World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்காAn appeal to students who oppose the war in Iraqஈராக்கியப் போரை எதிர்க்கும் மாணவர்களுக்கு ஓர் அழைப்பு11 March 2005சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் (Students for Social Equality) அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் நடக்கவிருக்கும் கூட்டங்களுக்கான அரசியல் அடிப்படை என்னும் முறையில் கீழ்க்காணும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அமெரிக்க வரலாற்றின் மிகுந்த வெட்ககரமான நிகழ்வுகளில் ஒன்றின் இரண்டாம் ஆண்டு நினைவை மார்ச் 19ம் தேதி குறிக்கிறது. இந்தக் குற்ற நடவடிக்கையின் விளைவுகள் யாவை? 1,500க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர். 10,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமுற்றுள்ளனர். கணக்கில் அடங்காத பல்லாயிரக்கணக்கான அமெரிக்க படையினர், மிருகத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டதாலும், அவற்றைக் கண்ணுற்றதனாலும் பெற்ற, மனோரீதியான வடுக்கள் அவர்களின் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர்களை உறுத்தும். குறைந்தது 100,000 ஈராக்கியர்கள் அந்நாட்டின் மீது அமெரிக்கப்படையெடுப்பின் நேரடி விளைவினால் மாண்டுள்ளனர். காயமுற்ற, உறுப்புக்களை இழந்த ஈராக்கியரின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படக்கூட இல்லை. "ஈராக்கிய சுதந்திர நடவடிக்கை" என்பது அந்நாட்டு மக்களுக்கு ஒரு பெரும் தீய கனா போல் நிரூபணம் ஆகியுள்ளது. 250,000 மக்களைக் கொண்டிருந்த பல்லூஜா நகரம் நவம்பர் மாதம் அமெரிக்க இராணுவத்தால் தகர்க்கப்பட்டு தரைமட்டமாகியுள்ளது. நியூ யோர்க் டைம்சின் கருத்தின்படி, மூன்று பெரிய கொடுஞ் சிறைமுகாம்களில் அமெரிக்கா 8,900 ஈராக்கியர்களை அடைத்து வைத்துள்ளது. பிறரது துன்பத்தில் இன்பம் காணும் தன்மை, மனித உயிரைப் பற்றிய பெரும் அசட்டைத் தன்மை இவற்றால் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு பண்பிட்டுக்காட்டப்படுகிறது. அபு கிரைப்பில் வக்கிரமான, இழிசெயல்கள் அமெரிக்க வீரர்களால் செய்யப்பட்டது ஏதோ ஒரு சில வெறிபிடித்த வீரர்களின் நடவடிக்கையால் ஏற்பட்ட விளைவு அல்ல. ஈராக்கியர்களுக்கும் மற்றும் அமெரிக்காவிற்கு விரோதிகள் என்று கருதப்பட்ட மற்றவர்களுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்ட சித்திரவதை அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் அனுமதி கொடுக்கப்பட்டதாகும். தங்கள் காலத்தில் நாஜிக்கள் இருந்தது போல் மிக மோசமான முறையில் சர்வதேசச் சட்டங்களை அவர்கள் மீறியதற்காக இந்தப் போரைத் திட்டமிட்டவர்களும் நடத்தியவர்களும் பொறுப்புக்கூறக் கட்டாயப்படுத்த வேண்டிய அரசியல் குற்றவாளிகளாவர். ஆனால் இந்தப் போரை எதிர்ப்பவர்களும், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து உடனடியாகத் திருப்பப் பெறவேண்டும் என்று போராடுவதற்கு மட்டும் இல்லாமல், இராணுவவாதம், போர் இவற்றிற்கு இறுதிப் பொறுப்பாக உள்ள முதலாளித்துவ அமைப்பை எதிர்க்கும் ஒரு புதிய, சக்தி வாய்ந்த அரசியல் இயக்கத்தைக் கட்டியமைப்பதற்கும் ஓர் ஆழ்ந்த மற்றும் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளனர். புஷ் நிர்வாகம் இன்னும் பெருகிய இராணுவத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது, முதலாவது எடுத்துக்காட்டில் ஈரான் மற்றும் சிரியா போன்ற ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக இவை நடத்தப்படும். புஷ் நிர்வாகத்தால் 2002ம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்ட முன்கூட்டியே தடுக்கும் போர் எனும் கொள்கைவழியை, முதலில் ஈராக்கில் பயன்படுத்தி, எதிர்கால இலக்குகளின் திறந்த பட்டியலுக்கு எதிரான ஒரு திருகுப்புரி வடிவிலான இராணுவ வலிந்துதாக்குதலுக்கு அரங்கு அமைத்துவிட்டார். குருதிசிந்தும் இத்தகைய தலையீடுகள் இறுதியில் இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த உலகப் போர்களை விடப் பேரழிவு விளைவுகளை தரக் கூடிய ஒரு புதிய உலக ஊழித்தீக்குத்தான் இட்டுச் செல்லும். புஷ் நிர்வாகத்தின் இராணுவவாத மற்றும் உலக மேலாதிக்க கொள்கை, அமெரிக்க ஆளும் தட்டிற்குள்ளே பரந்த ஆதரவைப் பெற்றுள்ளது. அமெரிக்க பெரு வணிக, நிதிய செல்வந்தத்தட்டின் நலன்களுக்கு இந்தக் கொள்கை மிகவும் சேவைசெய்வதாக உள்ளது; அவர்கள் முக்கியமான மூலப்பொருட்கள், அனைத்துக்கும் மேலாக எண்ணெய் மற்றும் குறைந்த ஊதிய தொழிலாளரை கொண்ட புதிய வளங்கள் இவற்றை அடைவதற்கு இராணுவ வன்முறையையும் பயன்படுத்துவர். இது அமெரிக்க பாணியிலான "சுதந்திர சந்தையைக்" கொண்டுள்ள முதலாளித்துவத்தை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படுத்துவதற்கு எந்தத் தடைகள் வந்தாலும் அவற்றை நொறுக்கவேண்டும், மற்றும் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் அமெரிக்காவின் பிரதான போட்டியாளர்களை வலிமை குன்றச் செய்யவேண்டும் என்ற அவர்களுடைய உந்துதலுடன் கைகோர்த்து நிற்கிறது. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி புஷ் நிர்வாகம் மற்றும் அதன் இராணுவவாதம், சமூக பிற்போக்குத்தனம், அரசாங்க அடக்குமுறை ஆகிய கொள்கைகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் வெளிப்பாடு ஆகும். இந்த நெருக்கடிக்கு அடிப்படையில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு பக்கங்கள் உள்ளன. முதலாவது, உலகப் பொருளாதார நிலையில் நீண்ட காலச் சரிவைச் சந்தித்து வரும் அமெரிக்கா; இது பெருமளவில் கடன்பட்டுள்ள நிலையிலும், யூரோ அமெரிக்க டாலருக்குப் போட்டி நாணயமாக வந்திருப்பதிலும் பிரதிபலித்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நிகழ்ந்த போர்கள் தன்னுடைய இராணுவ உயர்நிலையைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தப் பொருளாதார சரிவை எதிர்கொள்ளும் அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டினரின் முயற்சியைத்தான் உட்கொண்டிருக்கிறது. இரண்டாவது அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கும் சமூக சமத்துவமின்மை ஆகும். என்னுமில்லாது அதிகரித்த அளவில் அமெரிக்க சமுதாயத்தின் மிக உயர்மட்டத்தில் கட்டற்ற செல்வக்குவிப்பானது போருக்கும் வெளிநாடுகளில் சூறையாடலுக்கும் இட்டுச்செல்லும் அதே சமூகப் பொருளாதார நிகழ்ச்சிப்போக்கின் பகுதியாக இருக்கிறது. ஏகாதிபத்தியப் போரும், வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மையும் இறுதியில் ஜனநாயக அமைப்புக்களுடன் இயைந்து செல்ல முடியாதவை ஆகும். சமுதாயத்தின் செல்வம் வெளிநாட்டில் இராணுவ சாகசங்களுக்கு திருப்பிவிடுவது அதிகரிக்க, உள்நாட்டில் சமூக நிலைமைகள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் பெருமளவு தாக்குதல்கள் அதிகரிக்கும். போர் ஏற்படுதவற்கான காரணங்களை புரிந்து கொள்ளவது என்பது அதற்கு எதிராகப் போராடுவதற்கான ஒரு மூலோபாயத்தை வளர்ப்பதற்கான முன்நிபந்தனையாகும். போரையும், இராணுவவாதத்தையும், இத்தகைய தீமைகளுக்கு உரம் ஊட்டும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடாமல், எதிர்கொள்ள முடியாது. உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தை, போருக்கும் சமூக பிற்போக்கிற்கும் எதிராக ஐக்கியப்படுத்துவதற்கு, ஒரு சுயாதீனமான, சோசலிச அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்புவது அவசியமானதாகும். 2004 தேர்தலின் படிப்பினைகள் 2004 தேர்தலில் இருந்து படிப்பினைகள் கட்டாயம் பெறப்பட வேண்டும். பெப்ரவரி 2003ல் உலகம் முழுவதும் வெடித்த மகத்தான போர் எதிர்ப்பு இயக்கத்தின் ஆர்ப்பாட்டங்கள் முட்டுச்சந்துக்குள் செலுத்தப்பட்டதற்கு காரணம், அது ஜனநாயகக் கட்சிக்குப் பின்னாலும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரிக்காக வழிப்படுத்தப்பட்டதும்தான். புஷ்ஷும் குடியரசுக் கட்சியினரும், வலதுசாரி, போர் ஆதரவு நிறைந்த, கெர்ரி பிரச்சாரத்தால் வழங்கப்பட்டிருந்த, ஹோவர்ட் டீன் மற்றும் டெனிஸ் குஷிநிக் போன்ற "போரெதிர்ப்பு" ஜனநாயக் கட்சியினர் என்று அழைக்கப்பட்ட ஜனநாயகக் கட்சியினரால் ஆதரிக்கப்பட்ட, இடது புறத்தில் இருந்த அரசியல் வெற்றிடத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு, வெள்ளை மாளிகையை மீண்டும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும்கைப்பற்றி, சட்ட மன்றத்தின் இரு அவைகளிலும் வலிமையை ஈட்டிக் கொண்டனர். தேர்தல்களுக்குப் பின்னர், ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி வளைவரைபாதை இன்னும் தீவிரமடைந்துள்ளது. முக்கியமான "தாராளவாதிகளான" ஹில்லாரி கிளின்டன் போன்றவர்கள் பகிரங்கமாகவே கருக்கலைப்பு எதிர்ப்பு சக்திகளிடம் குழைந்துள்ளனர்; செனட் மன்றத்தில் ஜனநாயகக் கட்சியினர், சித்திரவதை ஆதரவாளர் ஆல்பேர்டோ கொன்சலேஸ், போலீஸ் ஆட்சிமுறைச் சிற்பி மைக்கேல் ஜெர்டோப் போன்றவர்களை மந்திரிசபையில் புஷ் நியமித்ததற்கு ஒப்புதல் கொடுத்துள்ளனர், மற்றும் கட்சித் தலைவர்கள் கான்ட்ரா போர் சதிகாரர் ஜோன் நெக்ரோபோன்டை தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமித்ததற்கு பாரட்டுக்களை தெரிவித்துள்ளனர். புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கையுடன் ஜனநாயகக் கட்சியினர் தங்களை இன்னும் கூடுதலான முறையில் நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டு ஒற்றுமையைக் காண்கின்றனர். அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து திரும்பப் பெறுவதற்கு ஒரு கால அட்டவணை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று எதிர்த்த பொழுதிலும், நிர்வாகம் புதிதாக 83 பில்லியன் டாலர்களை போர் செலவுகளுக்கு கேட்டபோது அதற்கு ஆதரவளித்து வாக்குக் கொடுப்பேன் என்று தெளிவுபடுத்திய பொழுதும், கெர்ரியே ஜனநாயக் கட்சியின் நிலைப்பாட்டைச் சுருக்கமாக தெளிபடுத்தினார். கெர்ரியின் வெற்றி அமெரிக்க அரசாங்கத்தின் போர்க் கொள்கையில் எந்த குறிப்பிடத்தக்க வேறுபாட்டையும் கொண்டு வந்திருக்காது என்பதற்கு இதைவிட தெளிவான நிரூபணத்தை ஒருவர் கேட்க முடியாது. இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்திற்கு, அமெரிக்க பெருவணிக, நிதிய தன்னலக் குழுக்களின் நலன்களுக்கு பாடுபடும் இரண்டு பெரிய கட்சிகளில் இருந்தும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான ஒரு போராட்டம் தேவைப்படுகிறது. சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் என்னும் அமைப்பு தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான சோசலிச இயக்கத்தை கட்டியமைக்கும் சோசலிச சமத்துவ கட்சியின் முயற்சிகளுக்கு ஆதரவைக் கொடுக்கிறது. அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் போருக்கு எதிரான தங்கள் போராட்டத்தை, புஷ் நிர்வாகத்தையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களையும் வன்மையாக எதிர்க்கும், உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் மக்களின் பரந்த மக்களுடன் கட்டாயம் இணத்துக் கொள்ளவேண்டும். போருக்கு எதிரான போராட்டம் அமெரிக்க மக்களின் சமூக நிலைமைகள் மீதான தாக்குதல்களுக்கு - சமுதாய பாதுகாப்பு, மருத்துவ நலம், மருத்துவ உதவி, பொதுக் கல்வி, ஓய்வூதியத் தொகைகள், தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் இவற்றின் மீது நடத்தப்படும் இடையறா தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துடன் தொடர்புடையதாக கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தின் போலீஸ்-அரசு கொள்கைகளுக்கு எதிராக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதுடனும், அது கட்டாயம் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். இதன் பொருள் போருக்கு எதிரான போராட்டம் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க வழிநடத்தப்படும் ஒரு சமுதாயக் கொள்கையுடன், தனி நபர் சொத்துக் குவிப்பிற்கான மற்றும் இலாபத்திற்கான உந்துதலுக்கெதிராக மனிதத் தேவைகளுக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு கொள்கையுடன், அதாவது சோசலிசக் கொள்கையுடன் கட்டாயம் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். போரை எதிர்ப்பதற்கு வழிமுறைகளை காணவிரும்புபவர்களையும், சமூக சமத்துவத்திற்கும், ஜனநாயக உரிமைகளையும் காப்பதற்குப் போராட விரும்புவர்களையும் உங்கள் பகுதியில் சமூக சமத்துவத்திற்கான மாணவர்கள் நடத்தவிருக்கும் பொதுக் கூட்டத்திற்கு வருகை தருமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம். |