:
ஆசியா
:
சீனா
New Year for China's rural migrant
workers
சீனாவில் கிராம புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புத்தாண்டு
By John Chan
22 February 2005
Back to screen version
இந்த ஆண்டு சீன புத்தாண்டின் அதிகாரபூர்வமான கொண்டாட்டங்களின்போது, "சந்தைச்
சீர்திருத்தம் மற்றும் அபிவிருத்தியினால் உருவாக்கப்பட்டுள்ள சமூக செல்வத்தை அனைத்து மக்களும் பகிர்ந்து கொள்ளட்டும்"
என்று பிரதமர் வென் ஜியாபோ (Wen Jiabao)
பெய்ஜிங்கில் உயர் அதிகாரத்துவ தட்டினர் கலந்து கொண்ட கூட்டத்தில் போலியான பிரகடனத்தை வெளியிட்டார்.
மத்திய பெய்ஜிங்கிலுள்ள பெரிய மண்டபத்தில் கூடியிருந்த "கம்யூனிஸ்ட்டுக்கள்'' எவரும் அந்த
கருத்தை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த மண்டபத்தில் நிறைந்திருந்த பணக்கார மற்றும் செல்வாக்கு மிக்க
ஆளும் செல்வந்தத் தட்டினர், சீனாவில் வறுமையில் தள்ளப்பட்ட வெகுஜனங்களோடு எவரும் தங்களது செல்வத்தை பகிர்ந்து
கொள்ள விரும்பவில்லை. அதிகாரபூர்வமான Xinhua
செய்தி நிறுவனம் அந்தக் காட்சியை வர்ணித்திருப்பதைப்போல்: "அந்த மண்டபத்தில் விருந்து அறை மலர்ந்த பூக்களாலும்
கனிதரும் மரங்களாலும் அலங்கரிக்கப்பட்டும், அங்கு மகிழ்ச்சி ஆரவாரக் களிப்பும் நிலவின".
1949 புரட்சிக்கு முன்னர்,
Nianguan என்று அறியப்பட்ட நிகழ்வில்
---ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில்
விவசாயிகள் வாடகை குத்தகையை செலுத்த முடியாமல் திவலாகி கடனில் மூழ்கிவிடுவது கணக்கு பார்க்கப்பட்டது---
அப்போது அந்த புத்தாண்டு தினமே "பழைய சீனாவின்" ஒரு சமூக தீங்கான நாள் என்று கருதப்பட்டது. தற்போது
புத்தாண்டு சாதாரண உழைக்கும் மக்களுக்கு மீண்டும் பெரிதும் அச்சங்கொள்கிற விரக்தி கொள்கிற ஆண்டாக
மாறிக்கொண்டு வருகிறது.
சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ளவர்கள், கிராமப்புறத்திலிருந்து புலப்பெயர்ந்து கடும் வியர்வை
சிந்துபவர்களின் உழைப்புத்தான் சீனாவின் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள செல்வ வளமாகும். அவர்கள் கொண்டாடுவதற்கு
எதுவுமில்லை. தங்களது சொந்த கிராமத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் சந்திப்பதற்கு பாரம்பரிய புத்தாண்டு தினத்தில்
பஸ் அல்லது ரயிலில் செல்வதற்கு கூட அவர்களில் பலருக்கு பண வசதியில்லை.
கிராமங்களிலிருந்து வந்து புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 12 பில்லியன்
டாலர்களுக்கு மேல் என்று அதிகாரபூர்வமாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி வர்த்தக நிறுவனங்கள் சம்பளங்களை தர
மறுப்பது அந்த தொழிலாளர்களை மட்டுமல்ல, அவர்களது சொந்த கிராமங்களையும் பாதிக்கிறது. 2003 ல் கிராமத்திலிருந்து
புலம்பெயர்ந்தவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிய தொகை 370 பில்லியன் யென்கள் (45 பில்லியன்
டாலர்) ஆகும். இந்த கணக்கீடு அனைத்துக் கிராம வருமானத்திலும் 40 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நகரங்களில் நடத்தப்படுகின்றனர்.
அவர்களில் மிகப் பெரும்பாலோருக்கு வாழும் இடங்களில் குடியிருப்பு அந்தஸ்து இல்லை. அவர்கள் பணியாற்றுகின்ற தொழிற்சாலைகளில்
அவர்களுக்கு எந்த ஒப்பந்த அல்லது சட்ட பாதுகாப்பும் இல்லை. அவர்களுக்கு சுகாதாரம், ஓய்வூதியம் அல்லது
கல்விக்கான வழி எதுவுமில்லை. பாரபட்சமாகவும் போலீஸ் கொடூரங்களுக்கு ஆட்பட்டும், சில சந்தர்ப்பங்களில் அவர்கள்
குற்றச்செயலில் ஈடுபடவும், உயிர் வாழ்வதற்காக விபச்சாரம் செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இப்படி புலம்பெயர்ந்துள்ள தொழிலாளர்களது நிலைமையானது, சீனப் புரட்சிக்கு முந்திய
காலத்தில் சாதாரணமாக நிலவிய, Baoshengong
என்று அழைக்கப்பட்ட அரை-நிலப்பிரபுத்துவ கொத்தடிமை
தொழிலாளர் சுரண்டல் முறையை நினைவு படுத்துகிறது. முதலாளிகள் அரசாங்க அதிகாரிகளின் உடந்தையோடு,
தொழிலாளர்கள் மீது கட்டுப்பாட்டை நிலைநாட்டுகின்ற ஒரு வழியாக அவர்களது ஊதியத்தை பிடித்து வைத்துக்
கொள்கின்றனர். ஆதலால், ஓராண்டிற்கு ஒரு முறை பெரும்பாலும் சீன புத்தாண்டிற்கு சற்று முன்னர் அறைகுறையாக
அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இது சம்மந்தமான புகார்களை சர்வ சாதாரணமாக அவர்கள் தள்ளுபடி
செய்துவிடுகின்றனர்.
இப்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அதிகமானவர்கள் கண்டனங்களை நடத்திக்
கொண்டிருக்கின்றனர். தங்களது துயர நிலையை எடுத்துரைப்பதற்காக சிலர் விரக்தியின் உச்சக் கட்டத்திற்கு சென்று
பொது இடங்களில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த புத்தாண்டில் முந்திய ஆண்டுகளைப் போன்று பல்வேறு
கண்டனப் பேரணிகள் நடைபெற்றன.
* Radio Free Asia
தந்துள்ள தகவலின்படி, ஜனவரி 30 ல் பெய்ஜிங் தகவல் பல்கலைக் கழக துணை கவர்னரை 100 கிராமப்புற
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆறு மாடி கட்டிடத்தின் உயரத்தில் அடைத்து வைத்து தங்களது ஊதியம் தரப்படாவிட்டால்
மாடியிலிருந்து குதித்துவிடுவதாக அச்சுறுத்தினர். ஒரு கட்டுமான நிறுவனமான
Beijing Wujiang
அந்த பல்கலைக்கழகத்திற்கு இரண்டு மாடி குடியிருப்புக்களை கட்டியது. 4,000 தொழிலாளருக்கு தரவேண்டிய 13 மில்லியன்
யென்கள் ஊதியத்தில் 5 மில்லியன்களை மட்டுமே அந்த நிறுவனம் தந்துள்ளது. திட்டத்தை பூர்த்தி செய்யவில்லை என்று கூறி
அந்த கட்டுமான நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதிய பாக்கியை தரவில்லை. துணை கவர்னர் எந்த புகார்களுக்கும் பதிலளிக்க
மறுத்துவிட்டதால் அவரையும் கம்பெனி மேலாளர்களில் ஒருவரையும் ஊழியர்கள் பிடித்து வைத்துக் கொண்டனர். உள்ளூர்
அதிகாரிகளுக்கும் கண்டனத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தைகள் துவங்கிய பின்னர்தான் அவர்கள்
இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
* சென் ஷியாலிங் என்ற ஒரு சாலை
கட்டுமான தொழிலாளியை, அவரது முதலாளியும் Changsha
Xignong என்ற கட்டுமான நிறுவனத்தின் மேலாளருமான சூ
