WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
: மத்திய
கிழக்கு :
ஈராக்
Iraq suicide bombing campaign: a reactionary
diversion from the political struggle against imperialism
ஈராக்கிய தற்கொலை குண்டுவெடிப்பு நடவடிக்கை: ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரசியல்
போராட்டத்தில் இருந்து ஒரு பிற்போக்குத்தனமான திசைதிருப்பல்
By the WSWS International Editorial Board
4 March 2005
Back to screen
version
திங்கட்கிழமையன்று ஈராக்கிய நகரமான ஹில்லாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் கார்
குண்டுவெடிப்பு தாக்குதல், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க படையெடுப்பு, சதாம் ஹுசைனின் ஆட்சியை வீழ்த்திய
பின்னர் நடந்த அத்தகைய நிகழ்வுகளில் ஒரே நேரத்தில் மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையை கொண்டதாகும். இந்த
வெடிப்பிற்கு இலக்கானவர்கள் அமெரிக்காவால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஈராக்கிய போலீஸ் மற்றும் இராணுவத்தில்
சேருவதற்கு மருத்துவ சோதனைகளுக்காக வந்திருந்த இளைஞர்கள் ஆவர். பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 125
பேர் உயிரிழந்து விட்டனர்; மற்றும் குறைந்தது 130 பேராவது காயமுற்றனர்; அவர்களில் வழிப்போக்கர்களும் அண்மையில்
இருந்த கடைகளுக்கு பொருள் வாங்கச் சென்றவர்களும் இருந்தனர்.
பெரும்பாலும் ஷியைட்டுக்கள் நிறைந்துள்ள ஹில்லா நகரத்தில் நிகழ்ந்துள்ள தாக்குதல் கடந்த
இரண்டு மாதங்களாக அதிகமாகியுள்ள தொடர்ச்சியான தாக்குதல்களில் சமீபத்தியதும், அதிக இரத்தம் சிந்தப்பட்டதும்
ஆகும். அசோசியேடட் பிரஸ்ஸால் வழங்கப்பட்ட எண்ணிக்கையின்படி, ஜனவரி மாதம் 55 தனித்தனி தாக்குதல்களில், 234
பேர் கொல்லப்பட்டு, 429 பேர் காயமடைந்தனர். பெப்ரவரியில் நிகழ்ந்த அத்தகைய தாக்குதல்கள் 38 மூலம் இறந்தோர்
எண்ணிக்கை 311 ஆகவும், காயமுற்றோர் எண்ணிக்கை 433 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஒரு நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வேலையற்று இருக்கும்போது மற்றும் வறிய நிலையில்
இருக்கும்போது போலீஸ் மற்றும் இராணுவத்தில் ஒரு வேலையும் ஊதியமும் கிடைக்கும் என்று ஈர்க்கப்பட்ட தொழிலாள
வர்க்க இளைஞர்களை, இத்தகைய போரில் ஈடுபடாதவர்களை படுகொலை செய்வது என்பது, ஒரு அரசியல் கொடுமையாகும்
மற்றும் இது கண்டனத்திற்கு உரியதாகும்.
இது ஒழுக்கநெறியின் சீற்றம் என்ற பிரச்சினை மட்டும் அல்ல. இவை அரசியல் குற்றங்கள்
ஆகும். ஈராக்கின்மீது சட்டவிரோதமான அமெரிக்க ஆக்கிரமிப்பினை கீழறுப்பதற்கு பதிலாக, இத்தகைய தாக்குதல்களின்
முக்கிய விளைவு இன்னும் தீவிரமான முறையில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி பலவீனமான குறுங்குழுவாத உட்பூசல்களுக்கு
வழிவகுக்கும்.
உலக சோசலிச வலைத் தளம் பயங்கரவாத குண்டுவீச்சுகளுக்கு எதிர்ப்புக்
காட்டுவது, ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை நியாயப்படுத்துவதை முழு நோக்கமாகக் கொண்ட புஷ்
நிர்வாகம் மற்றும் பெருவணிக செய்தி ஊடகத்தால் ஹில்லா குண்டுவெடிப்பு தொடர்பாக செய்யப்படும் கபடத்தனமான கண்டனங்களுடனும்
இதேபோன்ற தாக்குதல்களுடனும் எந்தத் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை.
ஈராக்கின் மீது அமெரிக்க போர் தொடங்கப்பட்டவுடன், மிகப்பெரிய வகையில் இரத்தம்
சிந்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமையில், ஹில்லா ஒன்றும் பெரிய அளவில் மக்கள் அழிக்கப்படுவதை
புதிதாக காணவில்லை என்று சிலர் நினைவு கூர்ந்து கவலைப்படுவர். ஏப்ரல் 1, 2003 அன்று, அமெரிக்க இராணுவம்
இந்த சிறு நகரத்தை தொகுப்புக் குண்டுகள் மூலம் தாக்கியதில் பெரும்பாலும் சிறுவர் உட்பட குறைந்தது 60 பேர்
மாண்டனர், நூற்றுக் கணக்கானோர் காயமுற்றனர். ஒரு தொடர்ந்திருக்கும் குற்றம் சார்ந்த போரில் இத்தகைய
ஆயுதத்தை பயன்படுத்துதல் மற்றொரு போர்க் குற்றமாகும்.
அமெரிக்க படையெடுப்பு தொடங்கியதில் இருந்து பல்லாயிர கணக்கான மக்கள்
உயிரிழந்துள்ளதற்கு பொறுப்பான தன்னுடைய இராணுவத்தினால் மக்கள் கொலையுண்டதற்கு மட்டும் வாஷிங்டன் இறுதிப்
பொறுப்பல்ல, அத்தோடு ஈராக்கில் நிகழ்ந்துள்ள ஏனைய இரத்த சிந்துதலுக்கும் வாஷிங்டன்தான் பொறுப்பாகும்.
அமெரிக்கா ஓர் ஆக்கிரமிப்பு வல்லரசாக இருப்பதால், சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இது மறுக்கவியலா வகையில்
உண்மையாகும்; ஆனால் இன்னும் அடிப்படையான விதத்தில், அமெரிக்கப் போரும், ஆக்கிரமிப்பும் பொருளாதார தடைகள்
ஒரு தசாப்தமாக இருந்து நாட்டை பாழ்படுத்திய உச்சத்தில் வந்த வகையில், அத்தகைய பொருளாதார தடைகள்
ஈராக்கிய சமூகத்தை சின்னாபின்னமாக ஆக்கிய நிலையில், ஈராக்கை ஒரு சமூக மற்றும் பொருளாதார சிதைவிற்கு
உட்படுத்திய அதேவேளை, எதிர்ப்பைத்தான் தூண்டிவிட்டுள்ளன.
ஆயினும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்கள், அர்த்தமற்ற வகையில் ஈராக்கியர்களை
- அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு சந்தேகத்திற்கிடமின்றி எதிர்ப்பாளர்களாக இருப்பவர்கள் உட்பட பலரை கொலைசெய்யும்
தந்திரோபாயங்களை எந்த வழியிலும் நியாயப்படுத்திவிட முடியாது.
வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பின்போது, ஆயுதமேந்தி போராடுவது என்பது நெறியான,
தவிர்க்க முடியாத தந்திரோபாயம் என்றாலும்கூட, அதுதாமே இலக்கு அல்ல மற்றும் மக்கட்திரளுக்கு கல்வியூட்டும்,
வழிகாட்டும் மற்றும் ஊக்கமூட்டும் ஓர் அரசியல் வேலைத்திட்டத்தின் இடத்தை எடுக்க முடியாது. மேலும், வழிவகைகளுக்கும்
இலக்குகளுக்கும் இடையே ஆழ்ந்த தொடர்பு உள்ளது. ஈராக்கிய ஆக்கிரமிப்பின் அப்பட்டமான கொள்ளை நோக்கங்களின்
இலக்குகள் அமெரிக்காவால் அபு கிரைப் சிறைச்சாலையில் நடந்த கொடுமை செய்வதில் இன்பம் காணும் செயல்களில்
வெளிப்பாட்டை கண்டதுபோல், ஈராக்கியர்களை பெருமளவு கொன்று தீர்ப்பதும், இத்தகைய தற்கொலை
குண்டுவெடிப்புக்களுக்கு பொறுப்பான அரசியல் சக்திகளின் அடிப்படையான பிற்போக்கு முன்னோக்கை அம்பலப்படுத்துகிறது.
இந்த தாக்குதல்கள் மக்களை ஒரு குறிப்பிட்ட அரசியல் நெறிக்கு வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது ஈராக்கில்
அமெரிக்க காலனித்துவாதிகளின் இருப்புக்கு மக்களுடைய எதிர்ப்பினை செயலாற்ற தூண்ட வேண்டும் என்றோ இலக்கை
கொண்டிருக்க வேண்டும் என்பதை குறிப்பாய் தெரிவிக்காமல்கூட நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒரு முந்தைய சகாப்தத்தில் காலனித்துவ-எதிர்ப்பு போராட்டங்கள், அல்ஜீரியாவில்
இருந்தது போல் பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்களை பயன்படுத்தல் உள்பட கேள்விக்கு இடமின்றி வன்முறையுடன்
சேர்ந்திருந்தன. ஆனால் இந்தச் செயல்கள், முதலாளித்துவ தேசியவாதத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் பிரமைகள்
அனைத்தும் இருந்தபோதிலும், மக்களிடையே ஆதரவை வென்றெடுப்பதற்காக வைக்கப்பட்ட அரசியல் திட்டங்கள் அல்லது
கோரிக்கைகளை முன்னெடுத்த இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டன.
இத்தகைய கொடுமைகளை நிகழ்த்துபவர்கள் மக்களிடையே பரந்திருக்கும் அதிருப்தி மற்றும்
அரசியல் அமைதியின்மை இவற்றிற்கு அழைப்புக் கொடுக்கும் விதத்திலோ அல்லது இப்பகுதி முழுவதும் நிறைந்திருக்கும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பை பரந்த முறையில் தட்டியெழுப்புவதற்கான முயற்சிக்கோ
உரிமைகோருவதில்லை. மாறாக, இளவயது ஆண்கள், பெண்களை பழிப்புக்கிடமான துணிகரச்செயலுக்கு
தீனியாக்குவதற்காக, அவர்களிடையே காணப்படும் ஒடுக்குமுறையை உண்மையாய் எதிர்க்கும் சீற்றம், சுய-தியாகம்,
மற்றும் உணர்வு இவற்றை பண்பாடற்றவகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
இந்த தந்திரோபாயங்கள் ஏகாதிபத்தியத்தை தோற்கடிக்கும் ஒரு போராட்டத்தினை
அடிப்படையாக கொண்டிருக்கவில்லை. ஈராக்கிய மக்களை இகழ்ச்சியுடன் நடத்தும் முறையிலும், ஈராக்கில் தொழிலாள
வர்க்கப் போராட்டத்தின் ஆழமான வரலாற்று மரபுகளை அவமதிக்கும் தன்மையிலும்தான் இவை நடத்தப்படுகின்றன. அவை
சமூக நனவை கீழறுக்கின்றன மற்றும் அரசியல் குழப்பத்தை விதைக்கின்றன.
ஈராக்கில் புனிதப் போருக்காக இருக்கும் அல் கொய்தா என்று தன்னை அழைத்துக்
கொள்ளும் ஒரு குழு ஹில்லா குண்டுவீச்சிற்கு பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளது என்று ஒரு இஸ்லாமிய வலைத் தளம்
கூறியுள்ளது. இப்படி ஒரு குழு இருக்கிறதா, பெயரையும் மீறி அதற்கு வேறு ஏதேனும் ஆதரவு உள்ளதா என்பதற்கு
தெளிவான விடை கிடைக்கவில்லை.
தாங்கள் தவிர்க்கப்பட்ட அரசாங்கம் உயர்நிலையை அடைவதை தடுக்கும் நோக்குடன்
ஒருவரை ஒருவர் அழிக்கும் வன்முறையை ஊட்டிவளர்க்கவும், தாங்கள் நம்பியிருக்கும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு
தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்கு தொடர்ந்து நியாயப் படுத்தலை வழங்கவும் அமெரிக்க சார்புடைய அஹ்மது
சலாபி, இயத் அல்லாவி போன்றவர்களுக்கு விசுவாசமாக இருக்கும் சக்திகள் கூட இத்தகைய ஆத்திரமூட்டலை
செய்திருக்கலாம் என்பதை விலக்கிவிடமுடியாது.
இத்தகைய பயங்கரவாத குண்டுவீச்சுக்களின் தன்மையில் அந்த அமைப்புக்களின் துல்லியமான
அடையாளம், அவற்றின் அரசியல் நோக்கங்கள் ஆகியவை முற்றிலும் நுணுகிக் காணமுடியாது உள்ளன. இல்லாத
அமைப்புக்களின் பெயரில், தங்களுடைய மறைமுகச் செயற்பட்டியலை நடைமுறைப்படுத்துவதற்காக சிஐஏ உட்பட எவரும்
செய்யக் கூடும்.
ஆனால் இத்தகைய தந்திரோபாயங்கள் எந்தவகையிலும் இஸ்லாமிய சக்திகளுக்கோ அல்லது
ஈராக்கிய பாத்திச ஆட்சியின் மிச்சசொச்சங்களுக்கோ புதியவை அல்ல. அவை இரண்டுமே அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான
எதிர்ப்பை திசைதிருப்புவதில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றன; அவை ஈராக்கிய மக்களிடையே ஆதரவை
பெற்றிருப்பதுடன் மத்திய கிழக்கு முழுவதிலும் இருக்கும் மக்களிடம்கூட ஆதரவைக் கொண்டுள்ளன.
பாத்திஸ்டுகளாயினும் சரி இஸ்லாமியவாதிகளாயினும் சரி தொழிலாள வர்க்கம் மற்றும்
ஒடுக்கப்பட்டவர்களுடைய நலன்களை பிரதிபலிக்கவில்லை. அரபு உலகம் முழுவதும் காணப்படும் மதச் சார்பற்ற
முதலாளித்துவ தேசியவாத ஆட்சி போலவே பாத்திஸ்ட் ஆட்சியும் ஓர் ஆளும் செல்வந்தத்தட்டின் நலன்களை
பெருக்குவதற்காக, ஈராக்கிய மக்களின் சமூகத் தேவைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் இவற்றை தியாகம்
செய்துவிட்டவையாகும். முன்பு ஆதரவிற்காக அது கொண்டிருந்த ஏகாதிபத்திய சக்திக்கு அதுவே பலியாகி விட்டது.
முதலாளித்துவ தேசியவாதத்தின் வரலாற்றளவு தோல்விதான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின்
எழுச்சிக்கு முக்கிய காரணமாகும். அவை 1980களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவு பெற்றிருந்த ஆட்சியை
தாக்குவதில் வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டன. இப்பொழுதும் அவை ஈராக்கில் ஷியைட் ஆதிக்கம் செய்யும் அரசு
உருவாவதை விரும்பாத செளதி ஆளும் செல்வந்தத்தட்டிற்குள்ளே உள்ள கூறுகள் மற்றும் இப் பகுதியில் இருக்கும் ஏனைய
ஆட்சிகளின் மறைமுக ஆதரவை தொடர்ந்து பெறுகின்றன. பாத்திஸ்டுகள், இஸ்லாமிய வாதிகள் இருவருமே தங்களுடைய
குறுகிய நலன்களை பெருக்குவதற்காக ஏகாதிபத்தியத்துடன்கூட உடன்படிக்கையை மேற்கொள்ள தயாராக இருப்பர்.
ஈராக்கிய மக்களுக்கு எதிரான தற்கொலை குண்டுவெடிப்புக்களின் குற்ற வழிமுறைகள் மூலம்
பின்பற்றப்படும் பிற்போக்குத்தனமான சமுதாய இலக்குகள் இவை. பாத்திஸ்டுகளின் ஆட்சியை மீட்பதற்கோ அல்லது
ஆப்கானிஸ்தானில் தலிபானும், ஈரானில் முல்லாக்களும் போன்று ஒரு பிற்போக்கான இஸ்லாமிய கற்பனை உலகை
திணிப்பதற்கும் மக்களுடைய ஆதரவை வென்றெடுப்பதற்கு இந்த அமைப்புக்களில் ஒன்றிற்கும் திறன் கிடையாது.
இந்த வழிமுறைகளுக்கு அடிப்படையாய் இருப்பது -- அவை ஏகாதிபத்தியத்தின் தூண்டுதலின்
விளைவு அல்ல அல்லது வேண்டுமென்றே இனவாத உள்நாட்டுப் போரை தூண்டும் முயற்சி என்று கொண்டாலும், இந்த இரு
சக்திகளையும் அவர்களின் அரசியல் ஆதரவாளர்களையும் ஊடுருவிப் பரவியுள்ள, ஆழ்ந்த நம்பிக்கையற்றதன்மை ஆகும்.
ஈராக்கிய மக்களை நனவான அரசியல் அணிதிரட்டலின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட
போராட்டத்தின் சாத்தியத்தை அவர்கள் திட்டவட்டமாக நிராகரிக்கின்றனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான சோசலிச இயக்கத்தின் எதிர்ப்பு, ஒரு நீண்ட கால
வரலாற்றையும் வலுவான அரசியல் அஸ்திவாரங்களையும் கொண்டது ஆகும். அக்டோபர் 1917 புரட்சியின் தலைவர்களான
லெனின், ட்ரொட்ஸ்கி, மற்றவர்களும் திட்டவட்டமாக பயங்கரவாத அரசியலுக்கு எதிரான போராட்டத்தில்தான்
தங்களுடைய அரசியல் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் காய்ச்சி அடித்து உருவாக்கினர். அருவமான அறநெறிக்
கண்ணோட்டத்திலிருந்து அவர்கள் அவற்றை எதிர்க்கவில்லை, மாறாக அத்தகைய வழிமுறைகள் தொழிலாள வர்க்கத்தின்
பங்கில் அரசியல் நனவை வளர்த்தெடுக்க அவை தடையாக மட்டுமே பயன்படும் என்ற காரணத்தினால்தான் அவற்றை
எதிர்த்தனர்.
"தங்களுடைய சொந்த நனவில் மக்களின் பங்கை சிறுமைப்படுத்துவதாலும், அவர்களின்
ஆற்றலின்மையுடன் அவர்களை சமரசம்கொள்ள வைப்பதாலும், அவர்களுடைய பார்வையையும் நம்பிக்கையையும்
எப்பொழுதோ தனது பணியை சாதிப்பதற்காக வரக்கூடிய பெரும் பழிவாங்குபவர், விடுவிப்பவர் என்பவருக்காக
காத்திருக்கும் நிலையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதாலும், எங்களது பார்வையில், தனிநபர் பயங்கரவாதம் என்பது
ஏற்கத்தக்கது அல்ல" என்று 1909ல் "ஏன் மார்க்சிஸ்டுகள் தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றனர்"
என்ற கட்டுரையில் ட்ரொட்ஸ்கி எழுதியுள்ளார்.
ட்ரொட்ஸ்கியும் அவருடைய தோழர்களும், ஆயுதமற்ற, வறுமையில் வாடிக் கொண்டிருக்கும்
மக்கள் மீது ஒட்டுமொத்த படுகொலைகளை நடத்துவதற்கு எதிராக அல்லாமல், ஜார் மன்னருடைய மந்திரிகளுக்கு
எதிரான கொலைமுயற்சிகளின் வடிவத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய குட்டி முதலாளித்துவ அறிவுஜீவுகளின் ஒரு தட்டால்
நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்த பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிட்டனர்..
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டில் போராட்டம் என்பது தவிர்க்கமுடியாமல்
கட்டாயம் வன்முறை வடிவமைப்புக்களை கொண்டாலும், ஹில்லாவில் குண்டுவீச்சு போன்ற செயற்பாடுகள் இப்போராட்டத்தை
வளர்க்கும் என்று நம்புவது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுவதும், பிற்போக்குத்தனமான செயலும் ஆகும்.
அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் ஈராக்கை மறுகாலனியாக்கும் முயற்சிக்கு எதிரான
போராட்டத்தில் முக்கியமான பிரச்சினை, அப்பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் இருக்கும் உழைக்கும்
மக்களை, ஒரு பொதுவான சோசலிச மற்றும் சர்வதேசியவேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஈராக்கிய தொழிலாள
வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் வெளிப்பாடு ஆகும்.
தொழிலாளர்களின் ஒரு சக்தி வாய்ந்த மக்கள் இயக்கத்தை எதிர்கொள்கையில், அமெரிக்கா
அரசியல் கட்டுப்பாட்டை தக்க வைத்துக்கொள்ள முடியாது. 2004ம் ஆண்டின் தொடக்கத்தில் பல்லாயிரக் கணக்கான
ஷியைட்டுக்கள் தெருக்களுக்கு வந்து நேரடித் தேர்தல்கள் வேண்டும் என்று கோரியபோது அமெரிக்க ஆக்கிமிப்பு அதிகாரிகள்
அதை எதிர்கொண்டவிதம் நல்ல படிப்பினையை கொடுக்கிறது. பெரும் மக்கட்திரளை எதிர்கொள்ள நேருகையில், அமெரிக்க
ஏகாதிபத்தியம் பின்வாங்கி, தன்னுடைய திட்டங்களை மீளவும் வகுக்கிறது.
குண்டுவெடிப்பு வகையிலான விபரீதமான விளைவு என்ன என்றால், மக்கள் பேரளவில்
அணிதிரளும் சாத்தியம்கூட அவர்கள் எந்த நேரத்திலும் முகம் தெரியாத வன்முறைக்கு உயிரிழக்க நேரும் என்று இருக்கும்
அச்சுறுத்தலால் கீழறுக்கப்பட்டுவிடும்.
வரலாற்றுரீதியாக ஈராக்கிய தொழிலாள வர்க்கத்தை பின்தங்கிய நிலையில் வைத்துள்ள சக்திகளுக்கு
எதிராக சமரசமற்ற ஒரு போராட்டத்தின் மூலமே ஈராக்கிய உழைக்கும் மக்களின் ஒரு உண்மையான சுயாதீனமான இயக்கம்
வெளிப்படும். இவர்களுள் பாத்திஸ்ட் ஆட்சியின் வெறிக் கும்பல்கள், அரசியலில் மிகப் பிற்போக்குத் தனத்தை
ஊட்டிவளர்த்திருந்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்கள், ஈராக்கிய தொழிலாளர்கள் இப்பொழுது எதிர்நோக்கியுள்ள
சங்கடத்திற்கு குறிப்பாக பொறுப்பேற்க வேண்டிய ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி என்று அனைத்துமே அடங்கியுள்ளன.
தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை எதிர்ப்பதில் சளைக்காமல் உறுதியுடன்
இருக்கும் தன்மையில்தான் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகள் உள்ளனர். 1963ம் ஆண்டில் சிஐஏ ஆதரவுடன்
நடைபெற்ற இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பிற்குப்பின் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்ட
பின்னரும்கூட, அவர்கள் பாத்திஸ்ட் ஆட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். 1978-79ல் ஸ்ராலினிஸ்டுகளுக்கு எதிராக
குருதி தோய்ந்த மற்றொரு படுகொலையை சதாம் ஹுசைன் நடத்தும் வரை, ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அவருடன்
பற்றிக்கொண்டுதான் இருந்திருந்தது. இப்பொழுது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு நடைமுறையில் ஈராக்கிய கம்யூனிஸ்ட் கட்சி
ஆதரவைக் கொடுத்துள்ளது, கைப்பாவை ஆட்சியில் சேர்ந்திருக்கிறது, அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்த தொழிற்சங்க
கூட்டமைப்பை இயக்குகிறது. இந்த அமைப்பு ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பும் கொடுக்கவில்லை, ஈராக்கியப் பொருளாதாரம்
முற்றிலும் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
இருபதாம் நூற்றாண்டில், சர்வதேச சோசலிச மற்றும் ஏகாதிபத்திய போராட்டங்களின்,
பல நேரம் சோகம் நிறைந்த அனுபவங்களின் வரலாற்று அனுபவத்தின் அடிப்படையில் ஈராக்கிய தொழிலாள வர்க்கத்தின்
ஒரு புதிய அரசியல் கட்சி கட்டாயம் கட்டியமைக்கப்பட வேண்டும். சர்வதேச முன்னோக்கின் அடிப்படையில் தொழிலாள
வர்க்கத்தின் ஒரு புரட்சிகரமான அரசியல் கட்சியை அமைப்பதற்கு மாற்றீடு ஏதும் இல்லை. |