WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
Bush in Europe: tensions boil beneath talk
of transatlantic unity
ஐரோப்பாவில் புஷ்: அட்லாண்டிக் கடந்த ஐக்கியம் பற்றிய பேச்சு வார்த்தைக்கு கீழே பதட்டங்கள்
By Bill Van Auken
22 February 2005
Back to screen
version
ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஐந்து நாள் ஐரோப்பிய ஒன்றிய சுற்றுப்பயணத்தின் முதல்
நிகழ்ச்சியாக பிரஸ்ஸல்சில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU)
தலைவர்களிடையே உரையாற்றியதில் அட்லாண்டிக் கடந்த கூட்டணிக்கு ஒரு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டார், அதேவேளை தன்னிச்சையாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய ஆக்கிரமிப்பு தொடர்பாக மறைமுகமான
அச்சுறுத்தல்களையும் வழங்கினார்.
அந்த உரையானது, ஈராக்கில் வாஷிங்டனின் போர் தொடர்பாக சண்டையிடுவதை நிறுத்தி
நட்புடனிருப்பதற்கும், பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதிலும் மத்திய கிழக்கில் ஜனநாயகத்தை பரப்புவதிலும் அமெரிக்க
நிர்வாகம் பிரகடனப்படுத்தியிருக்கும் முன்னுரிமைகளுக்கு ஐக்கியப்பட்ட அர்ப்பணிப்பை உருவாக்குவதற்கும் அழைப்பு விடுப்பதை
கருத்திற்கொண்டிருந்தது.
"அட்லாண்டிக் கடந்த ஐக்கியத்தின் ஒரு புதிய சகாப்தம்" பற்றிய வெற்று வாய்வீச்சிற்கு
பின்னணியில், எவ்வாறாயினும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள், வெடித்துச் சிதறக்கூடிய
பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களால் நாலாபுறமும் நெருக்கப்பட்டுள்ளன, அதன் மிகக் கூர்மையான
ஒரு வெளிப்பாடுதான் ஈராக். இதில் அடிப்படையாக இருக்கும் முரண்பாடுகள் புஷ் தனது ஐரோப்பிய பயணத்திலிருந்து வெறுங்கையோடு
திரும்புவதை உறுதி செய்கின்றன.
ஈராக் படையெடுப்பு தொடர்பாக 2003 மார்ச்சில் அமெரிக்காவிற்கும் பல ஐரோப்பிய
அரசாங்கங்களுக்குமிடையில் எழுந்த மோதல் பற்றி குறிப்பிட்டு, "பூகோளம் முழுவதிலும் சமாதானத்திற்கும் செழிப்பிற்கும்
நமது சக்திவாய்ந்த நட்புறவு அவசியமாகும் மற்றும் தற்காலிக வாக்குவாதங்கள் எதுவும், அரசாங்கங்களுக்கிடையே நிலவுகின்ற
தற்காலிக உடன்பாடின்மை எதுவும், இந்த பூமியில் எந்த சக்தியும் நம்மை எப்போதும் பிரித்து வைத்திருக்க முடியாது"
என்று புஷ் அறிவித்தார்.
ஈராக் போர் தொடர்பான பிளவுகள் "ஒரு தற்காலிக வாக்குவாதம்" அல்லது "அரசாங்கங்களுக்கிடையில்
தற்காலிக உடன்பாடின்மை" என்று கூறுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆணவப் போக்கையும் வாஷிங்டனிலுள்ள தற்போதைய
நிர்வாகத்திற்கும் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையில் தொடர்பற்று இருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு
முன்னர் போர் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் ஐரோப்பாவிலும் பூகோளம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் ஈராக்கிற்கெதிரான
இராணுவ ஆக்கிரமிப்புக்கான திட்டங்களை எதிர்த்து தெருக்களில் பேரணி நடத்தினர். அதற்குப் பின்னர் படையெடுத்து அந்த
நாட்டை பிடித்துக் கொண்டமை, ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் வாஷிங்டனின் வெளியுறவுக் கொள்கைக்கு பொது மக்களிடையே
ஆழமான விரோதப்போக்கை உருவாக்கியது.
புஷ், பிரஸ்ஸல்சில் அடியெடுத்து வைத்த முதலாவது தரிப்பிலேயே அமெரிக்காவின் பூகோள
ஆக்கிரமிப்பிற்கு "ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருக்கக்கூடாது" என்ற முழக்கங்களுடனான ஆர்ப்பாட்டங்களால்
குறிக்கப்பட்டது. ஒரு பாரியளவு போலீஸ் படை நிறுத்தப்பட்டதானது, கண்டனம் செய்தவர்களை அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து
வெகு தொலைவு தள்ளி நிறுத்திவைத்தது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய ஊழியர்களும் நகரின் மையப்பகுதியிலிருந்த
தமது அலுவலகங்களுக்கு சென்றடையமுடியாமல் தடுக்கப்பட்டனர்.
பகிரங்கமாக சர்வதேச சட்டத்தை வாஷிங்டன் ஏற்றுக்கொள்ள மறுத்திருப்பதுடன் சேர்ந்து,
குவாண்டாநாமோ வளைகுடா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பிற இடங்களில் அமெரிக்கா நடத்தி வருகின்ற சிறை
முகாம்களில் சட்டவிரோத காவல்கள், சித்திரவதை மற்றும் கொலைகள் நடைபெற்றமை அம்பலத்திற்கு வந்திருக்கின்ற
நிலையில், புஷ் சுதந்திரத்திற்கும் மனித உரிமைகளுக்குமான தேவதூதனைப்போல் காட்டிக்கொள்வது ஐரோப்பாவில்
பரவலாக ஒரு கேலிச்சித்திரமாக கருதப்படுகிறது.
அமெரிக்க நலன்களுக்கு இந்த பூமியின் எந்தநாடு ஒரு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று
அமெரிக்க ஏகாதிபத்தியம் வலியுறுத்துகின்றதோ, அதற்கு எதிராக ஆத்திரமூட்டல் எதுவுமில்லாமல் ''முன்கூட்டித் தாக்கும்
தடுப்பு'' போர் நடத்துவதற்கு தனக்கு உரிமையுண்டு என்று வலியுறுத்தி வருகின்ற நிலையானது, ஒரு ''தற்காலிகமான''
அல்லது "போகிற போக்கிலான" கவலையாக இல்லவே இல்லை. இது ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள அரசாங்கங்கள்
மற்றும் ஆளும் செல்வந்த தட்டினர் தங்களது மூலோபாய கணக்கீடுகளை தொடக்குகின்ற ஆரம்பப்புள்ளியாகும் மற்றும்
உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கான ஒரு நேரடியான அச்சுறுத்தலுமாகும்.
பொது மேடையில் புஷ்ஷும் ஐரோப்பிய தலைவர்களும் மகிழ்ச்சியாக கைகுலுக்கிக்
கொண்டாலும் ஐரோப்பிய ஆளும் வட்டாரங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதியின் இராஜதந்திர முயற்சிகள் தொடர்பாக
திட்டவட்டமான ஐயுறவாதம் நிலவுகின்றன, இந்தக் கண்ணோட்டம் பத்திரிகைகளில் பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கின்றது.
ஜேர்மனியின் Spiegel Online,
"ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய முகஸ்துதி மற்றும் பாராட்டுக்கள் மிதமிஞ்சிய வகையில்
அமைந்திருந்தன. இனிப்பு தடவப்பட்டிருந்தாலும் அமெரிக்கர்களிலிருந்து ஐரோப்பியர்களை பிரிக்க வேறுபாடுகள் இன்னும்
தொடர்கின்றன, அது ஈராக், ஈரான் மற்றும் சீனா பற்றி வரும்போது ஒவ்வொருவரும் தாங்கள் மறைத்து
வைத்திருக்கின்ற குத்துவாளை உறையிலிருந்து உருவிக்கொண்டு நிற்கிறார்கள்" என்று குறிப்பிட்டது.
பிரெஞ்சு தினசரியான Le
Monde மிகவும் வெளிப்படையாகவே குறிப்பிட்டது: "புஷ்
அமெரிக்க வல்லரசுக்கும் அதன் ஐரோப்பிய பண்ணையாட்களுக்கும் இடையிலான ஒரு சார்ந்திருக்கும் உறவை விட,
சமமானவர்களின் ஒரு கூட்டாண்மை என்பதற்கு அவர் சம்மதிக்கும்போது அவரை ஐரோப்பா வரவேற்கும்."
தனது உரையை புஷ் சிரியாவிற்கும் ஈரானுக்கும் இறுதி எச்சரிக்கைகள் விடுவதற்கு பயன்படுத்திக்
கொண்டார், அதேவேளை, மாஸ்கோ அமெரிக்க நலன்களுக்கு கீழ்படிந்து செல்லுகின்ற ஒரு கொள்கைக்கு ஒரு மூடுதிரையாக
ஜனநாயக சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று வாஷிங்டன் விரும்புகிறது என ரஷ்யாவிற்கு முன்னறிவிப்புக்
கொடுத்தார். ஈரான் தொடர்பாக, வாஷிங்டன் இராணுவ வலிமையை பயன்படுத்தும் வாய்ப்பை (குறிப்பிட்ட பயன்நோக்கி)
ஒதுக்கி வைத்திருப்பதாக புஷ் பகிரங்கமாக வலியுறுத்திக் கூறினார். "சுதந்திர நாடுகளின் பாதுகாப்பை பேணிகாப்பதற்கு,
எந்த வாய்ப்பையும் நிரந்தரமாக மேஜையிலிருந்து நீக்கிவிட முடியாது" என்று அவர் அறிவித்தார்.
சென்ற ஆண்டு ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையில், லெபனானிலிருந்து சிரிய துருப்புக்கள்
விலக்கிக் கொள்ளப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதில் பிரான்சுடன் அமெரிக்கா ஒத்துழைத்ததை
சிறப்பித்துக் கூறிய புஷ், அமெரிக்காவும் ஐரோப்பாவும் மத்திய கிழக்கில் பொது நலன்களை பகிர்ந்து கொள்வதாக
திரும்பத் திரும்ப கூறினார்.
ஈராக்கில் தனது தலையீட்டின் மூலம் நெருக்கடிகள் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையை
சமாளிப்பதற்கு வாஷிங்டனுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு மிக அவசரமாக தேவைப்படுகிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு
எதிராக தொடர்ந்து கொண்டுள்ள எதிர்ப்புக்கள் பென்டகன் 150,000 துருப்புக்களை ஈராக்கில் தொடர்ந்து
வைத்திருக்குமாறு நிர்ப்பந்தித்திருப்பது அமெரிக்க இராணுவத்தை தனது திறனுக்கும் அப்பால் விரிவாக்குவதற்கு
வைத்திருக்கிறது. இதற்கிடையில், புஷ் நிர்வாகம் மேலும் 80 பில்லியன் டாலர்கள் இராணுவ செலவிற்காக கோரியுள்ளது,
இது பெரும்பாலும் ஈராக் நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காகத்தான், நாட்டின் ஆழமாகிக்கொண்டுவரும் நிதி
நெருக்கடியில் போரின் தாக்கத்தை இது மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தியுள்ளது.
என்றாலும், வாஷிங்டனின் உதவிக்கு கரம் கொடுப்பதற்கு பதிலாக, ஐரோப்பாவில்
பெரும்பகுதி ஈராக் புதை சேற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முயன்று வருவதாக தோன்றுகிறது. தனது
துருப்புக்களை விலக்கிக் கொண்ட ஸ்பெயினை பின்பற்றி நெதர்லாந்து அடுத்த மாதம் ஈராக்கிலுள்ள அதன் 1600
துருப்புக்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருக்கிறது, சென்ற வாரம் உக்ரைனின் புதிய ஜனாதிபதியான விக்டர்
யுசென்கோ தனது நாட்டின் 1600 துருப்புக்களையும் ஈராக்கிலிருந்து விலக்கிக் கொள்வது ஒரு முதன்மை முன்னுரிமை
நடவடிக்கையாக இருக்குமென்று அறிவித்தார். இந்த மாதத் தொடக்கத்தில் போர்த்துக்கல் தனது 120
போர்வீரர்களையும் விலக்கிக் கொண்டது மற்றும் போலந்து 700 துருப்புக்களை விலக்கிக் கொண்டுள்ளதுடன், இன்னும்
அங்கிருக்கின்ற 1700 துருப்புக்களையும் விலக்கிக் கொள்வது பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறது.
அமெரிக்க இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள மகத்தான அழுத்தங்களை எந்த வகையிலும்
தளர்த்துவதற்கு முடியாத ஒரு அடையாளபூர்வ சமிக்கையாக, ஐரோப்பிய ஒன்றியம் ஈராக் நீதிபதிகளுக்கும் அரசாங்க
வழக்குரைஞர்களுக்கும் பயிற்சியளிப்பதற்கு பாக்தாத்தில் ஒரு அலுவலகத்தை திறப்பதற்கு வரைவு திட்டங்களை
உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக புஷ் நிர்வாகத்துடன் பகிரங்கமாக
மோதிக்கொள்வதிலிருந்து ஐரோப்பிய தலைவர்கள் பின்வாங்கிக் கொண்டும் அமெரிக்க ஜனாதிபதியால் வெளிப்படுத்தப்பட்ட
''நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும்'' என்ற அணுகு முறையை
எதிரொலித்தனர். புஷ் உரையாற்றுவதற்கு முன்னர் அவரை அறிமுகப்படுத்திய பெல்ஜியப் பிரதமர்
Guy Verhofstadt,
ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தமை, ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் பிளவுபடுத்திவிட்டது என்பதை
ஒப்புக்கொண்டார், ஆனால் பின்னர், "யார் சரியாக நடந்து கொண்டார்கள் என்பது பற்றி வாதிடுவது அர்த்தமற்றது"
என்று மேலும் கூறினார்.
ஈராக் மீதான பிளவுகள் தொடர்பான அடிப்படை முரண்பாடுகள் இன்னும் நீடிக்கவே
செய்கின்றன, அந்தப் போரின் இரண்டாவது ஆண்டு நிறைவு நேரத்தில் இருதரப்பிலும் பகைமைகள் குறைந்துவிட்டன என்று
கூறிக் கொண்டிருப்பதற்கு அப்பாலும் நீடித்துக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க முதலாளித்துவத்தின் உலகப் பொருளாதார
நிலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு வருகின்ற நிலையிலேயே வாஷிங்டன் தனது இராணுவ வலிமையை பயன்படுத்தி
பூகோள மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயன்று வருவது இந்த பதட்டங்களுக்கான அடிப்படைக் காரணமாகும்.
இந்த அடிப்படையான மோதல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பிளவில்
பளிச்சிட்டு எதிரொலிக்கின்றது. ஈரானுக்கெதிரான வாஷிங்டனின் போர் வெறி அச்சுறுத்தலில் சேர்ந்து கொள்ள
ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துவிட்டது, அதே நேரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெஹ்ரானுடன் ரஷ்யா தனது
அணுத்திட்ட ஒத்துழைப்பை ஊக்குவிக்கப்போவதாக அறிவித்தார், விரைவில் ஈரானின் தலைநகருக்கு தான் விஜயம்
செய்யப்போவதாக அறிவித்தார். ஈரானை ஒரு தீண்டத்தகாத அரசாக மாற்றுவதன் மூலம் அமெரிக்கா பாரசீக
வளைகுடாவில் தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டை திணிக்க முயன்று வருகிறது, அந்த நாடு ஐரோப்பாவிற்கு எரிபொருள்
வளத்திற்கும் வர்த்தகத்திற்கும் முக்கியத்துவம் நிறைந்ததாகவும் இருக்கிறது.
ஐரோப்பாவின் ஐக்கியம் தொடர்பான தன்மையில், குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியம் ஒரு
சுதந்திரமான இராணுவ அணியாக எழுவது தொடர்பாக பதட்டங்கள் வெளிப்படுகின்றன. மூனிச் பாதுகாப்பு
உச்சிமாநாட்டில் சென்றவாரம் ஆற்றிய ஒரு உரையில், ஜேர்மன் அதிபர் ஷ்ரோடர், நேட்டோ பயனுள்ள அமைப்பா
என்பதையே கேள்விக்குட்படுத்தினார் மேலும் ஜேர்மனி மற்றும் ஐரோப்பாவின் சுதந்திரமான நலன்களை வாஷிங்டன்
அங்கீகரிக்க தவறிவிட்டதை கடிந்துகொண்டார்.
இறுதியாக, சீன உறவுகள் தொடர்பாக அவர்களுக்குள் பிளவுகள் வெளிப்பட்டன. புஷ்ஷின்
ஐரோப்பிய பயணம் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க கீழ்சபை 401-க்கு 3 என்ற வாக்குகள்
வித்தியாசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தை கண்டிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது, 1989 முதல் சீனாவிற்கு
ஆயுதங்களை விற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு சென்ற டிசம்பரில் ஐரோப்பிய ஒன்றியம்
உறுதியளித்திருந்தது. அந்தத் தீர்மானம்,
ஐரோப்பிய ஒன்றியம் தனது சீனாவுடனான சமரசப்போக்கை தொடர்ந்து
நிலைநாட்டி வருமானால், ''அரசாங்க மற்றும் தொழில் துறை மட்டங்கள்'' இரண்டிலும் ஒத்துழைப்பு தொடர்பாக
''வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள்'' பற்றிய பழிவாங்கும் நடவடிக்கை பற்றி அச்சுறுத்தியது.
சீனாவுடனான ஐரோப்பிய உறவுகளில் ஆயுதங்கள் விற்பனை தடை நீக்கத்தின்
முக்கியத்துவத்திற்கு அப்பாலும் வாஷிங்டனின் கவலைகள் நீடித்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்
பெய்ஜிங்ற்கும் இடையில் நெருக்கமான பொருளாதார உறவுகள் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மகத்தான ஆபத்தை
உருவாக்கும் என்று அஞ்சுகிறது. ஒர் ஆண்டிற்கு ஏறத்தாழ 600 பில்லயன் டாலர்கள் என்ற அளவிற்கு மிக வேகமாக
ஊதிப்பெருகும் அமெரிக்க நடப்பு கணக்குகளில் பற்றாக்குறையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேற்பட்ட பற்றாக்குறைகளை
ஈடுகட்டுகின்ற வகையில் ஆசிய மத்திய வங்கிகள் மிக முக்கியமாக சீன மக்கள் வங்கி நிதியுதவி செய்து வருகிறது.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவை சீனாவின் தலைமை வர்த்தக பங்காளி
என்ற நிலையிலிருந்து தள்ளிவிட்டதோடு, சீனா தனது ரொக்க இருப்புக்களையும் சொத்துக்களையும் சரிந்து வருகின்ற
டாலர் மற்றும் அமெரிக்க கடன் பத்திரங்களிலிருந்து யூரோ சொத்துக்களுக்கு மாற்றிக்கொள்ளும் சாத்தியக்கூறு
அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கையில் மிகத் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும் நிதி
நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
Foreign Affairs, பெப்ரவரி
இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், யேல் பொருளாதார மற்றும் முன்னாள் அமெரிக்க வர்த்தகத்துறை துணை
செயலாளருமான ஜெப்ரி கார்டன் அத்தகைய ஒரு மாற்றம் தொடர்பாக விடுத்துள்ள எச்சரிக்கையில்: ''அதனால்
ஏற்படுகின்ற தாக்கங்கள், நிதி மற்றும் நாணய கொள்கைக்கு மேல் மிக அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்தும், மற்றும்
புஷ் உருவாக்கியுள்ள வரி மற்றும் சமூக பாதுகாப்பு சீர்திருத்தங்களுக்கு மேலாக அது சீர்குலைவை ஏற்படுத்தும், வெளிநாடுகளில்
இருந்து வருகின்ற பட்ஜெட் அழுத்தம் அமெரிக்க ஆயுத படைகளின் அமைப்பையும் அளவையும் அது பாதிக்கும், பிற நாடுகளிலிருந்து
இராணுவ உதவியை கோரிப்பெறுகின்ற துன்பம் தரும் அழுத்தத்திற்கு அமெரிக்கா உள்ளாகும். உள்நாட்டு பாதுகாப்பிலிருந்து
கல்விவரை அனைத்து நிதி ஒதுக்கீடுகளையும் குறைக்க வேண்டிவரும். சுருக்கமாக சொல்வதென்றால், சர்வதேச முதலீட்டாளர்கள்
நிதிக் கொள்கையை ஆதரிக்க மறுத்துவிட்டால் அது புஷ்ஷின் இரண்டாவது பதவி காலத்தில் மிகவும் நெருக்கடியான ஒரு கட்டமாகிவிடும்."
இந்த அச்சுறுத்தலை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக அமெரிக்க ஆளும்
செல்வந்தத் தட்டிற்குள் கடுமையான பிளவுகள் நிலவுகின்றன. இந்த பொருளாதார வீழ்ச்சியை இராணுவ வலிமையை
கொண்டு அமெரிக்கா சமாளித்துவிட முடியுமென்ற நம்பிக்கையை புஷ் நிர்வாகத்தின் முன்னணி தட்டினர் உறுதியாக
பிடித்துக்கொண்டிருக்கின்றனர். அமெரிக்க அரசுத்துறை செயலாளர் கொண்டலிசா ரைஸ் மேற்கொண்ட "கவர்ச்சி
தாக்குதல்" என்று அழைக்கப்பட்ட பயணம், இப்போது அதைத்தொடர்ந்து புஷ் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையில் அடிப்படை
மாற்றத்தை காணமுடியாது, ஆனால் ஒரு மக்கள் தொடர்பு முயற்சிதான் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களை அதிகமாக
ஒத்துழைத்து செல்லுவதற்கு அவர்களை ஏமாற்றி இணங்க வைக்கும்.
என்றாலும், மற்றவர்கள் இந்த அணுகுமுறை தாக்குப்பிடிக்கக்கூடியதல்ல என்று எச்சரிக்கின்றனர்.
முன்னாள் அரசுத்துறை செயலாளர் ஹென்றி கிசிங்கர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் சிலிசிங்கர் மற்றும் அமெரிக்க
வெளியுறவுக் கொள்கை ஸ்தாபனத்தில் "Realpolitic"
பிரிவோடு சம்மந்தப்பட்டுள்ள மற்றவர்கள் கருத்தை எதிரொலிப்பது தொடர்பாக
National Interest
சஞ்சிகை ஒரு கட்டுரையை பிரசுரித்திருக்கிறது. அந்தக் கட்டுரை "தேர்தலுக்கு பிந்திய
அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பாதையில்,'' ஒரு மாற்றம் தேவை என்பதை வலியுறுத்துகின்றது.
"நிர்வாகத்திற்கு உள்ளேயும் வெளியிலும் இருக்கின்ற நவீன பழமைவாதிகளுக்கு இப்போது
தேவைப்படுவதெல்லாம் அமெரிக்க வெளியுறவு கொள்கையை மிகவும் பயனுள்ள வகையில் உருவாக்கிக்கொண்டு அமெரிக்க
அறிக்கைகளின் தொனியை மாற்றிக்கொண்டு சிறந்த மக்கள் தொடர்பு நடவடிக்க்ைகளில் ஈடுபட வேண்டும் என்பதாகும்,''
''இது வெறும் கற்பனை'' ''இப்போது தேவைப்படுவதெல்லாம் விற்பனையாளரை மாற்றுவதல்ல'' அதற்கு மாறாக
அமெரிக்கக் கொள்கை எப்படி செயல்படுத்துவது என்பதாகும்" என்று
Robert F. Ellsworth-ம்
Dimitri Simes-ம்
எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடுகின்றது.
ஆயினும், அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையாக அமைந்துள்ள வெடித்துச் சிதறும்
முரண்பாடுகளை சமாளிப்பதற்கு அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டிலுள்ள எந்தக் குழுவும் அல்லது இரண்டு அரசியல்
கட்சிகளில் எதுவும் திட்டவட்டமான முன்மொழிவு எதையும் தரவில்லை. இந்தச் சூழ்நிலைகளில் பொது நோக்கம் பற்றியும்
பொது நெறிகள் பற்றியும் புஷ்ஷும் ஐரோப்பாவில் அவருக்கு நிகரானவர்களும் வெளியிடுகின்ற வெற்றுப் பிரகடனங்கள்
எதுவாக இருந்தாலும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிளவுகள் ஆழமாகவே செய்யும் மற்றும்
அமெரிக்க இராணுவ வாதத்தினால் உருவாகும் அச்சுறுத்தல் வளரத்தான் செய்யும். |