World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : போர்த்துக்கல்

Portugal: New Socialist Party government intensifies social attacks

போர்த்துக்கல்: புதிய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் சமூக தாக்குதல்களை தீவிரப்படுத்துகிறது

By Paul Mitchell
23 March 2005

Back to screen version

போர்த்துக்கலின் புதிய பிரதமர் Jose Socrates தனது சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் செயலாட்சிக்குழுவை தேர்ந்தெடுத்திருக்கிறார், அது பெருவர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதியமைப்புகளுக்கு தேவைப்படுகின்ற தாக்குதல்களை தீவிரப்படுத்தும்.

பெப்ரவரி 20-ல் நடைபெற்ற தேர்தலில் பெட்ரோ சந்தானா லோபெஸின் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பொப்புலர் கட்சி (SDP-PP) கூட்டணி அரசாங்கத்தை அது மேற்கொண்ட பொருளாதார சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பின் காரணமாகவும், ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு தெரிவித்ததாலும், தூக்கி எறியப்பட்டதை அடுத்து சோசலிஸ்ட் கட்சி பதவியேற்றது. வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர்தான் போர்த்துக்கலின் சமூக ஜனநாயகக் கட்சி - பொப்புலர் கட்சி அரசாங்கம் அனுப்பியிருந்த 128 பேரைக் கொண்ட குடியரசு தேசிய இராணுவம் ஈராக்கிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கை அரசாங்கத்தை காப்பாற்ற முடியவில்லை. 2002-ல் 49 சதவீத வாக்குகளை பெற்றிருந்த கூட்டணி தற்போது 36 சதவீத வாக்குகளை மட்டுமே பெறுகின்ற அளவிற்கு சரிந்தது. அதற்குப் பின்னர் அதிதீவிர வலதுசாரி பொப்புலர் கட்சித் தலைவர் பாலோ போர்ட்டாஸ் (Paulo Portas) பின்னர் ராஜினாமா செய்தார்.

2002-ல் 38 சதவீத வாக்குகளை பெற்றிருந்த சோசலிஸ்ட் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டது. 1974-ல் Salazar-Caetano சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பின்னர், முதல் தடவையாக 226 உறுப்பினர் கொண்ட போர்த்துக்கல் நாடாளுமன்றத்தில் 121 உறுப்பினர்களை வென்றெடுத்து சோசலிஸ்ட் கட்சி ஒரு அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கிறது.

இடதுசாரி அணி, "இன்னொரு போர்த்துக்கலுக்கான சாத்தியக் கூறு உண்டு" என்ற முழக்கத்தின் அடிப்படையில் பிரச்சாரம் செய்து 365,000 வாக்குகளைப் பெற்றது, இது 2002-ல் பெற்ற 2.8 சதவீத வாக்குகளிலிருந்து 6.4 சதவீதமாக அதிகரித்துள்ளது

இடதுசாரி அணியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எட்டு உறுப்பினர்களில் லிஸ்பனில் Francisco Louca-வும், ஓப்பர்டோவில் Alda Macedo-வும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், இது பப்லோவாத ஐக்கிய செயலகத்தோடு இணைந்திருக்கிறது ----இந்த குழு, ட்ரொட்ஸ்கிசத்தை கடைப்பிடிப்பதாக கூறிக்கொண்டே முன்னாள் ஸ்ராலினிச கட்சிகளுக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் ஒரு அரசியல் முகமூடியை வழங்கிய நீண்ட நிலைச்சான்றைக் கொண்டதாகும். இந்த ஐக்கிய செயலக உறுப்பினர்கள் பலர் தற்போது போலி இடதுசாரி முதலாளித்துவ அரசாங்கங்களில் சர்வதேச அளவில் இடம்பெற்றிருக்கின்றனர் அல்லது அவற்றுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர், அவை தொழிலாளர் வர்க்கத்தின் மீது பெரிய தாக்குதல்களை முடுக்கி விட்டிருக்கின்றன.

ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சியும் சுற்றுச்சூழலியல் கட்சியும் இடம்பெற்றிருக்கின்றன, அது 432,000 வாக்குகளைப் பெற்றிருக்கிறது. (அக்கூட்டணி 2002-ல் 7 சதவீத வாக்குகளை பெற்றது, தற்போது 7.6 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது) மற்றும் தற்போது அதற்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

புதிய சோசலிஸ்ட் கட்சி நிர்வாகம், நெருக்கடியை தீர்க்க வந்த ஒரு அரசாங்கம் என்ற உறுதிமொழியை தந்திருக்கிறது. சமூக ஜனநாயகக் கட்சி- பொப்புலர் கட்சிக்கு எதிராக பொதுமக்களது ஆத்திரம் எழுந்து திரண்டு வந்ததால் பயனடைந்துள்ள இது மிகப்பெரும்பாலான போர்த்துக்கல் மக்கள் பொருளாதார சமூக மற்றும் வெளியுறவுக் கொள்கை, இடதுசாரி பக்கம் திரும்ப வேண்டுமென்று கோரி வருகின்ற சூழ்நிலைகளில் இந்த கூட்டணி அரசாங்கம் பெருவர்த்தக நிறுவனங்களின் கட்டளைகளுக்கேற்ப செயல்படுமானால் அது கடுமையான சிக்கல்களை இந்தக் கூட்டணி அரசாங்கத்திற்கு உருவாக்கும்.

சமூக ஜனநாயகக் கட்சி பிரதமர் Jose Manuel Durao Barroso ஐரோப்பிய கமிஷன் தலைவராக பதவியில் அமர்வதை ஒட்டி சென்ற ஆண்டு அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து தேர்தல்களுக்கு அழைப்பு விடப்பட்டன.

அந்த நேரத்தில், சோசலிஸ்ட் கட்சி தலைவராகவும் இருந்த ஜனாதிபதி Jorge Sampaio, சமூக ஜனநாயகக் கட்சி-பொப்புலர் கட்சி கூட்டணி அதன் புதிய தலைவர் சந்தானா லோப்பெஸ் தலைமையில் நீடிக்க சம்மதித்தார். என்றாலும், கல்வியாண்டு ஒருமாதம் தாமதமாக தொடங்கியதும், கடன் தர நிர்ணய நிறுவனமான Standard and Poor போர்ச்சுகலின் கடன்பெறும் தகுதியை குறைத்து மதிப்பிட்டதும் உள்பட பல்வேறு நெருக்கடிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வந்ததையொட்டி, லோப்பெஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்தது

பூகோளமயமாக்கலின் தாக்கம்

ஐரோப்பாவின் பரம ஏழை நாடுகளில் ஒன்றான போத்துக்கலானது, நெசவு மற்றும் காலணி துறைகளில் மலிவு ஊதிய தொழிலாளர் வளங்கள் கிடைக்கும் பகுதியாகும் (சராசரி மாத ஊதியம் 750 யூரோக்கள்). ஐரோப்பிய ஒன்றியத்திலேயே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையில் மிக விரிவான இடைவெளி உள்ள நாடு இதுவாகும். ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவாக்கப்பட்டிருப்பதாலும் சீனாவின் அறைகூவலை சமாளிக்க வேண்டியிருப்பதாலும் அண்மை ஆண்டுகளில் போர்த்துக்கல், முதலீடுகள் மற்றும் மானியங்களில் மிகப்பெருமளவில் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

2004 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய உறுப்பினர் அரசுகள் சேருவதற்கு முன்னரே கூட முன்னாள் கிழக்கு அணி நாடுகளில் நிலவுகின்ற தொழிலாளர் செலவின குறைப்புகளையும் வரிவிதிப்பு குறைக்கப்பட்டிருப்பதையும் சாதகமாக்கிக்கொள்ள கம்பெனிகள் போர்த்துக்கலில் இருந்து வெளியேறின. அத்துடன், போர்த்துக்கலின் விவசாயத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிவந்த மானியங்களை புதிய உறுப்பினர் அரசுகளுக்கு திருப்பிவிடப்பட்டன.

2004-ல், யூரோ நாணய மண்டலத்திலேயே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த ஒரே நாடு இதுவாகும். அந்த ஆண்டு, கடந்த ஏழு ஆண்டுகளில் கண்டிராத அளவிற்கு வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை 7.1 சதவீதமாக உயர்ந்தது, கம்பெனிகள் திவாலாகும் எண்ணிக்கை 31 சதவீதமாக உயர்ந்தது. சமூக ஜனநாயகக் கட்சி-பொப்புலர் கட்சியின் மூன்றாண்டு ஆட்சி காலத்தில், பிரதானமாக தொழிற்துறை மற்றும் விவசாயத்தில் 150,000 பேர் வேலையிழந்தனர்.

"போட்டி போடும் திறனில் கணிசமான இழப்புகள்" ஏற்பட்டிருப்பதையும் "உண்மையான முதலீட்டில் பெரும் வீழ்ச்சி" கண்டிருப்பதையும் மாற்றுவதற்கு போர்த்துக்கல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சென்ற ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (IMF) கேட்டுக்கொண்டது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் "நிரந்தரமாக செலவினங்களை குறைப்பதற்கு" பதிலாக அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்தது போன்ற "ஒரு சில நடவடிக்கைகளை" மட்டுமே எடுத்துவிட்டு நிறுத்திக்கொண்டு விட்டதாக அது விமர்சித்தது மற்றும் பொது சேவைகளை தனியார் மயமாக்கலும் ''ஓய்வூதிய சீர்திருத்தம் மூலம்-----ஓய்வூதியம் பெறுவோரின் அளவையும், தொகையையும் குறைப்பதும் உள்பட மேலும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது.

''சமூக பங்குதாரர்கள் [வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன்] நெருக்கமாக ஒத்துழைத்ததன்" விளைவாக ஊதிய விகிதங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியிருந்தாலும், "ஊதியக் கட்டுப்பாட்டின் பிரதான பங்கை" அங்கீகரிக்க வேண்டியது அவசியமென்றும், தொழிலாளர்களை நியமிப்பதிலும் அவர்களை நீக்குவதிலும் நிலவுகின்ற கட்டுப்பாடுகளை தளர்த்துதலுக்கான வளையக்கூடிய தொழிலாளர் சந்தை அதிகரிக்க வேண்டுமென்றும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியது.

அத்தகைய கொள்கைகளை செயல்படுத்துவதாக சாக்ரடிஸ் உறுதியளித்திருக்கிறார். பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயி சப்பர்டோ ஆகியோரை முன்மாதிரியாக கொண்டு சோசலிஸ்ட் கட்சியை "நவீன இடதின்'' ஓர் அங்கமாக நிலைப்படுத்த முயன்று வருகிறார். அதாவது கடந்த கால சமூக சீர்திருத்தவாத தொடர்பு அனைத்தையும் கைவிட்டது என்றே பொருளாகும்.

போர்த்துக்கல் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் லுட்ஜெரோ மார்க்கஸ் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக அவரது உறுதிப்பாட்டை வரவேற்றார், சோசலிஸ்ட் கட்சி பெரும்பான்மை பெற்றிருப்பதன் பொருள் என்னவென்றால், அக்கட்சி "நாம் அனைவரையும் சம்மந்தப்படுத்தியுள்ள பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு தேவைப்படும் நடவடிக்கைகளை அவர் செயல்படுத்த இயலும் மற்றும் நாம் அவற்றை விரைவாக தீர்த்தாக வேண்டும்" என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில் சாக்ரடீஸ் தான் பதவிக்கு வந்தது உழைக்கும் மக்களின் ஒரு கணிசமான இடதுசாரி பக்கம் நோக்கிய நகர்வினால்தான் என்பதை நன்றாக அறிவார் மற்றும் அவர் வறுமையை குறைப்பதாகவும், 150,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் மக்களைக் கவரும் வகையில் வாய்வீச்சு உறுதிமொழிகளை வழங்கியிருக்கிறார். சிவில் சேவையில் 75,000 பணிகளை வெட்டுவதாக அவர் உறுதியளித்திருப்பதன் காரணமாக உண்மையில் அவரது முதல் நடவடிக்கையே வேலையில்லாத நிலையை பெருக்குவதாக அமைந்திருக்கிறது.

அவர் போர்த்துக்கலின் கருக்கலைப்பு சட்டங்களையும் திருத்துவதாக உறுதியளித்திருக்கிறார், கருவில் சில மரபியல் அணு குறைபாடு இருக்குமானால் அல்லது கற்பழிக்கப்பட்டது நிரூபிக்கப்படுமானால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் தற்போது கருக்கலைப்பு அனுமதிக்கப்படுகிறது. என்றாலும் இந்தப் பிரச்சனையில் ஒரு பொதுக் கருத்தெடுப்பு 2006 வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இது "இதற்கான தேதிகளை நிர்ணயிப்பதற்கான தருணம் வந்துவிடவில்லை; நாடாளுமன்றத்தில் முதல் பாதிக்கான அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது, அதுவே மிகுந்த சுமையைக் கொண்டது" என்பதனால் ஆகும் என்று சோசலிஸ்ட் கட்சி பேச்சாளர் Guilherme d'Oliveira Martins தெரிவித்தார்.

சாக்ரடீஸ் தற்போது 16 உறுப்பினர் அமைச்சரவையை நியமித்திருக்கிறார், "நமது ஜனநாயக அமைப்புக்கள், பொருளாதாரம் மற்றும் நமது நாட்டின் மீது நம்பகத்தன்மையை மீட்டுத்தரக்கூடிய வல்லமையும் அதற்குரிய தகுதியும் படைத்தவர்களை" கொண்டது என்பதை இந்த அரசாங்கம் நிரூபிக்கும்" என்று அவர் கூறினார்.

நிதியமைச்சகம் போர்ச்சுக்கல் மத்திய வங்கியின் முன்னாள் துணை கவர்னரும், லிஸ்பன் புதிய பல்கலைக்கழக பொருளாதாரத்துறை டீனுமான லூயிஸ் கம்பாஸ் ஈகுன்ஹாவிற்கு தரப்பட்டிருக்கிறது. அவர் இதர அமைச்சகங்களின் செலவினங்களை இரத்துச் செய்கின்ற அதிகாரம் படைத்தவர். போர்ச்சுக்கலின் மத்திய வங்கி Banco Espirito Santo நிர்வாகக் குழுவில் இடம் பெற்றிருக்கும் மேனுவல் பின்ஹோ தேர்தல் பிரச்சாரத்தின் போது, கட்சியின் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான பேச்சாளராக பணியாற்றி வந்தவர் தற்போது பொருளாதாரம் மற்றும் புதுப்பித்தல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஈராக் போருக்கு எதிரான பேரணிகளில் பங்கெடுத்துக் கொண்டவரும், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ்ஷை ஹிட்லரோடு ஒப்பிட்டுப் பேசியவருமான டியாகோ பெரிடாஸ்டு அமரால் போர்ச்சுக்கலின் வெளியுறவு அமைச்சராவார்.

அவர் வலதுசாரி பின்னணியைக் கொண்டவர். 1975-ல் சமூக ஜனநாயக மையத்தை (CDS) உருவாக்கியவர்களில் ஒருவர், அந்த வலதுசாரி கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி சர்வாதிகாரத்தோடு சம்மந்தப்பட்டிருந்த பல பாசிஸ்டுகளை தன்பக்கம் ஈர்த்துக்கொண்டது. சமூக ஜனநாயக மையம் தனது பெயரை பொப்புலர் கட்சி என்று மாற்றிக்கொண்டதும், ஐரோப்பிய ஒருங்கிணைப்பிற்கு அக்கட்சி பெருமளவில் எதிர்ப்பு காட்டி வருவதாக புகார் கூறி அந்தக் கட்சியை விட்டு விலகினார்.

தற்போது தங்களது முன்னாள் தலைவர் புதிய அரசாங்கத்தில் ''இடம் பெற்றிருப்பது ஆபத்தானது'', அவரது "அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைவழி" வாஷிங்டனுடன் பாரம்பரியமாக போர்த்துக்கல் நிலைநாட்டி வரும் நெருக்கமான உறவுகளை கீழறுத்துவிடும் என்று பொப்புலர் கட்சியின் நடப்பு தலைமை வர்ணித்துள்ளது. சாக்ரடீஸ் உடனடியாக அதுபோன்ற எண்ணங்களை மாற்றுகின்ற வகையில், புஷ்ஷிற்கு உறுதிமொழி அளித்திருப்பதாக கூறப்படுகிறது தனது புதிய அரசாங்கம் நேட்டோவில் போர்த்துக்கலின் பங்களிப்பை வலுப்படுத்தும் என்றும் அமெரிக்காவுடன் வலுவான உறவுகளை நிலைநாட்டும் என்றும் புஷ்ஷிற்கு உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved