WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraq's national assembly shows its
subservience to Washington
ஈராக் தேசிய நாடாளுமன்றம் வாஷிங்டனுக்கு தனது அடிமைநிலையைக் காட்டுகிறது
By Peter Symonds
21 March 2005
Back to screen version
"ஜனநாயகம்" பற்றிய அனைத்து வாய் வீச்சுக்களுக்கும் அப்பால், சென்ற புதன்கிழமையன்று
நடந்த ஈராக் தேசிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு அந்த அங்கம்
கீழ்படிந்து செல்லும் தன்மையையும், அதன் கையாலாகாத்தனத்தையும் மற்றும் அதன் ஆழமாக வேரூன்றிவிட்ட கன்னைவாத
வேறுபாடுகளையும் மறைக்க முடியவில்லை.
பிரிட்டீஷ் ராஜியத்தின் கீழ்கூட, இந்திய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்கள் சென்ற நூற்றாண்டில்
குறைந்தபட்ச பிரதிநிதித்துவ அரங்குகளை கூட தங்களது காலனித்துவ எஜமானர்களை சவால்செய்வதற்கு பயன்படுத்தினர்.
சென்றவார பேரவையில், பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் என்ற வகையில், பதவியேறிக்கொண்ட நேரத்தில் கூட எதிர்ப்பு
அல்லது கண்டனத்திற்கான ஒரு சமிக்கை கூட இல்லை, அனைத்துமே அமெரிக்க படையெடுப்பை ஆதரித்தன.
வாஷிங்டனில், ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், அந்தக் கூட்டத்தொடரை அரசியலமைப்பு நிகழ்ச்சிபோக்கில்
ஒரு "பிரகாசமான தருணம்" என்று வர்ணித்தார். பாக்தாத்தில், வாஷிங்டனின் அரசியல் கைப்பாவைகள் அதே நிலைப்பாட்டை
கிளிப்பிள்ளைகள் போல் எடுத்துரைத்தனர்.
அமெரிக்கா நியமித்த இடைக்கால பிரதமர் பதவியிலிருந்து இறங்கவிருக்கும் அயத் அல்லாவி,
நாடு "ஜனநாயகம், கெளரவம் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு புதிய ஆட்சியின் தலைவாசலில் நின்று கொண்டிருப்பதாக"
பிரகடனப்படுத்தினார். அடுத்த பிரதமராக வரவிருப்பதாக கருதப்படும் தாவா கட்சி தலைவர் இப்ராஹீம் அல்-ஜாஃபரி
"இந்நாள் எல்லா ஈராக்கியருக்கும் ஒரு புது பிறவி எடுத்த நாளை குறிப்பதாகும்" என்று அறிவித்தார்.
ஆனால் அந்த கூட்டம் நடைபெற்ற சூழ்நிலைகள் வேறுவிதமாக கூறுகின்றன. அமெரிக்க ஆக்கிரமிப்பின்
தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள----பசுமை மண்டலத்தில் கடுமையான பாதுகாப்பளிக்கப்பட்டிருந்த மாநாட்டு மையத்தில்
அந்த கூட்டத்தொடரை நடத்த வேண்டியிருந்தது. மத்திய பாக்தாத் பகுதி முழுவதும் போலீஸார் சோதனைச்
சாவடிகளையும் ஒரு பாதுகாப்பு வளையத்தையும் உருவாக்கியிருந்தனர். வாகனங்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பிரதிநிதிகள் அந்த மண்டபத்திற்கு நடந்து செல்லவேண்டி இருந்ததுடன், அவர்களது உடல்கள் சோதனையிடப்பட்டன. அமெரிக்க
Apache ஹெலிகாப்டர்
குண்டு வீச்சு விமானங்கள் தலைக்குமேல் பறந்தன. இவ்வளவு கடுமையான பாதுகாப்புக்களுக்கிடையில், நாடாளுமன்றம்
கூடவிருக்கையில் பச்சை மண்டலத்தில் பல வெடி குண்டுகள் வந்து விழுந்தன.