ஷிக்காங்கினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட ஐந்து குண்டர்கள் குத்தி கொலை செய்தனர் என்று சீனாவின்
Legal Daily
தெரிவித்தது. சென்ற ஆண்டு சென் பாக்கி ஊதியத்தைக் கேட்டு ஒரு கண்டனத்தை நடத்தியதைப் போன்று இந்த ஆண்டும்
நடந்து விடாது தடுப்பதற்காக இவ்வாறு சூ செய்தார் என்று குறிப்பிடப்படுகிறது. தொழிலாளர்கள் அல்லது அவர்களது
குடும்பத்தினர் கொடுத்த அழுத்தத்திற்கு பின்னர்தான் உள்ளூர் போலீஸார்
சூ வை கைது செய்தனர். சென்னின் குடும்பத்தினர் 20,000 யென்கள்
(சுமார் 2400 டாலர்) இழப்பீடாக பெற்றனர்----- நகரத்தின் சாலை கட்டுமான திட்டங்களில் பாக்கியுள்ள
ஊதியமான 3 மில்லியன் யென்களில் இது ஒரு சிறிய தொகைதான்.
* பிப்ரவரி 2 ல் சென்சேன் சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள ஒரு தைவான்-சீன
பொம்மை தயாரிப்பு கூட்டு நிறுவன ஊழியர்கள் 4,000 பேர் சம்பள பாக்கி கோரி ஆர்ப்பாட்டத்தை நடத்தியபோது,
நூற்றுக்கணக்கான போலீஸாருடன் அவர்கள் மோதிக்கொண்டனர். அதில் பல தொழிலாளர்கள் காயமடைந்ததோடு, ஒரு
போலீஸ் வாகனமும் அழிக்கப்பட்டது.
* சீன புத்தாண்டில் இதர கண்டனப் பேரணிகள் பலவும் நடந்தன.
Sichuan
மாகாணத்திலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான Dazhou
No. 1 பருத்தி ஆலையில் தங்களுக்கு முழு ஊதியம் கிடைக்கவில்லை
என்பதற்காக 2000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அந்தக் கம்பெனி தன்னிச்சையாக அடிக்கடி
நடைபெறும் மின்வெட்டுக்களில், உற்பத்தி நேரம் இழப்பிற்காக ஊதியத்தை பிடித்தம் செய்தது. ஒரு தொழிலாளி
Radio Free Asia
விற்கு பேட்டியளிக்கும்போது "இப்படி ஏதாவது ஒரு வகையில் பிடித்தம் செய்து
கொண்டிருப்பார்களானால், வேலையில் இருக்கின்ற தொழிலாளர்கள் மாதம் 300 யென்கள் வரைதான் ஊதியம் பெறுவர்.
கதவடைப்பால் வேலையிழப்பிற்கு உள்ளாகின்ற தொழிலாளர்கள் வாழ்வதற்கு 130 யென்கள்தான் தரப்படுகின்றன.
வேலைக்குச் செல்வது பயனற்றது, எனவே தொழிலாளர்கள் ஊதியத்தை கோரி வருகின்றனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
கிராமப்புற வறுமை
அண்மையில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் மலைபோன்ற நெருக்கடிகளின் ஒரு எள் முனை
அளவுதான். செலுத்தப்படாத ஊதியங்கள் தொடர்பான பிரச்சனை, வெடித்துச் சிதறும் தன்மை கொண்டது என்பதை
பெய்ஜிங் நன்றாகவே அறிந்திருக்கிறது. அதனால், திரும்ப திரும்ப கம்பெனிகள் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில்
சம்பளத்தை தந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாகவே, பிரதமர் வென்
ஜியாவோ தனிப்பட்ட முறையில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊதியம் கிடைக்க வகை செய்திருக்கிறார். ஆனால்,
இவை பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட பாவணை தலையீடே தவிர, மில்லியன்கணக்கான தொழிலாளர்கள்
எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமையை மாற்றுவதற்கு எதுவும் செய்துவிட வில்லை.
சந்தை சீர்திருத்த கொள்கைகளுக்கு ஒட்டுமொத்த சீனத் தலைமையும் பொறுப்பாகும். அது
சீனாவில் ஆழமாகிக் கொண்டு வரும் சமூக துருவமுனைப்பிற்கு நேரடியாக இட்டுச் சென்றுள்ளது. சீனாவில் ஏற்றுமதியை
அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி, 1990 களில் தொடர்ந்து வெள்ளம் போல் வந்த வெளிநாட்டு
முதலீடுகளை நம்பியிருந்தது. அவை மலிவான கட்டுப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் மிகப்பெருமளவில் கிடைப்பதை
சுரண்டின. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களின்படி, 140 மில்லியன் கிராமப்புற
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக கடற்கரை பகுதிகளில் உள்ள பிரதான உற்பத்தி நிலையங்களில் செறிவாக
பணியாற்றி வருகின்றனர்.
குவாங்டொங் மாகாணம் ---சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதி உற்பத்தி பிராந்தியம்---
அதிலுள்ள தொழிலாளர்களில் 35 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். மற்றும் சென்ற
ஆண்டு அங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதத்திற்கு அவர்கள்தான் காரணமாகயிருக்கிறார்கள். 2004 ல்
குவாங்டொங்கில் ஏறத்தாழ 20 மில்லியன் பதிவு செய்யப்பட்ட கிராம புலம்பெயர்ந்தவர்கள் குறைந்தபட்சம் ஆறு
மாதங்கள் பணியாற்றியுள்ளனர். 2001 ல் இத்தகைய தொழிலாளர்கள் 10 மில்லியன் பேர்வரைதான் இருந்தனர். 2004
ல் எந்தவிதமான நிலையான பணியும் இல்லாமல் பதிவு செய்யப்படாத மேலும் 10 மில்லியன் தொழிலாளர்கள் அங்கு
இருந்தனர். இப்படி புலம்பெயர்ந்த அந்த மாகாண தொழிலாளர்களில் முக்கால் பங்கினர் ---- ஊதியம்
வழங்கப்படும்போது---- மாதத்திற்கு 120 டாலர்களையே பெற்றனர்.
இப்படி ஒரு சொற்ப ஊதியத்தை பெறுகின்ற தொழிலாளர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று
கருதப்பட்டாலும் முதலாளிகளும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் மிகப்பெருமளவில் இலாபங்களை குவித்து வருகின்றனர்.
2003 ல் சீனாவிலுள்ள வெளிநாட்டுக் கம்பெனிகள் சராசரியாக பெற்ற வருமானம் 10.4 சதவீதமாகும். இது மிகப்
பெரும்பாலான நாடுகளைவிட கணிசமான அளவிற்கு உயர்ந்த வருவாயாகும். அமெரிக்க வர்த்தக துறை வெளியிட்டுள்ள
புள்ளி விவரங்களின்படி, அமெரிக்க பெரு நிறுவனங்கள் அதே ஆண்டில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பிய தொகை
4.4 பில்லியன் டாலர்கள் ஆகும். வர்த்தக வாய்ப்புகளை சுரண்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் மேலும் 60
பில்லியன் டாலர்கள் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் சென்ற ஆண்டு சீனாவிற்கு வந்தது.
சீனாவின் வர்த்தக செல்வந்த தட்டினரிடையே உற்சாகமான கருத்துக்கள்
தூண்டிவிடப்பட்டிருப்பதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. உலகின் பணக்காரர் ஆன மைக்ரோ சொப்ட் தலைவர் பில்
கேட்ஸ் அண்மையில் டாவோசில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போது சீனா "புதிய வடிவ
முதலாளித்துவ சின்னத்தை" உருவாக்கியிருப்பதாக கூறினார். சீனா மாதிரி, "கடினமாக உழைக்க விரும்புகிற
அடிப்படையில் மற்றும் மருத்துவ அல்லது சட்ட ரீதியில் கூடுதல் செலவினங்கள் இல்லாத முறையில் அமைந்திருப்பதாக''
அவர் வாதிட்டார். அது வெளிநாட்டு நிறுவனங்கள் உற்பத்தியில் "பெருமளவில் பொருளாதாரத்தை'' உருவாக்குவது
புரிந்து கொள்வதாக இருந்தது. ''அங்கே இன்னும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு விடவில்லை என்பதை நீங்கள்
அறிவீர்கள். அந்தப் பகுதி தொழிலாளர்கள் விவசாயத் துறைகளிலிருந்து வருகிறார்கள். இன்னும் கணிசமான அளவிற்கு வந்து
கொண்டிருக்கிறார்கள்'' என்றும் அவர் கூறினார்.
சீன முதலாளித்துவம் தொடர்பாக புதுமை எதுவுமில்லை. அங்கு பத்தொன்பதாம்
நூற்றாண்டில் முதலாளித்துவம் வளர்ந்ததோடு சேர்ந்து சுரண்டலின் காட்டுமிராண்டித்தனமான வடிவங்கள் இணையாக
உருவானதை காணலாம். இதில் ஒரு முக்கியமான அடிப்படை அம்சம் என்னவெனில், கிராமங்களில் நிலவுகின்ற கடுமையான
வறுமை நிலையாகும். அது விவசாயிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் தொழிற்சாலைகளை நோக்கி செல்ல
நிர்ப்பந்திக்கிறது. அங்கு அவர்களுக்கு "கடுமையாக உழைப்பதை", எந்தவித "சட்ட அல்லது மருத்துவ கூடுதல்
செலவுகள்" இல்லாமல் பணியாற்றுவதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. சில நேரங்களில் ஒரு கருணை வள்ளலாக
காட்சி தருகின்ற பில் கேட்ஸ் சீனாவில் நிலவுகின்ற கடும் வறுமையின் துயரத்தைப்பற்றியும், அதை பூகோள முதலாளித்துவம்
மிகப்பெருமளவில் நம்பியிருப்பது பற்றியும் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
சமூக கொந்தளிப்பை தடுத்து நிறுத்துவதற்காக, பெய்ஜிங் விவசாயிகளுக்கு வரிச் சலுகைகளையும்
மானியங்களையும் அளிக்கிறது. அதே நேரத்தில் நகரங்களுக்கு மலிவுக் கூலித் தொழிலாளர்கள் கிடைப்பதை அச்சுறுத்தும்
எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் செயல்படுத்த முடியாது. எனவே, சீன விவசாயிகளின் நிலைமை தொடர்ந்தும்
சீர்குலைந்து கொண்டே வருகிறது. கடுமையான வரிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்களால் விவசாயிகள் மேலும் திவாலாகுகின்றனர்.
மற்ற இடங்களில், அவர்களது நிலத்தை ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்காக வலுக் கட்டாயமாக பறிமுதல்
செய்து விடுகின்றனர்.
அதே நேரத்தில் கிராம மற்றும் நகரங்களுக்கிடையே சமத்துவமின்மை விரிவடைந்து
கொண்டே வருகின்றன. 2002 ல் கிராமப்புற சீனாவில் சராசரி குடும்பத்தினர் செலவிடும் அளவிற்குள்ள வருவாய் 269
டாலர்கள்தான். இது நகர்ப்புறத்து 853 டாலர்களைவிட மூன்று மடங்கு குறைவு. அண்மையில் அரசாங்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள
தகவல்களின்படி, சீனாவின் வறுமைமிக்க ஹெனன் மாகாணம் தொழிலாளர்களை ''ஏற்றுமதி செய்யும் நம்பர் 1 மாகாணமாக
உள்ளது''. இந்த மாகாணத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள "உபரி கிராம தொழிலாளர்களில்" பாதிப்பேர் அல்லது
14.11 மில்லியன் மக்கள் வேலை தேடி நகர்ப்புறங்களில் குடியேறிவிட்டனர்.
எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய சமூக வெடிகுண்டின் உச்சியில் தாம் உட்கார்ந்து
கொண்டிருப்பதை சீனத் தலைவர்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றனர். 1989 ல் தியனமென் சதுக்கத்தில் படுகொலையில்
முடிவடைந்த கண்டனப் பேரணி, நகரங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை மட்டுமே உள்ளடக்கியதாகும்.
இன்றைய தினம் அத்தகையதொரு இயக்கம் வெடிக்குமானால், அளவிலும் சமூக அந்தஸ்திலும் வளர்ந்திருக்கும் தொழிலாளர்
வர்க்கம் மட்டுமல்லாமல் கிராமப்புற ஏழைப் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் அதில் ஈடுபடுவார்கள்.
சீன அரசியல் தலைவர்கள் பெய்ஜிங்கில் மிக ஆடம்பரமாக விருந்துகளோடு புத்தாண்டு விழாவை
கொண்டாடிக் கொண்டிருந்த நேரத்தில், அதிகாரபூர்வமான அரசாங்க சிந்தனையாளர் குழுவான சீன சமூக அறிவியல்
கழகம் 2004 - 2005-ம் ஆண்டிற்கான சமூக நிலைமை ஆய்வு மற்றும் முன்கூட்டி அறிதல் பற்றிய அறிக்கையை வெளியிட்டது.
அதில் சமூக சமத்துவமின்மை வளர்ந்து வருவது குறிப்பிடப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டு 40 மில்லியன் நிலமற்ற விவசாயிகளும்
7,40,000 பல்கலைக்கழக பட்டதாரிகளும் வேலை வாய்ப்பை பெற முடியவில்லை என்று அந்த அறிக்கை
சுட்டிக்காட்டியிருக்கிறது. "கடந்த இரண்டாண்டுகளாக உயர் வேகத்தில் பொருளாதாரம் சீனாவில் வளர்ந்து
கொண்டிருந்தாலும் குறைந்த வருவாயை கொண்டுள்ள மக்கள் அதிக அளவில் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். அதற்கு காரணம்
இந்த வேகமான பொருளாதார வளர்ச்சியோடு அடிப்படை உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன. மொத்த
செலவில் 50 முதல் 60 சதவீதம் உணவுப் பொருட்களுக்காக செலவிடப்படுகிறது" என்று அது எச்சரிக்கிறது.
சீனப் புத்தாண்டுக்கு முன்னரே, ஜனாதிபதி ஹூ ஜிந்தாவோ, வறுமைப்பட்ட தென்மேற்கு
மாகாணமான Guizhou
வின் மக்களோடு நின்று தனது ஆதரவை தெரிவித்தார். ஆனால், இது முந்திய புத்தாண்டுகளில் ஏழை விவசாயிகள் அல்லது
சுரங்கத் தொழிலாளர் இல்லங்களுக்கு விஜயம் செய்ததைப் போன்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாதாரண மக்களை பற்றி
கவலைப்படுகிறது என்ற நாடகத்தை நிலைநாட்டுவதற்கான ஒரு அவலமான முயற்சியாகும். இது போன்ற காட்சிகள்,
சாதாரண மக்களாகிய வெகுஜனங்கள் வாழ்கின்ற நிலை சகிக்க முடியாத அளவிற்கு பெருகிக் கொண்டிருப்பதற்கும் வெறுக்கத்தக்க
ஆளும் செல்வந்தத் தட்டினருக்குமிடையே நிலவுகின்ற இடைவெளியை வலியுறுத்தி எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆகவே,
இவர்கள் துடைத்தெறியப்பட்டு உண்மையான சோசலிசத்திற்கான வழியை ஏற்படுத்த வேண்டும். |