World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : சுனாமி பேரழிவு

A socialist and internationalist perspective to confront the Asian tsunami disaster

ஆசிய சுனாமி பேரழிவை எதிர்கொள்ள ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கு

By Wije Dias
9 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை சோசலிச சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான விஜே டயஸ், பெப்ரவரி 4ம் தேதி ஆசிய சுனாமியின் விளைவுகளைப் பற்றி சிட்னியில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு.

இன்று இலங்கையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து பெற்ற பெயரளவிலான சுதந்திரத்தின் 57வது ஆண்டை நினைவுகூறும் தேசிய விடுமுறை நாளாகும். அரசாங்கம் இந்த சம்பவத்தை கொண்டாடும் வகையில் வரலாற்றுக் காட்சி அணிவகுப்புக்கள், இராணுவ அணிவகுப்புக்கள் ஆகியவற்றை நடத்தும்- இருப்பினும் சுனாமிப் பேரழிவினால் அது சற்று ஆடம்பரம் குறைந்ததாக இருக்கும். ஆனால் இலங்கையின் உழைக்கும் மக்கள், ஏழை விவசாயிகள், மீனவர்கள், வேலையில்லா இளைஞர்கள் ஆகியோருக்கு அத்தகைய கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதற்கு காரணம் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்வி இன்னும் அங்கே இருக்கிறது.

தீவின் மொத்த ஜனத்தொகையில் இருபதில் ஒருவர், கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்கள் இப்பொழுது அகதிகள் முகாம்களில் வசிக்கின்றனர். அவர்களில் 450,000 பேர் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ அரசாங்கங்களால் நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரினால் இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்கள் சுனாமியினால் இந்த துயர்நிலையில் வசிக்கத் தள்ளப்பட்டுள்ளனர். சுனாமியில் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று 40,000த்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 4,000 பேர் காணாமற்போயுள்ளதோடு அவர்கள் காணாமல் போனவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது போரின்பொழுது கொல்லப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ள 65,000 பேருக்கு ஒப்பாக உள்ளது.

சுமத்திராவிற்கு அருகில் ஏற்பட்ட பூமி அதிர்விலிருந்து சுனாமி தோன்றியிருந்தபோதிலும், தெற்கு ஆசியாவிலும், அதேபோல் ஆபிரிக்காவில் சில பகுதிகளிலும் ஏற்பட்ட இதன் பேரழிவு விளைவுகள், வெறும் இயற்கைப் பேரழிவினால் தோன்றியவை அல்ல. இந்த இறப்பு எண்ணிக்கையில் பெரும்பகுதி அரைக் காலனித்துவ நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வறுமையினால் ஏற்பட்டதாகும்.

ப்ரன்ட்லைன் (Frontline) âன்னும் இதழில் பிரபுல் பித்வாய் என்பவர் எழுதியுள்ள கட்டுரை பின்வருமாறு விளக்குகிறது: "சுனாமிப்பேரழிவுகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் ஒரே மாதிரியாக இல்லை மற்றும் அவை சமூக ரீதியாக தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஜப்பானில் ஒரு சராசரியான இயற்கைப் பேரழிவு 63 மக்களை கொல்லுகிறது. ஆனால் பெருவில் இந்தச் சராசரி இறப்பு எண்ணிக்கை 46 மடங்கு அதிகமாக, 2,900 ஆக உள்ளது. எலினா சூறாவளி (Hurricane Elena) அமெரிக்காவை 1985ல் தாக்கியபோது 5 பேர்தான் கொல்லப்பட்டனர். ஆனால் ஒரு பெரும்புயல் பங்களாதேஷை 1991ல் தாக்கியபோது அரை மில்லியன் பேர் இறந்தனர். பூமி அதிர்வினால் 10,000 மக்கள் மடிந்தனர் என்பது மூன்றாம் உலகத்தில் மட்டுமே நிகழக்கூடியதாகும்."

நான் முக்கியமாக இலங்கை பற்றிக் குறிப்பிடுவேனென்றாலும், அது அங்குள்ள நிலைமைகள் பற்றி நான் நன்கு அறிந்துள்ளேன் என்பதனால் மட்டும் அல்ல, இது ஆசியா, ஆபிரிக்கா அல்லது இலத்தீன் அமெரிக்கா போன்ற பொதுவாக அனைத்து பின்தங்கிய நாடுகளிலும் உள்ள நிலைமைகளையே வெளிப்படுத்திக் காட்டுகிறது என்பதனால் ஆகும். இந்த நாடுகளில் பெரும்பாலான மக்களுடைய வறுமை மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இதனுடைய வேர்கள் ஒன்றும் தெய்வீக மண்டலத்தின் ஆற்றலாலோ, இயற்கைச் சக்திகளினாலோ ஆனதல்ல. இந்த நாடுகளில் மதிப்புமிக்க இயற்கை வளங்களையும் சாதகமான வானிலையையும் இயற்கை அளித்துள்ளது. பெரும்பாலான மக்களை மிக வறிய நிலையில் தள்ளியிருப்பது சமூக ஒழுங்கேயாகும்.

சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் அதிகாரம் ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்திடம் மாற்றப்பட்டது. இது தொழிலாளர்களுக்கோ அல்லது ஏழை விவசாயிகளுக்கோ கடந்த அரை நூற்றாண்டுகளில் எந்த விதமான நிவாரணத்தையும் கொடுத்து விடவில்லை. மாறாக, மக்களுடைய சமூக நிலைமைகளும், ஜனநாயக உரிமைகளும் தொடர்ந்த தாக்குதலுக்கு உள்ளாகி வருவதோடு, குறிப்பாக கடந்த இரு தசாப்தங்களில் இது அதிகமாகியுள்ளது. இதுதான், சுனாமியின் விளைவினால் சாதாரண மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகளிலும் அரசியல் ஸ்தாபனங்கள் ஆளும் செல்வந்த தட்டினர் அதை எதிர்கொண்ட முறையிலும் வெளிப்பட்டுள்ளது.

முக்கியமாக கடலுக்கு நெருக்கமாக வசிக்கும் ஏழை மக்களுடைய வீடுகளே அழிக்கப்பட்டுள்ளதோடு, உயிரிழந்தவர்களும் அவர்களே. இவர்களில் பலர் மீனவர்களும் அதே போல் தொடர்ச்சியான வேலை கிடைக்காதவர்களும் ஆவர். இவர்களின் வசிப்பிடங்கள் நொருங்கி போகும் தன்மையைக் கொண்டுள்ள வறிய சேரிகள் என்றுதான் குறிப்பிடப்பட வேண்டும். சுனாமி ஒரு புறம் இருக்க, ஒரு வெள்ளத்தையோ, புயலையோ சிறு அளவில் கூட இந்த வீடுகளால் எதிர்கொள்ள முடியாது. சுனாமிக்குப் பின்னர் எடுக்கப்பட்டுள்ள படங்கள் சிலவற்றில், பரந்த இடிபாடுகளுக்கு இடையே ஒரு சிறுவீடு நின்றிருக்கும் காட்சியைக் காணவியலும். அத்தகைய வீடுகள் நிலைத்ததன் காரணம் அவை அஸ்திவாரத்தில் உறுதியாக இருந்தது என்பதாலும், அதன் உரிமையாளரிடம் அத்தகைய வலுவான அஸ்திவாரம் போடப் பணம் இருந்தது என்பதாலும்தான். அதுதான் உள்ளூர் முதலாளியின் இல்லமாகும்.

மீனவர்கள் தங்கள் பணிக்காக கடலுக்கு அருகே வாழ்ந்து வந்த அதே வேளை, நிலம் வாங்குவதற்கு தங்களிடத்தில் வசதி இல்லாததன் காரணமாக பலரும் கடலோரத்திலேயே வசிக்கவேண்டியிருந்தது. கடலோர ரயில்பாதை கடலுக்கு சமாந்தரமாகவே செல்வதோடு, தன்டவாளங்களுக்கு அருகில் உள்ள நிலம் ரயில்சேவைக்கு சொந்தமான நிலமாகும். இந்தப் பகுதிகளில்தான் மக்கள் தங்கள் குடிசைகளை கட்டியிருந்தனர். இப்பொழுது அவர்கள் தங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்துவிட்டனர். அவர்கள் காப்பீடுகளையோ அல்லது வங்கி கணக்குகளையோ பராமரிப்பவர்கள் அல்ல. அவர்கள் வீடு அழிக்கப்பட்டது என்றால் அவர்களிடம் எதுவும் எஞ்சவில்லை என்பதுதான் பொருளாகும். இழப்பீட்டுத் தொகை கூட அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க நிலத்தில் "சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள்" எனக் கருதப்படுகின்றனர்.

இந்த மக்கள் எந்த முன்னெச்செரிக்கையையும் பெறவில்லை. இலங்கையின் கிழக்கு கடற்கரையோரத்தில் சுனாமி தாக்கியுள்ளது என்ற ஒரு தகவல் ஒலிபரப்பப்பட்டிருந்தால் கூட பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இந்த அலைகள் தென்மேற்கு, தெற்குக் கடலோரப் பகுதிகளுக்கு வருவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக் கொண்டன. மக்கள் உட்பகுதிக்குள் 15 நிமிடங்கள் நடந்து சென்றிருந்தாலும் கூட அவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். ஆனால் எந்த எச்சரிக்கையும் கொடுக்கப்படவில்லை. இத்தகைய பொறுப்பை இட்டுநிரப்பத் தவறிய அரசாங்கத்தின் குற்றவியல் நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையில், இப்பொழுது அறிவுக்கு ஏற்றவாறு பல விளக்கங்கள் கூறப்பட்டு வருகிறன்றன. டிசம்பர் 26 ஒரு விடுமுறை நாள் என்றும், அரசாங்க அலுவலகங்கள் அதனால் மூடப்பட்டிருந்தன என்ற மறுப்பும் அவற்றில் ஒன்று.

அரசியல் ஸ்தாபனமும் மற்றும் செல்வந்த தட்டும் சாதாரண மக்களின் வாழ்க்கையில் கொண்டுள்ள முற்றிலும் அக்கறையின்மையையே இது வெளிக்காட்டியுள்ளது. செல்வந்த நாடுகள், வறிய நாடுகளில் இருக்கும் மக்களை சுரண்டுதலுக்கு ஏற்றவர்களாக, அதாவது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கான மலிவு உழைப்புத் தொழிலாளர்களாகவே கருதுகின்றனர். இன்னும் கூடுதலாக, இலங்கையை பொறுத்தவரையில், குறிப்பாக மனித உயிர் என்பது, நாட்டின் காட்டுமிராண்டித்தனமான உள்நாட்டுப் போரினால் இன்னும் பெருமளவில் மதிப்பிழந்துள்ளது.

உழைக்கும் மக்களின் பதில்

சாதாரண மக்களின் துயரநிலையின்பால் அரசாங்கம் காட்டிய அக்கறையின்மை, அது உதவி நிவாரணப் பணிகளை கையாண்டவிதத்தில் நன்கு வெளிப்பட்டது. பேரழிவு நடந்த இரண்டு நாட்களுக்கு பின்னரும் அரசாங்கம், அதிகாரத்துவம் மற்றும் இராணுவ படைகள் அனைத்தும் செயலிழந்து இருந்தன. அயல் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் தன்னார்வத்துடன் அத்தருணத்தில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளித்திருக்காவிட்டால், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக் கூடும். நமது உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் குழுக்கள், தக்க உறைவிடம், உதவிகளை அரசாங்கம் கொடுக்காததற்காக வெறுப்புணர்ச்சியைக் கொட்டிய நூற்றுக்கணக்கான இடம் பெயர்ந்த மக்களை சந்தித்திருந்தன.

சாதாரண மக்களின் பிரதிபலிப்புகள், தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி வைப்பதற்காக, ஆளும் முதலாளித்துவக் கட்சிகளால் தோற்றுவிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு பல தசாப்தங்களாக சுரண்டப்பட்டுவரும் இன மற்றும் மத பிளவுகளை குறுக்கே வெட்டின என்பது கட்டாயம் வலியுறுத்தப்பட வேண்டும். தங்களுடைய ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தினர் வெகுஜனங்களுடைய சமூக, ஜனநாயக கோரிக்கைகளுக்கு எந்தத் தீர்வையும் கொடுப்பதற்கு இலாயக்கற்றவர்களாக உள்ளனர். எனவே, ஆரம்பத்தில் இருந்தே முதலாளித்துவ ஆட்சி, பிரித்தாளும் கொள்கையான பிற்போக்கு சிங்களப் பேரினவாதத்தில் தங்கயிருந்தது.

1948-49ல், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் என்ற அடிப்படையில், தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குரிமையை பறித்ததில் தொடங்கி, இந்த வேறுபாடு காட்டும் கொள்கை நாளடைவில் பூர்வீக தமிழ் மக்களுக்கும் எதிராக விரிவாக்கப்பட்டு, 1956ம் ஆண்டு சிங்களத்தை மட்டும் அதிகாரபூர்வ மொழியாக்குவது வரை விரிவுபடுத்தப்பட்டது. தங்களுடைய வேலையைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்காக தமிழ் தொழிலாளர்கள் சிங்கள மொழியை கற்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். 1983ல் உள்நாட்டுப் போர் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, சுதந்திர சந்தைக் கொள்கைகளை ஏற்கொண்டதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுடன் சேர்த்து இந்த பேரினவாத அழைப்புக்களும் தீவிரப்படுத்தப்பட்டன.

சுனாமியில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு மக்கள் தன்னிச்சையாக முன்வந்து உதவி அளித்தபோது, இத்தகைய வகுப்புவாதப் பிளவுகளின் அறிவிற்கு ஒவ்வாத மற்றும் செயற்கையான தன்மை நன்கு வெளிப்பட்டது. உதவி தேவைப்படுபவர் சிங்களவரா, தமிழரா, முஸ்லீமா என்று மக்கள் அக்கறைகொள்ளவில்லை. பல்வேறு சமுதாயத்திலிருந்து பாதிக்கப்பட மக்களுக்கு உறைவிடம் கொடுக்கும்போது அந்த இடம் ஒரு பெளத்த ஆலயமா, கிறிஸ்தவ தேவாலயமா அல்லது முஸ்லீம்களின் மசூதியா என்றும் பார்க்கவில்லை.

இந்த நிவாரண முயற்சிகளில் வர்க்க உறவுகள் முன்னின்றன. மக்கட்தொகையில், மிகவும் சமூகரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் பகுதியான உழைக்கும் மக்களே ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்டனர். மருத்துவமனை தொழிலாளர்கள், காயமுற்றோருக்கு பணி செய்வதிலும் உதவி வழங்குவதற்கு மற்றவர்களை அழைத்ததிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றியிருந்தனர். இதே மருத்துவமனை தொழிலாளர்கள் ---- டாக்டர்களில் இருந்து மிகக் குறைந்த ஊதியம் வாங்கும் பணியாளர்கள் வரை----- சமீபத்திய கடந்தகாலத்தில் இலவச சுகாதாரப் பணிகள் பாதுகாப்பதற்கான அவர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களுக்காக கடுமையான அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர், முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் அவர்கள் நோயாளிகளின் விரோதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

உழைக்கும் மக்கள் சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் சுயாதீனமாக தலையிட்டமை, ஆளும் வர்க்கம், அரசு இயந்திரம் மற்றும் ஆயுதப் படையினரிடையே உடனடியாக அச்ச உணர்வை மூட்டியது. தடுக்கப்பட்ட பகுதிகளுக்குள் சாதாரண மக்கள் அத்துமீறி நுழைத்துவிட்டதைப் போல் இது இருந்தது. இராணுவத்தின் கட்டுப்பாட்டுடன் அரசாங்கம் விரைந்து வந்து அனைத்து உதவிப் பணிகளையும் எடுத்துக் கொண்டது. இதை நியாயப்படுத்தும் வகையில் குழந்தைகள் கடத்தல், கற்பழிப்பு போன்ற ஒருசில நிகழ்வுகளை மிகைப்படுத்தி அறிக்கைகளை வெளியிடுவதற்காக செய்தி ஊடகங்கள் அணிதிரட்டப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள், உதவி செய்ய வந்த தொண்டர்கள் என்று அனைவருடைய பொதுச் சீற்றத்தையும் எதிர்கொண்ட நிலையில் பின்வாங்கிய அரசாங்கம், நிவாரண முகாம்களில் பாதுகாப்புக் கொடுப்பது மட்டும்தான் இராணுவத்தின் கடமையாக இருக்கும் என்று கூறிவிட்டது. ஆனால் ஜனவரி 6ம் தேதி, ஜனாதிபதி குமாரதுங்க மிகக் கடுமையான அவசரகால விதிகளை தீவின் மொத்த 25 மாவட்டங்களில் 14ல் நடைமுறைப்படுத்த ஒப்புதல் கொடுத்தார். இது, பாராளுமன்றம் ஒரு புறம் இருக்க, அமைச்சரவையில்கூட விவாதிக்கப்படவில்லை. மனித உரிமைக் குழு, தாங்கள் எந்தச் சட்டத்தின்கீழ் ஆளப்படுகிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டிக் கேட்கும் வரை இந்த விதிகள் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.

பொது ஒழுங்கை காத்தல் மற்றும் இன்றியமையாத பணிகளை பராமரித்தல் என்ற பெயரில், அவசரகால விதிகளின் கீழ் இராணுவத்திற்கும், போலீசிற்கும் பரந்த அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரதேச இராணுவத் தளபதிகளும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள முறையான அதிகாரிகளும் கட்டிடங்கள், நிலம், வாகனங்கள் ஆகியவறறை உதவிப் பணிக்காக எடுத்துக் கொள்ளும் அதிகாரத்தைப் பெற்றுள்ளனர். மேலும், அவர்கள் சுனாமி தொடர்பாக மட்டுமன்றி தேசிய பாதுகாப்பு தொடர்பாகவும் எந்த நபரையும் எந்தப் பணியையும் செய்ய உத்திரவிட முடியும். இந்த விதிப்படி இராணுவப் படைகளில் கூடக் கட்டாயமாகச் சேருமாறு செய்யமுடியும். இவை ஜனநாயக உரிமைகளை ஆபத்தான முறையில் அத்துமீறுவதாகும். கடந்த 20 ஆண்டுகளில் இராணுவத்தின் மிருகத்தனமான கொலை வெறிச்செயல்களை பரிசீலிக்கும்போது, இந்த விதிமுறைகளால் வெகுஜனங்களின் முன்னால் வைக்கப்பட்டுள்ள தீவிர ஆபத்துக்களின் தன்மை தெளிவாகிறது.

ஆயினும், இவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. தெற்கு நகரமான ஹம்பந்தோட்டவில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் ஜனாதிபதி குமாரதுங்க, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்தல்கள் இரத்து செய்யப்படவேண்டும் என்ற கருத்தையும் வெளியிட்டுள்ளார். இடதுசாரி அல்லது வலதுசாரி எதிர்க்கட்சிகளிடமிருந்தோ அல்லது தொழிற்சங்க அதிகாரத்துவத்திடமிருந்தோ, இந்த ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் பற்றி எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வாறு எதிர்ப்புகள் எழாமல் போனதற்கான காரணம் "சுனாமி அதிர்ச்சியின்" விளைவோ அல்லது மனிதாபிமானச் செயல்கள் தடையின்றி நடத்தப்படவேண்டும் என்ற அக்கறையினாலோ அல்ல. மாறாக, பரந்த பெரும்பான்மையினருடைய வாழ்க்கையை சகிக்க முடியாததாக்கிக் கொண்டிருக்கும் ஆழமடைந்துவரும் சமூக சமத்துவமின்மையின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் ஜனநாயக உரிமைகள், முதலாளித்துவ ஆட்சிக்கு முரணானதாகியுள்ளன.

ஒரு தோராய மதிப்பீட்டின்படி, மொத்த மக்கட்தொகையில் 20 சதவீதமானவர்கள் தேசிய வருமானத்தில் பாதிக்கும் மேலாகப் பெறும் அதேவேளை, மிகுந்த ஏழ்மையில் இருக்கும் 20 சதவீதத்தினர் 10 சதவீதத்தையே பெறுகின்றனர். வறுமைக் கோட்டிற்கும் கீழ் வாழும் 40 சதவீதத்திற்கும் மேலானவர்கள், நாள் ஒன்றுக்கு 1 டொலரையே வருமானமாகப் பெறுகின்றனர். சுதந்திர வர்த்தக வலையத்தில் இருக்கும் தொழிலாளர்கள் மாதம் ஒன்றிற்கு 45 டாலர்களை மட்டுமே பெறுகின்றனர். இது உயிர்வாழ்வதற்கு மட்டுமே போதுமானதாகும். இந்தச் சூழ்நிலையின் கீழ், ஜனநாயக உரிமைகளும், பாராளுமன்ற வடிவிலான ஆட்சிகளும் ஆளும்வர்க்கத்திற்கு தேவையற்ற சுமை என்று அதிகரித்த அளவில் கருதப்படுகிறது. அரசியல் அமைப்பை தகர்க்கும் முயற்சியும், சர்வாதிகார முறையிலான ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளும் செயற்பட்டியலில் சிலகாலமாகவே இருந்து வருகின்றன. நவம்பர் 2003ல் குமாரதுங்க கிட்டத்தட்ட ஒரு அரசியலமைப்பு ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டதன் மூலம், ஐக்கிய தேசிய முன்னணியின் மூன்று அமைச்சுக்களை அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர் தன்னிச்சையாக முழு அரசாங்கத்தையும் கலைத்துவிட்டார்.

தொழிலாள வர்க்கத்திற்காக பேசுகின்றோம் எனக் கூறிக்கொள்ளும் எந்தக் கட்சியும் இத்தகைய எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இப்பொழுது குமாரதுங்கவுடன் சேர்ந்துகொண்டு அனைத்து சோசலிச வாய்வீச்சுகளையும் கைவிட்டுவிட்டது. அது "ஸ்திரமான தேசிய அரசாங்கத்திற்காக" பிரச்சாரம் செய்துவருகிறது. வேறுவார்த்தைகளில் சொன்னால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராகப் போர் நடத்தும் ஒரு அரசாங்கமாகும். இலங்கையில் முன்பு தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரிய கட்சியாக இருந்த லங்கா சம சமாஜக் கட்சியும் மற்றும் ஸ்ராலினிசக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து கொண்டு, அவருடைய ஜனநாயக விரோத வேலைத்திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றன.

ஜனநாயக உரிமைகளை இவ்வாறு மிதித்து நசுக்குகையில், ஆளும் செல்வந்தத் தட்டு, ஏகாதிபத்திய நாடுகளுடன், குறிப்பாக புஷ் நிர்வாகத்துடன் தான் வளர்த்து வரும் உறவுகளினால் ஊக்கம் பெற்று வருகிறது. சுனாமிக்குப் பின்னர், அமெரிக்கா 13,000 இராணுவ வீரர்கள், 21 கடற்படைக் கப்பல்கள் மற்றும் 75 விமானங்களை இந்தியப் பெருங்கடலில் நிறுத்திவைத்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் புஷ் நிர்வாகத்தின் புவிசார் அரசியல் மூலோபாயத்தை வரைவதில் இலங்கை முக்கியக் குவிமையமாக இருக்கிறது.

நியூ யோர்க் டைம்ஸுக்கு, யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் ஜோன் லீவிஸ் கட்டிஸ் (John Lewis Gaddis) கூறுகையில், சுனாமிப் பேரழிவானது "ஈராக்குடன் விரக்தி, முன்கூட்டிய தாக்குதல் மற்றும் இஸ்லாமிய உலகுடனான புஷ்ஷின் பதட்டங்களுக்கு அப்பால் நகருவதற்கான ஒரு வாய்ப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இது எவராலும் விவாதிக்க முடியாத வகையில் அமெரிக்காவால் ஒரு இலக்கு நோக்கி வேலை செய்யக்கூடிய ஒரு பகுதிக்கு உதாரணமாகும் என்றார். ஆனால் செய்தி ஊடகம் அமெரிக்கக் கடற்படை வீரர்களை மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் என்று சித்தரித்துக் காட்ட முற்பட்டுள்ள போதிலும்கூட, இப்பகுதியில் உள்ள தொழிலாள வர்க்கமும் ஏழைகளும், பல தசாப்தங்களாக ஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்டு வரும் நிலையில், அவர்களுடைய வருகையை விரும்பவில்லை. மக்கள் வியட்நாமின் கசப்பான நினைவுகளைக் கொண்டுள்ளனர் மற்றும் தற்போதைய ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான பங்கானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்பாலான மற்றும் பொதுவில் ஏகாதிபத்தியத்தின்பாலான அவர்களின் குரோதத்தைப் புதுப்பித்துள்ளது.

இந்த உணர்வுகளும், அதேபோல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் தன்னியல்பான வெளிப்பாடும், இன்னும் நனவுபூர்வமான அரசியல் வேலைத்திட்டமாக உருவாக்கப்படவில்லை. ஆனால் புறநிலை நிலைமைகள் விரைவாகக் கனிந்து கொண்டிருக்கின்றன. அங்கு சோசலிசத்திற்கான நமது கட்சியின் போராட்டத்தால் பரந்த தொழிலாள வர்க்க மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் தட்டினரை கல்வியூட்டவும் அணிதிரட்டவும் முடியும்.

மார்க்சிச கட்சியின் பணிகள்

இங்கு நாம் அனைத்திலும் மிக முக்கியமான பிரச்சினையான மார்க்சிச கட்சியின் பணிகளுக்கு வருகிறோம். சுனாமி பாதிப்பாளர்களுக்காக வெறுமனே துயரத்தை வெளியிட்டுக் கொண்டு மட்டும் இருந்தால் அல்லது நிவாரண உதவிப் பணிகளின் பற்றாக்குறைக்காக நம்மையே ஈடுபடுத்திக் கொண்டிருந்தால் போதாது. தன்னார்வ அமைப்புக்கள் செய்து கொண்டிருக்கும் உதவிப் பணிகளை நாம் எதிர்க்கவில்லை. அவற்றின் முயற்சிகள், செயற்பாடுகள் ஆகியவற்றைப் பாராட்டுகிறோம். ஆனால் சோசலிச புரட்சியாளர்கள் என்ற வகையில் எமது முக்கிய பணி, இறக்கும் தறுவாயில் உள்ள முதலாளித்துவ அமைப்பின்கீழ், வெகுஜனங்களை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஒடுக்குமுறையான சமூக மற்றும் அரசியல் நிலைமைகளை கடப்பதற்கு தேவையான முன்னோக்கையும் வேலைத்திட்டத்தையும் வழங்குவதாகும். சுனாமியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் தேவைகளை வழங்க வேண்டியது அரசினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பாகும் என்ற விழிப்புணர்வை நாம் உழைக்கும் மக்கள் மத்தியில் கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். அரசாங்கம் இந்த அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யத் தவறினால், நாம் தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கத்தின் வடிவிலான ஒரு பதிலீட்டின் தேவையை முன்வைக்க வேண்டும்.

நான் 'இளம் லெனின்' என்ற லியோன் ட்ரொட்ஸ்கியின் புத்தகத்தில் இருந்து மேற்கோளிட விரும்புகிறேன். 1891-92ல் ரஷ்யா பஞ்சத்தில் வாடியபோது மார்க்சிஸ்டுகளின் அனுபவத்தைப்பற்றி அது கூறுகிறது. ஜார் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சிமுறைக்கு தாங்கள் எப்படி இன்றியமையாதவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் எதிர்பார்ப்பில், தாராளவாதிகளும் தீவிரப்போக்கினரும் நிவாரண உதவி வழங்க விரைந்தனர். லெனின் அதற்கு எதிரானவராக இருந்ததோடு, ட்ரொட்ஸ்கி இந்தப் பகுதியில் மார்க்சிஸ்டுகள் கடைப்பிடிக்கவேண்டிய முன்னோக்கை விளக்குகிறார்.

"அக்காலத்தில் மார்க்சிஸ்டுகளுக்கு எதிராகப் பொதுவாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு அவர்கள் தேசிய பேரழிவை தங்களுடைய கொள்கைவழிக் கண்ணாடிகள் மூலம் பார்த்தனர் என்பதாகும். இது தத்துவார்த்த விவாதங்கள் எந்த அளவிற்கு தாழ்ந்துவிட்டன என்பதைக் குறிக்கிறது. உண்மையில், அனைத்துச் சக்திகளும் குழுக்களும் அரசியல் நிலைப்பாட்டை எடுத்தன: அரசாங்கம் தன்னுடைய கெளரவத்தின் நிமித்தம் பஞ்சம் இல்லை என்றது அல்லது அதன் தீவிரத்தைக் குறைத்துக் கூறியது. தாராண்மைவாதிகள் பஞ்சத்தின் இருப்பைப் பற்றிக் கூறியநேரத்தில், தாங்கள் எவ்வாறு "சீரிய பணியாற்றினர்" என்பதை நிரூபிக்கும் வகையில், கொஞ்சம் அதிகாரம் கொடுத்தால் ஜார் மன்னர்களுக்கு எந்த அளவு ஒத்துழைப்பைக் கொடுப்போம் என்பதைக் காட்டினர்; மக்கள் முதன்மைவாதிகள் (பாப்புலிஸ்டுகள்) உணவு விடுதிகளுக்கும், மக்கள் டைபாய்டில் படுத்திருக்கும் அறைகளுக்கும் விரைந்து சென்று மக்களின் பரிவுணர்வை அமைதியான, சட்டபூர்வமான வகையில் பெறுவதற்கு உழைத்தனர். பட்டினி கிடப்பவருக்கு உதவி செய்யக் கூடாது என்று மார்க்சிஸ்டுகள் எதிர்க்கவில்லை; ஆனால் கடல் போன்ற தேவைகளை ஒரு மனிதாபிமான மேசைக்கரண்டி மூலம் தீர்த்துவிட முடியும் என்ற பிரமை காட்டுவதையே அவர்கள் எதிர்த்தனர். ஒரு புரட்சியாளன், ஒரு சட்டபூர்வ குழுவில் அல்லது ஒரு உணவு வழங்கும் இடத்தில், ஒரு ஜெம்ஸ்டோவ் உறுப்பினரின் அல்லது ஒரு அதிகாரியின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார் என்றால், இயக்கத்தில் புரட்சியாளர் பொறுப்பை எடுத்துக் கொள்வது யார்? அமைச்சரவை அறிவிப்பு, மற்றும் வழிகாட்டுமுறைகள், பின்னர் அரசாங்கம் பட்டினி கிடப்போருக்குக் கூடுதலான உதவியைக் கொடுக்க பகிரங்கமாக முன்வருவதற்கான காரணமே புரட்சியாளர்களின் ஆர்ப்பாட்டம்தான் என்றிருந்த நிலையில், உண்மையான உதவி என்ற கண்ணோட்டத்தில் புரட்சியாளரின் கொள்கை, நடுநிலையில் உள்ள மனிதாபிமானிகளுடைய உதவியைவிட விளைபயனுள்ளது என்பது இன்னும் சக்திமிக்க வகையில் நிரூபணம் ஆயிற்று." (Leon Trotsky, The Young Lenin, Wren Publishing, p.173.)

நாம் இந்த அனுபவங்களில் இருந்து முக்கியமான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களை அணிதிரட்டி, அரசாங்கத்திற்கும் மற்றும் அரசிற்கும் சுனாமிப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி தேவை என்ற கோரிக்கையை அவர்களையே முன்வைக்கச் செய்யவேண்டும். இப்பணியின் மூலம் நாம் மக்களுக்கு அவர்களுடைய அரசியல் அனுபவத்தின் அரசியல் முக்கியத்துவம் பற்றி கற்பிக்க இயலும்; வகுப்பு பிரிவுகளைக் கடந்து ஒன்றாக இணைந்து செயல்படும்பொழுது தங்களுடைய சொந்த சக்தி என்ன என்பது பற்றி அவர்களை உணரவைப்பதன் மூலம் தங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதன் பேரில் தங்களுடைய வலிமையையே நம்புவதற்கு அவர்களுக்கு கற்பிக்க இயலும்.

இடம் பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் நிலமும் வீடுகளும் ஒதுக்கப்படவேண்டும் என்று நாம் கோரவேண்டும். இராணுவத்தையும் போலீசையும் பயன்படுத்தி கடலில் இருந்து 100 மீட்டருக்குள் எந்த வீட்டுக் கட்டிடமும் கட்டக் கூடாது என்ற தடையைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இது தெற்கில் சிங்கள மக்கள் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால் வடக்கு, கிழக்குப் பகுதிகளைப் பொறுத்தவரையில் வரம்பு 200 மீட்டராக உள்ளது; இதுவே இனவாதப் பாகுபாடு ஆகும். இதற்கு எதிராக, நாம் பாதிக்கப்பட்டவர்களே தங்கள் வாழ்வை எங்கு நிலைநிறுத்திக் கொள்ளுவது என்பதை முடிவுசெய்யட்டும் என்று வலியுறுத்துவோம்.

மீனவர்கள் தங்கள் தொழிலை மீண்டும் தொடக்குவதற்கு தேவையான கருவிகள் காலதாமதமின்றி வழங்கப்படவேண்டும். அரசாங்கம் 5,000 ரூபாய்களை மட்டுமே (50 அமெரிக்க டாலர்கள்) அனைத்து மீன்பிடி கருவியையும் இழந்தவர்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளது. அரசாங்கம் கொடுக்க முன்வந்துள்ள இழப்பீட்டுத் தொகை அவ்வளவுதான். அவசரகால விதிகளும் நிவாரணப் பணிகள் மீதான இராணுவக் கட்டுப்பாடும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். ஒரு பொதுப் பணி வேலைத்திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள் மற்றும் தொலைத்தொடர்புகளும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

போர் முயற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து பணம் மாற்றப்பட்டும் மற்றும் செல்வந்தர்கள்மீது அவர்களுடைய செல்வத்தின் விகிதத்திற்கு ஏற்ப வரிவிதிக்கப்பட்டும் இதற்கான நிதி அதிகரிக்கச் செய்ய வேண்டும். இன்றுவரை ஜனாதிபதியின் நிவாரண நிதிக்குச் செல்வந்தர்களால் கொடுக்கப்பட்டுள்ள தொகை 262 மில்லியன் ரூபாய்கள் அல்லது 2.6 மில்லியன் டொலர்கள் மட்டுமேயாகும். ஆயினும் அவர்களுடைய நிறுவனங்கள், இலங்கைத் தரத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் மிகப் பெரிய இலாபங்களை ஈட்டியுள்ளன. உதாரணமாக, லக்தனவி லிமிடட் (Lakdhanavi Ltd) வரிகளுக்குப் பின்னர் 31 மார்ச் 2004 முடிந்த ஆண்டில் 333.5 மில்லியன் ரூபாய்கள் இலாபம் ஈட்டியுள்ளது. சிலோன் வர்த்தக வங்கி, வரிவிதிப்பிற்கு பின்னர் 2004ன் முதல் 9 மாதங்களில் 1,310 மில்லின் ரூபாய்கள் இலாபம் ஈட்டியுள்ளது. அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபன வங்கி (Development Finance Corporation Bank) 2004ன் முதல் அரையாண்டுக்காலத்தில் 539 மில்லியன் ரூபாய்கள் இலாபத்தைக் கொண்டுள்ளது. ஓர் உயர்நிலை நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் குருப் (Richard Peiris Group) 433 மில்லியன் ரூபாய்கள் இலாபம் அடைந்துள்ளது. இந்தளவு இலாபம் பெற்றாலும், சுனாமி நிவாரணத் தொகைக்கு அவற்றின் பங்களிப்பு உண்மையிலேயே வெட்கக் கேடானதாகும்.

உழைக்கும் மக்களுக்கு தங்களுடைய தேவைகளை அடைவதற்கான ஒரு மாற்று வேலைதிட்டத்தை கற்பிப்பதற்காக நாம் இக்கோரிக்கைகளை அரசாங்கத்தின் முன்வைக்கின்றோம். ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள், நிவராண வேலைகளை மேற்கொள்வதற்கு தங்களின் சொந்தக் குழுக்களை நிறுவுவதற்காக அரசாங்கத்தில் இருந்தும் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் சுதந்திரமாக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் கட்டாயம் அணிதிரட்டப்பட வேண்டும். அரசாங்கமும், ஆளும் செல்வந்த தட்டுகளும் இத்தகைய கோரிக்கைகள், "நடைமுறைப்படுத்த முடியாதவை," அமுல்படுத்த சாத்தியமானவையல்ல என்று கூறக்கூடும். இதற்கான ஒரே அரசியல் பதில் அவை அதிகாரத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்பதாகும். சிறீலங்கா ஈழம் சோசலிச அரசுகளுக்காக தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கம் ஒன்று கட்டாயம் அதிகாரத்திற்கு கொண்டு வரப்படவேண்டும். இந்த முன்னோக்குக்காகவே நாம் போராடுகின்றோம்..

சுனாமி, தேசிய அரசு எல்லைகளை மதிக்கவில்லை. நம்முடைய தகவல் சேகரிக்கும் குழுவினர், பலதரப்பட்ட மக்களையும் சந்தித்தபோது, அவர்களே வியப்பும் திகைப்பும் அடையும் வகையில், சுனாமி இலங்கையில் இன, சமூகப் பிரிவுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்களும் கூறினர். இவை தேசிய எல்லைகளுக்கும், சமூகப் பிரிவுகளுக்கும் அப்பால் உழைக்கும் மக்கள் அனைவரையும் ஐக்கியப்படுத்துவதற்கான எமது அனைத்துலக சோசலிச முன்னோக்கு வேலைதிட்டத்தின் சக்திவாய்ந்த வெளிப்பாடுகள் ஆகும். வரவிருக்கும் காலக்கட்டத்தில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச சோசலிச முன்னோக்கு, உலக சோசலிச வலைத் தளத்தை சர்வதேசரீதியாக உழைக்கும் மக்களின் கைகளில் வலிமையான கருவியாக இருக்கும்.

Top of page