WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
US-Russian strains dominate Bush-Putin
meeting in Bratislava
பிராடிஸ்லாவாவில் புஷ் - புட்டின் பேச்சுக்களில் அமெரிக்க ரஷ்ய அழுத்தங்கள் ஆதிக்கம் செய்கின்றன
By Justus Leicht
28 February 2005
Back to screen version
ஜனாதிபதி புஷ்ஷின் ஐரோப்பிய பயணம் அது தொடங்கியதைப் போலவே முடிவுற்றது.
"ஜோர்ஜிற்கும்", "விளாடிமிருக்கும்" இடையே இருக்கும் நட்பு பற்றிய வெளிப்படையான எடுத்துக்காட்டுகள் ஒரு புறம்
இருக்க, புஷ்ஷிற்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் இடையே ஸ்லோவோக்கிய நாட்டின் தலைநகரான பிராடிஸ்லாவாவில்
நடைபெற்ற பேச்சுவர்த்தைகள் இரு அரசாங்கங்களுக்கும் இடையே வளர்ந்து வரும் பதட்டங்களை மறைக்க முடியவில்லை.
அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் நலன்களுக்கு தாழ்ந்து நடக்குமாறு ரஷ்யாவை வாஷிங்டன் கோருவதோடு, ரஷ்ய
பொருளாதாரம் சர்வதேச மூலதனத்திற்கு முற்றிலும் திறந்துவிடப்படுவதையும் கேட்டுள்ளது.
இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன், ரஷ்யாவை தனிமைப்படுத்தி பலவீனப் படுத்துவதற்காகவும்,
வரலாற்றுரீதியாக மாஸ்கோவின் செல்வாக்கு மண்டலத்திற்குள்ளே இருந்த பழைய சோவியத் குடியரசுகள் மற்றும் ஏனைய
பகுதிகளை அதில் இருந்து கட்டவிழ்க்கவும், வாஷிங்டனின் முயற்சிகளை புஷ் அதிகப்படுத்தினார். பிராடஸ்லாவாவின் பிரதான
சதுக்கத்தில் நிகழ்த்திய உரையில், புஷ், ரஷ்யாவிற்கு நெருக்கமாக இருந்த ஆட்சிகளை அகற்றிவிட்டு, அமெரிக்க ஆதரவு
நிதியுதவியுடன், வாஷிங்டனுடன் நெருக்கமாக இருக்கும் அரசாங்கங்கள் அமைந்துள்ள, ஜோர்ஜியாவிலும், உக்ரைனிலும் நடத்தப்பட்ட
"ஜனநாயகப் புரட்சிகளை" பெரிதும் புகழ்ந்தார். இதன்பின்னர் இதேபோன்ற "ஜனநாயக" மாறுதல்
மோல்டொவாவிலும், பெலாரசிலும் தேவை என்ற அழைப்பை விடுத்தார்.
புஷ்ஷின் மறு தேர்தலை புட்டின் ஆதரித்திருந்ததுடன், அவருடைய வெற்றியை முதலில்
பாராட்டியவர்களுள் ஒருவரும் ஆவார். இரண்டாம் புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற முறையில்
தன்னுடன் ஒத்துழைக்கும் என்பதோடு ரஷ்ய, மற்ற சோவியத் குடியரசுகளில் இவர் கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி தலையிடாது
என்ற புட்டின் கணிப்பீடுகள் வெகு விரைவிலேயே முற்றிலும் தவறானவை என்று நிரூபணம் ஆயின.
புஷ் பதவிக்கு வந்த சில நாட்களிலேயே, அமெரிக்கா உக்ரைனில் நடந்த ஒரு அமெரிக்கச்
சார்புடைய ஆட்சியை நிறுவிய "ஆரஞ்சுப் புரட்சி" என்று அழைக்கப்பட்டதற்கு, ஆதரவு கொடுத்தது. அப்பொழுது
அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சரான கொண்டலீசா ரைஸ், சுதந்திர நாடுகளின் கூட்டமைப்பிலும் (Confederation
of Independent States- CIS), மத்திய கிழக்கிலும் இருந்த
புட்டினின் மிக முக்கிய நட்பு நாடுகளான பெலாரசையும் ஈரானையும் "கொடுங்கோன்மையின் புறக்காவல் நிலையங்கள்"
என்று அழைத்தார்.
பிராடிஸ்லாவா உச்சிமாநாட்டிற்கு முன்பு, ரஷ்ய அரசாங்கத்தைக் கடுமையாக புஷ்
தாக்கியிருந்தார். "ஒரு ஐரோப்பிய நாடு என்னும் முறையில் ரஷ்யா முன்னேறவேண்டும் என்றால், ரஷ்ய அரசாங்கம்,
ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு அதன் கடப்பாட்டை புதுப்பிக்க வேண்டும். சீர்திருத்தங்கள் ஒரே நாளில்
ஏற்பட்டு விடாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் நம்முடைய கூட்டு என்பது ஒரு சுதந்திரமான பத்திரிகை, ஒரு
முக்கியமான எதிர்க்கட்சி, அதிகாரப் பகிர்வு, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்காக நிற்கிறது என்பதை ரஷ்யாவிற்கு
எப்பொழுதும் நினைவுறுத்த விரும்புகிறோம். அமெரிக்காவும், அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் பேச்சு
வார்த்தைகள் நடத்தும்பொழுது தங்களுடைய பேச்சுவார்த்தைகளின் மையத்தில் ஜனநாயக சீர்திருத்தத்தை நிறுத்திக்
கொள்ளவேண்டும்" என்று புஷ் கூறினார்.
இந்த விமர்சனத்தை புட்டின் நிராகரித்தார். "ஜனநாயகம், மற்றும் ஜனநாயக
முறையிலான நிறுவனங்களின் அடிப்படைக் கோட்பாடுகள் இன்றைய ரஷ்ய வாழ்க்கையின் உண்மை நிலைக்கு, எங்களுடைய
மரபுகள், வரலாறு இவற்றுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கக்கூடியதாய் கட்டாயம் இருக்கவேண்டும்" என்று அவர் ஒரு
செய்தித்தாளுக்கு கொடுத்த பேட்டியில் கூறினார்.
உச்சி மாநாடு தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பு, அணுவாயுதப் பிரச்சினைகளில் ஈரானின்
பேச்சுவார்த்தை குழு தலைவரும் தேசியப்பாதுகாப்பு குழுவின் செயலாளருமான ஹசன் ரோஹனியை களிப்புடன் புட்டின்
வரவேற்றிருந்தார். ஈரானிய அணுசக்தித் திட்டங்கள் முற்றிலும் சமாதான செயற்பாடுகளுக்காக பயன்படுவதாகத் தான்
நம்புவதை அவர் குறிப்பிட்டிருந்தார். ஈரான் அணுவாயுதங்களை கட்டமைக்க முயற்சிக்கிறது என்று அமெரிக்கா
கூறிவருகிறது. புட்டினுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், ரோஹனி இரு நாடுகளும் ஈரானில் இருந்து ரஷ்யாவிற்கு
செலவழிக்கப்பட்ட அணுசக்தி எரிபொருளை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கான ஓர் ஒப்பந்ததத்தில் கையெழுத்திடும் என்று
அறிவித்தார்.
ரஷ்யா சிரியாவிற்கு S-400
நிலத்தில் இருந்து வானத்திற்கு பாயும் ஏவுகணைகளை விற்க விரும்புவதை பற்றிய கவலைகளை அமெரிக்க ஆதாரங்கள்
தெரிவித்தன. இந்த வான் பாதுகாப்பு முறை ராடரை தவிர்க்கும் மறைமுகமாக உயர் தொழில்நுட்பத்தை கொண்டு,
இலக்குகளை அழிக்கும் திறமையுடையவை. S-400
முறை மரபுவகையிலான ஆயுதங்களை சேர்ந்ததுதான் என்று ரஷ்யா வலியுறுத்தியதோடு அவை தற்காப்பு தன்மையைத்தான்
உடையவை என்றும் தற்பொழுது சர்வதேச அளவில் சிரியாவிற்கு அவற்றை வழங்கத்தடை ஏதும் இல்லை என்றும்
வலியுறுத்தியுள்ளது.
சிரியாவும் ஈரானும், மத்திய கிழக்கில் ரஷ்யாவின் இரு முக்கிய நட்பு நாடுகள் ஆகும்.
தெஹ்ரானுக்கு, விமானம், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டாங்குளை மிகப் பெரிய அளவில் வழங்குவது மாஸ்கோதான்.
இரண்டு நாடுகளிலும் பொருளாதார அளவிலும் ஒத்துழைப்பை கொண்டுள்ளன. ரஷ்யாவும் ஈரானும் இரண்டு நீர்மின் ஆற்றல்
தயாரிப்பை மத்திய ஆசிய குடியரசான தாஜிக்ஸ்தானில் கட்டமைக்க உடன்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தின் மதிப்பு
கிட்டத்தட்ட 380 மில்லியன் யூரோக்கள் ஆகும். மேலும் ஈரானிய
"Zohreh" செயற்கைக்
கோள் வடிவமைப்பு, வளர்ச்சி மற்றும் ஏவப்படுதல் இவற்றைப் பற்றிய ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளன; ஜனவரி
மாதம் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் 132 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும். ரஷ்யாவின் நிறுவனங்கள் ஈரானிய
ஆற்றல் துறையிலும் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
உலகிலேயே எரிவாயுவில் இரண்டாம் பெரிய இருப்புக்களையும், எண்ணெய் இருப்புக்களில்
நான்காம் பெரிய இடத்தையும் ஈரான் கொண்டுள்ளது: காஸ்பியன் கடல் மற்றும் பாரசீக வளைகுடா இவற்றிற்கிடையே
இருக்கும் அதன் நிலப்பரப்பு அதற்கு முக்கியமான மூலோபாய சிறப்பைக் கொடுத்துள்ளது. மேலும் நவீன
கட்டமைப்புக்களும், குழாய் முறையும் அதனிடத்தில் உள்ளன; எனவே உலகச் சந்தைக்கு எண்ணெய், மற்றும் எரிவாயுவைக்
கொண்டு வருவதற்கு அது ஒரு சிறந்த போக்குவரத்து வழித்தடமாக இருக்கிறது. தெஹ்ரானில் அமெரிக்க சார்புடைய
ஆட்சி ஏற்பட்டால் அது இன்னும் கூடுதலான முறையில் உலக ஆற்றல் அளிப்புக்களை அமெரிக்க கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவரும்.
அமெரிக்க அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டிய முறையில், புட்டின் அரசாங்கம் சர்வதேச
கூட்டாளிகளை தேடிவருகிறது. அதேநேரத்தில் அமெரிக்கா ரஷ்ய பொருளாதாரத்தில் மிக அதிகமான கட்டுப்பாட்டை
செலுத்துவதையும் அது தவிர்க்க முயன்று வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில், ஜப்பானுடன் சைபீரியாவில் இருந்து பசிபிக் கடற்கரைக்கு மிகப்
பெரிய எண்ணெய் குழாய் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை புட்டின் போட்டார். அதன் மூலம் ரஷ்ய எண்ணெய் ஆசியாவிற்கு
மத்திய கிழக்கின் வழியே வராமல் எடுத்துவரப்பட முடியும். ஒரு மிகப் பெரிய சீன-ரஷ்ய கூட்டு இராணுவப் பயிற்சி சீன
எல்லைப்பகுதியில் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவிற்கு 6.5 ல் இருந்து 15 மில்லியன் தொன்கள் என்று
இருமடங்கிற்கும் அதிகமாக, 2006ம் ஆண்டு, எண்ணெய் அளிக்க இருக்கும் தன்னுடைய கருத்தையும் ரஷ்யா அறிவித்துள்ளது.
உலகில் எண்ணெய் இறக்குமதியில் இரண்டாம் மிகப் பெரிய இடத்தில் சீனா உள்ளது; ஜப்பான் போலவே இதுவும் ஈரானிய
எண்ணெயை மிக அதிக அளவில் வாங்குகிறது. ரஷ்யாவைப் போலவே டெஹ்ரானுக்கு ஆயுதம் அளிக்கும் நாடுகளுள் இது
முக்கியமானதாக இருக்கிறது.
மறு புறத்தில் ரஷ்யா உலகத்திலேயே எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாம்
மிகப் பெரிய இடத்தைக் கொண்டுள்ளது. ஒருசிலவராட்சி உறுப்பினரான
Mikhail Khodorkovsky -ன்
யூகோஸ் நிறுவனம் அமெரிக்க எண்ணைய் நிறுவனங்களோடு நெருக்கமாக ஒத்துழைத்து இறுதியில் எதிர்க்கட்சியின் செய்தித்தாட்கள்,
அமைப்புக்கள் இவற்றிற்கும் நிதியுதவி கொடுத்திருந்தது, இதன் மிகையில் கோடோர்கோவ்ஸிக்கு எதிராக நடவடிக்கைகளை
புட்டின் எடுத்தமை, வாஷிங்டனில் இருந்து தீவிர எதிர்ப்புக்களை உருவாக்கியது. ஆனால், அது ரஷ்ய அரசாங்கம்
கோடோர்கோவ்ஸ்கியை சிறையில் தள்ளி அவருடைய நிறுவனத்தை ஒரு கட்டாய நடவடிக்கை மூலம் அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்ததை தடுத்து நிறுத்த முடியவில்லை.
Frankfurter Allgemeine Zeitung
கருத்தின்படி, இன்னும் கூடுதலாக ரஷ்யா செயலாற்ற இருக்கிறது. வருங்காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் எண்ணெய்,
எரிவாயு போன்ற முக்கிய வளங்களை நிலத்தில் இருந்து எடுத்து, சுத்திகரித்து, விற்பனை செய்ய உள்ள நிறுவனங்களில் மிகக்
குறைந்த பங்கை கொண்டிருக்க அனுமதிக்கப்படும். ரஷ்யாவில் "ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி" எனக் கூறப்படுவதின் பின்னணியில்
இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும்.
புஷ்ஷும், புட்டினும் இணைந்து பிராடிஸ்லாவாவில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் சில
கணத்தில் இது நன்கு புலப்பட்டிருந்தது. ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் போல, அமெரிக்க ஜனாதிபதி, புட்டினுக்கு
ஜனநாயகத்தின் கோட்பாடுகளைப்பற்றி உரையாற்றினார்; "தன்னுடைய நண்பர் விளாடிமீருடன் வெளிப்படையான, நேரிய,
ஆக்கபூர்வமான உரையாடலை கொண்டதற்காக" அவரை பாராட்டியதுடன், புட்டின் அத்தகைய ஜனநாயகம் அமைக்கப்படுவதற்கு
"முற்றிலும் பெருவிருப்பை" கொண்டுள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் புட்டினோ, யூகோஸ் விவகாரம் பற்றித் தெளிவாகக்
குறிப்பிடுவது போல் இருந்த கருத்தில், ஜனநாயகம் என்றால் "விருப்பப்படுபவர் எதையும் செய்து மக்களை கொள்ளை
அடித்துவிடலாம் என்று பொருள் தந்துவிடாது" என்று வலியுறுத்திக் கூறி தன்னுடைய உரையை முடிந்திருந்தார்.
இரண்டு நாடுகளும் கொண்டுள்ள வேறுபாடுகளை விட ஒருமித்த கருத்துக்கள்தாம் அதிகம்
என்று புஷ் கூறினார். ஆனால் இதற்கு ஒரு உதராணத்தை கொடுக்க முன்வந்தபோது, பொருளாதாரம் மற்றும் அணுவாயுதப்
பாதுகாப்பில் நெருக்கமான ஒத்துழைப்பு பற்றிய பொது அறிவிப்புக்களை தவிர, அவரால் கொடுக்க முடிந்தது 'MANPADs"
(Man Portable Air Defence Systems) எனப்படும் மனிதன்
கையால் எடுத்துச்செல்லக்கூடிய விமான எதிர்ப்பு பாதுகாப்பு முறையை மட்டுப்படுத்துவதில் இருநாடுகளும் கொண்டுள்ள
ஒப்பந்தம் பற்றியதுதான். அத்தகைய ஆயுதங்கள் ஈராக்கிலும் ஆப்கானிலும் உள்ள எதிர்ப்புப் போராளிகளால் அமெரிக்க
ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. நீண்டகாலத்திற்கு முன்னரே பாதுகாப்பு
அமைச்சர்களால் இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டிருந்தது.
ஈரான் மற்றும் வடகொரியா இவற்றைப் பொறுத்தவரையில், புஷ் இரண்டு நாடுகளும் "அணுவாயுதங்களை
பெற்றிருக்க கூடாது" என்ற புட்டினின் கருத்துக்களுடன் தான் முற்றிலும் உடன்பட்டுள்ளதாக புஷ் அறிவித்தார். ஆனால் அணுசக்தி
தொழில்நுட்பத்தை ஈரானுக்கு அளிப்பது பற்றி எப்பொழுதுமே ரஷ்யா, அது சமாதன செயற்பாடுகளுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறது
என்று கூறி நியாயப்படுத்தியுள்ளது; இதை வாஷிங்டன் எதிர்த்து வந்துள்ளது.
ரஷ்ய விமானப் பாதுகாப்பு ஏவுகணைகள் சிரியாவிற்கு விற்பனை செய்ய இருப்பது போன்ற
மற்ற சர்ச்சைக்குரிய குறிப்புக்களை பற்றி புஷ் குறிப்பிடக்கூட இல்லை. |