ஐரோப்பா
:
பிரான்ஸ்
General strike in France as workers
continue protests against Raffarin government
ரஃபரன் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் எதிர்ப்புக்களை தொடர்வதால்,
பிரான்சில் பொது வேலைநிறுத்தம்
By Robert Stevens
11 March 2005
Use this version to
print |
Send this link by email |
Email the author
வேலை நேர மணிகளை இப்பொழுதுள்ள வாரத்திற்கு 35 மணி என்பதில் இருந்து
அதிகரிக்க வேண்டும், மற்றும் சுகாதார பாதுகாப்பு, ஓய்வூதிய உரிமைகள் உட்பட, பல சமூக நலத் திட்டங்கள்
கீழறுக்கப்பட வேண்டும் என்று பிரதம மந்திரி ஜோன்-பியர் ரஃப்ரனுடைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை
எதிர்த்து, மார்ச் 10ம் தேதி பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் பிரான்ஸ் முழுவதும் ஒரு பொது வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வேலைநிறுத்தமானது நாடுமுழுவதும் போக்குவரத்து மற்றும் பணிகளை 55
சிறுநகரங்களிலும், பெரு நகரங்களிலும் ஸ்தம்பிக்கச்செய்தது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள், பாரிசில்
150,000 உம் மற்ற இடங்களில் 800,000 என்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றதாக அமைப்பாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
ஒரு தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் இந்த நடவடிக்கை சமீபத்தியது
ஆகும். பெப்ரவரி 5ம் தேதி, 500,000 மக்கள் பிரான்ஸ் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
தொழிலாளர்களும், மாணவர்களும், பொது வேலை நிறுத்தத்திற்கு முன்னோடியாக, இந்த வார தொடக்கத்தில்
தொழில்துறை நடவடிக்கைகளையும் எதிர்ப்புக்களையும் நடத்தியிருந்தனர்.
மார்ச் 8ம் தேதி 165,000ல் இருந்து 200,000 மாணவர்கள், பல்கலைக்
கழகங்களிலும், உயர்நிலைப் பள்ளியிலும் பாடத்திட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக நாடுதழுவிய ஆர்ப்பாட்டங்களை
நடத்தினர். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் பாரிசில் போலீசார் கண்ணீர்ப்
புகைத் தாக்குதலை நடாத்தினர்.
முந்தைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த 35-மணி நேர
வார காலத்தில் பாதிப்பு ஏற்படும் வகையில், பெப்ரவரி 9ம் தேதி பாராளுமன்றத்தின் கீழ் பிரிவான தேசிய
சட்ட மன்றம், தனியார்துறை பணியாளர்கள் வேலைநேரத்திற்கு அப்பாலும் கூடுதல் பணத்திற்காக வேலைசெய்ய
அனுமதி கொடுக்கும் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த நடவடிக்கைகளுக்கு, மார்ச் 4ம் தேதி பிரான்சின் மேல்
மன்றமான செனட் ஒப்புதல் கொடுத்தது.
நேற்றைய பொது வேலைநிறுத்தம் முக்கிய தொழிற்சங்கங்களினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது;
அனைத்து முக்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் உள்ளடக்கிய தனியார், பொதுத்துறை சங்கங்களுக்கு இந்த
அழைப்பு கொடுக்கப்பட்டது.
பாரிஸ் நகரில், பயணிகள் இரயில்களும், சுரங்கப்பாதை தொழிலாளர்களும் 48 மணி
நேர தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். புறநகர் தடங்களில் 80 சதவிகிதப் பணிகள் தற்காலிகமாக
நிறுத்தப்பட்டிருந்தன, மெட்ரோ இயக்கிகள் மூலம்
இயக்கப்படும்
RATP பணிகளில்
75 சதவிகிதம் ஸ்தம்பித்துப் போயிற்று. பல இடங்களில் எந்த விதமான போக்குவரத்தும் இல்லை. தலைநகரில்
பேருந்துப் பணிகள் நான்கில் மூன்று என்ற விகிதத்தில் செயல்பட்டன; பல போக்குவரத்து அமைப்புக்களும் தெரு ஆர்ப்பாட்டங்களை
அடுத்து வேறு தெருக்கள் மூலம் இயக்குமாறு நிர்பந்திக்கப்பட்டன.
தெற்கு பிரான்சில் உள்ள நீஸ் நகரத்தில், எவ்விதமான பஸ் சேவையும் செயல்படவில்லை.
பாரிசுக்கு தெற்கே இருக்கும் ஓர்லி விமான நிலையம் மிக அதிக பாதிப்பிற்கு
உட்பட்டது; கிட்டத்தட்ட 75 சதவிகித விமானப் பணிகள் இரத்து செய்யப்பட்டு விட்டன. பாரிசின் முக்கிய விமான
நிலையமான சார்ல்ஸ் டு கோல் நிலையம் 75 சதவிகித செயற்பாட்டைத்தான் கொண்டிருந்தது; அதாவது ஒரு மணி
நேரத்தில் 38 விமானங்கள் வந்திறங்கின, 40 புறப்பட்டுச் சென்றன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பணியும் சராரசி
45 நிமிட தாமதத்திற்கு உட்பட்டிருந்தது.
இரயில் போக்குவரத்தும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. இரயில்வே ஊழியர்கள்
மார்ச் 9 புதன் தொடங்கி ஒரு 36 மணி நேர பணி நிறுத்தத்தை தொடங்கினர்.
TGV மிக விரைவு
இரயில்கள் கிட்டத்தட்ட 50 சதவீதம்தான் இயங்கின; பிராந்திய இரயில் ஒழுங்கமைப்பாளரான
RER சாதாரணமான
நடவடிக்கைகளில் 15ல் இருந்து 25 சதவிகிதம்தான் ஒழுங்காக செயல்பட்டன என்று அறிவித்தது.
பாரிசில் இருந்து லண்டன், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிரஸ்ஸல்ஸசுக்கு தொடர்புகள்
கொடுக்கும் ஈரோ ஸ்டார் இரயில் பணிகளும் வேலைநிறுத்தத்தினால், அதன் அட்டவணைக்குட்பட்ட சேவைகள் 10
சதவீதம் பாதிப்பிற்குள்ளாயின.
கலே துறைமுகம் 24 மணி நேரத்திற்கு, அதாவது செவ்வாய் மாலை 10 மணி வரை
மூடப்பட்டிருந்ததால், கால்வாயை கடக்கும் கப்பல் பிரிவு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு, பயணிகளும் சரக்குகள்
அனுப்புதலும் பாதிப்பிற்கு ஆளாயின. இங்கிலாந்தின் கப்பல் பயண நிறுவனமான
P&O, தன்னுடைய
பணிகள் பெரும்பாலும் இரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவித்தது. சரக்குப் போக்குவரத்துச் சங்கம் (FTA)
24 மணி நேர வேலைநிறுத்தம் என்பது சரக்கு நிறுவனங்களுக்கு 1
மில்லியன் பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்திவிடும் என்று தெரிவித்துள்ளது.
பொது மருத்துவமனைகளில் இருக்கும் பணியாளர்களும் எதிர்ப்பில் பங்கு பெற்றனர்,
வேலைநிறுத்த காலத்தில் மிக அவசரமான பணிகளை மட்டும்தான் செய்வோம் என்று உடன்பட்டிருந்தனர்; பல
பள்ளிகளிலும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, கல்விப் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்கங்களின் படி, மின்சார தொழிலாளர்கள் மின் உற்பத்தியில் வெட்டுக்களை
ஏற்படுத்தியதாக தெரிகிறது; தேசிய அஞ்சல் பணித்துறை தன்னுடைய பிரிவில் 15 சதவிகித ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு
ஆதரவு கொடுத்துள்ளதாக தெரிவித்தது.
வேலை நிறுத்தங்கள் தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கத் துறைகள், வங்கிகள்,
அச்சுக் கூடங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா அலுவலகங்கள் ஆகியவற்றிலும் நடைபெற்றன.
இந்தப் பொதுவேலைநிறுத்தம், பாரிசுக்கு 12 பேர் கொண்ட சர்வதேச ஒலிம்பிக்
குழு, பிரான்ஸ் 2012 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியுமா என்பது பற்றி மதிப்பீடு செய்ய வந்த
அதேநேரத்தில் நடைபெற்றது.
தொழிற்சங்கங்கள் இந்த வருகைக்கும் பொதுவேலைநிறுத்தத்திற்கும் தொடர்பு இல்லை
என்றும் IOC
வருகை தடைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது. இந்த அடிப்படையில், பாரிஸ் ஒலிம்பிக்
வாய்ப்பு கேட்கும் குழு அதிகாரிகள், போலீஸ் துறை இவற்றுடன் தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்புக் கொடுத்தன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளுபவர்கள் அணியும் வகையில், பாரிஸ் 2012
அடையாள உருவம் பொறித்த 10,000 T
சட்டைகளை வினியோகிக்க தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்தன.
CDFT
தொழிற்சங்கத் தலைவரான Francois Chereque,
IOC குழுவிடம், "எத்தகைய பாதிப்பும் இல்லாமல் இருக்கும்
வகையில் நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம். விளையாட்டுக்களைப் பொறுத்தவரையில்
CFDT யின்
மூதுரை, "நம்முடைய பூசல்களை ஒரு புறம் ஒதுக்கி வைப்போம் என்றுதான் இருக்கும்" என உறுதியளித்தார்.
தொழிலாளர்கள் தங்களுடைய உத்தியோகபூர்வ உரிமைகள், பொது நல உரிமைகளை
காத்தல் என்பதற்காக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு, மக்களிடையே பரந்த ஆதரவு உள்ளது.
CSA நிறுவனம்
ஒன்று L'Humanite
செய்தித்தாளுக்காக மார்ச் 2,3 ல் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரெஞ்சு மக்களில் 69 சதவீதத்தினர் வேலைநிறுத்தத்திற்கு
ஆதரவைத் தெரிவித்தனர்.
ரஃபரன் அரசாங்கத்துடன் வளர்ந்துவரும் அதிருப்தியை இந்த ஆதரவு சுட்டிக் காட்டுகிறது.
CSA
இன் ஆய்வுக்கூட இயக்குனரான ஜோன் டானியல் லெவி, இந்தக் கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடுகையில், "வளர்ச்சியில்
பலன்களை மறுபங்கீடு செய்யும் நிலை பற்றி மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. நிறுவனங்கள் சிறந்து முன்னேறிக்
கொண்டிருக்கும் அதே நேரத்தில் தங்களுடைய ஊதியங்கள் உயரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்." என்று
தெரிவித்தார்.
பிரான்சின் தொழில் மற்றும் சமூகவிவகாரத் துறை அமைச்சரான ஜோன் லூயி
போர்லூ, அரசாங்கத்தின் "தக்க மாற்றமுள்ள சீர்திருத்தங்களை" தொழிற்சங்கங்கள் ஏற்கும் என்ற நம்பிக்கையை
இந்த வாரம் புலப்படுத்தும் வகையில்: "தொழிற்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களே அன்றி விரோதிகள்
அல்லர்" என்று கூறினார்.
மார்ச் 9ம் தேதி, போர்லூ பல தொழில்களிலும் தொழிலாளர்களுடன் ஊதியம்
பற்றிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என்றும் அவற்றில் பங்கு பெறுமாறும் தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு
விடுத்தார்.
ஜனவரி மாதம் பிரான்சில் வேலையின்மை 10 சதவீதமாக அதிகரித்தது (2.6 மில்லியன்
பேர் வயதுக்கு வந்தோர்), இது ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமான வீதம் ஆகும். தொழிற்துறை அமைச்சகத்தில்
கிடைத்துள்ள புள்ளி விவரங்களின்படி, கடந்த ஆண்டு 39,000 வேலைகள்தாம் தோற்றுவிக்கப்பட்டன. பிரான்சின்
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி கடுமையான சரிவை ஏற்படுத்தும் என்று முன்கணிக்கப்பட்டுள்ளது.
See Also:
தொழிலாளர்களுக்கு ஒரு புதிய
அரசியல் முன்னோக்கு தேவை
சிராக் மற்றும் ரஃபரனின்
தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் பிரச்சினைகள்
Top of page |