World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சீனாUS-Japan security statement heightens tensions with Chinaஅமெரிக்க - ஜப்பான் பாதுகாப்பு அறிக்கை சீனாவுடன் பதட்டங்களை அதிகரிக்கச்செய்கிறது By John Chan அமெரிக்க மற்றும் ஜப்பானிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அதிகாரிகள் வாஷிங்டனில் பெப்ரவரி 18 அன்று வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கை முதல் தடவையாக தைவானை ஒரு பரஸ்பர பாதுகாப்பு கவலை நிறைந்தது என வெளிப்படையாக அறிவித்தமையானது வடகிழக்கு ஆசியாவில் பதட்டங்களை பெருக்கியுள்ளது. அப்போது உடனிருந்தவர்களில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ், பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் அவர்களுடன் சரிநிகர் பொறுப்பிலுள்ள ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் Nobutaka Machimura மற்றும் பாதுகாப்பு அமைச்சர் Yoshinori Ono ஆகியோர் உள்ளடங்குவர். சம்பிரதாய முறையில் அமைந்துள்ள பாதுகாப்பு அறிக்கை மிகப்பொதுவான வார்த்தைகளில் அமெரிக்க ஜப்பான் கூட்டணியின் பரந்த குறியிலக்குகளை விளக்கிக்கூறுகிறது மற்றும் "பயங்கரவாதத்தின் மீதான போர்" தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் வடகொரியா பற்றி வழக்கமான குறிப்பு ஆகியவை அடங்கியுள்ளன. ஆனால் இதில் அடங்கியுள்ள தைவான் பற்றிய தீங்கில்லாத குறிப்பு -"தைவான் வளைகுடா தொடர்பான பிரச்சனைகளுக்கு சமாதான தீர்வு காண்பதை ஊக்குவிப்பது" என்ற வாசகம்- இதில் குறிப்பிடத்தக்கது. 1970களின் தொடக்கத்திலிருந்து இரண்டு நாடுகளுமே ஒரே சீனக்கொள்கை என்றழைக்கப்படுகின்ற கொள்கையை பின்பற்றி நிற்கின்றன-----அது தைவான் சீனாவின் உள்ளார்ந்த ஓர் அங்கம் என்பதை அங்கீகரிப்பதாகும். என்றாலும் அதேநேரத்தில் சீனா ஏதாவது இராணுவத் தாக்குதலில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் தைவானுக்கு அமெரிக்கா உதவிக்கு வரும் என்று வாஷிங்டன் உறுதியளித்திருந்தது. அந்த உறுதிமொழிக்கு ஏற்ப, அமெரிக்கா தைவானுக்கு தொடர்ந்து நவீன தொழில்நுட்பம் மிக்க ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஜப்பானை பொறுத்தவரை, இதுவரை சீனாவிற்கு ஆத்திரமூட்ட விரும்பவில்லை, மிகவும் தெளிவற்ற நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்தது. 1945-க்கு முன்னர் ஜப்பானின் ஒரு காலனியாக இருந்து வந்த தைவானுக்கு அது எப்போதுமே பகிரங்கமாக பாதுகாப்பு உறுதி மொழி எதையும் தரவில்லை. அமெரிக்கா-ஜப்பான் பாதுகாப்பு கூட்டு அறிக்கையில் தைவான் பற்றிய ஒரு குறிப்பை சேர்த்துக்கொண்டிருப்பதன் மூலம் டோக்கியோ இந்த பிராந்தியத்திற்குள், குறிப்பாக சீனா தொடர்பாக தனது நலன்களை அதிக தீவிரத்தன்மையோடு வலியுறுத்த தொடங்கிவிட்டது என்பதை சமிக்கை காட்டியுள்ளது. ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளரான Shinzo Abe வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியிட்டுள்ள கருத்துகளில் அந்த அச்சுறுத்தலை மிக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். "சீனா தைவானில் இராணுவப் படையெடுப்பை, நடத்துமானால் அமெரிக்காவும் ஜப்பானும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு சகித்துக் கொண்டிருக்கும் என்ற ஒரு சமிக்கையை சீனாவிற்கு தருவது நம்மைப் பொறுத்தவரை ஒரு தவறான நடவடிக்கையாகும். ஜப்பானை சுற்றியுள்ள நிலவரம் நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுமானால் ஜப்பான் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவு தரும்" என்று அவர் கூறினார். அந்த அறிக்கை பற்றி கருத்துத் தெரிவித்த அமெரிக்க அரசுத்துறை அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ்க்கு பேட்டியளிக்கும் போது கூறினார்: "இது ராஜதந்திர அடிப்படையில் முக்கியத்துவமானது. இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. ஆனால் தனது எல்லைகளுக்கு அப்பால் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு விரும்பாத ஜப்பான், அந்த அறிக்கையின் ஓர் அங்கமாக இடம்பெற்றிருப்பது சீனா-தைவான் அபாய மணி ஒலிக்கும் பிரச்சனை என்ற நமது கவலையை இந்த பிராந்தியத்தின் கவலையை எதிரொலிக்கிறது." தைவானை ஒரு "துரோகம் இழைத்துவிட்ட" மாகாணம் என்று கருதுகின்ற பெய்ஜிங் ஆவேசமாக பதிலளித்திருப்பதில் வியப்பிற்கு இடமில்லை, இந்த அறிக்கை சீனாவின் "உள் விவகாரங்களில் தலையிடுவதாகும், மற்றும் சீனாவின் இறையாண்மையை பாதிப்பதாகும்" என்றும் அறிவித்துள்ளது. சீனாவின் அரசு செய்தி நிறுவனம் ஜப்பானை கடுமையாகத்திட்டி, அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு தங்களது ''பொது மூலோபாய குறிக்கோள்களை'' தைவானில் வெளியிடுவதில் ''மிருகத்தனமாக நடந்து கொள்வதாக'' குறிப்பிட்டிருக்கிறது. பின்னர் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தந்துள்ள விளக்கத்தில் தைவானை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா இராணுவ நடவடிக்கையில் இறங்குமானால், அதற்கான ஆதரவு அதன் மட்டுப்படுத்தப்பட்ட தளவாட உதவியாக மட்டுமே அமைந்திருக்கும், ஏனெனில் நேரடி இராணுவ நடவடிக்கை ஜப்பானிய அரசியல் சட்டத்தால் தடைக்குள்ளாகி இருக்கிறது. என்றாலும், அத்தகையதொரு மறு உறுதிமொழி, உலகின் இரண்டு மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகளின் கூட்டு இராணுவ வலிமையை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டி வரும் என்பதை பெய்ஜிங் உறுதிப்படுத்துகிறது. மேலும் பதவிக்கு வந்தது முதல் ஜப்பான் பிரதமர் Junichiro Koizumi நாட்டின் ஆயுதப்படைகளுக்கு அரசியல் சட்டம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை ஒழித்துக்கட்டுவதற்கு திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். புஷ் நிர்வாகத்தின் ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' ஜப்பான் இராணுவத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்துவதற்கு ஏற்ற சாக்குப்போக்காக அமைந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ தலையீட்டின்போது அமெரிக்க கப்பற்படைகளுக்கு உதவுவதற்கு இந்து மகா சமுத்திரத்தில் ஜப்பானிய போர் கப்பல்கள் அனுப்பப்பட்டன. சென்ற ஆண்டு இராணுவப் பொறியாளர்கள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டனர், இவற்றின் மூலம் ஜப்பான் இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் முதல் தடவையாக தீவிர போர் மண்டலத்திற்கு துருப்புக்களை தற்போது அனுப்பியுள்ளது. ''பயங்கரவாதத்திற்கெதிரான போர்'' என்கின்ற போர்வையில் ஜப்பான் தன்னை ஒரு பெரிய இராணுவ வல்லரசாக மீண்டும் தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயன்று வருகிறது. இந்தக் கட்டத்தில் டோக்கியோ, அமெரிக்காவின் இளைய பங்குதாரராக பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளது மற்றும் அதன் இராணுவ அதிரடி நடவடிக்கைகளை ஆதரிக்கிறது. என்றாலும், எதிர்காலத்தில் தனது சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்காக ஜப்பான் தனது இராணுவ வலிமையை பயன்படுத்த முடியும் என்ற சாத்தியக் கூறு தவிர்க்க முடியாதது. இந்த சாத்தியக்கூறுதான் ஜப்பானிய காலனித்துவத்தில் முன்னர் துன்பத்தில் உழன்ற நாடுகளில் குறிப்பாக சீனாவில் கவலையைத் தூண்டி விட்டிருக்கிறது. சீன, "அச்சுறுத்தல்" ஜப்பானிலும், அமெரிக்காவிலும் சீனா, ஒரு இராணுவ அச்சுறுத்தல் என்று இடைவிடாது சித்தரிக்கப்பட்டு வருகிறது. பெப்ரவரி 16-ல் சிஐஏ அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், எடுத்துக்காட்டாக, சீனாவின் "மேம்படுத்தப்பட்டுள்ள" இராணுவ வலிமை இந்தப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்கப்படைகளுக்கு "அச்சுறுத்தலாக" உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறது. அத்தகைய அறிக்கைகள் ஓர் உண்மையை புறக்கணித்து விடுவதாக அமைந்திருக்கின்றன---- சீனாவின் ஆண்டு இராணுவச் செலவு 20 பில்லியன் டாலர்கள், ஆனால், அமெரிக்காவின் இராணுவ பட்ஜெட்டின் 400 பில்லியன் டாலரோடு ஒப்பிடும்போது இது மிக சொற்பத்தொகைதான். ஜப்பானின் சொந்த பாதுகாப்பு செலவினமான--- 50 பில்லியன் டாலர்கள்-----சீனா செலவிடுவதை விட மிகவும் அதிகம்தான். அதனிடம் வெளிப்படையான தாக்குதல் ஆயுதங்களான நெடுந்தொலைவு குண்டு வீச்சு விமானங்கள் அல்லது அணு ஆயுதங்கள் இல்லையென்றாலும் அதற்கு கணிசமான இராணுவ வலிமை உள்ளது. ஜப்பானிய தற்காப்பு படைகளிடம் பிரிட்டனுக்கு இணையான போர்விமானங்கள் உள்ளன, ஆனால் அதிகமான போரிடும் வீரர்கள் உள்ளனர், இருமடங்கு போர் கப்பல்களும் மும்மடங்கு டாங்கிகளும் உள்ளன. 2500 "சிவிலியன்" நிறுவனங்கள் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருப்பதற்கு அரசாங்கம் பெருமளவில் மானியங்களை வழங்குகிறது; அவை நுட்ப ஆயுதங்களை தயாரிக்கும் வல்லமை கொண்டவை. இராணுவத் தொழில் நுட்பத்தில் பல பிரிவுகளில் ஜப்பான் உலகிற்கே முன்னோடியாக உள்ளது. அமெரிக்காவின் "ஸ்மார்ட் குண்டுகளில்" பயன்படுத்தப்படும் மிகப்பெரும்பாலான நுண் சில்லுகள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டவை. அமெரிக்காவின் "இரகசிய போர் விமானங்களில்" மேல் பூச்சிற்கு பயன்படுத்தப்படுவது ஜப்பானிய தொழில் நுட்பம்தான். ஜப்பான் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுமானால், எலக்டிரானிக் தொடர்பான 40 சதவீத மார்க்கெட்டை பிடித்துவிடும், இராணுவ வாகனங்களில் 46 சதவீத மார்க்கெட்டையும் போர் விமானங்களின் 25 முதல் 30 சதவீத மார்க்கெட்டையும் கப்பற்படைக் கப்பல்களில் 60 சதவீத சந்தையையும் பிடித்துவிடும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அண்மை மாதங்களில் சீனா தொடர்பாக ஜப்பானின் மிகத் தீவிரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில்தான் அமெரிக்க ஜப்பான் கூட்டறிக்கை விளங்குகிறது. நவம்பரில் ஓக்கினாவிற்கு அருகே சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று புகுந்துவிட்டதை கையிலெடுத்துக்கொண்டு ஜப்பான் பிரதமர் Koizumi சீனாவின் "அச்சுறுத்தலை" சமாளிப்பதற்கு ஜப்பான் மீண்டும் இராணுவமயமாக்கப்படவேண்டுமென்று வாதிட்டார். டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒரு தேசிய பாதுகாப்பு திட்ட குறிப்பில் முதல் தடவையாக அடுத்த தசாப்தத்தில் ஜப்பானின் மிகப்பெரிய பாதுகாப்பு கவலை சீனாதான் என்று குறிப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சென்ற மாதம் ஜப்பானின் Kyodo செய்தி நிறுவனம், "ஜப்பானின் தென்மேற்குத் தீவுகள்" பற்றிய மோதலை சமாளிப்பதற்கு ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சக திட்டங்களின் இரகசியத்தை வெளியிட்டது. திட்டவட்டமாக எந்த நாட்டையும் விரோதியாக குறிப்பிடாமல் அந்த ஆவணம் ஜப்பானும் சீனாவும் சர்ச்சையில் இறங்கியுள்ள Senkaku அல்லது Diaoyu- தீவு உட்பட தைவானுக்கு வடக்குப் பகுதியில் 55,000 துருப்புக்களும், நாசகாரி கப்பல்களும் போர் விமானங்களும் அணிதிரட்டப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டது. Koizumi அரசாங்கம் தைவான் தொடர்பாக திட்டவட்டமான ஆதரவு அணுகு முறையையும் மேற்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு பெய்ஜிங்கின் ஆட்சேபனைகளையும் மீறி முன்னாள் தைவான் ஜனாதிபதி Lee Teng-hui ஜப்பான் விஜயத்திற்கு விசா வழங்கியது. லீ நீண்டகாலமாக தைவான் சுதந்திர நாடாக வேண்டும், ஜப்பானுடன் நெருக்கமான பங்குதாரராக ஆக வேண்டுமென வலியுறுத்தி வருபவர்.டோக்கியோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு சீனா தொடர்பான நிபுணர் Akihiko Tanaka பைனான்சியல் டைம்ஸ்-இடம் பெப்ரவரி 14-ல் கூறினார்: "வெளியுறவு அமைச்சகத்தில் அவர்கள் சீன ஆதரவுப் பிரிவு என்றழைக்கும் குழுவின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து விட்டதென்பது தெளிவாகத் தெரிகிறது. அண்மையில் ஜப்பான் எந்த சலுகைகளையும் காட்டாத பல சம்பவங்கள் நடந்துள்ளன, ஆனால் இதற்கு முன்னர் கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் ஜப்பான் கடுமை குறைந்ததாகவே நடந்து கொண்டிருந்திருக்கும். சீனா தொடர்பாக சமரச அணுகுமுறை மேற்கொள்ள வேண்டுமென ஆலோசனை கூறி வருபவர்கள் இப்போது பலவீனமடைந்து வருகின்றனர்." சீனாவைப் பொறுத்தவரை ஜப்பான் இருதலைக்கொள்ளி நிலையில் உள்ளது, "அமைதியான அரசியல் மற்றும் கடுமையான பொருளாதாரம்" என்று சில நேரம் அதை அழைக்கிறார்கள். சீனாவுடன் ஜப்பானின் வளர்ந்து வரும் வர்த்தகம் ஒரு தசாப்தமாக நிலவி வந்த பொருளாதார தேக்கநிலையை போக்கி குறைந்த அளவிற்கு பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்கியதற்கு பின்னணியாக அமைந்துள்ள முக்கிய அம்சமாகும். சென்ற ஆண்டு சீனா, அமெரிக்காவையும் மிஞ்சுகின்ற வகையில் ஜப்பானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக ஆகியுள்ளது இருதரப்பு வர்த்தகம் 214 பில்லியன் டாலர்கள் ஜப்பானின் மொத்த வர்த்தகத்தில் 5-ல் ஒரு பங்காக உள்ளது. சீனாவில் தற்போது, 18000 ஜப்பானிய கம்பெனிகள் இயங்கி வருகின்றன, ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்த ஜப்பான் கம்பெனிகளை விட இது இருமடங்காகும். பெரிய ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெய்ஜிங்குடன் நெருக்கமான உறவுகளை வைத்துக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். வலதுசாரி ஜப்பானிய தேசியவாதத்தை வளர்க்க வேண்டுமென்ற Koizumi அரசியல் அபிலாசைகளுக்கு நேரடி மோதலாக அது அமைந்திருக்கிறது. தமது அரசாங்கத்திற்கு ஒரு சமூக அடித்தளத்தை அமைப்பதற்காக அவர் வலதுசாரி தேசிய வாதத்திற்கு வேண்டுகோள் விடுகிறார். பக்கத்து நாடுகளின் ஆட்சேபனைகளையும் மீறி, ஜப்பானின் போரில் மடிந்தவர்கள் கல்லறைக்கு பகிரங்கமாக விஜயம் செய்த முதலாவது ஜப்பான் பிரதமர் அவர்தான். கச்சா பொருட்களை நாடுவதில் குறிப்பாக, எண்ணெய், எரிவாயு தேடுவதில் சீனாவும் ஜப்பானும் போட்டியாளர்களாக இருக்கின்றனர். சென்ற டிசம்பர் மாதம் சைபீரியாவிலிருந்து ஒரு எண்ணெய் குழாயை பெய்ஜிங்கை முறியடித்து டோக்கியோ வென்றெடுத்தது. கிழக்குச் சீனக் கடற்பகுதியிலும் பதட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஜப்பானின், "சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள்" சீனா எரிவாயு ஆய்வுகளை நடத்தி வருவதாகக் கூறுகிறது. கிழக்கு சீனக் கடற்பகுதியில் எரிவாயு துரப்பணப் பணிகளுக்காக டோக்கியோ இந்த ஆண்டு செலவினத்தை இரட்டிப்பாக்கி 217 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. சீனாவை திருப்திப்படுத்தும் நோக்கம் Koizmi-க்கு இல்லை, ஆனால், வடகிழக்கு ஆசியாவில் ஜப்பான் அதிக அளவில் ஒரு முன்னிலைப் பங்களிப்பை பெற முயன்று வருகிறது என்பதை அமெரிக்க ஜப்பான் கூட்டுப் பாதுகாப்பு அறிக்கை உறுதிப்படுத்துகிறது----இந்தப் பிராந்தியம் முழுவதற்கும் இந்தப் போக்கு பேரழிவு விளைவுகளை உருவாக்கும் வல்லமை கொண்டது. |