World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஐரோப்பா : ஜேர்மனிGerman Chancellor Schröder's business trip to the Gulf States வளைகுடா நாடுகளுக்கு ஜேர்மன் அதிபர் ஷ்ரோடரின் வணிகப் பயணம் By Ulrich Rippert and Peter Schwarz தன்னுடைய நான்கு நாள் ஐரோப்பிய பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் முடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் அராபிய தீபகற்பத்தில் தன்னுடைய ஏழு-நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். ஏழு வளைகுடா நாடுகளுக்கு அவர் பயணித்திருந்தார், இவற்றில் ஐந்து நாடுகள் இதற்கு முன் ஒரு ஜேர்மனிய அரசாங்க தலைவரை வரவேற்றதில்லை. புஷ், தான் திரும்பிச் செல்லுகையில், குறைந்த கால அளவு மைன்சில் இருந்தபோது மறைக்க முடியாமல் போன அமெரிக்க ஜேர்மனிய உறவுகளில் அதிகரித்துவிட்ட பதட்டங்களுக்கான காரணங்களை, ஷ்ரோடரின் பயணம் இன்னும் கூடுதலான முறையில் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. இரு அரசாங்கங்களும் ஒருவரை நம்பச்செய்யும் உத்தியோகபூர்வ பிரச்சாரம் போல் சமாதானம், உறுதி, ஜனநாயகம் என்பவை ஒன்றும் ஆபத்துக்குள்ளாக்கப்படவில்லை; அப்பட்டமான பொருளாதார, மூலோபாய நலன்கள்தான் ஆபத்துக்குள்ளாக்கப்பட்டுள்ளன என்பது புலனாகும். வளைகுடாப் பகுதி உலகத்தின் மிக அதிகமான எண்ணெய் இருப்புக்களை கொண்டுள்ளது; அதுதான் இருபத்தியோராம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தின் மிக முக்கியமான மூலோபாய மூலப்பொருள் ஆகும். மேலும் எண்ணெயின் உயர்ந்த விலையினால் பில்லியன் கணக்கான டாலர்கள் அவர்கள் கருவூலத்தில் வழிந்து ததும்புவதால், வளைகுடா நாடுகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உலகின் மிகப் பெரிய சர்வதேச முதலீட்டாளர்களாகவும், மேற்கு நாடுகளின் பொருட்களை வாங்குபவர்களாவும் உள்ளனர். ஷ்ரோடரின் பயணம் ஈராக்கிய போர் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கை பற்றிய ஜேர்மனியின் உடன்பாடற்ற கருத்துக்களில் இருந்து சில ஆதாயங்களை அடைவதற்கான நோக்கத்தைக் கொண்டது. பொதுவாக அமெரிக்காவின் பிரத்தியேகமான இடத்தில், பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதன் செல்வாக்கின் கீழ் உறுதியாக வைப்பதற்கு அமெரிக்க பெருமுயற்சிகள் கொண்ட பிராந்தியத்தில், ஜேர்மன் அதிபரின் பயணம் அனுமிதியின்றி பிறர் நிலத்தில் நுழைபவருடையது போலக் கருதப்படுகிறது. பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புடைய, போரினால் சிதைவுற்றிருக்கும் தன்மையை மாற்றுவதற்கான, ஈராக் மறுசீரமைப்புத் திட்டங்களில் மிகப் பெரிய விகிதம் அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு என்றே அளிக்கப்பட்டு விட்டன; சிறு அளவு பிரிட்டனுக்குக் கொடுக்கப்பட்டன. தன்னுடைய வளைகுடா பயணத்தின் இலக்குகளைப் பற்றி வெளிப்படையாக விவாதித்த வகையில் ஷ்ரோடர் சிறிதும் நாணமற்றவராக இருந்தார். தன்னுடைய பயணத்தில் உண்மை நோக்கத்தை பொதுவாக தூதரக நயம்பாடுகளில் மறைப்பது போல் கொள்ளப்படும் முயற்சிகளை ஷ்ரோடர் கொள்ளவில்லை. 70 ஜேர்மனிய பொருளாதாரத்தின் பிரதிநிதிகள் தன்னுடன் புடை சூழ்ந்து வர, அவருடன் சென்ற பெரிய நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியது போல், "பாலைவனத்தின் வழியே பெரும் வேகத்துடன் விரைந்தார்"; ஆளும் சர்வாதிகாரிகளிடம் சொந்த நன்மையினை கருதி நல்லெண்ணம், அன்பு, ஆதரவைப் பெற்றமை, "ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டது" என்ற முத்திரைகளைக் காட்டவிருக்கும் ஆலைகளைத் திறப்பது, மூலதனத்திற்கு முன் முயற்சிகளை கொள்ளுவது, விற்பனை ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டமை, ஜேர்மனிய உற்பத்திப் பொருட்கள், பணிகள் இவற்றை விற்க முடியுமா என்று கூர்ந்து பார்வையிட்டமை - மிக விரைவில் காந்த முறை உயர்வின்படி (Maglev) இயங்கும் இரயில் முறையிலிருந்து ஆலைகள், விமான நிலையக் கட்டமைப்புக்கள், மிக நவீனமான ஆயுதங்கள் வரை இவற்றில் அடங்கும்) போன்றவை பயணத்தில் நிகழ்ந்த சம்பவங்களாகும். அதிபருடன் சென்றிருந்த செய்தி நிருபர் ஒருவர், அவரை "தன்னுடைய அழிக்க முடியாத வாக்குவம் கிளீனரை (vacuum cleaner) நீங்கள் வாங்க வேண்டும் என்று வற்புறுத்தும் சென்று விற்கும் விற்பனையாளருடன்" ஒப்பிட்டுப் பேசினார். Sueddeutsche Zeitung கட்டுரையாளர் Ulrich Schafer இன் கருத்தின்படி: "எங்களுடைய வாக்குவம் கிளீனர் எதையும் செய்யும். ஜேர்மன் பொருளாதாரம் அனைத்தையும் உறிஞ்சி எடுத்துக் கொண்டுவிடும்." இப்பகுதியில் அமெரிக்காவின் ஆக்கிரோஷமான நடவடிக்கைகள் பல அரேபிய ஆட்சிகளையும் உறுதிகுலைக்குமாறு செய்துள்ளன. அமெரிக்கா இன்னும் கூடுதலான முறையில் இப்பகுதியில் உறுதித் தன்மையை குலைத்தாலோ அல்லது லெபனான், சிரியா மற்றும் ஈரானில் இப்பொழுது முயலப்படுவது போல், இன்னும் பல "ஆட்சி மாறுதல்களை கொண்டுவந்தாலோ", தங்களுடைய அதிகாரமும் பறிபோய்விடுமோ என்று அவை அஞ்சுகின்றன. இஸ்ரேலுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதும் இடைவிடாத பதட்டத்துக்கு ஒரு காரணமாக உள்ளது. ஜேர்மனிய பொருட்கள வழங்கல், ஜேர்மனிய நிறுவனங்களில் முதலீடு செய்தல், வெளிநாட்டுச் செலாவணியை டாலர் இருப்புக்களில் இருந்து யூரோக்களுக்கு மாற்றிக் கொள்ளுவதில் உதவுதல் போன்ற பல ஆதாயங்களை தருவதாக ஷ்ரோடர் கூறியிருப்பது, அமெரிக்காவில் இருந்து விலகி ஜேர்மனியின்பால் சார்பைக் கொள்ளக்கூடிய வகையில் வளைகுடா நாடுகளை ஈர்க்கும் முயற்சியாக பிரதிபலிக்கிறது. அதிபருடன் பயணத்திருந்த Handelsblatt என்னும் ஜேர்மனியின் முன்னணி நிதித் தொடர்பு பத்திரிகையின் நிருபரின்படி, இப்பகுதிக்கு "மிகுந்த மூலோபாய முக்கியத்துவத்தை" ஜேர்மனிய அரசாங்கம் அளிக்கிறது. Sueddeutsche Zeitung ல் வந்துள்ள ஒரு கருத்து இதை இன்னும் தெளிவாகக் கூறுகிறது: "ஜேர்மனிய நிறுவனங்களின் பொருளாதார சக்தியை ஓர் இரண்டாம் பணிக்காக அதிபர் பயன்படுத்திக் கொள்கிறார். அவர் ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசை உலக அரசியலில் மத்திய சக்தியாக உறுதிப்படுத்த விரும்புகிறார். நாட்டின் பொருளாதார வலிமையில் இருந்து வெளிப்படும் அரசியல் வலிமையையும் விழைவுகளையும் எடுத்துக் கொண்டு, உலக ஏற்றுமதியில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள அதன் நிலையையும், ஜேர்மனிய நிறுவனங்களின் புகழையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் ஷ்ரோடர் விரும்புகிறார். எனவேதான் அவருக்கு முன்னால் பதவியில் இருந்தவர்களைவிட, ஜேர்மனிய நலன்களை தெளிவாக, உரத்த ஒலியில் எடுத்துரைக்கிறார்." என்று அப்பத்திரிகை கூறியுள்ளது.ஆனால் அதிபரின் பயண விளைவுகள் முழு வெற்றி எனக் கூறமுடியாது. அவருடைய பயணத்தின் முதல் கட்டமான செளதி அரேபியாவில், சில வாய்ச்சொல் உறுதிமொழிகளைவிட ஷ்ரோடருக்கு அதிக பலன்கள் கிடைக்கவில்லை. சர்வாதிகாரமும், ஊழலும் நிறைந்த செளதி முடியாட்சி அமெரிக்கக் கொள்கையின் விளைவுகளைப் பற்றிப் பயப்படுகிறது; ஆனால் வாஷிங்டனுடைய கருணையும் ஆதரவும் இல்லாவிட்டால் தான் அதிகாரத்தில் தொடர முடியாது என்பதையும், ஜேர்மனியோ மற்ற ஐரோப்பிய நாடுகளோ அமெரிக்காவினை பதிலீடு செய்யக்கூடிய அளவுக்கு இல்லை என்பதையும் அது அறிந்துள்ளது. உலகத்தின் எண்ணெய் இருப்புக்களை மிக அதிகமாகக் கொண்டுள்ள இந்த நாடு, மத்திய கிழக்கில் ஜேர்மனியின் முக்கிய வணிகப் பங்காளியாக இருந்தபோதிலும், 9/11 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பு சரிந்துள்ளது. இன்னும் கூடுதலான முறையில் செளதி தங்களுக்கு ஊக்கம் தரவேண்டும் என்று அதிபர் கோரியுள்ளார். ஜேர்மனிய நிறுவனங்களில் தங்கள் மூலதனத்தை கூடுதலாக முதலீடு செய்யவேண்டும் என்றும் அவர் செளதி இளவரசர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். "வளகுடா நாடுகளில் இருந்து மூலதனம் ஜேர்மனிக்கு பாய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று அவர் கூறினார். Hanelsblatt குறிப்பிட்டுள்ளபடி அத்தகைய முதலீடு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும்; "ஏனெனில் இந்த நாடுகள் பொதுவாக நிறுவனங்களின் இலாபங்கள் வந்து கொண்டிருக்கும் வரை தொழில் கொள்கைகளில் தலையிடுவதில்லை" அவற்றில் அவை முதலீடு செய்யும். அமெரிக்காவின் அழுத்தத்தை ஒட்டி ஈரானில் இருந்த அதனுடைய நிதி ஆதரவாளர்களிடம் இருந்து Thyssen-Krupp பெருநிருவனத் தொழில் அமைப்பு விலகியுள்ளது பற்றி "ஜேர்மனிய அரசாங்க வட்டாரங்கள்" வருந்தியுள்ளதாகவும் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.அரசியலிலும், பொருளாதாரத்திலும் ஆதிக்கம் கொண்டிருக்கும் அனைத்து முக்கிய பதவிகளையும் தன்னகத்தே கொண்டு நாட்டை இரும்புப்பிடியில் வைத்திருக்கும் செளதி அரேபிய முடியாட்சிக் குடும்பத்தின் உள் கொள்கைகளில் ஜேர்மனி தலையீடு செய்யாது. சர்வதேச பொதுமன்னிப்பு சபை நாட்டில் நடக்கும் மனித உரிமைகள் மீறல் பற்றியும் மரண தண்டனை அகற்றப்படுதல் பற்றியும் வினாவை ஷ்ரோடர் எழுப்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு ஷ்ரோடர் மெளனமாக இருந்துவிட்டார். அந்நாட்டில் பெருகி வரும் சமூகப் பதட்டங்கள் ஜேர்மனிய மூலதனத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்ற கவலையை மட்டுமே அவர் தெரிவித்தார். எண்ணெய் வருவாய்கள் பெருகிவிட்ட போதிலும்கூட, செளதி மக்களின் சமூக நிலை கணிசமாக சரிந்து கொண்டிருக்கிறது. வேலையின்மை 20ல் இருந்து 25 சதவிகிதம் என்ற நிலையில் உள்ளது; அதிக அளவிலான செளதியர்கள் இப்பொழுது சேரிப்பகுதிகளில் வசித்து வருகின்றனர்; இந்த இடங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கோஷங்களுக்கு உரம் கொடுக்கும் வளமான நிலப்பகுதியாக உள்ளன. மேலை நாடுகளின் வணிக அமைப்புக்களும் அவற்றின் பிரதிநிதிகளும் அண்மைக் காலத்தில் பயங்கரவாத தாக்குதல்களின் இலக்குகளாக பலமுறையும் இருப்பதால், ஷ்ரோடர் செளதி அரசாங்கத்தை ஜேர்மனிய முதலீட்டாளர்களுக்கு இன்னும் நல்ல முறையில் சட்டபூர்வ பாதுகாப்பு கொடுக்கும் நிலையை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். "நல்ல முறையில் ஆராயும் திறன் இருந்தால், முதலீட்டுச் சூழல் தேர்ந்ததாக இருக்கும்" என்று அவர் குறிப்பிட்டார். "சீர்திருத்த வழிவகைகள்" தொடரவேண்டும் என்று அழைப்பு விடுத்த ஷ்ரோடர், பல நூற்றாண்டுகளாக நிலைபெற்று வளர்ச்சியடைந்துள்ள சமூக நிலைமைகள் ஒரே இரவில் மாற்றப்பட்டுவிட முடியாதவை என்பதைத் தான் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆயினும்கூட, ஜேர்மன் அதிபருடன் சென்றிருந்த வணிகப் பிரதிநிதிகள் மூன்று ஒப்பந்தங்களில் மட்டுமே கையெழுத்திட்டனர், இவற்றின் மொத்த மதிப்பு 18 மில்லியன் யூரோக்கள் ஆகும். அதிபருக்கு நெருக்கமானவர்களின் படி, இன்னும் சில செயல்திட்டங்கள் "குழாய் வழிப்பாதையில்" இருக்கின்றன. செளதி அரேபியா கிட்டத்தட்ட 250 பில்லியன் யூரோக்களை அடுத்த 15 ஆண்டுகளில் முதலீடு செய்யவிரும்புகிறது: இதில் பெரும்பகுதி அடிப்படை கட்டுமானப் பணிகளில் செலவிடப்படும். இப்பொழுது நாடு முழுவதும் ஒரே ஒரு இரயில் பாதைதான் தலைநகர் ரியாத்தையும் கிழக்கில் இருக்கும் டம்மனையும் இணைத்து உள்ளது. ஜேர்மனிய தொழில்துறை, திட்டமிடப்பட்டுள்ள இரயில்வே போக்குவரத்து வளர்ச்சியினால் தான் நலன்களைப் பெறலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளது. ஷ்ரோடர் விஜயம் செய்த குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் (UAE), மற்றும் ஏமன் போன்ற சிறிய அரபு ஷேக் நாடுகளில் வணிகம் சிறப்பாக இருந்தது- அதேபோல ஏமனிலும் சிறப்பாக இருக்கிறது. அராபிய தீபகற்பத்தின் முனையில் இருக்கும் ஏழ்மை நாடான ஏமன், ஒரு Bremen கப்பல்கட்டும் தளத்தில் இருந்து 100 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய 10 ரோந்துப் படகுகளை வாங்குவதாக இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்டுகள், Rohde & Schwarz நிறுவனத்தில் இருந்து 100 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய தகவல் தொடர்புபொருட்கள், Rheinmetall இல் இருந்து மேலும் 160 மில்லியன் யூரோக்கள் மதிப்பு உடைய 32 Fuchs பீரங்கி டாங்குகள் ஆகியவற்றை வாங்குவதாக இருக்கிறது. ஆயினும் டாங்குகள் வாங்குவதற்கு ஜேர்மனியின் கூட்டாட்சி பாதுகாப்புக் குழுவின் அனுமதி தேவையாகும். ஐக்கிய அரபு எமிரேட்டை பேர்லின் தன்னுடைய "மூலோபாயப் பங்காளி" என்று கருதுகிறது; ஜேர்மனிய பாதுகாப்புப் படைகள் இப்பொழுது 420 ஈராக்கியர்களுக்கு அங்கு, படைத்தகை இயக்கவியலில் (logistics) பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. நிலக்கண்ணிகளை அகற்றுவதில் சிறப்புப் பயிற்சி கொடுப்பது பற்றியும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொருளாதார, இராணுவ ஒத்துழைப்புக்களை தவிர, எமிரேட்டுக்கள் தங்கள் நாட்டின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை தீவிரப்படுத்த ஆர்வமுடன் உள்ளனர்; இதையொட்டி இப்பகுதிக்கு இந்த ஆண்டு 500,000 ஜேர்மனிய சுற்றுலாப் பயணிகள் வருவர் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். முதல் வளைகுடாப் போரில் இருந்து அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும் குவைத்தில், ஷ்ரோடர், நாட்டின் மின்சாரத் தேவையில் 10 சதவிகிதத்தை உற்பத்தி செய்யும், சீமன்சால் கட்டமைக்கப்பட்டுள்ள (Gas Turbine Power Station) எரிவாயு விசைச்சக்கரம் கொண்ட மின் நிலையம் ஒன்றைத் திறந்து வைத்தார். ஜேர்மன்-குவைத் ஒற்றுமையை அதிபர் புகழ்ந்து கொண்டிருக்கும்போதே, ஒரு மின் நிறுவன நிலையத்திற்குத் தேவையான Transformers, Switchgear வழங்குவதற்கான 70 மில்லியன் யூரோக்கள் மதிப்புடைய மற்றொரு ஒப்பந்தத்தில் சீமன்ஸ் கையெழுத்திட்டது. வணிகத்தை விட முக்கியமான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டன; ஜேர்மன் அரசாங்கத்தால் நடாத்தப்படும் சர்வதேச ஒளிபரப்பு அமைப்பான Deutsche Welle அரபு மொழி தொலைக்காட்சித் திட்டத்தை குவைத்தில் இருந்து ஆரம்பிக்க இருக்கிறது; நாள் ஒன்றிற்கு மூன்று மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் 20 நாடுகள் பயனடையும். "ஜேர்மன்-அரேபிய உறவுகளில் இது ஒரு புதிய கட்டம்" என்று ஷ்ரோடர் கூறினார். குவைத், கத்தார், பஹ்ரைன் இவற்றில், புதிய போக்குவரத்துத் தொடர்புகள் கட்டமைக்கப்படுவது பற்றி பேச்சுவார்த்தைகள் முக்கியமாக நிகழ்ந்தன. குவைத்தின் தொழில்துறை மந்திரி அப்துல்லா தாவீத் குவைத்திற்கும் ஈரானுக்கும் ஈராக் வழியே செல்லும் இருப்புப் பாதை ஒன்றை அமைக்கும் முயற்சி பற்றி ஆர்வத்தை எழுப்பியுள்ளார்; இது ஜேர்மன் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படலாம் என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். கத்தாரிலும், பஹ்ரைனிலும், இருநாடுகளையும், ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுடன் இணைக்கும் சாத்தியமுள்ள "விரைவுப் பயண வளைகுடா" திட்டம் (Transrapid Gulf system) பற்றியும் விவாதங்கள் நடைபெற்றன. மூன்று நாடுகளையும் இணைக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சிகளில், ஷ்ரோடர் தனிப்பட்ட முறையிலும் ஆர்வத்தைக் காட்டியுள்ளார். ஜேர்மன் அரசாங்கமும் காந்த சக்தியிலான இந்த விரைவுப் பயண போக்குவரத்து முறையை உள்நாட்டில் செய்யமுடியும் என நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தத் திட்டம் பில்லியன் கணக்கில் அரசாங்க உதவித்தொகையுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட போதும், உயர் செலவினங்கள், சுற்றுச் சூழல் பிரச்சினைகள், இப்பொழுதுள்ள ICE உயர் வேக இரயில் போக்குவரத்திலிருந்து வரும் போட்டி ஆகியவற்றால் செயலுக்கு வர முடியவில்லை. இதுகாறும் சீனாவில் ஷாங்காய் புறநகர்ப் பகுதியையும் விமான நிலையைத்தையும் தொடர்பு படுத்தியுள்ள ஒரு குறுகிய நீளத்தில்தான் இந்த Transrapid system நடைமுறையில் இருக்கிறது. Transrapid எனப்படும் விரைவுப் பயணத்திட்டத்தை, சீமன்ஸுடன் இணைந்து செயல்படுத்தும் Thyssen-Krupp தன்னுடைய அலுவலகங்களை கத்தாரின் தலைநகரான டோஹாவிலேயே அமைப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. பஹ்ரைனுக்கும் கத்தாாருக்கும் இடைய ஒரு மாக்லீவ் தொடர்பு (காந்த எழுச்சி உந்துதல்) பரிசீலனையில் இருப்பதாகவும், இதன் மதிப்பீடு 4.4 பில்லியன் யூரோக்கள் என்றும், இரு நாடுகளும் ஏற்கனவே 45 கிலோமீட்டர் பாலம் ஒன்றை பாரசீக வளைகுடாவில் பஹ்ரைனையும் கத்தாரையும் இணைக்கும் வகையில் கட்ட சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஜேர்மனிய வணிகப் பெருங்குழுவினரின் கருத்தின்படி, 800 கி.மீ. நீளமுள்ள மாக்லேவ் பாதை ஐக்கிய அரபு எமிரேட்டுகள் வழியாக கட்டப்பட முடியுமா என்பது பற்றிய ஆய்வு அறிக்கை தயாரிப்பை கத்தார் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இவ்வளவு நீளம் உடைய தொடர்புப் பாதை அமைப்பதற்கு 10 பில்லியன் யூரோக்கள் செலவாகும். வடக்கே குவைத்தில் இருந்து தெற்கே ஓமன் வரை 2,000 கிலோமீட்டர் நீளத் தொடர்பு வழித்தடம் பற்றியும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஜேர்மன் நிறுவனங்கள் இப்பகுதியில் இரயில்வே பாதை அமைப்பில் காலூன்றினால், அதற்கான வரலாற்று முன்னோடிகளும் இருக்கின்றன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு (1900த்தில் இருந்து 1908க்குள்), புகழ்பெற்ற "Hedjaz" இருப்புப் பாதை கட்டப்பட்டது. ஒற்றை இரயில் பாதை டமாஸ்கசை புனித மெதினா நகரத்துடன் இணைத்தது. மெக்காவிற்கு வருகை தரும் புனிதப் பயணிகள் கொடுத்த நன்கொடைகள் மூலம் அமைக்கப்பட்ட இந்தப் பாதை முக்கியமாக அரேபியத் தீபகற்பத்தின் மேற்குக் கடலோரப் பகுதிக்கும், மெதினா நகரத்திற்கும் துருக்கியப் படைகளை அனுப்பி வைத்தது. முதல் உலகப் போரின் போது இது அழிக்கப்பட்டு விட்டது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர்தான் கடைசி ஜேர்மன் பேரரசர் இரண்டாம் வில்ஹெல்ம், பாக்தாத் இரயில் பாதையைக் கட்டமைத்திருந்தார். இது ஜேர்மனிய வெளிநாட்டுக் கொள்கைக்கு கெளரவம் அளித்த திட்டம் என்று மட்டுமின்றி, மத்திய கிழக்கின் எண்ணெய் இருப்புக்களுடன் தொடர்பு கொள்ள உத்திரவாதம் செய்ததால், ஜேர்மனிய ஏகாதிபத்திய விரிவாக்க திட்டங்களின் ஒரு முக்கிய கூறுபாடாகவும் இருந்தது. அந்த நேரத்தில் ஜேர்மனியின் போட்டியாளர்களாக இருந்த பிரான்ஸ், பிரிட்டன் இவற்றுடன் வன்முறை பதட்டங்களுக்கு இது காரணமாக இருந்தது; பின்னர் இந்த பதட்டங்கள் முதல் உலகப் போரில் வெடித்தன. Siemens, Krupp மற்றும் Deutsche Bank ஆகியவை இந்த திட்டங்களில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தன. வளைகுடா நாடுகளில் ஷ்ரோடர் மேற்கொண்ட பயணம், கடந்த மாதம் முனீச் பாதுகாப்பு மாநாட்டில், இன்னும் கூடுதலான அதிகாரமும் செல்வாக்கும் ஜேர்மனிக்குத் தேவை என்று அவர் முழங்கிய கோரிக்கைகள் தீவிரச் சிந்தனைக்கு உட்பட்டவை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் வரலாறு தன்னை மீண்டும் மீண்டும் வெறுமனே அதேபோல் வெளிப்படுத்திக் கொள்ளுவதில்லை. ஆயினும்கூட, சந்தைகளுக்கும், பொருளாதாரச் செல்வாக்கிற்குமான போராட்டத்தில் பெரிய சக்திகளுக்கிடையிலான போட்டி தவிர்க்கமுடியால் சர்வதேச பதட்டங்களை அதிகரிப்பதுடன், இராணுவ மோதல்களின் வளர்ச்சிக்கும் வழி வகுத்துவிடும். |