World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

FBI inspector general's report: more evidence of government complicity in 9/11 attacks

FBI உயர் மேற்பார்வையாளரின் அறிக்கை:
9/11 தாக்குதல்களில் அரசாங்கம் உடந்தையாக செயல்பட்டதற்கு மேலும் சாட்சியம்

By Patrick Martin
15 June 2005

Back to screen version

ஜூன் 9ல் FBI உயர்மேற்பார்வையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை 2001 செப்டம்பர் 11ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க அரசாங்கத்தின் பங்கு பற்றி புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அண்ணளவாக 3,000 மக்கள் கொல்லப்பட்ட உலக வர்த்தக மையத்தின் மீதும், பென்டகன் மீதும் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு முன்னர் எப்படி அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கைகளை புறக்கணித்தன மற்றும் அவற்றை மறைத்துவிட்டமை தொடர்பான பல முக்கிய கண்டுபிடிப்புகளை FBI இன் உள்ளறிக்கை வழங்குகின்றது. 400 பக்கங்களுக்கு மேற்பட்ட அந்த அறிக்கை வெளியிடப்பட்டு சில மணி நேரங்களுக்குள் பத்திரிகைகள் வெளியிட்ட தகவல் சிதைந்துவிட்ட சித்திரமாக காட்சியளிக்கின்றன. அந்த அறிக்கையை பின் தொடர்ந்து, அந்த புத்தகத்தை ஆய்வு செய்து அதனடிப்படையில் வெகுஜன ஊடகங்களில் இன்னமும் வெளியிடப்படவில்லை.

அதிகாரத்துவ மெத்தனப் போக்கு, தனிப்பட்ட அதிகாரிகளின் திறமைக் குறைவு, பல்வேறு புலனாய்வு அமைப்புக்களுக்கிடையே நிலவிய போட்டி, கணனி மென்பொருள்கள் மோசமாக செயல்பட்டதும்கூட சேர்ந்துகொண்டு தற்போது வழக்கமாகக் கூறப்பட்டுவரும் FBI யும் CIAவும் ''புள்ளி விவரங்களை இணைப்பதற்கு தவறிவிட்ட குற்றம் புரிந்தன'' என்று பெரும்பாலும் ஆரம்ப ஊடக விமர்சனங்கள் வெளிவந்திருக்கின்றன. இப்படி அவர்கள் சம்பவங்களை சித்தரித்திருப்பது முற்றிலும் கவனக்குறைவானதாக அமைந்திருக்கிறது.

அமெரிக்க புலனாய்வு அமைப்பு உலகிலேயே வேவு பார்க்கின்ற மிகவும் சக்திவாய்ந்த கருவியாகும். அது ஒரு கீழ்மட்டத்திலுள்ள காவலாளர் குழுவல்ல. அது எச்சரிக்கைகளை புறக்கணித்து மற்றும் தகவலை ஒடுக்கிவிடுமானால், அது வேண்டுமென்றே அவ்வாறு செய்தது என்பதை சட்டபூர்வமாக ஊகிக்கமுடியும். அப்போது இந்தக் கேள்வியை எழுப்பியாக வேண்டும்: விமானங்களை கடத்தி அவற்றின் மூலம் இறுதியாக குண்டுவீசி தாக்குதல்களை நடத்திய அல்கொய்தா அமைப்பினர் என்று அறியப்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலனாய்வு அமைப்புக்கள் அல்லது உயர்மட்ட அதிகாரிகள் பாதுகாப்பு அளித்தார்களா?

அரசாங்கத்தின் எந்த மட்டத்தைச் சேர்ந்த எவருக்கு என்ன துல்லியமாக தெரியும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் 9/11 மூலம் புஷ் நிர்வாகத்திற்கு கிடைத்த பயன்கள் மறுக்க முடியாதவை. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் கொள்கைகள் இரண்டிலும் அமெரிக்க பொதுமக்களது கருத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்ற சுழலும் அச்சாணியாக அது பயங்கரவாதிகள் தாக்குதலை பயன்படுத்தியது. 9/11 நடைபெறாமல் இருந்திருக்குமானால், மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் அரசாங்கம் இராணுவத் தலையீடுகளில் ஈடுபட முடியாமல் போயிருக்கும் மற்றும் இதற்கு முன்கண்டிராத குடிஉரிமைகள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு இயலாமல் போயிருக்கும்.

போனிக்ஸ் குறிப்பு

அமெரிக்காவிற்குள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னோடி நிறுவனமான FBI வெளியிட்டுள்ள உள் அறிக்கை அந்த அமைப்பு வரவிருக்கின்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான முக்கியமான சமிக்கைகளை புறக்கணித்தது அல்லது தவறவிட்டுவிட்டது என்பதை அனைவருக்கும் தெரிந்த மூன்று சம்பவங்கள் மூலம் விளக்குகிறது. அதில் இரண்டு சம்பவங்கள் உள்ளூர் FBI அதிகாரிகள் வெளியிட்ட சந்தேகங்கள் புறக்கணிக்கப்பட்டன அல்லது FBI தலைமை அலுவலகத்தினால் அடக்கப்பட்டது. மூன்றாவது சம்பவத்தில், CIA FBI அதிகாரிகளின் உறுதியான உதவியோடு திட்டமிட்டு FBI இற்கு தகவலே தெரியாமல் மறைத்துவிட்டது.

முதலாவது சம்பவம் 2001 ஜூலை 10ல் அரிசோனாவில் உள்ள போனிக்ஸில் பணியாற்றிய ஒரு FBI அதிகாரி கென்னத் வில்லியம்ஸ், அனுப்பிய மின்னறிக்கை (Electronic Memo) அதில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளோடு தொடர்புகளை வைத்துக்கொண்டிருக்கின்ற பல மாணவர்கள் உள்ளூர் விமான ஓட்டும் பயிற்சிப் பள்ளிகளில் சேர்ந்திருக்கிறார்கள், நாடு முழுவதும் இதே வகையில் இவர்கள் சேர்ந்திருக்கிறார்களா என்பதை விசாரணை செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரி ஆலோசனை கூறியிருந்தார்.

இரண்டாவது FBIஇன் பதில் நடவடிக்கை பற்றியது மின்னியாபொலிஸ் பகுதி விமானப்பயிற்சி பள்ளியில் போயிங் 747 விமானத்தை ஓட்டுவதற்கான பயிற்சி பெறுவதற்கு முயற்சியை மேற்கொண்ட பின்னர் குடிவரவு மற்றும் குடிமக்கள் பதிவு சேவை அலுவலகம் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி ஷகாரியஸ் மொவுஸ்ஸவியை (Zaccarias Moussaoui) சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தது. மொவுஸ்ஸவி 2001 ஆகஸ்ட் தொடக்கத்தில் குடிவரவு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டார். ஆனால் மின்னியாபொலிஸ் அதிகாரிகள் ஒரு புலன் விசாரணையை பின்தொடர்வதை FBI தலைமை அலுவலகம் தடுத்தது, அது நடைபெற்றிருக்குமானால் அமெரிக்க விமானப் பள்ளிகளிலிருந்த இதர அல்கொய்தா செயல்பாட்டாளர்களை அடையாளம் கண்டிருக்க முடியும்.

மூன்றாவது வழக்கு காலித் அல்-மிதார் மற்றம் நவாப் அல்-ஹாஸ்மி, 9/11ல் பென்டகனை தாக்கிய அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் 77-ஐ கடத்தியதில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் என்று நம்பப்படுகிறது. அவர்களது அல்-கொய்தா தொடர்புகள் காரணமாக CIA இன் கண்காணிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்த அவர்கள் இருவரும் கலிபோர்னியாவிலுள்ள சாண்டியாகோவில் ஓர் ஆண்டு அல்லது அதற்கு மேலாக பகிரங்கமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அமெரிக்காவில் இருப்பதை அவர்கள் அமெரிக்கா வந்து 20 மாதங்களுக்கு பின்னர் ஆகஸ்ட் 27, 2001 மற்றும் செப்டம்பர் 11 இற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் FBI இற்கு CIA தகவல் தந்தது.

போனிக்ஸ் குறிப்பு (FBI வார்த்தைகளில் மின் தொடர்பு அல்லது EC என்று அழைக்கப்படும்) தொடர்பான அத்தியாயத்தில் உயர்மேற்பார்வையாளர் அறிக்கை அந்த ஆவணம் FBI தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த ஆறு பேர் மற்றும் நியூயோர்க் பிரிவைச் சேர்ந்த இரண்டு பேருடைய கவனத்திற்கு அனுப்பப்பட்டது என்பதை அம்பலப்படுத்துகிறது. இந்த தகவல்களை பெற்றுக்கொண்டவர்கள் ஒசாமா பின்லேடன் குழுவை சேர்ந்தவர்களும், தீவிரவாத அடிப்படைவாத பிரிவைச் சார்ந்த தலைமை உறுப்பினர்களும் அடங்குவர், இந்தப் பிரிவு அல்-கொய்தாவோடு நேரடியாக தொடர்பில்லாத இஸ்லாமிய தீவிரவாதிகளை புலனாய்வு செய்கின்ற ஒரு தனி அதிகாரிகள் குழுவாகும்.

EC யை பெற்றுக்கொண்ட எந்த அதிகாரியும் கடுமையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. பலர் அதைப் படிக்கவேயில்லை. இப்படி செயல்படாமலும், கவனம் செலுத்தாமலும் இருந்ததற்கு காரணம் 2001 கோடைக் காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வசதிகள் இல்லாததுதான் என்று அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, 2001ல் பின்லேடன் பிரிவில் ஒரே ஒரு ஆராய்ச்சி ஆய்வாளர்தான் FBIல் இடம்பெற்றிருந்தனர், அவரும் 2001 ஜூலையில் மற்றொரு பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

ஒரு FBI அதிகாரி, போனிக்ஸ் ECஐ அனுப்பியவர் பதிலளிக்கும்போது அமெரிக்காவின் அரபு நாட்டவர் விமானம் ஓட்டும் பயிற்சி பெறுவதில் எந்த பெரிய இரகசியமும் இல்லை என்று குறிப்பிட்டார். (என்றாலும் வில்லியம்ஸின் கவலை, ''அரபு மக்கள்'' பற்றியது அல்ல, ஆனால் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளோடு சம்மந்தப்பட்டிருக்கும் தனிமனிதர்கள் அமெரிக்க இலக்குகள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு நியாயப்படுத்துபவர்கள் பற்றித்தான்.) FBIன் நியூயோர்க் அலுவலகம், பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளில் முன்னணி பங்கு வகிப்பது, விமானப் பயிற்சிப் பள்ளி தொடர்பாக ஆழமான ஆய்வு நடத்த வேண்டும் என்ற வில்லியம்ஸின் முன்மொழிவை அப்பட்டமாக புறக்கணித்து விட்டன.

உயர்மேற்பார்வையாளர் அறிக்கை தற்செயலாக போனிக்ஸ் EC வந்த நேரத்திலேயே ஏற்கனவே FBI கோப்புக்களில் விமானங்கள் மற்றும் விமானப் பயிற்சி பள்ளிகள் பற்றி கணிசமான தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அந்த அறிக்கையில் நான்கு உதாரணங்கள் காட்டப்பட்டிருக்கின்றன, அவற்றின் விளைபயன்கள் என்னவென்றால் மேலும் பல முன் உதாரணங்களை தர முடியும் என்பதுதான்.

அந்த உதாரணங்களில் ஒன்று: ''1998 ஆகஸ்டில், அடையாளம் கண்டுகொள்ள முடியாத அராபியர்கள் வெடிப்பொருள்கள் ஏற்றப்பட்ட விமானத்தை லிபியாவிலிருந்து பறந்து வந்து உலக வர்த்தக மையத்தை தாக்கவிருக்கிறார்கள் என்று கூறப்பட்ட ஒரு திட்டம் FBI இன் நியூயோர்க் பிரிவிற்கு ஒரு புலனாய்வு அமைப்பு அனுப்பியது.''

இதற்கு முன்னர் செய்தியாக வெளியிடப்படாத இந்த எச்சரிக்கை புஷ் நிர்வாக அதிகாரிகள் குறிப்பாக கொண்டலிசா ரைஸ் அடிக்கடி எவரும் விமானத்தை கடத்தி அதையே ஒரு பறக்கும் குண்டாக அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்தியிருக்க முடியும் என்று ''கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது'' என்று கூறுவது நேரடியாக முரணாக உள்ளது.

மொவுஸ்ஸவியின் வழக்கு

மொவுஸ்ஸவி பற்றிய ஒரு அத்தியாயம் முழுவதும் 115 பக்கங்களைக் கொண்ட நீண்ட பகுதியாகும், அது மொவுஸ்ஸவி மீதான பயங்கரவாத வழக்கு விசாரணையில் மத்திய நீதிபதி பிறப்பித்த கட்டளையை தொடர்ந்து சென்ற வாரம் பிரசுரிக்கப்பட்ட விவரத்தின் மறு பதிப்பாகும். அந்த அறிக்கையின் பிற பகுதிகளில் மொவுஸ்ஸவி பற்றிய சில குறிப்புக்களும் இடம்பெற்றிருக்கின்றன.

மொவுஸ்ஸவி தண்டிக்கப்பட்ட பின்னர், மீண்டும் உருவாக்கப்படும் அத்தியாயத்தை கொண்டு தான் இந்தக் கதையின் முழு ஆய்வை நடத்த முடியும். ஆனால் இந்த நிலவரத்தின் சுருக்கம் என்னவென்றால் மின்னியாபொலிசைச் சேர்ந்த FBI அதிகாரிகள் மொவுஸ்ஸவியின் கம்பியூட்டர் உட்பட மேலும் புலன் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கேட்டனர், அதே நேரத்தில் FBI தலைமை அலுவலகத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு சட்டத்தின் (FISA) படி அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து ஒரு அனுமதியை பெறவேண்டிய அவசியத்தை மேற்கோள்காட்டினர். மேற்பார்வையாளர்கள் நீதிமன்றத்தின் நிபந்தனைகளை இந்த வழக்கு நிறைவேற்றுவதாக இல்லை என்று கூறி FISA அனுமதிக்கு மனுச் செய்ய மறுத்தனர்.

உயர் அதிகாரியின் அறிக்கையில் ஒரு பகுதியில் ஒரு தலைமை FBI வக்கீலின் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ''தலைமை அலுவலகத்திலுள்ள ஒரு மேற்பார்வை சிறப்பு அதிகாரி ஒரு FISA அனுமதியை பெற முடியாது என்று மிகப் பிடிவாதமாக இருந்ததையும், அதே நேரத்தில் ஒரு கிளை அலுவலகம் அத்தகைய அனுமதியை பெற்றுவிட முடியும் என்று பிடிவாதமாக இருந்ததையும் தான் எப்போதும் பார்த்ததில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார். மின்னியாபொலிஸ் FBI அலுவலகம் ஒரு "விரைவுபடுத்தப்பட்ட FISA வை'' பெற விரும்பியது, அவை ''வழக்கமாக சந்தேகத்திற்குரிய உடனடி தாக்குதல் அல்லது இதர உடனடி ஆபத்து சம்மந்தப்பட்ட அறிக்கைகளாகும்.''

FBI கண்காணிப்பாளர்கள் மொவுஸ்ஸவி மீதான நடவடிக்கையை தடுத்துக்கொண்டிருந்த நேரத்திலேயே, மின்னியாபொலிஸில் பணியாற்றி வந்த ஒரு CIA தொடர்பு அதிகாரி அவரது கைது பற்றி CIA இற்கு தகவல் தந்தார். CIA இயக்குனர், ஜோர்ஜ் டெனட்டிற்கு இந்த விவகாரம் தொடர்பாக சுருக்கமாக தகவல் தரப்பட்டது.

ஆகஸ்ட் இறுதி வாக்கில், பிரெஞ்சு புலனாய்வு அதிகாரிகள் அமெரிக்க அரசாங்கத்திற்கு மொவுஸ்ஸவியின் இஸ்லாமிய அடிப்படைவாதி குழுக்களோடு நிலவிய தொடர்புகள் பற்றி தகவல் தந்தனர், ஆனால் அப்போதும் FBI எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடியேற்ற விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட மொவுஸ்ஸவி, செப்டம்பர் 11 வரை குடியேற்ற மற்றும் குடிமக்கள் துறையிலிருந்து, FBI இன் காவலுக்கு மாற்றப்படவில்லை.

சான்டியாகோ விமானக்கடத்திகள்

FBI உயர் அதிகாரியின் அறிக்கையில் மிகவும் கண்டனத்திற்குரிய பகுதி 9/11 விமானக்கடத்திகளில் இருவரான காலித் அல் மிதாரும் நவாப் அல் ஹாஸ்மியும் சான்டியாகோ பகுதியில் 2000 மற்றும் 2001ல் கூடுதலாக வாழ்ந்து கொண்டிருந்தது பற்றியதாகும். அந்த காலகட்டத்தில் ஐந்து சம்பவங்களை அந்த அறிக்கை விரிக்கிறது. அப்போது FBI அங்கிருப்பது பற்றியும், அவர்களது நோக்கம் பற்றியும் அறிந்திருக்க முடியும் அல்லது அறிந்திருக்க வேண்டும்.

அந்த இருவரும் 2000 ஜனவரி 15ல் தாய்லாந்திலுள்ள பாங்கொக்கிலிருந்து விமானத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு பறந்து வந்தனர். மலேசியாவில் 2000 ஜனவரி 5ல் நடைபெற்ற அல்-கொய்தா உளவாளிகளின் கூட்டத்தில் மிக்தார் பங்கெடுத்துக் கொண்டார், பெயர் குறிப்பிடப்படாத ஒரு புலனாய்வு சேவை அவரையும் மற்றவர்களையும் புகைப்படம் எடுத்தது. அந்தப் புகைப்படங்கள் CIA இற்கு வழங்கப்பட்டன.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு தனியாக ஹாஸ்மி மிக்தாரின் ஒரு நண்பர் என்று அடையாளம் காட்டியது. மலேசியாவிலிருந்து தாய்லாந்திற்கு பயணம் செய்த CIA இந்த இருவரது நடமாட்டத்தையும் கண்டுபிடித்தது.

மிக்தாரின் பயணம் பற்றியும் அவரது சவுதி கடவுச்சீட்டுடன் அவர் ஒரு அமெரிக்க விசா வைத்திருந்தார் என்பதையும் அந்த நேரத்தில் அனுப்பப்பட்ட CIA தந்திகளில் விவாதிக்கப்பட்டது. கண்காணிப்பு மிகத்தீவிரப்படுத்தப்பட்டதுடன் கடவுச்சீட்டின் மற்றும் விசா முத்திரையின் புகைப்படபிரதியை புலனாய்வு அதிகாரிகள் பெற்றனர் மற்றும் வெர்ஜினியாவிலுள்ள லேங்கிலேவில், CIA தலைமை அலுவலகத்திற்கு அவற்றை தாக்கல் செய்தனர். இரண்டு மாதங்களுக்கு பின்னர், பாங்கொங்கிலுள்ள CIA அலுவலகம் மிக்தாருடன் பயணம் செய்த கூட்டாளி ஹாஸ்மி என்று அடையாளம் காட்டியது மற்றும் அவர் பாங்கொங்கிலிருந்து லொஸ் ஏஞ்சல்சிற்கு 2000 ஜனவரி 15ல் பயணம் செய்தனர் என்றும் தகவல் தந்தது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக FBIயிடமிருந்து இந்த மிகவும் ஆபத்தான மிக்தார் மற்றும் ஹாஸ்மி பற்றிய தகவல் மறைக்கப்பட்டது. மலேசியாவில் கூட்டம் நடந்தவுடன் FBIக்கு அது பற்றிய தகவல் தரப்பட்டதுடன் அந்தக் கூட்டத்தில் மிக்தர் கலந்து கொண்டது பற்றி தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரது கடவுச்சீட்டில் பன்முக நுழைவு அமெரிக்க விசாக் குறிப்பு இடம்பெற்றது என்பது பற்றிய தகவல் இல்லை, அப்படிப்பட்ட ஒரு குறிப்பு அவர் அமெரிக்க எல்லையில் எளிதாக நுழைவதற்கு வழி செய்யும், அங்கு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு பிரதான பொறுப்பு வகிப்பது FBI தான். அல்லது CIA ஹாஸ்மி அமெரிக்காவில் நுழைந்துவிட்டார் என்ற தகவலை FBIஇற்கு தெரிவிக்கவில்லை, அப்படி செய்திருந்தால் அதனால் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள். CIAயும் அவர்கள் இருவரையும் பாதுகாப்பு கவனிப்பு பட்டியலிலும் சேர்க்கவில்லை.

லொஸ் ஏஞ்சல்சிற்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பின்னர், மிக்தாரும் ஹாஸ்மியும் தங்களது புதிய அறிமுகமான ஒமர் பயோமி வற்புறுத்தலால் சாண்டியாகோவிற்கு சென்றனர், ஒமர் பயோமி ஒரு காலத்தில் FBI கண்காணிப்பில் இருந்து வந்தார் மற்றும் சவுதிஅரேபிய சேவையின் ஒரு முக்கிய அதிகாரி என்று நம்பப்படுகிறது. புதிதாக வந்த சவுதி அரேபியாக்காரர்களையும், அவர் சாண்டியாகோவிற்கு அழைத்தார், அங்கு அவர் வாழ்ந்த வளாகத்தின் மாடிக் குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டனர். அந்த அடைமான பத்திரத்தில் பயோமியும் கூட்டாக கையெழுத்திட்டார், அவர்கள் இருவரும் பணம் மட்டுமே வைத்திருந்ததால் அவர்களுக்காக ஒரு காசோலையையும் எழுதினார்.

2000 மேயில், அந்த இருவரும் மற்றொரு சான்டியாகோ நபரிடமிருந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர், அவர் ஒரு FBI உளவாளி எனவே அவர்கள் வருகையையும் பெயரையும் மேலதிகாரிக்கு தெரிவித்தார். ஆனால் அந்த மேலதிகாரி அவர்களது முழுப்பெயர்களையும் தெரிந்துகொள்வதிலோ அல்லது வேறு எந்த விவரங்களை தெரிந்துகொள்வதிலோ அக்கறை செலுத்தவில்லை.

உயர் மேலதிகாரியின் அறிக்கையில் அந்த தகவல் அனுப்பியவரது பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பத்திரிகை தகவல்களின்படி சவுதி அரேபியாவிலிருந்து குடியேறிய மற்றொருவரான அப்தஸ்சத்தார் ஷேக் என்று குறிப்பிடப்பட்டிருந்தது (ஷேக்கும், அவருடைய FBI மேலதிகாரியும் தற்போது ஓய்வு பெற்றுவிட்டனர், 9/11 ஐ தொடர்ந்து FBI ஏற்பாடு செய்த விசாரணையில் FBI இன் உயர் மேலதிகாரியிடம் பேசுவதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர், இது ஒரு குறிப்பிடத்தக்க சூழ்நிலையாகும். இது அந்த அறிக்கையில் அடிக்குறிப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது மற்றும் விளக்கம் எதுவும் தரப்படவில்லை).

ஹாஸ்மி மற்றும் மிதாரின் நடவடிக்கைகளை அவர்கள் பாதுகாத்தார்கள் மற்றும் அதை அறிந்தே இருந்தார்கள் என்பதை வலுவாக எடுத்துக்காட்டுகின்றன. அவர்கள் தங்களை ஒரு தலைமறைவு சதிகாரர்களாக காட்டிக்கொள்ளவில்லை, உலகின் மிகவும் சக்திவாய்ந்த உளவு அமைப்பிற்கு ஒருபடி மேலே செல்ல அவர்கள் முயலவில்லை, ஆனால் தங்களது பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொண்டார்கள்.

FBI அறிக்கையின்படி: ''அவர்கள் தங்களது அடையாளங்களை மறைக்க முயலவில்லை. தங்களது பயண ஆவணங்களில் கண்டுள்ள அதே பெயர்களைத்தான் பயன்படுத்தினர் மற்றும் அவை புலனாய்வு சமுதாயத்தில் குறைந்தபட்சம் சிலருக்கு தெரியும், ஒரு மாடிக் குடியிருப்பை அவர்கள் வாடகைக்கு எடுத்தனர், கலிபோர்னியா மாகாண மோட்டார் வாகனத் துறையிலிருந்து ஓட்டுனர் உரிமங்களை பெற்றனர், வங்கிக் கணக்குகளை திறந்தனர் மற்றும் வங்கியின் கிரெடிட் கார்டுகளை பெற்றனர், பயன்படுத்தப்பட்ட ஒரு வாகனத்தை வாங்கினர். மற்றும் கார் காப்பீட்டை பெற்றனர், உள்ளூர் விமானப் பயிற்சிப் பள்ளியில் விமானம் ஓட்டும் பயிற்சிகளை பெற்றனர், மற்றும் உள்ளூர் தொலைபேசி இணைப்பை பெற்றனர் உள்ளூர் தொலைபேசி விவரக் குறிப்பில் ஹாஸ்மியின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.''

ஹாஸ்மி மற்றும் மிதாரின் நடவடிக்கைகள் விவரமாக வெளியிடப்படுவது இப்போதுதான் முதற்தடவை அல்ல என்றபோதிலும், இந்த பந்தியை வாசிக்கும்போது ஒருவர் தனது கண்களை கசக்கிக்கொண்டுதான் பார்க்கவேண்டியுள்ளது. அவர் Yellow Pages இல் நான் ஒரு பயங்கரவாதி என்று பயங்கரவாதிகளின் பிரிவில் விளம்பரம் கொடுத்திருப்பாரானால் தன்னைப்பற்றி வெளிப்படையாக அறிவித்திருக்கலாம். ஆனால் CIA அவர் யார் என்று அறிந்திருந்தும் FBI க்கு அவரைப் பற்றி தகவல் தரவில்லை.

2000 ஜூனில், மிக்தார் அமெரிக்காவை விட்டு சென்றுவிட்டார், 2001 ஜூலை 4 வரை அவர் அமெரிக்கா திரும்பவில்லை. அன்றைய தினம் அவர் நியூயோர்க் நகரிலுள்ள ஜோன் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். மேலும் பல மாதங்கள் சான்டியாகோவில் ஹாஸ்மி வாழ்ந்தார், அதற்கு பின்னர் அவர் போனிக்ஸ் சென்றார் மற்றும் இறுதியாக கிழக்குக் கடற்கரை பக்கம் சென்றுவிட்டார்.

USS Cole 2000 டிசம்பரில் குண்டு வீசித் தாக்கப்பட்டதை தொடர்ந்து மிதார் மீதும் ஹாஸ்மி மீதும் மீண்டும் அக்கறை கிளம்பியது. Cole தாக்குதலில் சம்மந்தப்பட்ட முன்னணித் தலைவர்களில் ஒருவர் 2000 ஜனவரியில் மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்று ஒரு அமெரிக்க புலனாய்வு வட்டாரம் அடையாளம் காட்டியதும், இந்த புலன் விசாரணைக்கு பொறுப்பேற்றுள்ள முன்னோடி நிறுவனமான FBI அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரை பற்றியும் புலன் விசாரணை செய்யத் தொடங்கியது.

என்றாலும், 2001 ஜனவரியிலும் மற்றும் 2001 மே மற்றும் ஜூன் மாதங்களிலும் நடைபெற்ற விவாதங்களில் CIA அதிகாரிகள் FBI இற்கு மிக்தார் பற்றி சொல்லவில்லை. Cole குண்டு வீச்சுத் தாக்குதலை ஏற்பாடு செய்ததாக சந்தேகிக்கப்படுபவரோடு சம்மந்தப்பட்டிருப்பதாக தற்போது தெரியவந்துள்ள மிக்தார் ஒரு அமெரிக்க விசா வைத்திருந்தார் என்றோ அல்லது ஹாஸ்மி மிக்தாரின் நண்பர் அமெரிக்காவில் நுழைந்திருக்கிறார் என்றோ CIA அதிகாரிகள் FBI யிடம் தெரிவிக்கவில்லை.

இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களில் பல புரிந்துகொள்ள முடியாதவை, அதற்கு ஒரு பகுதிக் காரணம் அதிகாரத்துவ சிக்கல்கள், மற்றொரு பகுதி பெரும்பாலானவை திருத்தம் செய்யப்பட்டிருப்பது, இது மலேசியாவில் நடைபெற்ற கூட்டத்தை பற்றிய தகவல்களை கண்காணித்த புலனாய்வு அமைப்பின் நாடு எது என்று தெரிந்துவிடலாம் என்பதற்காக மறைக்கப்பட்டிருக்கிறது. (இஸ்ரேலின் Mossad என்கிற புலனாய்வு அமைப்பாக இருக்கக்கூடும்). உயர் அதிகாரியின் அறிக்கை மலேசியா, தாய்லாந்து, யேமன் பாதுகாப்பு சேவைகளை திருத்தமில்லாமல் வெளியிட்டிருக்கிறது.

CIA இறுதியாக 2001 ஆகஸ்ட் 27ல் மக்தார் மற்றும் ஹாஸ்மி பற்றி தனக்கு தெரிந்த தகவல்களை FBI இற்கு தந்தது, FBI சுதந்திரமாக அதைக் கண்டுபிடித்த ஐந்து நாட்களுக்கு பின்னர் இந்தத் தகவலை தந்தது, ஆகஸ்ட் 22ல் மிக்தார் அமெரிக்காவில் இருக்கக்கூடும் என்றும், மற்றும் FBI தனது சொந்த புலன் விசாரணையை தொடக்கிய பின்னர் CIA இந்த தகவலை தந்தது. நியூயோர்க்கிலுள்ள FBI அலுவலகத்திற்கு தகவல் தரப்பட்டது, ஆனால் இந்தப் பணி மிக்தாரை கண்டுபிடிப்பதை முன்பயிற்சியில்லாத ஒரு புலனாய்வு ஏஜண்டிற்கு முதலாவது விசாரணைக்கு தரப்பட்ட குறைந்த முன்னுரிமையை காட்டுகிறது. அமெரிக்கன் ஏர்-லைன்ஸ் ஜெட் விமானத்தில் அந்த இருவரும் செப்டம்பர் 11ல் ஏறிய பின்னர்தான் மிக்தாரையும், ஹாஸ்மியையும் கண்டுபிடிப்பதற்கான அரைகுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

CIA மூடிமறைப்பின் குறிகாட்டிகள்

FBI உயர் அதிகாரியின் அறிக்கை முதல் தடவையாக அம்பலப்படுத்துவது என்னவென்றால் CIA மிக்தார் நடவடிக்கை குறித்து FBI இற்கு தகவல் தர தவறியது மட்டுமல்லாமல் CIA நடத்துகின்ற பயங்கரவாதத்திற்கு- எதிர்ப்பு மையத்தை (CTC) ஒரு FBI ஏஜண்ட் அனுப்பிய ஒரு குறிப்பை மூடிமறைப்பதற்கு CIA அதிகாரிகள் தலையிட்டனர், அது FBI இற்கு ஒரு அமெரிக்க விசாவுடன் ஒரு பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படுபவர் நடமாட்டத்தை அறிவிக்க விரும்பினார். FBI அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பாக தந்துள்ள விவரக் குறிப்புக்கள் CIA மூடிமறைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கையின் விளைபயன்களை வலுவாக எடுத்துக்காட்டுகின்றன.

FBI ஏஜண்ட் பெயர் ''Dwight'' என்று உயர் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. அவர் மலேசியக் கூட்டம் நடைபெற்ற சில மணி நேரத்திற்கு பின்னர் 2000 ஜனவரி 5ல் மத்திய புலனாய்வு அறிக்கை (CIR) குறிப்பைத் தயாரித்தார், "Michelle'' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ஒரு CIA அலுவலக அதிகாரி அதே நாளில் அவரது மேற்பார்வை அதிகாரியிடமிருந்து வந்த கட்டளையை அனுப்பினார், அதில் மத்திய புலனாய்வு அறிக்கையை FBI இற்கு அனுப்பப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மூன்று மணி நேரத்திற்கு பின்னர் "Michelle" ஒரு CIA இற்குள் விடப்படும் தந்தியை எழுதி அதை சுற்றுக்கு விட்டார். அது அமெரிக்காவின் பன்முக நுழைவு விசா பெற்றிருக்கிறார் என்பது உட்பட மிக்தார் பற்றிய தகவலை சுருக்கமாக எடுத்துரைத்தது. இந்தத் தந்தி அவரது பயண ஆவணங்கள் பிரதி எடுக்கப்பட்டு மேலும் புலன் விசாரணைக்காக FBI இற்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தது. இது ஒரு பொய், அதை பின்னர் CIA மிக்தார் பற்றி FBI இற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று தனது ஆரம்ப நிலை கூற்றை நிருபிப்பதற்காக பயன்படுத்தியது.

இந்த தந்தி ஒரு அப்பாவித்தனமான அறியாமையில் நடந்த தவறாக இருக்க முடியாது, ஏனென்றால் அந்தத் தந்தியை தயாரித்தவர் ''Dwight''ற்கு ஏற்கனவே அனுப்பிய கட்டளையில் அவரது குறிப்பு FBI இற்கு அனுப்பப்படக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். உயர் அதிகாரி கேள்விகளுக்கு CIA அல்லது FBI ஐ சேர்ந்த எவரும் ''Michelle'' அனுப்பிய தந்தியில் கூறப்பட்டிருந்த CIA மிக்தார் பற்றி FBI இக்கு தகவல் தந்துவிட்டது என்ற கூற்றை ஏற்றுக்கொள்வதாக சாட்சியமளிக்கவில்லை. இந்தக் கூற்று CIA நடைமுறையில் செய்துகொண்டிருப்பதற்கு நேரடியான எதிரான நடவடிக்கையாகும்.

உயர் அதிகாரியின் அலுவலகத்திலிருந்தே ''Dwight'' குறிப்பு 2000 ஜனவரியில் இருப்பது பற்றி CIA ஆரம்பத்தில் தகவல் தர மறுத்தது என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''என்றாலும் 2004 பிப்ரவரியில் CIA இற்கு அனுப்பப்பட்டிருந்த FBI ஊழியர்கள் பார்த்த CIA ஆவணங்களின் ஒரு பட்டியலை நாங்கள் மறு ஆய்வு செய்துகொண்டிருந்தோம் அப்போது இந்த மறு ஆய்விற்கு ஏற்புடைய ஒரு தலைப்பை கொண்ட ஒரு ஆவணத்தை நாங்கள் பார்த்தோம். இதற்கு முன்னர் இந்த ஆவணம் எங்களுக்கு காட்டப்படவில்லை. CIA OIG (உயர் அதிகாரி அலுவலகம் அதன் ஆய்விற்காக இந்த ஆவணத்தை முன்னர் பெற்றிருக்கவில்லை. மத்திய புலனாய்வு அறிக்கை (CIR) என்றழைக்கப்படும் இந்த ஆவணத்தை நாங்கள் பெற்றோம். இந்த ஆவணம் FBI இக்கு மிக்தார் பற்றிய பயண விவரங்களையும், அவரிடம் அமெரிக்க விசா இருப்பதையும் காட்டியது. இந்த முக்கியமான புதிய ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாக பின்னர் நாங்கள் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்னர் இந்த ஆவணங்கள் FBIக்கு அனுப்பப்படவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்தோம். (கீழே தரப்பட்டுள்ள பிரிவு 111-ல் A4 ஐ பார்க்கவும்) அதற்கு பின்னர் நாங்கள் பல FBI மற்றும் CIA ஊழியர்களிடம் மீண்டும் நேர்முக விசாரணைகள் மேற்கொண்டு CIA இடமிருந்து கூடுதல் ஆவணங்களை பெற்றோம். இந்த CIA ஆவணம் காலங்கடந்து தாமதமாக கிடைத்ததால் எங்களது மீளாய்வு பூர்த்தி செய்வது தாமதமாயிற்று.``

இங்கேயுள்ள ஆத்திரமுள்ள தொனி தெளிவானது. முதலில் CIA, FBI இடமிருந்து அந்த ஆவணங்களை மறைத்தது மற்றும் அதற்குபின்னர் FBI இன் இறுதி விசாரணையில் அத்தகைய ஆவணம் எதுவுமில்லை என்று மறைக்க முயன்றது.

இப்படி மூடிமறைப்பது ஒரு வேடிக்கையான தொற்றுநோயான நினைவாற்றல் மறதியை தொடர்ந்து வந்திருக்கிறது. அந்த குறிப்பை தயாரித்த ''Dwight'' உட்பட எவருமே அந்தக் குறிப்பை பார்த்ததாகவோ, பெற்றதாகவோ நினைவுபடுத்த முடியவில்லை.

இதில் சம்மந்தப்பட்ட எல்லா தனிமனிதர்களையும் நாங்கள் பேட்டி கண்டபோது CIR பற்றி எவருமே எதுவும் தெரியாது என்று வலியுறுத்திக் கூறினர். மிதார் பற்றி எந்தத் தகவலும் தனக்கு தெரிந்ததாகவோ, CIRஐ தயாரித்ததாகவோ, அதை தானே சொந்த முயற்சியில் அல்லது மேலதிகாரி கட்டளையில் தயாரித்ததாகவோ நினைவில் இல்லையென்று கூறினார். CIRஐ முடிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது பற்றியோ மற்றும் CIR அனுப்பப்பட்டது பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது என்று உயர் அதிகாரியிடம் கூறினார். ஹாஸ்மி பற்றியோ, மிதார் பற்றியோ தனக்கு வந்த தந்தி பற்றி ஆய்வு எதுவும் மேற்கொண்டதாக தனக்கு நினைவுபடுத்த முடியவில்லை என்று மால்கம் கூறினார். Eric உயர் அதிகாரியிடம் கூறும்போது CIR ஐ தன்னால் நினைவுபடுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

''CIA ஊழியர்களும்கூட CIR ஐ தாங்கள் நினைவுபடுத்த முடியவில்லை என்று தெரிவித்தனர். FBI தலைமை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள CIA ஊழியரான ஜேம்ஸ் நமக்கு பேட்டியளிப்பதற்கு மறுத்துவிட்டார். அவர் CIA இன் உயர் அதிகாரிக்கு பேட்டியளித்தபோது CIR பற்றி தான் தனக்கு நினைவில்லை என்று கூறினார். ஜோன் (பின்லேடன் பிரிவின் துணை தலைமை அதிகாரி) மற்றும் இந்த பிரச்சனையை கவனித்து வந்த அதிகாரியான Michelle இருவரும் CIR பற்றி தங்களுக்கு நினைவில்லை என்று கூறினர். அது வெளியிடப்படாதது பற்றியோ, அது ஏன் FBI இற்கு அனுப்பப்படவில்லை என்பது பற்றியோ தமக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் கூறினர்.''

இதில் நம்பகத்தன்மை எதுவுமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்களில் எவருக்கும் எதுவும் நினைவில் இல்லை, ஒருவர் பேட்டியளிக்கவே மறுத்திருக்கிறார். அது சாதாரண அற்பமான விவகாரமல்ல, ஆனால் 9/11ல் விமானங்களை கடத்திய 19 பேரில் ஒருவரைப் பற்றிய முக்கியமான தகவலாகும்.

அரசியல் நோக்குடனான மூடிமறைப்பு

இதற்கு முந்திய எல்லா அதிகாரபூர்வமான புலன் விசாரணைகளை போன்று 9/11 சம்பவங்களில் அரசு அமைப்பின் பங்கை மூடிமறைப்பதுதான் FBI உயர் அதிகாரியின் அறிக்கையாகும். இந்த விசாரணைகளின் ஒரு பொதுவான அம்சம் என்னவென்றால் பயங்கரவாத தாக்குதல்களில் அரசாங்கம் உடந்தையாக செயல்பட்டது என்பது தொடர்பான கேள்வியை முன்கூட்டியே நீக்கிவிடுவதுதான். மாறாக மாரடித்துக் கொண்டு ஒரே விதமான ஒப்பாரியை தவறு நடந்துவிட்டதாகவும், மெத்தனபோக்கு பற்றியும் கவனமில்லாத நிலை குறித்தும் போதுமான அளவிற்கு வசதிகள் இல்லாதது பற்றியும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பன்நோக்கு விளக்கமான தவறுகள் நடந்துவிட்டன என்பதில் எவருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. இவர்தான் பொறுப்பு என்று எவரும் குற்றம்சாட்டப்படவில்லை. எவரும் வெட்கப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை.

இதற்கு ஒரு திட்டவட்டமான காரணம் உண்டு. வாட்டர் கேட் மோசடி போன்றதொரு உணர்வை ஏற்படுத்த அமெரிக்க அரசாங்கம் விரும்பவில்லை. கீழ்மட்டத்தை சேர்ந்தவர்கள் தண்டிக்கப்படுவதால் அது மேல்மட்டத்தில் இருப்பவர்களை உடந்தையாக்கி மக்களது கவனம் உயர் நிர்வாகிகள் பக்கம் திரும்பிவிடும்.

அமெரிக்க புலனாய்வு அமைப்பின் ஒரு பிரிவினர் குறைந்தபட்சம் சில தற்கொலை விமானக் கடத்திகளுக்கு காவல் தெய்வங்களாக செயல்பட்டார்கள் என்பதில் எந்த வகையான கடுமையான சந்தேகமும் இருக்க முடியாது. இந்த கேள்வி; ஏன் என்பதாகும்?

9/11 குறித்து ஒரு நியாயமான சுதந்திர அமைப்பு அமெரிக்க இராணுவ புலனாய்வு அமைப்புகளிலிருந்து முற்றிலும் சுதந்திரமாக செயல்படுகின்ற அமைப்பு விசாரணை நடத்துகின்றவரை இந்த சம்பவங்களில் அரசாங்கத்தின் பங்களிப்பு பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறிவிட முடியாது.

ஆனால் ஒரு அரசியல் ஆய்வு என்று மட்டுமே பார்த்தால் 9/11 திடீரென்று இடிமின்னல்போல் தோன்றிவிடவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. எந்த குற்றப்புலன் விசாரணையிலும் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்படும்: இதனால் யார் பயனடைந்தார்கள்? அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் செல்வாக்கு மிக்க வலுவான பிரிவுகளும் அதன் அரசு நிர்வாகமும் அமெரிக்க மண்ணில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடக்கும் என்று எதிர்பார்த்தனர், அதை விரும்பினர். பொதுமக்களிடையே அச்ச உணர்வையும், தேசபக்தி உணர்வையும் உருவாக்கி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தீவிரமான அரசியல் பிற்போக்குத்தனத்தை செயல்படுத்த தேவையான சூழ்நிலையை உருவாக்க உதவினர்.

9/11 நடந்திராவிட்டால் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்திருக்காது. அமெரிக்க இராணுவத்தை உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தின் நடுப்பகுதியில் நிறுத்தியிருக்காது. 9/11 நடந்திராவிட்டால் மத்திய ஆசியா முழுவதிலும் அமெரிக்க இராணுவத்தளங்கள் ஏற்பட்டிருக்க முடியாது. அவை இப்போது உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் எரிவாயு வளங்களை காத்து வருகின்றன. 9/11 நடந்திராவிட்டால், புஷ் நிர்வகம் அரசியலில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியாமல் போயிருக்கலாம். ஏனென்றால் சீர்குலைந்து வருகின்ற ஒரு பொருளாதாரம் மற்றும் கோடீஸ்வரர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வரிவெட்டிற்கு பரவலான எதிர்ப்பு மற்றும் கிறிஸ்துவ வலதுசாரி அடிப்படைவாதிகளை திருப்திபடுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு தோன்றியுள்ள எதிர்ப்பை சமாளித்து அரசியலில் தன்னை நிலைநாட்டிக் கொண்டிருக்க முடியாது.

ஜனநாயகக் கட்சி இதில் ஆழமாக உடந்தையாக செயல்பட்டு வருகிறது, ஈராக் போரிலும் 9/11 தாக்குதல்களில் அரசின் பங்கை மூடிமறைப்பதிலும் உடந்தையாக செயல்பட்டு வருகிறது. கிளிண்டன் நிர்வாகம் 1998ல் ஈராக்குடன் ஒரு மோதலை தூண்டிவிட முயன்றது, அப்போது ஏற்பட்ட பொதுமக்களது எதிர்ப்பு காரணமாக மத்திய கிழக்கில் புதியதொரு போரிலிருந்து பின்வாங்கியது. அந்த எதிர்ப்பு செப்டம்பர் 11ஐ தொடர்ந்து தான் சமாளிக்க முடிந்தது. மேலும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கும், பின்லேடன் போன்ற இஸ்லாமிய பிற்போக்குவாதிகளுக்கும் இடையில் நிலவுகின்ற உறவு ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாக நீடிக்கின்ற, இதில் ஜனநாயக மற்றும் குடியரசுக்கட்சி நிர்வாகங்கள் சம்மந்தப்பட்டிருக்கின்றன.

அரசியல் பதவி செல்வாக்கு ஆகியவற்றில் தகராறுகள் தந்திரோபாய வேறுபாடுகள் நிலவினாலும் புஷ் நிர்வாகத்தின் அடிப்படைத் திட்டத்தை ஜனநாயகக் கட்சி ஏற்றுக்கொள்கிறது. ஜனநாயகக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருமானால் அவர்கள் ஈராக் அல்லது மத்திய ஆசியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக்கொள்ளமாட்டார்கள் அல்லது புஷ்ஷின் வரிவெட்டுக்களை இரத்து செய்யமாட்டார்கள் அல்லது அமெரிக்காவின் தேசபக்த சட்டத்தை இரத்து செய்யவோ அல்லது ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுப்பதை கைவிடமாட்டார்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved