World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sharpening tensions in Sri Lankan government over talks with LTTE

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்குள் பதட்ட நிலைமைகள் கூர்மையடைகின்றன

By K. Ratnayake
9 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கையில் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் மற்றும் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்குமான ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் முயற்சிகள் ஆளும் கூட்டணிக்குள் கூர்மையான பதட்டநிலைமைகளை ஏற்கனவே ஆழமடையச் செய்துள்ளன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டாவது பிரதான பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அத்தகைய ஒரு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டாலோ அல்லது வடக்குக் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது பற்றி விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டாலோ தாம் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்பிரலில் சுதந்திர முன்னணி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவது சம்பந்தமாக அரசாங்கத்தில் இருந்து விலக்கொள்ளப் போவதாக ஜே.வி.பி மீண்டும் மீண்டும் அச்சுறுத்தி வந்துள்ளது. தமிழர் விரோத பேரினவாதத்தை மிகத் தீவிரமாகத் தழுவிக்கொண்டுள்ள ஜே.வி.பி, விடுதலைப் புலிகளுக்கு எந்தவொரு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளையும் கூட வழங்குவதை எதிர்க்கின்றது. சுனாமியின் தாக்கத்துடன், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு எந்தவொரு நேரடி உதவி வழங்கப்படுவதையோ அல்லது சர்வதேச அலுவலர்கள் விஜயம் செய்வதையோ ஜே.வி.பி எதிர்க்கின்றது. அத்தகைய செயல் தற்போதுள்ள நிலைமையை அங்கீகரிப்பதாகவே அமையும் என அது வலியுறுத்துகிறது.

டிசம்பர் 26 சுனாமி, இலங்கையில் 30,000 பேரை பலிகொண்டதோடு மேலும் அரை மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்துள்ளது. இந்தப் பேரழிவின் சுமார் முக்கால் பகுதி, இரு தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தால் ஏற்கனவே சேதமடைந்துள்ள தீவின் வடக்கு கிழக்கு பிராந்தியத்திலேயே இடம்பெற்றுள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், எந்தவொரு சர்வதேச நிவாரண உதவியும் தமது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஊடாகவே வழங்கப்பட வேண்டும் என விடுதலைப் புலிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜே.வி.பி யைப் போலவே தமிழர் புனர் வாழ்வுக் கழகத்திற்கு நிதி வழங்குவதை எதிர்க்கும் குமாரதுங்க, தலை கீழாக மாறத் தள்ளப்பட்டார். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய வல்லரசுகள் விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக நிதி வழங்காத அதே வேளை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் ஒரு "பொதுக் கட்டமைப்பை" ஸ்தாபிக்க வேண்டுமென அவை வலியுறுத்தியுள்ளன. இந்த நகர்வானது சுனாமி நெருக்கடியைப் பயன்படுத்தி 2003 ஏப்பிரலில் தகர்ந்து போன சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த குமாரதுங்கவிற்கு உடன்படுவதைத் தவிர பதிலீடு இருக்கவில்லை. 2003ல் டோக்கியோவில் நடந்த உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டில் வாக்குறுதியளிக்கப்பட்ட 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவி, பெயரளவிலான சமாதான முன்னெடுப்புகளை மீளத் தொடங்குவதுடன் கட்டுண்டிருந்ததன் காரணமாக அவரது அரசாங்கத்தால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. மேலும் 1.8 பில்லியன் டொலர்கள் சுனாமி மீள் கட்டுமானத்திற்காக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள போதிலும், "பொதுக் கட்டமைப்பு" செயற்படாவிட்டால் இந்தப் பணத்தில் பெருந்தொகையானவை கிடைக்கப் போவதில்லை.

திறைசேரி செயலாளர் பி.பி. ஜயசுந்தர, வாக்குறுதியளிக்கப்பட்ட சுனாமி உதவியில் 4 வீதம் அல்லது 75 மில்லியன் டொலர்களே அரசாங்கத்திற்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் ஒரு வியாபார மாநாட்டில் தெரிவித்தார். இந்தப் பேரழிவுக்கு முன்னதாகவும், தனது தேர்தல் வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக சுதந்திர முன்னணி அரசாங்கம் வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பிற்கு முகம்கொடுத்துக் கொண்டிருந்தது. இப்போது அது சுனாமியில் பாதிப்புக்குள்ளான இலட்சக்கணக்கானவர்களுக்கு பொருத்தமான அவசர நிவாரணம் மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைளின் பற்றாக்குறை சம்பந்தமாக கொதித்துக்கொண்டிருக்கும் சீற்றத்தை எதிர்கொள்கின்றது.

யுத்த நிறுத்தத்தின் மூன்றாவது ஆண்டை குறிக்கும் வகையில் பெப்பிரவரி 22 வெளியிட்ட ஒரு அறிக்கையில், விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுக்களை மீண்டும் தொடக்குவதை நோக்கி செயற்படுவதாக அரசாங்கம் பிரகடனம் செய்தது. "மக்கள் மனிதாபிமானத் தேவைகளை அடைவதற்காக ஒரு இடைக்கால அதிகார சபையை ஸ்தாபிப்பதையிட்டு விடுதலைப் புலிகளுடன்" அரசாங்கம் கலந்துரையாடல்கள் நடத்தி வருவதாகவும், "அதன் பின் இன முரண்பாடுகளுக்கு ஒரு இறுதி தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளுடன் முன் செல்லவிருப்பதாகவும்" இந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.

மிகவும் கவனமாக வரையப்பட்டுள்ள இந்த அறிக்கை, பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான அடிப்படையாக ஒரு இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளது. ஜே.வி.பி இந்த பிரகடனத்தை உடனடியாக கண்டனம் செய்தது. பெப்பிரவரி 24 அன்று ஜே.வி.பி யின் பாராளுமன்றக் குழு தலைவர் விமல் வீரவன்ச, அரசாங்கம் அத்தகைய நடவடிக்கையை எடுக்குமானால் ஜே.வி.பி "அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதிலிருந்து விலகிக்கொள்ளும்" என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விடுதலைப் புலிகளுடன் ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிப்பதானது விடுதலைப் புலிகளுக்கு ஒரு "அரச அதிகாரத்தை" வழங்குவதற்கு சமமானதாகும் எனப் பிரகடனம் செய்தார்.

மார்ச் 2 அன்று ராய்டருக்கு கருத்துத் தெரிவித்த ஜே.வி.பி யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, "அரசாங்கம் சுனாமி உதவியை விநியோகிப்பதன் பேரில் ஒரு பொதுக் கட்டமைப்பை ஸ்தாபிக்க முயன்றாலோ அல்லது இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிக்க முயன்றாலோ ஜே.வி.பி அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்ளும்" என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

ஜே.வி.பி முன்னரும் அரசாங்கத்தை விட்டு விலகுவதாக அச்சுறுத்தியிருந்தாலும், இந்தப் புதிய எச்சரிக்கைகள் அவர்களுக்கு ஒரு அவநம்பிக்கையான சமிக்ஞையாகும். அடிக்கடி "இடதுசாரிகள்" மற்றும் "சோசலிசக்" கட்சி என்றும் கூட சொல்லிக்கொள்ளும் ஜே.வி.பி, இப்போது முதற் தடவையாக ஆட்சிக்கு வந்துள்ளதோடு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள், விலை ஏற்றம் மற்றும் சுனாமி நிவாரணப் பற்றாக்குறை சம்பந்தமாக அதிகரித்துவரும் வெறுப்புக்கும் முகம்கொடுக்கின்றது. சுனாமி நெருக்கடியின் மத்தியில் தங்களது கோரிக்கைகளை தள்ளிவைக்குமாறு மக்களுக்கு அது அழைப்பு விடுத்தாலும், அதிகரித்தளவில் யாரும் அதை செவிமடுப்பதாக இல்லை. ஆகவே, எதிர்ப்பை திசை திருப்புவதன் பேரிலும் மற்றும் பிளவுபடுத்துவதன் பேரிலும் ஜே.வி.பி யின் வாய்வீச்சுக்கள் இனவாத உணர்வுகளை கிளறுகின்றன.

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, கடந்த வாரம் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள திருகோணமலை நகரில், மெக்கெய்ஸர் ஸ்டேடியம் என்றழைக்கப்படும் ஒரு திறந்தவெளி அரங்கில் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு வீடுகளைக் கட்டத் தொடங்கும் ஆத்திரமூட்டல் முயற்சியை மேற்கொண்டார். அவ்வாறு செய்ததன் மூலம், சிங்கள குடியிருப்புக்கள் ஆக்கிரமிப்பதையிட்டு தமிழர்கள் விழிப்பாக இருந்த அளவில், வேறு எங்காவது வீடுகளைக் கட்டுவது என்ற பாராளுமன்றக் குழு ஒன்றின் தீர்மானத்தை விஜேசேகர வேண்டுமென்றே நிராகரித்துள்ளார். உள்ளூர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வீதித் தடைகளை போடத் தொடங்கியதும் இறுதியாக பொலிசும் இராணுவமும் ஜே.வி.பி யை வெளியேறுமாறு நெருக்கினர்.

கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் கருணா என்றழைக்கப்படும் வி. முரளீதரன் தலைமையிலான விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற குழுவும் சம்பந்தப்பட்ட ஒரு தொடர்ச்சியான படுகொலைகளை அடுத்து, ஜே.வி.பி யின் நடவடிக்கைகள் பதட்ட நிலைமைகளை தீவிரமான அதிகரிக்கச் செய்துள்ளன. பெப்பிரவரி 7 அன்று விடுதலைப் புலிகளின் கிழக்கு அரிசியல்துறைப் பொறுப்பாளர் இ. கெளசல்யன் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் கிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் குவேனி மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. அவர் மற்றைய இரு விடுதலைப் புலி காரியாளர்களைப் போலவே கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இலங்கை ஆயுதப் படைகளே இருப்பதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டுகின்றனர். பாதுகாப்புப் படைகள் எந்தவொரு தலையீட்டையும் நிராகரிக்கின்ற அதே வேளை, கருணா குழுவுடனான அதன் முன்னைய தொடர்புகள் மற்றும் அனுதாபங்கள் இரகசியமானவை அல்ல. குவேனி மீதான தாக்குதலின் பின்னர், விசேட அதிரடிப் படையின் தலைவர் நிமால் லிவ்கே, "கருணா குழு விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திவாய்ந்த எதிரிகளாகியிருப்பதாகவும் பிரதேசத்தில் உள்ள மக்கள் மத்தியில் உயர்ந்த அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றிருப்பதாகவும்... மற்றும் அவரை ஒரு சக்தியாக கருத முடியும்," எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப் புலிகளும் அதேமுறையில் பிரதிபலித்தது. பெப்பிரவரி 22 அன்று, யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிளாலி இராணுவ முகாமுக்கு அருகாமையில், செல்லக்கூடாத இடத்திற்கு பலவந்தமாக செல்ல முயன்றதாக கூறி விடுதலைப் புலிகளால் ஒரு சிப்பாய் சுட்டுக் கொல்லப்பட்டதோடு இன்னுமொருவர் காயமடைந்தார். கடந்த சில நாட்களுக்குள் விடுதலைப் புலிகளுக்கும் கருணா கும்பலுக்கும் இடையிலான துப்பாக்கிச் சூடுகளில் பத்துபேர் கொல்லப்பட்டுள்ளனர். சனிக்கிழமை இரவு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண எல்லைக்கு அருகில் கொனகுலவெளியில் நடந்த ஒரு மோதலில் நான்கு முஸ்லிம்கள், ஒரு தமிழர் மற்றும் ஒரு சிங்களவர்களாக மொத்தம் ஆறு பொது மக்கள் கொல்லப்பட்டனர். இராணுவம் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டும் அதேவேளை புலிகள் கருணா குழுவை குற்றஞ்சாட்டுக்கின்றனர்.

இந்த மோதல்களை உற்சாகப்படுத்துவதில் இராணுவம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதா என்பது தெளிவில்லை. ஆனால் இராணுவ உயர்மட்டத்தினரில் சிலர் சுனாமி பேரழிவை விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு சிறந்த சந்தர்ப்பமாக நோக்குகின்றனர் என்பதில் சந்தேகம் கிடையாது. இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில், ஜே.வி.பி யும் ஏனைய சிங்கள தீவிரவாத கருவிகளும், விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் வழிவகையாக அரசாங்கம் இடைக்கால நிர்வாகம் அல்லது விடுதலைப் புலிகள் கோரும் எந்தவொரு சலுகையையும் வழங்கக் கூடாது என கோரியுள்ளன.

குமாரதுங்க கயிற்றின் மேல் நடந்துகொண்டிருக்கின்றார். அவர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை மீண்டும் தொடங்கக் கோரும் பெரும் வணிகர்கள் மற்றும் பெரும் வல்லரசுகளின் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ள அதே வேளை, ஜனாதிபதியும் மற்றும் அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பி யைப் போலவே சிங்களப் பேரினவாதத்தில் மூழ்கிப் போயுள்ளதோடு அதன் காரணமாக ஜே.வி.பி யின் விமர்சனங்களையிட்டும் அவர்கள் நுன்ணுணர்வுடன் உள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, ஜே.வி.பி யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாவிட்டால் ஒன்பது கட்சிகளை உள்ளடக்கிய வலுவற்ற ஆளும் கூட்டணி அதனது பாராளுமன்றப் பெரும்பான்மையை இழந்துவிடுவதோடு நொருங்கிப் போகவும் கூடும்.

குமாரதுங்க, பெப்பிரவரி 28 திட்டமிடப்பட்டிருந்த ஜே.வி.பி உடனான ஒரு கூட்டத்தில் பங்குபற்றாத அதே வேளை, ஏனைய அமைச்சர்களை சந்தித்த அவர் ஜே.வி.பி யை அமைதிப்படுத்துவதற்காக ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அது பேச்சுவார்த்தை மூலமான "இறுதித் தீர்வில்" உள்ளடங்காத வகையில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை பிரேரித்தது. இந்த சூத்திரம் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை விளைபயனுள்ள வகையில் நிராகரிக்கின்றது. ஜே.வி.பி இந்த அறிக்கையுடன் உடன்படுவதாக பிரகடனம் செய்துள்ள போதிலும், சுனாமி நிவாரண ஏற்படுகளுக்கான எந்தவொரு "பொதுக் கட்டமைப்பையும்" பிடிவாதமாக எதிர்க்கின்றது.

உண்மையில் எதற்கும் தீர்வுகாணப்படவில்லை. குமாரதுங்கவுக்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமானால் அவர் விடுதலைப் புலிகளுக்கு ஏதாவது சலுகைகளை வழங்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்தால் ஜே.வி.பி வெளியேறி அரசாங்கம் கவிழ்வதற்கான ஆபத்தை அவரே ஏற்படுத்துவதாக அமையும். அதே சமயம், இனவாத முரண்பாடுகளுக்கு சூடேற்றுவதும் மற்றும் கிழக்கில் நடைபெறும் படுகொலைகளும் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் இழுத்துத் தள்ள அச்சுறுத்தும் உக்கிரமான பதட்ட நிலைமைகளை உருவாக்கும் நடவடிக்கைகளாகும்.

டெயிலி மிரர் பத்திரிகையில் அண்மையில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கம், ஆளும் வட்டாரத்துக்குள்ளான மனவேதனைகளை வெளிப்படுத்தியது. "அவர்கள் (மக்கள்) தற்போதைய குழப்ப நிலை, முரண்பாடுகள் மற்றும் பதட்ட நிலைமைகளுக்கு மத்தியில் ஒதுக்கித் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது மேலும் மேலும் அவர்களுக்கு தெளிவாகிக்கொண்டிருக்கும் அதே வேளை, அவர்கள் முகம் கொடுத்துள்ள எரியும் பிரச்சினைகள் மேலும் மோசமான மற்றும் சிக்கலான நிலைமையை எட்டியுள்ளன. எல்லாக் கட்சிகளும் இளைஞர்கள் போல் செயற்பட்டு யதார்த்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதே இந்த நேரத்தின் தேவையாகும். இல்லையெனில் நாட்டின் எதிர்காலம் மங்கலாகிவிடும்," என குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும், டெயிலி மிரர் பத்திரிகை இந்த எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளைக் கொண்டிருக்கவில்லை. 1948 சுதந்திரத்திலிருந்து வேண்டுமென்றே இனவாத பகைமைகளை விளைவித்து வந்ததோடு இரு தசாப்தங்களாக இரத்தக்களரி யுத்தத்தை முன்னெடுத்த முழு ஆளும் வர்க்கமும், தன்னால் தீர்வுகாணமுடியாத ஒரு புதைச் சேற்றை உருவாக்கிவிட்டுள்ளது.

Top of page