:
ஆசியா
:
சுனாமி பேரழிவு
Mounting concerns over fate of tsunami
victims in Aceh
ஆஷேயில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் நிலை தொடர்பாக பெருகிவரும் கவலைகள்
By John Roberts
19 February 2005
Back to screen
version
இந்தோனேஷியாவின் சுமத்ரா மாகாணமான ஆஷேயில் டிசம்பர் 26 ல் ஏற்பட்ட பூகம்பம்
மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டு தப்பி பிழைத்தவர்களது நிலை ஒரு ஆபத்தான கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதற்கு
காரணம், உதவிப் பணிகளில் மோசமான ஒருங்கிணைப்பும் குழப்ப நிலை நிலவுவதும், மறு வாழ்வு முகாம்கள் இராணுவ
மயமாக்கப்பட்டிருப்பதும்தான்.
ஆஷேயில் 4.1 மில்லியன் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவின் வீச்சு இன்னமும் வெளிவந்து
கொண்டேயிருக்கிறது. கடைசியாக கிடைத்திருக்கிற புள்ளி விவரங்களின்படி இந்த பேரழிவில் 230,000 பேருக்கு மேற்பட்ட
மக்கள் மடிந்திருக்கின்றனர். ஏறத்தாழ 120,000 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றும் 115,000 பேர் காணவில்லையென்றும்,
அவர்கள் இறந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது. அப்படியிருந்தும் மடிந்தவர்களது இறுதி எண்ணிக்கை 280,000 தையும் மிஞ்சலாம்.
ஏனென்றால் காணாமல் போய்விட்டதாக குறிப்பிடப்பட்டவர்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. உண்மையிலேயே
அவர்கள் எத்தனைபேர் என்பது தெரியாமலேயே போய்விடலாம்.
இப்படி மலைப்பூட்டும் மரணப்பட்டியல் இந்த சோகக் கதையின் ஒரு பகுதிதான். ஐ.நா-வின்
உலக உணவு திட்ட அமைப்பு ஜனவரி 31 ல் தந்துள்ள தகவலின்படி, ஆஷேயிவிருந்து இடம் பெயர்ந்தவர்கள் 4,17,000
பேர் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். மேலும் 260,000 பேர் இதர குடும்பங்களுடன் வாழ்கின்றனர். அத்துடன் சுனாமியால்
பாரியளவு வீடுகள் அழிக்கப்பட்டதோடு அவர்கள் வாழ்வதற்கான வசதிகளும் அடிபட்டு போய்விட்டது. ஐ.நா வின் சர்வதேச
தொழிலாளர் அலுவலகம் செய்துள்ள மதிப்பீட்டின்படி அந்த மாகாணத்தில் சுனாமியால் 600,000 பேர் வேலையிழந்திருக்கின்றனர்.
ஜனவரி 23 ல் வாஷிங்டன் போஸ்ட் உலக சுகாதார அமைப்பின் (WHO)
உதவி முயற்சி பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. உணவும் மருந்துகளும் பெரிய மக்கள் தொகை கொண்ட
குழுக்களை சென்றடைந்தது என்றாலும்
சுனாமி தாக்கி ஒரு மாதத்திற்கு பின்னரும் உதவிகள் வழங்குவதில் ஒருங்கிணைப்பு
இல்லாதது உதவி நடவடிக்கைகளுக்கு இடையூறாக உள்ளது. பல உதவி அமைப்புகள் தங்களது முயற்சிகளை ஒருங்கிணைத்து
முறையாக முன்னுரிமை அடிப்படையில் அவற்றை வழங்குவதற்கு தவறிவிட்டன.
குறிப்பாக ஒதுக்குப் புறத்திலுள்ள பகுதிகளில் உதவி முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்ட
அளவிலேயே நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம் உள் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள்தான். ஆஷேயிலுள்ள
44 சுகாதார நிலையங்கள் அழிக்கப்பட்டு ஊழியர்கள் 50 முதல் 70 சதவீதம் வரை மடிந்துவிட்டனர். படுமோசமாக
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுடன் தொடர்பு கொள்வதற்கு உயிர்நாடியான கடற்கரைச் சாலையில் இருந்த 57 பாலங்கள்
உடைந்துவிட்டன அல்லது சேதமடைந்துவிட்டன. கடல் வழியாக கொண்டு செல்லலாம் என்றால் துறைமுகங்கள் சிதைந்து
கிடப்பதால், அதற்கும் இடையூறாக உள்ளதால் எனவே விமானம் மூலம்தான் அத்தியாவசிய பொருட்களை அனுப்பியாக
வேண்டும். அப்படியிருந்தும் சிறிய குழுக்களாக நெடுந்தொலைவிற்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு விமானத்தின்
மூலம் உதவி பொருட்களை போட இயலாது. ஏற்கெனவே அமெரிக்க மற்றும் வெளிநாட்டு இராணுவப் படைப் பிரிவினரின்
ஹெலிக்காப்டர்கள் விலக்கிக்கொள்ளப் பட்டுவிட்டதால், சிவிலியன் உதவிக் குழுக்கள் ஏற்பாடு செய்கிற விமானங்களைத்தான்
நம்பி இந்த உதவிப் பொருட்களை அனுப்ப வேண்டியிருக்கிறது.
