World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistan: Bush ally Musharraf mounts terror campaign against telecommunication workers

பாக்கிஸ்தான்: புஷ்ஷின் கூட்டாளி முஷாரஃப் தொலைபேசி தொழிலாளர்களுக்கு எதிராக முடுக்கிவிட்டிருக்கும் பயங்கரவாத நடவடிக்கை

By Vilani Peiris and Keith Jones
18 June 2005

Back to screen version

அரசிற்கு சொந்தமான பாக்கிஸ்தான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் (PTCL) தொழிலாளர்கள் மீது அந்நாட்டின் அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சி இராணுவத்தையும் துணை இராணுவப்படைகளையும் அனுப்பி அந்த நிறுவனத்தின் முக்கிய அலுவலகங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர கட்டளையிட்ட பின்னர் கடந்த ஆறு நாட்களாக ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அந்த கம்பெனியை தனியார் மயமாக்கும் அரசாங்கத் திட்டங்களுக்கு எதிராக ஒரு போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்திவருகின்ற PTCL தொழிலாளர்கள், அரசின் பயங்கரவாதத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திங்களன்று, உள்துறை அமைச்சர் அப்டாப் அஹ்மது செர்பவோ வேலை நிறுத்தம் செய்யும் தலைவர்கள் ''பயங்கரவாதிகள்'' என்ற அடிப்படையில் நடத்தப்படுவார்கள் என்று கூறினார். PTCL தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் "சட்ட விரோதமானது" என்று அறிவித்த Sherpao, "PTCL-ஐ தனியார் மயமாக்குவதற்கு எதிராக அரசாங்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருப்பவர்கள் சட்டத்தின்படி அவர்கள் பயங்கரவாதிகள்தான்'' என்று அறிவித்தார். தங்களுடைய அரசு-எதிர்ப்பு நடவடிக்கைகளை நீடித்துக்கொண்டிருப்பார்களானால் அவர்கள் சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டிவரும்" என்று குறிப்பிட்டார்.

அரச கடத்தலின் வடிவத்தில், போலீசாரும் பாதுகாப்புப்படைகளும் சில தொழிற்சங்கத்தலைவர்கள் மற்றும் கைதுகளை தவிர்த்து வந்த போர்க்குணமிக்க தொழிலாளர்கள் ஆகியோரது குடும்பங்களை சேர்ந்தவர்களை கைது செய்திருக்கின்றனர், அவர்களிடம் தலைமறைவாகி விட்டவர்கள் சரணடையும்வரை விடுதலை செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளனர். PTCL தொழிலாளர், தொழிற்சங்க நடவடிக்கைக் குழுவை சார்ந்த 29 தலைவர்களில் 7 பேர் தற்போது அரசாங்கத்தின் கையில் உள்ளனர், பாதுகாப்புப்படைகள், இதர தொழிலாளர்களது வீடுகளுக்கும் சென்றிருப்பதாக தெரிவித்தனர் மற்றும் உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்களும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்படியான குற்றச்சாட்டுக்களை சந்திக்க வேண்டி வரும் என்று கூறியுள்ளனர்.

PTCL நிர்வாகம் குறைந்தபட்சம் 28 தொழிற்சங்கத்தலைவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது மற்றும் வேலை நிறுத்தத்திலிருந்து விலகிக்கொள்ளாவிட்டால், குறுகிய கால ஒப்பந்தங்களில் பணியாற்றிக்கொண்டுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பதவி நீக்கம் செய்துவிடுவதாக அச்சுறுத்தியுள்ளது.

ஜூன் 11 மாலை, பலத்த ஆயுதந்தாங்கிய பாதுகாப்புப் படைகள் PTCL அலுவலகங்களை கைப்பற்றிக்கொண்டன, இராணுவ சமிக்கை பிரிவுகள் PTCL தொழிலாளர்களுக்காக பணியாற்றத் தொடங்கினர். ஜூன் 18, ஆகிய இன்றைய தினம் PTCL பங்குகளில் 26 சதவீதத்தை ஏலத்தில் விற்றுவிடப்போவதாக அரசாங்கம் அறிவித்த சில மணி நேரத்தில் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெரும்பாலான தொழிலாளர்கள் தற்போது வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டதாக அரசாங்கமும் PTCL நிர்வாகமும் கூறின மற்றும் தற்போது நாட்டின் பிரதான தொலைபேசி வலைப்பின்னல்களில் சமிக்கை பிரிவுகள் பணியாற்றவில்லை என்றும் கூறினர். ஆனால் தொடர்ச்சியான ஒடுக்குமுறை அலையால் இது பொய்யாக்கப்பட்டிருக்கிறது.

பாரம்பரியமாக முக்கியத்துவம் நிறைந்த சங்கமான, PTCL தொலைபேசி ஊழியர் சங்கத் தலைவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்து அடிபணிந்துவிட்டனர், அது நீடிப்பதும் தனியார் மயமாக்கலுக்கு எதிரான போராட்டமும் ''நாட்டின் பெரிய நலனுக்கு'' எதிரானது என்று கூறியுள்ளனர்.

ஆனால் PTCL தொழிலாளர்கள்' தனியார்மயமாக்கலுக்கு எதிராக போராட்டம் நடத்த தொடங்கிய ஆரம்ப நிலையிலேயே பாரம்பரிய தொழிற்சங்கத் தலைமை மீது காரியாளர்களுக்கு (rank-and-file) அவநம்பிக்கை நிலவியது. தொழிற்சங்கங்களுக்கு இடையிலான PTCL தொழிற்சங்க நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டதே, அதன் தலைவர்கள் சிலர் தொழிற்சங்கத்திற்கு வெளியிலிருந்து எடுக்கப்பட்டனர், சென்ற ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது, அதை முறியடிப்பதற்காக, அந்த நிறுவனம் தற்காலிக தொழிலாளர்களை பயன்படுத்தியது, என்ற புகார்களை அடிப்படையாகக் கொண்டுதான்.

தனியார்மயமாக்கல் திட்டத்தை அரசாங்கம் காலவரையின்றி தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்மத்தித்ததன் அடிப்படையிலும் இதர நீண்டகால கோரிக்கைகளின் மீது PTCL கணிசமான சலுகைகளை செய்ததன் அடிப்படையிலும், இஸ்லாமாபாத்திலுள்ள PTCL நிறுவனத்தின் தலைமை அலுவலகங்கள் மற்றும் நாடெங்கிலும் இதர முக்கிய அலுவலகங்களை 10 நாட்கள் முற்றுகையிட்டிருந்ததை தொழிற்சங்கங்களும் நடவடிக்கை குழுவும் ஜூன் 3-ந் தேதி கைவிட்டன.

என்றாலும், அது ''நிறுத்தி வைத்திருப்பது'' அரசாங்கத்தின் தந்திரம் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஜெனரல்/ஜனாதிபதி பெர்வஸ் முஷாரஃபின் ஆட்சி, தொழிலாளர்களின் முற்றுகைக்கு கடுமையான விரோதத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல் (PTCL அலுவலகங்களை சுற்றி துருப்புக்களை அனுப்பியதுடன் விரைவில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கட்டளையிடப்படலாம் என்று கோடிட்டுக் காட்டியது), தனியார் மயமாக்கல் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதியளித்தது. PTCL தொழிலாளர் போராட்டம் முஷாரஃப் ஆட்சியின் அதிகாரத்துவத்திற்கும், அரசியல் சட்டப்பூர்வ தன்மைக்கும் சவாலாக அமைந்ததுடன், பாக்கிஸ்தானின் முதலாளித்துவ வர்க்கத்தின் அடிப்படை வர்க்க மூலோபாயமான சர்வதேச மூலதனத்திற்கு மலிவு-கூலிக்கான புகலிடமாவதற்கு சவாலாக அமைந்தது.

PTCL தொழிலாளர்கள் மீது அரசு தொடுத்துள்ள தாக்குதல் இருப்பினும், தொழிலாளர்கள் சங்க நடவடிக்கைக்குழு இன்றையதினம், நாட்டின் மிக அதிக இலாபம் தருகின்ற நிறுவனங்களில் ஒன்றை விற்றுவிடுவதை கண்டிப்பதற்கும் PTCL பங்குகளை அரசாங்கம் ஏலம் விடுவதை சீர்குலைக்கவும் பெருமளவில் கண்டனங்களை நடத்த உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதர அரசு-நடத்துகின்ற நிறுவனங்களிலும், அனுதாப வேலை நிறுத்தங்கள் நடைபெறும் என்று அச்சுறுத்தப்பட்டிருக்கிறது.

டான் நேற்றைய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின்படி PTCL நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தந்துள்ள தகவலின்படி, இதற்கு முன்னர் தொலைபேசி இணைப்புக்களை இயங்காமல் தடை (Jam) செய்வது என்ற நடவடிக்கையில் தொழிலாளர்கள் ஈடுபடாமல் இருந்ததற்கு காரணம் தனியார்மயமாக்கலை உடனடியாக எதிர்நோக்கியுள்ள இதர நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்த ஆட்சேபனைகளாலும், மற்றும் முஷாரஃப்பிற்கு எதிரான முதலாளித்துவ அரசியல் எதிர்க்கட்சிகள் தெரிவித்த எதிர்ப்பினாலும்தான்.

இதற்கிடையில் அரசாங்கம் பங்குகளை ஏலம் விடுவது எந்த விதமான தடையுமின்றி நடைபெறும் என்று பெருமையடித்துக்கொண்டிருக்கிறது. இந்த ஏலத்தில் அரை டசின் அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டு தொலைபேசி நிறுவனங்களும் பங்கெடுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைய வாரங்களில், இராணுவ ஆட்சி மறுபடியும் அரசியல் கண்டனங்களை வன்முறையால் ஒடுக்கியது, பாரியளவில் பாதுகாப்பு படைகள் அணிதிரட்டப்பட்டன. எடுத்துக்காட்டாக, பெனாசீர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சி அவரது கணவர் ஏப்ரல் மாதம் நாட்டிற்கு திரும்பியபோது அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை தவிர்ப்பதற்காக, அரசாங்கம் பத்தாயிரக்கணக்கான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தொண்டர்களை கைது செய்தது, நாட்டின் போக்குவரத்து வலைப்பின்னலின் பெரும்பகுதியை மூடவும் செய்தது.

டெள ஜோன்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் "பாக்கிஸ்தானின் பெரிய தொலைபேசி-சேவை வழங்கலை தனியார் மயமாக்குவதற்கு சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டுள்ள ஒரு ஏலத்தை எல்லாக் கண்களும் நோக்கி கொண்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருக்கிறது. பாக்கிஸ்தானில் மிகப்பெரிய தனியார்மயமாக்கலான 26 சதவீத பங்குகள் விற்பனை என்று குறிப்பிட்ட டெள ஜோன்ஸ் செய்தி மேலும் கூறியதாவது, "இந்த விற்பனை சுமூகமாக நடைபெறுமானால், ஆய்வாளர்கள் கூறுவது நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனமான பாக்கிஸ்தான் அரசு எண்ணெய் நிறுவனமும், பாக்கிஸ்தானின் இரண்டாவது பெரிய எண்ணெய்வள ஆய்வு நிறுவனமான பாக்கிஸ்தான் பெட்ரோலிய நிறுவனமும், அதை நோக்கிச் செல்லும்.

PTCL தொழிலாளர்களுக்கு திரண்ட மக்கள் ஆதரவை மறைமுகமாக வெட்டி முறிக்கின்ற ஒரு கொச்சையான முயற்சியாக அரசாங்கமும் அந்த கம்பெனியும் (ஏழு ஆண்டுகளில் முதல் தடவையாக) ஒரு கணிசமான ஊதிய உயர்வை பரிசாக வழங்கின. தனியார்மயமாக்கப்பட்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை எந்த நிரந்தர தொழிலாளரும் தங்களது வேலையை இழக்கமாட்டார்கள் என்று கூறியவுடன், தாங்களே விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு பல்வேறு ஊக்க தொகைகளையும் வழங்கியது. இதில் உண்மை என்னவென்றால், தனியார்மயமாதலை தொடர்ந்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு வழி ஏற்படும் என்பதுடன் விதிப்படி-வேலை மாற்றங்களின் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் நீக்கப்படும், அதன்மூலம் இப்போதிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைய கட்டளையிடப்படும்.

முஷாரஃபும் அவரது பிரதமரான முன்னாள் சிட்டி வங்கி தலைமை அதிகாரியுமான சவுகத் அஜீஸ்சும் பாக்கிஸ்தான் பொருளாதாரம் உயர்ந்த வேகத்தில் வளர்ந்து கொண்டிருப்பதாக பெருமையடித்துக்கொண்டாலும், அதிகாரபூர்வமாக அந்த நாடு இரட்டைப்படை பணவீக்கத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது, மற்றும் அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகளின்படி வேலையில்லாதிருப்போரின் எண்ணிக்கை இரட்டிப்பாகவும், அத்துடன் வறுமையும், சமூகத் துருவ முனைப்படலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

பாக்கிஸ்தானின் அரசு சாராத அமைப்பான பாக்கிஸ்தான் மனித உரிமைகள் கமிஷனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், PTCL தொழிலாளர்களின் போராட்டத்தை சிதைக்கும் தனது முயற்சியில் அரசாங்கம் ''கொடூரமான பலாத்காரத்தை'' பயன்படுத்துகிறது என்றால், அதற்குக் காரணம், தொழிலாள வர்க்க தலைமையிலான எழுச்சி பாகிஸ்தானின் உழைக்கும் மக்களின் எழுச்சிக்கு கிரியா ஊக்கியாக மாறிவிடும் வல்லமை கொண்டது என்று உணர்ந்ததால்தான். இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், பாக்கிஸ்தானின் ஆளும் வர்க்கத்தின் இரட்டைக் கொள்கைகளான நவீன-தாராளவாத பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் அமெரிக்காவின் இராணுவ மற்றும் புவிசார் அரசியல் ஆதிக்கத்தையும் மத்திய ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் விஸ்தரிக்கப்படுவதற்கான வாஷிங்டன் உதவிக்கும் எதிராக அத்தகையதொரு போராட்டம் திருப்பிவிடப்படும்.

என்றாலும், தொழிற்சங்கங்களும் பாக்கிஸ்தான் தொழிற்சங்க உரிமைகள் இயக்கம் போன்ற அமைப்புக்களும் PTCL தொழிலாளர் போராட்டத்தை தொழிற்சங்க போர்க்குணமிக்க போராட்டம் மற்றும் கண்டன அரசியலோடு கட்டுப்படுத்தி தொழிலாளர் போராட்டத்திற்கு முதலாளித்துவ எதிர்க்கட்சிகளான அது பூட்டோவின் PPP-யாக இருந்தாலும் அல்லது வலதுசாரி இஸ்லாமிய எதிர்க்கட்சியான MMA வாக அல்லது முத்தாஹிதா மஜீலீஸ்-இ-அமல் ஆக இருந்தாலும் அவர்கள் தெரிவிக்கின்ற ஆதரவோடு மட்டுப்படுத்திக்கொண்டன.

ஜூன் 13-ல் PTCL தனியார்மயமாக்கலுக்கு எதிராக கண்டித்தும் இராணுவம் அந்த அலுவலகங்களை பிடித்துக்கொண்டதை எதிர்த்தும் PPA, MMA மற்றும் பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் -N (பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட நவாஷ் செரீப் ஆதராவாளர்கள் உட்பட) பிரதான எதிர்க்கட்சிகள் பாக்கிஸ்தான் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.

இந்த சக்திகளை பொறுத்தவரை PTCL தொழிலாளர் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை நிலைநாட்டுவதாக அறிவித்திருப்பது, அது முஷாரஃப் ஆட்சிக்கும் வாஷிங்டனது சூழ்ச்சிக்கையாளல்களுக்கும் அரசியல் ரீதியாக கீழ்படிந்து நடக்கும் அதேவேளை, அதனை நீர்த்துப்போகச் செய்வதற்குத்தான்.

பாக்கிஸ்தானின் தனியார்மயமாக்கல் அமைச்சர் ஹபீஸ் ஷேக் PPP மற்றும் PML-N உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது பற்றி, தான் வியப்படைந்ததாக குறிப்பிட்டார், 1992 முதல் PTCL தனியார் மயமாதல் திட்டம் அரசாங்கத்தின் நடவடிக்கை நிகழ்ச்சி நிரலில் இருந்துவருகின்றன. அப்போது ''தனியார் மயமாதலை அவர்கள் ஆதரித்தவர்கள், இப்போது அதை எதிர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.'' ''இப்போது காணப்படுகிற ஒரே வேறுபாடு என்னவென்றால் "எங்களது அரசாங்கம் அந்த நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது" என்று ஷேக் குறிப்பிட்டார்.

இந்த ''சூழ்நிலையில்'' ஒரு பிரதான காரணி என்னவென்றால், முஷாரஃப் ஆட்சிக்கான அமெரிக்க அரசாங்கத்தின் அரசியல், நிதி மற்றும் இராணுவ ஆதரவாகும். புஷ்ஷின் கூட்டாளி பாக்கிஸ்தானின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், ஏற்கனவே பாக்கிஸ்தானில் மகத்தான சமூக ஏற்றதாழ்வுகளை வலியுறுத்தும், தூண்டிவிடும் சமூக பொருளாதார செயல் திட்டத்தை பின்பற்றுவதிலும் "பயங்கரவாதத்தின் மீதும் கொடுங்கோன்மை மீதும் போர்" தொடுத்துக் கொண்டிருக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved