World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா : சுனாமி பேரழிவுIndia's tsunami victims left without government assistanceஇந்தியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கவில்லை By Sasi Kumar and M. Kailasam தென்னிந்திய கடற்கரையை சுனாமி தாக்கி ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பின்னரும் தப்பிப் பிழைத்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள், வீடுகள், உடைமைகளையும் மற்றும் பல இடங்களில் தங்களின் வாழ்க்கைத் தொழிலையும் இழந்துவிட்டவர்கள் தினசரி வாழ்வை நடத்துவதற்கே போராட வேண்டியிருக்கிறது. உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளித்த பலர் ---உள்ளூர் மாநில மற்றும் தேசிய அரசாங்க அதிகாரிகள் தங்களது துன்பத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டமைக்கு தங்களது வெறுப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர். தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னை அருகில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்மையில் உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். சென்னையிலிருந்து 41 கி.மீ அப்பாலுள்ள பழவேற்காட்டில், 24 சிறிய கிராமங்களில் சுமார் 30,000 மக்கள் வாழ்கின்றனர். இவற்றில் 10 கிராமங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டன. 4 குழந்தைகளும் 5 பெண்களும் கொல்லப்பட்டும், ஆனால் பெரும்பாலான மக்கள் தங்களது படகுகளை வலைகளை வீட்டு சாமான்களை இழந்தும் உள்ளனர். மீன்பிடிக்க இயலாத நிலையில் அந்தப் பகுதி மக்கள் அரசு சாராத அமைப்புகளின் (NGOs) உதவிகளை சார்ந்திருக்கின்றனர். அரசாங்க உதவி முற்றிலும் போதுமானதல்ல. லைட் ஹவுஸ் பஞ்சாயத்தை (அப்பகுதி கிராமக்குழு) சேர்ந்த 39 வயது நிரம்பிய தேசம் சிவராஜ் விளக்கம் அளித்ததாவது: "எங்களது பஞ்சாயத்தில் 244 குடும்பங்கள் வாழ்கின்றன. சுனாமி பேரலையினால் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டோம். அரசாங்கம் ரூ.5000 (115 டாலர்கள்) உதவியும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40 கிலோ அரிசியும் வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால் சேலைகள், படுக்கை விரிப்புக்கள், வேஷ்டிகளை தருவதற்கு ஆன செலவை கழித்துக்கொண்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.4,000-த்தை வழங்கியது. "ஆயினும், எங்களது பஞ்சாயத்தைச் சேர்ந்த 244 குடும்பங்களில் 125 குடும்பத்திற்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டன. எனவே அந்தப் பணத்தை நாங்கள் எல்லா குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தோம். இதன் விளைவாக அரசாங்கம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000தான் தந்திருக்கிறது. நான் மீனை வாங்கி விற்றுவந்தேன், ஆனால் இப்போது இன்னும் நான் கடலுக்கு செல்ல முடியவில்லை. போதுமான அரசாங்க உதவி கிடைக்காததால் நாங்கள் அரசுசாராத அமைப்புகளின் உதவியை நாட வேண்டி வந்திருக்கிறது." பழவேற்காட்டிலிருந்து 4 கி.மீ அப்பால் அமைந்துள்ள சாத்தான் குப்பம் மற்றும் கோரைக் குப்பம் இரண்டும் சிறிய கிராமங்கள். சாத்தான் குப்பத்தில் 3 பெண்களும், கோரை குப்பத்தில் 2 பெண்களும் 4 குழந்தைகளும் பலியாயினர். அந்த கிராமங்கள் உண்மையில் தீவுகளைப்போல் அமைந்துள்ளன. குடியிருப்பவர்கள் சந்தைக்கோ அல்லது பள்ளிக்கோ ஒரு ஆற்றை கடந்துதான் செல்லவேண்டும். சுனாமியால் கோரை குப்பத்தில் வெள்ளம் புகுந்தது என்றாலும் அங்கு வாழும் 341 பேரில் மிகப்பெரும்பாலோர் தப்பிவிட்டதற்கு காரணம் அந்த கிராமத்தை சூழ்ந்து கொண்ட தண்ணீர் பழவேற்காடு ஆற்றுக்குள் சென்றுவிட்டது. 25 வயதுடைய ராஜேஷ் சம்பத் எங்களிடம் கூறினார்: "பக்கத்திலுள்ள கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எங்களது உறவினர்கள் நாங்கள் அனைவரும் மடிந்துவிட்டதாக நினைத்தனர். ஆனால் நாங்கள் அனைவரும் தப்பிப் பிழைத்துவிட்டோம். இனி நாங்கள் அங்கு வாழக்கூடாது என்று அவர்கள் வற்புறுத்துகின்றனர். தங்களது வயல்களிலிருந்து வரும் விளைச்சல் மூலம் எங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குவதாக தெரிவிக்கின்றனர். எங்களது வாக்குகளை பெறுவதற்காக கடலில் இருந்து எங்களை காப்பாற்றுவதற்கு தடுப்புச் சுவர் எழுப்புவதாக தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் போலியான உறுதிமொழிகளைத் தந்தனர். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் எவரும் இங்கு வரவில்லை. "கடல் தண்ணீர் கிராமங்களின் உட்பகுதிக்குள் புகுந்துவிட்டதால் குடிதண்ணீர் வழங்குவது பாதிக்கப்பட்டது. தற்போது அரசாங்கம் மேத்தூர் கிராமத்திலிருந்து எங்களுக்கு தண்ணீர் வழங்குகிறது ஆனால் அது குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. குடிதண்ணீருக்காக மக்கள் படகில் 3 கி.மீ அப்பாலுள்ள கருங்கேலி செல்ல வேண்டியிருக்கிறது. படகை உபயோகிக்க முடியாதவர்கள் முழுப்பானை தண்ணீரை மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருந்து தலையில் கொண்டு வருகிறார்கள்". ராஜேஷ் தொடர்ந்து கூறினார்: "பொதுவாக எங்களது கிராம மக்கள் கடைகளுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ செல்வது கடினமானது. அவர்கள் ஆற்றை கடந்து செல்ல வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் படகுகளில் மக்களை ஏற்றிச் செல்வது கடினமானது, இரவில் யாருக்காவது நோய் நொடி ஏற்பட்டுவிட்டால் அல்லது உயிருக்கு ஆபத்து என்றால் இரவில் மருத்துவமனைக்கு செல்லவது கடினமானது. மற்றும் நாங்கள் படிப்பது சிரமம். இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள், ஆனால் நாங்கள் கடலையும் எங்களது கிராமத்தையும் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். "பொதுவாக மீனவர்களுக்கு கழிப்பிட வசதிகள் இல்லை, இதன்விளைவாக பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு. குடிதண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. அரசாங்கம் எங்களுக்கு மாற்று இடம் தந்து குடியேற்றினால் நல்லது. நாங்கள் இந்த கிராமத்தில் வாழ்வதற்கே அஞ்சிக்கொண்டிருக்கிறோம். இந்த பயங்கரமான சம்பவத்தால் நான் பயந்துபோய் இருக்கிறேன், என் கனவில் கூட அது அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக எங்களைப்பற்றி கவலையற்றிருந்த அரசாங்கம் எங்களுக்கு வீட்டு உபயோகச் சாமான்களையோ மாற்று குடியிருப்பு வசதியையோ செய்து தரும் என்ற நம்பிக்கையில்லை." அதே கிராமத்தை சேர்ந்த 25வயதான ரகு தேசப்பன், உலக சோசலிச வலைத் தளத்திற்கு பேட்டியளிக்கும் போது, புதிய படகை, மீன்பிடி வலைகளை மற்றும் இதர சாதனங்களை வாங்குவதற்கு 300,000 ரூபாய் செலவாகும் என்று தெரிவித்தார். "நாங்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அரசாங்கம் எங்களுக்கு இழப்பீடு தருவதாக உறுதியளித்தது, ஆனால் எங்களுக்கு 15,000 ரூபாய்தான் தந்திருக்கிறார்கள். இந்த பணத்தைக் கொண்டு வலைகூட வாங்க முடியாது. இரண்டாவதாக அவர்கள் நிவாரண நிதியளிப்பதாக குறிப்பிட்டார்கள் அதில் எனக்கு நம்பிக்கையில்லை.'' மில்லியன் கணக்கான இதர இந்திய ஏழை மக்களைப் போன்று உள்ளூர் கிராம மக்கள் எவருக்கும் வங்கிக் கணக்கு இல்லை, அதனால் பிரச்சனைகள் அதிகமாகி விட்டன என்று ரகு விளக்கினார். "அதிகாரிகள் தந்த காசோலையை மாற்றுவதற்கு ஒரு புதிய வங்கிக் கணக்கை துவக்குவதற்கு எங்களுக்கு கடினமாக உள்ளது. புதிய கணக்கை திறக்க வங்கியாளர்கள் பல்வேறு பிணையாட்களை (sureties) கேட்கிறார்கள். பலவாரங்கள் கழித்த பின்னரும் எங்களுக்கு காசோலைக்கான பணம் கிடைக்கவில்லை. வங்கி கணக்குகளை திறந்த பின்னரும், சேமிப்பு கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் இருக்க வேண்டும், நாங்கள் 14,500 ரூபாயைத்தான் எடுக்க முடியும்". பல மீனவர்கள் தற்போது மீன்பிடிக்க செல்வதற்கே கவலைகொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். "இதற்கு முன்னர் நாங்கள் கடலுக்கு சென்றபோது எங்களது உயிர்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டோம். இப்போது நாங்கள் கடலுக்குள் செல்லும்போது எங்களுக்கு குழந்தைகள் பெற்றோர்கள், மனைவி ஆகியோரது பாதுகாப்பைப் பற்றியும் கவலைப்பட வேண்டியிருக்கிறது." சாத்தான் குப்பத்தைச் சேர்ந்த, 28 வயதுடைய சேகர் ரத்தினவேலு, அலைகளின் சீற்றத்தை சூறாவளியை நாங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறோம் ஆனால் சுனாமியை முன்கூட்டி அறியமுடியவில்லை என்றார். இந்தோனேஷியாவில் சுனாமி முதலாவதாக தாக்கியவுடன் வானொலி அல்லது தொலைக்காட்சி மூலம் மக்களுக்கு தகவல் தரப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் கூறினார். "நாங்கள் அனாதைகளாகிவிட்டதாக உணர்கிறோம். தன்னார்வ அமைப்புக்கள் எங்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. எந்தப் பணியும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டு, சாப்பிட்டுக் கொண்டிருப்பதை- இவ்வாறாக வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை! அரசாங்கத்தை நம்புவதை விட எங்களது வேலைக்குத் தேவையான சாதனங்களை வாங்க கடன் வாங்குவது மேல். எங்களுக்கு மாற்றீடு எதுவுமில்லை," என்று ரகு கூறினார். 50 வயதான அபிபுல்லா ஆஷிப் இப்பேரழிவில் தனது மனைவியை இழந்துவிட்டார். மீனவர்கள் மட்டுமல்ல உணவுப் பொருட்கள் அல்லது ஆடைகளை விற்கும் சிறிய வியாபாரிகளும் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்று அவர் கூறினார். "மீண்டும் மீன் பிடிக்கச் செல்ல எவ்வளவு நாட்களாகும் என்று எங்களுக்கு தெரியாது. மீனவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தின் நிலைமைகளும் மோசமடைந்து வருகின்றது. "டிசம்பர் 26 பேரழிவு முதல் நாங்கள் பெரும்பாலும் தன்னார்வ அமைப்பின் உதவியில்தான் வாழ்ந்து வருகிறோம். அந்த உதவி நின்றதும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் எங்களுக்கு மீன்பிடி சாதனங்கள் இல்லை. [பிரதம மந்திரி] மன்மோகன் சிங் மத்திய அரசாங்கம் தருகின்ற உதவியில் வீடுகளும் மீன்பிடி சாதனங்களும் அடங்கும் என்று பெருமையாக கூறிக்கொண்டார். ஆனால் அவை கிடைப்பதற்கான அறிகுறியே இல்லை." |