World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Elliot Abrams: defender of death squads to direct US "democracy" crusade

இல்லியோட் ஆப்ராம்ஸ்: கொலைக் குழுக்களின் பாதுகாவலர் அமெரிக்காவின் "ஜனநாயக" சிலுவைப் போரை இயக்கப் போகிறார்

By Bill Van Auken
10 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

பிப்ரவரி 2 அன்று, அரசு கூட்டுக் கூட்டத் தொடரை துவக்கி வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ஜோர்ஜ் W. புஷ் ''சுதந்திரத்தின் கூட்டணியினர்களோடு உறுதியாக நின்று நமது உலகின் கொடுங்கோன்மைக்கு முடிவு கட்டுவதற்கு ஆதரவு அளிப்பதாக'' உறுதிமொழி அளித்த அதே நாளில் இல்லியோட் ஆப்ராம்சை அவரது தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமித்துள்ளார். ''ஜனநாயகத்திற்காக'' உலகளாவிய சிலுவைப் போரை நடத்துகின்ற அமெரிக்க ஜனாதிபதியின் உண்மையான நோக்கங்களை, இந்த நியமனத்தைத் தவிர வேறு எதுவும் மிக அதிகமாக அம்பலப்படுத்திவிட முடியாது.

வேறு எந்த அரசியல் பிரமுகரையும் விட, ஆப்ராம்ஸ் நடப்பு அமெரிக்க நிர்வாகத்தின் கிரிமினல், சூழ்ச்சி மற்றும் வஞ்சக தன்மையின் ஓர் உருவமாக விளங்குகிறார். அவர், புஷ்ஷின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளுக்கான முதன்மை ஆலோசகராக பணியாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

றேகன் நிர்வாகத்தின்போது ஒரு மூத்த அரசுத் துறை அதிகாரியாக பணியாற்றிவந்த ஆப்ராம்ஸ், அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரங்களின் சார்பில் பொய்களை கூறியதிலும், வாஷிங்டனின் கட்டளைக்கு அடிபணிய தவறும் எந்த ஆட்சியையும் தாக்குவதில் அவரது வெறி உணர்வும், அதே போல் நிர்வாகத்தின் கொள்கைகளை தட்டிக்கேட்க துணியும் எவரையும் அவதூறு செய்வதிலும் இழிபுகழ் பெற்றவர் ஆவர்.

நிக்கரகுவாவில் நடைபெற்ற, CIA ஏற்பாடு செய்த கான்ட்ரா கூலிப்படையினர் போருக்கு நிதியளிக்க றேகன் நிர்வாகம் மேற்கொண்ட ரகசிய மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக, 1991 ல் நாடாளுமன்றத்திற்கு இரண்டு அம்சங்களில் பொய் சொல்லியதாக நேர்முக வாக்குமூலத்தில் தனது குற்றத்தை ஆப்ராம்ஸ் ஒப்புக்கொண்டார். குற்றவியல் வழக்கை தவிர்த்து சிறைக்கு செல்வதை தடுப்பதற்காக அவர் அவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் தந்தார். ஒரு வருடத்திற்கு சற்று அதிகமான காலம் கடப்பதற்கு உள்ளேயே மூத்த புஷ், ஆப்ராம்ஸ்க்கும் ஈரான்-கான்ட்ரா சதியில் சம்மந்தப்பட்டு தண்டிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் பொதுமன்னிப்பு அளித்தார்.

குடியரசுக் கட்சி வலதுசாரி சிந்தனையாளர்கள் குழுவிற்குள் ஒரு இணைப்பாளராக ஒரு தசாப்தத்திற்கு மேல் ஆப்ராம்ஸ் பணியாற்றிய பின்னர், புஷ் நிர்வாகம் அவரை அரசாங்க சேவைக்கு அழைத்ததோடு, மேலும் அவரை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் நியமித்துள்ளது. 2002 ஜூனில் இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் உட்பட "கிட்ட கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவிற்கான" துறைகள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அவருக்கு தரப்பட்டது.

ஆப்ராம்ஸ் உறுதியான வலதுசாரி சியோனிஸ்ட் மற்றும் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷரோன் மற்றும் லிக்குட் அணியின் ஆதரவாளர் ஆவர். அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், இஸ்ரேல்-பாலஸ்தீன பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்த "சமாதானத்திற்கு நிலம்" என்ற திட்டத்தை அமெரிக்கா தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். புது அமெரிக்க நூற்றாண்டு திட்டம் என்கிற ஒரு ஆவணத்தை அவர் தயாரித்தபோது, வாஷிங்டன் "அந்த பிராந்தியத்தில் அமெரிக்கக் கொள்கையை வெளிப்படையாக தாங்கி நிற்காத ஒரு பாலஸ்தீன அரசை உருவாக்க அனுமதிக்க கூடாது" என்று அறிவித்தார். கிறிஸ்துவ அடிப்படைவாதிகளிடையே இஸ்ரேலுக்கு ஆதரவு திரட்டுகின்ற ஒரு பிரதான பணியாளராகவும் அவர் செயல்பட்டார்.

மத்திய கிழக்கில் ஆப்ராம்ஸ் ஒரு முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் இராணுவ ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமித்துள்ள எல்லைகளில் நிலத்தை பறிமுதல் செய்து கொள்வதற்கும் அமெரிக்கா நிபந்தனையற்ற ஆதரவு காட்டுவதற்கு ஒரு சமிக்கை என்று பரவலாக கருதப்படுகிறது.

ஆப்ராம்ஸ் தன்னைத்தானே நவீன-பிற்போக்குவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு, கம்யூனிச எதிர்ப்பு மற்றும் சியோனிச ஆதரவு ஜனநாயகக் கட்சிக்காரர்கள் குழுவில் ஓர் அங்கமாக உள்ளார். ----அவர்களில் நடப்பு பாதுகாப்புத்துறை துணைச் செயலாளர் போல் உல்போவிச் மற்றும் பென்டகன் ஆலோசகர் ரிச்சர்ட் பேர்ள் ஆகியோர் அடங்குவர்----- இவர்கள் 1970 களில் அமெரிக்க செனட்டர் ஹென்றி ''ஸ்கூப்'' ஜாக்சனின் உதவியாளர்களாக அரசியலுக்குள் நுழைந்தவர்கள் மற்றும் அதற்கு பின்னர் 1980 களில் றேகனின் கீழ் குடியரசுக் கட்சிக்குள் வலதுசாரி அரசியல் வளைவரை பாதையை பின்பற்றியவர்கள் ஆவர்.

ஆப்ராம்ஸை அரசுத்துறையின் மனிதநேய விவகாரங்கள் மற்றும் மனித உரிமைகள் அலுவலக இயக்குனராக றேகன் நியமித்தார். குளிர் யுத்தக் காலத்தில் கடும் போக்குடைய மாவீரன் ஏர்னெஸ்ட் லூபெவர் என்பவரை அப்போது செனட் சபை ஏற்க மறுத்துவிட்டதால் அவருக்கு பதிலாக குடியரசுக் கட்சி ஜனாதிபதியின் இரண்டாவது தேர்வாக ஆப்ராம்ஸ் இருந்தார். இந்த ஏர்னெஸ்ட் லூபெவர், பகிரங்கமாக கம்யூனிஸ எதிர்ப்பு ஆட்சிகள் மனித உரிமைகளை மீறி செயல்படுவதை வாஷிங்டன் ஆராய வேண்டும் என்ற கருத்தை வெறுப்புணர்ச்சியுடன் ஏளனம் செய்தார். அத்துடன் அவர் குறிப்பாக சிலியின் இராணுவ சர்வாதிகாரி அகஸ்டோ பினோச்சேவிற்கு ஆதரவு தெரிவித்தார்.

தார்மீக நெறிமுறை மற்றும் பொதுக்கொள்கை மையத்தை துவக்கிய ஏர்னெஸ்ட் லூபெவர் உடைய ஆதரவாளராக ஆப்ராம்ஸ் இருந்தார். இந்த மையத்தை வலதுசாரி சிந்தனையாளர் குழு அமெரிக்காவின் பல்தேசிய நீதிநெறி சார்ந்த அமைப்பு என்று சித்தரிப்பதில் ஊன்றி கவனம் செலுத்தி வந்தது. ஆப்ராம்ஸ் நாடாளுமன்றத்திற்கு பொய் சொல்லியதாக தண்டிக்கப்பட்ட பின்னர் இந்த அமைப்பின் தலைவரானார்.

அமெரிக்க அரசுத்துறையின் மனித உரிமைகள் தொடர்பான பொறுப்பு அதிகாரியாகவும், அதற்கு பின்னர் அமெரிக்க உள் விவகாரங்களுக்கு துணைச் செயலாளராகவும் ஆப்ராம்ஸ் பணியாற்றியபோது, அவரது முக்கிய நடவடிக்கையாக நிக்கரகுவாவிற்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதற்கு அமெரிக்கா ஒழுங்குபடுத்திய எதிர்ப்புரட்சிகர இராணுவத்தை உருவாக்குவது மற்றும் அதன் பக்கத்து நாடுகளான எல் சல்வடோர், குவாத்தமாலா மற்றும் ஹோண்டூராசில் வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவது ஆகிய முக்கிய பணிகளை மேற்கொண்டிருந்தார்.

நிக்கரகுவாவில் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக மிகைப்படுத்திக் கூறலில் ஆப்ராம்ஸ் ஒரு நிபுணராக இருந்தார்---மிகவும் குறிப்பாக சான்டினிஸ்டா அரசாங்கம் மிஸ்கிட்டோ இந்தியர்களை பழிவாங்குகிறது என்று சித்தரிப்பதற்காக கற்பனையான பிரச்சாரத்தை அவர் நடத்தி வந்தார்----10,000 நிக்கரகுவா மக்களை கொன்ற கான்ட்ரா இராணுவத்திற்கு ஆதரவு தருவதை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறு மிதமிஞ்சிய கற்பனைக் குற்றச்சாட்டுக்களை அவர் உருவாக்கினார்.

அதற்கிடையில், அமெரிக்க ஆதரவு சர்வாதிகார ஆட்சிகள் பாரியளவு அட்டூழியங்களை செய்து வருவதாக வந்த நிரூபிக்கப்பட்ட செய்திகளை ஆப்ராம்ஸ் மிகவும் ஏளனத்துடன் தள்ளுபடி செய்தார்.

இதில் நிராயுதபாணிகளான ஏறத்தாழ 1,000 எல் சல்வடோர் மக்களை அமெரிக்கா பயிற்சியளித்த அட்லாகட்டில் படைப்பிரிவு (Atlacatl Battalion) 1981 டிசம்பரில் படுகொலை செய்த வழக்கும் அடங்கும். நியூயோர்க் டைம்ஸை சேர்ந்த ரெய்மண்ட் பானர் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டை சேர்ந்த அல்மா கில்லர்மோபிரிட்டோ ஆகியோர் இந்த மக்கள் மொத்தமாக கொல்லப்பட்டது பற்றிய விவரங்களை வெளியிட்டபோது, அவை "கம்யூனிஸ்ட் பிரச்சாரம் தவிர வேறு ஒன்றுமில்லை" என்று ஆப்ராம்ஸ் தள்ளுபடி செய்தார்.

இந்த செய்தி பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிடப்பட்ட மறுநாள், சல்வடோர் ஆட்சி, "சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட, மனித உரிமைகளை ஏற்றுச் செயல்படுத்துகின்ற ஒரு ஒருங்கிணைந்த கணிசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. மற்றும் சல்வடோர் குடிமக்கள் முறையின்றி சித்திரவதை செய்யப்படுவது, கொலை செய்யப்படுவது ஆகியவற்றிற்கு அந்த ஆட்சி முற்றுப்புள்ளி வைக்க பணியாற்றி வருகிறது" என்று அரசுத்துறை ஒரு அறிக்கையை அதிகாரப்பூர்வமான சான்றிதழை அளித்தது. கூடுதல் உதவியை அங்கீகரிப்பதற்கு இந்த ஆவணத்தை நிபந்தனையாக நாடாளுமன்றம் விதித்தது. இதன் பின்னர் றேகன் சான்றிதழ் சேவைகளை ரத்து செய்யும் கட்டளையை பிறப்பித்தார்.

ஐ.நா. ஏற்பாடு செய்த உண்மை அறியும் கமிஷன், நடைபெற்ற படுகொலை விவரங்கள் அடங்கிய ஒரு ஆவணத்தையும், பாதிக்கப்பட்ட 500 க்கு மேற்பட்டவர்களது முழு அடையாளங்கள் மற்றும் தடயவியல் ஆய்வு முடிவுகள் ஆகியவற்றையும் 1992 ல் வெளியிட்டிருந்தது. அதில் பலர் என்றைக்கும் அடையாளப்படுத்தப்படவில்லை. அந்த அறிக்கையின் சுருக்கம் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

"1981 டிசம்பர் 10 ம் திகதி மொராசான் பகுதியைச் சேர்ந்த எல் மொசொடோ கிராமத்தில் அட்லாகட்ல் படைப்பிரிவுகள் எந்தவிதமான எதிர்ப்பும் காட்டாத நிலையில், அந்த இடத்திலிருந்த அனைத்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கைது செய்தது. அடுத்த நாள், டிசம்பர் 11 ம் திகதி இரவு முழுவதும் அவர்களது வீடுகளுக்குள் பூட்டப்பட்டிருந்த நிலைக்கு பின்னர், அவர்கள் வேண்டுமென்று திட்டமிடப்பட்டு குழுக்களாக கொலை செய்யப்பட்டனர். முதலில் ஆண்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அதற்கு பின்னர் பெண்கள் கொலை செய்யப்பட்டனர் மற்றும் கடைசியாக குழந்தைகள் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த இடங்களிலேயே கொலை செய்யப்பட்டனர்...."

அதற்கு பின்னர் வெளியான விவரங்களின்படி, அமெரிக்க அரசுத்துறைக்கு இந்த படுகொலை குறித்து முழுமையாக தகவல் தரப்பட்டது. அந்த நேரத்தில் ஆப்ராம்ஸ் இந்த சம்பவம் நடக்கவில்லை என்றும் பத்திரிக்கையாளர்களை கம்யூனிஸ்டுகளின் ''முகமூடிகள்'' என்றும் அவதூறு செய்தார்.

அதேபோன்று எல் சல்வடோர் ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஒரு தலைமைக் குருவான (Archbishop) ஒஸ்கார் ஆர்நிலோ ரொமரோவின் படுகொலையில் சம்மந்தப்பட்டிருந்த எல் சால்வடோர் வலதுசாரி கொலைக் குழுவின் தலைவன் ரொபேட்டோ ஒபிசோனுக்கு இதில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கடுமையாக ஆப்ராம்ஸ் மறுத்தார். நிர்வாகம் மூடி மறைத்துவிட்டதாக குற்றம்சாட்டிய மனித உரிமைகள் விமர்சகர்களை அவர் கண்டித்தார். "ரொபேட்டோ ஒபிசோன், தலைமைக் குருவைக் கொலை செய்தார் என்று ஒரு தந்திர செய்தியை கண்டுபிடித்து விட முடியும் என்று நினைக்கிற எவரும் ஒரு முட்டாளாகவே இருப்பர்" என்று ஆப்ராம்ஸ் கூறினார். அந்த நேரத்தில், அந்தக் கொலையை ஏற்பாடு செய்வதில் அந்தக் கொலைக் குழுவின் தலைவனது பங்களிப்பு பற்றி சான் சால்வடோரில் இருந்த அதன் தூதரகத்திலிருந்து விவரமான தந்திகள் வந்தது வெளியுறவுத்துறையிடம் பொதிந்திருந்தது.

அதே போன்று, ஆப்ராம்ஸ் குவாத்திமாலாவில் நடைபெற்ற படுகொலை செய்திகளையும் மறுத்தார். அங்குள்ள கத்தோலிக்க சர்ச் ஒன்று இவற்றை "இனப்படுகொலைகள்" என்று வர்ணித்தது. இதில் குறிப்பாக 1985 ல், மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த மரியா ரொசரியோ கோடே, அவரது 21 வயது சகோதரர் மற்றும் அவரது 2 வயது மகன் ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரமான ஒரு சம்பவத்தை அவர் மறுத்தார். அவர்களது சிதைந்துபோன உடல்கள் ஒரு பள்ளத்தாக்கில் கிடந்தது. அந்த இளம் தாய் கொடூரமாக கற்பழிக்கப்பட்டது மற்றும் குழந்தையின் நகைகள் பிடுங்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. அப்போது ஆப்ராம்ஸ் அந்த மூவரும் ஒரு வாகன விபத்தில் மடிந்தார்கள் என்றும் குவாத்திமாலா ஆட்சியின் அதிகாரபூர்வமான கதையை நம்பாமல் இருப்பதற்கு எந்தவிதமான அடிப்படையும் இல்லை என்றும் வலியுறுத்திக் கூறினார்.

மத்திய அமெரிக்காவில் வாஷிங்டன் நடத்தி வந்த கீழ்த்தரமான போருக்கு ஏதாவது ஒரு வகையில் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றம் மேற்கொண்ட பயனற்ற நடவடிக்கைகளை துச்சமாக மதிக்கின்ற தனது முயற்சிகளை ஆப்ராம்ஸ் மறைத்துக்கொள்ள முயலவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு ''பக்திமிக்க கோமாளிகள்'' என்றும் ''அடிமுட்டாள்கள்'' என்றும் அவர் வர்ணித்தார்.

லத்தீன் அமெரிக்கா பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது மற்றும் அவருக்கு ஸ்பானிஷ் மொழியை பேசத் தெரியாது என்றாலும் நிக்கரகுவாவில் நடைபெற்ற சட்ட விரோதமான போரைச் சுற்றி நடைபெற்ற ரகசிய நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். நாடாளுமன்றம் போலன்ட் திருத்தம் என்று சொல்லப்பட்ட ஒரு சட்ட திருத்தத்தின் மூலம், அமெரிக்க இராணுவம் கூலிப்படையினருக்கு வழங்கும் ஆதரவிற்கு தடைவிதித்த பின்னர் CIA ஏற்பாடு செய்த கான்ட்ரா படைகளுக்கு நிதியளிப்பதில் ஒரு ரகசிய சங்கிலித்தொடர் போன்ற அமைப்பை உருவாக்குவதில் அவர் நேரடியாக மையமான பங்களிப்பு செய்தார்.

அப்போது தேசிய பாதுகாப்பு குழுவின் ஒரு உறுப்பினராக இருந்த லெப்டினட் கேர்னல் ஒலிவர் நோர்த்துடன் பணியாற்றி நிதியளிப்பதற்கு சட்டவிரோதமான நிதியாதாரங்களை பெறுவதில் அவர் நேரடியாக பங்களிப்பு செய்தார். அதில் "திரு கெனில்வொர்த்" (Mr. Kenilworth) என்ற புனைப்பெயரில் அவர் லண்டனுக்கு ஒரு விமானத்தில் புரூனே சுல்தானிடம் 10 மில்லியன் டாலர்களை பெறுவதற்காக சென்ற நடவடிக்கையும் அடங்கும்.

இப்படி நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே கான்ட்ரா கூலிப் படைகளை ஆதரிப்பதற்கு தனியார் முயற்சிகள் என்று கருதப்பட்டவற்றில் றேகன் நிர்வாகத்திற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென்று நாடாளுமன்றத்தின் முன் ஆப்ராம்ஸ் சாட்சியமளித்துக் கொண்டிருந்தார். ஒலிவர் நோர்த் ஈரானுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்களை விற்ற பணத்தை நிக்கரகுவா கான்ட்ரா கூலிப் படைகளுக்கு திருப்பிவிட்டது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

ஆப்ராம்ஸ் நாடாளுமன்றத்திற்கு பொய் சொன்னார் என்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பான கேள்விகளை புஷ் நிர்வாகம் தள்ளுபடி செய்து அவை "கவனிக்கப்பட்டிருப்பதாக" குறிப்பிட்டது.

தேசிய பாதுகாப்புக் குழுவில் சேர்ந்த பின்னர் 2002 ஏப்ரலில் வெனிசுலாவின் ஜனாதிபதி ஹூகோ சாவேசிற்கு எதிராக நடைபெற்ற தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் சம்மந்தப்பட்டிருப்பதாக ஆப்ராம்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரும், இப்போது அரசுத் துறையில் புஷ்ஷினால் நியமிக்கப்பட்டுள்ள, கான்ட்ரா சட்டவிரோத நடவடிக்கைகளில் சம்மந்தப்பட்டதாக கூறப்பட்ட ஒட்டோ ரீச்சும் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிகாரர்களை சந்தித்ததாகவும், அவர்களது வெற்றி வாய்ப்புகள் பற்றி விரிவான விவாதங்களை நடத்தியதாகவும் பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டன.

அதேபோன்று, அவர் வலேரி பிளாம் (Valerie Plame) விவகாரத்திலும் முடிச்சு போடப்பட்டிருந்தார். CIA யின் ரகசிய அதிகாரியான பிளாம், அவரது கணவரும் முன்னாள் தூதருமான ஜோசப் வில்சன் ஈராக்கில் இல்லாத அணு ஆயுதங்கள் திட்டம் தொடர்பாக நிர்வாகம் வெளியிட்ட கூற்றை மறுத்தார் என்ற காரணத்திற்காக பழிவாங்குகின்ற முறையில் பத்திரிக்கைகளில் அம்பலப்படுத்தப்பட்டார். அந்த சட்ட விரோத கசிவு தகவலை பத்திரிக்கைகளுக்கு தந்தவர் என்று பிரதானமாக சந்தேகிக்கப்படுபவர் ஆப்ரகாம்ஸ் ஆவர்.

இந்த தனிமனிதர்தான் வாஷிங்டனின் உலகளாவிய ''ஜனநாயக'' சிலுவைப் போரில் கொடி பிடித்துச் செல்கிறார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்களை கொண்டு செல்வதற்காக, ஒரு பூகோள இராணுவ ஆக்கிரமிப்பு பிரச்சாரத்தை மூடி மறைக்கும் அலங்கார வேலையாகத்தான் புஷ் நிர்வாகம் ''சுதந்திரம்'' பற்றியும் ''உரிமை'' பற்றியும் வெற்று வாய் வீச்சுக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் அவரது நியமனம் வலியுறுத்திக் கூறுகிறது.

ஆப்ராம்சின் முந்திய ''ஜனநாயக'' சிலுவைப் போரில் சம்மந்தப்பட்டிருந்த வழிமுறைகளான சட்டவிரோத போர்கள், வலதுசாரி ஆட்சிக் கவிழ்ப்புக்கள், கொலைக்குழு பயங்கரங்கள் மற்றும் சித்திரவதைகள் என்பன உள்நாட்டில் ஜனநாயக நிகழ்ச்சிப் போக்குகள் மீது மிதித்து துவைக்கின்ற நடவடிக்கைகளோடு இப்போது இணைந்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த முறைகளுக்கு இன்னும் மிகக் கொடூரமான அளவிற்கு புத்துயிரூட்டப்பட்டிருக்கிறது.

Top of page