:
ஆசியா
:
இலங்கை
Sri Lankan government on the brink of
collapse
இலங்கை அரசாங்கம் வீழ்ச்சியின் விளிம்பில்
By K. Ratnayake
17 June 2005
Use this
version to print |
Send this link by email |
Email the author
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நேற்று இலங்கையின் ஆளும் கூட்டணியில்
இருந்து வெளியேற எடுத்த முடிவானது அரசாங்கத்தை உடைவின் விளிம்பில் தள்ளியுள்ளதுடன் தீவை மீண்டும் அரசியல் குழப்பத்தில்
ஆழ்த்தியுள்ளது. 225 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற
உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 79 ஆக குறைந்துள்ளதோடு அதன் நீண்டகால எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக்
கட்சி (ஐ.தே.க) அதைக் கவிழ்க்க முயற்சிக்காதவரை அதில் முழுமையாக தங்கியிருக்கும்.
இந்த நெருக்கடியின் மத்தியில், தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி
சந்திரிகா குமாரதுங்க, தனது முன்னாள் பங்குதாரர்களை "பொய்க்காரர்கள்" என்றும் மக்களை "தவறாக
வழிநடத்துவதாகவும்" கூட்டணி உடன்படிக்கையை மீறுவதாகவும் மற்றும் தனது கொள்கைகளை தடுப்பதாகவும் கண்டனம்
செய்தார். குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்காவது தனது அரசாங்கத்தையும் மற்றும் அதன் சுனாமி மீள்கட்டமைப்பு
திட்டங்களையும் ஆதரிக்குமாறு எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்புவிடுத்த அவர், பின்னர், ஒரு அதிகளவில் நுட்பமில்லாத
அச்சுறுத்தலில், இப்போதுள்ளது போன்ற நிலைமைகளின் கீழ் அடிக்கடி "சர்வாதிகாரம் மற்றும் இராணுவ சர்வாதிகாரம்"
தோன்றுகிறது என எச்சரித்தார்.
தீவின் பெருமளவிலான பிரதேசங்களை அழித்த மற்றும் பத்தாயிரக்கணக்கான மக்களை
அனாதைகளாக்கிய டிசம்பர் 26 சுனாமி, சமூக மற்றும் அரசியல் பதட்டநிலைமைகளை வெடிக்கும் நிலைக்கு உக்கிரப்படுத்தியுள்ளது.
எட்டு அமைச்சு பதவிகளை வகித்த ஜே.வி.பி, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒரு பொது சுனாமி நிவாரண
சபையை அல்லது "பொதுக் கட்டமைப்பை" ஸ்தாபிக்கும் குமாரதுங்கவின் திட்டங்கள் சம்பந்தமாக அரசாங்கத்தை
விட்டு வெளியேறியது. பல வாரங்களாக ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஏனைய சிங்கள பேரினவாத
அமைப்புக்களும், திட்டமிடப்பட்டுள்ள இந்த பொதுக் கட்டமைப்பை ஒரு தனித் தமிழ் அரசை நோக்கிய நடவடிக்கை
எனவும் நாட்டைக் "காட்டிக்கொடுக்கும" செயல் எனவும் கண்டனம் செய்துவருகின்றன.
ஜூன் 15 நள்ளிரவுக்கு முன்னதாக குமாரதுங்க தனது பிரேரணைகளை கைவிட
வேண்டும் இல்லையே தாம் வெளியேறப் போவதாக கடந்த வாரம் ஜே.வி.பி ஒரு இறுதி நிபந்தனையை வெளியிட்டிருந்தது.
அதனது சொந்த பிரிவுகள் மீது இனவாதப் பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என பீதியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி (ஸ்ரீ.ல.சு.க) தலைவர்கள், பின்னோக்கி ஜே.வி.பி க்கு இடமளித்தனர். பிரதமர் மஹிந்த இராஜபக்ச,
சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மற்றும் ஏனையவர்களும் ஜே.வி.பி தலைவர்களுடன் நீண்ட
பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும் பயனளிக்கவில்லை. கடைசி நிமிடத்தில், தனது காலக்கெடுவை ஜூன் கடைசி
வரை நீடிக்குமாறு ஜே.வி.பி யிடம் இராஜபக்ச கெஞ்சினார்.
எவ்வாறெனினும், திட்டமிடுவதற்கு குமாரதுங்க ஒரு சிறிய வாய்ப்பைப் பெற்றிருந்தார்.
கடந்த திங்களன்று வாஷிங்டனில் கூடிய இலங்கையின் சர்வதேச நிதி உதவியாளர்கள் குழுவின் சம பங்காளர்களான
அமெரிக்க, ஜப்பான் மற்றும் நோர்வே பிரதிநிதிகள் தங்களது சொந்த இறுதி நிபந்தனைகளுக்கு சமமான ஒன்றை
வெளியிட்டனர். அவர்களது அறிக்கை குமாரதுங்கவிற்கு ஆதரவை வெளிப்படுத்திய அதேவேளை, "வடக்கு கிழக்கில்
சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மீள்கட்டமைப்பு உதவிகளை உறுதிப்படுத்துவதன் பேரில் (விடுதலைப்
புலிகளுடன்) உடனடியாக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும்" என கோரியது. அது 2003 ஏப்பிரலில்
இருந்து கிடப்பில் தள்ளப்பட்டுள்ள சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
பணவசதியில்லாத சுதந்திர முன்னணி அரசாங்கம் வாக்குறுதியளிக்கப்பட்ட 3 பில்லியன்
டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, அது இலங்கை
பொருளாதாரத்தின் பரந்த நெருக்கடியையிட்டு கவலைகொண்டுள்ள கொழும்பில் உள்ள பெரும் வர்த்தகர்களின்
நெருக்குவாரங்களுக்கு உள்ளாகியுள்ளது. கொழும்பில் உள்ள வரையறுக்கப்பட்ட தேசிய உதவி முகாமைத்துவ அமைப்பின்
நிர்வாகத் தலைவர் எஸ். ஜெயராமன் புலூம்பர்க் வலைத் தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்: "இந்த
நிதிகளை வழங்குவதற்கு ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டும். இல்லாவிடில் பொருளாதாரம் நெருக்கடிக்குள் தள்ளப்படும்,"
எனத் தெரிவித்தார். நாட்டின் ஆழமடைந்துவரும் அரசியல் நெருக்கடி மற்றும் யுத்த ஆபத்து பற்றி குறிப்பிடுகையில்:
"முதலீட்டை ஈர்ப்பதற்கு எமக்கு அமைதி தேவை, இல்லையேல் சந்தைகள் மேடுபள்ளமாகவே பயணிக்கும்," என
அவர் மேலும் தெரிவித்தார்.
சுதந்திர முன்னணி அரசாங்கம் இப்போது ஒரு ஆபத்தான நிலைமையை எதிர்கொண்டுள்ளது.
ஜனாதிபதியின் பேச்சாளர் ஹரீம் பீரிஸின் உதவியாளரான கிஹான் ஹெட்டிகேயை உலக சோசலிச வலைத் தளம்
நேற்று தொடர்புகொண்ட போது: "அரசாங்கம் தொடர்ந்தும் சேவையாற்ற கூடும், ஆனால் முக்கியமான
சட்டங்களை நிறைவேற்ற முடியாது," என பிரகடனம் செய்தார். இப்போது பாராளுமன்றத்தில் எதிர்த்தரப்பு
ஆசனங்கள் நிரம்பிப்போயுள்ளதால் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடல்ரீதியில் ஆளும் கட்சி பகுதியில் அமரத்
தள்ளப்படுவார்கள். ஜே.வி.பி வெளியேறியதன் பின்னர், சுதந்திர முன்னணி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை
இழந்துள்ளதை போலவே ஏழு மாகாண சபைகளிலும் கட்டுப்பாட்டை இழக்கும்.
குமாரதுங்க புதனன்று ஜே.வி.பி க்கு எழுதிய கடிதத்தில், பொதுக் கட்டமைப்பு
பற்றிய இறுதி ஆவணம் முழுமைப்படுத்தப்பட்டிராத நிலையில் கூட்டணியில் இருந்து விலகியது "நியாயமற்றது" என
பிரகடனம் செய்தார். ஜே.வி.பி யை நயந்து பேசி இணக்கம்கொள்ள வைக்கும் தெளிவான எதிர்பார்ப்பில், இது
"சாதாரணமான ஒரு நிர்வாக கட்டமைப்பு" மட்டுமேயாகும், இது "நாட்டின் இறைமையிலோ அல்லது ஒருமைப்பாட்டிலோ"
தாக்கத்தை ஏற்படுத்தாது. அதன் நடவடிக்கைகள் ஆறு மாவட்டங்களில் கடற்கரையலிருந்து 2 கிலோமீட்டர்
நிலப்பரப்பிற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என பிரகடனம் செய்த அவர், பொதுக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை
குறைத்தே விபரித்தார்.
குமாரதுங்கவின் திருகுதாளங்கள் தீவில் முதலாளித்துவ ஆட்சியின் ஆழமான நெருக்கடியை
கோடிட்டுக்காட்டுகின்றன. பொருளாதார ரீதியில் ஆளும் வர்க்கம் நீண்ட உள்நாட்டு யுத்ததிற்கு முடிவுகட்ட வேண்டிய
அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த யுத்தமானது, தீவை ஒரு மலிவு உழைப்பு தளமாக மாற்றும் மற்றும் இந்தியத்
துணைக்கண்டத்திற்குள் பெருக்கெடுக்கும் முதலீட்டில் ஒரு பகுதியை ஈர்த்துக்கொள்ளும் ஆளும் வர்க்கத்தின் திட்டங்களுக்கு
தடையாக உள்ளது. ஆயினும், அரசியல் ரீதியில், ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க உட்பட எல்லா அரசியல் கட்சிகளும்,
எதிர்ப்புகளை திசை திருப்பவும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும் அவை மீண்டும் மீண்டும் சுரண்டிக்கொண்ட
சிங்களப் பேரினவாதத்தில் ஆழமாக மூழ்கிப்போயுள்ளன.
எந்தவொரு பிரதான கட்சியும் பரந்த மக்கள் ஆதரவை பெற்றுக்கொள்ளவில்லை. ஐ.தே.க,
ஸ்ரீ.ல.சு.க ஆகிய இரு கட்சிகளும், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் அழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்திய
பொருளாதார மறுசீரமைப்பு கொள்கைகளை அமுல்படுத்தியமைக்கு பொறுப்பாளிகளாவர். இதன் விளைவாக, இனவாதம்
மற்றும் மக்கள்வாத வாயடிப்புக்களையும் அடிப்படையாகக் கொண்ட ஜே.வி.பி, குறிப்பாக வறுமையான கிராமப்புற
பிரதேசங்களில் செல்வாக்கு செலுத்தும் இயலுமையை தற்காலிகமாக வெற்றிகொண்டுள்ளது. முதற்தடவையாக அரசாங்கத்தில்
அங்கம் வகித்த ஜே.வி.பி, தனது சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறியதோடு ஒரு வருடகாலத்திற்குள் துரிதமாக
ஆதரவிழந்துள்ளது.
இந்த எல்லா நகர்வுகளும் டிசம்பர் 26 சுனாமியாலும் மற்றும் அரசாங்கம் பத்தாயிரக்கணக்கான
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தவறியதாலும் விரைவுபடுத்தப்பட்டன. அதே சமயம், தொழில் இழப்பு, தனியார்மயமாக்கம்,
விலையேற்றம் மற்றும் கிராமிய உதவி பற்றாக்குறை சம்பந்தமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மத்தியில்
வளர்ச்சிகண்டுவரும் வேலைநிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலைகள் அபிவிருத்தியடைந்தன. ஜே.வி.பி யின் பொதுக்
கட்டமைப்புக்கு எதிரான பேரினவாத பிரச்சாரம், எல்லாவற்றுக்கும் மேலாக, குறிப்பாக சுனாமியால் அழிவுக்குள்ளான
தென் பகுதியில் அதனது சமூக அடித்தளத்தை தூக்கிநிறுத்தும் ஒரு அவநம்பிக்கையான முயற்சியாகும்.
சர்வாதிகார ஆபத்து பற்றிய குமாரதுங்கவின் குறிப்பானது, பழைய பாராளுமன்ற
ஆட்சிக் கட்டமைப்பின் காலவதியான தன்மை சம்பந்தமாக ஆளும் வர்க்கத்தின் மத்தியில் காணப்படும் தீவிரமான
ஏமாற்றத்தையே வெளிப்படுத்துகிறது. இந்தக் குறிப்பானது உழைக்கும் மக்களுக்கு தெளிவான எச்சரிக்கையாகும்.
இது ஆளும் கும்பல்களும், மற்றும் குமாரதுங்கவே கூட, சர்வாதிகார ஆட்சிமுறைக்கு திரும்புவதைப் பற்றி
சிந்திப்பதையே காட்டுகிறது. இது முதற் தடவையுமல்ல.
2003 நவம்பரில், ஐ.தே.க தலைமையிலான அரசாங்கம் நாட்டை விடுதலைப்
புலிகளுக்கு காட்டிக்கொடுக்க தயாராவதாக கண்டனம் செய்த ஜனாதிபதி, எதேச்சதிகாரமான முறையில் மூன்று
முக்கிய அமைச்சுக்களை அபகரித்ததுடன் அவசரகால நிலைமையை அமுல் செய்யவும் தயாரானார். அவர் வாஷிங்டன்
மற்றும் புது டில்லியில் இருந்து வந்த சர்வதேச அழுத்தங்களின் பின்னரே தற்காலிகமாக பின்வாங்கினார். 2004
பெப்பிரவரியில் அரசாங்கத்தை பதவி விலக்கிய குமாரதுங்க, ஜே.வி.பி உடன் ஒரு கூட்டணியை அமைத்துக்கொண்ட
புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். இந்த தேர்தலிலேயே சுதந்திர முன்னணி சற்றே வெற்றிபெற்றது.
இப்போது குமாரதுங்க தான் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில்
அரசாங்கத்தை விட்டு வெளியேற்றிய ஐ.தே.க வில் தங்கியிருக்கின்றார். திங்கட் கிழமை ஜனாதிபதியை சந்தித்த
பின்னர், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுக் கட்டமைப்புக்கு ஆதரவளிப்பதாகவும் "இந்த
விவகாரத்தில் அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதில்லை" என்றும் வாக்குறுதியளித்தார். ஆனால், இந்த வாக்குறுதி
ஏனைய விடயங்களுக்கும் விரிவுபடுத்தப்பட மாட்டாது என்பதற்கும் நீண்டகாலத்திற்கு தொடரப் போவதில்லை
என்பதற்குமான அறிகுறிகள் ஏற்கனவே காணப்படுகின்றன.
பொதுக் கட்டமைப்பை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும்
ஜனாதிபதியின் முடிவை ஏற்கனவே விமர்சித்துள்ள ஐ.தே.க, இந்த பொதிக்கு அவரே பொறுப்பேற்க வேண்டுமென
பிரகடனம் செய்துள்ளது. ஐ.தே.க பேச்சாளர் ஜீ.எல். பீரிஸ், தனது கட்சி எந்தவொரு வாக்கெடுப்பையும்
புறக்கணிக்கும் என அறிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் பிரச்சினைகளை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
எதிர்க் கட்சி, ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் இடம்பெற வேண்டுமெனவும்
கோரியுள்ளது. ஒருமுறை அரசாங்கத்திலிருந்து பதவி விலக்கப்பட்ட ஐ.தே.க வுக்கு பரந்த நிறைவேற்று அதிகாரங்களை
கொண்ட ஜனாதிபதி பதவி தேவை. உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க
இணைச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சி "அரசாங்கம் அமைப்பதில் அக்கறை செலுத்தவில்லை....
அவ்வாறு செய்யும் குறிக்கோள் கிடையாது. நாங்கள் ஜனாதிபதி தேர்தலிலேயே அக்கறை செலுத்துகிறோம்," எனத்
தெரிவித்தார்.
ஜே.வி.பி யின் நேற்றைய பத்திரிகையாளர் மாநாடு குறிப்பிடத்தக்க வகையில் உணர்ச்சிவசமின்றி
இருந்தது. உடகங்களின் முன் உரையாற்றிய ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, கட்சி "ஆழமான வேதனையுடன்"
அரசாங்கத்திலிருந்து வெளியேறியது எனத் தெரிவித்ததுடன் ஸ்ரீ.ல.சு.க உடனான எதிர்கால கூட்டு பற்றி குறிப்பிடவில்லை.
ஒரு புதிய கூட்டணியின் நிபந்தனையானது, "நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதாக" இருக்கும்
என அவர் தெரிவித்தார்.
ஆயினும், அதேசமயம், ஜே.வி.பி பொதுக் கட்டமைப்புக்கு எதிரான அதன் பேரினவாத
பிரச்சாரத்தை உக்கிரப்படுத்தவுள்ளதோடு அதன் மீது நம்பிக்கையை மீள் ஸ்தாபிதம் செய்வதற்காக ஒரு தொடர்ச்சியான
வேலை நிறுத்தங்களையும் திட்டமிட்டுள்ளது. அரசாங்கத்தின் பங்காளி என்ற வகையில், அண்மைய வாரங்களில் தனியார்மயமாக்கம்
மற்றும் சம்பள உயர்வு கோரிக்கைகள் சம்பந்தமான போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கு
முடிவுகட்டியது. ஸ்ரீ.ல.சு.க மற்றும் ஐ.தே.க வில் உள்ள அதிருப்தியடைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு
புதிய கூட்டணியில் இணையுமாறும் ஜே.வி.பி அழைப்பு விடுத்துள்ளது.
சுனாமி தாக்கிய அடுத்த கணமே, தீவு பூராவும் உள்ள உழைக்கும் மக்கள் சிங்கள,
தமிழ் மற்றும் முஸ்லிம்கள் என்ற பேதமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தன்னிச்சையாக முன்வந்தனர்.
இது முழு அரசியல் ஸ்தாபனம் பற்றிய நம்பிக்கையின்மையையும் மற்றும் தசாப்த காலங்களாக தீவில் மேலான்மை
செலுத்திவந்த இனவாத அரசியலையும் நிராகரிப்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த இரு உந்துவேகமும் முற்றிலும்
ஆரோக்கியமானது.
எவ்வாறெனினும், சுனாமிக்குப் பின்னர் ஆறு மாதங்கள் கடந்தும், மீள் கட்டுமான
வேலைகள் இடம்பெறாதது மட்டுமன்றி, ஆளும் கும்பல்கள் சர்வாதிகார ஆட்சிமுறை, இனவாத வன்முறைகள் மற்றும்
யுத்தம் உட்பட புதிய அழிவுகளுக்குள் நாட்டை மூழ்கடிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்த அனுபவங்கள் வலியுறுத்துவது
என்னவென்றால், முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிராக தங்களது சொந்த சுயாதீனமான வர்க்க நலன்களுக்காக
ஈவிரக்கமற்ற போராட்டத்தை முன்னெடுக்க உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட வேண்டியதன் அவசியத்தையேயாகும்.
Top of page
|