அடுத்து வரவிருக்கின்ற அரசாங்கம் அல்லாவி ஆட்சியைப்போன்று இராணுவரீதியாகவும்,
அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அமெரிக்காவையே சார்ந்திருக்கும். முன்னாள் அமெரிக்க ஆக்கிரமிப்பு
தலைவர் போல் பிரேமர் பிறப்பித்த எல்லா கட்டளைகள் மற்றும் நெறிமுறைகளுக்கும் இடைக்கால நிர்வாகச் சட்டம் (TAL)
உட்பட, அனைத்து சட்டங்களுக்கும் அது கட்டுப்பட்டாக வேண்டும், தேர்தல்களுக்கும் ஒரு புதிய அரசியல் சட்டத்திற்குமான
கட்டமைப்பை அது ஸ்தாபிக்கிறது. ஈராக்கின் எதிர்காலம் பற்றிய அனைத்து முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளும்
பாக்தாத்தில் அல்ல மாறாக வாஷிங்டனில் எடுக்கப்படும்.
பொதுமக்களது வாக்கெடுப்பு நடத்தக்கோரி, அயத்துல்லாஹ் அலிசிஸ்தானியின் ஷியைட்
ஆதரவாளர்கள் வெகுஜன பேரணிகளை நடத்தியதை தொடர்ந்துதான் புஷ் நிர்வாகம் தேர்தல்களை நடத்த சம்மதித்தது.
ஜனவரி 30-ல் ஒரு முற்றுகையிடப்பட்ட நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களில் சுமார் 20 சதவீதமாக உள்ள
சுன்னிகளில் மிகப்பெரும்பாலான வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்தனர், பதிவு செய்யப்பட்ட ஒட்டுமொத்த
வாக்காளர்களில் 57 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர்.
ஐக்கிய ஈராக்கிய கூட்டணி (UIA),
மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதமாகவுள்ள ஷியைட்டை தளமாகக் கொண்டவை, மொத்த இடங்களில் ஒரு குறுகிய
பெரும்பான்மையை பெற்றிருக்கிறது. அதன் பிரதான இன்றியமையாத பிரிவுகளான----தாவாக் கட்சியும் ஈராக் இஸ்லாமிய
புரட்சி சுப்ரீம் கவுன்சிலும் (SCIRI)----ஈராக்
படையெடுப்பை ஆதரித்தாலும், UIA
ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதிமொழி தந்து, அமெரிக்க-எதிர்ப்புணர்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டன.
அமெரிக்கா ஈராக்கில் இருப்பதற்கு எந்தளவிற்கு குறுகலான அடித்தள ஆதரவு உள்ளது
என்பதை வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்---பதவியிலுள்ள அல்லாவி சிறிதளவு வாக்குகள் பெற்றமையால்
கோடிட்டுக் காட்டப்படுகின்றது. UIA-வின்
இஸ்லாமிய வேலைத்திட்டத்திற்கு எதிராகவும், ஈரானின் தொடர்புகளுக்கு எதிராகவும் ஒரு தீவிர பிரச்சாரத்தை செய்தாலும்,
அவரது ஈராக் லிஸ்ட் 14 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கிறது-----அதாவது மொத்த மக்களில் 7 சதவீதம்
மட்டுமே ஆதரித்தனர். தற்போதைய கட்சியின் தலைவரான
Ghazi al-Yawar 2 சதவீதத்திற்கும் குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறார்.
குர்திஷ் கூட்டணி (KA),
குர்திஸ்தான் தேசபக்த சங்கம் (PUK)
மற்றும் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியையும் உள்ளடக்கியது, 26 சதவீத வாக்குகளைப் பெற்றது, பிராந்திய தன்னாட்சி
உரிமை கிடைப்பதன் மூலம் குர்துகளின் வறுமைக்கும், தண்டனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்ற ஒரு பிரமையை
வளர்த்து இந்த அளவிற்கு வாக்குகளைப் பெற்றது.
அமெரிக்கப் படையெடுப்பினால் நிகழ்ந்த சமூக பேரழிவிற்கு இந்த அரசியல் கட்சிகள்
எதுவும் எந்தத் தீர்வையும் வைத்திருக்கவில்லை. படையெடுப்பு நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் மிகப்பெரும்பாலான
ஈராக்கியருக்கு வேலை கிடைக்கவில்லை மற்றும் பலருக்கு வாழ்வின் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்கவில்லை.
நாட்டின் உள்கட்டமைப்பு---- மின்சாரம், தண்ணீர், கழிப்பிடம்-----அதேபோல் சுகாதாரம் மற்றும் கல்வி
போன்றவை பொறிந்த நிலையில் இருக்கின்றன.
ஈராக் ஆளும் செல்வந்தத் தட்டில் இடம் பெற்றுள்ள போட்டிக் குழுக்கள் ஒவ்வொன்றும் குறுங்குழு
மற்றும் இன வேறுபாடுகளை கிளறிவிட்டுக் கொண்டிருக்கின்றன, முதலாவதாக, ஆக்கிரமிப்பால், வாழ்க்கைத் தரம்
சிதைந்து வருவதால், பொதுமக்களது கோப மற்றும் விரோதப்போக்கை திசை திருப்புவதாகவும், இரண்டாவதாக,
தங்களது சொந்த சலுகைமிக்க நிலையை பெருக்கிக் கொள்வதற்காகவும்தான்.
ஷியைட் அரசியல் மற்றும் மத ஸ்தாபனங்களில் மேலாதிக்கம் செய்யும் பகுதிகள்
UIA-வை மதிப்பதுடன்
மற்றும் முதல் தடவையாக தங்களது அரசு கட்டுப்பாட்டைப் பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக ஒரு இஸ்லாமிய அரசுக்காக
கோருகின்றன. என்றாலும், வடக்கு நகரான கிர்குக்கு மற்றும் அருகாமையிலுள்ள எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தை
உள்ளடக்கும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு குர்திஸ் பிராந்தியத்தை வலுப்படுத்த விரும்பும் குர்திஸ்தான் கூட்டணியுடன்
அவை கடுமையான மோதலுக்கு வந்துள்ளன.
புதிய அரசாங்கம் எதுவுமில்லை
சென்ற புதன்கிழமையன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின் மிகவும் பளிச்சிடும் அம்சம்
என்னவென்றால், ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய முதல் நடவடிக்கையைக் கூட -ஒரு புதிய ஜனாதிபதியையும்
இரண்டு துணை ஜனாதிபதிகளையும் நியமிக்கும் நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதுதான். ஏழு வாரங்கள் நடந்த இரகசிய பேரங்களுக்குப்
பின்னரும், UIA-வும்
KA-வும் எந்த
உடன்படிக்கையும் இறுதியாக்க தவறிவிட்டன. அந்தக் கூட்டத்தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது, 95
நிமிடங்கள் நடைபெற்றன, சம்பிரதாய பதவி ஏற்பை அடுத்து பயனற்ற உரைகள் இடம்பெற்றன. கட்சிகளிடையே நாடாளுமன்ற
நிரந்தர சபாநாயகரை நியமிப்பதில் கூட உடன்பாடு ஏற்படவில்லை.
இடைக்கால நிர்வாக சட்டத்தின்படி ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதிகளை நியமிப்பதற்கு
மூன்றில், இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுவதால், இடைவிடாத பேச்சு வார்த்தைகள் நடத்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டிருக்கிறது. அப்படித் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிரதமரை தேர்வு செய்வார்கள். பதவியேற்பதற்கு முன்,
பிரதமரும் அவரது மந்திரி சபையும் நாடாளுமன்றத்தின் ஒரு சாதாரண பெரும்பான்மையை பெறுவது போதுமானதாகும்.
நாடாளுமன்றத்தில் ஷியைட்டுகளது பெரும்பான்மை ஏற்படும்போது தங்களுக்கு ஒரு பயனுள்ள இரத்து அதிகாரம்
வேண்டுமென்று குர்திஸ் மற்றும் சுன்னி அரசியல்வாதிகள் வலியுறுத்தி வந்ததால் இந்த சிக்கலான மறைமுக இயங்குமுறை
உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, UIA
விற்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு KA-ன்
ஆதரவு அல்லது சிறிய கட்சிகள் இணைந்ததொரு ஆதரவு தேவைப்படுகிறது.
இந்த கடினங்களை புஷ் நிர்வாகமும் சர்வதேச ஊடகங்களும் அமுக்கி வாசிக்க முயன்றாலும்
UIA-விற்கும்
KA-விற்கும்
இடையிலான பேச்சு வார்த்தைகள் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பானதில் சேற்றுக்குள் அமிழ்த்துவைக்கப்பட்டுள்ளன.
குர்திஸ் அரசியல்வாதிகள் முழு சுதந்திர கோரிக்கையை நிறுத்தியுள்ளனரே தவிர, சதாம் ஹூசேனின் ஆட்சியின் கீழ்
இராணுவம் வடக்கு மண்டலத்தில் ''பறப்பதற்கு தடை மண்டலம்'' என்று அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் போர்
விமானங்கள் பாதுகாப்பளித்த நிலையில் தாங்கள் அனுபவித்து வந்த கணிசமான உண்மையான தன்னாட்சி உரிமையை
நிலைநாட்ட விரும்புகின்றனர்.
வடக்கு குர்திஸ் பிராந்தியத்தில் கிர்குக்கை சேர்த்துக்கொள்ள விரும்புவதுடன், குர்திஸ்தான்
கூட்டணி காவல்துறை, நிதித்துறை மற்றும் குர்திஸ் படைக்குழுவைப் பராமரிக்கும் உரிமை உட்பட கணிசமான உள்ளூர்
அதிகாரங்களைக் கோருகிறது. அரசாங்கத்தில் தனது குரல் வலுவாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக,
KA ஜனாதிபதி
பதவியையும் வெளிவிவகாரங்கள் போன்ற அமைச்சர் பதவிகளையும் கோருகிறது.
தேசிய நாடாளுமன்றம் புதியதொரு அரசியல் சட்டத்தை இயற்றி அதை மக்களது பொது
வாக்கெடுப்பு முடிவிற்கு விட்டு, அடுத்த ஜனவரியில் தேசிய தேர்தல்களுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படும்வரை,
குர்திஸ் பிரச்சனைகளில் முடிவு செய்வதை தாமதப்படுத்த UIA
விரும்புகிறது. இடைக்கால நிர்வாகச் சட்டத்தில் குர்திஸ் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு உறுதி மொழிகள்
வழங்கப்பட்டிருப்பதை எதிர்க்கின்ற ஷியைட் அரசியல்வாதிகள் ஒரு புதிய அரசியல் சட்டத்தின்கீழ் நடைபெறும் புதிய தேசிய
தேர்தல்கள் தங்களை வலுவான நிலைக்கு கொண்டுவரும் என்று நம்புகின்றனர். ஒரு சமரசம் ஒரு அரசாங்கம்
அமைக்கப்பட வகைசெய்யும் என்றாலும்கூட, அதே தகராறுகள் ஒரு அரசியல் சட்டத்தை எழுதும்போதும் உருவாகும்.
இந்த பிரச்சனைகள் ஈராக்கிற்கு மட்டுமல்ல, இந்த பிராந்தியம் ஒட்டுமொத்தமாகவும்
வெடித்து சிதறும் தன்மை கொண்டவை. UIA-விற்கும்
KA-விற்கும்
இடையில் நிலவுகின்ற கூர்மையான கருத்து வேறுபாடுகள் கசப்பான குறுங்குழு மற்றும் இன மோதல்கள் உள்நாட்டுப்
போராக மாறுவதற்குரிய வித்துக்களைக் கொண்டிருக்கின்றன. குர்திஸ் தன்னாட்சி உரிமை தொடர்பாக எந்தவித
கணிசமான சலுகைகள் காட்டப்பட்டாலும் அவை ஈராக்கின் பக்கத்து நாடுகளான----கணிசமான குர்திஸ் சிறுபான்மையினர்
கொண்ட-----ஈரான், துருக்கி, மற்றும் சிரியாவில் அரசியல் சிக்கல்களுக்கு வழி செய்துவிடும். கிர்குக்கும் அதன்
எண்ணெய் கிணறுகளும் தன்னாட்சி உரிமை கொண்ட குர்து பிராந்தியத்தில் சேர்க்கப்படுமானால் இராணுவ நடவடிக்கையில்
இறங்கப்போவதாக ஏற்கனவே துருக்கி அச்சுறுத்தியுள்ளது.
ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நீண்ட காலதாமதம் ஏற்பட்டு வருவது மேலும் மனமுறிவையும்
விரோதப்போக்கையும் வளர்த்துக்கொண்டிருக்கிறது. சாதாரண ஈராக் மக்கள் பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கும்போது
தங்களது கவலைகளை அடுத்த அரசாங்கம் கவனிக்குமா என்பதில் ஆழ்ந்த ஐயுறவாதத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு கொல்லரான ஹத்திம் அலி, நியூயோர்க் டைம்ஸிடம் தெரிவித்தார்: "எந்த
அரசாங்கமும் அமைக்கப்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. மற்றும் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த
நிலைக்கு எந்தத் தீர்வையும் அவர்கள் காணமுடியாது.... இந்தப் பகுதியில் (தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையை
காட்டி) உள்ள நிலவரத்தை ஜனாதிபதியும் அவரது மந்திரி சபையும் எந்தவகையிலும் தீர்த்து வைக்கமாட்டார்கள். அவர்கள்
தங்களது சொந்த நலன்களிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்."
உதிரி பாகங்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்ற பாசிம் அப்துல் ஆஹாத் வாஷிங்டன்
போஸ்டிடம் உரத்துக் கூவினார்: "மற்ற நாகரீக நாடுகளைப்போல் எங்களுக்கு ஏன் 24 மணி நேரமும்
மின்சாரம் கிடைக்கவில்லை? எங்களது சொந்த வீடுகளில் நாங்கள் ஏன் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை? அவர்கள்
தங்களது நலன்களை ஒதுக்கி வைத்து விட்டு செயல்படுவார்களானால், அப்போது எங்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால்
அவர்கள் தங்களைப்பற்றியே கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்களானால், அதன் பிறகு எங்களுக்கு எதுவும் கிடைக்குமென்று
நான் நம்பிக்கை கொள்ளவில்லை."
லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்ற்கு பேட்டியளித்த 35 வயது அவாத் அபித் சுபைதா, அமெரிக்க
படையெடுப்பை ஆதரித்தவர்களை பற்றி புண்படுத்தும் வகையில் குறிப்பிட்டார்: "எங்களுக்கு எப்போதுமே உண்மையான
அரசாங்கம் இருந்ததில்லை என்பது உங்களுக்கு தெரியும், இப்போது இங்கிருப்பது உண்மையான அரசாங்கம் அல்ல, இவர்கள்
எல்லாம் அமெரிக்க டாங்கி மீது பயணம் செய்து இங்கு வந்தவர்கள். இதற்கு முன்னர் அவர்கள் ஒன்றும் செய்ததில்லை,
இனி எதிர்காலத்திலும் அவர்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை. உண்மையில் யார் இங்கு பொறுப்பில் இருக்கிறார்கள்
அல்லது ஒரு அரசாங்கம் அமைக்கப்படுமா என்பது எங்களுக்கு தெரியாது" என்று அவர் கூறினார்.
தற்போது அல்லாவி ஒரு காபந்து பிரதமராக அதிகாரத்தில் இருக்கிறார் மற்றும்
KA மற்றும்
UIA விலிருந்து
உடைந்து வரும் குழுக்களை சேர்த்து ஒரு ஆளும் கூட்டணியை உருவாக்க முடியும் என்ற சாத்தியக் கூறை அவர் தள்ளிவிடவில்லை.
UIA விற்கும்
குர்திஸ்தான் கூட்டணிக்கும் இடையில் உடன்பாட்டு பேச்சு வார்த்தைகள் இழுத்தடித்துக்கொண்டே செல்லுமானால், அல்லாவி
முயற்சிகளுக்கு அதிக இடம் கிடைக்கும் மற்றும் UIA
யின் பிளவுகளை பயன்படுத்திக்கொள்வார். அவர் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடுவதற்கு
புஷ் நிர்வாகத்தின் ஆதரவை நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்.
இதுவரை KA-விற்கும்
UIA-விற்கும்
இடையில் எந்த பேரமும் உருவாகவில்லை. வியாழனன்று நாடாளுமன்றத்தின் ஒரு புதிய கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது,
ஆனால் அந்தக் கூட்டம் நடந்தாலும் கூட, முந்திய வாரத்தில் நடந்த கூட்டத்தை விடவும் எந்த வகையிலும் வெற்றிகரமாக
இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. |