ஆஷேயிலுள்ள அகதிகள் முகாம்களில் நிலவுகின்ற மோசமான நிலவரத்தால் மிக அதிக
ஆபத்தான தொற்று நோய்கள் குறிப்பாக அம்மை, மலேரியா தோன்றுகின்ற ஆபத்துக்கள் உருவாகியிருப்பதாக ஜனவரி
31 ல் WHO
தகவல் தந்திருக்கிறது. அந்த முகாம்களில் கழிப்பறைகள் இல்லை, தூய்மையான குடிதண்ணீர் வழங்கப்படுவதில்லை.
குறிப்பாக குழந்தைகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
மாகாண தலைநகரான பண்டா ஆஷேயில் 12.7 சதவீதமான குழந்தைகள் சத்தூட்டம்
குறைந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ள UNICEF
அங்கு "ஆபத்தான அவரச நிலை" ஏற்பட்டிருப்பதாக விவரித்துள்ளது. தலைநகருக்கு வெளியில் நிலவரம் படுமோசமாக
இருக்கும் என்று அந்த அமைப்பு அஞ்சுகிறது.
ஆஷேயில் உதவி முயற்சிகளை ஒருங்கிணைப்பு செய்கிற முதன்மை பொறுப்பு இந்தோனேஷிய
ஆயுதப் படைகளுக்குத்தான் (TNI)
உள்ளது. அது அந்த மாநிலத்தில் 35,000 திற்கு மேற்பட்ட துருப்புக்களை வைத்திருக்கிறது. மேலும் துருப்புக்களை
அனுப்பிக்கொண்டிருக்கிறது. தனி நாடு கோரும் சுதந்திர ஆஷே இயக்கத்திற்கு எதிராக மீண்டும் தாக்குதல்கள் 2003 ல்
துவக்கப்பட்டதற்கு பின்னர், அந்த மாகாணத்தின் மீதும் அதன் நிர்வாகத்தின் மீதும் ஒரு கடுமையான கட்டுப்பாட்டை தன்
கையில் இராணுவம் வைத்திருக்கிறது.
என்றாலும் TNI
ன் முன்னுரிமையானது, உதவியை வழங்குவதாக அமைந்திருக்கவில்லை. ஜனவரி 30 ல்
Age
பத்திரிக்கை, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்குக்கரை நகரமான காலாங்கின் நிலவரத்தை வர்ணித்துள்ளது. அங்கு
வாழ்ந்த 10,000 பேரில் 800 பேர் மட்டுமே உயிர் பிழைத்திருக்கின்றனர். இராணுவம் கடற்கரையில்
''மலைகளைப்போல் உதவிப் பொருட்களை'' குவித்து வைத்திருப்பதாகவும் அவை வேறு எங்கும் கொண்டு
செல்லப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. இந்தக் குழப்பமான காட்சியை படம் எடுக்க
முயன்ற ஒரு புகைப்படக்காரரிடம் இராணுவக் கேப்டன் "எங்களது நாட்டை இழிவு படுத்த வேண்டாம்" என்று கூறினார்.
அந்த உதவி நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகின்ற உள்ளூர் வாசிகளில் ஒருவர்
Age ற்கு
தகவல் தரும்போது, உணவுப் பொருட்களில் தலை சிறந்தவற்றை இராணுவம் கைப்பற்றிக்கொண்டதாக குறிப்பிட்டார்.
அகதிகள் முகாம்கள் இப்போதுள்ள பாழடைந்த தற்காலிக முகாம்களுக்கு பதிலாக இராணுவ
குடியிருப்புகளைப்போல் அமைக்கப்பட்டு இராணுவத்துடைய பங்களிப்பால் ''பாதுகாப்பு'' வழங்குவது என்பது சுனாமியில்
தப்பிய பலருக்கு கவலையளிப்பதாக உள்ளது. ஒரு நியூ யோர்க் டைம்ஸ் செய்தி இந்த வகையில் பலரது
பயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. உள்ளூர் மக்களை
GAM
போராளிகளிடமிருந்து தனிமைப்படுத்துவதற்காக, இதற்கு முன்னர் இராணுவம் அவர்களை இராணுவ முகாம்களில் அடைத்து
வைப்பதற்கு முயன்றதைப்போன்று மீண்டும் நடவடிக்கையில் இறங்கலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சிட்னி மார்னிங் ஹெரால்டில் பிப்ரவரி 2 ல் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு
கட்டுரையானது, உதவி ஊழியர்களிடையே நிலவுகின்ற கவலைகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவசர
கோலத்தில் கட்டப்பட்டுவரும் குடியிருப்பானது, தற்போதுள்ள முகாம்களைப்போன்று சுகாதார சீர்கேடு ஆபத்து
உள்ளவையாக உள்ளன. பண்டா ஆஷேவிற்கு வெளியில் கட்டப்பட்டு வரும்
Lambaro முகாம்
ஒவ்வொன்றிலும் 100 பேர் தங்குமளவிற்குதான், சாக்கடை தேங்கி நிற்கும் குட்டைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றின் காரணமாக டெங்கு மற்றும் மலேரியா நோய்கள் ஏற்படக்கூடும்.
இந்த வாரம் முதலாவதாக கட்டப்பட்டுள்ள முகாம்களுக்கு தப்பிப்பிழைத்தவர்கள்
குடியேறுகிறார்கள். ஒவ்வொரு குடியிருப்புகளும் (barracks)
12 அறைகளாக்கப்பட்டு, ஒரே கதவு ஜன்னலோடு மெல்லிய
சுவர்களால் பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் வசதிகள் குறைவாக உள்ளன. மின்சாரம் மற்றும் தண்ணீருக்கு
வகை செய்யப்பட்டிருக்கிறது மற்றும் பலர் பயன்படுத்திக் கொள்கிற பொதுக் குளியல் அறைகளே கட்டப்பட்டுள்ளன.
தப்பிப்பிழைத்த 22 வயதான ரோஸ்நிடார் என்பவர் பினான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில்,
"ஒரு கூடாரத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருந்தால் இது சிறந்ததுதான். நான் என்ன செய்ய முடியும்? எனக்கு மாற்று
எதுவுமில்லை. நான் இங்குதான் வாழ்ந்தாக வேண்டும். நாங்கள் ஒரு வீட்டைக்கட்ட விரும்பினாலும் எங்களிடம் பணம்
இல்லை மற்றும் வீடு கட்ட நிலமும் இல்லை" என்று குறிப்பிட்டார். இதுவரை இந்த மாகாணத்தில் 273 குடியிருப்புகள்தான்
கட்டப்பட்டுள்ளன. மார்ச் 15 வாக்கில் இது 803 ஆக உயர்ந்துவிடுமென்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவற்றில் 9,730
குடும்பங்கள்தான் வாழ்வதற்கு போதுமானது. ஆனால், தேவையோடு ஒப்பிடும்போது இவை மிகவும் சொற்பமானவையாக
இருக்கின்றன.
அகதிகள் இராணுவ லாரிகளில் மற்றும் அரசாங்கப் பேருந்துகளில் முகாம்களுக்கு ஏற்றி
செல்லப்படுகின்றனர். அந்த முகாம்கள் சிவிலியன் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அரசாங்கம் வலியுறுத்திக்
கூறிக்கொண்டிருந்தாலும் நுழைவு வாயிலில் போலீஸார் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். மற்றும் பலத்த ஆயுதந் தாங்கிய
குழுக்களாக படையினர்கள் நிற்கின்றனர். பிரிவினைவாத கிளர்ச்சிக்கார முகாமை துருப்புகள் ''கண்காணித்து வருவதாக''
ஆஷே அரசு பிரதிநிதியான ரூஸ்லி மொகமட் கூறினார்.
ஐரோப்பாவிலிருந்து செயல்பட்டுவரும்
GAM தலைவர்களுக்கும்
ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யூடோயோனோ (Susilo
Bambang Yudhoyono) வின் அரசாங்க பிரதிநிதிகளுக்கும் இடையில்
பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கில் சமீபத்தில் நடைபெற்ற நிவாரண உதவி முயற்சிகள் தொடர்பான போர் நிறுத்த
சம்பிரதாய உடன்படிக்கை எந்தவித உடன்பாடின்றி முறிந்தன. இந்தோனேஷிய தூதுக் குழுவின் தலைவரான பாதுகாப்பு
அமைச்சர் Widodo Adi Sucipto
ஊடகங்களுக்கு தகவல் தரும்போது, ஒரு பரவலான கட்டுக்கோப்பு தொடர்பாக ஒரு உடன்படிக்கை செய்து
கொள்ளப்படாமல் போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என்று குறிப்பிட்டார்.
ஜக்கார்த்தாவில் ஜனாதிபதி யூடோயோனோ இந்த "கட்டுக்கோப்பானது" வளம் செறிந்த
அந்த மாகாணத்தை ஜக்கார்த்தாவின் அதிகாரத்தில் உறுதியாக வைத்திருக்க வகை செய்கிறது என்று தெளிவுபடுத்தினார்.
"இந்தோனேஷிய குடியரசு ஐக்கியம் என்ற கட்டுக்கோப்பிற்குள் சிறப்பு தன்னாட்சி அந்தஸ்தை ஏற்றுக்கொண்டு இந்த
சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் GAM
ற்கு ஒரு வாய்ப்பை தந்திருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.
ஹெல்சிங்கில் பேச்சுவார்த்தைகள் முன்னேறிக் கொண்டிருந்த நேரத்திலேயே, கிழக்கு ஆஷேயில்
4 GAM
கிளர்ச்சிக்காரர்களை கொன்றுவிட்டதாக இராணுவம் அறிவித்தது. அவர்கள் ஒரு கிராமத்தில் கிராம மக்களிடம் "கலவரமூட்டுவதற்காக"
நுழைந்தார்கள் என்று இராணுவம் கூறிற்று. போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடப்பதை பயன்படுத்தி தங்களது
குடும்பத்தினரை பார்ப்பதற்காக வந்த நான்கு போராளிகள் கொல்லப்பட்டதாக
GAM அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாத கடைசியில் மேலும் ஒரு
சுற்று உடன்பாடு பேச்சுவார்த்தைகள் நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாவு எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்தாலும், உயிர்தப்பியோருக்கு ஆபத்துக்கள் பெருகிக்
கொண்டிருந்தாலும் ஆஷே மற்றும் இதர சுனாமி பாதிப்பிற்கு இலக்கான பகுதிகள் சர்வதேச ஊடகங்களின் தலைப்பு செய்திகளாக
இப்போது வெளியிடப்படுவதில்லை. அது ஏன் என்று நிதி தொடர்பான பத்திரிக்கைகளை தேடி பார்க்க வேண்டிய அவசியமில்லை.
ஜனவரி 25 ல்
Bloomberg வலைத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு
கட்டுரை சுனாமியினால் பெரு வர்த்தகத்திற்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு "அற்பமானது" என்று
குறிப்பிட்டிருக்கிறது. 2005 ல் தெற்கு ஆசிய பொருளாதாரங்கள் 6.25 சதவீத வளர்ச்சி காணும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சுனாமி பேரழிவினால் 0.05 சதவீத வளர்ச்சிதான் மந்தநிலைக்கு உள்ளாகும். ஒரு
ஐ.நா அறிக்கை தொழில்துறை மற்றும் துறைமுக வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம் குறைவானது என்றும், ''எண்ணெய்
மற்றும் எரிவாயு வயல்கள் எதுவும் இதனால் பாதிக்கப்படவில்லை'' என்றும் குறிப்பிட்டுள்ளது.
அந்தக் கட்டுரை ஐ.நா பொருளாதார நிபுணரான
Ian Kinniburg
கூறிய கருத்தை மேற்கோள் காட்டியுள்ளது: "மனித பெருந் துயரத்தை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால்,
சுனாமி உள்கட்டமைப்பு வசதிகளையோ அல்லது ஏராளமான நவீன பொருளாதார உற்பத்தித் திறனையோ சிதைத்து
விடவில்லை. இந்தோனேஷியாவின் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் சர்ச்சையில் உள்ளன. மற்றும் அங்கு
ஏராளமான [முதலீட்டு]
நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன" என்று அவர் அதில்
குறிப்பிட்டுள்ளார்.
ஆஷேயில் TNI
மேற்கொண்டுவரும் ஒடுக்குமுறைகள் பற்றியும் பேரழிவிற்கு உட்பட்ட பகுதிகளைச் சார்ந்த மக்களது பரவலான வறுமை
நிலைபற்றியும் பல ஆண்டுகளாக கண்ணை மூடிக்கொண்டிருந்த பிரதான ஊடகங்கள் இப்போதும் கூட நடைபெற்றுக்
கொண்டுள்ள பேரழிவினால் எழுப்பப்பட்டுள்ள அரசியல் பொருளாதார மற்றும் சமூக வினாக்களை கடுமையாக
ஆராய்வதற்கு தயாராக இல்லை. |