World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil: செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்காThe latest Bush provocation: Wolfowitz named to head World Bank புஷ்ஷின் புதிய ஆத்திரமூட்டல்: உலகவங்கி தலைவராக வொல்போவிற்ச் நியமனம் By Kate Randall புதன் கிழமையன்று ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் பாதுகாப்புத்துறை துணைச் செயலாளர் போல் வொல்போவிற்ச்சை உலக வங்கி தலைவராக நியமித்திருப்பது ஒரு போர் நகர்வு என்று கருதப்படுகிறது, புஷ் நிர்வாகம் தனது பூகோள மேலாதிக்கத்திற்கான தன்னிச்சையான, இராணுவவாதக் கொள்கையிலிருந்து பின்வாங்கும் நோக்கம் எதுவும் இல்லாதது என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. ஈராக்கிற்கெதிரான சட்டவிரோத போரின் ஒரு முக்கிய சிற்பி என்று உலகம் முழுவதிலும் சரியாக வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஒரு மனிதரை----- மற்றும் ஒரு போர்க் குற்றவாளி என்று கருதப்படுபவரை----நியமித்திருப்பது குறிப்பாக அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டணிக்கெதிராக எடுத்துள்ள ஒரு அரசியல் ஆத்திரமூட்டல் என்று கருதப்படுகிறது. இந்த மாதத் தொடக்கத்தில் நீண்டகால வலதுசாரி வெளியுறவுக்கொள்கை இயக்கியான ஜோன் போல்டனை அமெரிக்காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதராக புஷ் தேர்ந்தெடுத்ததை தொடர்ந்து அதைவிட அதிக ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இது அமைந்திருக்கிறது ("ஐ.நா தூதராக வலதுசாரி வேட்டை நாயை புஷ் தேர்ந்தெடுத்திருக்கிறார்" என்ற கட்டுரையைக் காண்க) உலக வங்கியின் 23 உறுப்பினர் குழு வொல்போவிற்ச்சின் நியமனத்திற்கு ஒப்புதல் தந்தாக வேண்டும். மிகப்பெரும்பாலான ஐரோப்பிய அரசாங்கங்கள் இந்த அறிவிப்பை பற்றி என்ன விடையளிக்கின்றன என்பதை சுருக்கமாக ஜேர்மன் வெளியீடான Spiegel Online (மார்ச் 17-ல்) இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது. "ஜூலை 4ல் நடக்கும் அணிவகுப்பில் ராணி இனிப்புகளை கூட்டத்தில் வீசி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுபோல் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஐரோப்பிய நாடுகளில் தனது புன்னகையையும் நல்லெண்ணத்தையும் வீசி சுழன்றோடி மூன்று வாரங்கள்தான் ஆகியிருக்கிறது. இப்போது பல ஐரோப்பியரின் முன்னோக்குப்படி பார்த்தால் அவர் அழுகிய முட்டைகளைத்தான் எடுத்து வீசிக் கொண்டிருக்கிறார். இந்தக் கண்டம் மகிழ்ச்சியடையவில்லை." பிரிட்டனின் முன்னாள் சர்வதேச அபிவிருந்திச் செயலாளர் கிளேர் ஷோர்ட், "இது உண்மையிலேயே அதிர்ச்சியளிப்பது. நமது சர்வதேச முறைகளை அவர்கள் சிதைக்க முயன்றுகொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது" என்று கூறினார். இந்த நியமனம் "அச்சமூட்டுவதாக'' உள்ளது என்று ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற துணைத்தலைவர் மைக்கல் முல்லர் வர்ணித்தார். "வளர்ந்து வருகின்ற உலகின் மக்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதும் வறுமையை எதிர்த்துப் போராடுவதும்" தனது குறிக்கோள் என்று அறிவிக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கத்திற்கு ஒரு போர் வெறியர் வொல்போவிற்ச் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை எடுத்துக்கொண்டால், இந்த நியமனத்தில் சம்பந்தப்பட்டுள்ள வெறுப்பு மனப்பான்மையின் அளவு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கதாகும். மொத்தத்தில் வொல்போவிற்ச், ஈராக் மக்கள் மீது படையெடுத்து அவர்களை அடிமைப்படுத்த திட்டமிட்டவர், அதன்மூலம் அந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிவதற்கும் துயரத்தில் சிக்கிக்கொள்வதற்கும் காரணமாக இருந்தவர். வொல்போவிற்ச்சை புஷ் நிர்வாகம் நியமித்திருப்பது ஒரு சாதாரணமாக அடையாளபூர்வ சமிக்கை மட்டுமல்ல. அது உலக வங்கியை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மேலாதிக்கத்திற்கான ஒரு நேரடி கருவியாக மாற்றுவதற்கு உறுதி கொண்டிருப்பதை அடையாளம் காட்டுகிறது---- அமெரிக்க நோக்கங்களுக்கு ஒரு தடைக்கல்லாக கருதப்படும் "போக்கிரி'' அரசாங்கங்களை தண்டிக்கவும், அமெரிக்க பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு எல்லையற்ற சுரண்டல்களுக்கு வகை செய்யும் ''சுதந்திர சந்தை'' பொருளாதார சிக்கன கொள்கைகளை கடைப்பிடிக்கும் மிக ஏழ்மைபீடித்த ஏழை நாடுகளுக்கு மானியங்களையும் கடன்களையும் வழங்குவதற்கு முயற்சிக்கிறது. Wall Street Journal மார்ச் 17-ல் எழுதியுள்ள ஒரு தலையங்கத்தில், வொல்போவிற்ச்சை தலைவராக கொண்டு எப்படி ஒரு உலகவங்கி செயல்படும் என்பதை கோடிட்டுக் காட்டியிருக்கிறது. வங்கியின் நடப்பு நடவடிக்கைகள், "ஒரு செயல்படாத அதிகாரத்துவம், அமெரிக்க வரி செலுத்துவோரின் நம்பிக்கையை மீண்டும் பெற்று 21-ம் நூற்றாண்டில் ஏற்ற ஒரு அமைப்பாக நீடித்திருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆழ்ந்த சீர்திருத்தம் தேவை" என்று ஆசிரியர் தலையங்கம் புலம்பியுள்ளது. "ஏழைகளுக்கும் அவர்களின் மீட்புக்கும் இன்னொரு 100 பில்லியன் டாலர்கள்தான் தடைக்கல்லாக இருப்பதால், அவர்களின் நன்கொடைகள் மூலம் இன்னும்கூடுதலாய் கொடுப்பதற்காக ஜனநாயக நாடுகளை கடிந்துகொள்வதற்கு அதிக நேரம் செலவிடுவதற்காக" ஜூனில் பதவியிலிருந்து இறங்கவிருக்கும் நடப்பு உலக வங்கித் தலைவரான James Wolfensohn-ஐ விமர்சித்திருக்கிறது.உலக வங்கித் தலைவர் பதவிக்கான வொல்போவிற்ச்சின் தகுதிகள், அவர் 1982 முதல் 1986 வரை தெற்கு ஆசிய மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் ஆகவும் 1986 முதல் 1989 வரை இந்தோனேஷியாவின் தூதராகவும் பணியாற்றிய காலத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று Journal கூறியுள்ளது. "உலகின் அந்தப் பகுதியில் சுதந்திர சந்தை சீர்திருத்தங்களின் பயன்கள் பூத்துக் குலுங்கிய பொழுது" இந்தப் பதவிகளில் அவர் வகித்த பதவிக் காலத்தை அவை வர்ணிக்கிறன்றன. உண்மையில், அந்த பூத்து குலுங்கிய ஏராளமான வளம் ஆசியாவின் சிறிய செல்வந்தத்தட்டினருக்கு ஒதுக்கிவைக்கப்பட்டது, அதேவேளை அந்த பிராந்தியத்தின் வெகு ஜனங்கள் நிரந்தரமாய் ஆழமான வறுமையில் தள்ளப்பட்டனர். "உண்மையிலேயே, உலக வறுமைக்கு முதன்மை காரணமாக அமைந்திருப்பவர்கள் உலகின் சர்வாதிகாரிகள்தான். இன்றைய தினம் உலகில் றொபர்ட் முக்காபேக்களை எவரும் துணிவுடன் எதிர்த்து நிற்பார் என்றால், அப்படிப்பட்ட மனிதர் சதாம் உசேனை துணிவுடன் கட்டாயம் எதிர்த்திருந்திருப்பார்'' என்று எமக்குப்படுகிறது, என ஜோர்னல் தலையங்கம் இந்த குறிப்பிடத்தக்க அறிக்கையோடு முடித்திருக்கிறது. இந்த வரிகளுக்கான பொருள் மிகத் தெளிவானது. உலகவங்கியின் தலைவராக வொல்போவிற்ச்சின் அந்தஸ்தின் மூலம், புஷ் நிர்வாகம் அந்த அமைப்பை அதன்கோணத்து ''ஜனநாயகம்'' -ஒரு நாட்டின் வளங்களையும் உழைக்கும் சக்திகளையும் அமெரிக்க நாடுகடந்த நிறுவனங்களின் சுரண்டலுக்கு வழி திறந்து விடுவதற்கான அவர்களது குறியீட்டு வார்த்தை அது- அவ்விதிமுறைகளுக்கு ஒத்துப்போகாத எந்த நாட்டிற்கு எதிராகவும் ஒரு நிதிசம்பந்தமான குண்டாந்தடியாக பயன்படுத்த முயற்சிக்கிறது. தசாப்தங்களாக இந்தப்பணிக்கான தலைமையை ஏற்றுக் கொள்வதற்குரிய ஆற்றல்களை போல் வொல்போவிற்ச், சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் சாணைதீட்டி வளர்த்துக்கொண்டிருக்கிறார். அவர் மூத்த ஜோர்ஜ் புஷ் நிர்வாகத்தில் கொள்கை பற்றிய பென்டகனின் வெளியுறவுத்துறை துணைச் அமைச்சராக பணியாற்றியபோது, "1994 முதல் 1999 வரையிலான நிதியாண்டுகளுக்கு பாதுகாப்பு திட்டமிடல் வழிகாட்டி நெறிமுறைகளை" உருவாக்குவதில் மேற்பார்வையிட்டவராவர். இந்த ஆவணம், சோவியத் ஒன்றியம் சிதைந்துவிட்ட பின்னர் வெளியிடப்பட்டது, அது வாஷிங்டனின் நடப்பு அல்லது எதிர்கால எதிரிகளை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்ட உலக மேலாதிக்கத்திற்கு ஒருதலைப்பட்சமான இராணுவவாத கொள்கையை கூறியது, அமெரிக்காவின் நலன்களுக்கு அறைகூவலாக எந்த ஒரு சர்வதேசிய அல்லது பிராந்திய வல்லரசும் எழாமல் தடுப்பது அமெரிக்கக் கொள்கையின் மத்திய குறிக்கோள் என்று அது அறிவித்தது. அந்த ஆவணம் அமெரிக்காவிலானா ஒரு தன்னிச்சையான இராணுவ நடவடிக்கை கொள்கைவழியையும் முன்கூட்டியே தாக்கும் தடுப்புபோர்களையும் முன்னெடுத்து, "இறுதியாக உலக ஒழுங்குமுறை அமெரிக்க ஆதரவால் அமையும்" என்றும், மேலும் "கூட்டு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய இயலாத நிலையில் அமெரிக்கா சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க நிலைகொள்ள வேண்டும்" அல்லது அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க நலன்களைக் காப்பதற்காக உடனடியாக தேவை என்று கருதினால், இராணுவ நடவடிக்கையில் இறங்கலாம் என்றும் குறிப்பிட்டது. ஈராக்கிற்கு எதிராக ஒரு தசாப்தத்திற்கு பின்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கை பற்றி இரத்தத்தை உறையவைக்கும் வகையில் அந்த ஆவணம் கூறியிருப்பதாவது: "பேரழிவுகரமான ஆயுதங்கள் தயாரிப்பது அல்லது பயன்படுத்துவதை தடுப்பதற்கு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமா என்ற கேள்விகளை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம்.... பல்வேறு வகைப்பட்ட வழிமுறைகள் மூலம் தாக்குவோர்களை தண்டிக்க அல்லது ஆக்கிரமிப்பாளர்களை தண்டிப்பது என்று அச்சுறுத்துவதன் மூலம் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டி வரலாம்". முதலாவது வளைகுடா போரைத் தொடர்ந்து, மூத்த ஜோர்ஜ் புஷ் சதாம் ஹூசேனை பதவியில் நீடிக்க விட்டுவிடுவது என்று முடிவு செய்ததை வொல்போவிற்ச் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் ஈராக் மீது படையெடுத்து அந்த ஈராக் தலைவரை வெளியேற்றுவதற்கு மற்றொரு வாய்ப்பிற்காக அவர் இன்னொரு பத்தாண்டு காத்திருக்க வேண்டிவந்தது. 2001 செப்டம்பர் 11 பயங்கரவாத தாக்குதலின் சில நாட்களுள் ஈராக் மீது ஒரு தாக்குதல் நடத்த வேண்டும் என்று புஷ் நிர்வாகத்திற்குள் அவர் வாதாடினார், அந்தத் திட்டம் சரியாக இரண்டாண்டுகளுக்கு முன்னரே செயல்படத் தொடங்கிவிட்டது. ஹூசேன் ஆட்சி பேரழிவுகரமான ஆயுதங்கள் வைத்திருக்கிறது, அல்கொய்தா வலைபின்னலோடு உறவு வைத்திருக்கிறது மற்றும் 9/11 தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருக்கிறது, என்ற போலியான கூற்றுக்கள் அடிப்படையில் படையெடுப்பு நடத்த வேண்டும் என்று வாதாடிய முக்கிய நிர்வாக நபர்களில் வொல்போவிற்ச் ஒருவராவர். ஓராண்டு தேடிய பின்னரும், இந்தக் கூற்றுக்கள் பொய்யானவை என்று தெளிவாகி விட்ட நேரத்தில், இத்தகைய ''குழப்பமான புலனாய்வுகள்'' ஈராக் மீது அல்லது வேறு எந்த நாட்டின் மீதும் தற்காப்புப் போர் நடத்துவதற்கு நல்ல போதுமான நியாயம்தான் என்று அவர் வலியுறுத்தி கூறினார். ("ஈராக் பற்றி வொல்போவிற்ச்: முன்-கூட்டித் தாக்கும் போருக்கு குழப்பமான புலனாய்வே போதுமானது" என்ற கட்டுரையை காண்க) உலக வங்கி பதவிக்கு வொல்போவிற்ச்சிற்கு உள்ள இதர ''தகுதிகள்" என்ன? * புதிய அமெரிக்க நூற்றாண்டு என்ற அதிதீவிர வலதுசாரி திட்டத்தை உருவாக்குவதில் அவர் நிறுவன உறுப்பினர் மற்றும் ஒரு கருத்தியல் தலைவர். 1997-ல் வெளியிடப்பட்ட அந்த திட்ட அறிக்கை ''நமது நலன்களுக்கும் மதிப்புகளுக்கும் விரோதமாக'' இருக்கின்ற நாடுகளை அடிமைப்படுத்துகின்ற வகையில் ஒரு பூகோள அமெரிக்க சாம்ராஜியத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது.அவர் ஆப்கானிஸ்தான், ஈராக், குவாண்டநாமோ வளைகுடா மற்றும் இதர இடங்களில் கைதிகளை சித்திரவதை செய்வதற்கு அங்கீகாரமளித்த பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், மற்றும் இதர சிவிலியன் மற்றும் இராணுவ அதிகாரிகள் அடங்கிய பென்டகன் தலைமையில் ஒரு முக்கிய உறுப்பினர் ஆவார். அவர் ஒரு சியோனிச கடுங்கோட்பாட்டாளர் மற்றும் பாலஸ்தீனிய மற்றும் அரபு வெகுஜனங்களின் நீண்டகால எதிரி---- பாலஸ்தீனிய போராளிகளை, ''கொலைகாரர்கள்'' என்று கண்டிப்பவர், இஸ்ரேல் அரசால் பாலஸ்தீன மக்கள் ஒடுக்கப்படுவதை பாதுகாத்து வாதிடுபவர். கொள்கை ஆய்வுகள் கழகத்தை சார்ந்த John Cavanagh, வொல்போவிற்ச் பற்றி எழுதும்போது, "இவர், பெரும்பாலான அமெரிக்கர்கள் உலகப்படத்தில் அந்த நாடு எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பதற்கு முன்னரே ஒரு ஏழைநாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த உலக வங்கித் தலைவர் றொபேர்ட் மக்னமாரா பின்பற்றிய மகத்தான பாரம்பரியத்தின் படியே செயல்படுவார்." 1967-ல் லிண்டன் ஜோன்சன் அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சராக றொபேர்ட் மக்னமாராவை உலக வங்கி தலைவராக நியமித்ததை Cavanagh குறிப்பிடுகிறார் - வியட்நாமில் நடைபெற்ற ஏகாதிபத்திய படுகொலைக்கு ''மரபு ஒழுங்கிற்கு முரணான போர்'' மற்றும் ''எதிர்க்கிளர்ச்சி'' நடவடிக்கைகளின் பிரதான சிற்பிகளில் ஒருவராக விளங்கியவராவர். ஜோன்சன், மக்னமாராவை பாதுகாப்பு துறையிலிருந்து உலக வங்கிக்கு உயர்த்தியதையும் புஷ், வொல்போவிற்ச்சை நியமித்திருப்பதையும் ஒப்பீடு செய்திருக்கிறது. இந்த ஒப்பீடுகள் திட்டவட்டமான மட்டுப்பாடுகளை கொண்டுள்ளன. மக்னமாரா தக்க காரணத்தினால் உலகம் முழுவதிலும் இருந்த அன்றைய மில்லியன் கணக்கான மக்களால் ஒரு போர் குற்றவாளி என்று கருதப்பட்டார். ஆனால், அவர் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டினர் ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கையை உள்நாட்டில் சமூக சீர்திருத்தக் கொள்கையுடன் இணைத்து இன்னும் செயல்படுத்த முயன்ற அந்த நேரத்தில் ஒரு குளிர்யுத்தகாலத்து ஜனநாயகக்கட்சியின் தாராண்மைவாதியாக இருந்தார். வியட்நாமில் அமெரிக்காவின் குற்றங்கள் இருப்பினும், மக்னமாரா உலக வங்கித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதை, அந்த அமைப்பு மிகக் கவனமாக வளர்த்து வந்த மனிதநேய கொடையாளி என்ற கற்பனை உருவிலிருந்து விலகிய ஒரு மாற்றமாகப் பார்க்கவில்லை, மற்றும் மாற்றத்தைக் குறிக்கவில்லை. மேலும், மக்னமாரா, பெரும்பாலும் நிர்வாகத்தின் வியட்நாம் போர்க்கொள்கையை விமர்சிக்கத் தொடங்கினார் என்பதற்காக அவரை ஜோன்சன் உலக வங்கியின் தலைவராக தேர்வுசெய்தார். அமெரிக்காவின் இராணுவத் தலைமையின் சில பிரிவுகள் வொல்போவிற்ச்சை வெறுத்து ஒதுக்குகின்றன என்பதில் இரகசியம் ஒன்றுமில்லை அதேசமயம், அரசாங்கத்தின் இராணுவவாத செயற்திட்டத்தின் மீது அவர் மறு ஆலோசனை செய்ய தொடங்கியிருந்தார் என்பதற்காக ''மேலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்" என்ற அறிகுறி இல்லை. |