World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: sacked Opel worker fights victimisation

ஜேர்மனி: பழிவாங்கலுக்கு எதிராக போராடியதற்காக ஓப்பல் தொழிலாளர்கள் வேலை நீக்கம்

By Wolfgang Weber and Andreas Kunstmann
15 June 2005

Back to screen version

ஆயிரக்கணக்கான வேலைகளை வெட்டுவது என்ற கம்பெனியின் திட்டங்களுக்கு ஜேர்மனியிலுள்ள பொக்கூம், ஓப்பல் தொழிற்கூடத் தொழிலாளர்கள் சென்ற அக்டோபரில் வெளிநடப்பு செய்தனர். வேலை நிறுத்தம் முடிவுற்ற பின்னர், ஜெனரல் மோட்டார்ஸின் ஒரு துணை நிறுவனமான ஆடம் ஓப்பல் AG, ரிச்சார்ட் கசோரோவிஸ்கி, மற்றும் டுர்கான் எர்சின் ஆகிய இரண்டு ஊழியர்களை உடனடியாக வேலை நீக்கம் செய்தது. எர்சின் பணிக் குழுவின் ஒரு உறுப்பினர். தாங்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து இரண்டு தொழிலாளர்களும் தனித்தனியாக செய்துகொண்ட முறையீடுகள் தற்போது பொக்கூம் இல் உள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டு வருகிறது.

அந்த வேலை நிறுத்தத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர், அதனால் பொக்கூம் இல் உள்ள ஓப்பல் தொழிற்கூடம் முழுவதும் முடக்கப்பட்டுவிட்டது. தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும் பரந்த அளவு ஆட்குறைப்பிற்கும் எதிராக நடைபெற்ற கண்டனத்தை ஓப்பலில் உள்ள இதர தொழிற்சாலைகளின் பரந்த ஊழியர்களும், பொது பொதுமக்களும் ஆதரித்தனர். எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு எதுவும் ஏற்படாமல், தொழிற்சங்கமும் பணிக்குழுவின் தலைமையும் இழிவான சூழ்ச்சிகளை பயன்படுத்தி பாரியளவிற்கு தொழிலாளர்கள் மீது அழுத்தங்களை கொண்டு வந்ததன் மூலம்தான் அவர்கள் அந்த வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முடிந்தது.

ஒரு முன் உதாரணத்தை உருவாக்க வேண்டும் என்றும், ஒட்டுமொத்த தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்காகவும், அந்த இரண்டு தொழிலாளர்களையும் தனிமைப்படுத்தி பின்னர் தன்னிச்சையாக நிர்வாகம் வேலையிலிருந்து நீக்கியது. டுர்கான் எர்சின் பணிக்குழு உறுப்பினராக இருப்பதால், அவரது பதவி நீக்கம் பணிக்குழு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்வதற்கான விதிமுறைகளை மீறுவதாக இருப்பதால் நிறுவனம் தொழிற்துறை தீர்பாயத்தின் மூலம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும், அந்த நடவடிக்கை சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. (``ஜேர்மனி: நீதிமன்றம் பழிவாங்கப்பட்ட ஓப்பல் தொழிலாளர் வழக்கை விசாரிக்கிறது`` என்ற கட்டுரையையும் காண்க)

இத்தோடு ஒப்புநோக்கும்போது, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக ரிச்சார்ட் கசோரோவிஸ்கிக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. அவர் பதவி நீக்கம் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ஓப்பலில் 24 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் ----அவற்றில் 18 ஆண்டுகள் கார் தயாரிப்பு அசெம்ளி லைனில் பணியாற்றிய பின்னர்----- திடீரென்று ஒரு நாள் அவர் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டார். முதல் மூன்று மாதங்களுக்கு அவருக்கு வேலையில்லாதோருக்கு வழங்கப்படும் சலுகைகளை ஜேர்மனியின் வேலைவாய்ப்பு அலுவலகம் மறுத்தது. அதற்குக் காரணம் ``அவரே அவரது பதவி நீக்கத்திற்கு காரணமாக செயல்பட்டார்`` என்று கூறிற்று. தான் பதவி நீக்கம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்பதை ஸ்தாபிப்பதற்காக அந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக தானே தனது சொந்த சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டி வந்தது.

மே 10-ல், Bochum-ல் உள்ள தொழிற்துறை நீதிமன்றம் அவரது வழக்கை விசாரிக்கத் தொடங்கியது, மாஜிஸ்திரேட் van der Leeden தலைமை வகித்தார். அந்த விசாரணைகளை கவனிப்பதற்கும் கசோரோவ்ஸ்கிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கும் குறிப்பிடத்தக்க கணக்கில் தொழிலாளர்கள் வந்திருந்தனர்.

உலகிலேயே மிகப்பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்றான பேக்கர் அன்ட் மெக்கன்சி LLP, சார்பில் Markus Kappenhagen ஓப்பலின் வக்கீலாக கலந்துகொண்டார், அவருடன் Bochum ஊழியர் குழுவை சார்ந்த Elmar Eising-கும் கலந்துகொண்டார். விசாரணையில் ஓப்பல் காசோரோவிஸ்கிக்கு கொடுத்த பதவி நீக்க முன்னறிவிப்பில் கூறிய அதே வாதங்களை எழுப்பியது. காசோரோவ்ஸ்கி பயமுறுத்தியதாகவும் (வன்முறை அச்சுறுத்தல் மூலம்) வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்துவதற்காக ஓப்பலின் பிற தொழிலாளர்களை மிரட்டியதாகவும் கம்பெனி வாதிட்டது.

காசோரொவிஸ்கியிடம் கேள்விகள் கேட்கப்பட்டன மற்றும் ஓப்பலிருந்து வந்த ஐந்து சாட்சிகளிடமும் நடைபெற்ற விசாரணை ஏறத்தாழ நான்கு மணி நேரம் நடந்தது. மாஜிஸ்திரேட் van der Leeden அன்றைய தினம் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து காசோரொவிஸ்கியை கேள்வி கேட்டதோடு விசாரணை தொடங்கியது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தான் எந்த அச்சுறுத்தலையும் பயன்படுத்தவில்லை என்று காசோரொஸ்கி தெளிவுபடுத்தினார்.

அப்படியிருந்தாலும், காசோரொஸ்கி சாட்சியம் முடிந்ததும், நீதிபதி ஓப்பலுடன் ஒரு சமரசத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு ஆலோசனை கூறினார். நிர்வாகம் ஒரு ''அடையாள பூர்வமான இழப்பீட்டை'' தர முன்வந்தால்கூட அது காசோரொஸ்கிக்கு நன்றாக அமையும் என்று Van der Leeden கூறினார்.

ஓப்பலின் வக்கீலான Kappenhagen இந்த வழக்கு நல்லதாகவும், காசோரொஸ்கிக்கு கெட்ட வழக்காகவும் தோன்றியது என்று கூறினார். மற்றும் ``இங்கே நாம் பேசிக்கொண்டிருப்பது நிர்பந்தம் கொடுக்கப்பட்டதை பற்றி, எனவே ஒரு அடையாளபூர்வமான இழப்பீடு சிக்கலாகிவிடும்`` என்றும் கூறினார். ஊழியர் குழுவிலிருந்து கலந்துகொண்ட Eising இழப்பீடு இல்லாமல் தான் ஒரு பேரத்திற்கு சம்மதிப்பதாக கோடிட்டுக்காட்டினார் மற்றும் அந்த விசாரணை ஓப்பலுக்கு முக்கியத்துவம் நிறைந்தது என்று கூறினார்.

என்றாலும், Van der Leeden, அப்போதும் இருதரப்பும் ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டும் என்று வலியுறுத்தினார் மற்றும், சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் ஒரு முன்மொழிவை இரண்டு மாற்றீடோடு முன்வைத்தார், அவை இரண்டுமே முன்னறிவிப்பு கொடுக்காமல் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அதற்குரிய முறையான முன்னறிவிப்பாக மாற்றுவது சம்மந்தப்பட்டவை. அதன்படி, ஒரு பதவி நீக்க முன்னறிவிப்பு 2004 அக்டோபர் 31-லிருந்து செயல்படத் தொடங்கும் அதன்படி ஓப்பலில் காசோரோஸ்கி பணியாற்றிய 25 ஆண்டுகால பணிக்கு மிகவும் வருந்தத்தக்க 20,000 யூரோக்களை ஆட்குறைப்பு இழப்பீடாக பெறுவார்.

ரிச்சார்ட் காசோரோஸ்கி, தனது சொந்த வழக்கறிஞரை நியமித்துக்கொள்வதற்கு வசதியில்லாதவர் மற்றும் ஜேர்மனியின் தேசிய தொழிற்சங்க அமைப்பின் DGB சட்ட செயலாளரை தனது பிரதிநிதியாக நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது, அவர் இரண்டு உடன்பாட்டு முன்மொழிவுகளையும் புறக்கணித்தார். அவர் நீதிமன்றத்தில் கலந்துகொண்டவர்களின் கைதட்டல் மற்றும் உற்சாக மூட்டலுக்கு இடையில், நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை மற்றும் தனது பதவி நீக்கம் சட்ட விரோதமானது என்று அறிவித்தார். ``அந்த கம்பனியுடன் நான் மீண்டும் பணிக்குச் செல்ல விரும்புகிறேன்.`` என்று அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

அதற்கு பின்னர் நீதிபதி van der Leeden, ஓப்பலின் சார்பில் சாட்சியமளிக்க சனிக்கிழமையன்று ஐந்து சாட்சிகளையும் அழைத்தார். ஓப்பல் தனது பதவி நீக்க கடிதத்தில் இந்த சாட்சிகள் தனது சக தொழிலாளர்களை வன்முறை அச்சுறுத்தல்கள் மூலம் காசோரொஸ்கி ''பயமுறுத்தினார்'' என்றும் உற்பத்தித் திட்டமிடுபவரான "W" வையும், தொழிற்கூட மேலாளர் "R" யும் பணியை நிறுத்துமாறு கட்டாயப்படுத்தினார் என்றும் குறிப்பிட்டிருந்தது (இந்த இருவரில் எவர் பெயரும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை).

என்றாலும், மே 14-ல் நடைபெற்ற அடுத்த விசாரணையில், மேலாளர் W மட்டுமே தனது சாட்சியத்தின்படி நின்றார். மற்ற ஊழியர்களை காசோரொஸ்கி கூச்சலிட்டு அச்சுறுத்தினார். அந்தக் ''கருவிகளை உடைத்துவிடுவதாகக்'' கூறினார் மற்றும்'' கும்பலைக் கொண்டு வருவேன் என்றும், அதற்கு பின்னர் தகராறு ஏற்படும் என்றும் கூறினார்'' என்று W தனது சாட்சியத்தை நிலைநாட்டினார்.

என்றாலும், இந்த சம்பவங்கள் தொடர்பாக W-வின் சாட்சியம் காசோரோஸ்கியின் விவரத்திற்கு முரணாக மட்டுமல்ல, அதே அசெம்ளி லைனில் பணியாற்றுகின்ற ஓப்பலின் நான்கு இதர சாட்சிகளின் சான்றையும் மறுப்பதாக உள்ளது. அந்த நான்கு பேரும் சாட்சியமளிக்கும்போது தாங்கள் பயப்படவில்லை என்றும், அல்லது அச்சுறுத்தப்படவில்லை என்றும் கூறினர். காசோரோஸ்கிக்கும் சாட்சிகளில் ஒருவருக்கும் நடைபெற்ற வாக்குவாதம் சற்று இரைச்சலாக இருந்தது, ஆனால் அதற்கு நியாயமான காரணம், அந்த இருவருக்கும் இடையில் அசெம்பிளி இயந்திரம் இருந்தது என்பதுதான். W கூறுகின்ற சக தொழிலாளர்களை ஒரு ''கும்பல்'' என்று காசோரோஸ்கி குறிப்பிட்டதாகக் கூறுவது அடிப்படையிலேயே முட்டாள் தனமானது.

இதர நான்கு சாட்சிகளில் எவரும் காசோரோஸ்கியால் ஆத்திரமூட்டப்படுவதாக உணரப்படவில்லை என்று கூறினர். எந்த வேலை நிறுத்தத்திலும், குரலை உயர்த்தி கூச்சலிடத்தான் செய்வார்கள். சில சாட்கிகள் அந்த தொழிற்கூடத்தில் பொது வேலை நிறுத்த சூழ்நிலை அப்போது நிலவியதாக குறிப்பிட்டனர்: எனவே பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பிரிவுகளிலும் வேலை நிறுத்தப்பட்டது, அதேபோல் வழக்கமாக அந்தப் பிரிவுகளில் சனிக்கிழமைகளில் தான் பணி நடக்கும். எப்படிப் பார்த்தாலும், கம்பனியுடைய வாக்குவாதங்களில் அந்த நான்கு சாட்சிகளும் காசோரோஸ்கியின் நடவடிக்கைதான் பணிகள் நின்றதற்கு காரணம் என்பதை மறுத்துள்ளனர்.

நான்கு தொழிற்கூட தொழிலாளர்களின் சாட்சியம் முழுவதிலும், மாஜிஸ்திரேட் van der Leeden தொடர்ந்து குறுக்கிட்டார், பல்வேறு கருத்துகளையும், கேள்விகளையும் எழுப்பினார், ஏனென்றால் ஓப்பல், தான் நடத்திய சொந்த ''புலன் விசாரணைகளில்'' திரட்டிய ''சாட்சிகளின் அறிக்கைகளுக்கும்,'' ''சான்றுக்கும்'' ஏற்றதாக அவை அமைந்திருக்கவில்லை. அந்த நான்கு சாட்சிகளில் ஒருவர் கேட்டார். ``இங்கே எவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன: ஓப்பல் தயாரித்துள்ள அறிக்கைகளா? அல்லது இப்போது நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படுகிற சாட்சியங்களா?`` மாஜிஸ்திரேட் அதற்கு அளித்த பதில் ``இங்கு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் சாட்சியம் தான்.``

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சாட்சியங்கள் எந்த வகையிலும் பயமுறுத்தல் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை எந்த வகையிலும் நிரூபிப்பதாக இல்லையென்றாலும் நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்கி பணி நீக்கம் செல்லாது என்று அறிவிக்க தயாராக இல்லை. மற்றும் வேலை நீக்கம் செல்லாது என்று அறிவிக்கவில்லை. இறுதியில், மாஜிஸ்திரேட் van der Leeden இனி காசோரோஸ்கிக்கு சாட்சியங்கள் எதுவும் தேவைப்படவில்லை என்று மட்டுமே குறிப்பிட்டார். தங்களது சாட்சியங்களை சரியாக ஆராய்வதற்காக இந்த வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அவகாசம் அளிப்பதற்காக ஏறத்தாழ நான்கு வாரங்கள் வழக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். இந்த வழக்கு ஒரு பேரத்தில் முடியும் என்று தனிப்பட்ட முறையில் தான் கருதுவதாக குறிப்பிட்டார்.

முதல் நாள் விசாரணையின் முடிவுகளின் விளைவு என்னவென்றால் ரிச்சார்ட் காசோரோஸ்கி மீது அழுத்தங்கள் ---ஓப்பல், தொழிற்சங்கம் மற்றும் பணிக்குழு என எல்லாத் தரப்பிலிருந்தும் தீவிரப்படுத்தப்படும். ஓப்பல் நிர்வாகம் இன்னமும் தனது பதவி நீக்கத்திற்கு ஒரு உறுதியைப் பெற்றுவிட முடியுமென்று உறுதியாக நிற்கிறது. ஒரு இழப்பீட்டுத் தொகையுடன், ஒரு உடன்பாடு ஏற்படுவதைக்கூட ஒரு வெற்றி, என்று அது கருதும், ஏனென்றால் அதன் அர்த்தம் பதவி நீக்கம் செல்லுபடியாகும் மற்றும் அதை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்த முடியும்.

தொழிற்சங்கத்தை பொறுத்தவரை, காசோரோஸ்கி கடந்த 24 ஆண்டுகளாக சந்தா செலுத்துகின்ற உறுப்பினராகவும் பணிக்குழு உறுப்பினராகவும் உள்ளார், காசோரோஸ்கி தொழிற்சாலையில் அதன் பிரதிநிதியாக உள்ளார், அவர்களது அணுகுமுறை இந்த வழக்கில் கீழ்க்கண்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்யப்பட முடியும்.

முதலாவதாக, அந்த வேலை நிறுத்தத்தின்போது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது பணிக்கான கருவிகளை போட்டுவிட்டு பணியிலிருந்து வெளிநடப்புச் செய்தபோது பணிக்குழு அந்தத் தொழிலாளர்களை புறக்கணித்தது மற்றும் அதற்கு பின்னர் சனிக்கிழமை மேலதிக நேர பணிக்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மறுத்தது. இந்த நடவடிக்கை வேலை நிறுத்தத்தை சிதைப்பதை அனுமதிப்பதாக அமைந்தது மற்றும் அக்டோபர் 16 சனிக்கிழமையன்று வார்த்தைகள் பரிமாற்றச் சூழ்நிலையை உருவாக்கியது, காசோரோஸ்கிக்கு எதிராக கம்பெனி நடவடிக்கை எடுக்க ஒரு சாக்குப்போக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டது.

இரண்டாவதாக, அக்டோபர் 20-ல், ஜேர்மனியின் மிகப்பெரிய தொழிற்சங்கமான IG மெட்டலின் பணிக்குழுவுடன், ஓப்பல் தொழிற்சாலைகளையும் உள்ளடக்கிய ஓப்பல் தொழிலாளர்களின் பரந்த கூட்டத்தில் வேலை நிறுத்தத்தை ஒரு முடிவிற்கு கொண்டு வருவதை முடிவு செய்து தரும் வகையில் எல்லா வகையான அச்சுறுத்தல்களையும், தந்திரங்களையும் கையாண்டது. இது தவிர, அவர்கள் ஓப்பலை ஒரு உடன்படிக்கைக்கு வருமாறு அதிகம் வற்புறுத்தவில்லை---- தொழிற்துறை தகராறு வழக்குகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறை என்னவென்றால் வேலை நிறுத்தம் செய்வோருக்கு எதிராக எடுக்கப்படும் தண்டனை நடவடிக்கைகள் மற்றும் பதவி நீக்கம் தவிர மற்ற விவகாரங்களில் Bochum தொழிற்சாலையின் நிர்வாகத்தை அணுகுவது வாடிக்கை. இப்படி அவர்கள் செய்ய மறுத்தது Turhan Ersin-யும் Richard Kaczoroswki-யையும் உடனடியாக பதவி நீக்கம் செய்வதற்கு வழியமைத்துக் கொடுத்தது.

மூன்றாவதாக, இந்த வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்ததும் பதவி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களின் சம்பிரதாய மேல் முறையீடுகளை ஆதரிக்க மறுத்துவிட்டது மற்றும் அவர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளுகின்ற நடவடிக்கை எடுக்குமாறு விட்டுவிட்டது. இது தவிர, தொழிலாளர்களுக்கு நிதி தேவைப்படும்போது தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் மக்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப்பட்ட 23,000 யூரோக்களில் ஒரு சதவீத அளவிற்குகூட பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பணிக்குழு தரவில்லை.

இத்தோடு ஒப்புநோக்கும்போது ஓப்பல் தொழிலாளர்கள், பதவி நீக்கம் செய்யப்ட்ட தொழிலாளர்களுக்கு மகத்தான ஒருமைபாட்டுடன் ஆதரவு காட்டினர். பதவி நீக்கங்களுக்கு எதிராக ஒரு மனுவில் 3,000-க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டனர். அதற்கு பின்னர்தான் பணிக்குழு பதவி நீக்கங்களை மேற்கோள்காட்டி சனிக்கிழமைகளில் மேலதிகநேரப் பணி செய்வதை ஒரு முறை மறுத்தது. அத்துடன் அது இந்த விவகாரத்தை விட்டுவிட்டது, அதுவும் தொழிற்சங்கமும் மேலதிகநேரப் பணி செய்வதற்காக வந்த கூடுதல் கோரிக்கைகளை எளிதாக மறுத்திருக்க முடியும். மேலும் அந்த பதவி நீக்கங்களை கண்டித்து வேலை நிறுத்தம் என்று அப்போது அழைக்கப்பட்ட ''தகவல் அறிவிப்பு மறியல்களை'' சீர்திருத்த முடியும்.

அதற்கு பின்னர் Bochum-லும் Recklinghausen-லும் (மற்றொரு ஓப்பல் தொழிற்சாலை) சுதந்திர ஒருமைப்பாடுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. தொழிலாளர்கள் மற்றும் பிறரிடமிருந்து இந்த குழுக்கள் நன்கொடைகளை வசூலித்து தந்திராவிட்டால் காசோரோஸ்கி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முதல் மூன்று மாதங்களுக்கு வீட்டு வாடகையே கொடுத்திருக்க முடியாது. தொழிற்சங்கமும், பணிக்குழுவும் அதற்கு பின்னர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஒவ்வொரு வாரமும் காசோரோஸ்கி மீதான தார்மீக பொருளாதார மற்றும் தனிப்பட்ட அழுத்தங்கள் கூர்மையடைந்து வருகின்றன.

எனவே WSWS ஆசிரியர் குழு அனைத்து ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலைகளையும் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களும், எல்லா வாசகர்களும் ரிச்சார்ட் காசோரோஸ்கி மற்றும் துர்கான் எர்சின் பதவி நீக்கங்களுக்கு எதிராக அவர்களை பாதுகாத்து நிற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. வேலை வாய்ப்புக்களையும், ஊதியங்களையும் அனைத்து தொழிலாளர்களுக்கும் பாதுகாத்து நிற்பதற்கான வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு முன்னேற்பாடு செய்வதற்காக இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட வேண்டியது மிகமிக முக்கியமானதாகும்.

போலந்து, ஸ்வீடன், பெல்ஜியம், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள GM பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடையே தொடர்பை ஏற்படுத்துவதற்கும், கண்டனக் கடிதங்களையும், ஒருமைப்பாட்டு கடிதங்களையும் செய்தி அறிக்கைகளையும் வெளியிட உலக சோசலிச வலைத் தளம் தயாராக உள்ளது.

கண்டனக் கடிதங்களையும் உடனடியாக ரிச்சார்ட் காசோரோஸ்கி மற்றும் டுர்கான் எர்சின் பதவி நீக்கத்தை இரத்து செய்து அவர்களை உடனடியாக வேலையில் அமர்த்தவும் கீழ்க்கண்ட முகவரிகளுக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Adam Opel AG
Geschäftsleitung Bochum
Opelring 1
44803 Bochum
Germany

and
Adam Opel AG
Hans H. Demant
Chairman of the Board
Friedrich-Lutzmann-Ring
65423 Rüsselsheim
Germany

and
Adam Opel AG
Rainer Einenkel
Works Committee Chairman, Bochum
Opelring 1
44803 Bochum
Germany


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved