World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Labour and Conservative parties compete over anti-immigrant measures

பிரிட்டன்: தொழிற்கட்சியும் பழமைவாத கட்சியும் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் போட்டியிடுகின்றனர்

By Robert Stevens
3 March 2005

Back to screen version

மே 5-ல் பொதுத்தேர்தல் நெருங்கி வருவதைத் தொடர்ந்து பிரிட்டனில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அரசியல் தஞ்சம் புக விரும்புவோருக்கு எதிராக தங்களது பிரசாரங்களை பிரிட்டிஷ் தொழிற்கட்சியும், பழமைவாத கட்சியும் முடுக்கி விட்டிருக்கின்றன.

அவர்கள் வருங்கால தேர்தல் பிரச்சார மையக் கருத்தாக இந்தப் பிரச்சனையை தேர்ந்தெடுத்திருப்பது, பிரிட்டனின் உத்தியோகபூர்வமான அரசியலின் தன்மையை அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. இரண்டு கட்சிகளுமே, வலதுசாரி பெருவர்த்தக கொள்கைளை முழுமையாக செயல்படுத்த உறுதி எடுத்துக்கொண்டிருக்கின்றன, அது சமத்துவமின்மை வளர்வதற்கும் பொதுச் சேவைகள், நலன்புரி நடவடிக்கைகள் மற்றும் குடிமக்கள் உரிமைகள் சிதைக்கப்படுவதற்கும் பொறுப்பாக உள்ளன.

அதன் விளைவாக, உழைக்கும் மக்களின் உண்மையான அக்கறைகளைப் பற்றி பேசுவதன் மூலம் அதற்கு ஆதரவாக எந்தக்கோரிக்கையும் எந்தக் கட்சியும் விடுக்கவில்லை. அவர்கள் அரசியல் தஞ்சம் புகுவோருக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது மிகவும் பின்தங்கிய மற்றும் பிற்போக்குத்தனமான உணர்வுகளுக்கு கோரிக்கைவிட்டு ஆதரவை வென்றெடுக்கும் முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பழமைவாதிகள் பிரசாரத்தை தொடக்கிவிட்டனர். ஜனவரி இறுதியில், டோரித் தலைவர் மைக்கேல் ஹோவார்டு தனது கட்சி புலம்பெயர்ந்தோருக்கான ஆண்டு வரையறையை சுமத்த முன்மொழிவதாக அறிவித்தார், அது நாட்டிற்கு பயனுள்ளது என்று கருதப்படும் திறமைகள் உள்ள மக்களுக்கு மட்டுமே பணி செய்வதற்கான அனுமதிகளை வழங்க வகை செய்கிறது. பிரிட்டனில் அரசியல் தஞ்சம் புக விரும்புவோருக்கு ஒரு ஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்றும் ஹோவேர்டு குறிப்பிட்டார். புலம்பெயர்ந்தோர், அரசியல் தஞ்சம் புக விரும்புவோர் தொடர்பாக, இந்த வரையறைகள் சென்றடைந்த பின்னர், அவர்களது சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், வேறு எவரும் நாட்டிற்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

சட்ட விரோத புலம்பெயர்தலை தடுப்பதற்கு துறைமுகங்களில் 24 மணி நேர பாதுகாப்பை நிறுவுவது பற்றியும் ஹோவார்டு முன்மொழிந்திருக்கிறார். அரசியல் தஞ்சம் பெறுவதற்கான சர்வதேச சட்டங்களை மீறுகின்ற வகையில் தமது முன்மொழிவுகள் அமைந்திருக்கும் என்பதை ஒப்புக்கொண்ட அவர், எதிர்காலத்தில் எந்த டோரி அரசாங்கமும் அகதிகள் தொடர்பான 1951 ஐக்கிய நாடு ஒப்பந்தத்திலிருந்து பிரிட்டனை விலக்கிக்கொள்ளுமென்றும் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் குடியிருக்க விரும்பும் ஐரோப்பியர் அல்லாத அனைவரும் அவர்கள் எய்ட்ஸ் அல்லது காசநோய் போன்ற தொற்று நோய் குறியுள்ளவர்களா என்பதை முடிவு செய்வதற்கு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மேலும் அவர் கேட்டுக்கொண்டார்.

மருத்துவ இதழான The Lancet இந்த முன்மொழிவுகளை கண்டித்திருக்கிறது. பெப்ரவரி 25 தலையங்கத்தில் அது சில பயணிகளுக்கு நோய்க்குறி உள்ளதா என்று சோதனையிடுவதை நடைமுறைப்படுத்தும் டோரியின் திட்டங்கள் பாரபட்சமானவை என்று குறிப்பிட்டிருக்கிறது.

"அத்தகைய ஒரு கொள்கை பொது சுகாதாரத்தை பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்குமென்று கூறுவதற்கு எந்த சான்றும் இல்லை" என்று இதற்கு முந்திய இதுபோன்ற சோதனைகள் பற்றிய பிரிட்டனின் ஒரு பொது விசாரணை முடிவுசெய்திருப்பதாக அது மேலும் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விசாரணையை நடத்திய எய்ட்ஸ் தொடர்பான சர்வகட்சி நாடாளுமன்ற குழு "ஏழை மக்களை அவர்களது மோசமான உடல்நிலை அடிப்படையில் ஒதுக்கித் தள்ளுகின்ற முயற்சிகள்'' குறித்து கடுமையான கவலை தெரிவித்தது.

ஹோவார்டு அறிவிப்பிற்கு சிலநாட்களுக்கு பின்னர், தொழிற்கட்சி அரசாங்கம் புலம்பெயர்ந்தோரை பலிக்கடாவாக்குகின்ற தனது சொந்தத் திட்டங்களை வெளியிட்டது.

ஓரளவிற்கு குடியேற்றம் அவசியம்தான் என்பதை ஒப்புக்கொண்டு, உள்துறை செயலாளர் சார்லஸ் கிளார்க் கூறினார்: "இந்த முறை முறையாக கண்காணிக்கப்படாமல் இருப்பதுதான் தவறானது மற்றும் சமுதாயத்தில் ஒரு சுமையாக இங்கு மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அதைத்தான் நாங்கள் விரட்ட விரும்புகிறோம்".

எத்தகைய தொழில் திறமைக்கு ஆட்கள் தேவையோ அதேபோல் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்துவதை அரசாங்கத்தின் முன்மொழிவுகள் இன்றியமையததாக்குகின்றன. இது கண்டிப்பாக கண்காணிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து தருவதற்காக, பிரிட்டனின் உள்ளே விசா வழங்கப்படுகின்ற ஒவ்வொருவருடைய கைரேகையும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கிளார்க் முன்மொழிந்துள்ளார்.

அரசியல் தஞ்சம் கோரும் முயற்சியில் தோல்வியடைந்துவிடும் நபர்களை மிகவேகமாக நாடுகடத்துவதற்கும் மின்னணு எல்லை கட்டுப்பாட்டை ஸ்தாபிக்கவும் கிளார்க் முன்மொழிவு செய்திருக்கிறார். பிரதமர் டோனி பிளேயர் இந்த நடவடிக்கைகள் அவசியமென்று கூறினார் ஏனென்றால் "இதில் உண்மை என்னவென்றால், இந்த விவகாரத்தில் மக்கள் கவலை கொண்டிருக்கின்றனர், மக்கள் கவலை கொண்டிருப்பது சரிதான் ஏனென்றால் புலம்பெயர்ந்தோர் மற்றும் அரசியல் தஞ்சம் புகும் முறையில் முறைகேடுகள் நடக்கின்றன".

அரசியல் தஞ்சம் கோருவோருக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் உள்ள உரிமைகளை கடுமையாக வெட்டுவதற்கு ஏற்கனவே தொழிற்கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. 2003-ல் தஞ்சம்புக விரும்பிய 49,000 பேரை ஒப்பிடும்பொழுது, அண்மைய புள்ளிவிவரம் 2004-ல் 34,000 பேர் அரசியல் தஞ்சம் கோரியதாகக் காட்டுகிறது. அப்படியிருந்தும், புலம்பெயர்வோர் அமைச்சர் Des Browne, நாடு கடத்தப்படுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கின்ற வகையில் மேலும் கடுமையான நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். இவை அரசியல் தஞ்சம் புக விரும்பும் இளைஞர்களுக்கு எதிரானவை.

அரசியல் தஞ்சம் புகும் முயற்சியில் தோல்வியடையும் 18 வயதிற்கும் குறைந்த இளைஞர்களுக்கு அவர்களது தாய் நாடுகளில் குடும்பங்கள் இல்லாவிட்டாலும் கூட, அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு வகை செய்யும் ஒரு விசாரணையை விரைவில் உள்துறை அலுவலகம் அறிமுகப்படுத்தவிருக்கிறது. இளவயதினர் அல்பானியாவிலிருந்து வந்தடையும்போது முதலாவதாக அவர்கள் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவு ஊதியத்தின் ஒரு திரட்டல்

உத்தியோகபூர்வமான கட்சிகள் புலம்பெயர்வோருக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி வருவது அதிதீவிர வலதுசாரிகளுக்கு தீனிபோடுவதாக அமைந்துவிட்டது. ஹோவார்டின் முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் பிரிட்டிஷ் தேசிய கட்சியின் (BNP) தலைவர் Nick Griffin-ன் டோரிகளின்' திட்டங்கள் "எங்களது அரங்கை நோக்கிய உறுதியான நகர்வு" என்றார். "நாடு தழுவிய அடிப்படையில் எங்களது வாக்குகளை கணிசமான அளவில் இந்தத் திட்டத்தின் மூலம் டோரிக்கள் பெற்றுவிடுவார்கள்`` என்று கூறினார்.

தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள ஒரு விளக்கக் குறிப்பில் BNP 100 முதல் 120 வேட்பாளர்களை நடைபெறவிருக்கும் தேர்தலில் நிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவற்றில் டோரி நிழல் மந்திரி சபை உறுப்பினர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2001 பொதுத் தேர்தலைவிட இது அக்கட்சி மூன்று மடங்கு அதிகமாக வேட்பாளர்களை நிறுத்துகிறது, இதன் மூலம் BNP நாடு தழுவிய தொலைக்காட்சி பிரசாரத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான UK சுதந்திரக் கட்சியில் (UKIP) ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட Robert Kilroy-Silk தோற்றுவித்த வெரிடாஸ் என்கிற அண்மையில் அமைக்கப்பட்ட அரசியல் குழு புலம்பெயர்வோர் அனைவரும் உடல்நல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்திருக்கிறது.

அதிதீவிர வலதுசாரிகளின் புகார் என்னவென்றால் தொழிற்கட்சியும் டோரிகளும், எடுக்கின்ற நடவடிக்கைகள் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்துகின்ற அளவிற்கு போதுமானவையாக இல்லை என்பதாகும்.

என்றாலும், பிரதான கட்சிகள் புலம்பெயர்ந்தோருக்கு முற்றிலுமாக தடைவிதித்துவிட ஏன் தயாராக இல்லை என்பதை அண்மைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தங்களது சொந்தக் கொள்கைகளால் ஏற்பட்டுவிட்ட சமூக சீரழிவை சமாளிப்பதற்கு புலம்பெயர்ந்தோர்களை பலிகடாக்களாக ஆக்குவதில் அக்கட்சிகள் அதிக விருப்பம் கொண்டிருக்கின்றன, தொழில் திறமைமிக்க மலிவு ஊதியத் தொழிலாளர்கள் அதிக அளவில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

சென்ற ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் ''கூடுதல் சேர்கையாக'' 10 நாடுகள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பிரிட்டனில் பணியாற்றுவதற்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து 133,000 தொழிலாளர்கள் மனுச் செய்தனர் என்று பெப்ரவரி 23-ல் உள்துறை அலுவலகம் புள்ளி விவரங்களை வெளியிட்டது. இவர்களில் 83 சதவீதம் பேர் 18-க்கும் 34 வயதிற்கும் இடைப்பட்ட பருவமுள்ள தனிநபர்கள், இவர்களில் 80 சதவீதம் பேர் ஒரு மணி நேரத்திற்கு 4.50 முதல் 5.99 பவுன்கள் வரை சம்பாதிப்பவர்கள்.

குறிப்பாக தேசிய சுகாதார சேவையில் பிரிட்டனில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைக்காது, கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது, இதை நிரப்புவதற்கு பிளேயர் அரசாங்கம் அத்தகைய தொழிற் பயிற்சி பெற்ற புலம்பெயர்ந்தோர்களை குறி வைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் 1850 பல் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் அக்டோபர் வாக்கில் கூடுதலாக 1000 பல் மருத்துவர்களை நியமிக்க அரசாங்கம் உறுதியளித்துள்ளது, இவர்களில் மிகப்பெரும்பாலோர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக போலந்திலிருந்து வருபவர்கள் ஆவர்.

பெப்ரவரி 22-ல் குழந்தைகளை காப்பாற்றும் அமைப்பு வெளியிட்டுள்ள ``யாருடைய கருணை? NHS-க்கு ஆபிரிக்கா உதவி`` என்ற தலைப்பிலான அறிக்கை, கானா நாட்டிலிருந்து மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமித்ததன் மூலம் தேசிய சுகாதார சேவை அமைப்பு 1999 முதல் பயிற்சி செலவினத்தில் 65 மில்லியன் பவுன்களை மிச்சப்படுத்தியுள்ளது என்று கண்டறிந்தது. தற்போது NHS-ல் 1000-க்கு மேற்பட்ட கானா நாட்டு செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அந்த அறக்கட்டளை தனது அறிக்கையில் பின்வருமாறு எழுதியுள்ளது: ``உலகின் பரம ஏழை நாடுகளில் சிலவற்றில் இருந்து பொது சுகாதாரப் பணியாளர்கள் மிகப்பெருமளவிலும் பரவலாகவும் புலம்பெயர்ந்து வருவதால் அவர்களுடைய நாடுகளின் சுகாதார சேவைகள் சீர்குலைந்துவிட பிரிட்டனில் சுகாதார சேவைகள் பயனடைகின்றன. இந்த நாடுகளில் குழந்தைகளுக்கு மிக அடிப்படையான சுகாதார வசதிகள் கிடைக்காததால் அவர்களில் பலர் மடிந்துவிடுகின்ற சூழ்நிலை ஏற்படுகிறது."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved