Washington Post glorifies US military "ruthlessness"
in Iraq
ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் "கொடூரத்தன்மையை" பெருமைப்படுத்தும் வாஷிங்டன்
போஸ்ட்
By James Cogan
20 April 2005
Use this version to
print |
Send this link by email |
Email the author
வாஷிங்டன்போஸ்ட்டில் பத்திரிகையாளர்
Steve Fainaru-வின்
கலவரமூட்டும் ஒரு கட்டுரை ஏப்ரல் 13-ல் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது, அது ஈராக்கில் போர்புரிந்து கொண்டுள்ள
அமெரிக்க துருப்புக்களிடையே நிலவுகின்ற கொலைவெறி மற்றும் காலனி ஆதிக்க மனப்பான்மையை நியாயப்படுத்துகிறது,
மற்றும் ஊக்கமளிக்கிறது.
"மொசூலில் கொடூரத்தன்மைக்கு அப்பால் சென்றுகொண்டிருக்கும் ஒரு போர்" என்ற
தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தக்கட்டுரை, போர்டோரிக்கோவிலும், புரூக்ளின் பகுதியிலும் வசதிக்குறைவான
குடிசைப்பகுதிகளில் வளர்ந்த 39 வயது அமெரிக்க இராணுவத்தினரான முதல்நிலை சார்ஜண்ட் டோமிங்கோரூயஸ் நடத்திய
தாக்குதல்களை விவரிக்கிறது. ரூயஸ் 21-வது காலாட்படைப்பிரிவு 3வது பட்டாலியனின் பிரிவைச் சார்ந்தவர். அந்தப்பிரிவில்
இராணுவத்தின் புதிய தாக்குதல் வாகனம் உள்ளது. கொந்தளிப்பு மிக்க ஈராக் நகரமான மோசூலில் அந்தப்பிரிவு
இப்போது நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது.
பல்லூஜாவில் அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து நவம்பர் மாதம் கிளர்ச்சிக்காரர்கள்
மோசூலில் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். பெரும்பாலான ஈராக் போலீசார் தங்களது
பணிகளை உதறித்தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். ஈராக் கிளர்ச்சிப் போராளிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க துருப்புக்கள்
அங்கு விரைந்து அனுப்பப்பட்டன. கிளர்ச்சிக்காரர்கள் மோசூலிலுள்ள ஷன்னி முஸ்லீம் மக்களில் பெரும்பாலோரது பரந்த
ஆதரவோடு அங்கு இயங்கியதாக தோன்றுகிறது. கடந்த பல மாதங்களுக்கு மேலாக கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து,
கட்டுப்பாட்டை முற்றுகைப்படைகளுக்கு மீட்டுத் தருவதற்காக ஒரு எதிர் -இரத்தக்களரி நடவடிக்கை நடைபெற்று
வருகிறது.
"கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்து போரிடுவதில் ரூயிஸைவிட இந்தப் பிரிவில் வேறு
எவரும் கொடூரமான இரத்தக்களரி நடவடிக்கையில் மிஞ்சிவிட முடியாது." என்று போர் வீரர்கள் போஸ்ட்டிடம்
தெரிவித்தனர். என்றாலும் இந்தக் கட்டுரை எடுத்துக்காட்டும் உருவம் என்னவென்றால் ஒரு அறியாமை மிக்க
கொடூரச்செயல்களை மட்டும் புரிகின்ற மனிதனது இயல்புகளை அவரது பிரிவின் படைச்சின்னம் எடுத்துக்காட்டுகிறது -
"ஒரு கெட்ட எண்ணத்துடன் கடைக்கண் பார்வை பார்க்கும் தோற்றமுடைய மண்டை ஓடு பச்சை நிற தொப்பியில்
வாயிலிருந்து இரத்தம் சிந்துகின்ற காட்சியைக் காட்டுகிறது."
ஒரு காரிலிருந்து மற்றொரு காருக்கு ஆயுதங்களை அப்புறப்படுத்தியதாக கூறப்பட்ட
ஒரு ஈராக் கொரில்லாக்கள் குழு என்று சந்தேகிக்கப்பட்டவர்களை மார்ச் 12-ல் ரூயிஸின் படைப்பிரிவு எப்படி
திடீரென்று சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியது என்பதை தனது வாசகர்களுக்கு ஃபைனாரு சுவைபட கூறத்
தொடங்குகிறார். ரூயிஸ் கட்டளைப்படி ஒரு அமெரிக்க போர்வீரர் ஒரே துப்பாக்கி குண்டில் ஒரு ஈராக்கியரின்
தலையை இரண்டாக பிளக்கிறார். மற்ற ஈராக்கியர்கள் தப்பி ஓட முயன்றபோது அவர்களை அமெரிக்கப்படை
பிரிவினர் சுட்டனர். அவர்களுக்கு சரண் அடைவதற்காக எந்த வாய்ப்பையும் அமெரிக்கத் துருப்புக்கள் தரவில்லை.
"இந்த திடீர் தாக்குதல் நடந்தபின்னர், அமெரிக்கர்கள் ஒரு மண்டை ஓட்டை
தேடினர், அதை எடுத்து தங்களது படைத்தளத்திற்கு வெற்றிகரமாக பணி முடித்ததைக் காட்டுவதற்காக கொண்டு
சென்றனர்" என்று ஃபைனாரு கூறியுள்ளார்.
"தமது பட்டாலியனின் கொல்லும் குறிக்கோளை உறுதிப்படுத்தும் வேடிக்கையான ஒரு
சமிக்கையாக அந்த மண்டை ஓட்டுச் சிதைவை தமது படைத்தளத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டதாக
ரூயஸ் சொன்னார்" என்று போஸ்ட் குறிப்பிடுகிறது. அவரது பிரிவின் தளபதி ஒரு ஒழுக்கச் சிதைவுள்ள
இந்த நடவடிக்கையை நியாயப்படுத்துவதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். உடலின் உறுப்பு ஒன்றை போர்க்களத்தில்
"ஒரு பரிசாக" எடுத்து வருவது, அமெரிக்க இராணுவ சட்டப்படியும், சர்வதேச சட்டப்படியும்
சட்டவிரோதமானது. ரூயஸின் இந்தச் செயல் அப்படிப்பட்டதல்ல என்று அவரது தளபதி கூறியுள்ளார்.
அவரது தளபதியான 23 வயது லெப்டினட் கூலின் கீட்டிங் கூறினார். "ரூயிஸ் ஈராக்
போர்விதிப்படிதான் நடந்தார். யாரோ ஒரு இராணுவ ஊழியர் போர்க்களத்தைப் பார்க்காமல் அந்த
அனுபவமில்லாமல் எழுதிய விதிப்படி அவர் நடக்கவில்லை". அந்த சார்ஜண்ட் எப்போதுமே எல்லை மீறி நடந்து
கொள்ளவில்லையென்று போஸ்ட் வாசகர்கள் உறுதியளிக்கப்பட்டனர், அது போர்க்குற்ங்கள் புரிவது
தொடர்பான குறிப்பைக் கருத்தில் கொண்டு தெரிவிக்கப்பட்டதாகும், "ஆனால் அவர் மீண்டும் மீண்டும் அந்த
எல்லைவரை செல்வார்".
ரூயஸ் போஸ்ட்டிடம் கூறினார், "எதிரியை நாம் தீர்த்துக்கட்டுவதற்கு
தயங்கமாட்டோம் என்பது நமது போர்வீரர்கள் அறிந்து கொள்ள வேண்டியது, முக்கியமாகும். உன்னை நோக்கி
குண்டு பாய்ந்து வருகிறது என்றால், அவர்கள் உன்னை கொல்ல விரும்புகிறார்கள் என்று பொருள், அப்போது நீ
என்ன செய்ய வேண்டும், என்று எதிர்பார்க்கப்படுகிறது? பூச்செண்டோடு வரவேண்டுமா? ஆனால் நீங்கள்
நம்பினாலும் நம்பாவிட்டாலும், இங்கே சிலர் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்கு இனிப்பு பொட்டலங்களை
வழங்க வேண்டுமென்று விரும்புகிறார்கள்".
என்றாலும், அந்தக் கட்டுரையில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ள ரூவர்ஸின்
நடவடிக்கைகள் தன்னை நோக்கி அல்லது தனது படைப்பிரிவை நோக்கி குண்டுகளை சுடுகின்ற எதிரியோடு
போரிடுவது சம்மந்தப்பட்டதல்ல. அமெரிக்க முற்றுகைக்கு ஈராக் சிவிலியன்கள் காட்டுகின்ற பொதுமக்களது
எதிர்ப்பை ஒடுக்குவதற்காக நடத்தப்படும் கொடூரமான மிரட்டல்கள் சம்மந்தப்பட்டதாகும்.
வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ள அந்த சார்ஜண்டின் நடவடிக்கைகளில்
அடங்கியிருப்பவை.
* ஒரு பள்ளிக்கூடத்தில்
கிளர்ச்சிக்காரர்கள் இரவில் சந்தித்து பேசுகிறார்கள் என்று அந்த சார்ஜண்ட் "கேள்விப்பட்ட" ஒரு பள்ளியின்
தலைமையாசிரியரை நேரடியாக மிரட்டினார். மற்றும் அந்தப் பள்ளியை மூடிவிடுவதாக அச்சுறுத்தினார்.
* ஒருவரது கடைக்கு முன்னால்
அவர் ஒரு பயங்கரவாத ஆதரவாளர் என்று முத்திரைகுத்தி அவர் ஒரு விளம்பர பலகையை எழுதி வைப்பதாக
அச்சுறுத்தினார் மற்றும் அதன் மூலம் அவருக்கு எதிரான வன்முறையைத் தூண்டினார் - அவர் கிளர்ச்சிக்காரர்களுக்கு
உதவுகிறார் என்ற ரூய்ஸ் "நம்புவதை" அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு அச்சுறுத்தினார்.
அந்தக் கட்டுரையில், ஈராக் போர் பற்றி ரூய்ஸ் தந்துள்ள விளக்கத்தில் தமது
இளமைக்காலத்தில், 20 வயதிற்கும் குறைந்த பருவத்தில் ஒரு புரூக்ளின் முரட்டு கும்பலான "கோனித்தீவு
நல்லபாம்புகள்" என்றழைக்கப்பட்ட குழுவின் ஒரு உறுப்பினராக இருந்து "பாக்கெட்டில் இருந்த எந்தப்
பொருளையும்" எடுத்து எதிர்க்குழுவோடு "தெருச்சண்டைகள்" போட்ட நாட்களை நினைவுபடுத்துகிறார். இதை
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு தெருவில் சுற்றிய முரடன் போன்றே அவர் செயல்பட்ட
மனப்பான்மையை அது காட்டுகிறது.
ஈராக் சிவிலியன்களை அவர் யார் கொடுத்த அதிகாரத்தின்மூலம் மிரட்டினார்.
மற்றும் அச்சுறுத்தினார் என்பதை அந்தக் கட்டுரை குறிப்பிடவில்லை. ரூய்ஸ் ஒரு சாதாரண சார்ஜண்ட்தான்.
என்றாலும், அந்தக் கட்டுரை மூத்த அதிகாரிகளின் ஆதரவோடுதான் அவர் செயல்பட்டார், இதர அமெரிக்க
போர்வீரர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார் என்ற கருத்தை உருவாக்குகிறது. "மோசூலில் இருக்கும்
துருப்புக்களிடையே அவர் செல்வாக்கு படைத்தவர்" என்று போஸ்ட் குறிப்பிட்டிருக்கிறது.
"ரூய்ஸுடன் மோதிக்கொண்ட பின்னர் 48 மணி நேரத்தில் ஒரு படைப்பிரிவு தளபதி"
மாற்றப்பட்டார் என்று ஃபைனாரு விவரிக்கிறார். அந்த அதிகாரி சார்ஜண்டின் நடவடிக்கைகளை
ஏற்றுக்கொள்ளவில்லையா? அந்தக் கட்டுரை அதைச் சொல்லவில்லை. அந்தக் கட்டுரையில் பிப்ரவரி 6-ல்
பதவியேற்ற லெப்டினென்ட் கீட்டிங்கிற்கு ரூய்ஸ் விடுத்த இறுதி எச்சரிக்கையை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது: "நான்
எனது போரை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்".
அந்தக் கட்டுரையின் பொருளடக்கத்தை தணிக்கை செய்திருக்க வேண்டிய அமெரிக்க
இராணுவமும் வாஷிங்டன் போஸ்ட்டும் அந்த மனிதனை புகழ்ந்தேற்றுவதுவது ஏன் என்ற தெளிவான கேள்வி
எழுகிறது? போஸ்ட் சிதைந்து கொண்டு வருகிற அமெரிக்க தாராளவாதத்தின் ஒரு ஊடகப் பிரதிநிதி,
ஈராக்கிற்கு அது ஜனநாயகத்தை கொண்டுவரும் என்ற அடிப்படையில் ஈராக் முற்றுகையை நியாயப்படுத்துவதில்
முன்னணியில் நிற்பதற்கு முயன்று வருகிறது. முற்றுகையிடப்பட்டு இரண்டாண்டுகளுக்கு பின்னர் அது சாதாரண
ஈராக்கியர்களின் அடிப்படை உரிமைகள்தான் தனது "போரை வென்றெடுப்பதற்கு" ஒரு தடைக்கல்லாக உள்ளது,
என்று கருதுகிற ஒரு தனி போர்வீரரை மிகப்பெரிய வீரனாக காட்டுவதற்கு முயன்று வருகிறது.
ரூயஸின் நடவடிக்கையை ஒப்புதலோடு சகித்துக்கொண்டார்கள் என்ற உண்மை
பொதுமக்களை திட்டமிட்டு ஒடுக்குவதில் அமெரிக்க முற்றுகை பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்திருக்கிறது, என்பதை
எடுத்துக்காட்டுகிறது. ஈராக்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற தனது ராணுவ
நடவடிக்கையின் கீழ் ஈராக் மக்களது வாழ்வும் உரிமைகளும் அவர்களது நலன்களும் எந்த அளவிற்கு துச்சமாக
மதிக்கப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது. ரூயஸ் போன்றவர்கள் அவர்களை அச்சுறுத்திப் பணிய வைப்பதற்காக
அவர்கள் கொல்லப்படுகிறார்கள் மிரட்டப்படுகிறார்கள் அல்லது சிறை முகாம்களுக்கு இழுத்துச்
செல்லப்படுகிறார்கள்.
போரின் உண்மையான நோக்கங்களிலிருந்து அத்தகைய நடவடிக்கைகள் கிளம்பி
வருகின்றன. ஈராக்கின் எரிபொருள் வளங்களை சூறையாடி மத்திய கிழக்கின் இதர பகுதிகள் மீது ஆதிக்கம்
செலுத்துவதற்கு அதை ஒரு அடித்தளமாக ஆக்க வேண்டும் என்று அபிலாஷை கொண்டுள்ள அமெரிக்க ஆளும்
செல்வந்தத்தட்டின் நலன்களை காப்பதற்காகத்தான், ஈராக் வென்றெடுக்கப்பட்டது. அத்தகைய அபிலாஷைகள்
ஈராக் மக்களது உறுதியான எதிர்ப்பை உருவாக்குவது தவிர்க்க முடியாதது, அந்த எதிர்ப்பைக் கொடூரமான
படைவலிமை மூலம்தான், சமாளிக்க முடியும்.
பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன - சில
கட்டுரைகள் போஸ்ட்டிலும் வந்திருக்கின்றன - "பேரழிவு ஆயுதங்களை தடுத்து நிறுத்த",
"பயங்கரவாதத்தை தடுக்க", அல்லது "விடுதலையை" கொண்டு வர, ஈராக் மீது முற்றுகையிடப்பட்டது என்ற புஷ்
நிர்வாகத்தின் கூற்றுக்கள் மீது ஏமாற்றம் அடைந்து மற்றும் மிக ஆவேசமாக இளம் போர்வீரர்கள் மற்றும்
மரைன்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அந்தக் கட்டுரைகளில் பிரசுரிக்கப்பட்டன. அனைத்தையும் அவர்கள்
புரிந்து கொள்ள முடியாது என்றாலும், அவர்களும் அமெரிக்க மக்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதை பல
துருப்புக்கள் அறிந்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பொய்களின் காரணமாக 1500க்கு மேற்பட்ட அமெரிக்கர்கள்
மடிந்திருக்கின்றனர், 10,000க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கின்றனர்.
ஆயினும், அமெரிக்க அரசியல் நிர்வாகம் அமெரிக்கா "தாக்குதல் நடத்திவிட்டு தப்பி
ஓடிவிட முடியாது" என்பதில் உறுதியுடன் உள்ளது. ஈராக்கை முற்றுகையிட்ட பின்னர் அந்த நாடு அடிபணிந்து நடக்கச்
செய்யப்பட வேண்டும் மற்றும் அமெரிக்கா கட்டளைப்படி செயல்படுகிற ஒரு வாடிக்கையாளர் அரசு உருவாக்கப்பட
வேண்டும். இதற்கு விலையாக மேலும் எவ்வளவு ஈராக் மற்றும் அமெரிக்க உயிர்கள் பலியானாலும் கவலையில்லை.
வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகள் தங்களது பக்கங்களை
இதற்கென்றே இடைவிடாது பயன்படுத்தி அமெரிக்க முற்றுகை நீடிப்பதற்கு பிரசாரம் செய்து வருகின்றன. மாற்ற
முடியாத நிலைநாட்டப்பட்டுவிட்ட உண்மை இந்தப்போர் என்று சித்தரிக்கப்படுகிறது.
குறிப்பாக ரூய்ஸ் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்டிருப்பது இந்தப் பிரச்சாரத்தின்
சூழ்ச்சித் தன்மையை காட்டுகிறது. அமெரிக்க இராணுவம் மற்றும் அமெரிக்க மக்களிடையே போர் பற்றிய கருத்து
எதுவாக இருந்தாலும், அந்தப் போர் எந்த வழிமுறைகளை கையாண்டாவது வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற
கருத்தை வளர்ப்பதற்காகத்தான். சார்ஜண்ட் ரூய்ஸூம் வாஷிங்டன் போஸ்ட்டும் தந்துள்ள தர்க்கவியலின்படி,
இப்போது ஈராக்கில் நடைபெற்றுக்கொண்டுள்ள அமெரிக்காவிற்கெதிரான கிளர்ச்சி அமெரிக்க துருப்புக்கள்
தேவையான கொடூரத்தன்மையோடு "தங்களது போரை" நடத்தவில்லை என்பதன் காரணத்தினால் ஆகும், அல்லது
அதைவிட மோசமான நிலை என்னவென்றால், இந்த போரின் "உண்மைத்தன்மையை" புரிந்து கொள்ளாத தளபதிகள்
அவ்வாறு செயல்படுவதிலிருந்து தடுக்கிறார்கள் என்பதுதான் அந்தச் சூழ்ச்சிப் பிரசாரம்.
2004 அக்டோபர் 10-ல் ஃபைனாரு போஸ்ட்டில் இன்னொரு கட்டுரை
"விரக்தியடைந்துள்ள மரைன்களின் போர்" என்ற தலைப்பில்எழுதினார். அதில் அமெரிக்க மரைன்களின் அறிக்கைகள்
வெளியிடப்பட்டிருக்கின்றன.
"(அமெரிக்க தளபதிகள்) சட்டத்தின் வாசகங்களுக்கு அதிக மதிப்பு கொடுக்கிறார்களே
தவிர எங்களது வாழ்வுகளை பலியிடுகிறார்கள், சட்டத்தின் உணர்வைப் பின்பற்றி பணியை முடிக்க வேண்டும் என்று
கருதுவதுபோல் தோன்றவில்லை"
"அவர்களுக்கு (ஈராக் போராளிகளுக்கு) எங்களது மட்டுப்பாடுகள் தெரியும், ஆனால்
அவர்களுக்கு அத்தகைய மட்டுப்பாடுகள் எதுவுமில்லை. அதோடு நாங்கள் போட்டி போட முடியாது".
"அவர்கள் (அமெரிக்கத் தளபதிகள்) அமெரிக்க இராணுவத்தினரைவிட ஈராக் சிவிலியன்கள்
பற்றிதான் அதிக கவலை எடுத்துக்கொள்கின்றனர்."
ஒரு மாதத்திற்கு பின்னர் பல்லூஜாவில் ஒரு அமெரிக்க மரைன் ஒரு தொலைக்காட்சி
காமிராமுன் தற்செயலாக நிராயுதபாணியான காயமடைந்த ஒரு கைதியைக் கொன்றார். அமெரிக்க படைகள்
மசூதிகளிலும் வீடுகளிலும் வரைமுறையில்லாமல் குண்டு வீசித் தாக்கி வருவதாகவும் தண்ணீர் பிடிப்பதற்காக வருகின்ற
அல்லது அந்த நகரத்திலிருந்து தப்பி ஓட முயலுகின்ற குடிமக்களை கொலை செய்ததாகவும் ஈராக் போராளிகள்
மருத்துவ உதவிபெறுவதை தடுப்பதற்காக மருத்துவமனைகளில் குண்டு வீசித் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தத் தாக்குதல்களால் நகரத்தின் பெரும்பகுதி குப்பைமேடாகிவிட்டது.
இப்போது கடைசியாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள கட்டுரை
சுட்டிக்காட்டுவது என்னவென்றால், பல்லூஜா மக்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக விதிக்கப்பட்டுள்ள தண்டனை ஈராக்
முழுவதிலும் உள்ள பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைக்கு
முன்மாதிரியாக இருக்க வேண்டும், என்பதுதான். அப்படிச் செய்வதற்கு அமெரிக்காவில் தனது வாழ்வில் ஏற்பட்ட
நெருக்கடிகளால் மற்றும் அமெரிக்க இராணுவத்தில் தங்களது அனுபவங்களால் கொடூரமே உருவாக மாற்றப்பட்டுள்ள
ரூய்ஸ் போன்ற மனிதர்கள் அதற்குத் தேவை. அத்தகைய மனிதர்கள் கிஞ்சிற்றும் தார்மீக அல்லது அரசியல் மறுத்தல்களை
உணராது மற்றொரு மனிதனை கொல்லும் அணுகுமுறை உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
Top of page |