:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: 15,000 demonstrate in Mainz against
Bush visit
ஜேர்மனி : புஷ்ஷின் வருகையை எதிர்த்து மைன்ஸ் நகரில் 15,000 குடிமக்கள் ஆர்ப்பாட்டம்
By our correspondents
26 February 2005
Back to screen version
பெப்ரவரி 23ம் தேதி, புதன்கிழமையன்று, ரைன் நதி மீதுள்ள ஜேர்மனிய நகரமான
மைன்ஸில் ஒரு அவசரகால நிலையையொத்தது போன்ற ஒரு பாதுகாப்பு நிலவியது. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின்
வருகையை ஒட்டி, நகரத்திற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும், மோட்டார் நெடுஞ்சாலைகளும் மாற்றுவழியில்
செல்லுமாறு கோரப்பட்டது அல்லது மூடப்பட்டுவிட்டன. மிகுந்த ஆயுதங்கள் ஏந்திய போலீஸ்காரர்கள், பஸ், இரயில் நிலையங்களில்
ரோந்து வந்தனர்; பல இரயில்கள் இரத்து செய்யப்பட்டன. முழு நகர மையப்பகுதியும் மூடப்பட்டதோடு, ஆயுதமேந்திய
வீரர்கள் உத்தியோகபூர்வ மோட்டார் வாகனத்தொடர்கள் கடக்கும் பகுதிகள் முழுவதும் கூரையில் இருந்து கண்காணித்தனர்.
உள்ளூர் மக்கள் தங்களுடைய வீட்டுப் பால்கனிக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டு, வீடுகளில் இருந்து வெளியேயும் செல்லக்கூடாது
என்று கூறப்பட்டுவிட்டனர். ஒரு பேய் நகரத்தைப் போல் மைன்ஸ் அன்று இருந்தது.
பல நாட்களாகவே செய்தி ஊடகம் இந்தப் பகுதி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு
விடும் என்று எச்சரிக்கை கொடுத்திருந்தது. மிகப் பெரிய அளவில் மிரட்டல் இருந்தபோதிலும், பங்கு பெற இருந்தவர்கள்
பலர் நிறுத்தப்பட்டு, போலீஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல்
கிட்டத்தட்ட 15,000 மக்கள் மணிக்கணக்காக புஷ்ஷின் மைன்ஸ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜேர்மனியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், ஜேர்மனியை சொந்த நாடாக கொண்டவர்களும், புலம் பெயர்ந்தோரும்,
பலதரப்பட்ட வயதினரும், பல்கலைக்கழக, பள்ளி மாணவர்கள் உள்பட, இரண்டாம் உலகப்போரை நினைவுகூர்ந்த முதியவர்களும்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டனர்.
பூகோளமயமாக்கலை விமர்சிப்போர், மனச்சாட்சிக்கு உட்பட்டு போரை எதிர்ப்பவர்கள்,
அணுவாயுத போருக்கு எதிர்ப்புத் தெரிவித்த இயற்பியல் வல்லுனர்கள், ஜனநாயக சோசலிசக் கட்சியை
(PDS) சேர்ந்தவர்கள்,
இளம் வயது தொழிற்சங்க காரர்கள் என்று பலரும் "வரவேற்பு இல்லை, திரு புஷ்" என்ற பதாகையின்கீழ் கூடினர்.
வீட்டிலேயே தயாரிக்கப்பட்டிருந்த, "புஷ், திரும்பிச் செல்லுங்கள்", "ஜோர்ஜ் புஷ்,
உம்மால் எங்களுக்கு செலவுதான் அதிகம்", மற்றும் "அனைத்து நாடுகளின் புஷ்-எதிர்ப்பாளர்களே, ஒன்றுபடுங்கள்" என்றவற்றை
கூறிய சுவரொட்டிகள், பதாகைகள் இவற்றை எடுத்து வந்திருந்தனர். ஈராக் போரை நேரடியாகவே எதிர்த்த மற்றும்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்த்த அடையாளங்களும் இருந்தன: "திரு புஷ், உங்கள் போர்தான்
உண்மையான பயங்கரவாதம்", "இரண்டு உலகப்போர்கள் போதும்", "ஈராக்கில் இருந்து அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும்
வெளியேறவேண்டும்", "ஈரானுக்கு எதிராக வன்முறை வேண்டாம்", "புஷ்ஷா, உலக சமாதானமா?", "போரையும்,
சித்திரவதையையும் வேண்டாம் என்போம்", "போலிச் சுதந்திரத்திற்காக போர் வேண்டாம் -- இனப்படுகொலைக்கு
என்ன தண்டனை?" என்றெல்லாம் அட்டைகள் இருந்தன.
சில பதாகைகளில் புஷ் நிர்வாக கொள்கைகளுக்கும், உலக பயங்கரவாதம்
பெருகியுள்ளதற்கும் உள்ள தொடர்பும் குறிக்கப்பட்டிருந்தன. இவை அறிவித்ததாவது: "ஜோர்ஜ் இல்லாவிட்டால் உலகம்
பாதுகாப்பாகத்தான் இருக்கும்", "50 ஆண்டுகள் அகந்தையுடன் உலவிய அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கைதான்
பயங்கரவாதத்தை தோற்றுவித்துள்ளது", "புஷ்--No.1
பயங்கரவாதி". ஜேர்மனிய அரசாங்கம் புஷ்ஷூடன் ஒத்துழைக்கக் கூடாது என்ற எதிர்ப்பை தெரிவித்தும் சில கோஷங்கள்
இருந்தன: "ஷ்ரோடர்: புஷ்ஷுடன் கை குலுக்காதே", "புஷ்ஷை நிறுத்து; போர் வேண்டாம்; ஜேர்மன் படைகளை
வெளிநாடுகளுக்கு அனுப்பாதே."
மைன்ஸின் மரபுவழித் திருவிழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட லாரி ஒன்று
ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்ற பாதை வழியே விடப்பட்டது. அதன் மேற்புறத்தில் குவாண்டாநாமோ குடாவின் கேலித்
தோற்ற மாதிரி ஒன்று, சிறைக் கைதிகள் ஆரஞ்சு உடையிலும், சீருடையில் இருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படைகள்
அவர்களை அடிப்பது போலவும் காட்டப்பட்டது.
ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்னர் நிகழ்ந்த கூட்டத்தில் பல பேச்சாளர்களும் புஷ்
அரசாங்கம் நிகழ்த்திய சட்டவிரோதப் போரைப் பற்றி நேரடியாகப் பேசினர். ஜேர்மனிய
SPD (ஜேர்மன் சமூக
ஜனநாயகக்
கட்சி) மற்றும் பசுமைக் கட்சி அரசாங்கமும் விமர்சிக்கப்பட்டது. பல முக்கிய பிரச்சினைகள் பற்றி பேசப்பட்டாலும்,
ஒரு தெளிவான அரசியல் மாற்று இல்லை என்பது தெரிந்தது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், தொழிற்சங்கப்
பிரதிநிதிகளும் ஜேர்மனியின் தலைமையில், ஐரோப்பிய ஒன்றியம் ராஜீய முறையில் தாக்குதல் நடத்துவது புஷ்
அரசாங்கத்தின் போர்க் கொள்கைகளுக்கு ஒரு மாற்றாக இருக்கும் என்ற முன்னோக்கை கூறினர்.
Attac, ஜேர்மனிய
முக்கிய பொறியியல் தொழிலாளர்கள் சங்கமான IG Metall,
மற்றும் PDS,
அமைதி இயக்கப் பேச்சாளர்களும் கூட்டத்தில் உரையாற்றினர்.
சில பேச்சாளர்கள் ஈராக் போரின் கொடூரங்கள் பற்றி எடுத்துரைத்தனர். பல்லுஜா
நகரத்தில் இருக்கும் மருத்துவர்கள் அனுப்பிய, அந்நகரத்தில் அமெரிக்கக் குண்டுவீச்சால் ஏற்பட்ட ஈராக்கியர் மரணப்
பட்டியல் பற்றிய செய்தி ஒன்று வாசிக்கப்பட்டது. டாக்டர் மகம்மது ஜே. ஹேடெட் எழுதியுள்ளார்: "ஜேர்மன் மக்கள்
ஜோர்ஜ் புஷ்ஷை கீழ்க்கண்ட கேள்வியைக் கேட்குமாறு பரிந்துரை செய்கிறோம். அமெரிக்க ஆயுதங்களினால் எதற்காக
பல்லுஜாவில் 2,500 மக்கள் இறக்கவேண்டும்? எத்தனை பேர் இடிபாடுகளுக்கு இடையே இறந்துள்ளனர் என்ற கேள்வியை
உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டுள்ளீர்களா? இங்கு எந்தப் பயங்கரவாதியும் இல்லை என்று நாங்கள் கூறிய பின்னரும்,
எங்கள் நகரத்தைத் தாக்குவதற்காக நீங்கள் கூறிய போலிக் காரணமான பயங்கரவாதிகள் எங்கே? எப்பொழுது உங்கள்
படைகள் ஈராக்கைவிட்டு நீங்கும்?"
"இராணுவவாதத்திற்கும் போருக்கும் ஒரு விடை" என்ற உலக சோசலிச வலைத் தளத்தின்
அறிக்கையானது ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கில் வழங்கப்பட்டது. உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள்,
புஷ் அரசாங்கத்தின் போர்க் கொள்கைகள் பற்றி ஒருமித்த எதிர்ப்பைக் கொண்டிருந்த அதில் பங்கேற்றவர்களிடம்
பேசினர். ஆனால் பலரும் இன்னும் ஷ்ரோடர் அரசாங்கத்தின் பங்கு பற்றி சில பிரமைகளைத்தான் கொண்டிருந்தனர்.
கிறிஸ்டியான், செபாஸ்டியான் என்ற மைன்சில் இருக்கும் இரு மாணவர்கள் கூறினர்: "எங்களுடைய
கருத்தை வெளிப்படையாகக் கூறவிரும்புகிறோம்; எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் போருக்கு எதிராக உள்ளோம்.
இளைஞர்கள் மட்டும் அல்லாமல் முதியவர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளனர் என்பது முக்கியம். ஜேர்மனிய அரசாங்கத்தை
பொறுத்தவரை, அமெரிக்கர்களோடு பேசட்டும், ஆனால் ஷ்ரோடர் தன்னுடைய பார்வையை தெளிவுபடுத்த வேண்டும்.
ஷ்ரோடரும் மற்ற ஐரோப்பிய அரசாங்கங்களும் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்திற்கேற்ப ஆடக்கூடாது. அவை அமெரிக்க
கொள்கைகளை மாற்ற முயற்சி செய்யவேண்டும். போலீஸ் பல தடைகளை ஏற்படுத்தியிருக்காவிட்டால் இன்னும் பலரும் இங்கு
வந்திருப்பர். இத்தனை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது அசாதாரணமானது."
மைன்ஸில் இருந்து ஒரு சமூகநல ஊழியர்
Mechthild கூறினார்:
"ஜனநாயகம், சுதந்திரம் பற்றிய தன்னுடைய வகையை குண்டுகள் மூலம் உலகெங்கிலும் பரப்ப முடியாது என்பதை நாங்கள்
தெளிவாக்க விரும்புகிறோம். இது ஒன்றும் சுதந்திரம் அல்ல. பயங்கரவாதிகளால் நிகழ்த்தப் பெறும் பயங்கரவாதம்
போன்றுதான் இதுவும் உள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் ஈராக்கிற்கு வீரர்களை அனுப்ப மறுத்ததற்கு நான் உடன்படுகிறேன்;
ஆனால் அது போதாது. இவை தவறான வழிகள் என்று இன்னும் தெளிவாகக் கூறப்படவேண்டும். "கவர்ச்சிகர தாக்குதல்"
என்னும் அமெரிக்க அரசாங்கத்தின் முழு நடவடிக்கையும் நம்பத்தகுந்ததாக இல்லை. புஷ் கூறுவதையெல்லாம் ஏற்பதற்கில்லை.
அமெரிகாவில் இருக்கும் முதலாளித்துவ வகை இங்கும் நடைமுறைப்படுத்தப்படட்டும். ஆனால் அமைதியும், சுதந்திரமும் எங்கு
சமூக நீதி இருக்கிறதோ அங்குதான் அடையப்படும்."
ஷேம்னிட்சில் இருந்து வந்த லியோனர்டின் விளக்கினார்: "புஷ்ஷுக்கு எதிராக ஏதேனும் செய்யப்பட
வேண்டும். இந்த மனிதனை சுதந்திரமாக செயல்படவிடக்கூடாது. இவர் குற்றம்சாட்டும் மற்ற பயங்கரவாதிகளைப்
போலத்தான் இவரும் இருக்கிறார்; ஏனெனில் இவருடைய மனச்சாட்சிமீது இவ்வளவு மனித உயிர்களை சுமந்து கொண்டிருக்கிறார்."
ஹாகனில் இருந்து தன்னுடைய நண்பர் ஒருவருடன் வந்திருந்த ஜோர்ஜ் கூறினார்: "அமெரிக்க
ஜனாதிபதிக்கு இங்கு அவரை எதிர்க்கும் மக்கள் உள்ளனர் என்பதை காட்டுவதற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே
ஜேர்மனியிலும் உள்ளனர் என்பதை காட்டுவதற்கு வந்துள்ளோம். தொடக்கத்தில் போருக்கு ஷ்ரோடர் எதிர்ப்புத் தெரிவித்ததற்கு
நான் ஒப்புதல் கொடுக்கிறேன்: இப்பொழுது இந்த எதிர்ப்பு குறைந்து கொண்டிருக்கிறது; பொருளாதாரத்தில் அமெரிக்கர்களை
நம்பியிருப்பதால், புஷ்ஷுக்கு பின்னால் அவர் ஊர்ந்து சென்று கொண்டிருப்பதை காணும்போது, மிகவும் இழிவாக உள்ளது."
ஷ்ரோடர் அரசாங்கம் போரை எதிர்ப்பதற்கு நடைமுறையில் எதையுமே செய்யவில்லை
என்ற உண்மையை எதிர்கொண்டபொழுது, அவருடைய நண்பர் பதில் கூறினார்: "ஆம். ஆம். அது சரியே. இப்பொழுது
அவர்கள் ஈராக்கில் போலீசிற்கு பயிற்சி கொடுப்பார்கள். நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க இங்கே இருப்பதற்கு அதுவும்
ஒரு காரணம் ஆகும்."
ஒரு வயதான திருமணமாகியிருந்த தம்பதிகள் விளக்கினர்: "இருப்பதிலேயே மிகப் பெரிய
பயங்கரவாதி இங்கு மிகப்பெரிய முறையில் கெளரவிக்கப்பட இருப்பதால் நாங்கள் இங்கு உள்ளோம். அவரை வரவேற்பவர்களுக்கும்
நாங்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கின்றோம். உலகத்தின் மிகப் பெரும் ஏகாதிபத்தியவாதிகளில் புஷ்ஷும் ஒருவர். இங்கு
இவர்கள் இன்று செய்துள்ளது ஒரு உண்மையான அவசர கால நிலையைத்தான் பிரதிபலிக்கிறது."
|