World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

A special report from Poland

Part 2: the Opel factory in Gliwice

போலந்திலிருந்து ஒரு சிறப்பு அறிக்கை

பகுதி 2: கிளிவிசில் உள்ள ஓப்பல் தொழிற்சாலை

By Tadeusz Sikorski and Marius Heuser
4 February 2005

Back to screen version

WSWS செய்தியாளர்கள் சென்ற ஆண்டு இறுதியில் போலந்திற்கு நேரில் சென்று ஒரு இரண்டு பகுதிகளைக் கொண்ட கட்டுரை தொகுப்புகளை வழங்கினர். அதன் முதல் கட்டுரை தமிழில் மார்ச் 7-ல் "சைலேசியாவில் சமூகத் துயரம்" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இரண்டாம் பகுதி, கிளிவிசிலுள்ள ஓப்பல் ஆலையிலிருந்து நேரடியாக தரப்பட்ட விவரங்கள் அடங்கிய கட்டுரை கீழே வெளியிடப்படுகிறது.

சென்ற ஆண்டு நவம்பரில் தனது ஐரோப்பிய ஒன்றிய பணிகளை மறுசீரமைப்பு செய்யப்போவதாக ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்ததும் ஏறத்தாழ ஒவ்வொரு தொழிற்சாலையும் பாதிக்கப்பட்டது. என்றாலும் தெற்கு போலந்து மாநிலமான சிலாஸ்கி இலுள்ள கிளிவிஸ் தொழிற்சாலையில் எந்தவிதமான ஆட்குறைப்பும் செய்யப்படவில்லை. இந்த முடிவிற்கு காரணம் ஒவ்வொரு ஊழியருக்கும் ஆகும் உற்பத்தி செலவினம்தான். கிளிவிசியில் ஒரு தொழிலாளிக்கு ஆகும் செலவு ஜேர்மனியின் Bochum, ஓப்பல் தொழிற்சாலை தொழிலாளி ஒவ்வொருவருக்கும் ஆகும் செலவில் 15.6 சதவீதம்தான். போலந்து தொழிற்சாலையில் சராசரியாக ஒரு மாதத்திற்கு ஒரு தொழிலாளி 2,800 ஜிலோட்டி (தோராயமாக 700 யூரோக்கள்) ஊதியமாக பெறுகிறார். இந்த ஊதியங்களை கொண்டு மிகப் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் தாங்கள் தயாரித்துக் கொண்டுள்ள காரையே வாங்குவதற்கு நினைத்துப் பார்த்தால் கூட நெருங்கி வர முடியாது.

1989-ல் கிழக்கு ஐரோப்பிய ஸ்ராலினிச அரசுகள் சிதைந்துவிட்ட பின்னர் சிலாஸ்கி இதற்கு முன்னர், முன் என்றுமிராத சமூக பின்னடைவை சந்தித்தது. பழைய ஆட்சியின்கீழ் போலந்தின் சுரங்க மற்றும் எஃகு தொழிற்துறை இதயம் போல் அது விளங்கியது. சுரங்கத் தொழிலாளர்கள் சமுதாயத்தில் ஒரு சலுகைமிக்க தட்டினராக நடத்தப்பட்டனர், உயர்ந்த ஊதியங்கள் சிறந்த சலுகைகள் கிடைத்தன. என்றாலும் 1989 முதல்---போலந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சேர்ந்துவிட்ட பின்னர் குறிப்பாக இருபதுகள் கணக்கில் சுரங்கங்களும், தொழிற்சாலைகளும் மூடப்பட்டன, அல்லது மறுசீரமைப்பு செய்யப்பட்டன, இதனால் பரந்த அளவிலான கதவடைப்பு செய்யப்பட்டது. தற்போது சிலாஸ்கியில் அதிகாரபூர்வமான வேலையில்லாத் திண்டாட்ட அளவு 16.7 சதவீதம் ஆகும்.

வேலையில்லாதிருப்போரை எதிர்கொண்டுள்ள சமூக நிலவரம் ஒரு பேரழிவு தருவதாக இருக்கிறது. அதிகபட்சம் வேலையில்லாத் திண்டாட்ட உதவித்தொகையாக ஓராண்டிற்கு சிறியதொகை தரப்படுகிறது. பல தொழிலாளர்களுக்கு அது வழங்கப்படவேயில்லை. முன்னாள் சுரங்கத் தொழிலாளர்கள் பலர் எப்படியாவது உயிர்வாழ வேண்டும் என்பதற்காக தங்களது கைகளால் நிலக்கரியை தோண்டி வருகின்றனர். குப்பை கூளங்கள், குவியல்களில் குடும்பம் குடும்பமாக ஏதாவது கழிவு இரும்பு மற்றும் பயனுள்ள பொருட்கள் கிடைக்காதா என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோதமான வேலைவாய்ப்பு மூலம் ஒரு சில ஜிலோட்டிகளை சம்பாதிப்பதற்கு பலர் போராடிக்கொண்டுள்ளனர்.

இந்தப்பின்னணியில் பார்த்தால், கிளிவிசிலுள்ள ஓப்பல் தொழிற்சாலை மற்றொரு கிரகத்திலிருந்து வந்த விண்வெளி கப்பல்போல் தோற்றமளிக்கிறது. நகரின் மையப்பகுதியிலிருந்து தொழிற்சாலைக்கு மாநகர புற எல்லை வாயிலாக செல்லும்போது, ஐரோப்பாவின் அதிநவீன தொழிற்சாலைகளுள் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வரிசை வரிசையாக கட்டப்பட்டுள்ள தனித்தனியான கான்கிரீட் அடுக்கு மாடிகுடியிருப்புகள் உள்ளன. கட்டுமானப்பணிகள் 1998-ல் முடிவடைந்தன மற்றும் ஏறத்தாழ 2000 தொழிலாளர்கள் அதில் பணியாற்றுகிறார்கள். அந்த தொழிற்சாலை கட்ட 500 மில்லியன் யூரோக்களுக்கு மேல் செலவாயிற்று, போலந்தில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடுகளுள் இதுவும் ஒன்றாகும்.

நூற்றுக்கு மேற்பட்ட நகரங்களில் கிளிவிசியை ஜெனரல் மோட்டார்ஸ் தேர்ந்தெடுக்க ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக அந்த நகரம் பல்வேறு சலுகைகளை கம்பெனிக்கு உறுதி செய்து தந்தது. முதல் பத்தாண்டுகளுக்கு ஓப்பல் எந்த வரிகளையும் செலுத்த வேண்டியதில்லை. அடுத்த பத்தாண்டுகளுக்கு வழக்கமாக அது செலுத்த வேண்டிய வரியில் 50 சதவீதம் செலுத்தினால் போதும். இதுதவிர, தொழிற்சாலைக்கு சாலை மற்றும் டிராம் இணைப்பிற்கு மற்றும் எரிபொருள் தண்ணீர் வழங்குதல் மற்றும் உள்ளூர் துறைமுகத்திற்கு செல்வதற்கான செலவினங்கள் அனைத்தையும் நகரமே ஏற்றுக்கொண்டது.

என்றாலும் கிளிவிசில் அதிகாரபூர்வமான வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு இன்னும் 14 சதவீதமாகும், 2001 ஜனவரியில் இது 11.4 சதவீதமாக இருந்தது. இந்த முதலீட்டினால் பொதுமக்கள் எவருக்கும் எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை. 2000-ல் மட்டுமே அந்த நகரம் ஒரு குழந்தைகள் காப்பகம், நான்கு பாலர் பள்ளிகள், இரண்டு பள்ளிகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை மையத்தை மூடிவிட்டது.

சிலாஸ்கி, மக்கள் சந்தித்துவரும் பாரதூரமான விளைவுகளை ஜெனரல் மோட்டார்ஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. இன்றைக்கு நிலவுகின்ற சமூக நிலைகளை கருத்தில் கொண்டு, தங்களது வேலைக்கு அந்த பெரிய கார் நிறுவனத்தையே சார்ந்திருக்கிறார்கள், எனவே பல வெட்டுக்களையும் ஆட்குறைப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கார் தயாரிப்பில் இணைப்பு வரிசைப் பகுதியில் பணியாற்றி வருகின்ற Rafa WSWS-யிடம் கூறினார், "போலந்திலுள்ள தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிகாரமும் உரிமையுமில்லை, என்று நான் நினைக்கிறேன். மேலாளர்கள் சொல்வதெல்லாம் அப்படியே செயல்படுத்தப்படுகிறது."

"சிலாஸ்கியிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு இங்கே கிடைத்திருக்கின்ற பணி, கடவுள் தந்த வரப்பிரசாதம் போல் கருதப்படுகிறது. ஓப்பலுக்காக தாங்கள் பணியாற்றுவதாக மகிழ்ச்சியடைகின்றனர். அதுதான் உண்மை என எங்களுக்கு தோன்றுகிறது". என்று பல தசாப்தங்களாக, போலந்தில் பாரம்பரியம் படைத்த தொழிற்சங்கமான ஐக்கியத்தின் ஒரு பிரதிநிதியான Slawomir Ciebiera கூறினார். Ciebiera 40 வயதானவர் மற்றும் Karol Rybinsk உடன் சேர்ந்து அந்தத் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தை தலைமை தாங்கும் பணிக் குழுவில் பணியாற்றி வருகிறார். அவர்கள் முழுநேரம் பணியாற்றி வருவதற்கு GM நிதியளிக்கிறது.

போலந்து தொழிற்துறை உறவுகள் சட்டத்தின்படி இந்த இரண்டு பதவிகளையும் பெறுவதற்கு அந்த சங்கத்திற்கு சட்டபூர்வமான உரிமையுண்டு, ஏனெனில் அந்த தொழிற்சாலையில் 600-க்கு மேற்பட்ட சாலிடாரிட்டி (ஐக்கியம்) உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றன்னர். Ciebiera-வும் Rybinski-ம் தாங்கள் மேற்கொள்ளும் சங்கப் பணிகளை சிறப்பாக விளக்கினர். நிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்படும்போது அவர்கள் தலையிடுகின்றனர், தொழிலாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர் மற்றும் நிர்வாகத்துடன் ஊதிய விகிதங்கள் மற்றும் வேலை நிலைமைகள் குறித்து கலைந்துரையாடுகின்றனர். இதுவரை -"அதிர்ஷ்டவசத்துடன்"- கூட்டாக தொழிலாளர்கள் நடவடிக்கையில் இறங்க வேண்டிய அளவிற்கு எதுவும் நடந்துவிடவில்,ை கூர்மையான கலைந்துரையாடல்கள் மட்டுமே நடந்திருக்கின்றன. இதர போலந்து தொழிற்சாலைகளைவிட ஓப்பலில் அதிக ஊதியம் தரப்படுகிறது என்ற உண்மையை அவர்கள் ஒப்புகொள்கின்றனர்.

அதே நேரத்தில் தங்களது பணியிலுள்ள மட்டுப்பாடுகள் தொடர்பாக அந்த இரு தொழிற்சங்க பிரதிநிதிகள் நனவுபூர்வமாக இருக்கின்றனர். இரண்டாண்டுகளுக்கு முன்னர், பழைய அஸ்ட்ரா மாதிரி உற்பத்தியை கைவிட்டபோது கிளிவிசில் 350 வேலைகளைக் குறைக்க GM முடிவு செய்தது. இந்த வேலை இழப்புக்களை தடுப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும், இந்தத் தொழிலாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தைக்கூட இழப்பீட்டுத் தொகையாகக் கூட பெற்றுத் தர முடியவில்லை. இறுதியாக, கதவடைப்பால் ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 2,450 ஜிலோட்டிகளை (600) தான் பெற்றனர்.

ஒரு கணக்கெடுப்பு ஆய்வின்படி, அனைத்து சாலிடாரிட்டி உறுப்பினர்களில் 57 சதவீதம் பேர் தாங்கள் போதுமான அளவிற்கு பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை என்று கருதுகின்றனர். தொழிற்சங்கத்திடமிருந்து அளவிற்கு அதிகமாக மக்கள் எதிர்பார்ப்பதாக கூறியதாக Ciebiera விளக்கினார். Ciebiera-வை பொறுத்தவரை அளவிற்கு அதிகமான தொழிலாளர்கள் மேற்கு ஐரோப்பா அளவிற்கு மிக வேகமாக ஊதியம் உயர வேண்டும் என்று நினைக்கின்றனர்--- அவரது கருத்துப்படி மேற்கு ஐரோப்பிய ஊதிய அளவிற்கு 4,5 அல்லது ஒருவேளை 10 சதவீதத்தை தொட்டாலே தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அத்துடன், அரசாங்கம் நிரந்தரமாக தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. "தற்போதைய அரசாங்கம் தொழிலாளரிடமிருந்து ஏராளமானவற்றை எடுத்துக்கொண்டிருக்கிறது. ஊதிய உயர்வு மிகக் குறைவாக இருக்கிறது என்பது மட்டும் போதுமானதல்ல, அவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளையும் கூட வெட்டிவிட்டார்கள்." போலந்து அரசியல் சூழ்நிலையில் எந்த மாற்றீட்டையும் அவர் காண இயலவில்லை.

அது எப்படியிருந்தாலும், பூகோளமயமாக்கல் யுகத்தில் தொழிற்சங்கப் பணிகளுக்கான சாத்தியக்கூறுகள் மிகமிக கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக Ciebiera கருதுகிறார். GM இப்போது கிளிவிசில் முதலீடு செய்து கொண்டிருந்தாலும் இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நிர்வாகம் உற்பத்தியை உக்ரேன் அல்லது சீனாவிற்கு மாற்றுவது பற்றி முடிவு செய்யும், அதன்மூலம் போலந்தில் தொழிலாளர் பணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். தனது கருத்தை எடுத்துக்காட்டுவதற்கு Ciebiera, இரண்டு-மீட்டர்- நீள மேசைகளை உதாரணமாக காட்டினார். அது கம்பெனிக்கு நடவடிக்கை எடுப்பதற்கு உள்ள பல்வேறுபட்ட வழிகளையும் காட்டுவதாக உள்ளது. அந்த மேஜையின் ஒரு முனையில் ஒரு காப்பி பாத்திரத்தை வைத்தார். அதற்கு வலதுபக்கம் உள்ள பெரிய இடம் நிர்வாகத்திற்கு உள்ள வாய்ப்புகளைக் குறிக்கும், பாத்திரத்திற்கு வலது பக்கமுள்ள இடத்தில் ஒன்றிரண்டு சென்டி மீட்டர் உள்ளேதான் தொழிற்சங்கங்கள் பணியாற்ற முடியும் என்று கூறினார்.

"கனடாவை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் அங்கு மிக கடுமையான தொழிற்சங்கம் உள்ளது, ஜேர்மனியின் IG Metall தொழிற்சங்கத்தை விட கடுமையானதாகும். கரோல் கனடாவிலுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளோடு தொடர்பு வைத்திருக்கிறது. ஒரு முறை அவர்கள் போலந்திற்கு வந்திருந்தார்கள் அவர்கள் முதலாளிகளையே காலை சிற்றுண்டியாக சாப்பிட்டுகொண்டிருப்பதாக கூறினார்கள். அப்படி அவர்கள் சொன்னதன் பொருள் என்ன? ஊதிய உயர்வு கோரிக்கைகளை அவர்கள் வென்றெடுத்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பின் ஓராண்டிற்கு பின் அந்தக் கம்பெனி மூடப்பட்டுவிட்டது. இதில் இதன் பொருள் என்ன?" இந்தவகை சிந்தனையின்படி நிர்வாகம் ஒப்புக்கொள்கின்ற கோரிக்கைகளை மட்டுமே தொழிற்சங்கம் வைக்கவேண்டும். "எல்லாமே முதலாளியின் கையில்தான் உள்ளது".

Ciebiera-வைப் பொறுத்தவரை தொழிற்சங்கப்பணி என்பது தொழிலாளர்களை அழைக்கின்ற ஒரு புள்ளிதான். தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர்களுக்கு பணி நிலவரம் பற்றி தெரிவிப்பார்கள், திட்டமிடப்பட்டுள்ள வெட்டுக்கள் முதலியவற்றை எடுத்துரைப்பார்கள், நிர்வாகத்திடம் அவர்களைப் பற்றி பாராட்டிச் சொல்வார்கள்.

ஆயினும், இத்தகையதொரு தொழிற்சங்க முன்னோக்கு இறுதியில் தொழிலாளர்களுக்கு எதிராகக முடியும் என்பதை சாலிடாரிட்டி பிரதிநிதி ஒப்புக்கொண்டார். Bochum-ல் அண்மையில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் தொழிலாளர்கள் தொடர்பாக IG மெட்டல் மேற்கொண்ட ஜனநாயக விரோத மற்றும் குரோதமான கொள்கைகள் பற்றி என்ன நினைக்கிறார்? என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, Ciebiera ஆரம்பத்தில் பதில் சொல்வதற்கு தயங்கினார், வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பின்னர் மெதுவாகவும் கவனமாகவும் கூறினார்: "இது ஒரு சிக்கலான கேள்வி. என்னுடைய கண்ணோட்டத்தின்படி அது இங்கேயும் கூட நடக்க முடியும். உலகிலும் மற்றும் ஐரோப்பாவிலும் அது உண்மையிலேயே ஒரு புதுமையான நிலவரம்தான்."

Ciebiera-வும் Rybinski-ம் இதிலிருந்து மீள்வதற்கு வழி எதையும் காணவில்லை. மீண்டும் மீண்டும் அவர்கள் பொஸனனில் உள்ள Volkswagen தொழிற்சாலை பற்றி குறிப்பிட்டனர், அங்கு நிர்வாகம், தொழிற்சங்கம் சமரச முயற்சிகளை மேற்கொள்வதற்கு அதிக வழிவகைகளை செய்திருக்கிறது. அவர்களது சொந்த வார்த்தைகளில் சொல்வதென்றால், தொழிற்சங்கங்கள் நிர்வாகத்தை சார்ந்திருக்கின்ற நிலையை கருதிப் பார்க்கின்றபோது மற்றொரு முன்னோக்கு அவசியமானதாகும். என்றாலும் அவர்கள் முதலாளிகளின் கட்டளைகளுக்கு தங்களது எதிர்ப்பை செயல்மூலம் காட்டுவதற்கு சர்வதேச அளவில் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும், "இது அத்தகைய (தொழிற்சங்கங்களின்) ஒற்றுமைக்கு உரிய தருணமாகும். ஐரோப்பாவிற்கு ஒரு மத்திய தலைமையை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். ஒரு மத்திய தலைமை, அப்படித்தான் இருக்க வேண்டும்."

ஒவ்வொருவருக்கும் மனநிறைவளிக்கின்ற வாழ்க்கை தரவேண்டுமென்றால், நல்ல பணி நிலைமைகள் மற்றும் திருப்திகரமான ஊதியங்களுக்காக ஒருவர் சர்வதேச அளவில் போராடியாக வேண்டும். "உங்களது சொந்த நலன்களை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்கூட ஏழை நாடுகளிலுள்ள மக்களும் சிறந்த வாழ்க்கைதரம் பெறவேண்டும் என்பதை நாம் ஆராய்ந்தாக வேண்டும்" என்று Ciebiera கூறினார். ஆயினும், இதற்கு சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். "ஒவ்வொருவரும் வேலை நிறுத்தம் செய்தால் அப்பொழுது சரி. ஆனால் சீனாவில் வேலை நிறுத்தம் செய்வார்களா? இந்தியாவில் வேலைநிறுத்தம் செய்வார்களா? மற்றவர்கள் வேலை நிறுத்தம் செய்வார்களா? அவர்கள் செய்ய மாட்டார்கள். இந்த சர்வதேச உடன்பாடு இல்லாதவரை நாம் இங்கே வேறுபட்டவகையில்தான் பணியாற்றவேண்டும். மற்றும் அரசாங்கத்திடமிருந்து முதலாளிகளிடமிருந்து மற்றும் ரொக்கப்பணம் வைத்திருப்பவர்களிடமிருந்து உதவி கோரித்தான் ஆக வேண்டும்."

இரண்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுமே அரசியல் முன்னோக்கு எந்தவகையிலும் இல்லாதவர்கள். பல ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போலந்து அரசாங்கங்களோடு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக்கொண்டு அவர்கள் தங்களது அரசியல் தொடர்புகளை துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள். "எந்த தொழிற்சங்கத்திற்கும் அரசாங்கத்தில் பதவியில் அமருகின்ற கட்சியில் சேருவதற்கு அனுமதிக்க கூடாது, ஐரோப்பாவில் இது எங்கும் நடைபெறவில்லை, ஏனெனில் அரசியல்வாதிகள் இதர நோக்கங்களைக் கொண்டவர்கள்" என்று Ciebiera விளக்கினார். ஒரு புதிய தொழிலாளர் கட்சி தோன்றுவதற்கான சாத்தியக்கூறு எதையும் தான் காணவில்லை என்றால், "புதிதாக ஏதாவது ஒன்றைத் தேடுவதை நான் எதிர்க்கிறேன், ஏனென்றால் புதிதாக வருவது விரைவில் பழைய வழிக்கே திரும்பிவிடும் மற்றும் எல்லாமே நின்ற இடத்திலேயே நிற்கும். அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் வந்துவிடுமானால், எல்லாம் இருந்தும் தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டுவிடுவார்கள்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved