குள் இருக்கிறது. ஆனால்
இந்தப் புள்ளிவிவரம் குறைவூதியத்தில் இருப்பவர்களையோ, அல்லது வேலைதேடுவதை கைவிட்டவர்களையோ கணக்கில்
எடுத்துக் கொள்ளவில்லை. சிறையில் உள்ள 2 மில்லியன் அமெரிக்கர்களையும் உள்ளடக்கவில்லை. அதேபோல்
கிடைக்கும் வேலையை எடுத்துக் கொள்ளும் அமெரிக்க தொழிலாளர்களின் தரத்தைப் பற்றியும் இது விளக்கவில்லை;
அவர்களில் பலரும் தங்கள் முந்தைய வேலைகளை இழந்த பின்னர், குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும்
கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். "பாதுகாப்பு வேண்டுவோருக்கு அது கொடுக்கப்பட வேண்டும்" என்ற
உறுதிமொழியைப் பற்றிக் கூறும்போது, அமெரிக்க வாழ்வின் மிக வெளிப்பாடாகியுள்ள உண்மை பெரும்பாலான
தொழிலாளர்கள், நிலைத்த பாதுகாப்பற்ற தன்மையில்தான் வாழ்கிறார்கள்; அதுவும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்
இல்லாத பொருளாதார சக்திகளின் தயவில் அவர்கள் இருக்க வேண்டியுள்ளது.
அமெரிக்காவில் இப்பொழுது இருக்கும் வர்க்க உறவுகள் "ஒரு சிலருக்குச் சிறப்பு
உரிமைகள் என்று இருப்பது" முடிவிற்குக் கொண்டுவரப்படும் என்ற உறுதிமொழியை கசப்பான கேலிக் கூத்தாக்கி
இருக்கின்றன. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் அமெரிக்காதான் இப்பொழுது மிகவும் சமத்துவமற்ற நிலையில்
உள்ளது; மக்கட் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைந்துள்ள ஒரு தொகுப்பு மிகத்திறமையுடன் நாட்டின்
செல்வத்தில் பாதிக்கும் மேலானதை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளது. பெருநிறுவன உயர்குடிகளின் சிறிய
அடுக்கு ஒன்று பெறும் ஊதியம், சராசரியாக நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தைவிட
500 மடங்கு அதிகமாகும்.
குடியுரிமைகள் தொடர்பானதில், அமெரிக்காவில் முன்னோடியில்லாத அளவு தாக்குதல்
இருக்கின்றன. அரசியலமைப்பையும் எதிர்க்கின்றவகையில், புஷ் நிர்வாகம் குடிமக்களை அவர்கள் செய்ததாகக்
கூறப்படும் குற்றங்களை பற்றிக் கூட அவர்களிடம் தெரிவிக்காமல் மற்றும் வழக்கறிஞரை அமர்த்திக்கொள்ளவும்
வாய்ப்பு வழங்காது, காலவரையின்றி சிறையில் அடைக்கும் அதிகாரத்தை தானே அறிவித்துக்கொண்டிருக்கிறது.
சித்திரவதைக்கு ஆளாக்குவதை ஒரு முறையான விசாரணையின் பகுதிதான் என்று கூறும் இது, அவ்விதத்தில் ஜெனிவா
ஒப்பந்தங்கள் உட்பட பல சர்வதேச சட்டங்களின் விதிகளை உதறித் தள்ளியுள்ளது.
இறுதியாக, "விஞ்ஞான முன்னேற்றத்தின் பலன்கள் பரந்த அளவில் மற்றும் தொடர்ந்த
முறையில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதின் மூலம் அனுபவிக்கப்பட வேண்டும்" என்பது அமெரிக்காவில் 2005ல்
அடையப்பட முடியாததாகும். பெரும்பாலான அமெரிக்க மக்ளுடைய வாழ்க்கைத் தரம் கடந்த மூன்று
தசாப்தங்களில் சரிந்து கொண்டுதான் வந்துள்ளது. பரிணாம வளர்ச்சி தத்துவம் கற்பித்தல் கூடாது மற்றும் விவிலியக்
கருத்துக்களுக்கு எதிராக உள்ள அறிவியல் கிளைகள் சிலவற்றில் ஆய்வு கூடாது, கட்டுப்படுத்தவும் கூட வேண்டும்,
முடியாவிடில் அகற்றவேண்டும் எனக்கோரும் புதிய பாசசிச கிறிஸ்தவ அடிப்படை வாதக் குழுக்களுடன் அரசு
கொண்டிருக்கும் பிற்போக்கு கூட்டால், அறிவியலே இப்பொழுது ஒரு முற்றுகைக்கு உட்பட்டுள்ளது.
போருக்குப் பிந்தைய உலகம் "அச்சத்தில் இருந்து சுதந்திரம் பெற்றுள்ள தன்மையை"
கொண்டிருக்கும் என்று ரூஸ்வெல்ட் உறுதியளித்திருந்தார். அவருடைய சொற்களிலேயே, "இதன் பொருள் உலகம்
முழுவதும் ஆயுதக்குறைப்பு, மிகப் பெரிய வகையில் ஏற்பட்டு எந்த நாடும் தன்னுடைய அண்டை நாட்டுடன் கூட
படையெடுப்பு நடத்த முடியாத அளவு உலகெங்கிலும் வந்துவிடும். இது ஒன்றும் ஏதோ ஆயிரம் ஆண்டிற்குப் பின்னர்
வரவுள்ள உலகைப் பற்றிய கருத்து அல்ல. நம்முடைய காலத்திலேயே, நம்முடைய தலைமையிலேயே உலகம்
அடையக்கூடிய நிலையின் உறுதியான அடிப்படையாக இது இருக்கும்."
இந்த உறுதிமொழி ஒரு அமைதியான, சட்ட ஒழுங்கின்படி நடைபெறும் உலக முறை
தோற்றுவிக்கப்படும் என்பதை வலியுறுத்துகிறது; அதற்கு அடிப்படை, ஆயுதங்கள் குறைப்பு, போர் மூலமாகப்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது என்பது கைவிடப்படல் என்பவையாகும்; இந்த உறுதி மொழி, ரூஸ்வெல்ட்டின்
கருத்தான முதலாளித்துவத்தின் கீழ், ஒரு ஜனநாயக, இன்னும் கூடுதலான சமத்துவ சமுதாயம் தோற்றுவிக்கப்படும்
என்பதைவிட மிக அதிகமாக கவனத்தை ஈர்க்கும் வகையில் தோல்வியடைந்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப்
பின் நாஜித் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டதற்கான பிரதான குற்றமான, தங்களின் சர்வதேச குறிக்கோள்களை
அடைதலுக்காக ஆக்கிரமிப்பிற்கான படையெடுப்பை மேற்கொள்ளுதல் என்பது புஷ் நிர்வாகத்தின் முன்னரேதாக்கித்
தடுக்கும் போர்க் கொள்கைவழி என்ற வடிவமைப்பை தழுவிவிட்டது.
ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு வெற்றிடத்தில் வாழ்ந்துவிடவில்லை. அதனுடைய
பூகோள ஆதிக்கம் என்ற பதாகையின் கீழ், உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் வரலாற்றளவில்
வழக்கொழிந்துவிட்ட தேசிய அரசுகளுக்கும் இடையேயான அடிப்படை முரண்பாடுகளால் உருவாக்கப்பட்ட
மோதல்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு பிற்போக்கான முயற்சியை அதன் கொள்ளையடிக்கும் கொள்கைகள்
பிரதிநிதித்துவம் செய்கின்றன. இன்று நிலவும் சர்வதேச பதட்டத்தின் மட்டம், இரண்டாம் உலகப் போர் காலத்தில்
இருந்து, முன்னோடியில்லாத தன்மையை கொண்டுள்ளது. ஆயுதங்கள் பெரிதும் பெருகியுள்ள நிலையில்,
மூலோபாயமிக்க கச்சாப்பொருட்கள், குறைவூதிய தொழிலாளர் வளங்கள் மற்றும் இன்னும் பல புவிசார் அரசியல்,
பொருளாதார நலன்களை அடைவதற்கு நாடுகள் வாழ்வா-சாவா என பெரும் போட்டியில் இருக்கும் தன்மையில்,
உலகின் எந்தப் பகுதியிலும் ஏற்படும் பூசல் உலகம் முழுவதும் பரவிவிடும் பேரழிவுத் தீயாய் வெடிக்கக்கூடும்.
மார்ச் 2003ல் அமெரிக்கா, ஈராக்மீது படையெடுத்தது, இரண்டாம் உலகப்
போருக்குப் பின்னர் இருந்து சர்வதேச உறவுகள் ஒழுங்கமைக்கப்பட்ட ராஜீய, சட்ட மற்றும் அடிப்படை
கட்டமைப்பினை முறிப்பதை விரைவுபடுத்தியுள்ளது. இந்த வழிவகை 1991ல் சோவியத் ஒன்றியம் சரிந்த பின்
தொடங்கியுள்ளது. சர்வதேசக் கூட்டுக்கள், அமைப்புக்கள் என்று குளிர்யுத்தக் காலத்தில் அமெரிக்க நலன்களுக்கு
உதவிய அமைப்புக்கள், இப்பொழுது வாஷிங்டனால் தன்னுடைய புதிய பூகோள அபிலாஷைகளை அடைவதற்கு
பெருந்தடை என்று கருதப்படுகின்றன.
குளிர்யுத்தத்திற்குப் பிந்தைய காலத்தின் சக்திகளின் அணிவரிசையின் முதலாவதும் மிக
குறிப்பிடத்தக்கதுமான பாதிப்பு அமெரிக்க - மேற்கு ஐரோப்பிய கூட்டாக இருந்து வருகிறது. முன்பு சோவியத்
ஒன்றியத்தை கட்டுப்படுத்தி வைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அடிப்படையான மூலோபாய கூட்டாளியாக இருந்த
நிலைமாறி, அமெரிக்கா இப்பொழுது ஐரோப்பாவை தன்னுடைய முக்கிய பொருளாதார போட்டியாளர் என்றும்
அமெரிக்காவின் மேலாதிக்க பாத்திரத்தை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதற்கு தடையாக நிற்கும் கண்டம் என்றும்
கருதுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அமெரிக்காவுடன் உலக அரங்கில் போட்டியிடும் வகையில்
ஐரோப்பிய இராணுவத்துடன் ஒரு பொது ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை எழுச்சிபெறுவதை தடுப்பதில் பெரும்
அக்கறையை கொண்டுள்ளது.
ஐரோப்பாவிற்குள்ளேயே, அமெரிக்கா இப்பொழுது நட்பு நாடல்ல, விரோதி என்று
அறியப்பட்டுள்ளமை உறுதிற்ற தன்மையையும் பெரும் கவலையையும் கொடுத்துள்ளது. ஐரோப்பாவிற்குள் இருக்கும்
ஒவ்வொரு நாடும் புதிய உலக ஒழுங்கில் தன்னுடைய இடம் எப்படி இருக்கும் என்பதை மறு ஆய்வு செய்யும் மற்றும்
அதன் புவிசார் அரசியல் வாய்ப்புக்கள் பற்றிய ஒரு புதிய மதிப்பீட்டைச்செய்யும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தங்களின் கூட்டு முயற்சியில் ஒன்றுபட்ட ஐரோப்பாவை காணவேண்டும் என்ற முந்தைய பார்வைக்கு இப்பொழுது
பிரான்சின்மீது ஜேர்மனி தொடர்ந்த விசுவாசத்தை கொண்டிருக்குமளவு நம்பிக்கை கொள்ள முடியுமா? தனக்குத்
தேவையான முக்கிய எண்ணெய் இருப்புக்களை அடைவதற்காக ரஷ்யாவுடன், அல்லது ஒருவேளை ஈரானுடன்
தொடர்பை ஜேர்மனி பெறவேண்டுமா, இவ்வாறு செய்தால் அமெரிக்காவுடன் மோதல் என்ற அபாயத்தை அது
தழுவ நேரிடாதா?
ஐரோப்பிய அமெரிக்க உறவுகளில், ஈரான் ஒரு பிரதான காரணியாக வெளிப்பட்டுள்ளது.
ஈரானிய திட்டமான அணு சக்தித் திறனை வளர்த்தல் பற்றியதற்கு அமெரிக்கா ஒர் ஆக்கிரோஷமான எதிர்ப்பை
காட்டியுள்ளது, அதேவேளை ஐரோப்பாவோ ஈரானுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே வளர்ந்துவரும்
பொருளாதார உறவுகள் தடைப்படுவதற்கு வழிவகுக்காத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முற்படுகிறது. ஐரோப்பிய
ஒன்றியத்தின் முக்கிய வணிகக் கூட்டாளியாக ஈரான் இருப்பதோடு, ஐரோப்பாவிற்கு எண்ணெய் அளிப்பதிலும் ஒரு பெரிய
ஆதாரவளமாகவும் அது இருக்கிறது.
உலக எண்ணெய் சந்தையில் கட்டுப்பாட்டை காணவேண்டும் என்ற உந்துதலில் இருக்கும்
அமெரிக்காவோ ஐரோப்பாவிற்கு மட்டும் இன்றி, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவற்றிற்கும் எண்ணெய்
அளிக்கும் ஈரானின் பக்கம் தன் பார்வையை அமைத்துக் கொண்டுள்ளது. பகிரங்கமாகவும், பிடிவாதமாகவும்
ஈரானில் இருந்து இந்தியாவிற்கு பாகிஸ்தான் மூலம் எண்ணெய் குழாய்த்திட்டம் அமைக்கப்படுவதற்கு அது கடுமையான
எதிர்ப்பை காட்டியுள்ளது.
எண்ணெய்வள வல்லுனரான மைக்கல் க்ளேர் கூறுகிறார்: "புஷ் நிர்வாக அதிகாரிகள்
இரண்டு முக்கிய மூலோபாய நோக்கங்களை கொண்டுள்ளனர்: ஈரானிய எண்ணெய், மற்றும் எரிவாயு வயல்கள்
அமெரிக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படவேண்டும்; ஈரான் அமெரிக்கப் போட்டியாளர்களுடன் உலக சக்தி
சந்தையில் கொண்டுள்ள வளர்ந்துவரும் பிணைப்புக்கள் பற்றியும் அமெரிக்கா பெரும் கவலை
கொண்டுள்ளது......புஷ் நிர்வாகத்தின் பார்வையில் இந்த வேட்கை தூண்டா நிலையில் உள்ள இந்த நிலப்பரப்பை
மாற்றுவதற்கு வெளிப்படையான மற்றும் உடனடியான ஒரே வழி - ஈரானில் 'ஆட்சிமாற்றம்' கொண்டுவரல் மற்றும்
இப்பொழுது இருக்கும் தலைமைக்கு பதிலாக அமெரிக்க மூலோபாய நலன்களுக்கு மிகவும் நட்புரிமை காட்டும்
தலைமை பதவியில் இருத்தப்பட வேண்டும்." [2]
மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை அடைவதற்கான தொடர்ந்த போராட்டம் வெகு
எளிதில் பல பிரதான வல்லரசுகளுக்கு இடையே போரை ஏற்படுத்தக் கூடும். அமெரிக்கா, ஈரானை தாக்கினால்,
ஐரோப்பா எப்படி அதை எதிர்கொள்ளும்? சீனா, இந்தியா, ரஷ்யா ஆகியவை எப்படி அதை எதிர்கொள்ளும்?
அமெரிக்க உலகாதிக்க திட்டங்கள் பற்றிய பயம் சர்வதேச அரசியலில் முக்கிய காரணியாக
இருக்கும் உலகில், தங்களை எதிர்கால அரசியல் இலக்குகளாக கருதும் நாடுகள், தங்களின் இராணுவ
பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி கொள்வதன் மூலம், ஈராக்கிற்கு நேர்ந்த கதி தங்களுக்கும் ஏற்படுவதை
தவிர்க்க நம்பிக்கை கொண்டுள்ளன. மத்திய ஆசியாவிலும், முந்தைய சோவியத் குடியரசுகளிலும் அமெரிக்க
செல்வாக்கின் பெருக்கம் ஏற்பட்டுள்ளமை பற்றி ரஷ்யா அதிகரித்த முறையில் ஓர் அச்சுறுத்தலை காண்கிறது.
2004ன் முடிவில் அமெரிக்கா, உக்ரைனில் அமெரிக்க சார்புடைய அரசாங்கம் வெல்வதற்குத் தக்க வகையில் உதவி
புரிந்திருந்தது. சமீபத்தில் ஒருகாலத்தில் ரஷ்யாவின் கொல்லைப்புறப் பகுதி போல் கருதப்பட்டிருந்த லிதுவேனியாவில்
ஒரு NATO
மாநாடு ஒன்றில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் பேசினார்; அங்கு பேசும் பொழுது அண்மை
நாடான பைலோரஷ்யாவில் அரசாங்க மாற்றம் வேண்டும் என்று போர்வெறி அழைப்புக்களை எழுப்பினார். ரஷ்யாவின்
நட்பு நாடுகள் என்று அப்பகுதியில் எஞ்சி இருக்கும் ஒரு சில நாடுகளில் பைலோரஷ்யாவும் ஒன்றாகும். அமெரிக்க
ஆளும் செல்வந்தத்தட்டின் முக்கியமான பகுதிகள் பல ரஷ்யாவிலேயே "ஆட்சி மாற்றம்" வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளன.
அமெரிக்க தாக்குதலை பற்றிப் பயப்படும் சீனாவும், இந்தியாவுடன் நெருக்கமான
தொடர்புகளை கொள்ள வாய்ப்பு உள்ளதா என்று ஆராய்ந்து வருகிறது. இந்தியா, சீனா என்ற இரு நாடுகளுக்கும்
ஈரானிய எண்ணெய் தேவைப்படுகிறது; இந்தத் தேவை இந்த ஆசிய அரசுகளிடையே புதிய பூசல்களை ஏற்படுத்தக்
கூடும்.
அதே நேரத்தில், சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள உறவு பல தசாப்தங்களில்
காணப்படாத வகையில் மிகக் குறைந்துவிட்டது. ஜப்பானிய வரலாற்று பாடப் புத்தகங்களில் உள்ள குறிப்புக்கள்
பற்றிய பூசல் அண்மையில் நிகழ்ந்த பரபரப்பிற்கு போலிக் காரணத்தை வழங்கிய அதேவேளை, அங்கே இரு நாடுகளுக்கும்
இடையே முக்கியமான அரசியல் மற்றும் மூலோபாய நலன்கள் சம்பந்தப்பட்டுள்ள மோதல்கள் நிலவுகின்றன. இவற்றில்
கிழக்குச் சீனக் கடல் பகுதி எண்ணெயின் மீது கட்டுப்பாடு கொள்ளுதல், மற்றும் அமெரிக்க ஆதரவில் ஜப்பான் இராணுவ
வலிமையை பெருகிய முறையில் கொள்ளுதல் ஆகியன உள்ளடங்கியுள்ளன.
இவற்றில் ஏதாவது ஒரு பூசலின் புள்ளி அல்லது வேறு புள்ளி பெரும் வல்லரசுகளுக்கு
இடையே ஒரு பெரிய மோதலை ஏற்படுத்தலாம். அமெரிக்க வலியத்தாக்குதலின் வெடிப்பானது உருவாக்கியுள்ள
நிலைமையில் உண்மையான மற்றும் எதிர்கால போட்டியாளர்களுடன் ஒப்பீட்டளவில் உலகின் ஒவ்வொரு நாடும் தன்னுடைய
சொந்த பொருளாதார மற்றும் இராணுவ நிலைமையை உறுதிப்படுத்துக்கொள்ளும் திட்டங்களைத் தயாரித்து வருகின்றன.
இரண்டாம் உலகப் போர் முடிந்ததற்கு பின் இதுகாறும் இல்லாத அளவிற்கு, இப்பொழுது உலகம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு
இடையே மற்றும் நாடுகளுக்கு இடையே காணப்படும் பகைமைகள், பூசல்கள் ஆகியவை ஒரு வெடிமருந்து பீப்பாயைப்
போல் எந்தேரமும் வெடிக்கக் கூடியதாக ஆகியிருக்கிறது.
தொடரும்
Top of page |